Friday, September 08, 2006

KABHI ALVIDA NAA KEHNAஅண்மையில் புதிய இயக்குனர் சாமியின் “உயிர்”; திரைப்படம் பார்க்கும் சந்தர்ப்பம் கிடைத்தது. அட தமிழில் துணிந்து, திருமணமான பெண் ஒருவர் காதலிக்கும் திரைப்படம், அதுவும் கணவனின் தம்பியைக் காதலிப்பதாக எடுத்திருக்கின்றார்களே என்று நினைத்தபடியே பார்த்துக் கொண்டிருந்தேன், கடைசில்தான் தெரிந்தது அதே தமிழ்ப் பட அகராதிக்குள் விழுந்து அண்ணியை வெறும் வில்லி வேடம் கட்ட வைத்து முடிவில் இறக்கவும் செய்திருக்கின்றார் சாமி என்று. ஐயோ சாமியாகிவிட்டது.

சரி தமிழ் இயக்குனர்கள் துணிந்து வாழ்வில் நடக்கும் நிகழ்வுகளைப் படமாக்கப் போவதில்லை. மக்களுக்குப் படிப்பினையை ஊட்டுகின்றோம் என்று சொல்லிக் கொண்டு குண்டுச் சட்டிக்குள் குதிரை ஓட்டிக்கொண்டு இருக்கப்போகின்றார்கள். அவர்களை நொந்து கொள்வதிலும் பார்க்க, நானே வேற்று மொழிகளில் எத்தனையோ தரமான திரைப்படங்கள் வருகின்றன அவற்றை பார்க்கலாம் என்று மலையாளம், ஈரானியன், ப்ரெஞ்ச் படங்கள் என்று இந்தக் கிழமையை ஒருவாறு போக்காட்டினேன். அப்போதுதான் சாருகான் நடித்த ஒரு ஹிந்திப்படம் நன்றாக உள்ளது என்று கேள்விப்பட்டுப் போய்ப் பார்த்தேன். அசந்து விட்டார்கள் என்று சொல்வார்களே அப்படியாகி விட்டது என் கதை. ஹிந்தித் திரைப்படங்களும் அனேகமாக வெறுமனே கலர் கலராக உடையணிந்து அழகிய பெண்கள் பொம்மைகளாக வந்து போவார்கள் என்ற என் எண்ணத்தை இந்த வாயில் நுழையாத ஹிந்தித் திரைப்படம் உடைத்துள்ளது.மனிதர்களின் உணர்வுகளைப் பகுத்தறிந்து பார்த்துப் பாத்திரங்களை அதற்கேற்ப வகைப்படுத்தி வாழ்வில் சில நிகழ்வுகள் ஏன் நடக்கின்றன என்று தெரியாமல் நடந்து போவதை மிக நுணுக்கமாக இயக்குனர் திரைப்படம் முழுக்க கொண்டு சென்றுள்ளார். இயக்கத்தில் எங்காவது கெம்பிறமைஸ் இருக்கும் இந்தியக் கலாச்சாரத்தில் இப்படி ஒரு திரைப்படம் எடுத்து, அதுவும் முன்னணி நடிகர்களை வைத்து எடுத்து வெற்றி காண முடியாது என்று நினைத்திருந்த என்னை இயக்குனர் ஏமாற்றி விட்டார். தவறு பிடிக்க வேண்டும் என்று கூர்ந்து பார்த்தேன். கதை நகரும் முறை, பாத்திரங்கள், அவர்களின் நடிப்பு என்று எங்கும் சிறு தவறைக் கூட காண முடியவில்லை.

அமிதாப்பச்சனின் தயாரிப்பில், ஹரன் ஜோகரின் இயக்கத்தில் சாருகான், ராணிமுகர்ஜி, ப்ரீத்தி ஜிந்தா, அபிஷேக் பச்சன் ஆகியோர் இணைந்து நடித்திருக்கின்றார்கள்.இயக்குனர் குறிப்பு:

மூன்று வகையான தம்பதிகள் உலகில் இருக்கின்றார்கள்.

முதலாவது, பேச்சுத் திருமணம் செய்தவர்கள். இவர்களை நான் ஒரு போதும் முற்றுமுழுதாகப் புரிந்து கொண்டதில்லை, ஆனால் இவர்களுக்குத் தெரியும் தாங்கள் என்ன செய்கின்றார்கள் என்று, என்பதனை நான் உறுதியாக நம்;புகின்றேன்.
அடுத்து தமது உண்மைக் காதலைக் கண்டறிந்து, அவர்களையே திருமணம் செய்து கொண்டவர்கள். நான் நம்புகின்றேன், இவர்கள் மிகவும் குறைந்த அளவில் இருப்பினும் இவர்களே மிகவும் அதிஷ்டம் செய்தவர்கள். கடைசித் தம்பதிகள், பெற்றோரின் விருப்பத்திற்கிணங்க பணம், அந்தஸ்த்து, போன்ற பல காரணங்களுக்காகத் திருமணம் செய்பவர்கள். இவர்களே மிகவும் துரதிஷ்டசாலிகள், இதனை இவர்களே புரியாதவர்களாக இருக்கின்றார்கள். இயந்திர வாழ்க்கையின் ஓட்டத்தில் ஒருநாள் தற்செயலாக தமது உண்மைக் காதலைச் சந்திக்கும் சந்தர்ப்பம் கிடைக்கின்றது. இங்கே கேள்வி என்னவென்றால்? “உனது உண்மைக் காதலை ஒருநாள் நீ சந்திக்கும் போது ஏற்கெனவே உனக்குத் திருமணம் ஆகிவிட்டடிருந்தால்… அப்போது நீ என்ன செய்வாய்?, அப்போது நீ என்ன செய்வாய்?


இரண்டு தம்பதிகளுக்கிடையிலான உறவின் சிக்கலை சிக்கித் தவிக்காமல் எந்த வித விட்டுக் கொடுப்பும் இல்லாமல் ஒரு தரமான திரைப்படமாகத் தந்துள்ளார் இயக்குனர். உதைபந்தாட்ட வீரர் சாருகானின் மனைவி ப்ரீத்தி ஒரு புகழ்பெற்ற சஞ்சிகை ஒன்றில் வேலை புரிகின்றார். இவர்களுக்கு ஒரு மகன். சாருகானின் விருப்பங்களும், ப்ரித்தியின் விருப்பங்களும் வேறுவேறாக இருக்கின்றன. இவரும் தமது தொழிலிலும் விருப்பங்களிலும் ஆர்வம் அதிகமுள்ளவர்களாக இருப்பதால் முக்கியமான திருமணநாள் போன்றவற்றைக் கூட மறந்து விடுகின்றார்கள்.

அடுத்து ராணி முகர்ஜி, பெற்றோரை இழந்த பின்னர் அமிதாப் பச்சன் குடும்;பத்துடன் நெருங்கிய உறவு கொண்டிருக்கின்றார். அமிதாபின் மகன் அபிஷேக் பச்சன் அவர் மீது கொண்ட காதலால் அவரைத் திருமணம் செய்யச் சம்மதிக்கின்றார். திருமணத்தின் பின்னர் தனக்கு அபிஷேக்கில் காதல் இல்லை என்பது அவருக்குப் புரிய வருகின்றது. அலைவரிசைகள் ஒன்றாக இருக்கும் சாருகானுக்கும், ராணி முகர்ஜிக்கும் காதல் பிறக்கின்றது. அதேவேளை நாகரீக வாழ்வை விரும்பும் ஒரே அலைவரிசையில் இருக்கும் ப்ரீத்தியும், அபிஷேக்கும் வெறும் நண்பர்களாகவே இருக்கின்றார்கள். தனது மருமகள் சாருகானைக் காதலிக்கின்றாள் என்று தெரியவந்த போது நெஞ்சு வலி வந்து மருத்துவமனையில் உயிருக்குப் போராடிக்கொண்டிருக்கும் அமிதாப்பச்சன் இறுதியாக ராணி முகர்ஜியை அழைத்து “நீ உன் காதலனுடனேயே போய் விடு, வாழ்க்கை என்பது மிகவும் குறுகியது அதனை நாம் உண்மையாக வாழ்ந்து முடிக்க வேண்டும். நீ என் மகனுடன் இருப்பதால் என் மகன் தனது உண்மையான காதலைச் சந்திப்பதற்கு நீ அவனுக்குத் தடையாக இருக்கின்றாய், அதே வேளை நீயும் உன் காதலை இழக்கின்றாய்” என்று கூறி விட்டு இறந்து போய் விடுகின்றார். அமிதாப்பச்சனின் பாத்திரம் தனித்தன்மையுடன் சிறப்பாக அமைத்துள்ளது.

தமது குடும்ப வாழ்விற்காக காதலைத் துறந்து விடுவோம் என்று முடிவெடுத்த காதலர்கள் உண்மையைக் கூறி மீண்டும் தமது குடும்ப வாழ்விற்கு ஒரு சந்தர்ப்பம் கொடுக்க முடிவெடுக்கின்றார்கள். ஆனால் உண்மை தெரிந்த போது இருவருமே தமது துணையினால் ஒதுக்கப்படுகின்றார்கள். சாருகானின் தாயார் ப்ரீதியிடம் “உனக்குக் குழந்தை இருக்கின்றது அதற்காகக் கொஞ்சம் விட்டுக் கொடுத்துப் போய் இருக்கலாம்” என்று புத்திமதி கூறிய போது “குழந்தைக்காக பொய்யான ஒரு உறவில் சேர்ந்து வாழும் கோழையல்ல நான்” என்று கூறுகின்றார். சாருகான் வீட்டை விட்டு வெளியேறுகின்றார். அதே வேளை ராணி முகர்ஜியும் வெளியேறுகின்றார். ஒருவரை ஒருவர் நோகடிக்கக் கூடாது என்ற எண்ணத்தில் தாம் வீட்டை விட்டு வெளியேறியதை அவர்கள் மறைத்து விட்டார்கள்.
இரு ஜோடிகளுக்கும் விவாகரத்து ஆகிவிடுகின்றது. அபிஷேக் வேறு திருமணம் செய்து கொள்கின்றார். ப்ரீத்தி ஒருவருடன் நட்பு வைத்திருக்கின்றார். இறுதியில் அபிஷேக்கும், ப்ரிதியும் சேர்ந்து சாருகானையும், ராணி முகர்ஜியையும் சேர்த்து வைக்கின்றார்கள்.
திரைப்படம் முற்று முழுதாக நியூயோர்க்கில் படமாக்கப்பட்டிருக்கின்றது. காரணம் புரியவில்லை. இத்திரைப்படத்தை இளம் தம்பதிகளைப் பார்க்க வேண்டாம் என்று இந்தியாவில் பெற்றோர் தடைவிதிப்பதாக அறிந்து கொண்டேன். இப்படியாக விமர்சனங்கள் கண்டனங்கள் கிடைக்கும் என்று தெரிந்து கொண்டும் துணிந்து இயக்கிய ஹரனிற்கு மீண்டும் ஒருமுறை வாழ்த்துதான் என்னால் கூற முடியும்.

திருமணம் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்பட்டது, ஒருவனுக்கு ஒருத்தி என்ற எமது பழைய பஞ்சாங்கங்களை மூலையில் தூக்கிப் போட்டு விட்டு மனித உணர்வுகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து யதார்த்தத்தை இயக்குனர் திரைப்படமாக்கியிருக்கின்றார். “உயிர்” திரைப்படத்திற்கு வடிவேல் அந்தத் துள்ளு துள்ளியதாக ஒரு சஞ்சிகையில் படித்தேன், இந்தத் திரைப்படம் பார்த்தால் தற்கொலை செய்து கொள்ளக் கூடும். ஹிந்தியில் மனஉணர்வுகளைக் கூறும் பல தரமான திரைப்படங்கள் தற்போது வருகின்றன. தமிழ் திரைப்பட உலகிற்கு எப்போது அந்தப் பாக்கியம் கிடைக்குமோ தெரியவில்லை. இந்தத் திரைப்படத்தின் முக்கிய சிறப்பு என்னவென்றால் இத்திரைப்படத்தில் வரும் அத்தனை பாத்திரங்களும், முற்போக்குச் சிந்தனை கொண்டவர்களாகவும், வாழ்வு பற்றிய ஆழமான அறிவுள்ளவர்களாகவும் இருக்கின்றார்கள். ஆனால் யதார்த்தத்தில் இது எத்தனை வீதம் சாத்தியம்? மனிதர்கள் அனைவரும் இத்தனை விளக்கமுள்ளவர்களாக உலகில் இருந்துவிட்டால்?

Sunday, September 03, 2006

வேட்டையாடு விளையாடு

“சிவகாசி” யும், “புலிகேசி” யும் சக்கை போடு போடும். அதேவேளை “காக்க காக்க” வும் உச்சத்திற்குப் பறக்கும், பார்வையாளர்கள் எல்லாத் திரைப்படத்தையும்தான் பார்த்து வைக்கின்றார்களோ?

“காக்க காக்க” அளவுக்கு படம் எடுபடேலை எண்டது உண்மைதான் அதே நேரம் வன்முறை கூடீற்றுது எண்டதையும் என்னால ஒத்துக் கொள்ளேலாமல் இருக்குது. கௌதமின்ர ஸ்ரைல் என்ன எண்டு பாத்தால் சில மனித நச்சுகளை அழிக்கிறதுக்கு உடனடி நடவடிக்கை தேவை. இந்தியா இருக்கிற நிலமையில கோட், கேஸ் எண்டு போனால் எப்பவும் வில்லன்களுக்குத்தான் சார்பா முடியும். எனவே சமூக விரோதி எந்தப் பெரிய கொம்பனா இருந்தாலும் ஒரு உண்மையான பொலிஸ் அதிகாரி உடனேயே அவனை அழித்து விடுறதுதான் அந்தச் சமூகத்துக்காக அவனால செய்யக்கூடியது நன்மை. இதைத்தான் தனது திரைப்படங்கள் மூலம் சொல்லி வருகின்றார் கௌதம்.


தமிழ் திரைப்படங்கள் ரேட்டிங் செய்யப்படுவதில்லையோ, இல்லாவிட்டால் கனேடியத்தமிழ் திரையரங்குகள் அதில் கவனம் எடுக்கவில்லையோ என்னவோ, தமிழ் திரைப்படங்கள் என்றால் குடும்பமாகச் சென்று பார்க்கும் வழக்கம்தான் எல்லோருக்கும் இருக்கிறது. இதனால் வன்முறை கூடிய பல திரைப்படங்களை குழந்தைகள் பார்க்க நேரிடுகின்றது. பெற்றோர் திரைப்படங்களுக்குச் செல்லும் முன்னர் திரைப்படம் பற்றிய விமர்சனங்ளை அறிந்து கொண்டு போனால் இந்த சங்கடங்களைத் தீர்க்க முடியும்.

கௌதமினால் “காக்க காக்க” திரைப்படத்தின் கருவில் இருந்து விலக முடியில்லை, தமிழ் நாட்டில் முழுமையாகப் படப்பிடிப்பு செய்தால் “காக்ககாக்க” வின் மறுபிரதி போல் “வேட்டையாடு விளையாடு” திரைப்படமும் வந்து விடும் என்று நினைத்தோ என்னவோ பாதிக் காட்சிகளை நியூயோர்க்கில் படப்பிடிப்பு செய்திருக்கின்றார்கள். இது ஒரு வியாபாரத்தந்திரமே தவிர திரைப்படத்திற்கு இதனால் ஒரு நன்மையும் இல்லை. இருந்தாலும் நியூயோர்க் காட்சிகள் குளிர்மையாக இருந்தன.

சின்னச் சின்னப் பிரச்சனைகளைத் தாங்கிக்கொள்ள முடியாமல், தம்மில் அன்பாய் இருக்கும் உறவுகளை மறந்து பல பெண்கள் தற்கொலை செய்து கொள்கின்றார்கள். இது தவறு கொஞ்சம் சிந்தித்தால் வாழ்வை மகிழ்ச்சியாக மாற்றிக்கொள்ள முடியும் என்பதை ஜோதிகாவின் பாத்திரத்தின் மூலம் காட்டியிருக்கின்றார். ஜோதிக்காவின் பாத்திரம் மூலம் கற்பு, கல்யாணம், தாய்மை என்று அலட்டிக் கொள்ளாமல் பெண்களுக்கு நல்ல ஒரு செய்தியைச் சொல்லிச் சென்றிருக்கின்றார்.

ஓரினச்சேர்க்கை என்பது நகைச்சுவைக்குரியது என்பதுபோல்தான் எம்மில் பலரும் பார்க்கின்றார்கள். அதைத்தான் கௌதமும் செய்திருக்கின்றார். கமல் “அடேய் நீயென்ன ஹோமோ செக்சுவலா” என்று கேட்ட போது திரையரங்கு சிரிப்பால் அதிர்ந்தது அதற்கு உதாரணம். இந்த இடத்தில் கமல் மிகவும் தாழ்ந்து போய்விட்டார்.

நடிகர்கள் என்று பார்க்கும் போது எனக்கு இரண்டு விடையங்கள் திருப்தியாக இருந்தன ஒன்று ரஜனிக்காந்தைப் போல தன்னை ஒரு இளைஞனாகக் காட்டி கதாநாயகியை டூயட் பாடிக் காதலிக்கும் ஒருவராகத் தன்னைக் காட்டிக்கொள்ளாமல் திருமணம் செய்து மனைவியை இழந்த ஒரு முதிர்ந்த பொலிஸ் அதிகாரியாக கமல் வந்து போவது, அடுத்தது மேக்கப் அதிகம் இல்லாமல் மிகவும் எளிமையாக ஜோதிகா நடித்திருப்பது. கமலின் முதல் மனைவியாக வந்து இறந்து போகும் கமாலினி, முன்னைய நடிகை சாந்தி கிறிஷ்ணாவை ஞாபகப்படுத்துகின்றார். பாடல்கள், பாடல் காட்சிகளும் பிடித்திருக்கின்றன.

மனநோயாளியான இரு இளைஞர்கள் பல கொலைகளைச் செய்து கொண்டு அதே நேரம் தமது படிப்பிலும் உச்சத்திற்கு வருவது என்பது எவ்வளவு சாத்தியம் என்று தெரியவில்லை. கொலைகள் திட்டமிட்டது போல் காட்டப்பட்டாலும் மிக அவசரமாகவும், காரணங்களும் வலுவானதாக இல்லாததாலும் தடையங்கள் பல வெளிப்படையாக உள்ளன. இருந்தும் கொலையாளிகள் அகப்படாமல் இந்தியா நியூயோர்க் என்று பறந்து அங்கும் இங்கும் கொலைகளைச் செய்து வருகின்றார்கள்.

எனக்கொரு சந்தேகம். இந்தியத்திரைப்படங்கள் பலதில் நேர்மையான பொலீஸ் அதிகாரயாக இருந்தால், சமூகவிரோதிகளால் அவர்கள் குடும்பம் பழிவாங்கப்படும் என்று காட்டப்படுகின்றது. ஆனால் உண்மை நிலையில் பொலிஸ் குடும்பங்கள் அழிக்கப்பட்டன என்று செய்திகளில் நான் படித்ததில்லை. அப்படியாயின் இந்திய மண்ணில் நேர்மையா பொலிஸ் அதிகாரிகளே இல்லையா?

குருதிப்புனல், மகாநதி, அன்பேசிவம் போன்ற தரமான படங்களைத் தந்த கமலும், காக்க காக்க திரைப்படத்தைத் தந்த கௌதமும் இணைந்து வெறுமனே வேட்டையாடி விளையாடி இருக்கின்றார்கள். திரையரங்கு சென்று பார்க்க வேண்டிய திரைப்படம் இது என்று நான் நினைக்கவில்லை. டீவீடியே போதும்.