Thursday, July 27, 2006

படித்த பாதித்த கவிதை - 1

துயில் கொள்ளா இரவு

ஊரின்
கிழக்குப்பக்கம் கடல்
மேற்கில் வயல்வெளி
வயல்வெளிக்கப்பால்
ஆறும் நாணல்க் காடும்

அங்கிருந்து அல்லது
எங்கிருந்தோ
அவர்கள் வருவதாக
கிங்கிலி கத்திப்பறந்த
ஓர் இரவு

அழிஞ்சிப்பொத்தானை
காத்தான்குடிப் பள்ளியில்
படிந்த குரருதியில்
உறைந்த காற்று
அச்சத்தைக் கூட்டியள்ளி
எல்லோர் முகத்திலும்
அறைந்து வீசிற்று.

தெருவோரம்
அறைச்சுவருள்
கட்டிலுக்கடியில்
பயம் சூழ்ந்து ஒடுங்கியது

பூனை பதுங்கி
அடுப்பங்கரை நுழைய
ராக்குரவி மெல்லக்கொடுகி
கூட்டுள்புக
பயம்
தொண்டை அடைக்கும்
திகில்.

பெருவெளியில்
பார்வையெறிந்து
விழித்துக் கிடந்தேன்
எல்லோரையும் போல

பனித்துகள் படிந்து
பூக்களும், இலைகளும்
துவண்டு களைத்து
அயர்ந்து தூங்கிற்று

இருள்விலகி
அதிகாலை அண்மித்தும்
தூக்கம் தொடாது
கண்கள் கனத்துப்பாரிக்க
மங்கிக்கரையும் வெள்ளிகளிடம்
வினவினேன்
அவர்கள் இரவும்
இப்படித்தான் கழியுமா?
ஜீப்வண்டி உருள்கையில்.


அலறி,
தனிமனித உணர்வுகளில் மட்டும்
கரைந்து விடவில்லை
தன் சமூகத்தின் நாவுமாக இருக்கின்றார்.

சட்டப்பட்டதாரி
தற்போது,
பொதுச் சுகாதாரப் பரிசோதகராகப் பணியாற்றுகிறார்.

Saturday, July 22, 2006

இரயாகரனுடன் ஒரு சந்திப்பு

பிரான்ஸிலிருந்து கனடா வந்திருக்கும் இரயாகரனுடனான ஒரு சந்திப்பு நிகழ்ச்சி 23ம் திகதி ஞாயிறு மாலை 6:00 மணியளவில் ஸ்காபுரோ சிவிக் சென்டரில் இடம் பெற உள்ளது.

இந் நிகழ்வு பற்றி இரயாகரனிடம் "வைகறை" பத்திரிகை நிருபர் கேட்ட போது

ஞாயிறு இடம் பெற இருக்கும் உங்களுடனான சந்திப்பு பற்றி சொல்லுங்கள்?

அரசியல் ரீதியான ஒரு நெருக்கமான அறிமுகம். மக்கள் பற்றி உண்மையான அக்கறை கொண்டோரை நோக்கிய கருத்து பரிமற்றத்தை உருவாக்குவதன் மூலம், ஆரோக்கியமான எதிர்கால அரசியல் போக்கை உருவாக்குவது.”

அரசியல் ஆர்வலர்கள் அனைவரும் கலந்து கொள்ள முடியும்.

Friday, July 21, 2006

“புதியதோர் உலகம்”

கோவிந்தன்

"பெப்ரவரி 15 1985 இல் நான் அங்கம் வகித்த தமிழீழ விடுதலை அமைப்பில் இனிமேலும் தொடர்ந்து இருப்பதில் அர்த்தமில்லை என கண்ட பின்பு அதிலிருந்து வெளியேறிய தோழர்களுடன் நானும் சேர்ந்து கொண்டேன். அந்த விடுதலை அமைப்பு சிறிலங்கா அரசுக்கு எதிராக நீண்ட காலமாகப் போராடி வந்த ஒரு பலம் மிக்க அமைப்புத்தான். ஆனால் அந்த அமைப்பில் நிலவிய அராஜகம், ஜனநாயகமின்மை என்பன அவர்கள் நடத்தும் போராட்டம் கூட இன்னொரு அராஜகத்திற்கும் ஒடுக்கு முறைக்கும் காரணமாக அமைந்துவிடும் என்று கருதியதாலேயே நாம் அதிலிருந்து வெளியேறினோம்.
நாம் அந்த அமைப்பிலிருந்து வெளியேறினோமேயன்றி தமிழீழ விடுதலைப் போராட்டத்திலிருந்து வெளியேறவில்லை. தமிழீழ விடுதலைப்போராட்டத்தில் தலையெடுக்கும் அராஜகம் அழிக்கப்பட்டு, போராட்டம் வீரியம் கொண்டதாக முன்னெடுக்கப்படுவதற்கு எமது பணியைத் தொடர்ந்து செய்து கொண்டேயிருப்போம்.

எமது வெளியேற்றத்தை அந்த அராஜகவாதிகள் அங்கீகரிக்கவில்லை. நாம் வெளியேறிய பின்பு எம்மைக் கொன்றொழிப்பதற்காக சென்னை நகரம் எங்கும் சல்லடை போட்டுத் தேடினார்கள். நாம் அவர்களிடமிருந்து எம்மைப் பாதுகாத்துக் கொண்டு இரண்டு மாதங்கள் தலைமறைவாக இருந்தோம். அந்தக் காலத்திலேயே “புதியதோர் உலகம்” எழுதப்பட்டது.

இந்நாவல் கூறும் விடையங்களை சிறிலங்கா அரசு தனக்குச் சாதகமாகப்பயன்படுத்தி தமிழீழ விடுதலைப் போராட்டத்தை சிறுமைப்படுத்தும் பிரச்சாரத்தை மேற்கொள்ளலாமே என்ற அச்சம் இந்நாவல் படைக்கப்படும் போது கூடவே எனக்கு இருந்தது. கூடுமானவரை அந்த உணர்வு வாசகர்களுக்கு ஏற்படாதவகையில் நாவல் உருவாக்கப்பட்டது. இந்த விபரீத அபாயத்தையும் எதிர்நோக்கிக் கொண்டு இந்நாவல் படைக்கப்படுவதற்குக் காரணமாக இருந்தது, தமிழீழ விடுதலைப் போராட்டம் குறைகள் களையப்பட்டு அது முறையாக முன்னெடுத்துச் செல்லப்பட வேண்டும் என்ற அக்கறையினாலேயாகும்.

தமிழீழ விடுதலைப்போராட்டம் வன்முறையில் நம்பிக்கை கொண்ட ஆயுதமேந்திய போராட்டமாயினும் அது ஒருபோதும் அராஜகத் தன்மை கொண்டதாக மாறிவிடுவதை அனுமதிக்க முடியாது. விடுதலைப் போராட்டத்தில் என்றும் மனிதாபிமானமும், மானுட உயிர்ப்பிற்கான ஆவலும் மேலோங்கி இருக்க வேண்டும். தமிழீழ விடுதலைப் போராட்டம் இவற்றை இழந்து செல்லுமாயின் அது இன்னொரு அராஜகத்திற்கும் ஒடுக்குமுறைக்குமான வழியாகவே அமைந்து விடும்.

நாம் அங்கம் வகித்த தமிழீழ விடுதலை அமைப்பின் அராஜகம் தாபனத்திலிருந்து விலகும் உரிமையை மறுத்ததோடு சுதந்திரமாக அரசியல் நடத்தும் உரிமையையும் தடைசெய்தது. அதனால்தான் எம்மைக் கொன்றொழிப்பதற்கு பேயாக அலைந்தார்கள்.

அவர்கள் முயற்சி கைகூடாததால் ஆத்திரமுற்றவர்கள் தமிழீழத்தில் எமது தோழர்களைக் கடத்தியும், சித்திரவதை செய்தும் துன்புறுத்தினார்கள். அந்த அராஜகவாதிகளின் கொலைவெறி இன்னும் அடங்கவில்லை.

அவர்கள் ஒருவேளை எம்மைக் கொல்வதில் வெற்றி பெறலாம். அந்தக் கொலைவெறியர்கள் யார் என்பதை நாம் உங்களுக்குக் கூறவேண்டியதில்லை, ஆனால் அவர்கள் எப்படிப்பட்டவர்கள்? நாம் எப்படி அவர்களுடன் முரண்பட்டு நின்றோம்? என்பதை வெளிப்படுத்துவதற்கு இந் நாவல் பயன்படுத்தியிருக்கின்றோம்.

இந்நாவல் தனியொரு மனிதனின் படைப்பல்ல, பல தோழர்களின் ஆலோசனைகள், ஒத்துழைப்புக்கள் மூலம் உருவாக்கப்பட்ட கூட்டுப் படைப்பே இது.

தமிழீழ விடுதலைப்போராட்டத்தில் கடந்த ஒரு வருட காலமாக நடைபெற்ற உண்மைச் சம்பவங்களிலிருந்தே இந்நாவல் உருப்பெற்றுள்ளது.

இக்கதையின் கதாபாத்திரங்களில் இறந்தவர்கள் உண்மையிலேயே இறந்தவர்கள்தான். உயிரோடு இருப்பவர்கள் இப்போதும் உயிரோடுதான் இருக்கின்றார்கள். “புதியதோர் உலகம்” ஒரு இலக்கியமாகக் கருதி மாத்திரம் படைக்கப்படவில்லை. ஒரு அறைகூவலாகவும் கருதியே இது வெளிவந்துள்ளது. வாசகர்கள் இதனைப் புரிந்து கொண்டு ஆதரவு தர வேண்டும்".


----------------------------------------------------------------------------------
“புதியதோர் உலகம்” நூலாசிரியர் கோவிந்தன் பற்றி சில வரிகள்.

1982 இல் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தில் (புளொட்) இணைந்து கொண்டார்.

1983 இல் முழுநேர உறுப்பினரானதுடன் கழகத்தின் மத்திய குழுவிற்கும் தெரிவானார்.

1985 இல் புளொட் அமைப்பிலிருந்து வெளியேறினார். “தீப்பொறி” ஈழவிடுதலைப் போராட்டக் குழுவை நிறுவிய ஸ்தாபக உறுப்பினர்களில் இவரும் ஒருவர். இக்கால கட்டத்தில் புளொட் இனால் தேடப்பட்டு தலைமறைவாக இருந்து செயற்பட்டார். இக்காலத்தில்தான் “புதியதோர் உலகம்” என்ற நாவல் எழுதப்பட்டது.

1986இல் விடுதலைப்புலிகள் ஏனைய அமைப்புக்களை தடைசெய்தமையால் இவர் தொடர்ந்தும் தலைமறைவாகவே செயற்பட்டார்.

1991 இல் யாழ்ப்பாணத்தில் அமைப்புப் பணிகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது மே மாதம் 17ம் திகதி விடுதலைப்புலிகள் அமைப்பினால் கைது செய்யப்பட்டார். மேற்கொண்டு அவர் பற்றிய எந்த விபரமும் இன்றுவரை கிடைக்கவில்லை.

அண்மையில்தான் கோவிந்தனின் “புதியதோர் உலகம்” படித்தேன். தமிழ் மக்கள் கோவிந்தனை மறந்து போனார்களா? இலக்கிய வாதிகள் கூட அவரை நினைவு கூர்ந்து நான் கண்டதில்லை. கோவிந்தனின் முன்னுரையே நாவலைப் பற்றிக் கூறி விடுகின்றது. இன்னும் எத்தனை எத்தனை கோவிந்தன்கள் தம் கதை கூறாது மறைந்து போனார்கள்?
1991களின் பின்னர் புளொட் அமைப்பின் எத்தனை அங்கத்தவர்கள் தம்மாலேயே அழிந்து போனார்கள். கோவிந்தனுக்குத் தெரிந்திருக்க நியாயம் இல்லை. நேர்மையான ஒரு போராட்ட கழகம் உருவாகவேண்டும் என்ற கனவைத் தாங்கிய அவர் வார்த்தைகளும் பொய்துப் போய்விட்டன.

கோவிந்தன் பற்றிய மேலதிக தகவல்கள் தெரிந்தால் யாராவது தயவுசெய்து பதிவு செய்து விடுங்கள்.