Thursday, July 30, 2009

40 +

தான் அன்றைக்கு ஆஷாவோட கதைக்க வேண்டியதை எல்லாம் திரும்பத் திரும்பச் சொல்லிப்பாத்துக் கொண்டான் சந்திரகாந்தன். பல தடவைகள் சொல்லிப் பார்த்துக் கொண்டதால் முதல் தடவை சொன்னது மறந்து போனதோடு அதுதான் அழகான வார்த்தைளோடு அமைந்திருந்தது என்ற ஏக்கமும் அவனுக்குள் வரத் தொடங்கியது. மறந்ததை நினைவுபடுத்த முனைய உள்ளதும் மறந்து போய்..சரி ஒண்டும் வேண்டாம் முதல்ல இருந்து சொல்லிப்பாப்பம், திரும்ப ஒவ்வொரு வார்த்தையாக கோர்க்கத் தொடங்கினான். அவன் வாய் வார்த்தைகளைக் கோர்க்க மனம் ஆஷாவோடு கட்டில் வரை போய் நிற்றது. கதவை டொக் டொக் என்று யாரோ ஊன்றித் தட்டினார்கள். கட்டிலில் இருந்து நினைவை இழுத்து இறக்கி நிலத்திற்கு வந்து“என்ன ஆர்” எண்டான்“அப்பா எனக்கு இண்டைக்கு எக்ஸ்சாம் இருக்கு, நான் குளிக்க வேணும்” சினத்தோடு மகள் காவேரி கத்தினாள்.“வாறனம்மா முடிஞ்சுது” குரல் குழைந்தாலும், மனம் புறுபுறுத்தது. அவசரமாக மீசையின் எல்லா வெள்ளையையும் மூடி கறுப்பு டையை அடித்து முடித்தான். திடீரென்று மனம் சோர்ந்து தவித்தது. தவித்ததை திரும்ப உலுப்பி சமாதானம் சொல்லி நிமிர்த்தி வைக்கும் கைங்கரியம் அவனுக்கு இப்போதெல்லாம் இயல்பாகவே வந்தது. மனச்சோர்வு அளவுக்கு மீறினால் உடனே ஏதாவது ஒரு தத்துவப் புத்தகத்தில் தான் வாசித்த வாழ்க்கைத் தத்துவங்கள் சிலவற்றை தன் வாதத்துக்கு ஏற்ப கண்டு பிடித்து, அதைத் தன் வாழ்க்கையோடு தொடர்பு படுத்தி தன்னைத் திருப்திப் படுத்திக் கொள்வான். இல்லாவிட்டால் யாராவது ஒருவரின் வாழ்க்கை முறையை நினைவிற்கு கொண்டு வந்து அதில் பல பிழைகளைக் கண்டு பிடித்து அதோடு தன்னை ஒப்பிட்டுப் பார்த்து தான் ஒன்றும் பிழை விடவில்லை என்று திருப்திப் பட்டுக் கொள்வான்.
காவேரி கடந்து போன போது வாயுக்குள் நமட்டுச் சிரிப்பு ஒன்றைச் சிரித்தாள். சாப்பாட்டு மேசையில் மூன்று பிள்ளைகளும் தங்களுக்குள் சுரண்டி கண்காட்டிச் சிரிப்பதைக் காணாதது போல் தவிர்த்தான். ஆஷாக்கு காவேரியிலும் விட எத்தின வயசு கூட இருக்கும். மனம் கணக்குப் பார்த்தது. ஆஷாவிடம் அவன் இன்னும் வயசு கேட்கவில்லை. ஆனால் நிச்சயமா அவளுக்கு முப்பதுக்குக் கிட்ட இருக்கும்.
“அம்மா, அப்பான்ர மீசையைப் பாத்தீங்களே?” சித்து திடீரென்று சிரித்த படி கேட்டான். “உன்னச் சாப்பிடேக்க கதைக்க வேண்டாம் எண்டு எத்தின தரம் சொன்னனான்” அவன் தலையில ஒரு தட்டுத் தட்டி “ஏன் இப்ப எல்லாருந்தானே டை அடிக்கீனம், அப்பா அடிச்சா என்ன?” கௌரி சொன்ன படியே காந்தனின் மீசையைப் பார்த்தாள். “வடிவாயிருக்கப்பா” என்றாள்.
“கௌரி கௌரி இப்பிடி அசடா இருக்காதை நான் உனக்குத் துரோகம் செய்யிறன்” திடீரெண்டு விக்கி விக்கி அவளின்ர காலில விழுந்து அழுந்து மன்னிப்பு கேட்கும் பெரிய ஒரு தியாகி போலவும், எப்பவும் உண்மை கதைக்கும் ஒரு உத்தமன் போலவும் தன்னைக் கற்பனை பண்ணிப் பார்த்தான். குற்றத்தை ஒப்புக் கொண்டு மன்னிப்பு கேட்பது என்பது எவ்வளவு பெரிய விஷயம். அப்பிடி நான் செய்தால் என்னுடைய மதிப்பு எவ்வளவு உயர்ந்து போகும். அதுவும் கொஞ்சம் மனம் சஞ்சலிச்சுப் போனன், ஆனால் எனக்குக் குடும்பந்தான் பெரிசு எண்டு இப்ப உணர்ந்திட்டன்” போன்ற வசனங்களை எடுத்து விட்டால் எவ்வளவு கௌரவமாக இருக்கும். கௌரி அவனின் தலைய எடுத்து தன்ர நெஞ்சோட சாய்ச்சு “அப்பா ஏதோ தெரியாமல் பிழை விட்டிட்டியள், ஆம்பிளைகள் இப்பிடித்தான் யோசிக்காமல் பிழை விட்டிடுவீனம் பிறகு குழந்தைப் பிள்ளைகள் மாதிரி விக்கி விக்கி அழுவீனம். நான் உங்களக் கோவிக்க மாட்டன். என்னிலதான் முழுப் பிழையும் நான் உங்களுக்கு ஒரு நல்ல பொஞ்சாதியா இருந்திருந்தால் இப்பிடியெல்லாம் நடந்திருக்குமே” என்று கண்களைக் கசக்கிவிட்டுப் பின்னர், இனிமேல் நாங்கள் சந்தோஷமா இருப்பம் அப்பா” என்பாள். காந்தன் விக்கினான். சாப்பாட்டு மேசையில் ஒருத்தரும் இல்லை.
கௌரி கட்டி வைச்ச சாப்பாட்டுப் பெட்டியை எழுத்துக் கொண்டு திரும்பவும் ஒருக்காத் தன்னைக் கண்ணாடியில் பாத்து, வயித்தை எக்கி உள்ளே தள்ளி அது தந்த உருவத்தில் திருப்தி கொண்ட படியே வெளியே போனான். இப்ப எத்தின வருஷமா ஜிம்முக்குப் போக வேணும் எண்டு நினைச்சு நினைச்சுக் கடத்திப் போட்டான். என்ர உயரத்துக்கு இந்த வயிறு மட்டும் கொஞ்சம் இறுக்கமா இருந்தா என்ன வடிவாயிருக்கும். ஆஷா நல்ல உயரத்தோட நல்ல இறுக்கமான உடம்போட இருக்கிறாள். என்னை முதல் முதல்ல உடுப்பில்லாமல் பாக்கேக்க அவளுக்கு அரியண்டமா இருந்தாலும் இருக்கும். அவனுக்குக் கவலையாய் இருந்தது. எதுக்கும் முதல் முதலாச் செய்யேக்க இருட்டுக்க வெளிச்சம் வராத மாதிரிப் பாத்துக் கொள்ளுவம். பிறகு பழகீட்டுது எண்டால் அவள் பெரிசா என்ர வயிறக் கவனிக்க மாட்டாள். அதுக்கிடேலை ஏலுமெண்டா ஜிம்முக்குப் போய் வயிற இறுக்கிக் கொள்ளலாம். இனிமேல் சோத்தைக் கொஞ்சம் குறைக்க வேணும். கௌரி சொன்னாலும் கேக்கமாட்டாள் எந்த நாளும் கடமைக்கு ஒரு சோத்தை அவிச்சு வைச்சிருப்பாள்.
காந்தனுக்கு திடீரென்று நெஞ்சுக்குள் ஏதோ செய்தது. கௌரியின் மேல் அவனுக்கும் அன்பு நிறையவே இருக்கிறது. ஆனால் காதல், காமம் என்பது ஏனோ அவனுக்கு அவளைக் காணும் போது எழுவதில்லை. கொளரி கூட தான் ஒரு நல்ல அம்மாவாக இருப்பதைத் தவிர வேறு ஒன்றிலும் அக்கறை காட்டவில்லை. காமம் உச்சத்துக்கு ஏறும் சில இரவுகளில் ஒரு பெண் உடலில் அதை தீர்க்க வேண்டிய கட்டாயத்தால் அவன் இரவு வேளையில் கௌரியை அணைப்பதுண்டு. கௌரி காந்தனின் பசிக்குத் தீனி போடுவது தன் கடமை என்று எண்ணி கெதியாக முடித்துக் கொண்டால் கெதியாக நித்திரை கொள்ளலாம் என்ற எண்ணத்தோடு வெறும் மரக்கட்டையாய் இயங்குவாள். இரண்டு இயந்திரங்கள் எதையோ செய்து முடித்து விட வேண்டும் என்பதுக்காய் அவசரமாக இயங்கும்.
இந்த நிலை காந்தனுக்கு வெறுப்பைத் தர, அதன் பின்னர் தொடர்ந்த ஒவ்வொரு தழுவலிலும் மனதில் வேறு ஒரு பெண்ணை மனப்பிரமை செய்யத் தொடங்கினான். இது அவனின் குறியை விறைக்கப் பண்ணவும், இயக்கத்தை கெதியாக முடித்துக் கொள்ளவும் உதவியாக இருந்தது. தொடக்கத்தில் குற்ற உணர்வை அது கொடுத்தாலும், பின்னர் அது பழக்கப்பட்ட ஒன்றாகி விட்டது. காலப்போக்கில் அது கூட அவனுக்கு பிடிக்காத ஒன்றாய்ப் போய் உடல் உறவு என்ற ஒன்றிலிருந்து விலகி நிம்மதியா நித்திரை கொண்டால் போதும் என்ற நிலை வந்துவிட்டது. வேலை முடிய சில நண்பர்களுடன் பாருக்குச் சென்று ரெண்டு பியர் குடித்து விட்டு வீட்டிற்கு வந்து சாப்பிட்டு விட்டுப் படுத்தால் செக்ஸ் பற்றிய நினைவு அவனுக்கு எழுமலேயே இருந்து விடும். வயது போய் விட்டது. இது இயற்கை என்று நம்பியிருந்தவனுக்கு வேலையிடத்தில் அம்பதுகளில் இருக்கும் நண்பர்கள் நகைச்சுவையாகத் தமது காதல் வாழ்க்கை பற்றி அலசும் போது தனக்கு உடலில் ஏதாவது குறை வந்து விட்டதோ என்ற சந்தேகம் எழத் தொடங்கியது. கௌரிக்குத் தெரி;யாமல் நீலப்படங்களை எடுத்துப் பார்த்தான் அவன் உணர்வு கட்டவிழ்த்து விட்டது போல் புடைத்துக் கொண்டு எழத் தொடங்கியது. ஆண்களை விடப் பெண்களுக்கு காம உணர்வு ஏழு மடங்கு கூடுதலாக இருக்கும் என்று எங்கோ வாசித்த ஞாபகம் வர காந்தன் குழம்பிப் போனான். கௌரியும் காந்தனும் உடலுறவில் ஈடுபட்டு பல மாதங்கள் ஆகி விட்டன. நான் இப்படிக் குழம்பித் தவிக்கிறேன் ஆனால் கௌரி நல்ல சந்தோஷமா நிம்மதியாக இருக்கிறாள். கோயிலுக்கு என்று அடிக்கடி வெளியில் போய்விட்டு வருகிறாள். நான் தான் அசடு மாதிரி ஏமாந்து கொண்டிருக்கிறேனோ. காந்தன் காரை ரோட்டுக் கரையில நிப்பாட்டினான். கௌரி நல்லவள். வளந்த பிள்ளைகள் இருக்கேக்க பிழை ஒண்டும் செய்யக் கூடியவள் இல்லை. அவளுக்கு பெரிசா உணர்ச்சி இல்லைப் போல. விரதம் விரதம் எண்டு எப்ப பாத்தாலும் கடவுளின்ர நினைப்பில இருக்கிறதால அவளுக்கு வேற நினைவொண்டும் இல்லை. தானே வார்த்தைகளைப் பொருத்தித் தன் மனதுக்கு திருப்தி தரும் பதில் ஒன்றைக் கண்டு பிடித்து நிம்மதியாகினான். இதுதான் சரி இதைவிட வேறமாதிரி ஒண்டும் இருக்க ஏலாது. இருக்காது.கௌரி என்று வரும் போது “பிழை”, என்றும் தான் என்று வரும் போது “குற்றமில்லை” என்பதற்கான அத்தனை காரணங்களையும் கண்டு பிடித்து நிம்மதி கொண்டான்.
விலகி விலகி இருந்து விட்டு இப்போது நீலப் படங்கள் பார்த்து உணர்சியை மீண்டும் மீட்டெடுத்து இரவு வேளைகளில் கௌரி மேல் கைபோட அவள் தட்டி விட்டு தள்ளிப் படுத்துக் கொண்டாள். அவன் வாய் விட்டுக் கேட்டால் கூட தனக்கு ஏலாமல் இருக்கு, சுகமில்லாமல் நிக்கப் போகுது போல அதால உடம்பை உலுப்பி எடுக்குது எல்லா இடமும் ஒரே நோகுது என்னால இனிமேலும் ஏலாது எண்டு அவள் முற்று முழுதாக விலகிக் கொண்டாள். கடைசியா கௌரியோட அவன் உறவு கொண்ட நாள் நினைவுக்கு வந்த போது மனம் அவமானத்தால் குறுகிப் போய் பழி வாங்கும் மூர்க்கம் அவனுக்குள் எழுந்தது. ஒரு சனிக்கிழமை இரவு குடும்பத்தோட பார்ட்டி ஒன்றுக்குப் போய்விட்டு வந்து, மனம் முழுக்கச் சந்தோஷத்தோடும், உரிமையோடையும் கட்டிலில் படுத்திருந்த கௌரியை கட்டிப்பிடித்த காந்தனை தனக்கு நித்திரை வருகுதென்று தள்ளி விட்டாள் கௌரி. கொஞ்சம் குடிச்சிருந்ததாலையோ, இல்லாட்டி பார்ட்டியில் பல பெண்களோடு நடனமாடி உணர்ச்சி உசுப்பப் பட்ட நிலையில் இருந்ததாலையோ என்னவோ கௌரியின் புறக்கணிப்பை அவன் கணக்கெடுக்காமல் அவளை இறுக்கி அமுக்கி தன் வேகத்தைத் தீரத்துக் கொண்டான். அவள் சத்தம் போடமல் மூக்கை உறிஞ்சும் போது அவன் நித்திரையாய் போயிருந்தான். அடுத்தநாள் நித்திரையால் எழும்பி கீழே வந்த காந்தன், டைனிங் ஹோலில குசினிப் பக்கமா ஒரு கேட்டிண் போட்டு, அம்மாக்கு படியேறக் கால் சரியா நோகுதாம், என்று ஒரு சின்ன கட்டிலோட ஒரு பெட் ரூம் செட்டப்பாகியிருந்ததைக் கண்ட பிறகுதான் அதின் சீறியஸ் அவனுக்கு விளங்கியது. எவ்வளவோ மன்றாடி மன்னிப்புக் கேட்டுப் பார்த்தும் அவள் ஒரு ஞானியைப் போல அவனைப் பார்த்து ஒரு சின்னச் சிரிப்பு சிரித்து விட்டு தன் இரவுகளை அங்கேயே முடித்துக் கொண்டாள். காந்தன் பிள்ளைகளுக்குத் தெரிந்திருக்குமோ என்று முதல்லில் அவமானத்தால் ஒடுங்கிப் போனான். பிறகு காலப்போக்கில தான் குடுத்து வைச்சது இவ்வளவுதான் என்று தன்னைக் கட்டுப் படுத்திக்கொள்ளப் பழக்கிக் கொண்டான். கட்டுப்படுத்த முடியாத இரவுகளில் குற்ற உணர்வோட கையை உபயோகித்தான். எல்லாமே அவனுக்குக் குற்றமாகப்பட்டது. இயற்கையாக நடக்க வேண்டிய ஒன்று தடைப்பட்டு இப்ப தான் ஒரு குற்றவாளியோல கூனிக் குறுகிப் போவதை நினைத்து அவனுக்கு சிலநேரங்களில கோவம் தலைக்கு மேல் ஏறுவதுண்டு. நீலப்படங்கள் பார்ப்பதை முற்றாக நிறுத்திக் கொண்டான். மீண்டும் நண்பர்களோடு பாருக்கு சென்று பியர் குடித்து வீட்டிற்கு தாமதித்து வந்து சாப்பிட்டு விட்டுப் படுப்பதைப் பழக்கப்படுத்திக் கொண்டாலும் கௌரி தன்னை நிராகரிப்பது அவனுக்குள் காமத்தைத் தூண்டச் செய்தது.
உடலின் விந்தை அவனுக்குப் புரியவில்லை. காதல் அற்ற நிலையில் அவ்வப்போது எழும் காமத்தை அடக்க இயந்திரம் போல் இருவரும் இயங்கினோம். அந்த வேளையில் கௌரியின் உடல் மட்டும்தான் அவனுக்குத் தேவையாகியிருந்தது. உருவம் யாராவது ஒரு கவர்ச்சி நடிகையாகவோ, இல்லாவிட்டால் வேலைத்தளத்தில் பார்க்கும் ஒரு இளம் பெண்ணாகவோ இருந்து வந்தது. அப்போது நான் யாருடன் உடல் உறவு கொள்ளுகின்றேன். மனதில் வரிந்து கொள்ளும் அந்தப் பெண்ணுடனா? இல்லை கௌரியுடனா? என்ற கேள்வி அவனுக்கு அடிக்கடி எழுவதுண்டு. பின்னர் அதைக் கூட மனம் விரும்பவில்லை. தானாகவே கௌரியை விட்டு விலகிக் கொண்டான். சரி இனி காமத்தின் தொல்லை விட்டது என்று நிம்மதி கொண்டாலும் தனக்கு வயது போய் விட்;டது அதனால் உணர்வுகள் அடங்கி விட்டன என்ற எண்ணம் அவனுள் எழுந்து மனஉளைச்சலைக் கொடுக்கும். இந்த நிலை தனக்கு மட்டுமா இல்லை நாற்பதுகளில் ஆண்கள் எல்லோருக்குமே ஏற்படும் ஒன்றா? பதில் தெரியாமல் குழப்பம்தான் அவனுக்குள் மிஞ்சிக் கிடந்தது. இளம் வயதில் கௌரியை எப்பிடியெல்லாம் காதலித்தேன். ஆனால் இப்போது அவளை வெறுக்கவில்லை. ஆனால் அவளின் வடிவம் எனக்குள் எந்த உணர்வையும் எழுப்பவில்லை. அதே நிலைதான் கௌரிக்கும் என்று அவனுக்குள் விளங்கிய போத அவள் மேல் கொஞ்சம் கோவம் வந்தது. உடல், உணர்வு, காமம், காதல் என்று எல்லாமே அவனுக்கு விந்தை காட்டும் மர்மர்களாகத் தெரிந்தது.
வேலைத் தளத்தில் சாப்பாட்டு வேளைகளில் அதிகம் தனிமையில், கையில் கிடைக்கும் ஒரு பத்திரிகையோடு நேரத்தைக் கழிக்கும் அவன், தற்போதெல்லாம் தனிமையைத் தவிர்க்க விரும்பியும், காதல், காமம் பற்றி மற்றவர்களின் புரிதலைப் தெரிந்து கொள்ளும் எண்ணத்துடனும் வேற்று நாட்டு ஆண்கள் பெண்களுடன் தனது சாப்பாட்டு நேரத்தைக் கழிக்கத் n;தாடங்கினான். அவர்களின் வக்கிரக் கதைகள் மீண்டும் அவனின் உணர்வுகளை தட்டி எழுப்பி விட்டன.. இது நிரந்தரமான உடல்பசி. வேகம் கூடும் குறையும் ஆனால் மனிதன் இறக்கும் வரை இருந்தே தீரும் என்பதை அவன் புரிந்து கொண்டான். தியானத்தால் மட்டும் இதனைக் கட்டுப்படுத்தலாம் என்று ஒரு புத்தகம் அவனுக்குக் கூறியது. கௌரி தேவரத்தின் மூலம் இதனைக் கட்டுப்படுத்துகிறாள் என்றும் அவனுக்குப் பட்டது.
இப்போது என்ன செய்வதென்று தெரியாத நிலை காந்தனுக்கு. இதைப் பற்றி யாரோட கதைக்கலாம் என்று அவனுக்குத் தெரியவில்லை. கலியாண வயசில் பொம்பிளப் பிள்ளை வளர்ந்து நிற்கும் போது நான் இதைப் பற்றி யாரிடமாவது கேட்டால் சிரிக்க மாட்டார்களா?. அப்ப டிவோர் எடுத்த, பொஞ்சாதி செத்த, இல்லாட்டி கலியாணமே கட்டாத ஆம்பிளைகளெல்லாம் என்ன செய்கின்றார்கள். அவனுக்குத் தெரியவில்லை. யாரிடம் கேட்பது என்றும் விளங்கவில்லை. மருத்த ஆலோசனை பெறலாம் என்று மனம் சொன்னாலும் அதற்கான துணிவும் அவனிடமில்லை. ஆனால் தன்னால் இதற்க்கு மேல் ஏலாது என்ற நிலையில அவன் தவிச்சுக் கொண்டிருக்கும் போது தான் ஆஷா அவன் வேலைத் தளத்திற்கு வந்து சேர்ந்தாள். முதல் பார்வையில் அவனுக்கு ஆஷாவைப் பிடிக்கவில்லை. அவளின்ர உடுப்பும் எடுப்பும். உதுகள் உப்பிடி உடுப்புப் போட்டு அலையிறதாலதான் ஆம்பிளைகளின்ர மனம் அல்லாடுது. தமிழ் பெட்டை அதுவும் தன்ர டிப்பார்மெண்டில என்ற போது காந்தனுக்கு ஆவேசம் வந்தது. ஆஷா வடிவாக இருப்பதும், உடுப்பதும் அவனுக்கு எரிச்சலைத் தந்தது. அவள் உடையில் எப்பவும் பிழை கண்டுபிடிக்க முனைந்து தனது மனதுக்கு திருப்தி தரும் விதத்தில் அதைக் கண்டும் பிடித்து வந்தான். வீட்டில் சாப்பாட்டு மேசையில் தேவையில்லாமல் ஆஷாவை இழுத்துக் கொச்சை படுத்தினான். இவ்வளவுக்கும் வெறும் “ஹெலோ” ஒன்றை மட்டும்தான் அவள் அதுவரை சொல்லியிருந்தாள்.
ஆஷா அவனைக் கடந்து போகும் நேரங்களில் வேண்டு மென்றே காணதுபோல் திரும்பிக் கொள்வான். ஒருநாள், வேலையில் சில சந்தேகங்களைக் கேட்க ஆஷா அவனிடம் வரவேண்டியிருந்தது. உடனே தன்னை முற்று முழுதாக மாற்றிக் கொண்டு அப்போதுதான் அவள் அங்கு வேலை செய்வதே தனக்குத் தெரிந்தது போல் மிகவும் இயல்பாகச் சிரித்த படியே “நீங்கள் சிறீலங்காவா?, எந்த இடம்?, எப்ப வந்தனீங்கள்?” போன்ற கேள்விகளை மிகவும் நட்போடு கேட்டு, “எப்ப உங்களுக்கு சந்தேகம் இருந்தாலும் தயங்காமல் என்னட்ட வாங்கோ, இங்க இருக்கிறதுகள் சரியான எரிச்சல் பிடிச்சதுகள் ஒண்டும் சொல்லித் தராதுகள்” என்று குரலைத் தணித்துச் சொன்னான். அதன் பின்பு தேவையில்லாத காரணங்களோடு அவளிருக்கும் இடத்துக்கு அடிக்கடி போய் வரத்தொடங்கினான். தான் செய்வது சின்னத்தனமாக இருப்பது போல அவனுக்குப் பட்டாலும் அதையும் சரிப்படுத்த தனக்கான காரணத்தைக் கண்டுபிடித்து தன்னைத் தானே சமாதானம் செய்தான். “அது சின்னப்பிள்ளை என்ர மகளின்ர வயசிருக்கும். சும்மா எங்கட ஊர் பிள்ளை எண்ட அக்கறைதான்”. இப்பிடி மனதுக்குள்ள ஒரு சின்னப் புலம்பல்.
ஒருநாள் சாப்பாட்டு நேரம் ஆஷா அவனிடம் வந்து, கிட்டடியில ஏதாவது நல்ல ரெஸ்ரோரண்ட் இருக்கிறதா சாப்பிட, என்று கேட்டாள். உடனேயே குரலைச் செருமி தனக்குத் தெரிஞ்ச அத்தின ரெஸ்ரோறண்டையும் அடுக்கி, இது நல்லா இருக்கும், இதில சாப்பாடு வாயில வைக்கேலாது என்று தான் வகை வகையாக ரெஸ்ரோரெண்டில் சாப்பிடுவது போல கையை அங்கும் இங்கும் ஆட்டி பாதை காட்டினான். “நீங்கள் சாப்பாடு கொண்டு வராட்;டி வாங்கோவன் ஒரு நல்ல ரெஸ்ரோறண்டில போய் லன்ஜ் எடுப்பம்” என்றாள் ஆஷா. காந்தன் முதலில் கொஞ்சம் திடுக்கிட்டு, பிறகு சிரித்த படியே “இல்லை நான் கொண்டு வந்திருக்கிறன் பிறகு ஒருநாளைக்குப் பாப்பம்” என்ற போது அவனின் கைகள் குளிந்து போயிருந்தன. தன்னுடைய பதில் அவனுக்குத் திருப்தியாக இருந்தது. நாற்பது வயதில் படியேறக் கால் நோகுது என்று சொல்லி டைனிங் ஹோலில் கட்டில் போட்டு இரவு ஒன்பது மணிக்கே தேவராப் புத்தகத்தை கையில் பிடித்து முணு முணுக்கும் கௌரி தனக்கு மனைவியாய் வந்திருந்தாலும் தன் மனம் அலையவில்லை என்று தன்மீதே அவன் பெருமை கொண்டான். ஆஷா “ஓகே” என்று விட்டுப் போய் விட்டாள். காந்தன் அங்குமிங்கும் பார்த்து விட்டுத் தன்னைக் குனிந்து பார்த்தான். அவனுடைய சேட் கொஞ்சம் கசங்கியிருப்பது போலவும பாண்ஸ்சிற்கு அவ்வளவாக பொருத்தாதது போலவும் இருந்தது. அதற்குப் பிறகு அவசரமாக ஆறு சோடி உடுப்பு வாங்கிவிட்டான். இரண்டு தரம் ஆஷாவோட சாப்பிடவும் போய் வந்தான். ஒரே வேலைத்தளத்தில் வேலை செய்யும் இரண்டு பேர் கஸ்சுவலாக சாப்பிடப் போகின்றார்கள். தன் மனதுக்கு சமாதானம் சொல்ல அவன் கண்;டுபிடித்த வசனம் இது. காந்தனின் நடையில் இப்போது ஒரு துள்ளலும், கதையில் கொஞ்சம் அவசரமும் கலந்து கொண்டது.
இப்ப பிள்ளைகள் என்ன கேட்டாலும் கேள்வி கேட்காமல் வாங்கிக் குடுக்கிறான். தனக்குள் இருக்கிற குற்ற உணர்வைப் போக்க தான் பிள்ளைகளுக்குக் குடுக்கும் லஞ்சம் அது என்று அவனுக்கு விளங்கினாலும், அதை மறுத்தான். பிள்ளைகளுக்குத் தேவையிருக்குது அதால கேக்கின்றார்கள் நான் உழைக்கிறேன் வாங்கிக் குடுக்கிறேன். அவ்வளவுதான். “வேலையிடத்தில புறொமோஷன் ஒண்டு கிடைக்கும் போல இருக்கு அதால கொஞ்சம் நீட்டா இருக்க வேணும் நேரத்துக்குப் போக வேணும், லேட்டானாலும் நிண்டு வேலைய முடிச்சிட்டு வரவேணும்” என்று ஒருவரும் கேட்காமலே சாப்பாட்டு மேசையில் அடிக்கடி சொல்லத் தொடங்கினான்.
இப்பவெல்லாம் கௌரி தனிக்கட்டிலில்ல கீழே படுக்கிறது அவனுக்குச் சாதகமா இருந்தது. இரவு வேண்டி நேரம் வரை ஆஷாவோட கற்பனையில் சல்லாபிக்க முடிந்தது. தலாணியை எடுத்து ஆஷா, ஆஷா என்று அளைய முடிந்தது. “ஒரு நல்ல இங்லீஷ் படம் வந்திருக்கு உங்களுக்கு ரைம் இருந்தா வெள்ளிக்கிழமை இரவு போவமா?” என்று ஆஷா அவனைக் கேட்ட போது காந்தனின் துடைகள் இரண்டும் நடுங்கி ஆடியது. இது “அது”தான் என்ற முடிவை அவன் அப்போதுதான் நிச்சயம் செய்து கொண்டான். “வெள்ளிக்கிழமையா..” என்று இழுத்து யோசித்து.. தான் அதிகம் யோசித்தால் ஆஷா வேண்டாம் என்று சொல்லி விடக் கூடும் என்ற பதட்டத்துடன். “ம்..எனக்கு ஒரு வேலையுமில்லை.. அக்ஸ்சுவலி.. அண்டைக்கு கௌரியும் பிள்ளைகளும் கோயிலுக்குப் போகீனம்.. நான் ப்ரியா இருப்பன்.. ப்ரெண்ஸ் ஆரேடையாவது எங்கையாவது போகலாம் எண்டு நினைச்சிருந்தனான்.. லுக் இப்ப நீங்களாவே கேட்டிட்டீங்கள்.. நான் வாறன்” என்றான்.. ஆஷா “தாங்க்ஸ்” என்று விட்டுப் போய் விட்டாள். தான் கொஞ்சம் கூடுதலா வழிந்து விட்டது போல் அவனுக்குப் பட்டது. எவ்வளவு வடிவாப் பொய் சொல்லுறன் என்று தன் மேல் பெருமை கொண்டான். அவன் மனதில் படம் பார்க்கும் அந்த வெள்ளி இரவு படமாய் விரிந்தது. படம் பார்க்கும் போது அவளின் உடம்பில் தான் முட்டாத மாதிரி இருக்க வேணும். ரிக்கெட் தான் தான் எடுக்க வேணும். குடிக்க, சாப்பிட ஏதாவது வாங்க வேணும். இங்கிலீஸ் படமெண்டா கட்டாயம் ஏதாவது ஏடா கூடமா காட்சி வரும் அந்த நேரம் நெளியாமல் நல்ல இறுக்கமா இருக்க வேணும். படம் முடிய சாப்பிடப் போகக் கேக்கலாம். கம் பக்கெட் ஒண்டு வாங்க வேணும். ஒரு வேளை அவளா கைய கிய்யப் போட்டால் என்ன செய்யிறது. அவனுக்கு உடம்பு கூசியது. அந்தக் கூச்சம் சுகமாக இருந்தாலும் பயமா இருந்தது. அவசரப்பட்டு இடம்கொடுத்து பிறகு ஏதாவது பிரச்சனையில மாட்டீட்டா. திடீரெண்டு அவனுக்குப் பயம் வந்தது. வடிவா இளமையா இருக்கிறாள். எதுக்காக என்னோட இப்பிடிப் பழகிறாள். காசு கீசு அடிக்கிற யோசினையோ? இல்லாட்டி வீக்கான பெட்டையாக்கும், உப்பிடி எத்தின பேரோட பழகீச்சோ.. வேலையெண்டு போற போற இடமெல்லாம் ஒண்டை வைச்சிருக்குமாக்கும். ஏதாவது வருத்தம் இருந்து எனக்கு வந்திட்டா.. இவ்வளவும் அவனின் மனதுக்குள் உருண்டாலும்.. எல்லாத்தையும் தள்ளி விட்டு, என்னை அவளுக்குப் பிடிச்சிருக்கு அதுதான் உண்மை. வேற ஒண்டுமில்லை. வேற ஒண்டாவும் இருக்க ஏலாது என்று முற்றுப்புள்ளி வைச்சான். எனக்கும் அவளைப் பிடிச்சிருக்கு.
வெள்ளிக்கிழமை வேலை முடிய ஆஷா அவனைக் கூட்டிக்கொண்டு “புளோர்” சினிமாக்குள் நுழைந்தாள். சனம் மிகக் குறைவாகவே இருந்தது. ஆஷா வேணுமென்றே சனமில்லாத தியேட்டரைத் தெரிவு செய்திருக்கிறாள் என்று காந்தனுக்குப் பட்டது. அவன் முகம் சிவந்து உணர்வுகள் அல்லாடத் தொடங்கியது. இந்த அளவிற்கு வந்தாகிவிட்டடது. இனி நிச்சயமாக அடுத்தது “அது” வாகத்தான் இருக்கும். அதுக்காக அவன் எவ்வளவு காசோ, நேரமோ செலவிடத் தயாராகவிருந்தான். தனக்கு கௌரிமேல் காதல் இ;ல்லாமல் போய் விட்டதை நினைக்கும் போது அவனுக்கு வேதனையாகவிருந்தாலும் தான் தொலைத்து விட்டதாக நினைத்திருந்த இளமை திரும்பிவந்துவிட்டதென்பதை நினைக்கும் போது வாழ்கை என்பதே அனுபவிப்பதற்காகத்தான் அதை அனுபவிப்பது குற்றம் அற்றது என்று தன்னைத் தேற்றிக் கொண்டான்.
ஆஷா படத்திற்கு டிக்கெட்களை எடுத்து விட்டு படம் தொடங்க நேரம் இருப்பதால் கோப்பி குடிக்கலாம் என்றாள். கோப்பி குடித்த படியே பல கதைகளையும் கதைத்துக் கொண்டிருந்தவள் தான் தனியாக ஒரு அப்பாட்மெண்டில் இருப்பதாகவும் ஒரு நாளைக்கு கௌரியையும் பிள்ளைகளையும் கூட்டிக்கொண்டு தன்னுடைய அப்பாட்மெண்டிற்கு சாப்பிட வரும் படியும் கேட்டாள். காந்தன் மனதுக்குள் சிரித்துக் கொண்டான். தான் தனியாக இருப்பதைச் சொல்லி என்னை அங்கே சாப்பிடக் கூப்பிட விரும்புகிறாள், அதை நேரடியாகச் சொல்லக் கூச்சப்பட்டு குடும்பத்தோடு வரும்படி கேக்கிறாள். நல்ல கெட்டிக்காறிதான் என்று நினைத்துக் கொண்டான். காந்தன் மௌனமாக இருந்தான். ஆஷா கோப்பியைக் குடித்த படியே அங்குமிங்கும் பார்த்துக் கொண்டிருந்தாள். பிறகு ஒரு பெருமூச்சை விட்ட படியே “எனக்கு இப்ப முப்பத்திரெண்டு வயசாகுது என்ர வாழ்கைய எப்பிடி அமைச்சுக் கொள்ள வேணுமெண்டு எனக்குத் தெரியும்தானே, நான் முந்தி அண்ணா அண்ணியோடதான் இருந்தனான். பிறகு ஒத்து வரேலை அதால தனிய ஒரு அப்பாட்மெண்ட் எடுத்து இருக்கிறன்” என்றாள். காந்தன் சின்னதாகச் சிரித்தான் இதற்கு என்ன சொல்வது என்று அவனுக்குத் தெரியவில்லை. ஆஷாவே தொடர்ந்தாள். “அவேலுக்கு நான் கலியாணம் கட்ட வேணும் பிள்ளைப் பெறவேணும், அவேலில பிழையில்லை எங்கட ஆக்களுக்குத் இதைத் தவிர வேற என்ன தெரியும்” என்றாள் அலுப்போடு. காந்தனுத்தான் தான் ஏதாவது பிழையாகச் சொல்லி விடுவேனோ என்ற பயம் வர அதே சின்னச் சிரிப்பைத் தொடர்ந்தான். “நான் நினைக்கேலை நான் கலியாணம் கட்டுவனெண்டு, லிவிங் டு கெதர் இஸ் ஓக்கே வித் மீ.. ஆனால் எனக்கு நல்லாப் பிடிச்ச ஆளா இருக்கோனோம் அதுக்குத்தான் வெயிட்டிங்” என்றாள் சிரித்த படியே..காந்தனுக்குக் குழப்பமாக இருந்தது.. தான் என்ன சொல்ல வேண்டும் என்ற தெளிவு அவனுக்கு வரவில்லை. ஆனால் தன் முகத்தில் மாற்றம் வருவது அவனுக்கு விளங்கியது. அதை அவள் கவனித்து விடக்கூடாது என்பதில் கவனமாகவிருந்தான். கதையை வேறு பக்கம் திருப்ப “படத்துக்கு இன்னும் எவ்வளவு நேரமிருக்கு” என்றான். ஆஷா நேரத்தைப் பார்த்து விட்டு “அரை மணித்தியாலத்துக் கிட்ட இருக்கு வேணுமெண்டா உள்ள போயிருப்பம்” என்றாள்.உள்ளே அங்கொன்றும் இங்கொன்றுமானச் சிலர் இருந்தார்கள். இருந்தார்கள். “என்ன படம் இது சனத்தைக் காணேலை” என்றான் காந்தன் சந்தேகத்தோடு.“ஓ இது ஹொலிவூட் படமில்லை தியேட்டர் நிரம்பிறதுக்கு, இது ஒரு டொக்குமென்ரி, உங்களுக்கும் பிடிக்குமெண்டு நினைக்கிறன்’ ச் என்று தலைய ஆட்டியவள் ‘என்ர ப்ரெண்ஸ் ஒண்டும் வரமாட்டுதுகள் எண்டிட்டுதுகள், என்று விட்டு, “நான்ஜிங்” எண்டு ஜப்பான் சைனாவைப் பிடிச்சு செய்த அநியாயத்தையெல்லாம் டொக்குமென்றியாக்கியிருக்கிறாங்கள்.. நான் ரிவியூ வாசிச்சனான்.. வாசிக்கவே நெஞ்சுக்க ஏதோ செய்துது.. எனக்கு இப்பிடி டொக்குமென்ரீஸ் எண்டா நல்ல விருப்பம்.. அவங்கள் செய்த அநியாயம் கேள்விப்பட்டீங்களோ தெரியாது.. பாத்தீங்கள் எண்டாத் தெரியும்.. எங்கட நாட்டிலையும் இதுதானே நடக்குது.. போரால பாதிக்கப்படுறது பொம்பிளைகளும் குழந்தைகளும்தான்.. நினைச்சாலே வேதனையா இருக்கு’ என்றாள். காந்தனுக்கு இந்த நேரத்தில் தான் ஏதாவது சொல்வது தனது கடமை என்று பட்டது. ‘அதை நினைச்சாலே சரியான வேதினை தான் ம்.. என்ன செய்யிறது எங்கட கைய மீறின அலுவல் எங்களால கவலைப் படத்தான ஏலும்’ என்றான். கொஞ்ச நேரம் மௌனமாக இருந்த ஆஷா ‘செக்ஸ் எண்டு வந்திட்டா இந்த ஆம்பிளைகளுக்குக்கெல்லாம் கண்மண் தெரியிறேலை..” முகம் சிவக்க சொன்னவள், காந்தன் திடுக்கிட்டதைக் கண்டு தன்னைச் சுதாகரித்துக் கொண்டு “ஐ ஆம் ஸொறி’ என்றாள், பின்னர் தானாகவே ‘இந்த வோர் அதால பாதிக்கப்படுகிற பொம்பிளைகள்.. தீஸ் மென் ஆர் அனிமல்ஸ்’ என்றாள்.. திரும்பவும் தன்னைச் சுதாகரித்துக் கொண்டு 'நீங்கள் ஜென்ரில்மென். நான் மீட் பண்ணின நல்ல சில ஆம்பிளைகளுக்க நீங்களும் ஒராள்.. என்றாள் சிரித்த படியே.. படம் ஆரம்பித்தது.

‘ஒரு சைனீஸ் சிறுமியின் உடைகளைக் களைந்து விட்டு அவளை கதிரையில் கால்களை அகல விரித்து இருக்குமாறு துவக்கைக் காட்டிப் பணிந்த ஜப்பானிய இராணவவீரன் சிரித்துக் கொண்டிருந்தான் திரையில்..’

2008 ஆம் ஆண்டு கனேடிய “கூர்” இலக்கிய இதழில் வெளியான சிறுகதை.

No comments: