Wednesday, May 07, 2008

எவடம் எவடம்..

நண்பர் ஒருவரிடம் உரையாடிக்கொண்டிருக்கும் போது என்னிடம் “நீங்கள் யாழ்ப்பாணத்தில் எவடம் என்று யாரிடமாவது கேட்டால் தவறா?” என்று கேட்டார். இலங்கையில் யாழ்ப்பாணத்தில் மட்டுமா தமிழர் வாழ்க்கின்றார்கள், மட்டக்களப்பு, திருகோணமலை இன்னும் எத்தனை எத்தனை யாழ்ப்பாணத்துக்குள் அடங்காத இடங்களிலெல்லாம் தமிழர்கள் வாழ்கின்றார்கள் எனவே தமிழர்களின் வாழும் வட்டத்தை ஒடுக்கி யாழப்பாணம் என்று குறுக்குவது தவறுதானே என்றேன். அதற்கு அவர் ஒருவரிடம் உரையாடும் போது அவரின் பேச்சுமுறையைக் கொண்டு அவரை ஓரளவுக்கேனும் என்னால் அடையாளம் காணமுடியும் அவர் யாழ்ப்பாணமாக இருப்பார் என்ற நம்பிக்கையில் நான் அப்பிடி ஒரு கேள்வியைக் கேட்டிருக்கலாம் தானே என்றார்;.
யாழ்ப்பாண மேலாதிக்கத் தமிழ் மக்களிடம்தான் இத்தகைய போக்கு இருக்கின்றது என்றும், மற்றைய வட்டாரத்தில் வாழ்பவர்கள் இப்படியான கேள்வியைக் கேட்பதில்லை என்பது பொதுவான அபிப்பிராயம் என்றும் அவரிடம் கூறினேன்.

யாழ்ப்பாணத் தமிழர்களிடம்தான் மேலாதிக்கத் தனம் இருக்கின்றது என்பது எமது தமிழ் மக்களின் பொதுவான கருத்தாக இருக்கும் பட்சத்தில் யாழ்ப்பாணத் தமிழர் என்றால் எல்லோருமே மேலாதிக்கவாதிகளாகவல்லவா இருத்தல் வேண்டும். அதே வேளை மற்றைய மாகாணங்களில் வாழ்பவர்கள் எல்லோரும் மேலாதிக்கத் தனமற்றவர்களாகவல்லவா வாழ வேண்டும்.
இது பற்றி உரையாடும் போது இன்னுமொரு நண்பர் கூறினார், மட்டக்களப்பு மேல்மட்ட வாழ்க்கை முறையைக் கொண்டிருக்கும் மக்களிடமும் இதே மேலாத்திக்கத் தன்மை நிறைந்தே இருக்கின்றது என்றும், கனடாவில் இடம்பெற்ற மட்டக்களப்பு ஒன்று கூடலுக்குச் தான் ஒரு நண்பரோடு சென்று வந்த போது ஒரு குட்டி யாழ்ப்பாணத்தைத்தான் தன்னால் பார்க்க முடிந்தது, என்றும் கூறினார். மட்டக்களப்பு வாசிகள் இருவர் சந்தித்துக் கொள்ளும் போது நீங்கள் மட்டக்களப்பில் எவடம் என்று கேட்பதும் வழமையாக இருக்கலாம், அவர் குறிப்பாக எவடம் என்று தெரியும் போதுதானே அவரை சாதீய முறையில் அடையாளம் காணமுடியும்.
தேசியவாதம், பிரதேசவாதம் என்பது எங்கும் நிறைந்துதான் உள்ளது. நான் யாழ்ப்பாணத்தில் கோண்டாவி;ல் எனும் கிராமத்தைச் சேர்ந்தவள். கோண்டாவில் கிராமத்தின் பிரிவாக கிழக்கு, மேற்று, வடக்கு கோண்டாவிலர்கள் என்று பிரவாக வாழ்ந்து வந்தார்கள். எனக்கு நினைவு தெரிந்த நாளிலிருந்து நாங்கள் கோண்டாவில் கிழக்கில்தான் வசித்து வந்தோம். இருந்தும், எனது அப்பாவின் சொந்த இடம் “அன்னங்கை” என்று அழைக்கப்படும் கோண்டாவில் வடக்கு என்பதால், நாமும் “அன்னங்கையார்” என்று கிழக்கு கோண்டாவிலரால் அழைக்கப்பட்டவர்கள். எமது சொந்தங்கள் எல்லோரும் அன்னங்கையில்தான் வசித்தும் வந்தார்கள். இப்போதும் எனக்கு நினைவில் இருக்கும் ஒரு விடையம், எமது வீட்டுக் கொண்டாட்டம் ஒன்றிற்கு வந்திருந்த கோண்டாவில் கிழக்கு அயலவர் சிலர், சாப்பாட்டுப் பந்தி விரித்தபோது எழுந்து சென்றது. அதே வேளை கோண்டாவில் கிழக்கின் இன்னொரு பகுதியாக “கேணியடியர்கள்” வாழ்ந்து வந்தார்கள். இவர்களுடனும் இந்த கிழக்கு மேற்குடிகள் கலந்து கொள்வதில்லை. போய் வருவதோடு மட்டும் சரி தாம் “கை நனைப்பதில்லை” என்பதில் அவர்களுக்குப் பெருமை. அத்தோடு இதில் மிகவும் நகைச்சுவையான விடையம் என்னவென்றால், “கேணியடியர்கள்”, “அன்னங்கையர்” களோடு கலந்து கொள்ள விரும்புவதில்லை, அன்னங்கையர்களும் கேணியடியர்களை ஒதுக்கி வைத்தே பெருமை பேசிக்கொள்வார்கள். ஒரு சிறிய கிராமமான கோண்டாவிலில் இருக்கும் கிழக்குப் பகுதி மக்களிடம் மட்டுமே எத்தனை சின்னத்தனங்களும் பிரதேசவாதமும் இருக்கின்றது என்றால் இலங்கையின் அனைத்து இடங்களையும் மாவட்ட ரீதியாகப் பார்க்கப் போகின் எப்படித்தான் இறுதியில் யார் மேல்மட்டமக்கள், யார் கீழ்மட்டமக்கள் என்று அடையாளம் கண்டு கொள்ள முடியும்?
இந்தக் குழப்பங்களைத் தீர்த்துக் கொள்ளத்தான் தந்திரமாக “நீங்கள் எவடம்?” என்ற ஒரே கேள்வியோடு தமது காரியத்தை முடித்துக் கொள்கின்றார்கள். இந்த “நீங்கள் எவடம்?” என்பது யாழ்ப்பாணத்து மக்களின் “உரித்து” அல்ல. இது இலங்கையில் மட்டுமல்ல உலகெங்கும் பரவிக்கிடக்கும் “வாதப் பிரச்சனை” என்பதுதான் நிறைவான உண்மை. எனவே யாழ்ப்பாணத்தான் ஒருவர் நீங்கள் யாழ்பாணத்தில் எவடம் என்று யாரிடமாவது கேட்கும் போது உங்கள் இரத்த அழுத்தம் ஏறினால் அடக்கிக் கொள்ளுங்கள், அதே வேளை வேறு ஒரு இடத்தில் நீங்கள் திருகோணமலையில் எவடம் என்ற கேள்வியும் மட்டக்களப்பில் எவடம் என்ற கேள்வியும் யாரோ ஒருவரால் யாரிடமோ கேட்கப்பட்டுக்கொண்டுதான் இருக்கும்.