Thursday, September 17, 2009

“புரிஞ்சுக்கோ”

நீயில்லாக் கட்டிடத்தின் முன் குந்தியிருக்கின்றேன்.
வீடு மாறி விட்டாயாம்,
உறுதிப்படுத்த,
உன் தொலைபேசி இலக்கம் கூட என்னிடமில்லை.
இருந்தும் என்ன?

மேப்பிள் இலைகள் நிறம்மாறிவிட்டன.
உன் பல்கனிப் புறாக்குஞ்சுகளும்
செட்டை முளைத்துப் பறந்துபோயிருக்கலாம்.
தேயிலை முடிந்துது வாங்கி நிரப்பிக்கொள்.
நானிட்ட மருந்தில் கரப்பான் பூச்சிகள் அழிந்தனவா?

நம் நினைவுகளைத் தாங்கி
உன்னோடலைந்த வீதிகளில் தனியாய் அலைகின்றேன்.
உன்னோடிருந்த வீட்டின் முன்னால்
நீ விட்டுச் சென்ற சுவாசத்தின் ஒரு துளி தேடி
குந்தியிருக்கின்றேன்.
யார் கண்டது?
எனை இழுத்துவந்த ஏதோ ஒன்று
உனையும் ஒருநாள் இங்கே இழுத்துவரலாம்.

“புரிஞ்சுக்கோ” என கண்கலங்க
என் கண்பார்த்துச்சொல்லிவிட்டுச் சென்றாய்.
பின்நவீனத்துவம்,
பிரேம்-ரமேஷ்,
சிக்மென் பிரைட்,
நீட்ஷே
புரிந்துகொண்ட என்னால்
உன் “புரிஞ்சுக்கோ”வை புரிந்து கொள்ள முடியவில்லை.

பனிப்போர்வைக்குள்
உன் “புரிஞ்சுக்கோ”வைப் புரியாமலேயே
நான் விறைத்திருக்க
நீ கடந்து போகலாம்
அது நானென்று புரிஞ்சுக்காமல்.

Monday, September 14, 2009

உறையும் பனிப்பெண்

வீட்டின் முன் மரக்கதவைத் திறந்தவுடன் ஒரு சின்ன ஹோல். அதன் இடப்பக்கத்தில் சாப்பாத்துகளை அடுக்கி வைப்பதற்கான வேலைப்பாடுகளுடன் சேர்ந்த மரத்தாலான சிறிய அலுமாரி. வலப்பக்கம் விருந்தினர்கள் ஜக்கெட்டைக் கழற்றி வைப்பதற்காக நான்கு கண்ணாடிகளைக் கொண்ட க்ளோசட். இவற்றைக் கடந்து மரத்தாலான வளைந்து செல்லும் படிக்கட்டுக்கள் படுக்கை அறைக்கு எடுத்துச் செல்லும். சின்ன ஹோலை அடுத்து, ஒரு சிறிய அறை. அதை பார்த்த உடனேயே அம்மா சொல்லி விட்டாள் இது சாமி அறை என்று. அடுத்து நீள் சதுரத்தில் பெரிய சாப்பாட்டு அறை, அதை அடுத்த நவீன வசதிகளுடன் கூடிய குசினி, குசினிக்கு எதிர்ப்பக்கம் சின்னதாக ஒரு சாப்பாட்டு அறை, அதை அடுத்து சிட்டிங் ஹோல் செங்கல்லால் ஆன குளிர்போக்கி அழகு படுத்தப்பட்டிருந்தது. அதனைக் கடந்து முன்பக்கத்தைப் பார்த்த படி ஒரு பெரிய சிட்டிங் ஹோல். மேல் தளத்தில் நான்கு அறைகள் விலாசமான யன்னல்களுடன் அடுக்கடுக்காய், அதற்கு எதிர்ப்பக்கத்தில் நீண்ட மாஸ்டர் பெட்ரூம். இதுதான் உமக்கும் எனக்கும் என்று ராஜன் தனது கையால் கலாவின் இடுப்பைக் கட்டிப்பிடித்துச் சொன்னான். கலா முழங்கையால் அவனை இடித்துத் தன்னை விடுவித்துக் கொண்டாள். இவற்றோடு நிலக்கீழ் அறை தடுப்புகள் இல்லாமல் விலாசமாக விரிந்து கிடந்தது. இந்தளவு பெரிய வீடு எமக்குத் தேவைதானா என்ற கேள்வி கலாவிற்கு எழுந்தாலும் ஆறு அங்கத்தவரைக் கொண்ட குடும்பம் வசதியாக வாழ இப்படியான வீடு தேவைதான் என்றும் பட்டது.
---------------
முந்தைய வீடு சின்னதாக இருக்கிறதென்று ஐந்து பெரிய அறைகளையும், பெரிய பின் தோட்டத்தையும் கொண்ட வீடு ஒன்றை மார்க்கத்தில் வாங்கிப் போயாகி விட்டது. மார்க்கத்தில் வாங்கும் போது தமிழர்கள் அதிகமில்லாத சுற்றத்;தில் வீடு வாங்கி விட்டதான பெருமை ராஜனுக்கு நிறையவே இருந்தது, காலப்போக்கில் மார்க்கம் தமிழர்களின் முக்கிய குடியேற்றமானதில் அவனுக்கு வருத்தம் அதிகம். அயலவர்கள் தமிழர்களாக இல்லாத சுற்றத்தில் வாழ்வது தனி மதிப்பைக் கொடுப்பதாக நினைக்கும் தமிழர்களி;ல் அவனும் ஒருவன். சுஜா பகிடியாக ஒருநாள் கேட்டாள் “ராஜன் என்ன ஊரிலையும் சைனீசுக்குப் பக்கத்திலையோ இருந்தனீங்கள்” என்று.
சுஜாவின் நக்கல் அவனுக்கு ஒருபோதும் விளங்குவதில்லை. முக்கியமாக சுஜாவை அவனுக்குப் பிடிப்பதில்லை. கலாவின் அக்கா மகள். கலாவால் வளர்க்கப்பட்டவள். தனது சொந்த வீடு போல் அடிக்கடி வந்து போவாள். அதைத் தடுப்பதற்கான அதிகாரம் ராஜனிடம் இல்லை.
புது வீடு. பார்த்துப் பார்த்து அலங்காரம் செய்தார்கள் ராஜனும், கலாவும். தாம் அலங்காரம் செய்தாலும் முழுநாளும் அந்த வீட்டில் வாழ்ந்து அனுபவிப்பது தனது பெற்றோரும், தனது சகோதரி வனஜாவுந்தான் என்று வீட்டுக்கு வரும் சொந்தங்களுக்குப் பெருமையாகத் தனது பெருந்தன்மையை அவன் அடிக்கடி சொல்லிக்காட்டுவான். மகன் வாங்கி விட்டிருந்த பெரிய வீட்டில் வெளியில் நடக்கப் போக முடியாத கடும் குளிர் காலங்களில் தாம் நன்றாகவே நடந்து திரிவதாக அப்பாவும் அம்மாவும் பெருமைப்படுவார்கள்.
“அப்பா ஒண்டுக்குப் போனால் சிந்திப் போட்டு வாறார், மணக்குது ஒருநாளைக்கு ரெண்டு தரமாவது வோஷ் ரூமைத் துடைச்சு விடுங்கோ” ராஜன் அம்மாவிடம் கேட்டுக் கொண்டான். வனஜா துடைப்பாள். விடிய ராஜனின் மகன் சந்தோஷை பள்ளிக் கூடத்திற்கு கொண்டு போய் விட்டு வருவாள். குளிர் இல்லாவிட்டால் பின்னேரம் அப்பா அவனைக் கூட்டிக்கொண்டு வருவார். குளிர் காலங்களில் வனஜா போய் வருவாள். ஒவ்வொருநாளும் ஐந்து அறைகளுக்கும் வைக்கூம் பிடிப்பது, அம்மாவுக்குச் சமையலுக்கு உதவி செய்வது, பின்னேரங்களில் அப்பா, அம்மாவோட சேர்ந்து தமிழ் சீரியல் பார்ப்பது என்று அவள் பொழுது போய் விடும். வனஜாவோடு எல்லோருமே மிகவும் அன்பாக இருந்தார்கள். “வேணுமெண்டா உங்கட வோஷ் ரூமைக் கழுவுங்கோ, எங்கட அறைக்குள்ள இருக்கிறதை நான் வேலையால வந்து கழுவுறன். ஒவ்வொருநாளும் வைகூம் பிடிக்கத் தேவையில்லை கிழமைக்கு ஒருக்காப் பிடிச்சாப் போதும்” கலா எத்தினையோ தரம் சொல்லிப் பார்த்துவிட்டாள் வனஜா கேட்பதாயில்லை. அவர்கள் வீடு வனஜாவின் கவனிப்பில் மிகவும் சுத்தமாக இருந்தது.

--------------------
ஊரில் இருக்கும் போது விடுபட்டுப் போன அனைத்துச் சந்தோஷங்களையும் ஓடிப்பிடித்து அனுபவித்துக் கொண்டிருந்தார்கள் ராஜன் குடும்பத்;தினர். கோயில், கலியாணம், சாமத்தியச் சடங்கு, பிறந்தநாள் கொண்டாட்டம், தழிழ் திரைப்படம், ஊர்ச் சந்திப்பு அனைத்தையும் ஒன்று விடாமல் ஓடியோடி அனுபவித்தார்கள். வனஜா இழுபட்டாள். அனைத்திற்கும் குடும்பத்துடன் இழுபட்டாள். “ஏய் வனஜா, எவ்வளவு நாளாச்சுக் கண்டு, எங்க உம்மட அவர் வரேலையே?, எத்தினை பிள்ளைகள்? போகும் இடங்களில் கேள்விகள். வனஜா ஒற்றைச் சிரிப்போடு அவர்கள் பிள்ளைகளை இழுத்துக் கொஞ்சுவாள், சுகம் கேட்பாள். ராஜனும் அவன் பெற்றோரும் ஒன்றையும் புரிந்துகொண்டதாகக் காட்டிக்கொள்ளாமல் வாழப்பழகியிருந்தார்கள். கலாவைத் தவிர வனஜாவின் சங்கடத்தை யாரும் கண்டு கொண்டார்களா என்பது சந்தேகந்தான்.
கலா ராஜனைக் காதலித்துக் கலியாணம் செய்து கொண்டாளே தவிர, அவன் குடும்பம் கனடா வந்த பின்பு அவர்களின் வாழ்க்கை முறை கலாவிற்குப் புரியாத புதிராக இருந்தது. ராஜன் கூட மாறிவிட்டான். வனஜா பற்றிய அவர்களது அலட்சியம் கலாவை மிகவும் சித்திரவதை செய்தது. வனஜா அவளோடு அன்பாக இருந்தாலும், தான் ராஜனைக் காதலித்துத் திருமணம் செய்து கொண்டது வனஜாவிற்கு ஒரு திருமணத்தை ஏற்படுத்திக்கொடுப்பதற்கு நிச்சயமாகத் தடையாக இருந்திருக்கும். வனஜா மனதுக்குள் தன்னை வெறுக்கக் கூடும் என்ற பயம் அவளை வனஜாவிடம் அதிகம் அன்பாக இருக்க வைத்தது.
--------------------------------------
ஒரு முழுமையான சேர்க்கைக்குப் பின்பு களைத்துப் போய் குறட்டை விடும் ராஜனை முழுங்கையால் இடித்து எழுப்பி ஒருநாள் கலா கேட்டாள்“வெட்கமாய் இல்லை உங்களுக்கு, ஒரு கிழமையில ரெண்டு மூண்டு தரம் தேவைப்படுது உங்களுக்கு, ஆனால் வனஜாக்கா பற்றி”“ப்ச் திரும்பித் தொடங்காதேம் எனக்குக் களைப்பாய் இருக்கு நாளைக்கு வேலையெல்லே”“வனஜான்ர வாழ்க்கைக்கு நீங்கள் ஒரு முடிவு காணமட்டும் நான் இனித் தனியத்தான் படுக்கப் போறன்” கலா போர்க் கொடி தூக்கினாள்.
கலங்கிப் போன ராஜன், வனஜாவைப் பட்டுச் சீலை உடுத்தி விதவிதமாகப் படம் எடுத்து, கல்யாண புரோக்கரிடம் கொடுத்தான். விவாகரத்துச் செய்தவர்கள், மனைவியை இழந்தவர்கள், ஏதோ ஒரு காரணத்திற்காகக் கலியாணமே செய்யாமல் இருந்தவர்கள். காலம் ஓடியதுதான் மிச்சம். அதன் பின்னர் அவளுக்கு வாய்த்தது அவ்வளவுதான் என்று ஒரேயடியாகக் கைவிட்டு விட்டார்கள்.
-----------------------------

கலா கர்ப்பமாக இருந்த போது ஒருநாள் சாப்பாட்டு மேசையில் அவளுக்குப் பார்த்துப் பார்த்து சாப்பாடு போட்டாள் அம்மா. சுஜாவும் அன்று அங்கிருந்தாள். வனஜா உடம்பு சரியில்லை என்று சாப்பிடாமல் படுத்துவிட்டாள். ஒரு மருமகளை இப்பிடி அன்பாகப் பார்க்கும் மாமியை வேறு எங்கும் தான் பார்த்ததில்லை என்று அப்பா சொன்னார். “மருமகளைப் பார்க்கிற ஆர்வத்தில மகளைக் கை விட்டிட்டீங்கள்” என்று சாப்பிட்டவாறே சுஜா சொன்னாள். சுஜா அடக்கம் தெரியாதவள். பெரியவர்களிடம் எதைக் கதைக்க வேணும் என்ற பக்குவம் இல்லாதவள். இந்தக் காலத்துப் பிள்ளை. இவ்வளவு நாளும் அவள் சொன்னதற்கெல்லாம் அவர்கள் அர்த்தம் கண்டது இப்படித்தான். ஆனால் அவள் இன்று சொன்னது எல்லோரையும் ஒரேயடியாகத் தாக்கியதால் ஒரு பயங்கர மௌனம் அங்கே குடிகொண்டது. அப்பா அவள் அபிப்பிராயத்தால் தாக்கப்பட்டது போல் அவளைப் பார்த்தார். அம்மா அவசரமாக ராஜனுக்கு சோறு போட்டாள். கலா மௌனமாக ராஜனையும், அப்பாவையும் பார்த்தாள். அவள் பார்வை பதிலுக்காகக் காத்திருந்தது. ராஜனுடன் இது பற்றிக் கதைத்துச் சண்டை பிடித்துக் களைத்து விட்டாள். மாமா, மாமியிடம் இது பற்றிக்கதைக்கும் தைரியம் அவளுக்கு இருக்கவில்லை. அனேகமாக வனஜா அந்த வீட்டில் உலாவிக் கொண்டிருப்பது கலாவை அதைப் பற்றிய கதையைத் தொடக்குவதற்குத் தடுத்திருக்கலாம்.
அப்பா தொண்டையைச் செருமிக் கொண்டு கண்களை ஒடுக்கிக் குரூரமாக சுஜாவைப் பார்த்த படியே “அவளுக்கு ஒண்டும் பொருந்தி வரேல, அதுக்கு நாங்கள் என்ன செய்யிறது” என்றார். உவளுக்கெல்லாம் நீங்கள் பதில் சொல்லத் தேவையில்லை என்பது போல் ராஜன் கொடூரமாக சுஜாவைப் பார்த்தான். “நாங்கள் ஏறாத கோயிலில்லை” என்றாள் அம்மா. “அவளுக்குக் கொடுத்து வைச்சது அவ்வளவுதான், அந்த நேரம் எங்களிட்ட வசதியுமிருக்கேலை, ஒண்டும் சரியா வரேலை” என்றாள் மூக்கைச் சீறிய படியே.மௌனமாக இருந்த கலா “அது சரி மாமா இப்பதான் நல்ல வசதியா இருக்கிறமே” தொண்டையில் முள்ளுச் சிக்கிக் கொண்டது போல் அவள் வார்;த்தைகள் விக்கி விக்கி வந்தது. அப்பா ஏதோ பெரிய பகிடியைக் கேட்டு விட்டது போல் “இந்த வயசிலையோ” என்று விட்டுச் சிரித்தார். சுஜா கதிரையைத் தள்ளிக் கொண்டு எழுந்து போய் விட்டாள்.
----------
ஒருநாள் மாமி தனியே வீட்டில் இருக்கும் போது, கலா மீண்டும் வனஜா பற்றிய கதையைத் தொடங்கினாள். “ஏன் மாமி வனஜாவை இப்பிடியே வைச்சிருக்கப் போறீங்களே?”மாமியின் முகம் சினத்தால் சுருங்கியது. சந்தோஷமாக வாழ்க்கையை அனுபவித்துக் கொண்டிருக்கும் எங்களை இடையிடையே குற்ற உணர்வைத் தூண்டிவிட்டு வேடிக்கை பார்க்கின்றாள் என்று கலா மேல் கோவம் வந்தது. “ஏன் தனக்குக் கலியாணம் வேணும் எண்டு வனஜா உன்னை எங்களோட கதைக்கச் சொன்னவளே” வெடுக்கென்று கேட்டாள் மாமி.கலா திகைத்துப் போக, “எனக்கு முப்பத்தெட்டு வயசில சுகமில்லாமல் நிண்டிட்டுது, அவளுக்கு இப்ப நாப்பத்தைஞ்சு வயசாகுது, ஒழுங்கா வருகுதோ தெரியாது, இனிக் கலியாணம் கட்டி என்ன பிரியோசனம்? பிள்ளையும் தங்காது உடம்பும் வத்திப் போயிருக்கும் உணர்ச்சியும் இருக்காது” என்று விட்டு எழு முயன்ற மாமியைத் தடுத்து நின்ற கலா, “மாமி படுக்கிறதுக்கும், பிள்ளைப் பெறுறதுக்கும் மட்டுமே கலியாணம், அதுக்கு மேல எத்தினையோ இருக்கு, அதுக்கு வனஜாக்கு ஒரு நல்ல துணை தேவை” என்றாள். “அதுக்கு மேல என்ன இருக்கு? துணை வேணுமெண்டால் அதுக்குத்தான் நாங்கள் இருக்கிறமே, இதை விட நல்ல துணை எங்கையிருந்து வரப்போகுது” சொன்னபடியே கலாவைத் தள்ளாத குறையாக எழுந்து சென்றுவிட்டாள்.உடம்பை அலட்சியமாக அசைத்து அசைத்துச் செல்லும் மாமியின் பின்புறத்தைப் பார்த்த படியே நின்ற கலா, அறுபது வயது கடந்த பிறகும் படுக்கையறைக்குள் அவள் அடிக்கும் கூத்தை அருவருப்போடு நினைத்துப் பார்த்தாள்.
---------------------
ராஜனின் மாமா மகள் கவிதாவிற்குக் கலியாணம். சின்ன வயது. படிப்பு முடியு முன்பே நல்ல இடத்திலிருந்து கேட்டு வந்திருந்தார்கள். மாமா வசதியற்றவர். தொடர்மாடிக் கட்டிடத்தில் வசிப்பவர். எனவே ராஜனின் வீடு பொம்பிளை வீடாக மாறியது. சொந்தங்கள் அடிக்கடி வீட்டிற்கு வருவதால் வீடு கலியாணக் களை கட்டியது. கவிதாவின் அதிஸ்டம் முக்கிய தலைப்பாகப் பல முறை அலசப்பட்டது. கலியாணமான பெண்கள் தங்கள் காதல் கதைகள், தாங்கள் பொம்பிளைப் பார்க்கப்பட்ட நாள், எதிர்பார்ப்புக்கள், நிராகரிப்புக்கள் அங்கீகரிப்புக்கள் பிரவச வேதனை, உடல் மாற்றங்கள், மார்பகங்களில் பால் கட்டிக்கொண்டது, பால் வற்றிப் போனது என்று அங்கு தொட்டு இங்கு தொட்டுக் கதைத்துக் கொண்டிருந்தார்கள். திடீரென்று கவிதாவின் அம்மா “வனஜா கெட்டிக்காறி இதுகளுக்க ஒண்டும் மாட்டுப்படாமல தப்பீட்டாள்” என்றாள். இன்னுமொருத்தி “உண்மைதான் அக்கா இந்த ஆம்பிளைகளோட இழுபடுகிறதெண்டாச் சும்மாவே எனக்கு காணும் எண்டு கிடக்குது” என்றாள் வெக்கத்தோடு.
“என்ன, மனுசன் இரவிரவாக் கரைச்சல் படுத்துதே” என்று விட்டுச் சிரித்தாள் இன்னுமொருத்தி
அதுவரை பொறுமையோடு இருந்த கலா “அக்கா இஞ்ச ஒருக்கா வாங்கோ” என்று வனஜாவை அந்த இடத்திலிருந்து அடுத்த அறைக்குக் கூட்டிக்கொண்டு போனாள். “எனக்குக் கொஞ்சச் சாமான்கள் வாங்க இருக்குது வாறீங்களே ஒருக்கா தமிழ் கடைக்குப் போயிட்டு வருவம்?”
வனஜாவிற்கு சிரிப்பாக வந்தது பெண்ணே எத்தனை வருடங்கள் எத்தனை கேள்விகள் அவமானங்கள்ஏமாற்றங்கள்எள்ளல்கள்உன்னால் எவ்வளவு காலம்தான் என்னைக் காக்க முடியும்?
வனஜா கலாவைப் பார்த்துப் புன்னகைத்தாள். கலா தாக்குண்டவளாய் மறுபக்கம் முகத்தைத் திருப்பிக் கொண்டாள்.
ஆண்கள் ஒரு கூட்டமாய் வேறு ஒரு மூலையில் தமக்குத் தெரிந்த ஒரே தலைப்பான இலங்கை அரசியல் பற்றி கதை அளந்து கொண்டிருந்தார்கள். வனஜா வழமை போல் ஒருவரின் உரையாடலிலும் கலந்து கொள்ளாமல் அவர்களுக்குத் தேனிர் கொடுப்பது, சாப்பிட ஏதாவது கொடுப்பது என்று சுழன்று கொண்டிருந்தாள். இலங்கை அரசியல் பற்றி ஆண்களோடு சேர்ந்து கொண்டு அவளால் கதைக்கத்தான் முடியுமா? இல்லா விட்டால் பெண்களோடு சேர்ந்து கொண்டு பெண் பார்க்கப்பட்ட நாள் பற்றியோ, பிள்ளைப்பேறு, போடப்பட்ட தையல் பற்றியோ அவளால் அலச முடியுமா? உரு அற்ற நிழல்போல் அவள் அலைந்து கொண்டிருந்தாள்.
-----------------------------
ஒருநாள் உடம்பு சரியில்லாமல் போனதால் கலா வேலைக்குப் போகவில்லை. உடம்பு சரியில்லையோ இல்லா விட்டால் மனம்தான் சரியில்லையோ என்ற சந்தேகம் வனஜாவிற்கு. ராஜன் வேலைக்குப் போகும் வரை அனுங்கிய படியே கட்டிலில் கிடந்தவள், ராஜன் வேலைக்குப் போனதும் சந்தோஷைப் பள்ளிக் கூடம் கொண்டு போய் விட்டுவிட்டு, அப்பாவையும், அம்மாவையும் மாமா வீட்டில் கொண்டு போய் விட்டு விட்டு வந்தாள். வனஜா குசினிக்குள் போனபோது கலா அவளைப் பின்தொடர்ந்தாள். சமையல் தொடங்க இருந்த வனஜாவின் கையைப் பிடித்துக் கூட்டிக் கொண்டு வந்து சோபாவில் இருக்கச் செய்து தானும் பக்கத்தில் இருந்தாள். வனஜா கேள்விக் குறியோடு அவளைப் பார்த்தாள். கலாவின் கண்கள் கலங்கியிருந்தது. தொண்டை அடைக்க அசட்டுச் சிரிப்பு சிரித்தவள் செருமிய படியே வனஜாவின் முகத்தைப் பார்த்தாள் “அக்கா உங்களோட கொஞ்சம் மனம் விட்டுக் கதைக் வேணும். அதுதான் நான் இண்டைக்கு வேலைக்கு லீவு போட்டனான்”
“என்ன கலா ஏதும் பிரச்சனையே”
“வனஜா என்ன இது எவ்வளவு காலத்துக்கு இப்பிடியே”
வனஜா குழம்பிப் போனாள். நெருப்புச் சுட்டு விட்டது போல் திடுக்கிட்டது அவள் உடம்பு. சில விஷயங்கள் பற்றிக் கதைக்கக் கூடாது. ஏன் அது நடந்தது என்று ஒருவருக்குமே தெரியாது. அவள் கொடுத்து வைத்தது அவ்வளவுதான் என்று எல்லோரும் முடிவெடுத்துவிட்டார்கள். இனிக் கதைப்பதற்கு என்ன இருக்கிறது.வனஜா மௌனமானாள். “அக்கா உங்களப் பற்றி இஞ்ச ஒருத்தருக்கும் அக்கறையில்லை. எல்லாரும் சுயநலமா இயங்கிக் கொண்டிருக்கீனம், நீங்களும் ஒண்டிலையும் அக்கறையில்லாதமாதிரி இயங்கிக் கொண்டிருக்கிறீங்கள், நான் ராஜனோடை சண்டை பிடிச்சுப் பாத்திட்டன். வயசு போட்டுதெண்டு சாட்டுச் சொல்லுறார். அக்கா நாற்பத்தைந்து வயதில கலியாணம் கட்டுறது ஒண்டும் பிழையில்லை. நீங்களா யாரையாவது தேடிக்கொண்டால் தவிர இவேல் ஒண்டும் செய்யப் போறேலை, நீங்கள் ஏன் வீட்டுக்குள்ளேயே அடஞ்சு கிடக்கிறீங்கள், வேலைக்குப் போங்கோ, இல்லாட்டி ஏதாவது படிக்கப் போங்கோ அப்பதான் நீங்கள் ஆரையாவது சந்திக்கலாம். இப்பிடியே இருந்தீங்களெண்டா இந்த வீட்டில இருந்து சமைச்சு, அப்பான்ர மூத்திரம் துடைக்கிறதோட உங்கட வாழ்க்கை முடிஞ்சிடும்
வனஜா மௌனமாக இருந்தாள். கலா எவ்வளவு முயன்றும் அவளிடமிருந்து ஒரு பதிலும் வரவில்லை. காதலிப்பது தறவென்ற மனநிலையில் ஊறி வளர்ந்தவள் அவள். இளம் வயதில் அவளை ஒருவரும் பெண் கேட்டு வரவில்லை. சீதணமாய் அள்ளிக் கொடுத்துக் கட்டி வைக்கும் அளவிற்கு அவர்களிடம் பணம் இருக்கவில்லை. இருந்ததையெல்லாம் கொடுத்து ராஜனை கனடா அனுப்பி வைத்தார்கள் அவன் எதையாவது செய்வான் என்ற நம்பிக்கையில். வந்த கடன் கொடுத்து முடித்த போது ராஜனுக்கு முப்பது வயதாகி விட்டிருந்தது. கலாவோடு காதல் வேறு. வீட்டிற்குக் சொல்லாமல் கொள்ளாமல் கலியாணம் செய்து கொண்டான். குற்ற உணர்வு. வசதி வந்ததும் குடும்பத்தை கனடாவிற்குக் கொண்டு வந்து விட்டான். வனஜா கனடா வந்து இறங்கிய போது அவளுக்கு நாற்பது வயது. இனி அவளுக்கெதுக்குக் கலியாணம் என்று தாமே முடிவெடுத்து வாழ்ந்து வருகின்றார்கள். “வேண்டாம் கலா நான் இப்ப சந்தோஷமாத்தான் இருக்கிறன், நீங்கள் கவலைப் படாதேங்கோ” சொல்லி விட்டு குசினிக்குள் எழுந்து போய் விட்டாள்.
கலா அவளைத் தொடர்ந்து போனாள். “ஏன் நீங்கள் இப்பிடித்தனியா இருக்க வேணும், நான் யாரைவாவது பாக்கிறன் நீங்கள் ஓம் எண்டு மட்டும் சொல்லுங்கோ”
“ நான் எங்கை தனியா இருக்கிறன்” சினந்தவள் “கலா ப்ளீஸ் நான் உங்களோட இருக்கிறது பிடிக்கேலை எண்டாச் சொல்லு நான் எங்கையாவது போறன்”.
“போ போ வனஜா அப்பிடிப் போனாலாவது நீ உன்ர விருப்பத்துக்கு இருப்பாய்..நீ யாரையாவது சந்திப்பாய்.. இப்பிடியிருந்தாயெண்டா இதுக்குள்ளையே உன்ர வாழ்க்கை முடிஞ்சிடும்”
வனஜா கலாவை முறைத்துப் பார்த்தாள் பின்னர் தன் அறைக்குள் போய் கதவைப் பூட்டிக்கொண்டாள்.
அதன் பிறகு கலா வனஜாவிடம் எதுவும் கேட்கவில்லை.
கனடாவில் வருடங்கள் பாய்ந்து பாய்ந்து கடந்து கொண்டிருந்தன. சுஜா ஒரு வெள்ளைக்காறனைக் காதலித்து கலியாணம் செய்து கொண்டாள். தனக்கு இது முதலியேலே தெரியும் என்று நக்கலாகச் சிரித்தான் ராஜன். அவனது பகிடி கலாவிற்கு விளங்கவில்லை. பெண்கள் தாமாகவே துணையைத் தேடிக்கொள்வது தவறு என்பதில் இன்றும் உறுதியாக இருந்தான் ராஜன். கலா குடும்பம் பற்றி எப்போதுமே ஒரு இளக்காரம் அவனுக்கு. கலியாணம் செய்து கொண்டதும் முதலில் கணவனோடு கலாவைப் பார்க்க வந்த சுஜா, 5வனஜாவின் கையால் நூடில் செய்யச் சொல்லிச் சாப்பிட்டு விட்;டுப் போனாள். போகும் போது “கொஞ்சமாவது சுயநலமாக இருக்கப் பழகுங்கோ வனஜாக்கா” என்றாள். அதன் பிறகு சுஜா கலா வீட்டிற்கு வருவதை நிறுத்திக் கொண்டாள். ராஜனையும் அவனது பெற்றோரையும் தன்னால் இனிமேலும் சகித்துக் கொள்ள முடியவில்லை என்று அவள் கலாவிற்கு தொலைபேசியில் அழைத்துக் கூறியிருந்தாள். -------------
ராஜனின் சொந்தம் ஒன்று லண்டனிலிருந்து கனடா குடிபெயர்ந்து ராஜன் வீட்டில் தங்கியது. ராஜனின் அப்பா அம்மாவின் வயதில் ஒரு தம்பதியும், ராஜனிலும் இரண்டு வயது குறைவில் சித்தார்தனும், இருபது வயதில் கௌரியும் வந்திருந்தார்கள். வந்த உடனேயே கௌரி வனஜாவுடன் ஒட்டிக்கொண்டு விட்டாள். அவளின் நகைச்சுவையான கதை வனஜாவிற்குக் கலகலப்பாக இருந்தது. சித்தார்த்தன் எப்போதும் சிகரெட்டும் கையுமாக, குழம்பிய தலையுடன் இருந்தான். அவன் வாயிலிருந்து எப்போதுமே தத்துவங்கள் கொட்டியபடியிருக்கும். அவன் கலியாணம் பற்றிக் கேட்டால் பெரிதாக ஒரு லெக்ஷர் அடிப்பான். “கட்டுற பொம்பிளை பெரிய வீடு, கார் வேணுமெண்டு அதிகாரம் பண்ணினால் நான் இரவு பகலா வேலைதான் செய்ய வேணும், அது எனக்குச் சரி வராது, பிறகு டிவோசிலதான் போய் முடியும், அதோட இப்பிடியான ஒரு உலகத்துக்கு இன்னுமொரு உயிரைக் கொண்டு வந்து சித்திரைவதைப் படுத்த நான் விரும்பேலை”“ஏன் சித்தாத்தன் பிள்ளை வேண்டாம் எண்டு சொல்லுற ஒரு பொம்பிளையப் பாத்துக் கட்டலாம் தானே” கலா கேட்டாள்.
“அதென்ன பிள்ளை வேண்டாம் எண்டிற பொம்பிள, அப்பிடியும் ஒருத்தி இருப்பாளோ”அம்மா அதிசயித்தாள்.
“அண்ணா படு கள்ளன். ஊருக்கொரு கேர்ள் ப்ரெண்டா வைச்சுக் கொண்டு தத்துவம் கதைக்கிறார்” கௌரி கலாவின் காதுக்குள் குசுகுசுத்தாள்.
“கனடா வந்தாச்சு இனி நல்ல வடிவான பெட்டையா ஒண்டைப்; பாத்துக் கட்டி வைப்பம்” ராஜன் சொல்ல, கலா முகத்தைச் சுழித்துக் கொண்டாள்.
“ஐயோ என்னை விட்டிடுங்கோ, முதல்ல வீடு எடுக்கிற அலுவலைப் பாப்பம், பிறகு நான் ட்ரவல் பண்ணிறதா இருக்கிறன், ரெண்டு மூண்டு மாசம் இஞ்ச நிக்க மாட்டன், போய் வந்துதான் வேலை ஏதாவது தேட வேணும்” என்றான் யன்னல் பக்கத்தில் போய் நின்று சிகரெட்டை ஒன்றைப் பற்ற வைத்த படியே.
வனஜா எல்லோருக்கும் தேத்தண்ணி கொடுத்தாள். சாப்பாடு விதம் விதமாய்ச் சமைத்தாள். சனிக் கிழமைகளில் எல்லோருமான டொரொன்றோவைச் சுற்றிப் பார்க்கப் போனார்கள். சித்தார்தன் வனஜா சமையல் பற்றிப் புகழும் போது வெட்கப்பட்டாள். சித்தார்த்தன் கவிதை சொன்னான். கலியாணம் செயற்கையான பரிசோதனைக் கூடம் என்றான். கடவுள் இல்லை என்று வாதாடினான். சுஜாவின் இடத்திற்குப் புதிதாக ஒருத்தர் வந்துவிட்டார் என்று ராஜன் கலாவிடம் படுக்கையில் சொன்னான். வீடு கலகலப்பாக இருந்தது. வனஜாவில் சிறிது மாற்றம் ஏற்பட்டதை ஒருவரும் கவனிக்கவில்லை. சாப்பாட்டுப் பட்டியலில் சித்தார்தனுக்குப் பிடித்த சாப்பாடு அதிகம் காணப்பட்டது. பகல் நேரத்தில் சிகரெட்டை ஊதி;ய படியே சித்தார்தன் வனஜாவிற்கு இறைச்சி வெட்டிக்கொடுத்தான். சிகரெட் மணம் வனஜாவைக் கிறங்கச் செய்தது. கௌரி அண்ணனின் காதல் லீலைகள் பற்றி, மரக்கறி வெட்டிய படியே வனஜாவிற்கு நகைச்சுவையோடு சொல்ல வனஜா வாய் விட்டுச் சிரித்தாள். வனஜா உணர்வுகள் அற்றவள். ஒட்டு மொத்தமாகக் குடும்பமே முடிவெடுத்திருந்ததால் சந்தேகத்திற்கு அங்கே இடமிருக்கவில்லை. கலா இருக்கும் போது மட்டும் வனஜா சிரிப்பதைக் குறைத்துக் கொண்டாள். கலா கெட்டிக்காறி தனது தடுமாற்றத்தை அவளால் உடனேயே அடையாளம் காண முடியும். கலாவை முதல் முதலாக இடைஞ்சலாக உணர்ந்தாள் வனஜா. எனக்குக் கிடைத்திருக்கும் அற்ப சுகம் இது. இதைக் கூட முழுமையாக அனுபவிக்க முடியாமல் கலா குறுக்கே நிற்கின்றாள் என்று வனஜாவிற்குத் தோன்றியது.
----------------
கௌரியை தமிழ் உடுப்புக் கடைக்குக் கூட்டிக்கொண்டு போகும் போது சித்தார்தனும் வந்தான். கௌரிக்கு ஒரு சீலை வனஜாவிற்கு ஒரு சீலை வாங்கிக் கொடுத்தான். சாப்பிடப் போனார்கள். நடந்து இடம் பார்க்கப் போனார்கள். எல்லாமே ஒரு கனவு போலிருந்தது வனஜாவிற்கு. ராஜனிலும் விட இரண்டு வயது குறைவு சித்தார்தனுக்கு. அவன் மேல் காதலை வளர்த்துக் கொள்வது கேவலமாக அவளுக்குப் பட்டது. இருந்தும் மனம் அவள் கட்டளையை கடந்து காததூரம் போய் விட்டிருந்தது. என்ன கலியாணமா செய்யப் போகிறேன். எங்களுக்குள் ஒரு உறவு வளர்கிறது. அவனுக்கும் என்னை நிச்சயம் பிடித்துத்தான் இருக்கின்றது. ஒருநாள் நான் அறிந்திரா சுகத்தை அது எனக்குத் தரப்போகிறது. அந்த ஒருநாள் அதிக தூரத்தில் இல்லை. அந்த ஒருநாள் போதும் நான் என் வாழ்க்கையின் மீதியை சந்தோஷமாகக் கழிப்பதற்கு. சித்தார்தனி;ன் கண்களில் அவள் காதலோடு கலந்த காமத்தைக் கண்டாள். சரி தவறு என்பதற்கு மேலால் அவள் உணர்வுகள் வளர்ந்து விட்டிருந்தன. பல வருடங்களுக்குப் பின் தன் அழகு மேல் முதல் முதலில் அவள் அக்கறை கொள்ளத் தொடங்கினாள். கர்ப்பம் கொள்ளாமல் இறுகிப் போய் இருக்கும் வயிறு. சற்று உயர்ந்து தொங்கும் பால் சுரக்காத முலைகள், தொடைகளின் நடுவே நரைத்த ஈரமற்ற உதிரும் சுருள் மயிர். மாதவிடாய் நின்று விட்டது. வனஜா சுருங்கிக் கொண்டாள். இந்த சதைப் பிண்டத்தை ஒருவன் விரும்புவானா? விரும்புவான். விரும்புகின்றான்.
அலுமாரியில் அடியிலிருந்த புதிய உடைகள் வெளியே வந்தன. நரையை மறைத்தாள். சிரித்தாள். சிரித்தாள். அவன் எங்கு கேட்டாலும் செல்வதற்குத் தன்னைத் தயாராக்கிக் கொண்டிருந்தாள். யாருக்குத் தெரியப் போகிறது. தெரிந்தால்தான் என்ன? யாருக்கு என்மேல் என்ன அக்கறை? முதல் முதலாய்த் தன் குடும்பத்தின் மேல் அவளுக்கு வெறுப்பு வந்தது. சித்தார்த்தனைத் தவிர்த்து அனைவரையும் வெறுத்தாள். எப்பிடி முடிந்தது என் குடும்பத்தால். சீதணம் இல்லை. ஒருவரும் கேட்டும் வரவில்லை. எனவே இப்பிடியே பேசாமல் இருக்க வேண்டும். வேலைக்குப் போகட்டும், ஏதாவது படிக்கட்டும் என்று கலா சொன்னபோது ஒரு பதிலில் ராஜன் அவளை அடக்கி விட்டான். “அக்காவை உயிருள்ள வரை வைச்சு நான் பாப்பன் ஆரும் அதில தலையிட வேண்டாம்”. வெளியே விட்டால் நான் யாரோடாவது படுத்திட்டு வந்து விடுவேன் என்ற பயம் அவனுக்கு.உன்னால சாப்பாடு போட முடியும், உடுப்பு வாங்கித் தர முடியும். அதுக்குக்கு மேலால் எனக்கொரு தேவை இருக்கின்றது என்பது எப்பிடி உனக்குத் தெரியாமல் போனது ராஜன்? இரவில் உன் அறையில் கட்டிலின்; சத்தம் என்னை ஒன்றும் செய்யாது என்று எப்பிடி நம்பினாய்? அப்பா அம்மா கூட இப்பவும். ச்சீ எதையெல்லாம் என் மனசு நினைக்கிறது. எதுக்காக சித்தாத்தன் இங்க வந்தான்.
-----------
அன்று பள்ளிக் கூட விஷயமாக கௌரி வெளியே போயிருந்தாள். ராஜனுக்கும் கலாவுக்கும் வேலை. அப்பா அம்மாவோடு சித்தார்தனின் அப்பா அம்மாவையும் யாரோ சொந்தக்காறரைப் பார்க்க வென்று சித்தார்த்தன் கூட்டிகொண்டு போயிருந்தான். வனஜா வீட்டி வேலைகளைச் செய்து விட்டு ரிவி பார்த்துக் கொண்டிருந்தாள். திடீரென்று கதவு திறக்கும் சத்தம் கேட்டது. சித்தார்தன். கையில் ஒரு சாப்பாட்டுப் பொட்டலம். சிரித்த படியே “சமைக்காதேங்கோ நான் நல்ல சாப்பாடு வாங்கிக் கொண்டு வந்திருக்கிறன்” என்றான்.
வனஜாவின் மனம் கனமானது. “நீங்கள் அங்க சாப்பிடப் போறீங்கள் எண்டு” வனஜா தொண்டை வறள உளறினாள்.
“அப்பிடியெண்டுதான் போனனான், அங்க அப்பா அம்மான்ர வயசில ரெண்டு பேர் இருக்கீனம், அங்க இருந்து நான் என்ன செய்யிறது. நான் மெல்லமா வெளிக்கிட்டு வந்திட்டன். சரி போறனான் ஏதாவது ஸ்பெஷலா வனஜாக்கு சாப்;பிட வாங்கிக் கொண்டு போவம் எண்டு நல்ல சைனீஸ் சாப்பாடு வாங்கிக் கொண்டு வந்திருக்கிறன்”. வனஜாவின் கண்களை நேரடியாகப் பார்த்து விட்டு நெடுகலும் நீங்கள்தானே சமைக்கிறீங்கள்” என்றான்.
வனஜாவின் கால்கள் நடுங்கத் தொடங்கியது. இதுதான் நான் எதிர்பார்த்த அந்த நாள். நெஞ்சம் கனத்து உடல் படபடத்தது. வருத்தத்திற்குக் கூட ஆண் மருத்துவரை அணுகாத வனஜாவின் ஐம்பது வயது உடம்பை இன்று இவன் தொடப்போகின்றான். நான் என்ன செய்ய வேண்டும். இந்த முத்திய உடம்பு அவனுக்கு ஏமாற்றத்தைக் கொடுத்தால்? அவள் உடல் எதிர்பார்ப்போடு தன்னைத் தளர்த்திக் கொண்டது. மனம் அலறியது. “என்னால் இனிமேலும் பொறுக்க முடியாது, என்னை அணைத்து விடு சித்தார்த்தா” கால்கள் தளர “ரீ போடட்டே என்றாள்”
“இ;ல்லைச் சாப்பிடுவமே நேரமாகுது” என்றான்
அவன் சொன்னதின் அர்த்தம் விளங்காமல் அவனைப் பார்த்தாள் வனஜா. சித்தார்த்தன் குசினிக்குள் போய் இரண்டு பீங்கானை எடுத்து வந்தான். மேசை மேல் வைத்து சாப்பாட்டைப் பிரித்தான். கிளாசில் தண்ணீர் வைத்தான். வனஜாவைச் சாப்பிடச் சொன்னான். கதிரையில் இருந்து சாப்பிடத் தொடங்கினான் சித்தார்த்தன்.
மௌனமாகச் சாப்பி;ட்டாள் வனஜா. சாப்பாடு முடிந்து தண்ணீர் குடித்து இனி என்ன என்பது போல் சித்தார்தனை அவள் பார்த்தாள். அவள் உணர்வுகள் வடிந்து போயிருந்தன. நெஞ்சின் கொதிப்பு குளிர்காணத் தொடங்கியது.
ஒரு சிகரெட்டைப் பற்ற வைத்த படியே சித்தார்த்தன் சொன்னான் “நான் ஒரு கேர்ளைச் சந்திக்கப் போக வேணும், அதுதான் அம்மா அப்பாக்கும் சொல்லாமல் அவசரமா வெளிக்கிட்டு வந்தனான். வரேக்க உங்கட நினைப்பு வந்தது. தனிய இருப்பீங்கள். சமைச்சீங்களோ தெரியாது அதுதான். சாப்பாடு நல்லா இருந்தது என்ன? கேட்டு விட்டுத் தனக்கு நேரமாகி விட்டதென்று அவசரமாக வெளியேறினான். கதவைப் பூட்டும் போது “இரவைக்கு அனேகமா வரமாட்டன்” என்றான்.
பிரமாண்டமான அந்த வீட்டில் தனியே விடப்பட்ட வனஜா, தனது ஐம்பதாவது வயதில் வாய் விட்டழுததை அந்த வீட்டின் சுவர்கள் கூடக் கேட்காதது போல் முகம் திருப்பிக் கொண்டன.
இனிப் பின்நேரம் ஆகும், வனஜா வழமை போல் சதீஸை பாடசாலையில் இருந்து அழைத்து வருவாள்.
---------------------------------------
நன்றி உயிர்நிழல்- January-July/2009

Sunday, September 06, 2009

A Good Indian Wife


A Good Indian Wife - by Anne Cherain


'Tis my opinion every man cheats in his own way, and he is only honest who is not discovered ~

Susannah Centlivre


அண்மையில் நான் வாசித்த பல இந்தியப் பெண் எழுத்தாளர்களின் ஆங்கில நாவல்கள், பேச்சுத் திருமணத்தைத் தளமாக் கொண்டு அமைந்திருந்தன. இந்தியப் பெண் எழுத்தாளர்களின் நாவல்களைத் தெரியும் போது அவை தற்செயலாகவே இக்கருப்பொருளுக்குள் சுழன்று கொண்டிருப்பதைக் காணக்கூடியதாகவிருக்கின்றது. போராட்டத்தைத் தவிர்த்து ஈழப்போராளிகளின் படைப்புக்களை அண்மைக்காலங்களில் எப்படிக் காண இயலாதோ அதே போல், அண்மைக் காலங்களில் நான் தெரிவு செய்த இந்தியப் பெண் எழுத்தாளர்களின் படைப்பும், ஒரு பெண்ணின் பார்வையில் இருந்து பேச்சுத் திருமணத்தை எதிர்கொள்ளும் நடுத்தர வர்க்கப் பெண்களின் சவால்களை விடுத்து அமைந்திருக்கவில்லை. இன்றும் உங்கள் நாட்டில் பேச்சுத் திருமணங்கள் இடம்பெறுகின்றனவா எனக் கண்களை விழித்து கேட்டாள் எனது பிரேசில் நண்பி. எமது நாட்டில் மட்டுமல்ல கனடாவில் வாழும் எமது சமூகத்திலும் இது தொடர்கின்றது என்பதை அவள் நம்பத்தயாராகவில்லை. மாதம் ஒரு நாவலைத் தெரிவு செய்து வாசித்துக் கலந்துரையாடுவதென்று சில நண்பிகள் சேர்ந்து முடிவெடுத்துத் தெரிந்த இந்த மாதப்புனைவு ஆன் செரெனின் “A Good Indian Wife ” இந்திய நண்பியின் தெரிவு இது. அடுத்த மாத எனது தெரிவில் One & Only ஷோபாசக்தியின் “கொரில்லா” வை அறிமுகப்படுத்தலாம் என்றிருக்கின்றேன்.

வாசிப்பும் பகிர்வும் - “A Good Indian Wife ” சுதந்திரத்தை மட்டுமே சுவாசிக்க விரும்பி குடும்ப வாழ்வை நிராகரிக்கும் சுனில், பெயரைச் சுருக்கி நீல் ஆக்கிய இந்திய, அமெரிக்கவாச (ஸான் பிரான்சிஸ்கோ) சிறந்த மருத்துவர். ஸ்போட்ஸ் கார், அன்ரிக் தளபாடங்கள், சொந்த ஜெட் கொண்ட அழகான சுகபோகி. அவன் வேலைசெய்யும் மருத்துவமனை வரவேற்பாளர்களில் ஒருத்தியான கரோலினை அவள் அழகிற்காகவும், குறும்புக்காகவும் மாய்ந்து காதலிக்கும் நீல், தனது கல்வித் தகைமைக்கு கரோலின் நிரகற்றவள் என்பதனால் திருமணம் என்ற பேச்சுக்கே இடம்கொடுக்காமல் கரோலினுடனான தனது உறவை மறைத்தே வைத்திருக்கின்றான். இருந்தும் இவ்வுறவு அங்குமிங்குமாகக் கசிந்ததை அவனால் தடுக்க முடியவில்லை. புகழ்பெற்ற அழகான, பணக்காற நீலை இவைகளுக்காக மட்டுமே காதலிக்கும் கரோலினின் முழு எண்ணமும் அவனைக் கணவனாக்கிக் கொள்வதே. இறுக்கமான கலாச்சாரத்தைக் கொண்ட இந்தியக் குடும்பத்தில் பிறந்த சுனிலுக்கு குடும்பகௌரவம், பெற்றோர்கள், சமூகம் என்பதும் முக்கியமாகவே இருக்கின்றன. கே.பாலச்சந்தரின் “47 நாட்கள்” திரைப்படத்தை நினைவிற்குக் கொண்டு வரும் இந்நாவல், கடந்த பல வருடங்களாக இந்திய சமூகத்தில் பெண்களுக்கு இழைக்கப்பட்டு வரும் கொடுமைகளின் ஒரு துளியை எடுத்துச் சொல்கின்றது. மேற்குலக நாடுகளுக்கு குடிபுகுந்து மாற்றுக்கலாச்சாரத்திற்குள் தம்மை தொலைத்து இரு கலாச்சாரத்தின் தாக்கங்களோடு ஒரு காலை அங்கும், ஒரு காலை இங்குமாக வைத்து வதைபடுபர் பலர், குறிப்பாக ஆண்கள், தமது சந்தோஷத்தைப் பார்ப்பதா குடும்பகௌவத்தைப் பார்ப்பதா என்று தடுமாறிய நிலையில் பெற்றோரின் விருப்பை எதிர்க்க முடியாது அவர்களின் விருப்பிற்காக ஒரு பெண்ணைத் திருமணம் செய்வதும், பின்னர் அவளை நிர்க்கதியாக இந்தியாவில் விட்டு விட்டுப் பறந்து வந்து தமது காதலியுடனான குதூகல வாழ்வைத் தொடருவதும், மேற்குலக நாடுகளில் தொடரும் ஒன்று. கனடாவைத் தளமாகக் கொண்டு அலி கசீமீ எனும் இயக்குனர் ‘Run away Groom’ ; எனும் விவரணப்படத்தை எடுத்திருக்கின்றார். பல பாதிக்கப்பட்ட குடும்பங்களின் நேர்காணலை உள்ளடக்கிய இப்படைப்பு Hot Doc விழாவில் திரையிடப்பட்டு சிறந்த விவரணத்திரைப்படத்திற்கான விருதையும் பெற்றிருக்கின்றது.

A Good Indian Wife" புனைவு ஏற்கனவே அறியப்பட்ட கருப்பொருளைத் தளமாகக் கொண்டாலும், புனைவாளரின் கதை சொல்லும் திறமை நுணுக்கம் என்பன வாசகர்களை பாத்திரங்களோடு ஊடுருவிச் செல்ல வைக்கின்றது. ஆயிரம் பொய் சொல்லி ஒரு திருமணத்தைச் செய்யலாம். சுனிலின் தாய் ஒரு பொய்யை மட்டும் சொல்லி சுனிலை உடனடியாக இந்தியாவிற்கு அழைத்து விடுகின்றாள். சுனிலை சிறுவயதிலிருந்து வளர்த்த தாத்தா மரணப்படுக்கையில் இருக்கின்றார் என்ற செய்தி சுனிலை உடனேயே இந்தியாவிற்குப் பறக்க வைக்கின்றது. உயிருடன் தாத்தாவை ஒருமுறையாகவது பார்த்து விடவேண்டும் என்ற தவிப்போடு இந்தியாவில் காலடி எடுத்த வைத்த சுனிலை சிரித்த முகத்தோடு வரவேற்கின்றார் தாத்தா. குடும்பத்தின் அன்பு வலையிலிருந்து அவனால் அறுத்துக் கொண்டு ஓடிவிட முடியவில்லை. குழம்பிப் போன சுனில் தாத்தாவின் கையைப் பிடித்துத் தன்னை இந்த இக்கட்டிலிருந்து காப்பாற்றுமாறு கேட்கின்றான். தாயார் சேர்த்து வைத்திருக்கும் பெண்கள் பட்டியலிலிருந்து சுனில் இலகுவில் நிராகரிப்பதற்கான அனைத்துத் தகைமைகளையும் கொண்ட லைலாவை பெற்றோரைச் சமாதானப் படுத்துவதற்காக பெண்பார்க்கச் சம்மதிக்க வைக்கின்றார் தாத்தா. ஒரேயொரு பெண்ணை மட்டும் பார்ப்பேன் பிடிக்காவிட்டால் உடனேயே பறந்து போய்விடுவேன் என்ற நிபந்தனையோடு லைலாவைப் பெண்பாரக்கச் செல்கின்றான். விளைவு அவளைத் திருமணம் செய்து, அவனோடேயே ஸான் பிரான்ஸிஸ்கோவிற்கு அழைத்து வருவதில் வந்து முடிகின்றது. லைலா படித்த, அழகிய நடுத்தரவர்க்கத்தைச் சேர்ந்த முதிர்கன்னி. அதிஸ்டவசமாகத் தனக்குக் கிடைத்த வாழ்க்கையில் சந்தோஷத்தில் மிதந்தவளுக்கு புதிய நாடும், புதிய கணவனும் ஏமாற்றத்தையே கொடுக்கின்றன. வீட்டில் மனைவி, வெளியில் காதலி, இரட்டை வாழ்வு வாழும் சுனிலில் நடத்தை லைலாவிற்குச் சந்தேகத்தைக் கொடுக்க அனைத்தையும் முறித்து கொள்ள நினைக்கும் அவளை பெற்றோர், குடும்பகௌரவம் என்பன தடுத்து நிறுத்துகின்றன. லைலாவை அமெரிக்க வாழ்க்கைக்குப் பழக்கப்படுத்தி விட்டு மெல்ல மெல்ல அவளிடமிருந்து விலகி, கரோலினிடமே அடைக்கலம் புகநினைக்கும் சுனிலை தனது முற்போக்கு, இலக்கிய சிந்தனைகளால் திகைக்க வைக்கின்றாள் லைலா. மருத்துவத்துறையில் மட்டும் புகழ்பெற்றுத் திமிருடன் அலைந்த அவனுக்கு உலகின் இன்னொரு பக்கத்தின் அறிமுகம் லைலாவால் கிடைக்கின்றது. இலக்கிய ஆசிரியையாகப் பணியாற்றிய அனுபவம் லைலாவை சுனிலின் நண்பர்களுடன் சரளமாகவும், அறிவுபூர்வமாகவும் உரையாடி இலகுவில் நெருக்கதை உண்டாக்க வைக்கின்றது. கரோலினிடமிருந்த மோகம் சிறிது சிறிதாகக் கரைந்து போக லைலாவுடன் நெருங்கி வருகின்றான் சுனில். லைலைவை நன்கு அறிந்த அவனது தாத்தா திட்டமிட்டே இத்திருமணத்தைச் செய்துவைத்தார் என்ற உண்மையை அவர் மரணப்படுக்கையில் சுனிலுக்குக் கூறுகின்றார். சுனில் புன்னகைக்கின்றான். புனைவு இத்தோடு நிறைவு பெற்றாலும், அடிக்குறிப்பாக புனைவாளர் சிறிய தத்துவம் ஒன்றையும் விட்டுச் சென்றிருக்கி;ன்றார்.
“Once a liar always a liar” என்று கோடிட்டு, குடும்பவாழ்வை விரும்பாத நீல் மீண்டும் தனது சுதந்திரமான குதூகல வாழ்விற்கு ஏங்கி கரோலினுடன் தனது தொடர்வை நீடிக்கலாம். கரோலின் சம்மதிக்காவிடத்தில் அவன் இன்னுனொரு கரோலினை நாடிச்செல்வது தவிர்க்க முடியாதது.

Thursday, July 30, 2009

40 +

தான் அன்றைக்கு ஆஷாவோட கதைக்க வேண்டியதை எல்லாம் திரும்பத் திரும்பச் சொல்லிப்பாத்துக் கொண்டான் சந்திரகாந்தன். பல தடவைகள் சொல்லிப் பார்த்துக் கொண்டதால் முதல் தடவை சொன்னது மறந்து போனதோடு அதுதான் அழகான வார்த்தைளோடு அமைந்திருந்தது என்ற ஏக்கமும் அவனுக்குள் வரத் தொடங்கியது. மறந்ததை நினைவுபடுத்த முனைய உள்ளதும் மறந்து போய்..சரி ஒண்டும் வேண்டாம் முதல்ல இருந்து சொல்லிப்பாப்பம், திரும்ப ஒவ்வொரு வார்த்தையாக கோர்க்கத் தொடங்கினான். அவன் வாய் வார்த்தைகளைக் கோர்க்க மனம் ஆஷாவோடு கட்டில் வரை போய் நிற்றது. கதவை டொக் டொக் என்று யாரோ ஊன்றித் தட்டினார்கள். கட்டிலில் இருந்து நினைவை இழுத்து இறக்கி நிலத்திற்கு வந்து“என்ன ஆர்” எண்டான்“அப்பா எனக்கு இண்டைக்கு எக்ஸ்சாம் இருக்கு, நான் குளிக்க வேணும்” சினத்தோடு மகள் காவேரி கத்தினாள்.“வாறனம்மா முடிஞ்சுது” குரல் குழைந்தாலும், மனம் புறுபுறுத்தது. அவசரமாக மீசையின் எல்லா வெள்ளையையும் மூடி கறுப்பு டையை அடித்து முடித்தான். திடீரென்று மனம் சோர்ந்து தவித்தது. தவித்ததை திரும்ப உலுப்பி சமாதானம் சொல்லி நிமிர்த்தி வைக்கும் கைங்கரியம் அவனுக்கு இப்போதெல்லாம் இயல்பாகவே வந்தது. மனச்சோர்வு அளவுக்கு மீறினால் உடனே ஏதாவது ஒரு தத்துவப் புத்தகத்தில் தான் வாசித்த வாழ்க்கைத் தத்துவங்கள் சிலவற்றை தன் வாதத்துக்கு ஏற்ப கண்டு பிடித்து, அதைத் தன் வாழ்க்கையோடு தொடர்பு படுத்தி தன்னைத் திருப்திப் படுத்திக் கொள்வான். இல்லாவிட்டால் யாராவது ஒருவரின் வாழ்க்கை முறையை நினைவிற்கு கொண்டு வந்து அதில் பல பிழைகளைக் கண்டு பிடித்து அதோடு தன்னை ஒப்பிட்டுப் பார்த்து தான் ஒன்றும் பிழை விடவில்லை என்று திருப்திப் பட்டுக் கொள்வான்.
காவேரி கடந்து போன போது வாயுக்குள் நமட்டுச் சிரிப்பு ஒன்றைச் சிரித்தாள். சாப்பாட்டு மேசையில் மூன்று பிள்ளைகளும் தங்களுக்குள் சுரண்டி கண்காட்டிச் சிரிப்பதைக் காணாதது போல் தவிர்த்தான். ஆஷாக்கு காவேரியிலும் விட எத்தின வயசு கூட இருக்கும். மனம் கணக்குப் பார்த்தது. ஆஷாவிடம் அவன் இன்னும் வயசு கேட்கவில்லை. ஆனால் நிச்சயமா அவளுக்கு முப்பதுக்குக் கிட்ட இருக்கும்.
“அம்மா, அப்பான்ர மீசையைப் பாத்தீங்களே?” சித்து திடீரென்று சிரித்த படி கேட்டான். “உன்னச் சாப்பிடேக்க கதைக்க வேண்டாம் எண்டு எத்தின தரம் சொன்னனான்” அவன் தலையில ஒரு தட்டுத் தட்டி “ஏன் இப்ப எல்லாருந்தானே டை அடிக்கீனம், அப்பா அடிச்சா என்ன?” கௌரி சொன்ன படியே காந்தனின் மீசையைப் பார்த்தாள். “வடிவாயிருக்கப்பா” என்றாள்.
“கௌரி கௌரி இப்பிடி அசடா இருக்காதை நான் உனக்குத் துரோகம் செய்யிறன்” திடீரெண்டு விக்கி விக்கி அவளின்ர காலில விழுந்து அழுந்து மன்னிப்பு கேட்கும் பெரிய ஒரு தியாகி போலவும், எப்பவும் உண்மை கதைக்கும் ஒரு உத்தமன் போலவும் தன்னைக் கற்பனை பண்ணிப் பார்த்தான். குற்றத்தை ஒப்புக் கொண்டு மன்னிப்பு கேட்பது என்பது எவ்வளவு பெரிய விஷயம். அப்பிடி நான் செய்தால் என்னுடைய மதிப்பு எவ்வளவு உயர்ந்து போகும். அதுவும் கொஞ்சம் மனம் சஞ்சலிச்சுப் போனன், ஆனால் எனக்குக் குடும்பந்தான் பெரிசு எண்டு இப்ப உணர்ந்திட்டன்” போன்ற வசனங்களை எடுத்து விட்டால் எவ்வளவு கௌரவமாக இருக்கும். கௌரி அவனின் தலைய எடுத்து தன்ர நெஞ்சோட சாய்ச்சு “அப்பா ஏதோ தெரியாமல் பிழை விட்டிட்டியள், ஆம்பிளைகள் இப்பிடித்தான் யோசிக்காமல் பிழை விட்டிடுவீனம் பிறகு குழந்தைப் பிள்ளைகள் மாதிரி விக்கி விக்கி அழுவீனம். நான் உங்களக் கோவிக்க மாட்டன். என்னிலதான் முழுப் பிழையும் நான் உங்களுக்கு ஒரு நல்ல பொஞ்சாதியா இருந்திருந்தால் இப்பிடியெல்லாம் நடந்திருக்குமே” என்று கண்களைக் கசக்கிவிட்டுப் பின்னர், இனிமேல் நாங்கள் சந்தோஷமா இருப்பம் அப்பா” என்பாள். காந்தன் விக்கினான். சாப்பாட்டு மேசையில் ஒருத்தரும் இல்லை.
கௌரி கட்டி வைச்ச சாப்பாட்டுப் பெட்டியை எழுத்துக் கொண்டு திரும்பவும் ஒருக்காத் தன்னைக் கண்ணாடியில் பாத்து, வயித்தை எக்கி உள்ளே தள்ளி அது தந்த உருவத்தில் திருப்தி கொண்ட படியே வெளியே போனான். இப்ப எத்தின வருஷமா ஜிம்முக்குப் போக வேணும் எண்டு நினைச்சு நினைச்சுக் கடத்திப் போட்டான். என்ர உயரத்துக்கு இந்த வயிறு மட்டும் கொஞ்சம் இறுக்கமா இருந்தா என்ன வடிவாயிருக்கும். ஆஷா நல்ல உயரத்தோட நல்ல இறுக்கமான உடம்போட இருக்கிறாள். என்னை முதல் முதல்ல உடுப்பில்லாமல் பாக்கேக்க அவளுக்கு அரியண்டமா இருந்தாலும் இருக்கும். அவனுக்குக் கவலையாய் இருந்தது. எதுக்கும் முதல் முதலாச் செய்யேக்க இருட்டுக்க வெளிச்சம் வராத மாதிரிப் பாத்துக் கொள்ளுவம். பிறகு பழகீட்டுது எண்டால் அவள் பெரிசா என்ர வயிறக் கவனிக்க மாட்டாள். அதுக்கிடேலை ஏலுமெண்டா ஜிம்முக்குப் போய் வயிற இறுக்கிக் கொள்ளலாம். இனிமேல் சோத்தைக் கொஞ்சம் குறைக்க வேணும். கௌரி சொன்னாலும் கேக்கமாட்டாள் எந்த நாளும் கடமைக்கு ஒரு சோத்தை அவிச்சு வைச்சிருப்பாள்.
காந்தனுக்கு திடீரென்று நெஞ்சுக்குள் ஏதோ செய்தது. கௌரியின் மேல் அவனுக்கும் அன்பு நிறையவே இருக்கிறது. ஆனால் காதல், காமம் என்பது ஏனோ அவனுக்கு அவளைக் காணும் போது எழுவதில்லை. கொளரி கூட தான் ஒரு நல்ல அம்மாவாக இருப்பதைத் தவிர வேறு ஒன்றிலும் அக்கறை காட்டவில்லை. காமம் உச்சத்துக்கு ஏறும் சில இரவுகளில் ஒரு பெண் உடலில் அதை தீர்க்க வேண்டிய கட்டாயத்தால் அவன் இரவு வேளையில் கௌரியை அணைப்பதுண்டு. கௌரி காந்தனின் பசிக்குத் தீனி போடுவது தன் கடமை என்று எண்ணி கெதியாக முடித்துக் கொண்டால் கெதியாக நித்திரை கொள்ளலாம் என்ற எண்ணத்தோடு வெறும் மரக்கட்டையாய் இயங்குவாள். இரண்டு இயந்திரங்கள் எதையோ செய்து முடித்து விட வேண்டும் என்பதுக்காய் அவசரமாக இயங்கும்.
இந்த நிலை காந்தனுக்கு வெறுப்பைத் தர, அதன் பின்னர் தொடர்ந்த ஒவ்வொரு தழுவலிலும் மனதில் வேறு ஒரு பெண்ணை மனப்பிரமை செய்யத் தொடங்கினான். இது அவனின் குறியை விறைக்கப் பண்ணவும், இயக்கத்தை கெதியாக முடித்துக் கொள்ளவும் உதவியாக இருந்தது. தொடக்கத்தில் குற்ற உணர்வை அது கொடுத்தாலும், பின்னர் அது பழக்கப்பட்ட ஒன்றாகி விட்டது. காலப்போக்கில் அது கூட அவனுக்கு பிடிக்காத ஒன்றாய்ப் போய் உடல் உறவு என்ற ஒன்றிலிருந்து விலகி நிம்மதியா நித்திரை கொண்டால் போதும் என்ற நிலை வந்துவிட்டது. வேலை முடிய சில நண்பர்களுடன் பாருக்குச் சென்று ரெண்டு பியர் குடித்து விட்டு வீட்டிற்கு வந்து சாப்பிட்டு விட்டுப் படுத்தால் செக்ஸ் பற்றிய நினைவு அவனுக்கு எழுமலேயே இருந்து விடும். வயது போய் விட்டது. இது இயற்கை என்று நம்பியிருந்தவனுக்கு வேலையிடத்தில் அம்பதுகளில் இருக்கும் நண்பர்கள் நகைச்சுவையாகத் தமது காதல் வாழ்க்கை பற்றி அலசும் போது தனக்கு உடலில் ஏதாவது குறை வந்து விட்டதோ என்ற சந்தேகம் எழத் தொடங்கியது. கௌரிக்குத் தெரி;யாமல் நீலப்படங்களை எடுத்துப் பார்த்தான் அவன் உணர்வு கட்டவிழ்த்து விட்டது போல் புடைத்துக் கொண்டு எழத் தொடங்கியது. ஆண்களை விடப் பெண்களுக்கு காம உணர்வு ஏழு மடங்கு கூடுதலாக இருக்கும் என்று எங்கோ வாசித்த ஞாபகம் வர காந்தன் குழம்பிப் போனான். கௌரியும் காந்தனும் உடலுறவில் ஈடுபட்டு பல மாதங்கள் ஆகி விட்டன. நான் இப்படிக் குழம்பித் தவிக்கிறேன் ஆனால் கௌரி நல்ல சந்தோஷமா நிம்மதியாக இருக்கிறாள். கோயிலுக்கு என்று அடிக்கடி வெளியில் போய்விட்டு வருகிறாள். நான் தான் அசடு மாதிரி ஏமாந்து கொண்டிருக்கிறேனோ. காந்தன் காரை ரோட்டுக் கரையில நிப்பாட்டினான். கௌரி நல்லவள். வளந்த பிள்ளைகள் இருக்கேக்க பிழை ஒண்டும் செய்யக் கூடியவள் இல்லை. அவளுக்கு பெரிசா உணர்ச்சி இல்லைப் போல. விரதம் விரதம் எண்டு எப்ப பாத்தாலும் கடவுளின்ர நினைப்பில இருக்கிறதால அவளுக்கு வேற நினைவொண்டும் இல்லை. தானே வார்த்தைகளைப் பொருத்தித் தன் மனதுக்கு திருப்தி தரும் பதில் ஒன்றைக் கண்டு பிடித்து நிம்மதியாகினான். இதுதான் சரி இதைவிட வேறமாதிரி ஒண்டும் இருக்க ஏலாது. இருக்காது.கௌரி என்று வரும் போது “பிழை”, என்றும் தான் என்று வரும் போது “குற்றமில்லை” என்பதற்கான அத்தனை காரணங்களையும் கண்டு பிடித்து நிம்மதி கொண்டான்.
விலகி விலகி இருந்து விட்டு இப்போது நீலப் படங்கள் பார்த்து உணர்சியை மீண்டும் மீட்டெடுத்து இரவு வேளைகளில் கௌரி மேல் கைபோட அவள் தட்டி விட்டு தள்ளிப் படுத்துக் கொண்டாள். அவன் வாய் விட்டுக் கேட்டால் கூட தனக்கு ஏலாமல் இருக்கு, சுகமில்லாமல் நிக்கப் போகுது போல அதால உடம்பை உலுப்பி எடுக்குது எல்லா இடமும் ஒரே நோகுது என்னால இனிமேலும் ஏலாது எண்டு அவள் முற்று முழுதாக விலகிக் கொண்டாள். கடைசியா கௌரியோட அவன் உறவு கொண்ட நாள் நினைவுக்கு வந்த போது மனம் அவமானத்தால் குறுகிப் போய் பழி வாங்கும் மூர்க்கம் அவனுக்குள் எழுந்தது. ஒரு சனிக்கிழமை இரவு குடும்பத்தோட பார்ட்டி ஒன்றுக்குப் போய்விட்டு வந்து, மனம் முழுக்கச் சந்தோஷத்தோடும், உரிமையோடையும் கட்டிலில் படுத்திருந்த கௌரியை கட்டிப்பிடித்த காந்தனை தனக்கு நித்திரை வருகுதென்று தள்ளி விட்டாள் கௌரி. கொஞ்சம் குடிச்சிருந்ததாலையோ, இல்லாட்டி பார்ட்டியில் பல பெண்களோடு நடனமாடி உணர்ச்சி உசுப்பப் பட்ட நிலையில் இருந்ததாலையோ என்னவோ கௌரியின் புறக்கணிப்பை அவன் கணக்கெடுக்காமல் அவளை இறுக்கி அமுக்கி தன் வேகத்தைத் தீரத்துக் கொண்டான். அவள் சத்தம் போடமல் மூக்கை உறிஞ்சும் போது அவன் நித்திரையாய் போயிருந்தான். அடுத்தநாள் நித்திரையால் எழும்பி கீழே வந்த காந்தன், டைனிங் ஹோலில குசினிப் பக்கமா ஒரு கேட்டிண் போட்டு, அம்மாக்கு படியேறக் கால் சரியா நோகுதாம், என்று ஒரு சின்ன கட்டிலோட ஒரு பெட் ரூம் செட்டப்பாகியிருந்ததைக் கண்ட பிறகுதான் அதின் சீறியஸ் அவனுக்கு விளங்கியது. எவ்வளவோ மன்றாடி மன்னிப்புக் கேட்டுப் பார்த்தும் அவள் ஒரு ஞானியைப் போல அவனைப் பார்த்து ஒரு சின்னச் சிரிப்பு சிரித்து விட்டு தன் இரவுகளை அங்கேயே முடித்துக் கொண்டாள். காந்தன் பிள்ளைகளுக்குத் தெரிந்திருக்குமோ என்று முதல்லில் அவமானத்தால் ஒடுங்கிப் போனான். பிறகு காலப்போக்கில தான் குடுத்து வைச்சது இவ்வளவுதான் என்று தன்னைக் கட்டுப் படுத்திக்கொள்ளப் பழக்கிக் கொண்டான். கட்டுப்படுத்த முடியாத இரவுகளில் குற்ற உணர்வோட கையை உபயோகித்தான். எல்லாமே அவனுக்குக் குற்றமாகப்பட்டது. இயற்கையாக நடக்க வேண்டிய ஒன்று தடைப்பட்டு இப்ப தான் ஒரு குற்றவாளியோல கூனிக் குறுகிப் போவதை நினைத்து அவனுக்கு சிலநேரங்களில கோவம் தலைக்கு மேல் ஏறுவதுண்டு. நீலப்படங்கள் பார்ப்பதை முற்றாக நிறுத்திக் கொண்டான். மீண்டும் நண்பர்களோடு பாருக்கு சென்று பியர் குடித்து வீட்டிற்கு தாமதித்து வந்து சாப்பிட்டு விட்டுப் படுப்பதைப் பழக்கப்படுத்திக் கொண்டாலும் கௌரி தன்னை நிராகரிப்பது அவனுக்குள் காமத்தைத் தூண்டச் செய்தது.
உடலின் விந்தை அவனுக்குப் புரியவில்லை. காதல் அற்ற நிலையில் அவ்வப்போது எழும் காமத்தை அடக்க இயந்திரம் போல் இருவரும் இயங்கினோம். அந்த வேளையில் கௌரியின் உடல் மட்டும்தான் அவனுக்குத் தேவையாகியிருந்தது. உருவம் யாராவது ஒரு கவர்ச்சி நடிகையாகவோ, இல்லாவிட்டால் வேலைத்தளத்தில் பார்க்கும் ஒரு இளம் பெண்ணாகவோ இருந்து வந்தது. அப்போது நான் யாருடன் உடல் உறவு கொள்ளுகின்றேன். மனதில் வரிந்து கொள்ளும் அந்தப் பெண்ணுடனா? இல்லை கௌரியுடனா? என்ற கேள்வி அவனுக்கு அடிக்கடி எழுவதுண்டு. பின்னர் அதைக் கூட மனம் விரும்பவில்லை. தானாகவே கௌரியை விட்டு விலகிக் கொண்டான். சரி இனி காமத்தின் தொல்லை விட்டது என்று நிம்மதி கொண்டாலும் தனக்கு வயது போய் விட்;டது அதனால் உணர்வுகள் அடங்கி விட்டன என்ற எண்ணம் அவனுள் எழுந்து மனஉளைச்சலைக் கொடுக்கும். இந்த நிலை தனக்கு மட்டுமா இல்லை நாற்பதுகளில் ஆண்கள் எல்லோருக்குமே ஏற்படும் ஒன்றா? பதில் தெரியாமல் குழப்பம்தான் அவனுக்குள் மிஞ்சிக் கிடந்தது. இளம் வயதில் கௌரியை எப்பிடியெல்லாம் காதலித்தேன். ஆனால் இப்போது அவளை வெறுக்கவில்லை. ஆனால் அவளின் வடிவம் எனக்குள் எந்த உணர்வையும் எழுப்பவில்லை. அதே நிலைதான் கௌரிக்கும் என்று அவனுக்குள் விளங்கிய போத அவள் மேல் கொஞ்சம் கோவம் வந்தது. உடல், உணர்வு, காமம், காதல் என்று எல்லாமே அவனுக்கு விந்தை காட்டும் மர்மர்களாகத் தெரிந்தது.
வேலைத் தளத்தில் சாப்பாட்டு வேளைகளில் அதிகம் தனிமையில், கையில் கிடைக்கும் ஒரு பத்திரிகையோடு நேரத்தைக் கழிக்கும் அவன், தற்போதெல்லாம் தனிமையைத் தவிர்க்க விரும்பியும், காதல், காமம் பற்றி மற்றவர்களின் புரிதலைப் தெரிந்து கொள்ளும் எண்ணத்துடனும் வேற்று நாட்டு ஆண்கள் பெண்களுடன் தனது சாப்பாட்டு நேரத்தைக் கழிக்கத் n;தாடங்கினான். அவர்களின் வக்கிரக் கதைகள் மீண்டும் அவனின் உணர்வுகளை தட்டி எழுப்பி விட்டன.. இது நிரந்தரமான உடல்பசி. வேகம் கூடும் குறையும் ஆனால் மனிதன் இறக்கும் வரை இருந்தே தீரும் என்பதை அவன் புரிந்து கொண்டான். தியானத்தால் மட்டும் இதனைக் கட்டுப்படுத்தலாம் என்று ஒரு புத்தகம் அவனுக்குக் கூறியது. கௌரி தேவரத்தின் மூலம் இதனைக் கட்டுப்படுத்துகிறாள் என்றும் அவனுக்குப் பட்டது.
இப்போது என்ன செய்வதென்று தெரியாத நிலை காந்தனுக்கு. இதைப் பற்றி யாரோட கதைக்கலாம் என்று அவனுக்குத் தெரியவில்லை. கலியாண வயசில் பொம்பிளப் பிள்ளை வளர்ந்து நிற்கும் போது நான் இதைப் பற்றி யாரிடமாவது கேட்டால் சிரிக்க மாட்டார்களா?. அப்ப டிவோர் எடுத்த, பொஞ்சாதி செத்த, இல்லாட்டி கலியாணமே கட்டாத ஆம்பிளைகளெல்லாம் என்ன செய்கின்றார்கள். அவனுக்குத் தெரியவில்லை. யாரிடம் கேட்பது என்றும் விளங்கவில்லை. மருத்த ஆலோசனை பெறலாம் என்று மனம் சொன்னாலும் அதற்கான துணிவும் அவனிடமில்லை. ஆனால் தன்னால் இதற்க்கு மேல் ஏலாது என்ற நிலையில அவன் தவிச்சுக் கொண்டிருக்கும் போது தான் ஆஷா அவன் வேலைத் தளத்திற்கு வந்து சேர்ந்தாள். முதல் பார்வையில் அவனுக்கு ஆஷாவைப் பிடிக்கவில்லை. அவளின்ர உடுப்பும் எடுப்பும். உதுகள் உப்பிடி உடுப்புப் போட்டு அலையிறதாலதான் ஆம்பிளைகளின்ர மனம் அல்லாடுது. தமிழ் பெட்டை அதுவும் தன்ர டிப்பார்மெண்டில என்ற போது காந்தனுக்கு ஆவேசம் வந்தது. ஆஷா வடிவாக இருப்பதும், உடுப்பதும் அவனுக்கு எரிச்சலைத் தந்தது. அவள் உடையில் எப்பவும் பிழை கண்டுபிடிக்க முனைந்து தனது மனதுக்கு திருப்தி தரும் விதத்தில் அதைக் கண்டும் பிடித்து வந்தான். வீட்டில் சாப்பாட்டு மேசையில் தேவையில்லாமல் ஆஷாவை இழுத்துக் கொச்சை படுத்தினான். இவ்வளவுக்கும் வெறும் “ஹெலோ” ஒன்றை மட்டும்தான் அவள் அதுவரை சொல்லியிருந்தாள்.
ஆஷா அவனைக் கடந்து போகும் நேரங்களில் வேண்டு மென்றே காணதுபோல் திரும்பிக் கொள்வான். ஒருநாள், வேலையில் சில சந்தேகங்களைக் கேட்க ஆஷா அவனிடம் வரவேண்டியிருந்தது. உடனே தன்னை முற்று முழுதாக மாற்றிக் கொண்டு அப்போதுதான் அவள் அங்கு வேலை செய்வதே தனக்குத் தெரிந்தது போல் மிகவும் இயல்பாகச் சிரித்த படியே “நீங்கள் சிறீலங்காவா?, எந்த இடம்?, எப்ப வந்தனீங்கள்?” போன்ற கேள்விகளை மிகவும் நட்போடு கேட்டு, “எப்ப உங்களுக்கு சந்தேகம் இருந்தாலும் தயங்காமல் என்னட்ட வாங்கோ, இங்க இருக்கிறதுகள் சரியான எரிச்சல் பிடிச்சதுகள் ஒண்டும் சொல்லித் தராதுகள்” என்று குரலைத் தணித்துச் சொன்னான். அதன் பின்பு தேவையில்லாத காரணங்களோடு அவளிருக்கும் இடத்துக்கு அடிக்கடி போய் வரத்தொடங்கினான். தான் செய்வது சின்னத்தனமாக இருப்பது போல அவனுக்குப் பட்டாலும் அதையும் சரிப்படுத்த தனக்கான காரணத்தைக் கண்டுபிடித்து தன்னைத் தானே சமாதானம் செய்தான். “அது சின்னப்பிள்ளை என்ர மகளின்ர வயசிருக்கும். சும்மா எங்கட ஊர் பிள்ளை எண்ட அக்கறைதான்”. இப்பிடி மனதுக்குள்ள ஒரு சின்னப் புலம்பல்.
ஒருநாள் சாப்பாட்டு நேரம் ஆஷா அவனிடம் வந்து, கிட்டடியில ஏதாவது நல்ல ரெஸ்ரோரண்ட் இருக்கிறதா சாப்பிட, என்று கேட்டாள். உடனேயே குரலைச் செருமி தனக்குத் தெரிஞ்ச அத்தின ரெஸ்ரோறண்டையும் அடுக்கி, இது நல்லா இருக்கும், இதில சாப்பாடு வாயில வைக்கேலாது என்று தான் வகை வகையாக ரெஸ்ரோரெண்டில் சாப்பிடுவது போல கையை அங்கும் இங்கும் ஆட்டி பாதை காட்டினான். “நீங்கள் சாப்பாடு கொண்டு வராட்;டி வாங்கோவன் ஒரு நல்ல ரெஸ்ரோறண்டில போய் லன்ஜ் எடுப்பம்” என்றாள் ஆஷா. காந்தன் முதலில் கொஞ்சம் திடுக்கிட்டு, பிறகு சிரித்த படியே “இல்லை நான் கொண்டு வந்திருக்கிறன் பிறகு ஒருநாளைக்குப் பாப்பம்” என்ற போது அவனின் கைகள் குளிந்து போயிருந்தன. தன்னுடைய பதில் அவனுக்குத் திருப்தியாக இருந்தது. நாற்பது வயதில் படியேறக் கால் நோகுது என்று சொல்லி டைனிங் ஹோலில் கட்டில் போட்டு இரவு ஒன்பது மணிக்கே தேவராப் புத்தகத்தை கையில் பிடித்து முணு முணுக்கும் கௌரி தனக்கு மனைவியாய் வந்திருந்தாலும் தன் மனம் அலையவில்லை என்று தன்மீதே அவன் பெருமை கொண்டான். ஆஷா “ஓகே” என்று விட்டுப் போய் விட்டாள். காந்தன் அங்குமிங்கும் பார்த்து விட்டுத் தன்னைக் குனிந்து பார்த்தான். அவனுடைய சேட் கொஞ்சம் கசங்கியிருப்பது போலவும பாண்ஸ்சிற்கு அவ்வளவாக பொருத்தாதது போலவும் இருந்தது. அதற்குப் பிறகு அவசரமாக ஆறு சோடி உடுப்பு வாங்கிவிட்டான். இரண்டு தரம் ஆஷாவோட சாப்பிடவும் போய் வந்தான். ஒரே வேலைத்தளத்தில் வேலை செய்யும் இரண்டு பேர் கஸ்சுவலாக சாப்பிடப் போகின்றார்கள். தன் மனதுக்கு சமாதானம் சொல்ல அவன் கண்;டுபிடித்த வசனம் இது. காந்தனின் நடையில் இப்போது ஒரு துள்ளலும், கதையில் கொஞ்சம் அவசரமும் கலந்து கொண்டது.
இப்ப பிள்ளைகள் என்ன கேட்டாலும் கேள்வி கேட்காமல் வாங்கிக் குடுக்கிறான். தனக்குள் இருக்கிற குற்ற உணர்வைப் போக்க தான் பிள்ளைகளுக்குக் குடுக்கும் லஞ்சம் அது என்று அவனுக்கு விளங்கினாலும், அதை மறுத்தான். பிள்ளைகளுக்குத் தேவையிருக்குது அதால கேக்கின்றார்கள் நான் உழைக்கிறேன் வாங்கிக் குடுக்கிறேன். அவ்வளவுதான். “வேலையிடத்தில புறொமோஷன் ஒண்டு கிடைக்கும் போல இருக்கு அதால கொஞ்சம் நீட்டா இருக்க வேணும் நேரத்துக்குப் போக வேணும், லேட்டானாலும் நிண்டு வேலைய முடிச்சிட்டு வரவேணும்” என்று ஒருவரும் கேட்காமலே சாப்பாட்டு மேசையில் அடிக்கடி சொல்லத் தொடங்கினான்.
இப்பவெல்லாம் கௌரி தனிக்கட்டிலில்ல கீழே படுக்கிறது அவனுக்குச் சாதகமா இருந்தது. இரவு வேண்டி நேரம் வரை ஆஷாவோட கற்பனையில் சல்லாபிக்க முடிந்தது. தலாணியை எடுத்து ஆஷா, ஆஷா என்று அளைய முடிந்தது. “ஒரு நல்ல இங்லீஷ் படம் வந்திருக்கு உங்களுக்கு ரைம் இருந்தா வெள்ளிக்கிழமை இரவு போவமா?” என்று ஆஷா அவனைக் கேட்ட போது காந்தனின் துடைகள் இரண்டும் நடுங்கி ஆடியது. இது “அது”தான் என்ற முடிவை அவன் அப்போதுதான் நிச்சயம் செய்து கொண்டான். “வெள்ளிக்கிழமையா..” என்று இழுத்து யோசித்து.. தான் அதிகம் யோசித்தால் ஆஷா வேண்டாம் என்று சொல்லி விடக் கூடும் என்ற பதட்டத்துடன். “ம்..எனக்கு ஒரு வேலையுமில்லை.. அக்ஸ்சுவலி.. அண்டைக்கு கௌரியும் பிள்ளைகளும் கோயிலுக்குப் போகீனம்.. நான் ப்ரியா இருப்பன்.. ப்ரெண்ஸ் ஆரேடையாவது எங்கையாவது போகலாம் எண்டு நினைச்சிருந்தனான்.. லுக் இப்ப நீங்களாவே கேட்டிட்டீங்கள்.. நான் வாறன்” என்றான்.. ஆஷா “தாங்க்ஸ்” என்று விட்டுப் போய் விட்டாள். தான் கொஞ்சம் கூடுதலா வழிந்து விட்டது போல் அவனுக்குப் பட்டது. எவ்வளவு வடிவாப் பொய் சொல்லுறன் என்று தன் மேல் பெருமை கொண்டான். அவன் மனதில் படம் பார்க்கும் அந்த வெள்ளி இரவு படமாய் விரிந்தது. படம் பார்க்கும் போது அவளின் உடம்பில் தான் முட்டாத மாதிரி இருக்க வேணும். ரிக்கெட் தான் தான் எடுக்க வேணும். குடிக்க, சாப்பிட ஏதாவது வாங்க வேணும். இங்கிலீஸ் படமெண்டா கட்டாயம் ஏதாவது ஏடா கூடமா காட்சி வரும் அந்த நேரம் நெளியாமல் நல்ல இறுக்கமா இருக்க வேணும். படம் முடிய சாப்பிடப் போகக் கேக்கலாம். கம் பக்கெட் ஒண்டு வாங்க வேணும். ஒரு வேளை அவளா கைய கிய்யப் போட்டால் என்ன செய்யிறது. அவனுக்கு உடம்பு கூசியது. அந்தக் கூச்சம் சுகமாக இருந்தாலும் பயமா இருந்தது. அவசரப்பட்டு இடம்கொடுத்து பிறகு ஏதாவது பிரச்சனையில மாட்டீட்டா. திடீரெண்டு அவனுக்குப் பயம் வந்தது. வடிவா இளமையா இருக்கிறாள். எதுக்காக என்னோட இப்பிடிப் பழகிறாள். காசு கீசு அடிக்கிற யோசினையோ? இல்லாட்டி வீக்கான பெட்டையாக்கும், உப்பிடி எத்தின பேரோட பழகீச்சோ.. வேலையெண்டு போற போற இடமெல்லாம் ஒண்டை வைச்சிருக்குமாக்கும். ஏதாவது வருத்தம் இருந்து எனக்கு வந்திட்டா.. இவ்வளவும் அவனின் மனதுக்குள் உருண்டாலும்.. எல்லாத்தையும் தள்ளி விட்டு, என்னை அவளுக்குப் பிடிச்சிருக்கு அதுதான் உண்மை. வேற ஒண்டுமில்லை. வேற ஒண்டாவும் இருக்க ஏலாது என்று முற்றுப்புள்ளி வைச்சான். எனக்கும் அவளைப் பிடிச்சிருக்கு.
வெள்ளிக்கிழமை வேலை முடிய ஆஷா அவனைக் கூட்டிக்கொண்டு “புளோர்” சினிமாக்குள் நுழைந்தாள். சனம் மிகக் குறைவாகவே இருந்தது. ஆஷா வேணுமென்றே சனமில்லாத தியேட்டரைத் தெரிவு செய்திருக்கிறாள் என்று காந்தனுக்குப் பட்டது. அவன் முகம் சிவந்து உணர்வுகள் அல்லாடத் தொடங்கியது. இந்த அளவிற்கு வந்தாகிவிட்டடது. இனி நிச்சயமாக அடுத்தது “அது” வாகத்தான் இருக்கும். அதுக்காக அவன் எவ்வளவு காசோ, நேரமோ செலவிடத் தயாராகவிருந்தான். தனக்கு கௌரிமேல் காதல் இ;ல்லாமல் போய் விட்டதை நினைக்கும் போது அவனுக்கு வேதனையாகவிருந்தாலும் தான் தொலைத்து விட்டதாக நினைத்திருந்த இளமை திரும்பிவந்துவிட்டதென்பதை நினைக்கும் போது வாழ்கை என்பதே அனுபவிப்பதற்காகத்தான் அதை அனுபவிப்பது குற்றம் அற்றது என்று தன்னைத் தேற்றிக் கொண்டான்.
ஆஷா படத்திற்கு டிக்கெட்களை எடுத்து விட்டு படம் தொடங்க நேரம் இருப்பதால் கோப்பி குடிக்கலாம் என்றாள். கோப்பி குடித்த படியே பல கதைகளையும் கதைத்துக் கொண்டிருந்தவள் தான் தனியாக ஒரு அப்பாட்மெண்டில் இருப்பதாகவும் ஒரு நாளைக்கு கௌரியையும் பிள்ளைகளையும் கூட்டிக்கொண்டு தன்னுடைய அப்பாட்மெண்டிற்கு சாப்பிட வரும் படியும் கேட்டாள். காந்தன் மனதுக்குள் சிரித்துக் கொண்டான். தான் தனியாக இருப்பதைச் சொல்லி என்னை அங்கே சாப்பிடக் கூப்பிட விரும்புகிறாள், அதை நேரடியாகச் சொல்லக் கூச்சப்பட்டு குடும்பத்தோடு வரும்படி கேக்கிறாள். நல்ல கெட்டிக்காறிதான் என்று நினைத்துக் கொண்டான். காந்தன் மௌனமாக இருந்தான். ஆஷா கோப்பியைக் குடித்த படியே அங்குமிங்கும் பார்த்துக் கொண்டிருந்தாள். பிறகு ஒரு பெருமூச்சை விட்ட படியே “எனக்கு இப்ப முப்பத்திரெண்டு வயசாகுது என்ர வாழ்கைய எப்பிடி அமைச்சுக் கொள்ள வேணுமெண்டு எனக்குத் தெரியும்தானே, நான் முந்தி அண்ணா அண்ணியோடதான் இருந்தனான். பிறகு ஒத்து வரேலை அதால தனிய ஒரு அப்பாட்மெண்ட் எடுத்து இருக்கிறன்” என்றாள். காந்தன் சின்னதாகச் சிரித்தான் இதற்கு என்ன சொல்வது என்று அவனுக்குத் தெரியவில்லை. ஆஷாவே தொடர்ந்தாள். “அவேலுக்கு நான் கலியாணம் கட்ட வேணும் பிள்ளைப் பெறவேணும், அவேலில பிழையில்லை எங்கட ஆக்களுக்குத் இதைத் தவிர வேற என்ன தெரியும்” என்றாள் அலுப்போடு. காந்தனுத்தான் தான் ஏதாவது பிழையாகச் சொல்லி விடுவேனோ என்ற பயம் வர அதே சின்னச் சிரிப்பைத் தொடர்ந்தான். “நான் நினைக்கேலை நான் கலியாணம் கட்டுவனெண்டு, லிவிங் டு கெதர் இஸ் ஓக்கே வித் மீ.. ஆனால் எனக்கு நல்லாப் பிடிச்ச ஆளா இருக்கோனோம் அதுக்குத்தான் வெயிட்டிங்” என்றாள் சிரித்த படியே..காந்தனுக்குக் குழப்பமாக இருந்தது.. தான் என்ன சொல்ல வேண்டும் என்ற தெளிவு அவனுக்கு வரவில்லை. ஆனால் தன் முகத்தில் மாற்றம் வருவது அவனுக்கு விளங்கியது. அதை அவள் கவனித்து விடக்கூடாது என்பதில் கவனமாகவிருந்தான். கதையை வேறு பக்கம் திருப்ப “படத்துக்கு இன்னும் எவ்வளவு நேரமிருக்கு” என்றான். ஆஷா நேரத்தைப் பார்த்து விட்டு “அரை மணித்தியாலத்துக் கிட்ட இருக்கு வேணுமெண்டா உள்ள போயிருப்பம்” என்றாள்.உள்ளே அங்கொன்றும் இங்கொன்றுமானச் சிலர் இருந்தார்கள். இருந்தார்கள். “என்ன படம் இது சனத்தைக் காணேலை” என்றான் காந்தன் சந்தேகத்தோடு.“ஓ இது ஹொலிவூட் படமில்லை தியேட்டர் நிரம்பிறதுக்கு, இது ஒரு டொக்குமென்ரி, உங்களுக்கும் பிடிக்குமெண்டு நினைக்கிறன்’ ச் என்று தலைய ஆட்டியவள் ‘என்ர ப்ரெண்ஸ் ஒண்டும் வரமாட்டுதுகள் எண்டிட்டுதுகள், என்று விட்டு, “நான்ஜிங்” எண்டு ஜப்பான் சைனாவைப் பிடிச்சு செய்த அநியாயத்தையெல்லாம் டொக்குமென்றியாக்கியிருக்கிறாங்கள்.. நான் ரிவியூ வாசிச்சனான்.. வாசிக்கவே நெஞ்சுக்க ஏதோ செய்துது.. எனக்கு இப்பிடி டொக்குமென்ரீஸ் எண்டா நல்ல விருப்பம்.. அவங்கள் செய்த அநியாயம் கேள்விப்பட்டீங்களோ தெரியாது.. பாத்தீங்கள் எண்டாத் தெரியும்.. எங்கட நாட்டிலையும் இதுதானே நடக்குது.. போரால பாதிக்கப்படுறது பொம்பிளைகளும் குழந்தைகளும்தான்.. நினைச்சாலே வேதனையா இருக்கு’ என்றாள். காந்தனுக்கு இந்த நேரத்தில் தான் ஏதாவது சொல்வது தனது கடமை என்று பட்டது. ‘அதை நினைச்சாலே சரியான வேதினை தான் ம்.. என்ன செய்யிறது எங்கட கைய மீறின அலுவல் எங்களால கவலைப் படத்தான ஏலும்’ என்றான். கொஞ்ச நேரம் மௌனமாக இருந்த ஆஷா ‘செக்ஸ் எண்டு வந்திட்டா இந்த ஆம்பிளைகளுக்குக்கெல்லாம் கண்மண் தெரியிறேலை..” முகம் சிவக்க சொன்னவள், காந்தன் திடுக்கிட்டதைக் கண்டு தன்னைச் சுதாகரித்துக் கொண்டு “ஐ ஆம் ஸொறி’ என்றாள், பின்னர் தானாகவே ‘இந்த வோர் அதால பாதிக்கப்படுகிற பொம்பிளைகள்.. தீஸ் மென் ஆர் அனிமல்ஸ்’ என்றாள்.. திரும்பவும் தன்னைச் சுதாகரித்துக் கொண்டு 'நீங்கள் ஜென்ரில்மென். நான் மீட் பண்ணின நல்ல சில ஆம்பிளைகளுக்க நீங்களும் ஒராள்.. என்றாள் சிரித்த படியே.. படம் ஆரம்பித்தது.

‘ஒரு சைனீஸ் சிறுமியின் உடைகளைக் களைந்து விட்டு அவளை கதிரையில் கால்களை அகல விரித்து இருக்குமாறு துவக்கைக் காட்டிப் பணிந்த ஜப்பானிய இராணவவீரன் சிரித்துக் கொண்டிருந்தான் திரையில்..’

2008 ஆம் ஆண்டு கனேடிய “கூர்” இலக்கிய இதழில் வெளியான சிறுகதை.

Monday, July 27, 2009

தேக்கநிலை

   அண்மையில் என் நண்பர் ஒருவர் இந்தப் புத்தகம் வாசித்து  விட்டீர்களா? என்று ஒரு படைப்பைக்  குறிப்பிட்டு மட்டக்களப்பிலிருந்து மின்அஞ்சல் போட்டிருந்தார். எனது shelfari  யில் “I’ve  read” shelf ஐ விட “I plan to read”  shelf இல் படைப்புக்கள் அதிகரித்து விடுமோ என்று பயமாகவுள்ளது.

 என் வாழ்க்கை முறைக்குள் கிடைக்கும் நேரத்திற்குள் முடிந்தவரை வாசித்துக்கொண்டிருந்தாலும் என் நண்பர்களோடு ஒப்பிடும் போது நான் ஒன்றையும் வாசிக்கவில்லையோ என்று பயமாயிருக்கின்றது. நான் என் வாசிப்பு முறையை மீள்ஆய்வு செய்து பார்த்தேன். கடந்த இரண்டு மாதங்களில் ஐந்து நாவல்களை, மூன்று சிறுகதைத் தொகுதிகளையும், மூன்று கவிதைத் தொகுதிகளையும் வாசித்து முடித்திருக்கின்றேன். இத்தனை படைப்புக்களை வாசித்து முடித்திருந்தாலும் வார இறுதிநாட்களில் நண்பர்களைச் சந்தித்து உரையாடும் போது அவர்கள் கலந்துரையாடும் எந்த ஒரு படைப்பையும் நான் வாசிக்காமல் கலந்துரையாடலில் கலந்து கொள்ள முடியாமல் தொலைந்தவளாய் இருக்கின்றேன். அவர்கள் “நீங்கள் வாசிக்கவில்லையா?” என்று கேட்கும் எப்படித் தவறினேன் என்ற தடுமாறுகின்றேன்.. அடுத்த கிழமை அவர்களை மீண்டும் சந்திக்கும் சந்தர்ப்பம் கிடைக்குமெனின் அதற்கிடையில் அவற்றையெல்லாம் வாசித்து என்னை “அப் டு டேட்” ஆக வைத்திருக்க முயல்வேன். இருந்தாலும் நான் அவர்களை ஒருபோதும் எட்டியது கிடையாது. கையில் தாராளமான நேரத்தை வைத்துக்கொண்டிருக்கும் இளசுகளுடன் நட்பை வைத்திருந்தால் இதுபோல சங்கடங்களுக்கு ஆளாகவேண்டி வரும் என்பதை உணராமல் வயதுக்கு மீறிப் போட்டிபோட்டுக்கொண்டிருக்கின்றோனோ தெரியவில்லை.

 அண்மைக் காலங்களில் விமர்சனத்திற்குட்படுத்தப்பட்ட ஈழத்து எழுத்தாளர்களான அ.முத்துலிங்கம், கருணாகரமூர்த்தி, ஆகியோரின் படைப்புகள் பற்றி எனது நண்பர்கள் விவாதங்களைச் செய்த போது குற்ற உணர்வில் நான் கதவுக்குப் பின்னால் ஒதுங்கிக் கொண்டேன். இவர்களின் படைப்புக்கள் வீட்டிலிருந்தும் நான் இன்னும் வாசிக்கவில்லை. ஏன் வாசிக்கவில்லை என்று எனக்கே தெரியவில்லை. என் தெரிவில் வேறு படைப்புக்கள் முன்னுரிமை பெற்றுக் கொண்டு செல்வதனால் என்னையறியாமல் இவற்றை நான் வாசிக்கத் தவறவிட்டிருக்கின்றேன். ஈழத்து எழுத்தாளர்களின் படைப்புக்களை வாசிக்காமல் ஒரு ஈழத்து இலக்கியவாசகி இருக்க முடியாது என்று என் நண்பன் சொன்னான். (சோபாசக்தியின் எந்தப் படைப்பும் இதுவரை விடுபடவில்லை). இந்த இலட்சணத்தில் என் எழுத்துக்களை வாசகர்கள் வாசிக்க வேண்டும் என்று நான் எப்படி எதிர்பார்க்க முடியும்? அண்மைக்காலங்களின் என் வாசிப்பு என்னை அறியாமலேயே இந்தியப் பெண் எழுத்தாளர்களின் பக்கம் திரும்பியிருக்கின்றது.

எனது வாசிப்பின் சில பகிர்வுகள்:-

For Marimonial Purposes by: Kavita Dashwani

‘Quickly becoming a spinster by her culture’s standards, she is eager to escape the community that views her as a failure. After pleading with her parents for permission, she boards a plane bound for the United States and a dream of a career. And although husband-hunting isn’t any easier in New York City, at least she’s got company’

http://www.kavitadaswani.com/matrimonal.htm

எனக்கு ஒரு கணவன் வேண்டும். பேச்சுத் திருமணம் என்பது ஒரு விரல்சொடுக்கில் நடந்து முடிந்து விடக் கூடியது. கல்வி, பணம், அழகுஅனைத்தும் எனக்கிருக்கின்றது. நான் மாநிறம். கவனிக்க கறுப்பல்லமாநிறம். எனது சித்தி அடிக்கடி என்னை வெள்ளையாக்க மருந்துவகைகளை அனுப்புவாள். திருமணம் தடைப்பட இது ஒரு காரணமில்லை. வேறு எத்தனையோ காரணங்கள் இருந்தன. எண்ணெய் தலையை படிய இழுத்துவிட்ட, கறுப்பு “பாண்ட்ஸ்” இற்கு வெள்ளை “சொக்ஸ்” போட்ட அக்ரா காறனை நான் மறுத்தது என் அப்பாவிற்குக் கோவம். லண்டனில் ஒரு வெள்ளைச்சியுடன் குடியிருப்பவன் பெற்றோருக்குப் பயத்தில் என்னைத் திருமணம் செய்யச் சம்மதித்து என்னோடு இரண்டு முறை வெளியே கோப்பி குடிக்க அழைத்துச் சென்று என் அழகில் மயங்கிப் போனது என்னவோ உண்மைதான். அவன் கதை அம்பலமாகிக் கல்யாணம் தடைப்பட்டதற்கு எனது நிறம் காரணமாகாது. எனது நண்பிகள் அடுத்தடுத்துத் திருமணமாகிக் குழந்தைகள் பெற்றுக்கொள்வதும், என்னிலும் வயது குறைந்த எனது உறவுக்காறர் பெண்கள் திருமணத்திற்கு நான் சென்று எல்லோரின் இரக்கத்திற்கு உள்ளாவதும், என் படித்த அழகான தம்பிகளுக்கு சம்பந்தங்கள் குவிந்த வண்ணமிருக்க அக்காவின் திருமணத்தின் பின்னர்தான் தமது திருமணம் என்று பொறுமையாக இருக்கும் அவர்களை தினம் தினம் குற்ற உணர்வோடு பார்ப்பது என்பதும் இலகுவான விடையமல்ல விரதங்கள், சாமிகள்,

பூசாரிகள் இத்யாதி, இத்யாதி எதுவும் எனக்கு ஒரு கணவனைத் தேடித் தரவில்லை. வயது மட்டும் ஏறிக்கொண்டே போனது. மாற்றம் வேண்டி நியூயோர்க் சென்று சிறுகச் சிறுக உலகை என்னைப் புரிந்து கொண்டேன். இருந்தும் எனக்கு வேண்டியது ஒரு கணவன். இது அஞ்சுவின் கதை.

Animal’s People -by: Indra Sinha
ஒருகாலத்தில் நான் “மனிதர்களைப் போல்” இரண்டு கால்களில் நடப்பேனாம் என்னை சின்னவயதில் அறிந்தவர்கள் கூறுவார்கள். நான் மிகுந்த குறும்புக்காரன் என்பாள் எனது வீட்டுக்காறி. துருதுருவென்று ஒரு இடத்தில் நிற்காமல் ஓடித்திரிவேனாம். “அந்த இரவு” என்னை மாற்றிவிட்டது. தற்போது நான் ஒரு மிருகம். நான் மிருகம் இல்லை மனிதன்தான் என்கின்றார்கள் மனிதர்கள். நான் நாலுகாலில் நடப்பவன். நாலுகாலி;ல் மனிதன் நடப்பானா? மிருகம் தானே நடக்கும் எனவே நான் ஒரு மிருகம். என்னை எந்தச் சட்டமும் ஒன்றும் செய்ய முடியாது. நான் மிருகமாக அனைத்துச் சட்டத்தையும் மீறிக்கொண்டிருந்தேன் நிஷாவைக் காணும்வரை.
நிஷாவைக் கண்ட பின்னர்தான் எனக்கு இரண்டு காலில் நடக்க வேணும் என்ற ஆசையே எழுந்தது. அமெரிக்காவிலிருந்து வந்த டொக்டர் எலி என்னை அமெரிக்கா அழைத்துச் சென்று இரண்டு காலில் நடக்க வைப்பதாகச் சத்தியம் செய்து கொடுத்திருந்தாள். ஆனால் பிறகுதான் தெரிய வந்தது அவள் “அவர்களின்” ஆள் என்பது. “அந்த இரவு” எனது பெற்றோரைக் கொன்று போட்டது. எனது ஊரையே அழித்து நாசம் செய்தது. கம்பனிவாலாக்கள் அமெரிக்காவில் ஐஸ்வர்யமாக வாழ்கின்றார்கள். இந்த உலகில் எமக்காக நியாயம் கேட்க யாருமே இல்லையா?
போபால் நகரை அழித்த யூனியன் கார்பைட் நச்சுவாயுத் தாக்கத்தைத் தளமாக வைத்து இந்நாவல் எழுதப்பட்டிருக்கின்றது. இவரது முதல் நாவலான “ The Death of Mr.Love” மும்பையில் நாவான்டி சமூகத்தில் 1957ஆம் ஆண்டு இடம்பெற்ற பெயர்பெற்ற காதல் கொலையை மையமாகக் கொண்டு எழுதப்பட்டது. “காமசூத்ரா”வை மொழிபெயர்த்த
இந்ரா சிங்ஹா  Animal’s People  நாவல் வெளியான போது அதன் மொழிக்கானப் பல சர்ச்சைக்கு உட்படுத்தப்பட்டது நாவல் நிராகரிக்கப்பட்ட நிலையில் இருந்தது என்றும், சிறிது காலத்தின் பின்னரே இந்நாவல் அடையாம் காணப்பட்டு விருதுகளைப் பெறும் தரத்திற்கு உயர்ந்தது என்றும் குறிப்பிட்டிருக்கின்றார்.

“Some readers and critics have said that the bad language was “unnecessary”. I informed Animal, who said, “have these cunts spent even one day in Khaufpur? They can fuck off all, and you too.”

The Twentieth Wife -by: Indhu Sundaresan

வரலாற்றுப் புனைவு. 17ஆம் நூற்றாண்டின் முகல் அரசாட்சியின் போது தனது ஆளுமைக்காக மிகக் கவனத்திற்கும், விமர்சனத்திற்கும் உள்ளாகும் இளவரசி மேருனிஷாவின்(நுர்ஜகான்). பிறப்பிலிருந்து புனைவு ஆரம்பிக்கின்றது. இளவரசர் சலீமின் முதல் திருமணத்திற்குச் சென்றிருந்த மெருனிஷாவிற்கு எட்டு வயது. அப்போதே இந்த இளவரசரைத்தான் நானும் மணந்து கொள்ளப் போகின்றேன் என்று உறுதிகொள்கின்றாள் அவள். அரச குடும்பத்தில் பிறக்கா அவளுக்கு அது சாத்தியமற்ற ஒன்று என்று புரிந்து கொள்ள முடியவில்லை. இறுதியாக பல பின்னடைவுகள் சிரமங்களைத்தாண்டி மெருனிஷா சலீமின் இருபதாவது மனைவியாகும் வரை புனைவு நீள்கின்றது.
1577ஆம் ஆண்டு கடும் பனிக்காலம் ஒன்றில் ஹண்டகாரில் ஒரு பேர்சியன் தம்பதிகளுக்குப் பிறக்கும் மெருனிஷாவை வறுமை காரணமாக மரத்தடியில் விட்டுச் செல்ல முடிவெடுக்கின்றார்கள் அவளது பெற்றோர். வீதியோரங்களில் யாராவது தமது குழந்தையை எடுத்து நன்றாக வளர்பார்கள் என்ற நம்பிக்கையில் தமது குழந்தைகளை விட்டுச் செல்வது அப்போது வழக்கமாயிருந்தது. கைக்குழந்தையாக மரத்தடியில் விடப்பட்ட மெருனிஷாவை அவளின் பெற்றோரின் நண்பனே கண்டெடுத்து மீண்டும் அவளை பெற்றோருடன் இணைத்து விடுகின்றார். அன்றிலிருந்து மெருனிஷாவை தனித்தன்மை கொண்ட குழந்தையாகப் பார்க்கின்றார் அவளது தந்தை. சாதாரண குழந்தைகளைப் போலில்லாமல் கல்வியிலும், வாசிப்பிலும் அதிகம் ஆர்வம் காட்டும் இதேகுழந்தை, முப்பத்தியேழு வருடங்களின் பின்னர் முகல் மன்னனை மணந்து முகலின் அரசியாகின்றாள்.

“In her debut novel, Indu Sundaresan takes readers deep inside a 17th-century imperial Mughal court to tell the story of Mehrunissa, a woman who emerged from her husband’s harem to rule as the Empress Nur Jahan. Vivid with period detail and palace politics, The Twentieth Wife is a richly imagined portrait of extraordinary power and independence.”

BORDERS RECOMMENDS on Borders.com

The Feast of the Roses – Indhu Sundaresan

 முகல் மன்னன் ஜகங்கீர்(சலீம்)ஐ மணந்து மெருனீஷா முகல் அரசியாகி நுர்ஜகான் என்ற பதவிப் பெயரைப் பெறுவதிலிருந்து, ஆரம்பிக்கின்றது இவ்வரலாற்றுப் புனைவு. நுர்ஜகானின் தனித்தன்னை, ஆளுமை அழகு போன்றவற்றிற்கு அடிமையாகின்றான் மன்னன் ஜகங்கீர். அரசியின் கையைப் பிடித்து அரச சபைக்கு அழைத்துச் செல்லும், அதுவரை முகல் அரசு கண்டிராத, சட்டத்திற்குப் புறம்பான புரட்சியை செய்கின்றான் மன்னன் ஜகங்கீர். முகத்திரைக்குப் பின்னாலிருந்து கொண்டே முகல் ஆட்சியைக் கொண்டு நடத்துகின்றாள் நுர்ஜகான். ஆஸ்துமா நோயினால் அவதிப்படும் மன்னன், தன்னைச் சுற்றியிருப்பவர்களின் மேல் கொண்ட அவநம்பிக்கையால் முற்றுமுழுதாக நுர்ஜகானிடமே சரணடைந்து விடுகின்றான். மன்னன் இறக்கும் வரை அவனுக்குத் துணையாயிருந்து முகல் அரசைத் திறம்பட நாடத்திய அரசி ஒரு சிறந்த பெண்ணியவாதியாக அடையாளப்படுத்தப்படுகின்றாள்.

“…in The Feast of Roses…several passages are nearly sublime.  Whether one wants to see this as an historical romance or a political and feminist statement is up to the reader.  What Sundaresan gives us in these two novels, however, is a fascinating story and a worthwhile examination of this…empire that is practically unknown to most Americans.  I, for one, hope Sundaresan has much more to tell us about India.”

—PopMatters.com

 அச்சுப் பிரதிகளை மட்டும் வாசித்தால் போதாது, மின்தளங்களையும் வாசித்து எம்மை நண்பர்களுடன் கலந்துரையாடுவதற்குத் தயாராக வைத்திருத்தல் வேண்டும். இல்லாவிட்டால் எல்லாப் பக்கங்களிலிருந்தும் “அட்டாக்” இற்கு ஆளாக நேரிடும். அண்மையில் பாரீஸ் சென்று என் நண்பன் ஒருவரில் வீட்டில் தங்கியிருந்தேன். அவன் காலை எழுந்ததும் முதல் வேலையாகப் தினசரிப்பத்திரிகை வாசிப்பது போல் மின்தளங்களை வாசிப்பதைக் கவனித்தேன். காலை எழுந்தவுடன் ஐந்து நிமிடமாவது யோகா செய்துவிட்டு வேலைக்குப் செல்லுங்கள், இந்த வயதில் உற்சாகமாக இருக்க அது நிச்சயம் உதவும் என்று இந்தியாவிலிருந்து வந்திருந்த எனது நண்பி எனது வயதை நினைவு படுத்திவிட்டுச் சென்று விட்டாள். அந்த ஐந்து நிமிடமும் கட்டிலில் படுத்திருந்து உருளுவதை விரும்பும் எனக்கு ஐந்து நிமிடங்கள் யோகா, பத்து நிமிடங்கள் மின்தளங்களைப் பார்வையிடல் என்பது பயங்கரமாயிருந்தது. இருந்தாலும் என்னை இழுத்து வைத்து சில மின்தளங்களை “புக்மார்க்” பண்ணி வைத்து வாசிக்கத் தொடங்கியுள்ளேன். முன்பெல்லாம் நண்பர்கள் குறிப்பிட்ட பின்பே ஓடிவந்து ஒரு விடையத்தை வாசிக்கும் நான் தற்போது காலை எழுந்ததும் மேலோட்டமாகவாவது சில மின்தளங்களை வாசிக்கின்றேன்.

                                  மின்தளங்களை வாசிப்பது என்பது மிகவும் சுவாரஸ்யமாக உள்ளது. படைப்புகள் மூலம் தம்மை தரமான எழுத்தாளர்களாய் அடையாளப்படுத்திக் கொண்டிருக்கும் பல எழுத்தாளர்கள் மின்தளங்களில் குடும்பிப் பிடி சண்டை போட்டுக் கொண்டிருக்கின்றார்கள். அத்தோடு எந்தவிதமான தணிக்கையும் இல்லாமல் பிரசுரிக்க முடிந்ததால் ஒவ்வொரு படைப்பாளிகளின் உண்மைப் பக்கங்களையும் எம்மால் காணமுடிகின்றது.
அண்மைக் காலங்களில் மின்தளங்களில் ஆதவன்தீட்சண்யா, தமிழ்நதி, சோபாசக்தி போன்றவர்களின் மோதல்களையும், தொடர்ந்து கொண்டிருக்கும் ஜெயமோகன், சாருநிவேதா தாக்குதல்களையும் வாசிக்கும் சந்தர்பங்கள் கிடைத்தன.

தமிழ்நதியின் தளத்தில் வாசிக்கக் கிடைத்த சுவாரஸ்யமான பதிவு ஒன்று இப்படியிருந்தது :-

//…நான் அறிந்தவரை புலிப்போராளிகள் மக்களின் பாதுகாவலர்களாக, மக்கள் நலன்களுக்காகத் தங்களை அர்ப்பணிக்கிறவர்களாகவே இருந்தார்கள். இருபத்தைந்தாயிரத்துக்கும் அதிகமான போராளிகளும் தளபதிகளும் தம்மைக் களப்பலியாக்கியது அதன் பொருட்டே. பிரபாகரன் அவர்களும் அவ்வாறான கட்டுப்பாடுடைய இயக்கத்திற்குத் தலைவராக இருக்கத்தகு தகுதிகளோடுதான் இருந்தார். அத்தகைய தலைமையின் கீழ் தவறேதும் நடக்க வாய்ப்பில்லை என்று நான் கருதினேன். கடைசிநேரத்தில் அந்த நம்பிக்கை வீண்போயிற்றென்பதை (மக்களை அரண்களாகப் பயன்படுத்தியதில்) நானும் அறிகிறேன். அப்படி நிகழ்ந்திருந்தால் அதை எவ்விதமும் நியாயப்படுத்துவதற்கில்லை. மறுவளமாக, அவ்விதம் நிர்ப்பந்திக்கப்படுமளவிற்கு களநிலைமைகள் மோசமாக அமைந்திருந்தன என்பதும் வருத்தத்திற்குரியதே. அதனால் உயிரிழந்த, பாதிக்கப்பட்ட மக்களின் துயருக்கு ஈடாகச் சொல்ல ஒரு வார்த்தைதானும் இல்லை..\\
 
 பிரபாகரன் இன்னும் இறக்கவில்லை ஐந்தாம் படை வருகின்றது என்ற முழங்கிக்கொண்டு சிலரும், மருந்துக்கும், மண்ணுக்கும் என்று கூறிக்கொண்டு மீண்டும் பணம் சேர்க்கும் கலாச்சாரத்தைத் தொடர்பவர்களுக்கிடையில் தமிழ்நதியின் இந்த மாற்றம் எவ்வளவோ பரவாயில்லை.


அடுத்து ஜெயமோகன் தனது தளத்தில் கமலாதாஸ் மரணம் பற்றி எழுதும் போது இப்படிக் குறிப்பிட்டிருந்தார்:-

  //..கமலாவின் பிரச்சினைகளின் ஊற்றுமுகம் ஒன்றுதான். அவர் அழகி அல்ல. கறுப்பான குண்டான கிட்டத்தட்ட அவலட்சணமான பெண். அழகிகளின் குடும்பத்தில் பிறக்கவும் நேரிட்டது. இந்த தாழ்வுணர்ச்சியில் இருந்து உருவான திரிபு பட்ட ஆளுமை அவருடையது. எங்கும் எப்போதும் தன்னை முன்னிறுத்திக்கொள்ளும் முனைப்பும் தணியாத விளம்பர வெறியும் கொண்டவர் கமலா. செய்தித்தாள்கள் தன்னைப்பற்றி எழுதுவதற்காக அவர் எதையும் செய்வார். ஆபாசமாகப் பேசுவார். ஒன்றுமே தெரியாத மழலையாக நடிப்பார். உயர்வாகக் கருதப்பட்டவைகளை உடைத்து வீசுவார். கீழ்மைகளைப் போற்றுவார். விபரீதமாகவும் தடாலடியாகவும் எதையாவது செய்வார். ஒரு சிறு சந்திப்பில் கூட அப்படித்தான் நடந்துகொள்வார்..\\

//..அந்த தாழ்வுனர்ச்சியினால் விளைந்த அணையாத காம இச்சை கொண்டிருந்தார் என அவரது சுயசரிதை மற்றும் குறிப்புகள் காட்டுகின்றன. தோற்றம் காரணமாக புறக்கணிக்கப்படும் பெண்ணின் ஏமாற்றப்பட்ட காமம் அது. அந்த இச்சையையே அவர் விதவிதமாக வெளிப்படுத்தினார். அல்லது அது ஒருவகை வன்மம்..\\

  கறுப்பாக இருப்பது சிலருக்குப் பிடிப்பதில்லை, குண்டாக இருப்பதும் சிலருக்குப் பிடிப்பதில்லை, ஆனால் இவற்றை அழகல்  என்று எந்த அளவுகோலை வைத்து ஜயமோகன் அளவிட்டிருக்கின்றார்? “தாழ்வுணர்ச்சியால் விளைந்த அணையாத காம இச்சை கொண்டிருந்தார்” என்ற ஜெயமோகனின் வரிகளைப் படித்த போது அதற்கு மேல் என்னால் படிக்க முடியாமல் போய் விட்டது. ஒரு எழுத்தாளர் மேல் வைத்திருக்கும் மரியாதை தணிக்கையற்ற அவரது மின்தளத்தைப் பார்க்கும் போது உடைந்து போகின்றது. எமது தளம் எமது கட்டுப்பாட்டில் இயங்கிக்கொண்டிருக்கும் போது யாரும் யாரையும் எந்த வகையிலும் மிக இலகுவாக இகழ்ந்து, கொச்சைப்படுத்தி எழுதிவிடலாம் என்பதை ஜெயமோகன் அறியாதவரும் இல்லை .பின்னர் எதற்கா இத்தனை வக்கிர வரிகள்?
மின்தளங்கள் பொழுதைப் போக்க நல்ல இடமாகவிருந்தாலும் நாவல்கள் வாசிக்கும் போது கிடைக்கும் மனத்திருப்தி மின்தளவாசிப்பின் போது ஒரு போதும் எனக்குக் கிடைத்ததில்லை.
              

Sunday, July 12, 2009

எந்த முகம்



இப்ப போகலாமென
மனம் அடித்துக் கொள்கிறது.
83இன் பின்னர்
மறந்து போயிருந்தவையெல்லாம்
நினைவிற்குள் மீண்டன.

கறுப்பு வெள்ளைப் போட்டோ ஆல்பம்,
புத்தகக் கவருக்குள் 
ஒளித்து வைத்த காதல் கடிதங்கள்,
திண்ணைச் சுவரில் 
எண்ணெய் பிசுக்காய்
அப்பியிருக்கும்
ஆச்சியின் அடையாளம்.
பின்முற்றம்
கக்கூஸ்
கிணற்றடி

இத்தனை காலமாய் 
மறந்து போயிருந்த அனைத்தையும்
கூட்டி நினைவிற்குள் மீட்க
புகாராய் எதுவும் ஒட்டமாட்டேன் என்கிறது.

என் மண்
என் நாடு
என் மக்கள்
படபடக்கின்றது மனம்

தங்குவதற்கு வசதியான இடம்
சப்ப “சுவிங்கம்”
சாப்பாட்டு ஒழுங்கும் 
போக முன்பே செய்ய வேண்டும்.

இல்லாதவர்களுக்குக் குடுக்க
கொஞ்ச பழைய உடுப்பு
சொக்லேட்டுப் பெட்டிகள்,
பென்சில்கள், ரப்பர்கள்
எல்லாவற்றையும் 
பரப்பிவிட்டு
கையில் “பாஸ்போட”, “ரிக்கேற்ருடன்” விழிக்கின்றேன்.

எந்த முகத்தோடு போவதென்று தெரியாமல்.

Saturday, May 30, 2009

இதுதான் தருணம்.

“வணங்காமண்” என்ற பெயரில் லண்டனில் இருந்து கப்பல் ஒன்றில் மருந்துப் பொருட்களையும், உணவுப்பொருட்களையும் வன்னிமக்களுக்கு அனுப்புவதற்காக சேகரித்திருந்தார்கள். மிகப்பெரிய தொகையில் பொருட்கள் சேகரிக்கப்பட்டதோடு பணமும் தொகையாகச் சேர்ந்து கொண்டதாக அறிகின்றேன். இதுவரை காலமும் போர் தீவிரமடைந்திருந்த நேரம் அப்பொருட்களை அனுப்புவதற்குப் பல தடைகள் இருந்திருக்கும். ஆனால் தற்போது போர் முற்றுப்பெற்ற நிலையில் வன்னி மக்களுக்கு மருந்து உணவுப்பொருட்களின் தேவை அதிகம் இருக்கின்றது. லண்டன் வாழ் தமிழ் மக்கள் ஒன்றிணைந்து செஞ்சிலுவைச்சங்கம், ஐநாசபை அங்கத்தவர்களுடன் தொடர்பு கொண்டு வணங்காமண் கப்பலுக்காகச் சேகரிக்கப்பட்ட பொருட்களையும், பணத்தையும் வன்னிமக்களுக்குச் சென்றடைவதற்கான ஒழுங்குகளைச் செய்யவேண்டும். பொருட்களையும் பணத்தையும் கொடுத்;துதவிய தமிழ் மக்கள் அப்பொருட்கள் வன்னிமக்களைச் சென்றடைவதற்கு ஒன்றாகக் கூடி செஞ்சிலுவைச் சங்கத்திடமும் ஐநாவிடமும் வேண்டுகோள் விடுத்தால் இது நிச்சயமாகச் சாத்தியப்படும். சாத்தியப்பட வைக்க வேண்டியது லண்டன் வாழ் மக்களின்; கடமை. தேசம் மின்தள உரிமையாளர்களும் வணங்காமண் ஒழுங்காளர்களுடன் தொடர்புகொண்டு அவர்களோடு இணைந்து இதனைச் செய்துமுடிக்கலாம். வன்னிமக்களுக்கு உதவுவதற்கு இதுதான் சரியான

Monday, April 20, 2009

அடுத்தது என்ன-2


கனேடித் தமிழ் காங்கிரஸ், கனேடிய பாராளுமற்ற உறுப்பினர்களுடன் தமக்கு இருக்கும் சார்பு நிலையைப் பயன் படுத்தி, வன்னி மக்களின் பாதுகாப்பிற்காய்த் தம்மால் ஆன போராட்டங்களை ஆர்ப்பாட்டங்கள் அற்ற முறையில், கறுப்புக் கொடியுடன் ஆரம்பித்து வைத்தது. சிங்கள அராஜக அரசு வன்னி மக்கள் மேல் நடாத்தி வரும் மனிதாபதமற்ற தாக்குதல்களைக் கண்டித்து மக்களின் பாதுகாப்பைக் கருத்திற் கொண்டு சிங்கள அரசின் மேல் அழுத்தங்களைக் கொடுப்பதன் மூலம் உடனடிப் போர் நிறுத்தத்தைக் கொண்டு வருவதுடன், உலகநாடுகளிடமிருந்து இலங்கை அரசு பெற்று வரும் உதவிகளைத் தடை செய்வது போன்றவையே இவர்களது போராட்டத்தின் முக்கிய நோக்கமாக இருந்தன. இப்போராட்டங்கள் மூலம் ஜ.நா விற்கு அழுத்தம் கொடுத்து தமிழ் மக்களுக்கு சார்பாக எதையாவது செய்ய முடியும் என்ற நம்பிக்கையும் இவர்களிடம் இருந்து என்று அறிய முடிந்தது. கனேடி பாரளுமன்ற உறுப்பினர்களிடம் சிறிதளவேனும் தமிழ் மக்களுக்கான உதவியைப் பெற வேண்டும் எனில் அவர்களது சட்டங்களை மதிக்க வேண்டும் என்பதில் கனேடியத் தமிழ் காங்கிரஸ் மிகவும் விழிப்போடிருந்தது. ஆரம்ப காலப் போராட்டங்கள் கறுப்புக் கொடிகளுடன் அமைதியான முறையில் நடைபெற்றதால் கனடா வாழ் தமிழ் மக்களைப் பற்றிய ஒரு நல்லெண்ணத்தைக் கனேடிய அரசிற்கு நிச்சயம் அது வழங்கியிருந்தது. ஆனால் எமது மக்கள் செய்த பாவமோ என்னவோ திடீரென்று அனைத்துப் போராட்டங்களும் திசைமாறி தமிழர்கள் என்றாலே சட்டத்தை மதிக்கத் தெரியாத வன்முறையாளர்கள் என்று உலக நாடுகள் அனைத்தும் ஒன்றாக முத்திரை குத்தும் அளவிற்கு தமிழ் மக்களுக்கான போராட்டம் இப்போது திசைமாறி விட்டது. தாம் என்ன செய்கின்றோம் என்று விளக்கமில்லாது வெறும் உணர்வுகளால் உந்தப்பட்டு, தம் மனச்சாட்சிக்காய், தம் பங்கிற்காய் எதையாவது செய்ய வேண்டும் என்ற நல்லெண்ணத்தில் பல பாடசாலை, பல்கலைக்கழக மாணவர்களும் இப்போராட்டங்களின் இணைந்திருக்கின்றார்கள் என்பதுதான் மிகவேதனையா விடையம்.
----------------------
எமது நாட்டில் அடங்காத் துயரில் இருக்கும் மக்கள் தனது அன்றாட தேவைகளுக்காகப் போராடிக்கொண்டிருக்கும் நிலையில், அவர்களிடம் மிஞ்சியிருப்பது உயிர் ஒன்று மட்டுமே. அவர்களுக்குத் தேவையான உடனடித் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கு உடனடி போர்நிறுத்தம் தேவை எனின் நாம் கையேந்தும் நாடுகளின் சட்டங்களை மதித்தே ஆக வேண்டிய நிலையில்தான் நாம் இன்று இருக்கின்றோம். கனேடியத் தமிழ் வானொலி ஒன்றின் கலந்துரையாடலை அண்மையில் கேட்டேன். வன்னி மக்கள் தமது சொந்த நிலத்தில்தான் வாழ வேண்டும் அவர்கள் வெளியேறத் தேவையில்லை என்று கனேடிய அரசியலில் ஈடுபட்டிருக்கும் தமிழர் ஒருவர் கூறினார். பண வசதி இருந்ததால் தனது சொந்த நாட்டை விட்டு, ஊரை விட்டு மூட்டை முடிச்சுடன் ஓடிவந்து கனடாவில் வாழும் இவர்கள் போன்றோர், இங்கு வந்து இறங்கியவுடன் முதலில் செய்தது மிஞ்சியிருக்கும் தமது சொந்தங்ளை இங்கே இறக்கியதுதான். தமது பிள்ளைகளுக்குத் தடிமன் வந்தால் கூடத் துடித்துப் போகும் இவர்கள், தமது உயிரைக் காத்துக் கொள்ள நாட்டை விட்டுக் கடல் கடந்து ஓடி வந்தவர்கள், வன்னி மக்கள் அனைத்தையும் தொலைத்துவிட்டு, மிஞ்சியிருக்கும் உயிர் ஒன்றையே கையில் கொண்டு எங்காவது போய்த் தப்பித்துக் கொள்ளலாமா என்று தவித்திருக்கும் போது அவர்கள் மேல் அக்கறை கொண்டவர்கள் போல் காட்டிக்கொள்ளும் புலம்பெயர்ந்த தமிழர்கள் வன்னிவாழ் மக்களை வன்னியை விட்டு அசையக் கூடாது என்பது விந்தையாக உள்ளது. கனடாவில் வாழப் பிடிக்காமல் திரும்பியவர்கள் கூட இந்தியா போன்ற நாடுகளில் குடியேறியிருக்கின்றார்ளே தவிர வன்னியில் குடியேற அவர்களும் தயாராக இல்லை. வன்னிவாழ் மக்கள் பலர் பல ஊர்களிலும் இருந்து அங்கு வந்து குடியேறியவர்கள் என்பதை இவர்கள் அறியாதவர்களுமல்லை. இதன் பின்புலம் என்ன என்பது அனைவரும் அறிந்ததே.
------------------------
எம்பங்கிற்கு எதையாவது செய்ய வேண்டும் என்ற மனப்போராட்டத்தில் பல அமைப்புக்களும் தனி நபர்களும் உணர்ச்சிவசப்பட்ட நிலையில் இப்போது உள்ளார்கள். ஒரு அரசியல் ஆய்வாளரிடம் இதுபற்றிக் கேட்டேன். என்ன செய்ய முடியும் என்று நினைக்கின்றீர்கள்? என்று அவர் என்னிடம் திருப்பிக் கேட்டார். என்னிடம் பதில் இல்லை. நீங்கள் என்ன செய்தீர்கள் என்று யாராவது கேட்டால் சொல்லிக்கொள்ள எதையாவது செய்ய வேண்டுமா?
------------------------
அனைத்து நாடுகளிலும் புலம்பெயர்ந்தோர் மாபெரும் போராட்டங்களை நடாத்தி வருகின்றார்கள் என்று பெருமை கொள்ளும் மக்களுக்கு ஏன் இன்னும் பாராளுமன்ற உறுப்பினர்கள் தங்களை வந்து சந்தித்து உரையாற்றுகின்றார்கள் இல்லை என்ற கேள்வி எழுந்த வண்ணமே இருக்கின்றது. (குறிப்பாகக் கனடாவில்) இது பற்றி தமிழ் வானொலியில் உரையாடிய ஆய்வாளர் ஒருவர், எமது அடையாளமான கொடியை நாங்கள் கையில் ஏந்தியிருப்பதை அவர்கள் ஏ
ற்றுக்கொள்கின்றார்கள் இல்லை என்றார். தொடர்ந்து அவர் கூறுகையில் தமிழர்கள் மிகவும் திறமையும் புத்திக் கூர்மையும் கொண்டவர்கள், கனேடியப் பாரளுமற்ற உறுப்பினர்களைத் கனேடியத் தமிழர்கள் தான் மெல்ல மெல்ல வளர்த்தெடுக்க வேண்டும் என்றார். வரும் செவ்வாய்க்கிழமை இடம்பெற இருக்கும் மாபெரும் உரிமைப் போரின் போது கனேடிய அரசியல் வாதிகளின் போக்கில் கொடிகளை மடித்து வைத்து விடுவோம், அவர்கள் வந்து உரையாடி எம்மக்களுக்காக எதையாவது செய்வதற்கு உடன்படுகின்றார்களா என்று பார்ப்போம் என்று இந்த ஆய்வாளர் தயங்கித் தயங்கி வானொலியில் கேட்டுக் கொண்டார். தொடர்ந்து வந்து உரையாடிய உறவுகள் (தற்போது நேயர்கள் அல்ல உறவுகள்) தாம் தமிழரின் அடையாளமான கொடியை ஒருபோது கைவிடமாட்டோம் என்று உணர்ச்சி பொங்கக் கூறினார்கள். இல்லை நாங்களும் சிறிது விட்டு
க் கொடுத்தால்தான் கனேடிய அரசும் சிறிது விட்டு இறங்கி வரும் என்று கெஞ்சாத குறையாக இவர் கேட்டுக் கொண்டார். வன்னி மக்கள் மேல் கனடாவாழ் தமிழ் மக்களுக்கு எவ்வளவு அக்கறை இருக்கின்றது என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
----------------------

Friday, April 10, 2009

அடுத்தது என்ன?

ஒரு புறம் வேடன், மறுபுறம் நாகம் என்ற நிலையில் இன்று வன்னி மக்கள் படும் வேதனை தமிழ் தொலைக்காட்சிகளிலும், மின்தளங்களிலும் பார்த்து மௌனம் ஒன்றைத் தவிர வேறு வழியில்லா நிலையிலும், ஒருநிலைக்கு மேல் மௌனித்திருக்கவும் முடியா நிலையிலும் புலம்பெயர்ந்த எத்தனையே தமிழ் மக்கள் தங்களுக்குள் புலம்பித்தீர்த்துக் கொண்டிருக்கின்றார்கள்.
UN இடமோ இல்லையேல் தாம் புலம்பெயர்ந்து வாழும் நாட்டின் அரசிடமோ வன்னி மக்களைப் பாதுகாப்பாக வெளியேற்ற உதவுங்கள் என்று கையேந்த முடியாத நிலையில் உள்ளார்கள் இவர்கள். காரணம் பயங்கரவாத அமைப்பென்று தடை விதித்த பின்னரும் “அரசே உனது தடை எங்களுக்கு ஒரு வடை” என்று கோஷம் போட்டு தம்மை அகதிகளாக ஏற்றுக்கொண்ட அரசாங்கத்திடமே நாம் புலிக்கொடிகளோடுதான் எமது பேரணியை நடாத்துவோம் என்று திமிருடன் மோதுகின்றார்கள். நீங்கள் புலிக்கொடிகளோடு வந்தால் நாம் பேச்சு வார்த்தைக்கு வரமாட்டோம் என்று ஓட்டாவா பாராளுமன்றத்தின் முன்னால் இடம்பெற்ற பேரணியின் போது வெளியில் வந்து உரையாட இருந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் மறுப்புத் தெரிவித்திருந்த போதிலும் அவர்கள் வராவிட்டால் கிடக்கட்டும் நாங்கள் கொடியோடுதான் போவோம் என்று அறிலித்தனமாக நடந்து கொண்ட இவர்களுக்கு, தாம் இழந்தது எதை என்று புரிந்து கொள்ளும் சிற்றறிவு கூட இல்லாமல் போனதுதான் வேதனை. கனேடிய அரசு இதனால் எதை இழந்தது? இவர்களுடைய வோட்டையா?

விடுதலைப்புலிகள் மேல் விதிக்கப்பட்ட தடையை நீங்கும் முகமாக நாகரீகமான முறையில் கோரிக்கைகளை வைத்துக் கொண்டே, கனேடிய சட்டத்தை மதித்து(அது உங்களுக்குப் பிடிக்கிறதோ இல்லையோ - எமது மக்களுக்காக இதையாவது செய்யாவிட்டால் நீங்கள் தமிழர் என்று சொல்வதில் எந்தப் பெருமையும் இல்லை) எமது மக்களின் அழிவைத் தடுக்க கறுப்புக்கொடிகளோடு இந்தப் பேரணிகளை நடாத்தியிருந்தால் தமிழ் மக்கள் மேல் அரசிற்கு சிறிதளவேனும் கரிசனை வந்திருக்கும். அதை விடுத்து எமது தலைவன் பிரபாகரன், என்று தொண்டை கிழியக் கத்திய வண்ணம் புலிக்கொடிகளை சிறுவர் கைகளில் கொடுத்து ஆட்ட வைத்து கனேடிய அரசை வம்புக்கு இழுப்பதால் தமிழ் மக்களை வன்முறையாளர்கள் என்று மேலும் கணிப்பதைத் தூண்டுவதாகவே அமையும். பயங்கரவாதிகள் என்ற தடை விடுதலைப் புலிகள் மேல் இருக்கும் வரை அதனை ஆதரிக்கும் அனைத்தும் சட்ட விரோதமாகப் பார்க்கப்படும். சட்டத்தை மீறு என்று கனேடிய அரசிடம் வேண்டுகின்றார்களா இவர்கள்?

வன்னி மக்களைப் பாதுகாப்பான இடத்திற்கு மாற்றுவதை தற்போது புலம்பெயர் தமிழ் மக்கள் விரும்பவில்லை. ஆரம்பத்தில் மக்களுக்காகக் குரல் கொடுத்தவர்கள், திடீரென மாறி தற்போது பேரணிகளில் போது எமது தலைவர் பிரபாகரன் எமக்கு வேண்டும் தமிழ் ஈழம் என்றே குரல் கொடுக்கின்றார்கள். மக்களும் இயக்கமும் ஒன்றே பொதுமக்களைப் பிரித்தெடுத்து விட்டால் விடுதலைப் புலிகளை அழிப்பதற்கு அரசிற்கு சில மணிநேரங்கள் போதும் என்பதால், மக்கள் அழிந்தாலும் பரவாயில்லை தமது இயக்கத்தைக் காக்க வேண்டும் என்பதே புலம்பெயர் மக்களின் ஒரே குறிக்கோள். புலம்பெயர்ந்த மண்ணில் வாழும் வரை இவர்கள் கோஷம் இதுவாகத்தான் இருக்கும்.

அழிவது வன்னி மக்கள், புலம்பெயர்ந்து வாழும் தமிழ் மக்கள் தமது மனச்சாட்சியின் உறுத்தலைத் தணிக்கப் பணத்தை இயக்கத்திற்குக் கொடுத்து விட்டுச் சுகபோகமாக வாழப்பழகிக் கொண்டவர்கள். தற்போதைய அரசியல் சூழல் அவர்களின் சுகபோக வாழ்க்கை முறையில் எந்த வித மாற்றத்தையும் கொண்டு வரப்போவதில்லை.  இச்சூழ்நிலையைப் பயன்படுத்தி பணம் பண்ணும் வியாபாரிகள்தான் அதிகரித்திருக்கின்றார்கள். வீட்டிற்கு இரண்டு மூன்றென்று புலிக்கொடிகளும், ரீசேட்டும், கார் ஒட்டிகளும் வியாபாரிக்களுக்கு பாரிய அளவில் வியாபாரத்தைக் கூட்டியிருக்கின்றன. (இயக்கத்திற்கு அனுப்பப் பணம் சேர்க்கின்றேன் என்று இனிமேலும் காதில் பூ சுத்த முடியாது) அதே வேளை எந்த அடிப்படை சட்ட அறிவும் இல்லாமல், யார் எதைச் சொன்னாலும் நம்பிவிடும் அறிவிலித் தனத்துடன் “வணங்காமண்” என்ற கப்பல் உணவுப் பொருட்களோடு லண்டனில் இருந்து ஈழம் நோக்கிச் செல்கின்றதாம் கனடாவில் இருக்கும் நாங்களும் ஏன் கப்பல் விடக் கூடாது என்று ஏங்குகின்றார்கள் சிலர்.
முப்பது வருட போராட்டத்தில் மிகப் பிரமாண்டமாக பேரணிகளைத் தற்போதுதான் உலகெங்கும் தமிழர்கள் நடாத்துகின்றார்கள். விடுதலைப்புலிகள் மேல் தடை விதிக்கப்பட்ட போது கூட சின்னதாக ஒரு சலசலப்போடு நிறுத்திக் கொண்டவர்கள், தொடர்ந்து சிங்கள இராணுவம் தமிழ் மக்கள் மேல் பிரயோகித்து வரும் வன்முறைகளுக்குப் பெரிதாகக் குரல் கொடுக்கவுமில்லை. அப்போதெல்லாம் கனடாவின் வாழ்க்கையில் இன்புற்றிருந்த இவர்கள் தற்போது விடுதலைப் புலிகள் அழியும் நிலைக்கு வந்த போதுதான் தொண்டை கிழியக் கத்துகின்றார்கள். இத்தனை பெரிய போராட்டங்களை ஏன் இவர்கள் முன்பு நிகழ்த்தாமல் போய் விட்டார்கள்? நிகழ்த்தியிருந்தால் எப்போதே உலக நாடுகளின் உதவியை நாடியிருந்தால் ஏதாவது ஓரு சுமூகமான தீர்வு எமக்குக் கிடைத்திருக்கலாம் அல்லவா? அப்போதெல்லாம் தமது சொந்தங்களைப் பாதுகாப்பாக எப்படி வெளிநாட்டிற்கு எடுக்கலாம் என்பதில்தான் அவர்கள் கவனம் இருந்தது போலும்.

மின்தளங்களில் சிங்களமக்களின் வாசகங்களைப் பார்க்கும் போதுதான் உறைக்கின்றது. இனிமேல் எமக்கென்று சொல்லிக் கொள்ள ஒரு இடமில்லை. புலம்பெயர்ந்த நாட்டில் வாழ்ந்தாலும் ஒட்ட முடியவில்லை. தமிழ் என்று குரல் கொடுத்துக் கொண்டு தமிழ் மக்களின் அழிவிலும், மண்ணின் அழிவிலும் வியாபாரம் செய்து தம்மைச் செழுமைப் படுத்திக் கொள்ளும் சிறுமைத்தனங்களைக் காணும் போது அடக்க முடியாத சினம் எழுகின்றது. அது மட்டும்தான் எம்மால் முடிகின்றது. இத்தனைக்கு அவர்கள்தான் தமிழ் உணர்வாளர்கள் என்ற பெயரோடு உலவுகின்றார்கள்.

இத்தனை வருட கால போராட்டத்தில், இயக்கத்திடம் பாரிய திட்டம் எதுவும் இருக்கவில்லை. ஆயுதங்களின் மிரட்டல்கள் தனிநாட்டைச் சுலபமாகப் பெற்றுத் தந்து விடும் என்று நம்பினார்கள். சிங்கள அரசோ மிக நிதானமாக இனச் சுத்திகரிப்பை திட்டம் போட்டு உலக நாடுகளில் துணையோடு அமுல் படுத்தி வருகின்றது. வடக்கில் பல இடங்களில் இராணுவம் பெரிய பண்ணைகளை ஆரம்பித்து தமிழ் மக்களை வேலைக்கமர்த்தி அவர்களுடன் இணைந்து வேலை செய்கின்றது. வவுனியாவிலும், இனிமேல் கைப்பற்றப்பட்ட வன்னிப் பிரதேங்களிலும் இதே செயல்திட்டத்தை அமுலுக்குக் கொண்டு வர உள்ளது. பாடசாலைகள், மருத்துவமனைகளை இப்பிரதேசங்களில் அமைத்துக் தமிழ் மக்களுடன் சுமூகமான ஒரு நிலையை உருவாக்கிய பின்னர் பாடசாலைகளில் மெல்ல மெல்லத் தனிச்சிங்களச் சட்டத்தைக் கொண்டு வந்து காலப் போக்கில் தமிழை அழித்து இலங்கை எனும் நாடு தனிச் சிங்கள நாடாக மாற்றுவதே சிங்கள அரசின் திட்டம் என்றார் ஒரு தமிழ் அரசியல் ஆய்வாளர்.

தான் சாய்ந்தாலோ தடுமாறிப் போனாலோ துணையாய்ப் பக்க பலமாய் தன்னோடு இணைந்து போராட விடுதலைப்புலிகள் இயக்கம் இன்னொரு வளத்தைத் தயார்படுத்தி வைக்கவில்லை. இன்று தனிக்கல்லில் கட்டப்பட்ட உயர்ந்த கட்டிடமாய் வளர்ந்து நிற்கும் இயக்கத்தின் அஸ்திவாரம் ஆட்டம் காணும் நிலையில், முற்று முழுதாகச் உடைந்து சுக்கு நூறாகப் போகும் நிலை தான் மிஞ்சி உள்ளது. விடுதலைப்புலிகளில் வளர்ச்சியிலும் வீழ்ச்சியிலும் குளிர்காய்ந்த புலம்பெயர் மக்களே அதிகம். வெளிநாடுகளில் இருந்து புலிக்கொடிகளோடு கத்தி ஒன்றும் நிகழப் போவதில்லை என்பது இவர்களுக்கு உறைக்கவும் போவதில்லை. ஓட்டாவா பத்திரிகை ஒன்றில் தமிழ் மக்கள் பாராளுமன்றத்தின் முன்னாள் நாடாத்தும் போராட்டம் பற்றிக் குறிப்பிட்டு விட்டு, வீதிகளில் வாகனங்களுக்கும், பிரயாணிகளுக்கு இவர்கள் இடஞ்சலாக உள்ளார்கள் என்றும் குறிப்பிட்டிருக்கின்றது. அதே வேளை இந்தியாவில் சீமான், வைகோ போன்றோரின் வன்முறையைத் தூண்டும் பேச்சுக்கள் தமிழ்நாட்டு மக்களிடம், பொதுவாகக் குடும்பப் பெண்களிடம் சினத்தைதான் வரவழைக்கின்றது. எந்த நாடும் தனது சீர்நிலை குலைவதை விரும்பவதில்லை. அதனைத் தூண்டும் பேச்சுக்களையும் அது அனுமதிப்பதில்லை. சிங்கள அரசிற்குத் தெரியும் எந்த ஒரு உலகநாடும் தனது இராணுவத்தை விடுதலைப்புலிகளுடன் இணைத்துக் கொண்டு தன்னை அழிக்கப் போராடாது என்று. அத்தோடு புலம்பெயர் நாடுகளில் தமிழ் மக்களின் அழுத்தம், உலக நாடுகள், UN ஆகியவற்றின் மேல் தாக்கத்தை ஏற்படுத்தின் அது வன்னி மக்களைப் பாதுகாப்பாக போர் வலையத்திலிருந்து வெளியேற்றுவதாக மட்டுமே அமைந்திருக்கும். அதைத்தான் சிங்கள அரசும் வேண்டி நிற்கின்றது.

புலம்பெயர்ந்த தமிழ் மக்களால் ஆயுதங்களுக்குப் பணத்தை மட்டும்தான் அனுப்ப முடியும். தாமும் இணைந்து கொண்டு இராணுவத்தைப் பலப்படுத்துவோம் என்று பேச்சுக்காவது இவர்கள் எண்ணினார்களா? கேட்டால் இங்கிருந்து வேலை செய்யவும் ஆட்கள் தேவை என்று முறைத்து விட்டு மறைந்து விடுவார்கள். இன்று புலம்பெயர்ந்த மக்களின் பணத்தில் கொள்வனவு செய்யப்பட்ட அத்தனை ஆயுதங்களும் சிங்கள இராணுவத்தின் கைகளில் அகப்பட்டு தமிழ் மக்களையே அழிக்க உபயோகிக்கப்படப் போகின்றது.

இந்திய இலக்கியவாதி ஒருவரிடம் உரையாடிக்கொண்டிருக்கும் போது அவரின் தகவல்படி சிங்கள அரசு தனது உறுப்பினர்களை இந்தியாவின் அனைத்து மாநிலங்களிற்கும் அனுப்பி, அங்கிருக்கும் அரசியல்வாதிகள், முற்போக்குவாதிகள், பத்திரிகையாளர்களை சந்திக்கும் படி செய்து, விடுதலைப் புலிகள் இயக்கம் முற்றுமுழுதான ஒரு பயங்கரவாத இயக்கம், இதனால் தமிழ் மக்கள், சிங்கள மக்கள் அனைவருக்குமே பாதுகாப்பு இல்லை என்று உரை நிகழ்த்தி அவர்களை தம் சார்ப்பாக்கியிருக்கின்றது. அதே போல் உலக நாடுகள் பலவற்றுடனும் சந்திப்பு நிகழ்த்தியிருக்கினறது, ஆனால் விடுதலைப்புலிகள் இயக்கம் உலக நாடுகளில் ஆதரவைப் பெற்று கொள்வதற்கான எந்த முயற்சியையும் எடுக்கவில்லை. தான் ஒரு மலையாள சஞ்சிகையில் தொடர்ந்து ஈழத்தமிழர்களில் நிலை பற்றி விளக்கி எழுதி வந்ததாகவும், கேரள அரசியல்வாதி ஒருவர் தன்னுடன் தொடர்பு கொண்டு தாங்கள் தவறான தகவல்களை மக்களுக்கு கொடுக்கின்றீர்கள் என்று கூறித் தன்னுடன் உரையாடியதாகவும் அந்த வேளையில் சிங்;கள அரசு அனைத்து மாநிலங்களுக்கும் அரசியல் பயணம் நிகழ்த்தியிருக்கும் தகவலைத் தான் அறிந்து கொண்டதாகவும் தெரிவித்தார்.

அடுத்தது என்ன?