Saturday, December 24, 2005

தொடரும் அவலநிலை

போராட்டமும் அதன் அவலநிலையும் என்ற செய்தியைக் கடந்து, தற்போது இலங்கையில் பெண்கள் மேலான பாலியல் வன்முறை என்பது அதிகமாக கட்டவிழ்த்து விடப்பட்டிருக்கின்றது. பாதிக்கப்பட்ட பெண்கள், கொலைசெய்யப்பட்ட பெண்கள், அவர்கள் மேலான அக்கறை, அவர்களுக்கான குரல் கொடுப்பு, ஆர்ப்பாட்ட ஊர்வலங்கள், மனித உரிமைப் போராட்டங்கள் என்பன போய், யார் செய்தார்கள் என்ற கண்டுபிடிப்பில் சிறுபிள்ளைத் தனமான தாக்குதல்கள் மட்டுமே எம்மக்களிடையே எஞ்சி விட்டிருக்கின்றது.
வெறும் விரல் நீட்டல்களோடும், ஒரு சிறு கண்டனக் கூட்டத்தோடும் எம் மக்கள் மௌனித்துத் தம் வாழ்வைத் தொடர மீண்டும் தொடரும் பெண்களுக்கெதிரான வன்முறைகள். வெறும் செய்தியாய் இப்பெண்களின் வாழ்வை நாம் படித்து, முடித்து, அதிர்ந்து மீண்டும் மறந்து போவோம். பெண்களின் பெயர் பட்டியல் நீண்டு கொண்டே போக அதற்கான தீர்வு அறியப்படாமலேயே அமிழ்ந்து போகின்றது.

முன்பு ஒருநாள் கோணேஸ்வரியின் அவலம் கேட்டு அதிர்ந்தது தமிழினம். பின்னர் கவிதை படித்தோம். கலந்தாலோசித்தோம் எல்லாம் காற்றில் மறைய மீண்டும் செய்தியாய் கிரிசாந்தி கதை கேட்டோம். மீண்டும் அதே ஆக்ரோஷம். பதிவுகளாய் செய்திகள் நாலா பக்கமும் பறந்தன. மீண்டும் ஓய்ந்தோம். பின்னர் விஜிகலா, தற்போது தர்சினி. இந்தப் பெயர்களும் சிலகாலத்திற்கு மின்தளங்களையும் செய்தித்தாள்களையும் நிறைக்கும். குரல் கொடுக்கப் பலர் இருக்கின்றார்கள். அதைக் கேட்க யாருமில்லாத அவலநிலையில் தமிழ் மக்கள்.

தொடரும் அவலங்கள்..

1995 ஓகஸ்ட் மாதம் லக்சுமி எனும் பெண் இரண்டு சிங்கள இராணுவத்தால் பாலியல் வன்புணர்ச்சிக்கு ஆளாகியிருக்கின்றார். 1996ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் கிரிசாந்தி குமாரசாமி எனும் இளம் பெண் சிங்கள இராணுவத்தால் பாலியல் வன்புணர்சிக்கு ஆளாகி கொலை செய்யப்பட்டுள்ளார். கந்தசாமி விஜயகுமாரி எனும் கர்பிணிப் பெண் கொழும்பு வைத்தியசாலைக்குச் செல்லும் வழியில் வவுனியாவில் வைத்து இராணுவத்தினரால் தடுத்து நிறுத்தப்பட்டதால் வைத்திய வசதி இன்றிக் கொட்டும் மழையில் மரத்தடியில் குழந்தையைப் பிரசவித்து இறந்து போயிருக்கின்றார். வேலாயுதபிள்ளை ரஜனி எனும் இளம் பெண் 1996ம் ஆண்டு செப்டெம்பர் மாதம் கோண்டாவில் எனும் கிராமத்தில் வைத்து சிங்கள இராணுவத்தினரால் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டுக் கொல்லப்பட்டிருக்கின்றார். 1997ம் ஆண்டு நான்கு குழந்தைகளுக்குத் தாயான கோணேஸ்வரி என்பவர் மீண்டும் சிங்கள இராணுவத்தின் வெறிகொண்ட பாலியல் தாக்குதலுக்கு ஆளாகிக் கொல்லப்பட்டிருக்கின்றார். 1998இல் புஸ்பமலர் எனும் 12 வயதுச் சிறுமியும், 1999இல் புங்குடுதீவைச் சேர்ந்த சாரதாம்பாள் எனும் 29 வயதுப் பெண்ணும் இதே மிருக வெறிக்கு உள்ளாகி இறந்திருக்கின்றார்கள். இப்படியாகப் பெயர் பட்டியலை நீட்டிக்கொண்டே போக..

1996ம் ஆண்டு மனித உரிமை அமைப்பு உறுப்பினரின் கணிப்பின் படி, 150இற்கும் அதிகமான தமிழ் பெண்கள் சிங்கள இராணுவத்தினராலும், பொலீஸ் அதிகாரிகளாலும் பாலியல் வன்புணர்விற்கு ஆளாகிக் கொலை செய்யப்பட்டிருக்கின்றார்கள். இது பதிவு செய்யப்பட்டிருக்கின்றது. அதே வேளை ஆட்சியில் இருந்த அரசியல் வாதிகளும், மனித உரிமை அமைப்புக்களும் குற்றம் செய்யும் இராணுவம், மற்றும் பொலீஸ் அதிகாரிகளைக் கண்டு பிடித்து சட்டத்தின் முன் நிறுத்துமாறு கட்டளை இட்டிருக்கின்றார்கள். மீண்டும் 2000ம் ஆண்டு மார்ச் மாதம் யூ.என் பெண்களுக்கு எதிரான வன்முறையைக் கண்டித்து, வன்முறைக்குக் காரணமான இராணுவத்தையும் பொலி;ஸ் அதிகாரிகளையும் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கும் படி கேட்டுக் கொண்டிருக்கின்றது. பல பாடசாலை மாணவர்கள், பெண்கள் அமைப்புக்கள் என்பன கோணேஸ்வரி, கிரிசாந்தி போன்றோரின் மரணத்தின் பின்னர் கண்டன ஊர்வலங்கள் நடாத்தியிருக்கின்றார்கள். இருந்தும் நடந்ததென்ன 1996ம் ஆண்டில் இருந்து தற்போது 2006ம் ஆண்டிற்குள் புகுந்து விட இருக்கின்றோம். இன்னும் அதே செய்திகள் அதே கண்டன ஊர்வலங்கள் கூட்டங்கள். உலகின் மனித உரிமை அமைப்புக்களும், பெண்களின் மேலான வன்முறைக்கு எதிராகக் குரல் கொடுக்கும் அமைப்புக்களும் செய்தவைதான் என்ன?

யாழ்ப்பாணத்தில் மட்டும் தற்போது 20,000 மேலான பெண்கள் கணவரை இழந்த நிலையில் தனியாக குடும்பப் பாரத்தைச் சுமந்து வறுமைக் கோட்டிற்குக் கீழே வாழ்கின்றார்கள். இவர்கள் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கு உதவும் வகையில் எந்த அமைப்புக்களும் அங்கே இயங்கவில்லை என்று கூறப்படுகின்றது. உள்நாட்டுப் போராட்டத்தால் மனநிலை பாதிக்கப்பட்டு தற்கொலை செய்யும் பெண்களின் தொகையும் கணிசமான அளவு அதிகரித்துள்ளது என்று கூறப்படுகின்றது.

சர்வதேச ரீதியாக உள்நாட்டுப் போராட்டத்தால் இராணுவத்தாலும், போராளிகளாலும் அந்நாட்டுப் பெண்கள் பாலியல் வன்புணர்ச்சிக்கு ஆளாகி வருவது நாளாந்தம் பதியப்பட்டு வரப்படும் ஒன்று. 2004ம் ஆண்டு நவம்பம் மாதம் அம்னெஸ்ரி இன்ரநெஷனல் அமைப்பு பாலியல் பலாத்காரம், கொலை போன்ற குற்றங்களுக்கு மரணதண்டனை எனும் சட்டத்தை கொண்டு வந்திருக்கின்றது என்பதுதான் வேடிக்கை. மனித உரிமையாளர்களும் இன்னும் பெண்களின் மேலான வன்முறைக்கு எதிராகக் குரல் கொடுக்கும் சர்வதேச அமைப்புக்களும் புதிதாக எதையாவது பிரகடனப்படுத்திய படியே இருக்கின்றார்கள். உலகப் போர், உள்நாட்டுப் போர் என்பவற்றால் பெண்கள் பாலியல் வன்புணர்சிக்கு உள்ளாவதும் கொலை செய்யப்படுவதும், மனநிலை பாதிக்கப்பட்டு தற்கொலை செய்து கொள்ளுவதும் முதலாம் உலக போரின் காலத்தில் இருந்து தொடரும் ஒன்று. சட்டங்களும், திட்டங்களும், கண்டன ஊர்வலங்களும், கண்டனச் செய்திகளும் தொடர்ந்து கொண்டே போக அவலமாய், அநியாயமாய், அழியும் பெண்களின் பட்டியலும் தொடர்ந்து கொண்டே போகின்றது.

Friday, December 09, 2005

FYI

Tuesday, November 15, 2005

பெண்கள் - மூன்று திரைப்படங்கள்

அண்மையில் கலாச்சாரம் என்பது எப்படி அதிஉச்ச பாதிப்பைப் பெண்கள் வாழ்வில் ஏற்படுத்தி வந்திருக்கின்றது என்பதைக் காட்டுமுகமாக எடுக்கப்பட்ட மூன்று திரைப்படங்களைப் பார்த்தேன்.

“வோர்டர்” 30களில்; கணவனை இழந்த பெண்களின் வாழ்க்கை முறையைச் சித்தரிக்கும் படம். முக்கியமாக இத்திரைப்படத்தில் பால்யமணம்; செய்து கணவனை இழந்த பெண் குழந்தைகள் ஆச்சிரமத்தில் தமது மீதி வாழ்வைக் கழிக்க வேண்டிய கட்டாயம் என்பது இந்துக்களின் கலாச்சாரத்தில் கடுமையாக இருந்திருக்கின்றது என்பதை எடுத்துக் காட்டுகின்றது.
“மாக்டெலீனா சிஸ்டேஸ்” திரைப்படத்தில் கடந்த காலங்களில் அயர்லாந்து மக்களின் வாழ்க்கை முறையில் தவறிழைக்கும் பெண்களைச் சீர்திருத்தும் முகமாக எப்படிக் கத்தோலிக்க ஆச்சிரமங்கள் இயங்கிக்கொண்டிருந்திருக்கின்றன என்பதை எடுத்துக் காட்டுவதாக அமைந்திருக்கின்றது.
“மாத்ரபூமி” இதுவும் இந்தியாவைத் தளமாக் கொண்டு கள்ளிப்பால் கொடுத்துப் பெண் சிசுக்களை முற்றாக அழிக்கப்பட்டால், பின் வரும் சமுதாயம் அதனை எப்படி எதிர் கொண்டிருக்கும் என்று ஒரு அதீத கற்பனையை ஓட விட்டுப் படமாக்கியுள்ளார் இயக்குனர் மானிஷ் ஜஹா.

தீபா மேத்தா சர்ச்சைகளைக் கொடுக்கும் திரைக்கதைக்குள் அழகியலைப் புகுத்தி எல்லா மட்ட பார்வையாளர்களையும் திருப்திப்படுத்தும் உத்தியைக் கையாளுபவர். வோர்டரில் முக்கிய பாத்திரத்தில் நடிக்கும் லீசா ரேயின் அழகு, திரைப்படக் கதையின் முக்கியத்திற்குத் தேவையற்ற ஒன்றாகும். அவரது அழகும், காதல் காட்சிகளும், திரைக்கதையின் முக்கியத்திலிருந்து பார்வையாளர்கள் விடுவித்துக் கொண்டு அழகியலை ரசிக்கும் நிலைக்குத் தள்ளிச் செல்கின்றது. இது பெண்களுக்கு அன்று இழைக்கப்பட்ட கொடுமைகளை மனதில் பதிக்காமல் ஒரு திரைப்படம் பார்த்த பாதிப்பையே பார்வையாளர்களுக்கு ஏற்படுத்துகின்றது.
அதேவேளை “மாத்ரபூமி” பெண்களுக்கு கலாச்சாரம் என்ற பெயரில் இழைக்கப்படும் கொடுமைகளைப் பார்வையாளர்களின் மனதில் பதிய விட வேண்டும் என்ற ஆர்வம் அக்கறையுடனோ இல்லாவிட்டால் வேறு ஏதும் வியாபார உள்நோக்கத்துடனோ, பெண்ணுக்கு இழைக்கப் படக்கூடிய அதி உச்ச வன்முறைகளைப் படமாக்கி, பார்வையாளர்களுக்கு இரக்கத்திற்குப் பதிலாக ஒருவித சலிப்பையும், அருவருப்பையுமே விட்டுச் செல்கின்றது. திரைக்கதை பல விடைகளற்ற கேள்விகளுடன் தொக்கி நிற்கின்றது. கள்ளிப்பால் சிசுவதைத் தீவிரமாக் கையாளும் கிராமங்கள் சிலவற்றில் காலப்போக்கில் பெண்களே அழிந்து போய் விடும் நிலையில் எப்படி ஆண் சமுதாயம் இதனை எதிர்கொள்கின்றது என்பதே “மாத்ரபூமியின்” கரு. புல யதார்த்த முரண்பாடுகளோடு பெண் என்பவள் வெறும் வேலைக்காறியாகவும் போகப் பொருளாகவுமே பார்க்கப்படுகின்றாள் என்பதை தன்னால் முடிந்த அளவிற்கு வக்கிரமாகப் படமாக்கியுள்ளார் இயக்குனர்.

ஹோலிவூட்டைத் தவிர்த்து அனேக வேற்றுமொழித்திரைப்படங்கள் இயல்பாகக் கதை சொல்லத் தெரிந்தவை. அந்த வகையில் அயர்லாந்தில் பெண்களுக்கு ஏற்பட்ட கொடுமைகளை “மாக்டெலீனா சிஸ்டேஸ்” எனும் திரைப்படம் ஆர்ப்பாட்டமற்று மனதைத் தொடும் வகையில் காட்டியுள்ளது. இத்திரைப்படம் பாலியல்வன்புணர்விற்கு ஆளான இளம்பெண், திருமணத்திற்கு முன்பு குழந்தை பெற்ற ஒரு பெண், ஆண்களைக் கவரும் அழகிய பள்ளிமாணவி ஒருத்தி ஆகியோரின் வாழ்க்கையைச் சுற்றி, இவர்கள் மூவரும் சமூகத்திற்கு ஒவ்வாதவர்களா அவர்கள் குடும்பங்களாலேயே கணிக்கப்பட்டு மாக்டெலீனா கத்தோலிக்க ஆச்சிரமத்திற்கு அனுப்பப்படுவதாகவும், அங்கே அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள, அவமானங்கள் போன்றவற்றையும் கத்தோலிக்க சபையில் தொண்டு செய்யும் போதகர்கள், சிஸ்டர்மார் போன்றோரின் குரூரமான மனோபாவங்கள் போலித்தன்மைகள் போன்றவற்றை அடையாளம் காட்டுவதாக அமைந்திருக்கின்றது. வழமைபோல் ஹொலிவூட் அழகிய நடிகைகள் அழகற்றவர்களாகத் தோன்றாமல் பாத்திரப் பொருத்தம் மிகக் கச்சிதமாக அமைந்துள்ளது.

சமூக நோக்குள்ள கலைஞர்கள் தமது படைப்புக்களில் சமூகச்சீர்கேட்டை எடுத்துக்காட்டும் போது அழகியலுக்கு முக்கியத்துவம் கொடுத்து படைப்பின் முழு நோக்கத்தையும் திசை திருப்பி விடுகின்றார்கள். இது அனேகமாக தெற்காசியப்படைப்புக்களிலேயே காணக்கூடியதாக உள்ளது. முதியோர், குழந்தைகள், பெண்கள் இவர்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகள் படைப்பாக்கப்படும் போது பார்வையாளர்களை அது உளவியல் ரீதியாக மிகவும் தாக்குகின்றது என்பதை படைப்பாளிகள் நன்றாக அறிந்து வைத்திருக்கின்றார்கள். இது அவர்களுக்குப் பணம் பண்ணுவதற்கு ஒரு சிறந்த மூலதனமாகவும் அமைந்து விடுகின்றது. தீபா மேத்தா அதற்குள் அழகியலையும் இணைத்துவிடுகின்றார்.

Monday, November 14, 2005

எனக்கும் ஒரு வரம் கொடு..



குசினி மூலையில் வருபவர்களுக்குத் தேத்தண்ணி போடும் சாக்கில் நேரத்தைக் கடத்திக்கொண்டு நின்றாள் கௌசி. நினைவு மைவிழியையே சுத்திச் சுத்தி வந்துகொண்டிருந்தது. “தலைக்கு வாருங்கோ” எண்டு அண்ணா கூப்பிட்டுவிட ஆயாசத்தோடு மனம் நிறைய தண்ணியை அள்ளி அள்ளி வார்த்தாள் கௌசி “சரி காணும்” கிண்ணியைப் பிடுங்கி அண்ணியின் அக்கா அடுத்த பொம்பிளையிடம் குடுத்தாள்.
கன்னங்கள் சிவக்க முகத்தில வடிந்த தண்ணியை சிரித்த படியே வாங்கிக் கொண்டு, மைவிழி கௌசியின் கைய வருடி விட்டாள். சிலிர்த்த உடம்பு அடங்க முதல் அவளை கட்டிப்பிடித்து ஈரம் சீலையில் ஊறியதும் உணராமல் கொஞ்சிக் கண்கலங்கி “என்ர குஞ்சு” எண்டாள். உருண்ட முகத்தில், விரிந்த கண்களால் கௌசியைப் பாத்து வெட்கத்துடன் சிரித்தாள் மைவிழி.

மைவிழியின் ஒவ்வொரு அசைவையும் பாக்க ஆசைப்பட்டவளாய் அங்குமிங்கும் அலைந்து கொண்டிருந்த கௌசியிடம் “அண்ணி வாறாக்களுக்குப் பாத்துப் பலகாரம் குடுக்கிறீங்களே, அண்ணி வாறாக்களுக்குப் பாத்து தேத்தண்ணி குடுக்கிறீங்களே” கைக் குழந்தையோடும் பட்டோடும் வேர்க்க விறுவிறுக்கப் பறந்து கொண்டிருந்தாள் அண்ணி.

“என்ன கக்காத் துணி தோச்சனீரே” பெட்டைகள் பின்னேர நேரத்தில அரட்டையடிக்க கிணத்தடியில சந்திக்கேக்க கேக்கிற போது கையையும், சட்டையையும் மணந்து மணந்து பாப்பாள். தோள் பட்டையில எப்பவுமே ஒரு புளிச்ச மணம் நிரந்தரமாய் வீசும். கௌசி தலையச் சரிச்சுச் சரிச்சு மணந்து பாப்பாள். ஒருவித சுகம் அவளை அணைத்துக் கொள்ளும். சட்டை திட்டுத் திட்டாய் அங்குமிங்கும் விறைத்துக் கிடக்கும். பிரசவத்தின் முழு மோகனங்களுடனும் அலைந்து கொண்டிருப்பாள் அவள்.

“நல்லா பால் மண்டீட்டாள் ஒருக்கா ஏவறைக்குத் தட்டுறீரே” குழந்தையைக் குடுத்து விட்டுப் போவாள் அண்ணி. நிமித்தி தோளோட சேத்து அணைத்து முதுகை மெல்ல மெல்லத் தட்ட, நெளிந்து தலையத் தூக்கித் தூக்கி மோதி, தோளைச் சூப்பி பெரிதாகச் சத்தமாய் ஏவறை விட, தோள் ஈரமாகத் திரைஞ்ச பால் பின் சட்டையில் வடியும். வாய் துடைத்து இறுக அணைத்துக் கொஞ்ச, அவள் மார்போடு முகம் தேச்சு முலையை வாயால் கௌவ முயலும் குழந்தை “ச்சீ போடி கெட்ட பெட்டை என்னட்டைப் பால் இல்லை, அம்மாட்டக் குடிச்சது காணாதே குடிகாறப் பெட்டை” கன்னத்தில் செல்லமாய் அடிக்க, சின்னதாய் துடித்து வீடிட்டுக் கத்த இறுக அணைத்துக் கொள்ளுவாள்.

“கக்கா இருந்திட்டாள் போல” அண்ணி கை நீட்ட “நான் மாத்திறனே” கட்டிலில் துணி விரிச்சு குழந்தைய நிமித்திக் கிடத்த அது சிணுங்கும். “எண்ட செல்லமெல்லோ, எண்ட குஞ்செல்லோ” சொன்ன படியே முகத்தோடு முகம் தேச்சுக் கொஞ்ச குழந்தை சிரிக்கும்.
“எண்ர செல்லம் சிரிக்குதோ, ஆ.. என்ர ராசாத்தி சிரிக்குதோ” கண்ணுக்குள் பாத்துக் கேட்டபடியே உடுப்பைக் கழற்றி துணிக்குக் குத்தியிருக்கும் பின்னை ஆட்டாமல் கழற்றுவாள். “சீ கக்காப் பெட்டை, என்னடி செஞ்சு வைச்சிருக்கிறாய்?” கேட்டபடியே மூக்கைச் சுளிச்சு துணியை அகற்றி, சின்னத் துவாயை ஈரமாக்கி உடம்பைத் துடைப்பாள். கால்களை அகற்றி பௌடர் போட்டு “இப்பிடியே கிடந்து கொஞ்ச நேரம் விளையாடு காத்துப் படட்டும்” பக்கத்தில படுத்திருப்பாள்.

“சின்னப்பாப்பா எந்தன் செல்லப் பாப்பா
சொன்ன பேச்சைக் கேட்டாத்தான் நல்ல பாப்பா-
சின்னப் பாப்பா எந்தன் செல்லப் பாப்பா

தின்ன உனக்குச் சீனி மிட்டாய் வாங்கித்தரணுமா
சிலுக்குச் சட்டை சீனாப் பொம்மை பலூண் வேணுமா
கண்ணாமூச்சி ஆட்டம் உனக்குச் சொல்லித் தரணுமா
அப்போ கலகலலெண்டு சிரிச்சுக் கிட்டு
என்னைப் பாரம்மா…”

குழந்தை அவள் பாட்டை ரசிச்ச படியே “ங்க ங்க” எண்டு சேர்ந்து பாடும்.

“அண்ணி அண்ணி இஞ்ச ஓடிவாங்கோ” பதறியடிச்சு ஓடிவந்த அண்ணியிடம் மைவிழிக் குட்டி உடம்பு பிரட்டப்பாக்கிறாள்” எண்டு பரவசமாய்ச் சொல்லுவாள். “போடி அடுப்பில கறி, நீ கத்த நான் பயந்திட்டன்.” அண்ணி கொஞ்ச நேரம் நிண்டு பாத்துவிட்டு போய் விடுவாள். “என்னடி குட்டி ஏமாத்தீட்டாய்.. இஞ்ச இப்பிடி இப்பிடித் திரும்பு” எண்டு குழந்தைக்குப் பக்கத்தில் கிடந்து தன் உடம்பை பிரட்டிப் பிரட்டிக் காட்டுவாள். அண்ணா அண்ணியைக் கூப்பிட்டு “இஞ்ச எங்கட கௌசிக் குட்டி உடம்பு பிரட்டுறாள் படம் எடுப்பம் கமெராவைக் கொண்டு வாரும்” முகம் சிவக்க சட்டையை இழுத்து விட்டு எழும்பி இருப்பாள்.

“நடவடி சக்கை மாதிரி இருக்கிறாய்.. உன்ர வயசில எல்லாம் ஓடித்திரியுதுகள்” மைவிழியின் கையைப் பிடித்து எழுப்பி, நிப்பாட்டி தன் கைகளோடு அவள் கைகளைப் பிணைத்து, பின்பக்கமாய் தான் நடந்து சின்னச் சின்ன அடியாய் அவளை நடக்கச் செய்வாள். “என்ர குஞ்செல்லே நடவம்மா.. ஆ.. கெட்டிக்காறி அப்பிடித்தான் அப்பிடித்தான்..” கௌசிக்கு முதுகு பிடித்துக் கொள்வதுதான் மிச்சம். முதலாவது பிறந்தநாளுக்கு மைவிழி நடக்காமல் போனது கௌசிக்கு வெக்கக் கேடாய் இருந்தது. “என்ர அக்கான்ர மகள்.. என்ர அண்ணான்ர மகன்.. பெட்டைகள் சொல்லிக் கொண்டே போவார்கள்..

“கௌசிமாமி அந்த ராஜாக்கதை.. கௌசிமாமி பொரியல் தாங்கோ.. கௌசிமாமி எனக்குக் காச்சல் நான் பள்ளிக்கூடம் போகேலை.. கௌசிமாமி..கௌசிமாமி..”

மைவிழியைக் குளிக்கவார்த்தபடியே “சின்னச் சின்னக் கை, சின்ன மூக்கு, சின்ன வாய்” கௌசி அடுக்கிக் கொண்டு போக “இதென்ன கௌசிமாமி, சின்னப் பாப்பா” தன்ர மார்பைத் தொட்டுக் கேட்டுச் சிரிப்பாள். “போடி கள்ளப் பெட்டை” கன்னத்தைத் தட்டுவாள் கௌசி. “உங்களுக்கு மாதிரி எனக்கும் பெரிசாகுமா” கண்கள் அகல கௌசியின் உடம்பைப் பார்த்த படியே கேட்பாள் மைவிழி. அவளின் உடம்பில் சவுக்காரத்தைத் தேச்ச படியே “ஓம் கொஞ்சம் கொஞ்சமாப் பெரிசாகும், அப்ப மைவிழிக் குட்டி பெரிய பொம்பிளையா வளந்து வளந்து வருவாள்.. கௌசி மாமி மைவிழிக் குட்டிக்குச் சீலை கட்டி, தலையெல்லாம் பூ வைச்சு, நகைகளெல்லாம் போட்டு வடிவா வெளிக்கிடுத்தி விடுவன், மைவிழிக் குட்டி ராசாத்தி மாதிரி இருப்பாள் என்ன?” மைவிழியின் கண்கள் கனவில் மிதக்க ஒரு கணம் எங்கோ சென்று திரும்புவாள். “கனக்க ஆக்களெல்லாம் வருவீனமே.. நிறம்ப பிரசெண்ட் எல்லாம் கிடைக்குமே”, “ம்..போடி உனக்கு பிரசெண்ட்தான் முக்கியம்” அவள் துடையில் அடிப்பாள். “ஆ..ஆ” அழுவது போல் நடிக்கும் மைவிழியின் தலையில்
“ஒரு குடம் தண்ணி – நூறாண்டு
ரெண்டு குடம் தண்ணி – நூற்றிப் பத்தாண்டு
மூண்டு குடம் தண்ணி – நூறு நூறு நூறாண்டு
ஐயோ தண்ணி முடிஞ்சுதே” சோகமாக முகத்தை வைத்துக் கொள்ளுவாள்..

துவாயை உதறி தலையைத் துடைச்சு, உடம்பை சுத்தி நடுங்கும் மைவிழியைத் தன் உடலோடு அணைத்துத் தூக்கி அறைக்குள் ஓடி வந்து, உடம்பைத் தேய்த்துத் துடைத்து, பௌடர் போட்டு, தலைக்கு ஓடிக்கொலோன் பூசி, சுருங்கியிருக்கும் கைகளைத் தன் கையோடு சேர்த்துத் தேச்சுச் சூடாக்கி, பொக்கிள் மேல் வாயை வைத்து ஊதிவிட்டு, மைவிழி கூசி நெழிந்து கலகலவென்று சிரிப்பாள்..


கௌசியின் முதலிரவன்று மைவிழி நித்திரை கொள்ளவில்லை. “எனக்குக் கௌசிமாமியோட படுக்க வேணும்” குரலெடுத்துக் கத்தியவளை இரவிரவாகக் கொண்டு அலைந்ததாய் அண்ணி இப்பவும் சொல்லிச் சிரிப்பாள்.
“கௌசி மாமி ஒருக்கா வீட்டை வாறீங்களே” காலம வெள்ளணை போன் வந்தபோது பயந்து போனாள் கௌசி. “என்னம்மா என்ன நடந்தது” கேட்டவளிடம் “நீங்க இப்ப உடன இஞ்ச வாங்கோ” விசும்பினாள். “என்னடா அம்மா எங்கை? என்ன நடந்தது? சொல்லனம்மா” “அம்மாவும், அப்பாவும் நித்திரை, எனக்கு உங்களோட கதைக்க வேணும்” கௌசிக்கு கொஞ்சம் விளங்கியது, கணவனிடம் சொல்லி விட்டு மனம் குதூகலிக்க “உடன மாமி வாறன் நீங்கள் போய் அறைக்குள்ள இருங்கோ சரியே” அண்ணி எழும்பு முதல்லே மைவிழிக்கு நப்பிண் பாவிக்கச் சொல்லிக் குடுத்தாள் கௌசி.

“பதின்மூண்டு பொம்பிளைகள் வேணும் தட்டுத் தூக்க கூப்பிடுங்கோ நேரம் போகுது” அண்ணியின் அக்கா பெரிய குரலில் கத்தினாள். “இஞ்ச உதில இருந்து கொசிப்படிக்காமல் தட்டுத் தூக்க வரட்டாம் பொம்பிளைகளே போங்கோ” பட்டும், நகையுமாய் ஜொலித்த பொம்பிளைகளைக் கிண்டலாய் கூப்பிட்டு குசினிக்குள் வந்து “இஞ்ச என்ன செய்யிறாய் தட்டுக் கொண்டு வரக் கூப்பிடீனம் போ” அண்ணா சொல்லி விட்டுப் போனான். “கௌசி மைவிழி கூப்பிடுறாள், தன்னோட உங்களையும் வரட்டாம்.. அவளுக்குப் பக்கத்தில தட்டோட வாங்கோ” அழுத மகனைத் தோளில போட்டு ஆத்திய படியே அண்ணி வந்து கையைப் பிடித்து இழுத்தாள். “இல்லை அண்ணி உவனை என்னட்டத் தந்திட்டு நீங்கள் போங்கோ”, “இஞ்ச நேரம் போகுது, மைவிழி உங்களத்தான் வேணுமெண்டு கேக்கிறாள் போங்கோ” பிடிச்சுத் தள்ளாத குறையாச் சொல்லிவிட்டுப் போய் விட்டாள் அண்ணி.
வரிசையாகப் போன பெண்களோடு தானும் சேர்ந்து கொண்ட கௌசியைப் பார்த்து கண்களால் சிரித்துத் தலையாட்டினான் அவள் கணவன். கௌசிக்கு வெட்கமாக இருந்தது. “இண்டைக்கு இரவைக்கு இருக்கு உங்களுக்கு” அவளும் கண்களால் சொல்லிவிட்டுப் போனாள்.

“இந்தாங்கோ பலகாரத்தட்டு, இந்தாங்கோ பழத்தட்டு, இந்தாங்கோ பூத்தட்டு..” தட்டுகளைத் தூக்கித் தூக்கிப் பெண்களிடம் குடுத்துக் கொண்டிருந்தாள் அண்ணியின் அக்காள். கௌசியில் தோள் மேலால் தட்டுகள் பின்னேறிப் போய்க் கொண்டேயிருந்தன. கௌசி மௌனமாக நின்றாள். சுவர்கள் ஒடுங்கி நீள, மூச்சு முட்டுவதுபோல் சுவாசமின்றித் தடுமாறினாள். தலையில் சடைநாகத்துடன், மூக்கு மின்னியும், நெத்திப் பொட்டும், சீலையுமாய் மைவிழி யாரை ஞாபகப்படுத்துகின்றாள். மைவிழி அவளைக் கட்டிப்பிடிச்சு மார்போடு முகம் வைத்துக் கண்கள் கலங்க கைகளை இறுக்கினாள். “நீர் இப்பவும் சின்னப்பிள்ளையில்லை தெரியுமோ? பெரியபிள்ளை மாதிரி ஃபிகேவ் பண்ணும் பாப்பம், மேக்கப்பெல்லே குழம்பீடும்” கையைப் பிடித்து மைவிழியை இழுத்து விட்டாள் லண்டனிலிருந்து வந்திருந்த அண்ணியின் அக்காள்.
தொண்டைக் குழி இறுக, தொடைகள் நடுக்கம் கண்டன. கௌசியின் கால்கள் இயங்க மறுத்தன. பெரிதாய் நாதஸ்வரம் அலறியது. சிரிப்பும் சிங்காரமுமாய் பெண்கள், ஆண்கள், குழந்தைகள், முதியவர்கள்..

எங்கோ காட்டில் தனித்து விடப்பட்டவள் போல் கௌசியின் மனம் பயம் கண்டது. கணவனை இறுக அணைத்து உடலுறவு கொள்ளவேண்டும் போல் வேகம் கொண்டது உடம்பு. உன்னை நான் இறுக அணைத்துக் கொள்கின்றேன். என் கருப்பைக்குள் உன் விந்தைக் கொடு, அது கருக்கட்டி உருப்பெற்றுக் குழந்தையாக மாறட்டும்.. என் அடிவயிறு நோக் காண கால்கள் வலிக்கட்டும். என் வயிற்றைக் காலால் சிசு எட்டி உதைக்கட்டும், என் பெருத்த வயிறுடன் உன் தோள் தாங்கி நெடுந்தூரம் நடந்து வருகின்றேன். பிரவச வலி எனக்கும் வேண்டும். என்னைத் தாங்கு உன்னுடன் பிணைத்துக் கொள்.. உலகின் எல்லா நோவும் என்னைத் தாக்கட்டும்.. என் யோனி கிழித்து உலகை குழந்தை ஒன்று எட்டிப் பார்க்கட்டும்;, என் முலையின் கட்டிப் போன பாலை அது சப்பி உறிஞ்சிக் குடிக்கட்டும்... என் உடலிலிருந்து உதிரம் வழிந்து தெருவெங்கும் ஓடட்டும்.. நானும் தாயாக எனக்கும் ஒரு வரம் கொடு.. எனக்கும் ஒரு வரம் கொடு.. எனக்கும் ஒரு வரம் கொடு..

“தட்டுத் தூக்க ஒரு ஆள் குறையுது கூப்பிடுங்கோ” அண்ணியின் அக்கா குரல் எங்கோ தொலைவில் கேட்டது.

Sunday, November 13, 2005

எமக்கும் இதுதான் ஊர் - நிகழ்வு

வடபுலத்திலிருந்து விடுதலைப்புலிகள் அமைப்பினால் விரட்டியடிக்கப்பட்ட முஸ்லீம் மக்களிற்காகக் குரல் கொடுக்கும் வகையில் 12ம் திகதி ஸ்காபுரோவில் இடம்பெற்ற நிகழ்வின் தொகுப்பும் - குறிப்பும்.

நிகழ்வைத் தொகுத்து வழங்கிய கருமையத்தின் முக்கிய அங்கத்தவர்களில் ஒருவரான தர்ஷன், நல்ல ஒரு இலக்கிய வாசகர், விமர்சகர், அண்மையில் நாடகங்களிலும் நடித்து வருகின்றார். முஸ்லீம் மக்களின் வாழ்வின் அவலத்தை நினைவு கூறும் விதமாக கவிதை ஒன்றைப் படித்து நிகழ்வை ஆரம்பித்து வைத்தார். தொடர்ந்து பதினைந்து வருடத்திற்கு முன்பு இடம்பெற்ற ஒரு சம்பவத்தை, எதற்காக இப்போது தூக்கிப் பிடித்து நிகழ்வு வைக்கின்றார்கள் என்ற சில பொதுமக்களின் புறுபுறுப்பிற்கும், முழக்கம் பத்திரிகை வெளியிடப்பட்ட அலசலுக்கும் பதில் சொல்லும் வகையில், ஐம்பது வருடத்திற்கு முன்பு ஜேர்மனிய சர்வாதிகார ஆட்சியில் நாசிகளால் அழிக்கப்பட்ட லட்சக்கணக்கான யூதர்களை எப்போதும் உலகம் நினைவு கூறும், அதே போல் பதினைந்து வருடத்திற்கு முன்பு தமது சொந்தமண்ணிலிருந்து தூக்கி எறியப்பட்ட முஸ்லீம் மக்களை மனிதாபிமானம் உள்ள எந்த மனிதனும் நினைவு கூறுவான் என்றும் கூறினார்.

குறிப்பு – முஸ்லீம் மக்கள் தாம் பிறந்து வளர்ந்த மண்ணிலிருந்து தூக்கியெறியப்பட்டு பதின்நான்கு வருடங்கள் ஆகிவிட்டன. அவர்கள் புத்தளத்தில் தம்மால் முயன்றவரை சந்தோஷமாக வாழத்தொடங்கிவிட்டார்கள் இனி எதற்காக இதனை தூக்கிப் பிடித்து திடீரென்று நிகழ்வு நடத்துகின்றார்கள். முழக்கம் பத்திரிகையின் அங்கலாய்ப்பு இது.

இந்தப் பத்திரிகையின் ஆசிரியர் தனது சொந்தநாட்டிலிருந்து துரத்தியடிக்கப்பட்டு கிட்டத்தட்ட இதே காலஅளவு இருக்கலாம். இன்றும் தனது பத்திரிகையில் தமிழ்காக்கப் பெரிதும் போராடிக்கொண்டிருக்கின்றார். தமிழீழம் கிட்ட வேண்டும் என்பது பற்றி மிகவும் சிரத்தையுடன் செய்திகள் வெளியிட்டு வருகின்றார். கனடாவில் தன்னால் முயன்றவரை சந்தோஷமாக வாழ்ந்து வரும் இவர் போன்றவர்கள், இனியாவது ஈழம், மொழி, மண் என்ற பேச்சை விடுத்து கனேடியச் செய்திகளில் கவனம் செலுத்துதல் சாலச்சிறந்தது.
சரி இத்தனை வருடம் மௌனம் சாதித்து விட்டு எதற்கு பதினைந்து வருடத்தின் பின்னர் திடீரென்று? இந்தக் கேள்வி எனக்குள்ளும் எழுந்ததுதான்.

நிகழ்வில் உரையாற்றிய கற்சுறா முஸ்லீம் மக்களின் அவலங்கள் கணிசமான அளவில் பதியபடவில்லை என்றும், அன்று முஸ்லீம் மக்களின் அவலத்தைத் தனது எழுத்தில் கொண்டு வந்த வ.ஐ.ச ஜெயபாலன், இன்று அதற்கு எதிர்மாறான கருத்துக்களை எழுத்தில் வைக்கின்றார் என்று ஆதாரங்களுடன் எடுத்துக் காட்டினார். தொடர்ந்து ஒட்டாமடி அரபாத், இளையஅப்துல்லா, றாஷ்மி, சோலைக்கிளி போன்ற சில எழுத்தாளர்களும், தாயகம், சரிநிகர், தேடல், எக்சில், போன்ற சில சஞ்சிகைகளும் மட்டுமே முஸ்லீம் மக்களின் அவலங்களுக்காகக் குரல் கொடுத்திருக்கின்றார்கள என்றும் கூறினார்.
கனேடியச் சூழலிலிருந்து கொண்டு, ஈழத்தில் இடம்பெற்று வரும் அராஜகமான போராட்டித்திற்கு எதிர்குரல் காட்டியவர்கள் பலர். இவர்களில் சிலர் காலப்போக்கில் “கொள்கை மாற்றம்” கொண்டும், இன்னும் சிலர் விரக்தியின் பேரிலும், இன்னும் சிலர் வேறுநாட்டங்களினால் விலகி தாமும் ஏதோ செய்வதாய் ஜாலம் காட்டிக்கொண்டும் இருக்கின்றார்கள். இருந்தும் தனது சிறுகதைகள், கவிதைகள், கவிதா நிகழ்வு, நாடகம் போன்றவற்றால் அன்று தொடக்கம் இன்று வரை மனிதக்கொலைக்கு எதிராகவும், முஸ்லீம் மக்களின் அவலத்துக்காகவும் குரல் கொடுத்து வரும் எழுத்தாளர் சக்கரவர்தியை எப்படி கற்சுரா குறிப்பிட மறந்தார்? எழுத்தாளர் சக்கரவர்தி ஒரு தனி மனிதனாக அன்று எக்சிலில் தொடங்கி இன்று கருமையத்தின் முக்கிய உறுப்பினராக இருந்து கொண்டும் தனது கொள்கையில் எந்த மாற்றமும் இன்றி, விட்டுக்கொடுப்பு இன்றி மனிதக்கொலைகளுக்கு எதிராகக் குரல் கொடுத்து வருபவர். எனவே பதினைந்து வருடத்தின் பின்னர் திடீரென்று ஏன்? என்று சக்கரவர்தியை பார்த்துக் கேட்டுவிட முடியாது.

முன்னாள் காங்கிரஸ், தமிழரசுக்கட்சிகளின் உறுப்பினர், இடதுசாரியும் என்று தன்னை அறிமுகம் செய்து கொண்ட அடுத்த பேச்சாளர் நடராஜான் படுகொலை செய்யப்பட்ட கோப்பாய் கல்லூரி அதிபர் நடராஜா சிவகாட்சம் அவர்களையும், யாழ்மத்தியகல்லூரி அதிபர் இராஜதுரை அவர்களையும் நினைவு கூர்ந்தார். அதிபர் இராஜதுரை தனது மாணவன் என்றும் அழிந்து நிலையில் இருந்து யாழ்மத்தியகல்லூரியைக் கட்டி எழுப்பி யாழ்ப்பாணத்து மாணவர்களுக்கு கல்வியை வழங்க முனைந்த ஒரு நல்ல மனிதரைக் கொன்றதன் காணரம் என்ன? என்று குரல் தழுதழுக்கக் கேள்வி எழுப்பினார். இரண்டு அதிபர்களின் படுகொலையின் பின்னர் ஊடகங்கள், அதிபர் நடராஜாவிற்குக் கொடுத்த கவனத்தை அதிபர் இராஜதுரைக்குக் கொடுக்கவில்லை இதற்கு சாதியம் ஒரு காரணமாக இருக்கலாம் என்றும் கூறினார். தொடர்ந்த இவர் உரையில் என் தலைவர் ஆனந்தசங்கரி என்று விழித்த போது கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது. டக்ளஸ் தேவானந்தா, கருணா, ஆனந்தசங்கரி போன்றோரை அழிக்கும் வரை விடுதலைப்புலிகள் ஓயமாட்டார்கள் என்றும், எமது நாடு அழிந்து விட்டது, யாழ்ப்பாணத்தில் உயிர்பு இல்லை, இனி ஒரு போர் சூழல் வரப்போவதில்லை, விடுதலைப்புலிகள் இயக்கம் இதனை முற்றாக உணர்ந்து கொண்டு விட்டதால் மிகவும் அவசரமாகப் புலம்பெயர்ந்த தமழிர்களிடம் அடுத்த போர் வரப்போகின்றது என்ற பொய்யான தகவலைக் கூறி பணம் சேகரித்துத் தம் பைகளை நிறப்பிக் கொள்கின்றார்கள் என்றும் கூறினார்.

கன்னிகா திருமாவளவன் பேசுகையில் இனத்துவேசம் நாம் அறிந்த வகையில் நிறம் மதம் மொழி சமுதாயம் நாடு என்று பலவகையாக பரவிக்கிடக்கின்றது, நாம் அறியாத வகையில் ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் சாதிய வெறி இருக்கின்றது. எம்மை அறியாமலேயே இனத்துவேசர்களா நாம் வாழ்ந்து வருகின்றோம், அன்றாட வாழ்க்கையில் எமது பேச்சு வாழ்க்கை முறையிலேயே நாம் இதனை அவதானிக்கலாம் என்றும் கூறினார்.

பலர் தம்மை சிறந்த முற்போக்கிகளாகப் பிரகடணம் செய்யப் பிரயோகிக்கும் வார்த்தையில் முக்கியமானது “நான் சாதி பார்ப்பவன் அல்ல” இவ்வரிகளை ஒரு தலித் பாவிக்க முடியுமா? இவ்வரிகளைக் கொண்டு தன் உயர்சாதியை மறைமுகமாக நிலை நாட்டுகின்றான் யாழ்ப்பாணத்து முற்போக்குத் தமிழன். நான் சாதி பார்ப்பவன் அல்ல, நான் நல்ல முற்போக்குவாதி, நல்ல மனம்கொண்ட பிரஜை. ஆகா!

"நம்மொழி" ஆசிரியர் பாஸ்கரன் முஸ்லீம் மக்களிற்கு ஏற்பட்ட அநியாயங்களை தனது பேச்சில் எடுத்துக்கூறித் தமிழனாய் வாழ்வதற்காகத் தான் தலை குனிந்து நிற்பதாகக் கூறினார்.

ப.அ ஜெயகரன் தேடல் சஞ்சிகையில் முஸ்லீம் மக்களின் இடம்பெயர்வு தொடர்பாக வெளிவந்த கவிதை ஒன்றை படித்துக் காட்டினார்.

கருமையம் அமைப்பின் சார்பாக முஸ்லீம் மக்களின் அவலத்தை முன்நிறுத்தி “கைநாட்டு” எனும் சஞ்சிகை வெளியிடப்பட்டது.

தொடர்ந்த நிகழ்வாக காத்தான்குடியில் இடம்பெற்ற முஸ்லீம் மக்களின் படுகொலையைக் காட்டும் விவரணப்படம் பார்வைக்காகப் போடப்பட்டது.

சக்கரவர்தியின் ஆக்கத்தில் “ஞானதாண்டம்” எனும் குறுநாடகம் இறுதி நிகழ்வாக இடம்பெற்று பார்வையாளர்களின் பாராட்டைப் பெற்றது.

இறுதியாக நிகழ்வு பற்றிய விமர்சனங்கள் வாதங்களுடன் நிகழ்வு நிறைவிற்கு வந்தது.

Tuesday, October 25, 2005

பெண்கள் சந்திப்பும் விமர்சனங்களும்

பெண்கள் சந்திப்பு என்பது மாற்றுக் கருத்துக்களைத் தாங்கி வரும் பெண்களின் கருத்துப் பரிமாற்றம் என்பதுதான் என் கருத்தாக இருந்தது. ஆனால் லண்டனில் இடம் பெற்ற பெண்கள் சந்திப்பில் படிக்கப்பட்ட கட்டுரைக்கள் அனைத்தும் அப்படியாக இருக்கவில்லை. அத்தோடு நவஜோதி எனும் ஒரு பெண்ணின் கவிதைத் தொகுப்பும் வெளியிட்டார்கள். அந்தக் கவிதைத் தொகுப்பை விமர்சித்த பெண்ணின் விமர்சனம் சிறுபிள்ளைத் தனமாக அமைந்திருந்தது. ஒரு இந்திய பெண் மருத்துவரின் பேச்சும் இடம்பெற்றது. அதுவும் மிகவும் சாதாரணமான ஒரு பேச்சாகத்தான் அமைந்திருந்தது. மருத்துவக் குறிப்பம் குழந்தை வளர்ப்பும் பற்றி அறிந்து கொள்வதற்காக நான் கனடாவிலிருந்து லண்டனில் இடம்பெறும் பெண்கள் சந்திப்பிற்குச் செல்லவில்லை. இப்படியான நிகழ்வுகளை அனுமதித்தவர் ராஜேஸ்வரி பாலசுப்ரமணியம்தான். இருந்தும் அதிகமான நிகழ்வுகள் மாற்றுக்கருத்துக்களைக் கொண்ட முற்போக்கான விடையங்களைத் தொட்டுச் சென்றது சந்தோஷமாகவே இருந்தது.

தேனியில் இடம்பெற்ற கட்டுரை வெறும் காழ்ப்புணர்வால் பெண்கள் சந்திப்பிற்கு வந்து சென்ற ஒருவரது பார்வையாகத்தான் எனக்குப் படுகின்றது. அவர் எதிர்பார்க்கும் வெறும் இந்தியமாதர் சங்கம் போன்ற ஒரு சந்திப்பாக இந்தப்பெண்கள் சந்திப்பு அமையாமல் மேலே பல படிகள் சென்று பெண்கள் தயக்கமின்றி சகலதையும் பேசியது அவருக்கு அருவருப்பாகவும் சங்கடமாகவும் இருக்கும் பட்சத்தில் ஒரு மாதர்சங்கத்தை அமைத்து நேரம் போகாமல் ஈயோட்டிக்கொண்டிருக்கும் பெண்களை இணைத்து அழகுக் குறிப்பும் சமையல் கலையும் கலாச்சாரம் காப்பது பற்றியும் கலந்துரையாடலாம்

பெண்கள் சந்திப்பு இடம்பெற்றுக்கொண்டிருந்த வேளை இரண்டாம் நாள் ஒரு பெண் உள்ளே நுழைத்து இடம்பெற்றுக்கொண்டிருந்த பேச்சை இடஞ்சல் செய்யும் வகையில் ஆண்களை ஏன் அனுமதிக்கின்றீர்கள் இல்லை என்று காரசாரமாக வாதாடினார். அவருக்கான பதில் வழங்கப்பட்ட போதும் திருப்திப்படாமல் வெளியில் செல்வதும் திரும்ப வந்து மீண்டும் பேச்சை ஆரம்பிப்பதுமாக இருந்தார். அவரின் பேச்சை நிராகரித்து விட்டு நாங்கள் எமது நிகழ்வைத் தொடர்வோம் என்று எல்லோரும் கருத்துக் கூறி நிகழ்வைத் தொடர்ந்தார்கள். அன்று மாலை இளையஅப்துல்லாவின் துப்பாக்கிகளின் காலம் சிறுகதைத் தொகுப்பு வெளியீட்டு விழாவிற்குப் பெண்கள் சந்திப்பில் கலந்து கொண்ட சில பெண்கள் சென்றிருந்தோம். அங்கு வந்திருந்த ஒரு ஆண் பெண்கள் சந்திப்பில் கலந்து கொண்ட ஒரு பெண்ணை பேச விடாமல் துரத்திவிட்டீர்களாம் என்று கேட்டார் சம்பவங்கள் எப்படித் திரிபு படுத்தப்படுகின்றன என்பதை நான் நேராகக் கண்டு திகைத்தேன். எடுத்து சொன்னால் அந்த ஆண் கேட்பதாக இல்லை.

சந்திப்பின் போது விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த புத்தகங்கள் மத்தியில் திடீரென்று இரண்டு அனாமதேய அறிக்கைகள் பெண்கள் சந்திப்பிற்கு எதிராக வைக்கப்பட்டிருந்தன. அது நிச்சயமாகப் பெண்கள் சந்திப்பில் கலந்து கொண்ட ஒரு பெண்ணினால்தான் வைக்கப்பட்டிருக்க வேண்டும். சந்திப்பில் கலந்து கொண்டு தேனீர் உணவருந்தி சந்திப்பை நடாத்துபவர்களைத் தூற்றி எப்படி இவ்வாறாக நாகரீகமற்ற முறையில் நடக்க முடிகின்றது புரியவில்லை.

ஒரு பெண் கேட்டார் இங்கே கூடிக்கதைக்கின்றீர்கள் புத்தகம் வெளியிடுகின்றீர்கள். இது உங்களுடன் முடிந்து விடப்போகின்றது. மற்றைய பெண்களுக்க இவை போய்ச் சேர்வதற்கான முயற்சிகள் நீங்கள் எடுப்பதில்லை என்று. சிறு கூட்டமாக ஆரம்பித்த பெண்கள் சந்திப்பில் உலகெங்கிலும் இருந்து பெண்கள் கலந்து கொள்கின்றார்கள். பெண்கள் சந்திப்பு மலரில் பல புதிய பெண்கள் எழுதுகின்றார்கள். இவை எப்படிச் சாத்தியமாயிற்று. வீடு வீடாகச் சென்று பெண்கள் சந்திப்பிற்க வாருங்கள் என்று கேட்பதற்கு பெண்கள் சந்திப்பில் சமையல் குறிப்புக் கொடுக்கப்படவில்லை. தேடல் உள்ள பெண்கள் பெண்கள் சந்திப்புபற்றி அறிந்து கொண்டு கலந்து கொள்வார்கள். மலர் பற்றித் தெரிந்து கொண்டு யாரிடமாவது பெற்றுப் படிப்பார்கள். இது தேடலும் ஆர்வமும் உள்ள பெண்களுக்கான தளம் மட்டுமே. பெண்கள் சந்திப்பில் கலந்து கொள்ளும் பெண்களுக்கான வேலைத் திட்டம் இதுவல்லை.

அடுத்து பெண்கள் சந்திப்பு மலர் தரமற்றதாக இருக்கின்றது என்றும். தணிக்கை முறையில் தரமான படைப்புக்களை மட்டும் பிரசுரிக்க வேண்டும் என்ற அறிக்கையும் விடப்பட்டது. எழுதும் பெண்களின் தொகை மிக மிகக் குறைவாக உள்ளது. தற்போது பல புதிய பெண்கள் எழுத ஆரம்பித்துள்ளார்கள். எழுதும் ஆர்வம் வரும் போது, அவர்கள் வாசிப்பு ஆர்வமும் அதிகரிக்கும். இவர்களை ஊக்குவிக்கு முகமாக இவர்களது படைப்புக்கள் பிரசுரிக்கப்படல் வேண்டும் என்ற பலர் கேட்டுக்கொண்டதன் பேரில் எழுத்தில் ஆர்வம் கொண்டு அரசியல் சார்பற்ற எந்தப் படைப்பும் பிரசுரிக்கப்படல் வேண்டும் என்று தீர்மானம் எடுக்கப்பட்டது.

அவதூறான விமர்சனங்களை அசட்டை செய்து விட்டுப் பெண்கள் சந்திப்பு இன்னும் பல ஆண்டுகள் ஆரோக்கியமாகத் தொடரும் என்பது இயங்கிக் கொண்டிருக்கும் பெண்களைப் பார்த்தபோது நான் புரிந்து கொண்டது.

லண்டனில் ஒரு மாலைப் பொழுது

லண்டனில் இடம் பெற்ற 24வது பெண்கள் சந்திப்பு நிகழ்வில் கலந்து கொள்ளும் சந்தர்ப்பம் இந்த வருடம் எனக்குக் கிடைத்தது. பெண்கள் சந்திப்பு முடிந்த பின்னர் மீதி நாட்களில் பல இலக்கியவாதிகளுடன் கழிக்கும் சந்தர்ப்பம் கிடைத்தது. என்னை ஒரு குறும்பட இயக்குனர் என்ற வகையில் லண்டனில் இயங்கிக்கொண்டிருக்கும் ஈழவர கலைப்பிரிவின் அங்கத்தவர்களான பரிஸ்டர் ஜோசப் விமல் சொக்கநாதன் போன்றோர் ஒரு இரவு விருந்து உபசாரத்திற்கு அழைத்திருந்தார்கள். மாலை ஏழு மணியளவில் ஓவியர் கிருஷ்ணராஜா பத்மநாபஜயர் சகிதம் இலங்கையர் ஒருவரின் உணவகத்தில் சந்திப்பதாக ஒழுங்குகள் செய்யப்பட்டிருந்தன.

இந்த விருந்துபசாரத்தில் பரிஸ்டர் ஜோசப், விமல் சொக்கநாதன், கிருஷ்ணராஜா, பத்மநாபஜயர், பிபிசி ஆனந்தி, இளையஅப்துல்ல, போன்றோரும் இன்னும் சில லண்டன் இலக்கியவாதிகளும் கலந்து கொண்டார்கள். குறும்படங்கள் பற்றிய உரையாடல் ஒன்றை உணவருந்தியபடியே நிகழத்;துவோம் என்று ஜோசப் அவர்கள் முன்பே எனக்குக் கூறியிருந்தார்கள். எனக்கும் லண்டன் ஜரோப்பிய நாடுகளில் குறும்படங்களின் நிலை எப்படி இருக்கின்றது என்று அறியும் ஆவல் இருந்தது.

இது ஒரு நிகழ்வாக இல்லாமல் நண்பர்களுடனான குறும்படம் பற்றிய ஒரு உரையாடலாக அமைந்திருக்கும் என்று எண்ணியிருந்தேன், குளிர்பானங்கள் அருந்திய வண்ணம் உரையாடல் ஆரம்பமானது. முதலில் எல்லோரும் தம்மை அறிமுகப்படுத்திய பின்னர் கலந்துரையாட முனைகையில் பிபிசி ஆனந்தி அவர்கள் பெண்கள் சந்திப்பு பற்றியும் அதன் அனுபங்கள் பற்றியும் என்னிடம் கேட்டார். ஜரோப்பாவில் இருந்து பல பெண் இலக்கிய ஆவலர்களும் இந்தியாவிலிருந்து எழுத்தாளர் திலகபாமா இலங்கையில் இருந்து ஓவியை வாசுகி தினக்குரல் நிருபர் தேவகௌரி போன்றோரும் கலந்து கொண்டிருந்தார்கள். இப்படியாக ஒரு கூரையில் கீழ் பல் துறைகளிலும் மிளிரும் பெண்களைச் சந்திக்கும் சந்தர்ப்பம் கிடைத்தது மிகவும் சந்தோஷமாக இருக்கின்றது என்றேன். 24வது பெண்கள் சந்திப்பிற்குப் பொறுப்பாக இருந்த எழுத்தாளர் ராஜேஸ்வரி பாலசுப்பரமணியம் அவர்கள் தன்னையும் அழைத்திருந்ததாகவும் தனக்கு இந்தப் பெண்கள் சந்திப்பில் உடன்பாடு இல்லாததால் கலந்து கொள்ளவில்லை என்று ஆனந்தி கூறினார்.

கனடாவிலிருந்து பெண்கள் சந்திப்பிற்கு விருந்தினராகக் கலந்து கொண்ட நான் குறும்படங்கள் பற்றிய ஒரு உரையாடல் நிகழ்வில் பல ஆண்கள் கலந்து கொண்டிருக்கும் ஒரு விருந்துபசாரத்தில் அதிகம் பெண்கள் சந்திப்புப் பற்றி உரையாட விரும்பாததால் மௌனமாக இருந்தேன். ஆனந்தி தொடர்ந்தார் பெண்கள் சந்திப்பில் கலந்து கொள்ளும் பெண்கள் விடுதலைப்புலிக்கு எதிரானவர்கள் என்றும் அவர்கள் விடுதலைப்புலிகளைத் தாக்கி பெண்கள் சந்திப்பில் உரையாடுகின்றார்கள் என்றும் அதனால்தான் தான் கலந்து கொள்ள விரும்பவில்லை என்றும் கூறினார்.

ஆனந்தியின் இந்த அறிக்கையின் பின்னர் பெண்கள் சந்திப்பில் கலந்து கொண்டிருந்த நான் மௌனமாக இருப்பது தகாது என்றெண்ணி சில கருத்துக்களைக் கூற வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டேன்.
பெண்கள் சந்திப்பில் முக்கியமாக உலகெங்கும் வாழும் தமிழ்ப் பெண்களின் நிலைபற்றியே பேசப்பட்டது. இந்தியப் பெண்களின் பாதிப்பு ஒருமாதிரியாகவும், போர் சு10ழலில் வாழ்ந்து கொண்டிருக்கும் இலங்கைப் பெண்களின் நிலமை ஒருமாதிரியானதாகவும், புலம்பெயர்ந்து வாழ்ந்து கொண்டிருக்கும் பெண்களின் நிலமை இவற்றிலிருந்து முற்றிலும் மாறுபட்டதாகவும் காணப்படுகின்றது. இப்படியாக உலகெங்கும் பரவிக்கிடக்கும் பெண்களின் வாழ்க்கைமுறை, அவர்களுக்கான பாதிப்புக்கள் பற்றிய ஒரு உரையாடலாகத்தான் பெண்கள் சந்திப்பு அமைந்திருந்தது என்றும், தெற்காசியப் பெண்களுக்காய் வேலை செய்யும் ஓவியை வாசுகி தமிழ் பெண்கள் என்று மட்டுமல்லாமல் தெற்காசியப் பெண்களின் நிலை பற்றி விளக்கமாகக் கூறினார் என்றும் ஆனந்தியிடம் நான் கூறினேன். அத்தோடு அரசியல் என்பது பெண்கள் சந்திப்பின் ஒரு பகுதி ஆகாது என்றும், இருந்தும் அரசியலால் ஒரு பெண் அதாவது இலங்கை ராணுவத்தாலோ இல்லாவிட்டால் இயக்கங்களாலோ அது எந்த இயக்கமாக இருந்த போதும் ஒரு பெண் பாதிப்பிற்குட்பட்டால் அதற்கான எதிர் குரலைப் பெண்கள் சந்திப்பில் கலந்து கொள்ளும் பெண்கள் எழுப்புவார்கள் என்றும் கூறினேன்.

ஆனந்திக்கு இந்தப் பதிலும் திருப்தியைத் தரவில்லை. பல நாடுகளிலிருந்தும் பெண்கள் கலந்து கொண்டு வேண்டாத கதை எல்லாம் கதைக்கின்றார்கள் என்று தொடர்ந்தார். இதன் பின்னர் விளக்கம் கூற நான் விரும்பவில்லை. இலங்கையில் நடந்த பல கொலைகளை நியாயப்படுத்துவதாகவும் சிறுவர்கள் போராட்டத்தில் இணைந்து கொள்வது கட்டாயத்தால் அல்ல அவர்கள் விரும்பி தமக்கான ஒரு நல்ல விடிவிற்காய் இணைந்து கொள்கின்றார்கள் என்றும் அந்த விருதுபசாரத்திற்கு முற்றிலும் மாறன விடயங்களை தொடர்ந்தும் பேசிக்கொண்டிருந்தார். பலரும் மௌனமாக இருந்தார்கள். இந்த உரையாடலுக்கு முற்றுப் புள்ளி வைக்க எண்ணி கொலைகளை நான் நிராகரிக்கின்றேன். அதனோடு என்னால் ஒத்துப் போக முடியாது. அது எந்த வகையாக இருப்பினும் சரி. இலங்கை இராணுவம் அதைச் செய்கின்றதா? அதற்கான காரணங்கள் எமக்குத் தேவையில்லை. தமிழ் இயக்கங்கள் செய்கின்றனவா அதற்கான காரணங்களும் எமக்குத் தேவையில்லை. மனிதாபிமானமற்று கொலைகள் மலிந்து விட்டிருப்பது என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது இந்த உரையாடலை இத்தோடு நிறுத்திக் கொள்வோம். தொடர்ந்தால் வீணான வாக்குவாதம் வரும் என்றேன். பரிஸ்டர் ஜோசப் குறும்படங்கள் பற்றி உரையாடுவோம் என்று பேச்சைத் திருப்பினார். இருந்தும் ஆனந்தி தொடர்ந்து எதையோ கூற முயன்று கொண்டிருந்தார்.

அதன் பின்னர் தீபம் தொலைக்காட்சியில் பணி புரியும் எழுத்தாளர் இளையஅப்துல்லா ஈழத்தில் தற்போது சுத்த தமிழில் பேசுகின்றார்கள் ஜஸ் கிரீமை குளிர்க்கழி என்று சிறுவர்கள் எல்லோரும் அழைக்கின்றார்கள் கேட்பதற்குச் சந்தோஷமாக இருக்கிறது என்றார். எனக்கு சிரிப்பு வந்து விட்டது. இப்படியான மொழி மாற்றம் அவசியம் தானா என்று நான் கேட்டேன். ஏன் தமிழை வளர்ப்பதற்கு இப்படியான மொழி மாற்றம் நல்லது தானே என்றார் அந்த எழுத்தாளர். எங்கள் உரையாடலைக் கேட்டுக் கொண்டிருந்த ஆனந்தி லண்டனில் பல சிறுவர்கள் தமிழ் கதைக்கமாட்டார்கள் என்றும் பெற்றோர் அதனைப் பெருமையாகக் கூறுகின்றார்கள் என்றும் கூறினார். புலம்பெயர்ந்த நாடுகளில் தமிழ் கல்வி முறை தவறானதான இருக்கின்றது. சிறுவர்கள் பிரெஞ்ச் ஸ்பானிஷ் போன்ற மொழிகளை பலிய விரும்புகின்றார்கள் ஆனால் தமிழ்க் கல்வி முறை மிகவும் கடினமாக உள்ளதால் அவர்களுக்கு அதில் ஈடுபாடில்லாமல் இருக்கின்றது. திருக்குறளையும் ஆறுமுகநாவலரையும் எதற்காக புலம்பெயர்ந்த சிறுவர்களுக்கு புகுத்துகின்றார்கள் என்று புரியவில்லை என்றும் எனது குழந்தைகளுக்கு நான் இலங்கை இந்தியா போன்ற நாடுகளில் இருந்து வெளிவந்து கொண்டிருக்கும் ஆங்கிய இலக்கியங்களை படிக்க வலியுறுத்துகின்றேன் இது எமது நாடு வாழ்கை முறை பற்றி போதிய அறிவை அவர்களுக்குக் கொடுக்கும் என்றேன். அதற்கு ஆனந்தி ஏன் திருக்குறளை எமது குழந்தைகள் அறிந்து கொண்டால் என்ன என்றார். திருக்குறளை தமிழ் சரளமாகத் தெரிந்த ஒரு குழந்தை அறிந்து கொள்ளலாம். பேச எழுதப் பயிலு முன்பே திருக்குறளைப் புகுத்த வேண்டுமா என்றதற்கு குழந்தைகளுக்குத் தமிழ் தெரியாது என்று கூறிக்கொண்டு ஆங்கிலத்தில் பேசுவதற்குப் பெருமைப்படுகின்றார்கள். தம்மைப் - பொஷ் - ஆகக் காட்டிக்கொள்ள விரும்பும் பெற்றோர்கள் என்றார் முன்நாள் பிபிசியின் தமிழ் செய்திப் பிரிவைச் சேர்ந்த ஆனந்தி அவர்கள். இந்த விருந்து உபசாரம் கிட்டத்தட்ட 3மணித்தியாலங்களுக்கு நீடித்தது என்று கூறலாம். இந்த மூன்று மணித்தியால நேரத்தில் எத்தனை பேர் எத்தனை தமிழ் வசனங்களைப் பாவித்து உரையாடினார்கள் என்று விரல் விட்டு எண்ணிவிட முடியும். முற்று முழுதாக ஆங்கிலத்தில்தான் உரையாடல்கள் நிகழ்ந்தது. நானும் கூடத்தான். அதிலும் முக்கியமாக முற்று முழதான ஆங்கிலத்தில் உரையாடியவர் முன்நாள் பிபிசி வானொலியின் தமிழ் செய்தி வாசிப்பாளர் ஆனந்தி அவர்கள் எனலாம்.

Friday, September 16, 2005

Water

The scriptures say that a widow has three options:

Marry your husband younger brother, burn with your dead husband or lead a life of self-denial.


பல வருட போராட்டத்தின் பின்னர் ரொறொண்டோ சர்வதேச திரைப்படவிழாவின் திறப்பு விழா சிறப்புத் திரைப்படமாக தீபா மேத்தாவின் வோர்டர் திரைபடம் வெளிவந்திருக்கின்றது. மண்டபம் நிறைந்த மூன்று காட்சிகளிலும் பார்வையாளர்களின் மனம் நிறைந்த கரகோசத்தைப் பெற்று தீபா மேத்தாவின் நீண்ட நாள் கனவு நிறைவேறியிருக்கின்றது.

திரைப்படம் வெளிவரு முன்பே பலத்த சர்ச்சைகளுக்குள்ளாகியதால் வோர்டர் திரைப்படம் 38களில் இந்து விதவைப் பெண்களின் வாழ்க்கையைச் சுற்றிய கதை என்று பரவலாக எல்லோராலும் அறியப்பட்டிருந்ததால் பார்வையாளர்களின் எதிர்பார்ப்பும் அதைச் சார்ந்தே இருந்திருக்கும்.
சில கேள்விகளை மனதில் விட்டுச் சென்றிருந்தாலும் தீபா மேத்தாவின் வோர்டர் திரைப்படம் அவரது திரைப்படங்களுள் சிறந்த ஒன்றாக கணிக்கப்படக் கூடியது.

பால்ய விவாகம் செய்த சிறுமி ஒருத்தியின் கணவன் இறக்க அவள் விதவையாக அறிவிக்கப்பட்டு உருவ மாற்றத்தோடு வாரநாசியில் இயங்கிக்கொண்டிருக்கும் விதவை ஆச்சிரமத்தில் தந்தையால் கொண்டு வந்து விடப்படுவதோடு திரைப்படம் ஆரம்பமாகின்றது.

மேற்சட்டையின்றி, வெள்ளைச்சேலை, மழித்த தலை, இறுகிய முகம் என்று பல வயதுகளில் கணவனை இழந்த பெண்கள் பாசி படிந்த அந்த ஆச்சிரமத்திற்குள் பல ஆண்டுகளாக வாழ்ந்து வருகின்றார்கள். இவர்களின் வாழ்க்கையில் இந்தச் சிறுமியின் வரவால் மாற்றங்கள் ஏற்படுகின்றது.
கேள்விகள் அற்று கணவனை இழந்தால் இப்படித்தான் வாழ வேண்டும் என்று பழகிக் கொண்டவர்கள் மத்தியில் முகமறியா தனது கணவனை சிறுவயதில் இழந்து ஆச்சிரமத்தில் வாழ்ந்து வரும் இளம் பெண் (லீசா ரேய்) தலை மழிக்க மறுத்து பிறர் அறியாத வண்ணம் நாய்க் குட்டி ஒன்றைத் தனக்குத் துணையாக்கி சின்னதாகத் தன்னாலான எதிர்ப்பை தெரிவிக்கின்றாள்.
சாஸ்திரத்தில் எழுதி வைக்கப்பட்டதைக் கேள்வி கேட்டல் தகாது என்ற தயக்கத்தில் ஜடமாக வாழ்ந்து வரும் பெண் சகுந்தலா (சீமா பிஸ்வாஸ்), ஏழு வயதில் நடைபெற்ற தனது திருமணத்தின் போது சுவைத்த லட்டின் நினைவுடனே இனிப்புப் பண்டங்களுக்கா ஏங்கும் பொக்கை வாய் மூத்த விதவையும் அவரின் இறப்பும்,
இவர்கள் அனைவரையும் தனது கைக்குள் வைத்து ஆட்டிப்படைக்கும் தலைவியாக பருத்த உடம்பும், மழித்த தலையுமாக இன்னுமோர் கணவனை இழந்த மூதாட்டி இப்படியாக இறுகிய பாத்திரங்களுடன் அசைகின்றது வோட்டர்.

தனது திரைப்படங்களில் விட்டுக்குடுப்புக்களைச் செய்தோ, அல்லது விரும்பியோ கண்ணுக்குக் குளிர்ச்சியான காட்சிகளை இணைக்கும் தீபா மேத்தா எந்த விட்டுக் கொடுப்பும் இன்றி பாசி படர்ந்த கட்டிடமும் தலைமழித்த வெள்ளைச் சேலைப் பெண்களும் என்று வோட்டரை ஓடவிட்டிருக்கின்றார்.
38களில் கணவனை இழந்த பெண்கள் மிகக் குரூரமாக நடாத்தப்பட்டிருக்கின்றார்கள் என்று சொல்ல நினைத்த இயக்குனர் அதைத் திறம்படச் செய்தாரா என்பது சந்தேகமே. அத்தோடு திரைப்படம் அந்தக்காலம் என்பதால் தற்போது அந்த நிலை மாறி விட்டது என்று அர்த்தமல்ல. இன்றும் இந்தியா மட்டிலுமல்ல புலம்பெயர்ந்த நாடுகளிலும் வாழும் ஆசியப் பெண்களில் பலர் கணவனை இழந்ததால் புறக்கணிக்கப்படுவது இடம்பெறவே செய்கின்றது.
கணவனை இழந்த பெண்களின் உயர்ந்த பட்ச அவலநிலையை தீபா மேத்தா படமாக்கியிருப்பது பாராட்டத்தக்கது, இருந்தும் திரைப்படம் சில கேள்விகளை எனக்குள் விட்டுச் சென்றுள்ளது.
வீட்டு வாடகை, சாப்பாட்டிற்கான பணத்தைப் பெற பெண்களை கோயில்களுக்கு அனுப்பி பிச்சை எடுக்க வைக்கும் தலைவி, அதே நேரம் ஊர் பெரியர் ஒருவரிடமும் பெண்களை அனுப்பி அதன் மூலம் பணம் சம்பாதிக்க முனைவதாகக் காட்டப்படும் போது இப் பெண்கள் கருத்தரிப்பதற்கான வாய்ப்புக்கள் சம்பவங்கள் பற்றி எந்த இடத்திலும் காட்டப்படவில்லை.
இது விபச்சார விடுதியில்லை விதவைகள் ஆச்சிரமம் என்று குரல் எழுப்பும் பெண்ணே எந்த எதிர்ப்பும் இன்றி ஊர் பெரியவரிடம் சென்று வருவதும், பின்னர் தான் காதலிக்கும் இளைஞன் அந்தப் பெரியவரின் மகன் என்று அறிந்த போது திருமணம் செய்ய மறுத்துத் தற்கொலை செய்து கொள்வதும் செயற்கையாகத் தனித்து நிற்கும் காட்சிகள்.

ஊர் பெரியவரின் மகனான காந்தீய வாதியாக வரும் நாயகன் ஜோன் ஏப்றகாம் கணவனை இழந்த ஒரு அழகிய இளம் பெண்ணை மணக்க முன்வருகின்றார், ஆனால் அவள் இறந்த போது பெரிதாக அலட்டிக்கொள்ளில்லை. தந்தை மேலிருந்த நம்பிக்கை, மதிப்பு அழிகின்றது. ஊரை விட்டுப் போகின்றார். தீவிர சிந்தனை கொண்ட இளைஞன் ஒருவனை வெறும் சுயநலவாதியாகச் சித்தரிப்பதோடு நிறுத்திக்கொண்டு விட்டார் இயக்குனர்.
சாஸ்திரங்களுக்குக் கட்டுப்பட்டிருந்த சகுந்தலா, நாயகி ஒருவனைக் காதலிக்கின்றாள் திருமணம் செய்ய முடிவெடுத்துவிட்டாள் என்ற போது திடுக்கிடுவதும், அவளை ஆச்சிரமத்தலைவி பூட்டி வைத்த போது மௌனமாக இருப்பதும், பின்னர் தான் தொண்டு செய்யும் சமய தலைவரின் மூலம் விதவைகள் மறுமணம் பற்றிய காந்தியின் உரையைக் கேட்டுத் தெரிந்து கொண்டு கதவைத் திறந்து நாயகியை வெளியே அனுப்பி வைப்பதும், சாஸ்த்திரங்களும் சம்பிரதாயங்களும் எப்படி எல்லாம் பெண்களைச் சிந்திக்க விடாமல் பண்ணிவிடுகின்றன என்பதைக் காட்டுகின்றது.
பெண் விடுதலைக்கும், சாதீய ஒழிப்பிற்கும் பெரியார், க.அயோத்திதாசர், அம்பேத்கர் போன்றோர் குரல் கொடுத்த அளவிற்கு காந்தியின் குரல் ஓங்கி ஒலித்ததா என்பதில் கேள்வியிருப்பினும் திரைப்படம் என்ற வந்து விட்டால் இந்திய மக்களின் விடுதலைக்கும் பெண்கள், தலித்துகளின் விடுதலைக்கும் போராடியவர் என்று காந்தியதைத் தவிர வேறு எவரும் காட்டப்படுவதில்லை என்றாகிவிட்டது.
திரைப்படத்தின் உச்சக்கட்டமாக சிறுமியை ஊர் பெரியவரிம் மூதாட்டி அனுப்பிவிட்டாள் என்று தெரியவந்தபோது சகுந்தலா வெகுண்டு எழுவதும், துவண்டு போய்த் திரும்பிய சிறுமியைத் தூக்கிக்கொண்டு ஆச்சிரமத்தை விட்டு ஓடுவதும், ஊர் ரெயில் நிலையத்தில் உரை நிகழ்த்தி விட்டுத் திரும்பும் காந்தியிடம் இந்தச் சிறுமியையும் அழைத்துக் கொண்டு போங்கள் என்று கதறி அவளை ரெயிலில் ஏற்ற முயன்று தோற்று இறுதியில் காந்தியுடன் ஊர் திரும்பிய நாயகன் சிறுமியை இழுத்து ரயலில் ஏற்றித் தன்னோடு அழைத்துச் செல்வதும் பார்வையாளர்களின் மனதில் நோவை உண்டாக்கிய காட்சிகள்.

விதவைகள் ஆச்சிரமத்தில் வயது போன மூதாட்டிகளின் உருட்டல், அதட்டலைத் தவிர பெரிதாகக் கட்டுப்பாடுகள் இருப்பதாகக் காட்டப்படவில்லை. ஒரு பெண் விரும்பினால் வெளியே போக முடியும் மீண்டும் திருமணம் செய்து கொள்ள முடியும் என்று மிகவும் இலகுவாகக் காட்டப்படுகின்றது. 38களில் மிகக் கடுமையான கட்டுப்பாடுகள் கணவனை இழந்த பெண்களுக்கு இருந்திருக்கின்றது என்பதை அந்தக் காலப்பதிவுகள் காட்டுகின்றன. இத்திரைப்படத்தை இயக்குவதற்காக 2000ஆம் ஆண்டு வாரநாசி சென்ற இயக்குனர் படப்பிடிப்பிற்கு எதிராக நிகழ்த்தப்பட்ட கண்டன ஊர்வலங்கள், அச்சுறுத்தல்கள், எச்சரிக்ககைகளுக்குப் பயந்து படப்பிடிப்பை நிறுத்தியது இன்றும் இந்த அவலநிலை பெண்களுக்கு இருக்கின்றது என்பதைக் காட்டுகின்றது. இது வோட்டர் மூலம் இன்னும் ஆழமாகப் பெண்களின் பாதிப்புக்களைக் காட்டியிருக்கலாமோ என்று எண்ணத் தொன்றுகின்றது.

திரைப்படம் முற்ற முழுதாக இலங்கையில் படப்பிடிப்பு செய்யப்பட்டிருக்கின்றது. இந்தியப் பாதிப்பை அதிகம் தரும் இப்படியான ஒரு அழகிய இடம் இலங்கையில் இருக்கின்றதா?

Friday, July 15, 2005

தமிழ்மணத்தில் இறுதி வார்த்தைகள்..



இளமைக் கொலுவிருக்கும்
இனிமை சுவையிருக்கும்
இயற்கை மணமிருக்கும் - பருவத்திலே
பெண் இல்லாமல் சுகமில்லை உலகத்திலே.

கறுப்பியின் அலுவலகம் ஜீலை கடைசி வாரம் ஸ்காபுரோ எனும் நகரத்திலிருந்து பெரி எனும் நகரத்திற்கு (கிட்டத்தட்ட 100 கிலோ மீட்டர் தொலைவிற்கு) இடம் மாறுகின்றது. எனவே கறுப்பி வேலையை விடவேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றாள்.

இனி என்ன செய்வது? 5நிமிடக்கார் ஓட்டத்தில் அலுவலகத்திற்கு வேண்டிய நேரம் வந்து வேண்டிய அளவு நேரம் தமிழ்மணத்தில் விளையாடி வேண்டிய நேரம் வீட்டிற்குப் போய்க்கொண்டிருந்த கறுப்பிக்கு இனி ஒரு புதிய அலுவலக்த்திற்குச் சென்று கொஞ்சம் சீரியஸாக வேலை செய்வது என்பது எவ்வளவு சாத்தியம் என்று புரியவில்லை.

கொஞ்சம் கண்களைச் சிமிட்டி, முகத்தை அப்பாவியாக வைத்துக் கொண்டு, நான் பேசாமல் "House wife" ஆக இருந்து விடுகின்றேனே என்றால் (இப்போதெல்லாம் ஆண்கள் நல்ல உசாராக இருக்கின்றார்கள்) கணவர் முறைக்கின்றார். எனக்கு ஒரு அலுவலகத்திற்குச் சென்று வேலை செய்யப் பிடிக்கவில்லை. வீட்டிலும் இருக்க முடியாது. என்ன செய்வது என்று தெரியாமல் முழிக்கின்றேன். திரைப்படத்துறை சம்பந்தமாக ஏதாவது படிக்கும் எண்ணமும் உள்ளது. எவ்வளவு சாத்தியம் என்று தெரியவில்லை.

பூமியில் பிறப்பதும்
வானத்தில் பறப்பதும்
அவரவர் எண்ணங்களே
நெஞ்சினில் துணிவிருந்தால் - ஜிக்கு ஜிக்கு ஜிக்கு
நிலவுக்கும் போய் வரலாம் - ஜிக்கு ஜிக்கு ஜிக்கு

அலுவலகத்தில் இருந்து கொண்டு கிடைக்கும் நேரங்களில் தமிழ்மணத்தில் நினைத்ததை எழுதவும், வம்பளக்க முடிந்தது. ஆனால் வீட்டிற்குப் போனால் மின்கணனிப்பக்கம் போவதில்லை. (முக்கியமாக ஏதாவது செய்ய இருந்தால் தவிர). வீட்டில் இருந்தால் தொலைக்காட்சி பார்ப்பதும் வாசிப்பதுவும் மட்டுமே பிடித்திருக்கின்றது. எனவே இந்தக் காரணங்களால் கறுப்பி இனிமேல் அதிகம் தமிழ்மணப் பக்கம் வலம்வரமாட்டாள்.
எனவே தமிழ்மண நண்பர்களிடமிருந்து விடை பெறும் நேரம் வந்து விட்டது என்று நம்புகின்றேன். முடியும் போது நுனிப்புல் மேய்வது போல் பிடித்த தளங்களை ஒருமுறை மேயும் சந்தர்ப்பங்களில் சில பின்னூட்டங்கள் நிச்சயமாக இடுவேன். (முடிந்தால் அவ்வப்போது ஏதாவது எழுத முயலலாம்)

மறைந்த கலைச்செல்வனின் துணைவியார் லஷ்சுமி மீண்டும் நண்பர்களின் உதவியுடன் “உயிர்நிழல்” சஞ்சிகையைக் கொண்டு வர உள்ளார் என்று தெரிந்து கொண்டேன். கறுப்பியின் பல சிறுகதைகள் உயிர்நிழலில்தான் வெளியானது. எனவே தொடர்ந்தும் நேரம் கிடைக்கும் போது உயிர்நிழலுக்கு எழுத வேண்டும் என்றே விரும்புகின்றேன். செப்ரெம்பர் மாதம் இடம்பெறஉள்ள குறும்படவிழாவிற்கான படப்பிடிப்பு படித்தொகுப்பு என்பனவற்றில் தற்போது ஈடுபட்டுள்ளோம். 2006ம் ஆண்டு மேடை ஏற உள்ள நாடகங்களின் ஒத்திகையும் செப்ரெம்பர் மாதம் தொடங்க உள்ளோம். எனவே அனேகமான கறுப்பியின் நேரங்கள் இவற்றுடன் போய் விடும்.

எனவே தோழர்களே நன்றாக இருங்கள். வாழ்வை நன்றாக அனுபவியுங்கள். நிறம்ப வாசியுங்கள், எழுதுங்கள், படம் காட்டுங்கள் குடியுங்கள் சாப்பிடுங்கள் இத்யாதி இத்யாதி.. அனுபவியுங்கள். கறுப்பி உங்களுடன் சண்டை பிடித்திருந்தால் ஒன்றையும் மனதில் வைத்திருக்காதீர்கள். கறுப்பியின் மனது வெள்ளை(கள்ள) மனது. அட்ரா அட்ரா அட்ரா.

My E-mail. thamilachi2003@yahoo.ca
Web - www.nirvanacreations.ca

எல்லோருக்கும் நல்வாழ்த்துக்கள். Love You All

Thursday, July 14, 2005

ஹோபோ வாழ்வு (The Train-Hoppers)



1. உன் வாழ்வை நீயே தீர்மானி, வேறு ஒருவர் தலையிட விடாதே.

2. நீ செல்லும் ஊர்களின் சட்டங்களையும், மக்களையும் மதிக்கப்பழகிக்கொள்.

3. எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் இலயாமையில் உள்ளவரை உபயோகித்துக் கொள்ளாதே. முக்கியமாக சக ஹோபோவை.

4. எப்போதும் வேலை செய். முக்கியமாக மற்றவர்கள் விரும்பாத வேலையை எடுத்துச் செய்யத் தயங்காதே.

5. வேலை கிடைக்காத பட்சத்தில் உன்னிடம் உள்ள கை வேலைத் திறமைகளை உபயோகப்படுத்து.

6. குடித்து, நிதானம் இழந்து எதிர்மறையான உதாரணமாக மற்றைய ஹோபோக்களுக்கு ஒருநாளும் இருக்காதே.

7. இலவசமாகக் கிடைக்கும் பொருட்களை எறிந்து விடாதே, சக ஹோபோக்களுக்கு அவை உபயோகமானதாக இருக்கலாம்.

8. இயற்கையை மதி, நீ உபயோகித்த சுற்றத்தை பயணத்தின் போது சுத்தமாக வைத்துக்கொள்ளப் பழகு.

9. முடிந்தவரை சுத்தமாக இருக்கப் பழகிக் கொள்.

10. பிரயாணம் செய்யும் போது இரயில் ஊழியர்களுக்குத் தொந்தரவு செய்யாமல், முடிந்தால் உதவி செய்.

11. இரயில் தரிப்பு நிலையங்களில் பிரச்சனை உண்டு பண்ணாதே, வர இருக்கும் மற்றைய ஹோபோக்களுக்கு இதனால் இடைஞ்சல்கள் உண்டாகலாம்.

12. நடைபாதைச் சிறுவர்களுக்கு முடிந்தவரை உதவி செய். அவர்களை அவர்கள் குடும்பத்துடன் இணைப்பதற்கு முயற்சி செய்.

13. சக ஹோபோக்களுக்கு உதவியாகவும் நம்பிக்கையாகவும் எப்போதும் இரு. உனக்கும் அவர்கள் உதவி தேவைப்படலாம்.

14. உன் குரலும் உலகிற்குத் தேவை. மறந்து விடாதே. வேண்டிய நேரங்களில் உனது குரலைக் கொடுப்பது உனது கடமை.



இப்படியான சில சுலோகங்களைத் தம்மகத்தே வைத்து இயங்கி வருகின்றது "ஹோபோ" எனும் நாடோடிச் சமூகம். ஜிப்சிகள் என்று ஒரு நடோடிச் சமூகம் போல், இரயில் இடம் விட்டு இடம் பயணித்து வாழ்பவர்கள் ஹோபோக்கள் என்று தம்மை அடையாளம் காட்டுகின்றார்கள். இந்த வாழ்க்கை முறை எப்போது தண்டவாளம் போட்டார்களோ அப்போதிலிருந்து இருப்பதாகக் கூறுகின்றார்கள்.

கனேடியத் தொலைக்காட்சியில் ஹோபோக்கள் பற்றிய ஒரு விவரணப்படம் பார்க்கும் சந்தர்ப்பம் கிடைத்தது. இது வயது வந்தவர்களுக்கு மட்டுமான நிகழ்சியாக அறிவிக்கப்பட்டது. ஹோபோக்களின் வாழ்க்கை முறை ஒரு தவறான செய்தியை இளைஞர்களுக்குக் கொடுத்து விடக்கூடாது என்பதில் தொலைக்காட்சி மிகவும் கவனமாகவே இருக்கின்றது.
சிலர் விரும்பியே ஹோபோ வாழ்வை அமைத்துக் கொண்டாலும், அனேகமாக வீட்டில் இருந்து ஓடிய சிறுவர்களே ஹோபோ வாழ்க்கை முறையில் ஈடுபடுகின்றார்கள். இயந்திர வாழ்க்கை முறையிலிருந்து தம்மை விடுவித்துக் கொண்டு, வட அமெரிக்கா தென் அமெரிக்கா என்று இவர்கள் பயணம் பல நாட்கள், வாரங்கள், மாதங்கள் இரயில் கழிகின்றன. விரும்பிய போது விரும்பிய இடங்களில் கிடைக்கும் வேலையச் செய்து பயணத்தைத் தொடர்வார்கள். எப்போதும் பொருட்களை ஏற்றிச் செல்லும் இரயிலிலேயே சட்ட விரோதமாக இவர்கள் பயணிப்பதால், பயணங்கள் பல இடங்களில் தடைப்பட்டும் போகின்றன. அத்தோடு திசைகள் அறியாது கிடைக்கும் இரயில் பயணம் செய்வதால் இவர்கள் பயணங்கள் பாதைமாறிப் போவதும் உண்டு. அனேக இரயில் நிலைய ஊழியர்கள் இவர்களுக்கு உதவுபவர்களாக இருப்பினும் சிலர் இவர்களை பொலீசுக்குக் காட்டியும் கொடுக்கின்றார்கள். பதினெட்டு வயதிற்குக் குறைந்தவர்கள் ஹோபோக்களாகக் காணப்படும் பட்சத்தில் அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டுக் குடும்ப அங்கத்தவர்களிடம் ஒப்படைக்கப்படுகின்றார்கள். இருப்பினும் இவர்கள் மீண்டும் குடும்பத்தை விட்டு விலகி தம்மைக் ஹோபோ வாழ்க்கையில் இணைத்துக் கொள்பவர்களாகவே இருக்கின்றார்கள்.



ஆண் பெண் வேறுபாடற்று இவர்கள் குளங்களைக் காணும் போது நிர்வாணமாகக் குளிப்பதும், ஒருவர் உடையை ஒருவர் அணிந்து கொள்வதும், பலாத்காரம் அற்று விரும்பியவரோடு விரும்பிய நேரம் உறவு கொள்வதும் என்று தமக்கான சுதந்திரத்தை முழுமையான அனுபவிக்கும் இவர்கள் அனேகம் மதுவிற்கும் போதை மருந்துகளுக்கும் அடிமையாகிப் போவதால் பல சமூகங்கள் இவர்களை ஏற்றுக்கொள்ள மறுப்பதாக்கக் கூறுகின்றார்கள். இருந்தும் இவர்கள் சமூக அமைப்பு அதற்குள் உளன்று கொண்டிருக்கும் மனிதர்கள் பற்றிக் கேலியாகவே பேசுகின்றார்கள்.

தமது வாழ்நாள் முழுவதையும் ஹோபோவாகக் கழித்த பலர் இருக்கின்றார்கள். இடையில் இந்த வாழ்வைத் துறந்து மீண்டும் சமூகத்துடன் இணைந்து கொண்டவர்களும் இருக்கின்றார்கள். இவர்களுக்கு என்றொரு விழா ஓகஸ்ட் 11-15 வரை பிறிட் எனும் இடத்தில் லோவா மாநிலத்தில் நடக்கவிருக்கின்றது. இங்கே அனேக ஹோவாக்கள் கூடுவார்கள். ஒரு கொண்டாட்டமாக அன்று அவர்கள் சந்தோஸித்திருப்பார்கள். ஆனால் அதன் பின்னர் சில்லறை கேட்டால் அந்த ஊர் மக்கள் தம்மேல் காறித்துப்புவார்கள் என்று சிரித்த படியே ஹோபோக்கள் கூறுகின்றார்கள்.

ஹோபோக்கள் தம்மேல் வைத்திருக்கும் நம்பிக்கையையும் சமூகத்தின் மேல் வைத்திருக்கும் அவநம்பிக்கையையும் பார்க்கும் போது கொஞ்சம் சிந்திக்க வேண்டியே உள்ளது.

கொஞ்சம் நிற்போம்! சில நிமிடங்களேனும்.



நான் சுவாசித்த காற்று இங்கும் வீசியிருக்கலாம்.
நான் பார்த்த நிலவு இங்கும் காய்ந்திருக்கலாம்.
என்னைச் சுட்ட சூரியன் இங்கும் உதித்திருக்கலாம்.
என்னை நனைத்த மழை இங்கும் பொழிந்திருக்கலாம் - ஆனால்
நான் பார்த்த பறவை இதுவல்லவே!

Wednesday, July 13, 2005

தொடர்கின்றார் தீபா மேத்தா



தீபா மேத்தாவின் திரைப்படமான “Water”, 2000ம் ஆண்டு பெப்ரவரி மாதம் இந்தியாவில் "வாரநாசி" எனும் இடத்தில் படப்பிடிப்புத் தொடங்குவற்கான ஆயத்தங்களில் இருந்தது. 30களில் கணவனை இழந்து “விதவை” என்று அழைக்கப்பட்ட பெண்கள், நிர்பந்தத்தின் பெயரில் “விதவைகள் ஆச்சிரமம்” களுக்கு அனுபப்பட்டிருக்கின்றார்கள். அது இன்றும் தொடர்கின்றது. அன்றும், இன்றுமாக சம்பவங்களைக் கோர்த்து "Water" திரைக்கதையை அமைத்திருக்கின்றார் தீபா மேத்தா. "வாரநாசி" எனும் இடத்தில் இன்றும், "விதவை ஆச்சிரமங்கள்" இயங்கி வருவதால் படப்பிடிப்பை அங்கேயே வைக்க தீர்மானித்து படக்குழுவின் வாரநாசி சென்றபோது, அங்கே பல கண்டன ஊர்வலங்களும், மிரட்டல்களும் மதவாதிகளாலும், அரசியல்வாதிகளாலும் நிகழ்த்தப்பட்டு "Water" படப்பிடிப்புத் தொடங்காமலேயே ஊற்றபட்டு விட்டது.


A mob destroys the set of Deepa Mehta's Water


தீபா மேத்தா மிரட்டலுக்குள்ளாவது இது முதல்தடவையல்ல. அவரின் திரைப்படமான "Fire" 1996இல் வெளியான திரைப்படம். இத்திரைப்படம், கணவரால் பாதிக்கப்பட்ட இரு பெண்களுக்குள் ஏற்படும் காதல் உறவு பற்றிப் பேசுவது. Fire திரைப்படம் படமாக்கபட்ட போதும் மிகப் பெரிய அளவில் கண்ட ஊர்வலங்கள் நாடாத்தப்பட்டு திரைப்பட முதல் காட்சியிலேயே திரையரங்கு தீ மூட்டி திரைப்படச் சுருள் அழிக்கப்பட்டது. தொடர்ந்து 1998இல் "Earth" திரைப்படம் முஸ்லீம், இந்துக்களுக்கான பிரச்சனையை மையமாக வைத்து எடுக்கப்பட்டது. Fire, Earth போன்ற திரைப்படங்கள் ஆபாசக்காட்சிகளை உள்ளடக்கியுள்ளதா பல இந்திய விமர்சகர்கள் கண்டனம் தெரிவித்திருந்தார்கள்.


Torched by protesters, a piece
of the Water set burns


தற்போது "Water". இந்தியாவின் இன்றும் இருக்கும் பெண்ணடிமைத் தனத்தை, இந்தியாவில் பிறந்து அதன் கலாச்சாரம் பண்பாடோடு ஒன்றி வளர்ந்து, டெல்லி பல்கலைக்கழகத்தில் உளவியல் பட்டம் பெற்ற பெண்ணான தீபா மேத்தாவைத் தவிர யாரால் முழுமையாகத் தரமுடியும்?

தீபா மேத்தாவின் தந்தை, ஒரு திரைப்பட விநியோகிதரும், திரையரங்கு உரிமையாளரும். இதனால் தீபா மேத்தா சிறுவயதிலிருந்தே பல திரைப்படங்களைப் பார்த்து வளர்ந்தவர். இருப்பினும், அவருக்கு திரைப்படத்துறையில் அதிகம் ஈடுபாடு இருக்கவில்லை. படிப்பை முடித்து வேலைக்கு அமர்ந்தவர் ஒரு விவரணத் திரைப்படத்தில் பகுதி நேர உதவியாளராக வேலை செய்யும் சந்தர்ப்பம் வாய்த்த போது, தனக்குள் இருக்கும் திரைப்பட ஆர்வத்தைப் புரிந்து கொண்டதாக தீபா மேத்தா கூறுகின்றார். 1973ல் டெல்லி பல்கலைக்கழகத்தில் ஆய்வை மேற்கொண்டிருந்த கனேடிய திரைப்பட இயக்குனரான Paul Saltzman காதலித்துத் திருமணம் செய்து கனடாவிற்கு இடம்பெயர்ந்தவர்.

திரைப்படத்துறை பற்றிய நேரடியான அறிவு இல்லாதபோதும், தீபா மேத்தா ஆரம்பகாலங்களில் பல விவரணப்படங்களைத் தயாரித்திருக்கின்றார். தொடர்ந்து குழந்தைகளுக்கான திரைப்படப் பிரதியை எழுதத் தொடங்கியவர், 1991இல் தனது முதல் முழுநீளத் திரைப்படம் “Sam & Me” ஐ தயாரித்து, இயக்கினார். இத்திரைப்படம் பலத்த வரவேற்பைப் பெற்று, அவருக்கு முதல் விருதை(Honorable Mention) பெற்றுத்தந்திருக்கின்றது.

2000ம் ஆண்டு நிறுத்தப்பட்ட Water திரைப்படம் நான்கு வருடங்களின் பின்னர், மீண்டும் இலங்கையில் படப்பிடிப்பு செய்யப்பட்டு முழுமை அடைந்திருக்கின்றது. மாற்றங்களாக, ஷாபனா ஆஸ்மிக்குப் பதிலாக சீமா பிஸ்வாவும் (பாண்டிட் குயின் நாயகி), ஆக்ஷேக்குப் பதிலாக ஜோன் ஏப்ரஹாமும், நந்திதாவிற்குப் பதிலாக லீசா ரேயும் (பொலிவூட் கொலிவூட் நாயகி) நடித்திருக்கின்றார்கள். 2005ம் ஆண்டு செப்ரெம்பர் மாதம் இடம்பெற இருக்கும் ரொறொண்டோ சர்வதேச திரைப்படவிழாவின் தொடக்கத் திரைப்படமாக செப்டெம்பர் 8ம் திகதி "Gala" திரையரங்கில் “Water” திரையிடப்பட இருக்கின்றது. Water இந்தியாவில் திரையிடப்படுமா? என்று தீபா மேத்தாவை நிருபர்கள் கேட்ட போது, திரையிடப்பட வேண்டும் என்பதுதான் என் விருப்பம். எல்லாம் விநியோகர்களையும், திரையரங்கு உரிமையாளர்களையும் பொறுத்தது என்கின்றார்.

பார்த்தவர்கள் தீபாமேத்தாவின் மிகச் சிறந்த திரைப்படமாக "Water"க் கூறினாலும் தனது மூன்று திரைப்படங்களையும் சமனாகவே நேசிக்கின்றேன் என்கின்றார் தீபா மேத்தா. இருந்தும் Water திரைப்படம் தந்த அளவிற்கு பிரச்சனைகளையும், நோவையும் மற்றைய எனது திரைப்படங்கள் தராததால் இத்திரைப்படம் எனது அபிமான திரைப்படமாவதில் வியப்பில்லை என்றும் கூறுகின்றார்.

திரைப்படத்தைப் பார்த்து விட்டு விமர்சனத்தை வைக்கின்றேன்.

Tuesday, July 12, 2005

ஒரு நீண்ட நேர இறப்பு.



மிகமிக நீண்ட தூரத்தில் முகில்களில் சாயையால் அவள் ஒருகால் மடித்து பிருஷ்டம் சரியப்படுத்திருந்தாள். தொப்புள்கொடியின் விடுபடலின் அவஸ்தையாய் இழுபட்டு மிதந்துகொண்டிருந்த அவன் கைகள், கிளைகளாய் நீண்டு அவள் இடுப்பில் மெல்ல நகர்ந்து காயங்களின்றி இறுக்கி, இழுத்தது. முழங்கால் மடித்து குதியினால் அவன் தொடையில் ஓங்கி உதைந்தாள் அவள். அவன் பிடி இறுக நோக்கண்டாள். “போ விடு” சிணுங்கலோடு விம்மினாள். எறிந்த பந்தின் விசையாய் அவள் முதுகோடு ஒட்டி காதோர மூச்சு தலைமயிர் கலைக்க “ஏனம்மா” என்றான். காதோர அவன் சுடு மூச்சு உடல் சிலிக்க அவள் சின்னக்குரலெடுத்து அழுதாள்.
அலையும் மெழுகுதிரியின் சுவாலையில், மென்சிவப்பாய் உருத்திரிய கைவிரல்கள் கொண்டு அவள் முகம் அலசினான் அவன். கோடை வெய்யிலின் வியர்வைப் பீரிடல்களுடன் கலந்த அவள் கண்ணீர் சிதறல்கள், தலைமயிரை ஈரப்படுத்தி முகத்தில் அப்பி பரவிக்கிடந்தது. மென்சிவப்பு முகத்தில் கறுப்புக் கோடுகளாய் நீளும் தலைமயிரை, மெல்ல ஊதி ஊதி ஒவ்வொன்றாக எடுத்துப் பின்னால் போட்டு அவள் கையில் கிடந்த துணி ரப்பரை மெதுவாகக் கழற்றி தலைமயிரைக் கோதிச் சேர்த்துப் போட்டான்.
காற்றின் கணம் சாளரங்களில் நிழலாய் அசையும் கிளைகளால் அடையாளம் காட்டியது. மெல்ல அவள் முகம் திருப்பி இதழில் இதழ் பதித்து விலகிக் கொண்டான்.
சீரான சுவாசத்துடன் கண்இமைகள் மூடி ஓய்ந்து கிடந்தாள் அவள். வியர்வையும், சம்பூவும், சமையலும் கலந்து அவள் தலைமயிரிலிருந்து எழுந்த மணம் அவன் சுவாசத்துடன் கலந்தது சென்றது. அவள் நெஞ்சிலிருந்து வயிறு வரை ஆதரவாக வருடிக்கொடுத்தான் அவன். வியர்வையில் ஊறிக் கசிந்து கலந்து விரலோடு வந்தது ஊத்தை உருண்டை. உடல் அசைக்காது மெல்ல மெல்ல உருட்டி உருட்டித் தூக்கிப் போட்டான் அதை. அவன் ஒற்றை கையை அணையாக வைத்து அவள் நித்திரையாகிப் போனாள்.
அவன் முகடு பார்த்தான். சுத்த வெள்ளையில் பரந்து கிடந்தது அது. ஒற்றைப் புள்ளியில் வரியாகத் தொடங்கிப் பெரிதாய் ஒரே சீராக வளைந்து வளைந்து வட்டம் பெரிதாகி வரி எங்கோ மறைந்தது. மறைந்த புள்ளியிலிருந்து மீண்டும் பார்வையை சிறிதான வட்டத்தில் பதித்து சுத்திச் சுத்தி வந்து புள்ளியில முடித்தான். மேடு பள்ளமற்ற முகட்டில் ஒற்றை நிறத்தில் வளையும் வட்டத்தைப் பிரமிப்புடன் சிறிது நேரம்பார்த்தான். பின்னர் பார்வை யன்னலோரம் சென்றது. பருத்த மரத்தின் கிளையொன்று யன்னலை உரசித் தெரிந்தது. கறுப்பு, கடும்பச்சை, பச்சை, இளம்பச்சை, கடும்மஞ்சள், மஞ்கள், இளமஞ்சள் எனக் கலவையாய் சின்ன இலைகள் கலந்து தெரிந்தன. ஒற்றைக் காம்பில் சின்னநிகம் போன்ற இலைகளை மனதுக்குள் எண்ணினான். வியந்தான். பருத்த மரத்தின் முழுவதுமான இலைகளை எண்ண மனம் அடித்துக் கொண்டது. களைத்து பார்வையை திசை திருப்பினான். சிறிது அசைந்து விட்டு மீண்டும் சீராக சுவாசித்த அவள் வியர்வை அவன் உடலில் ஒட்டி வழிந்தது.
அவன் பார்வை அறையை வேவு பார்த்தது. கடும் பச்சையில் சுவர்கள் வினோதமாய் கிடந்தன. வெளிர் நிறங்களே அறைக்குப் பொருத்தமாவை என்று எண்ணிக் கொண்டான். இருப்பினும் கடும்பச்சை அழகாக இருப்பது போலும் பட்டது. சுவரில் தொங்கும் ஆபிரிக்க ஓவியங்கள் கறுப்பிலும், மஞ்சளிலும் சுவருக்குப் பொருத்தமாய் தீப்பிளம்புபோல் காட்சியளித்தன. மேசையில் கிடந்த பூச்சாடியின் பூக்களை இனம்காண முனைந்து பின் பார்வையை நாலாபக்கமும் அலைய விட்டான். கை விறைத்தது. கால்களைப் பிரித்துப் போட்டான். அவள் பிருஷ்டம் குளிர்ந்துபோய்க் கிடந்தது. வெள்ளை படர்ந்து அவள் முழங்கைகள் பொருக்குக் கண்டிருந்தன. முதுகில் சின்னச் சின்னக் கறுப்புப் புள்ளிகளும், சிறிய கொழுப்புப் பருக்களும் அங்கொன்றும் இங்கொன்றுமாய்க் கிடந்தன. தனது நிகம் கொண்டு மெல்ல பருக்களை நெரித்தான். அவள் உடல் சிறிது உதறி அசைந்து உடல் திருப்பி, அவன் கழுத்தோடு முகம் வைத்துப் படுத்துக் கொண்டாள். மச்ச வாசத்தோடு, வெண்காய மணமும் கலந்த அவள் மூச்சு அவன் முகத்தில் பரவியது. அவன் தள்ளி அவள் முகத்தைப் பார்த்தான். கண்ணீர் கன்னத்தில் கறையாகிக் கிடந்தது. புருவங்கள் அலங்கோலமாய்க் கிடந்தன. மெல்லத் தன் நிகம் கொண்டு அதை ஒழுங்கு படுத்தினான். கண் இமைகள் ஈரலிப்போடு மினுமினுத்தன. சொண்டின் மேற்பகுதியில் பூனை மயிர்கள் சுருண்டு கிடந்தன. “பெண்ணுக்குள் ஒளிந்திருக்கும் ஆண்மை” தன் மீசையை ஒருமுறை வருடி விட்டுக் கொண்டான்.
அவள் உடல் முறித்தாள். கண்கள் சொடுக்கி அவன் முகம் பார்த்தாள். ஒரு கொட்டாவி விட்டாள். சின்னதாகப் புன்னகைத்தாள். பின் எக்கி அவன் இதழ் முத்தி மீண்டும் கழுத்துக்குள் முகம் புதைத்தாள். கலவையாய் வௌவேறு வாசனைகள் அவளிடமிருந்து எழுந்து அடங்கின. அவள் கால்களால் அவனை வளைத்துக் கொண்டாள். அவன் கைகளை உயர்த்திப் போட்டுக் கொண்டு அசையாது கிடந்தான். வியர்வைகள் வற்றிப் போய் விட்டிருந்தன. கொட்டாவி விட்டான். கண்கள் மூட அவனிடமிருந்தும் சீராக சுவாசம் வெளிப்பட்டது. ஒரு சீரான லயத்துடன் இருவரின் மூச்சு ஒலியும் அந்த அறையை ஆட்கொண்டது.

அனல் காற்றின் வீரியம் குறையவில்லை. குழந்தைகளின் கும்மாள ஒலிகள் தூரத்தில் கேட்டன. வாகனங்கள் புழுதியைக் கிளப்பிச் சென்றன. இடம்மாறிப் பறக்கும் பறவைகளின் குரல்கள், காற்றில் கலக்கும் பாடல் வரிகள், நடைபாதைப் பேச்சுக்குரல்கள் இயங்கும் நகரத்தின் அடையாளமாய் வடிந்து சென்றன. சுவரோரக் கடிகாரம் சத்தமிடமறந்து அசைந்துகொண்டிருந்தது.

அவள் இருமினாள். தொடர்ந்து இருமினாள். கால்களை எடுத்துக் கொண்டாள். கட்டிலை அசைக்காது எழுந்து அருகிலிருந்த சாடியில் இருந்து தண்ணீர் எடுத்துக் குடித்தாள். துவாயால் கழுத்து வியர்வையைத் துடைத்தாள். அவன் நெற்றியை ஒருமுறை ஒற்றி விட்டாள். அவனிடமிருந்து வினோதமான ஒலியில் குறட்டை வெளிவந்துகொண்டிருந்தது. சீராகக் கத்தரிக்கப்படாத மீசையில் சிறிய நரை ஓடியது. சொண்டுகள் வறண்டு போய்க் கிடந்தன. கன்னத்தில் நீளமாய் ஒரு காயம் காய்ந்து தெரிந்தது. கண்களின் அடியில் கருவளையம். கன்னத்து மயிரிலும் சிறிய நரை. அவள் குனிந்து விரல் நுனியால் நரை மயிரில் ஒன்றை இடுக்கி மெல்ல இழுத்தாள். அவன் அசைந்தான். அவள் தனக்குள் சிரித்து மெல்லிய குரலில் பாட்டுப் பாடிய படியே சுவரை நோட்டமிட்டாள். பார்வையை சுற்றிச் சுற்றி ஓட விட்டாள். குப்புறப் படுத்து குமுதம் புரட்டினாள். அவன் தலைமயிரை விரல்கள் கொண்டு கலைத்து விட்டாள்.

அவன் மூடி மூடித் இமைகள் திறந்தான். புன்னகைத்தான். அவனுக்கு மூத்திரம் முட்டியது எழுந்து வோஷ்ரூம் சென்றான். குளிக்கும் சத்தம் கேட்டது. அவள் கட்டிலில் புரண்ட படியே பாடல் ஒன்றை ஹம் பண்ணினாள். தண்ணீர் சத்தம் நிற்க அவன் மீண்டும் வந்தான். அவள் எழுந்து கொண்டாள். வோஷ் ரூம் போனாள். குளித்தாள். வெளியே வந்தாள். இருவரும் மௌனமாகத் தொலைக்காட்சி பார்த்தார்கள். அவன் வயிறு புரண்டு குளறியது. “சாப்பிடுவமா?” கேட்டான். அவள் தலையசைத்தாள். பார்சலை உடைக்க குளிர்ந்து போய்க் கிடந்தது சாப்பாடு. கையால் அள்ளி அள்ளிச் சாப்பிட்டார்கள். தண்ணீர் குடித்தார்கள். யாரோ ஒருவன் சுட்டுக் கொல்லப்பட்டதாகத் தொலைக்காட்சி செய்தி சொல்லிச் சென்றது. அவன் மேசையில் கிடந்த பழங்களை எடுத்து அவளுக்கு நீட்டினான். அவள் வாயுக்குள் கிடந்த சுவிங்கத்தை எடுத்து விரல் நுனியில் பிடித்த படியே ஒரு பழத்தை எடுத்துச் சாப்பிட்டு விட்டு மீண்டும் சுவிங்கத்தை வாயுக்குள் திணித்துக் கொண்டாள். அவன் பழங்களைச் சாப்பிட்ட படியே தொலைக்காட்சி செய்தியில் மூழ்கிப் போனான். அவள் குமுதத்தையும் தொலைக்காட்சியையும் மாறி மாறிப் பார்த்து நேரத்தைப் போக்காட்டினாள். அவன் தொலைக்காட்சியை அணைத்து விட்டு “போவமா?” என்றான். அவள் தலையசைத்தாள். கைப்பையினுள் கார் திறப்பைத் தேடினாள்.
அவன் அருகில் வந்து அவள் இடுப்பைக் கைகளால் வளைத்து “ஏன் அழுதனீ” என்றான். அவள் சொண்டுகள் நடுங்க, கண்கள் பனிக்க மீண்டும் விம்மிய படியே அவன் தோள் சாய்ந்தாள். முகில்களின் நடுவில் பறப்பதாய் ஒரு கனவு அவனுக்குள். நீலமாய், வெள்ளையாய், கறுப்பாய் முகில்களின் நிறங்கள். சாளரத்தைக் கீறிக் கீறி சத்தம் எழுப்பியபடி இருந்தது பருத்த மரத்தின் ஒரு கிளை. காற்று வெப்பம் தணிந்த குளிராய் வீசியது. அவளை இறுக்கினான். மீண்டும் இறுக்கினான். பலம் கொண்ட மட்டும் இறுக்கினான். அவளுக்கு நோகவில்லை. அவள் எப்போதோ இறந்து விட்டிருந்தாள்.

Friday, July 08, 2005

நண்பனின் கை வண்ணத்தில்

விடுமுறைக்குச் சென்றிருந்தபோது எடுத்த சில புகைப்படங்களை இங்கே இணைத்திருக்கின்றேன்.


நெருப்பு விளையாட்டு



இறந்து போன இதயத்துடன் ஒற்றை மரம்


காத்திருப்பு


இரவும் பகலும்


பந்தாட்டம்


அட சமையல் நடக்குது


ஓ முட்டை அவியுது.


கூட்டுக்குள் குஞ்சுகள்



பாட்டுக் கச்சேரி


பிடிபட்ட நத்தைகள்


புழுவாய்ப் பிறக்கினும்


இரவு நேர நெருப்பு (ரொமாண்டிக்காக)

Thursday, July 07, 2005

"ம்"

ஒரு சின்ன விடுமுறைக்குப் பின்னர் மீண்டும் வலைப்பதிவில் வலம் வந்து, நுனிப்புல் மேய்ந்து விட்டு, மீண்டும் உள்ளே நுழைகின்றேன். உருப்படியா ஏதாவது எழுதிக் கனகாலம் ஆகுது. இப்ப எல்லாம் உருப்படி எழுதுறதுக்கே ஒண்டும் இல்லாத மாதிரியும் படுகுது.

காட்டுக்குள்ள கழிச்ச அந்த நாட்கள், மீண்டும் கட்டிடக் காட்டுக்குள் நுழைந்து மின்கணனி, வேலை என்று இயந்திரமாக மறுக்கிறது. உடுப்பில அப்பியிருக்கிற சேறு, இழுக்காத தலைமயிர், வெந்ததும் வேகாததுமான சாப்பாடு, மரங்களுக்கு அடியில், இயற்கையின் எச்சங்களுக்கு மத்தியில் தூங்கி எழுவது, தொழில்நுட்பங்களை மறந்து பூச்சிகளையும், நெருப்பையும், தண்ணியையும், காட்டையும் ஓடியோடி ரசிக்கும் குழந்தைகள். இருந்ததை அழித்து கட்டிடக்காடாக்கி விட்டு இப்போது பணம் கொடுத்து இயற்கையை ரசிக்கின்றோம், ம்..

ரொறொன்டோவிலிருந்து கிட்டத்தட்ட 150 மைல் தொலைவில் மூன்றரை மணித்தியாலங்கள் கார் ஓட்டத்தில் Port Elgin எனும் இடத்தில் New Fairway Family Campground , Lake Huron இற்கு அருகாமையில் இருக்கின்றது. பல குடும்பங்கள் Trailer இல் கழித்தார்கள் நாங்கள் Tent போட்டு இரவைக் கழித்தோம். அனேகமாக எல்லோருமே வெள்ளை இனத்தைச் சேர்ந்தவர்கள்தாம். ஒரு இந்தியக்குடும்பத்தைக் கண்டதாக ஞாபகம்.

அங்கு என்ன செய்தீர்கள் என்று கேட்டீர்களானால் லேக்கில் குளித்தல் (தண்ணீர் பேக்குளிர்) குழந்தைகள் தண்ணீரை அதிகம் அனுபவித்தார்கள் என்று கூறலாம். பெரியவர்கள் மற்றத் தண்ணீரைத்தான் அதிகம் அனுபவித்தார்கள். நன்றாகச் சாப்பிட்டோம். இரவு நேரங்களில் நெருப்பை எரித்து விட்டு சுத்தியிருந்து பாட்டுச்சமா வைத்தோம். ரொறொண்டோவில் சத்தம் போட்டுக் கதைக்க முடியாத அரசியல்கள் விவகாரங்கள் எல்லாம் பலத்த சத்தத்துடன் அலசப்பட்டது. மனஉளைச்சல்கள், தொல்லைகள் எல்லாவற்றையும் ஒரு மூலையில் தூக்கிப் போட்டு விட்டுக் கழித்த நாட்கள் இவை. உண்மையாகப் பார்த்தால் பெரிதாக ஒன்றும் செய்யவில்லை. போனதே ஒன்றும் செய்யாமல் சில நாட்களைக் கழிகத்தானே. எனவே அதனை நிறைவாகச் செய்தோம். எனது நண்பர் ஒருவர் (வலைப்பதிவின் வாசகர்-ஒன்று இரண்டு கொமெண்ட் மட்டும் போடுவதற்கு நேரம் கொண்டவர்) டிஜிடல் கமெரா மூலம் பல கிளிக்குகள் செய்தார் அவர் ஏதாவது படத்தை எனக்கு அனுப்பி வைத்தால்தான் உண்டு.

இந்தமாதக்கடைசியில் வரும் Canadian Civic holiday ற்கு Algonquin lake site இற்கு மீண்டும் ஒருமுறை மனஉளைச்சல்களைக் கழற்றி வைக்கச் செல்ல உள்ளோம். இதுதான் எனக்கு மிகமிகப் பிடித்த இடம். மிக ஆழமான வாவியின் நடுவே இருக்கும் சின்னச்சின்னத் தீவுகளின் நடுவில் நாம் இருப்போம். எம்மைத் தவிர எவரையும் அங்கே காணமுடியாது. அவசரத்திற்கு வெளியே போக வேண்டும் என்றால்கூட அரைமணித்தியாலங்கள் மோட்டர் போட்டில் ஓடித்தான் கரை செல்ல முடியும். மான், கரடி, பாம்பு (நச்சு அற்ற) போன்றவை இருப்பதாகவும் அவற்றிற்குத் தொந்தரவு கொடுக்காத வகையில் மனித மிருகங்கள் நடந்து கொள்ள வேண்டும் என்பதும் அரசாங்கத்தின் வேண்டுகோள்.

Thursday, June 30, 2005

வலைப்பதிவில் ஒரு இலவசசேவை!



கிட்டத்தட்ட ஐநூறு வலைப்பதிவுகளைத் தாண்டிவிட்டிருக்கும் நிலையில், சிலருக்குப் பல வலைப்பதிவுகள் இருந்தாலும் கூட்டிக் கழித்துப் பார்த்தால் ஒரு முன்னூறாவது தேறும் என்று வைத்துக்கொண்டு, இந்த வலைப்பதிவாளர்களின் பல சங்கடங்களை அறிந்தவள் என்ற முறையில் ஒருவாரம் நான் விடுமுறைக்காய் செல்ல இருப்பதால் எனது வலைப்பதிவை வலைப்பதிவாளர்களின் நன்மை கருதி அவர்களின் உயயோகத்திற்காய் விட்டுச் செல்ல முடிவெடுத்திருக்கின்றேன். பணம் வசூலிக்கும் கெட்ட எண்ணம் எனக்கில்லை. தமிழ் மக்களுக்காய் உழைப்பதே என் லட்சியம். அந்த வகையில்

பெயரிலி – கதிர்காமாஸ் போன்றவர்கள் உப்புச் சப்பில்லாத எதையாவது கறுப்பியின் தளத்தில் வந்து வாதிடலாம்.

பெயரிலியைக் கெட்ட வார்த்தைகள் சொல்லித் திட்ட நினைக்கும் அனாமதேயர்கள் என் தளத்தை உபயோகிக்கலாம். ஆனால் தங்கள் உண்மையான அல்லது புனை பெயர்களில் மட்டுமே வருகை தரவேண்டும். என் தளத்தில் அனாமதேயர்களுக்கு இடமில்லை.

சக்தி, சினேகிதி போன்ற சின்னப்பிள்ளைகள். யாரையாவது காதலிக்கும் எண்ணமிருந்தால் தங்கள் வீட்டில் அனுமதிக்காத பட்சத்தில் கறுப்பியின் தளத்தை உபயோகித்து ஒருவாரம் காதலிக்கலாம்.

டோண்டு ஐயா V ரோசவசந்த் போன்றோர் சண்டையிட்டுக் கொள்ள என் தளத்தில் இலவச அனுமதியுண்டு.

மாண்டீரீஸர், புரியாமல் ஏதாவது எழுதப்போகின்றீர்களா? எடுத்துக்கொள்ளுங்கள் கறுப்பியின் தளத்தை

தங்கமணி, சுந்தரவடிவேல் படம் போட என் தளத்தில் தங்களுக்கு அனுமதியில்லை. முன்புபோல் ஏதாவது நல்லது எழுத முடிந்தால் எழுதுங்கள்.

முகமூடி, பெடியன்களுக்கும் வேண்டுமா ஒருவாரம் இலவச சலுகை இங்கே உள்ளது.

வசந்தன் சயந்தனா? இல்லை சயந்தன் வசந்தனா? என்ற சந்தேகத்தைத் என் தளத்தில் வலைப்பதிவாளர்கள் தீர்த்துக் கொள்ளலாம்.

ஈழநாதன் யாருக்காவது அட்வைஸ் பண்ண எண்ணினாலும் என் தளத்தில் இடமுண்டு.(*_*).

டீசே, கிஸோ சின்னப்பையன்கள் என்ற முறையில் காதலிக்க என் தளத்தைக் கொடுத்து உதவுகின்றேன்.

காவலனுக்கு யாராவது தமிழ் கற்றுக்கொடுக்க நினைக்கின்றீர்களா? உபயோகியுங்கள் கறுப்பியின் தளத்தை.

மற்றும் அனைத்துப் படம் காட்டும் நண்பர்களுக்கும் என்தளத்தில் இலவச அனுமதியுண்டு.

ஒருவாரம் நான் ஊரில் இல்லாததால் கறுப்பிக்குத் திருமணம் என்று வதந்தியைக் கிளப்பி விடாதீர்கள் மதி. அறுபதாம் கலியாணத்திற்கு வலைப்பதிவாளர்களுக்கு நிச்சயம் அழைப்புண்டு.

வந்து படம் காட்டுறன்.

Byeeeeeeeeeeeeeee

Tuesday, June 28, 2005

நூறு கழிப்பறைகள்!


(Theeranathy)

கறுப்பி யாழ்ப்பாணத்தில் பிறந்து வளர்ந்து பின்னர் சிறிது காலம் லண்டன், ஹொலண்ட், பெல்ஜியம் என்று வாழ்ந்து தற்போது கனடாவில் வசிக்கின்றேன். யாழ்ப்பாணத்தைப் பொறுத்தவரை அனேகமாக பாடசாலைகள், வைத்தியசாலைகள், திரையரங்குகள், புகையிரதங்கள் போன்றவையே பொதுவாகப் பொதுமக்களால் பாவிக்கப்படும் கழிப்பறைகள். எல்லாமே "குழி" வடிவக் கழிப்பறைகளே. இவை அனைத்தையும் பாவித்த அனுபவம் கறுப்பிக்கும் இருக்கின்றது. இந்தக் கழிப்பறைகளுக்குள் நுழையும் போது மிகவும் அவதானத்துடனும் ஒருவித ஜாக்ரதையுடனுமே உள்ளே நுழைய முடிகின்றது. (எந்த நிலையில் இவைகள் இருக்கப் போகின்றனவோ என்ற பயம்) இருந்தும் அருவருப்பூட்டும் வகையில் இதில் எந்த ஒரு கழிப்பறையையும் கண்டதாக நினைவில்லை. அனேகமாக சிறிதாக ஒரு மூத்திர நெடியோடு நெருப்புத்தண்ணீர் என்ற அழைக்கப்படும் கிருமி நாசினியின் நெடியே தூக்கலாக இருப்பதுண்டு. இந்த இரசாயணப்பதார்த்தத்தின் மணம் சுத்தமாகக் கழிப்பறைகள் இருக்கின்றன என்ற ஒரு நம்பிக்கையைத் தருகின்றது.

அதன் பின்னர் ஐரோப்பிய நாடுகளில் பல இடங்களில் கழிப்பறைகளைப் பாவித்த அனுவமும் உண்டு. லண்டன், ஹொலெண்ட் போன்ற நாடுகளின் கழிப்பறைகளோடு ஒப்பிடும் போது பெல்ஜியத்தில் கழிப்பறைகள் மிகவும் சுத்தமானதாகக் காணப்பட்டது. இதற்கு காரணமாக சனத்தொiயைக் கூறலாம். தற்போது கனடாவில் பல விதமாக கழிப்பறைகளைப் பாவிக்கின்றேன். படுமோசமான நிலையில் இருப்பவை பளிங்குபோல் சிறு குறைகூடக் கூறமுடியாத வகையில் பராமரிக்கப்படுபவை என பலதையும் காணக்கூடியமாக உள்ளது. இதற்குப் பல்கலாச்சார நாடாக கனடா இருப்பது தான் காரணம். பராமரிக்கப்படாத நிலையில் இருக்கும் கழிப்பறைகள் அனேகமாக ஆசிய நாட்டவரின் வியாபாரத்தலங்கள் என்பது என் தனிப்பட்ட கருத்து. இவற்றைத்தான் நான் அதிகம் பாவித்திருக்கின்றேன் என்பதும் ஒரு காரணமாக இருக்கலாம்.

தீராநதியில் எஸ்.ராவின் "நூறு கழிப்பறைகள்" கதை படித்தபேது இரண்டு வருடங்களுக்கு முன்னர் இந்தியாவிற்கு விடுமுறைக்காகச் சென்று அங்கு நான் பாவித்த பொதுக்கழிப்பறைகள் பற்றிய ஞாபகங்கள் வந்தன.

சென்னையில் சாலிக்கிராமத்தில் எனது சகோதரிக்கு ஒரு பிளாட் இருப்பதால் நான் குடும்பத்துடன் அங்குதான் சில வாரங்கள் தங்கியிருந்தேன். எனது அண்ணா குடும்பம் தி.நகரில் கீதாஞ்சலி ஹோட்டலில் தங்கியிருந்தார்கள் எனவே அனேகமாக சென்னையில் பொதுக்கழிப்பறைகள் பாவிக்க வேண்டிய சந்தர்ப்பம் கிடைக்கவில்லை. இருந்தும் "தேவதாஸ்" திரைப்படம் பார்ப்பதற்கு ஒரு பழைய பிரமாண்டமான திரையரங்கிற்குச் சென்றிருந்தேன் (பெயர் ஞாபகத்தில் இல்லை). நான் சென்றிருந்த அன்று சிவாஜியின் மூத்தமகன் ராஜ்குமார் குடும்பத்துடன் திரைப்படம் பார்க்க வந்திருந்தார். இன்னும் பல நாகரீக இளைஞர்கள் யுவதிகள் வந்திருந்தார்கள். அந்தத் திரையரங்கில் இடைவெளியின் போது கழிப்பறைக்குச் சென்றேன். கழிப்பறைகளின் தோற்றம் இப்போதும் எனக்கு நினைவில் இருக்கின்றது. மிகமிகப் பழைய முறையில் நான் ஒருநாளும் பார்த்திராத ஒரு வடிவத்தில் கதவுகளற்று நுழைவாசல் தொடக்கம் மிக அசுத்தமாக இருந்த அந்தக் கழிப்பறைக்கு நெருக்கமாகக் கூட என்னால் போக முடியவில்லை. பேசாமல் திரும்பி வந்து விட்டேன். இந்தக் கழிப்பறையைத் தான் தமிழ்நாட்டின் செல்வந்தர்களின் ஒருவரான சிவாஜியின் குடும்பமும் பயன்படுத்துகின்றார்கள் என்பது என்னால் நம்பமுடியாமல் இருந்தது.

அடுத்து கோவா சென்றிருந்த போது கடற்கரை அருகில் ஒரு பொதுக்கழிப்பறைக்குச் செல்ல வேண்டிய கட்டாயம். நுழைவாசலே மூத்திர வீச்சத்தால் மூக்கைத் தாக்கியது. இருந்தும் ஒருமுறை மூச்சை இழுத்து விட்டுக் கொண்டு மூச்சை அடக்கியபடியே உள்ளே ஓடிச்சென்று வந்தேன். அதுவரை மூச்சைப் பிடிக்க முடியாமல் உள்ளே காற்றை எடுக்க வேண்டி வந்ததால் ஏற்பட்ட அசௌகரியம் வெளியில் வந்து அன்று சாப்பிட்ட அனைத்தையும் சத்தி (வாந்தி) எடுத்து விட்டேன். கழிப்பறைக்குப் பணம் வசூலிக்கின்றார்கள். இருந்தும் சிறிது கூட சுத்திகரிக்க அவர்களால் ஏன் முடியாமல் போனது. பணம் வசூலிப்பவர் எப்படி நாள் முழுவதும் அந்த வீச்சத்திற்குள் இருக்கின்றார்.

இதே போல் புகையிரதங்களிலும் ஊட்டியிலும் திருவனந்தபுரத்திலும் கட்டாயமாகப் பொதுக்கழிப்பறை உபயோகிக்க வேண்டி வந்து மிகவும் அவஸ்தைப் பட்டுள்ளேன்.

அதே நேரம் நான் கன்யாகுமரியில் ஒருவாரம் தங்கியிருந்த விவேகானந்தா கேந்திராவிலும் இன்னும் பல ஹோட்டல்களிலும் சுத்தம் செய்யப்பட்ட, நெருப்புத் தண்ணீர் மணம் கொண்ட கழிப்பறைகளையும் உபயோகித்திருக்கின்றேன்.

இந்தியா மிகப்பெரிய நாடாகவும் சனத்தொகையில் உச்சத்தில் இருப்பதாலும் பொதுஇடங்களில் அதிகம் சுகாதாரத்தை எதிர்பார்க்க முடியாதுதான். என்றாலும் மிகப்பழைய முறையிலான கழிப்பறைகளை புதுப்பிப்பதும், கிருமி நாசினிகளை நாளாந்தம் உபயோகித்துச் சுத்தப்படுத்துவதும் அத்தனை சிரமமாக இருக்காது என்றே நம்புகின்றேன். இந்தியா என் கனவு நாடு. அங்கு நாம் தவிர்க்க முடியாத இடங்களில் இப்படியான அசௌகரியங்கள் இருப்பது வருத்தத்தைத் தருகின்றது.

மாறுவேடப் போட்டி -007

இவர் ஒரு வலைப்பதிவாளர். இவர் ஆணா, பெண்ணா என்ற தகவல் தரப்படமாட்டாது. இவரது வெள்ளி இரவுகள் இப்படியாகக் கழியுமாம். கண்டு பிடியுங்கள் பார்க்கலாம். பரிசு காத்திருக்கின்றது.

Monday, June 27, 2005

அன்நியன் - கறுப்பியின் பங்கிற்கு



இது அன்நியன் சீசன். வலைப்பதிவில ஒரே அந்த வாசனைதான். கறுப்பியும் தன் பங்கிற்கு ஏதாவது எழுதுவம் எண்டு வெள்ளி இரவு ஒருமாதிரி ticket பெற்று போய் பார்த்தேன். ஹெவுஸ் புல்லா அன்நியன் ரொறொண்டோவில் ஓடிக்கொண்டிருக்கின்றது.

முன்பெல்லாம் கறுப்பி ஒரு தமிழ் படத்திற்குப் போகும் போது மிக இனசென்டாக ஒரு பொழுது போக்கிற்கான மட்டும் பார்ப்பதற்குச் செல்வேன். சங்கரின் படம் என்றால் இப்படியிருக்கும், மணிரத்தினத்தின் படம் என்றால் இப்படியிருக்கும் என்று மனதுக்குள் ஒரு வடிவம் இருப்பதால் அதை எதிர்பார்த்துப் போய் அது கிடைக்கும் பட்சத்தில் சந்தோஷித்து, கிடைக்காவிட்டால் "ப்ச்" கொட்டி அதிகம் வருந்தாமல் கழித்து விடுவேன். ஆனால் எப்போ வலைப்பதிவிற்கு வந்தேனோ அன்றிலிருந்து கறுப்பியின் பார்வை மாறிவிட்டது. இது நல்லதுக்கா கெட்டதுக்கா தெரியவில்லை. கறுப்பு வெள்ளையாய் தமிழ்ப்படங்களைப் பார்த்துக்கொண்டிருந்தவளுக்கு தற்போது மல்டிகலரின் லுக்கு விடும் குணம் வந்து விட்டது. பாவம் கறுப்பி தன்னுடைய இனெசென்ஸை இழந்து விட்டாள். பூந்து, பூந்து பிழை பிடிக்கத் தொடங்கிவிட்டாள்.

சங்கரின் படங்களில் நிறம்ப கிராபிக்ஸ் இருக்கும், பாடல் காட்சிகள் அமர்க்களப்படும்,
நாயக நாயகிகளின் உடைகள் அந்த மாதிரி இருக்கும், காதல் காட்சிகள் ரசிக்கக் கூடியதாக இருக்கும், நகைச்சுவைகள் சலிக்காதவை, இவை நான் ரசிப்பவை. பிடிக்காத பக்கத்தில் சண்டை இருக்கும், ஒரு மசாலாக் கதை இருக்கும், இவை அனைத்தையும் கொண்டதாகத்தான் அன்நியனும் இருந்தது. இருந்தும் பாடல்கள் என் மனதில் பதியவில்லை. ஏ.ஆர் ரகுமான் இல்லை என்பது தெரிகின்றது. போனஷாக விக்கிரம் வியக்கும் வகையில் அழகாகவும், நடிப்பில் சிறப்பாகவும் இருக்கின்றார். சதா வெறும் சாதா.

வலைப்பதிவில் வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்களை நானும் கண்டு கொண்டேன் என்பதோடு இன்னும் சிலவற்றையும் என் பார்வையான இணைக்கலாம். (சமூகநலவிரும்பிப் பார்வை என்று வைத்துக்கொண்டு)

பார்ப்பண்ய இளைஞர்கள் தமிழ் திரைப்படங்களில் அனேகமாக ஒரு “நேட்” போல்தான் சித்தரிக்கப்படுவார்கள். சிறுவயதிருந்து பூஜை, புனஸ்காரங்கள், மந்திரம், தந்திரம் என்று வாழ்வதாலோ என்னவோ வெறும் ஜடமாகப் புத்தப் பூச்சியாகத்தான் பார்பண்யர்களைக் காட்டுவதும், தற்போதைய நாயகிகளுக்கு “ரேமோ” போன்ற cool guyஐதான் பிடிக்கும் என்றும் பார்பண்ய இளைஞர்களை மட்டம தட்டியிருக்கின்றார்கள். அத்தோடு பார்பண்ய குடும்பம் எப்போதும் அட்வைஸ் பண்ணும் வெறும் அறுவை போல் அம்மா, அப்பா, பாட்டி என்று ஒரே பார்பண்ய அட்வைஸ். குழந்தைகள் தங்கள் சுயத்தில் சிந்திப்பது, வாழ்வது, வாழ்வை அமைத்துக் கொள்வது இப்படியான சுதந்திரங்கள் குழந்தைகளிடமிருந்து பறிக்கப்படுகின்றது என்பதையும் காட்டுகின்றார்கள்.
பார்பண்ய பெண்கள் திருந்தவே மாட்டார்கள். வெறும் தலைக்குக் குளித்து. ஈரச்சேலையோடு சாமி. சங்கீதம். சீடை. பட்டு என்று பிராணனை விடும் ஜந்துகளாவே வாழ்ந்து முடிக்கின்றார்கள் என்பதையும் காட்டுகின்றார்கள். இவைகளெல்லாம் பெருமைப்படும் விஷயமா வெறும் வேஸ்ட்.

மொத்தத்தில் பார்ப்பண்ய வாழ்க்கை முறையை நன்றாகவே நக்கலோ நக்கல் அடித்திருக்கின்றார்கள் சங்கர். இடையிடையே வரும் கள்ளச் சாராயமும், சோம்பேறி மனிதனும் சும்மா பார்பண்ய மக்களை திசை திருப்ப ஒரு ஊதல்.

ஒவ்வொரு சீசனுக்கு ஒவ்வொரு வியாதி தமிழ்பட நாயகர்களுக்கு வரும். இப்போதைய சீசன் ஸ்பிளிட் பேர்சனாலிட்டி.. அதைச் சொல்லி கதையை கேள்வி கேட்க முடியாமல் பண்ணி விட்டார்கள்.

தியேட்டரில் நல்ல சுவையான சமோசா கிடைத்தது. சட்ணியோடு சாப்பிட்டு ஒரு ரீயும் குடித்து கலர் புல்லா ஒரு படமும் பார்த்து வெள்ளி இரவு நன்றாகத்தான் கழிந்தது.

Friday, June 24, 2005

வெளிச்சம்



“உண்மைகள் அற்ற உலகில் பொய்கள் நிழலாய் தொடர, பொய்யை பொய் என மறுத்து உண்மையாய் ஏற்றுக்கொள்ள வேண்டிய நிர்ப்பந்தத்தில் நானும் பொய் பேசி அதை உண்மை என நம்பி ஏற்று வாழப்பழகிக் கொண்டு..”
இனிமேல் இது வேண்டாம்.

மணம் மூக்கைத் தாக்க நான் மூச்சை இறுக்கிக் கொண்டேன். பஞ்சு முகம் முழுக்க உலாவந்து ஓய்ந்தது. “இஞ்ச பார் எவ்வளவு ஊத்தை. இவ்வளவும் ஒயில். அடிக்கடி துடைக்காட்டி முகத்தில பருவாத்தான் வந்து கொட்டும். அருமந்த வடிவான முகம் பருவாக் கொட்டிக்கிடக்கு. உனக்கு அதைப்பற்றி ஒரு கவலையும் இல்லை என்ன? அம்மா தனக்கான அம்மா பாசம் மேலிட என்னை விட என் முகப்பருவிற்காய் நொந்து பேசி விட்டுப் போனாள். நான் கண்ணாடியில் முகத்தை ஊன்றிப் பார்வையிட்டேன். நெற்றியிலும் கன்னங்களிலும் அள்ளிப்போட்டிருந்தது முகப்பரு. என் வகுப்பில் அனேகமாகப் பலருக்கு முகப்பரு வரத்தொடங்கியிருந்தாலும் என்னுடையது கொஞ்சம் கூடுதலாகவே பட்டது. ஆனால் அது என்னைத் தொந்தரவு செய்யவில்லை. (ஷேரா பாவம் இரண்டு முகப்பரு நெத்தியில் வந்ததால் ஒரு கிழமை பாடசாலைக்கு வரவில்லை).

“இது எங்கட குடும்ப ஜீன்ஸ்” என்று அம்மாவின் காய்ந்து போன முகத்தழும்புகளைப் பார்த்த படியே சொன்னேன். “உண்மைதான் அப்ப எங்க வசதியிருந்தது நாங்கள் பாலாடையும், முட்டை வெள்ளைக்கருவையும் பூசிப் பூசிப் பாப்பம் போனால்தானே. ஆனால் இஞ்ச எவ்வளவு வசதியிருக்கு எத்தின விதமான மருந்திருக்கு பூசிக் கொஞ்சம் குறைக்கலாமே. உனக்குப் பஞ்சி உன்ர முகம் பற்றி எனக்கிருக்கிற அக்கறை உனக்கில்லை.” அம்மா வீட்டு வேலைகளின் நடுவில் புறுபுறுத்த படியே வீடு முழுக்க நடந்து திரிந்தாள். கொஞ்சம் கிட்ட வந்து குரலைத் தாழ்த்தி “டேய் இப்பிடியே கவனிக்காமல் விட்டாயெண்டால் முகம் அசிங்கமாப் போயிடும் பிறகு ஒரு பெட்டையும் உன்னைப் பாக்காது பிறகு கேர்ள் பிரெண்ட் கிடைக்கேலை எண்டு நீதான் கவலைப்படுவாய்” சொல்லி முடித்த பின்னர் தான் கூறிய நகைச்சுவையைத் தானே நினைத்துச் சிரித்துக் கொண்டாள். “உங்கள அப்பா லவ் பண்ணினவர் தானே? அப்பிடி என்னையும் ஆரும் லவ் பண்ணிவீனம்” போனவள் திரும்பி வந்தாள். அவள் கண்கள் கனவுகளில் நிறைந்திருந்தன.

ம்.. பெருமூச்சு எழுந்து அடங்க “அது ஒரு காலம்” என்றாள். பிறகு ஏதோ நினைத்தவளாய் “இஞ்ச வந்து எவ்வளவு காலமாப் போச்சு ஒருக்காப் போய் அம்மா, அப்பாவைப் பாத்திட்டு வரக்கூட வசதியில்லாமல் போயிட்டுது” திரும்பவும் அதே மாதிரியான ஒரு பெருமூச்சு. வேண்டுமென்ற நேரமெல்லாம் நெஞ்சை உயர்த்தி ஒரே பாணியில் அம்மா பெருமூச்சு வி;டக் கற்றுக்கொண்டிருந்தாள். எனக்கு அவளைப் பார்க்கப் பாவமாக இருந்தது. என்ன வயதிருக்கும்? வயதுக்கு மீறிய முதிர்சியுடன் எப்போதும் வாயுக்குள் ஏதோ புறுத்த படியே ஓடியோடி எதையாவது செய்து கொண்டிருந்தாள். அப்பா அதிகார தோறணையில் வலம் வருவதால் நானும், தம்பியும் அம்மாவிடம் தான் ஒட்டிக் கொண்டோம்.
அம்மாவின் கவனிப்பில் என் முகப்பருக்கள் குறைந்திருந்தன. மூக்கின் கீழே கீறலாக மீசை முளைவிட்டிருந்தது. குரல்கள் ஆணினதும், பெண்ணினதுமாக மாறி மாறி வேடிக்கை காட்டியது. தலையைக் கலைத்து வேறு விதமாக இழுத்து விட்டேன். பிடிக்காத உடைகளையெல்லாம் சுருட்டிச் சுருட்டி அம்மாவிற்குத் தெரியாத இடத்தில் தள்ளி விட்டிருந்தேன். நண்பர்களுடன் கடைக்குப் போகப் பழகிக் கொண்டேன். “என்னடா இது உடுப்பு கறுப்பங்கள் மாதிரி தொள தொள எண்டு” கோவம் போல் குரலை உயர்த்திப் பாவனை காட்டியபடியே என்னைச் சுற்றிச் சுற்றிப் பார்வையிட்டு முகத்தில் பெருமை பொங்க “என்னடா இது வடிவாவே இருக்கு?” நான் சிரித்தேன். வடிவோ வடிவில்லையோ எனக்குப் பிடிச்சிருந்துது போட்டுக் கொண்டேன்.

குடும்பத் தலைவனாம் தான் என்ற மிடுக்கோடு என் அப்பாவும், அவருக்கு அடங்கிய மனைவியாம் தான் என்ற பணிவோடு என் அம்மாவும், ஏதோ பாவனைகள் பல வீட்டில் இருந்தாலும் கட்டுப்பாடுகள் அற்ற குடும்பம் எங்களுடையது. எனக்கான முழுச் சுதந்திரம் தரப்பட்டிருந்தது. பதிலாக என்னிடம் அம்மா கேட்டுக் கொண்டது “நல்லாப் படி” நான் படித்தேன். அம்மா கேட்டுக்கொண்டதற்காக இல்லை. படிப்பு எனக்கு இயல்பாகவே வந்ததால்.
அம்மாவின் பெருமூச்சு ஒரு திட்டமாக உருவெடுத்து அப்பாவிடம் ஊருக்குப் போகவேணும் எங்கட சொந்தங்கள், ஊரையெல்லாம் சுத்திப் பாக்க வேணும் கனடாவில் பிறந்த என்ர பிள்ளைகளை பாட்டி, தாத்தாவுக்குக் காட்ட வேணும் என்று அடம் பிடித்து வெற்றி கொண்டது. “தாங்க முடியாத வெக்கை எலெக்ரிசிட்டி இல்லை அதால ரீவி இல்லை அங்க ஒண்டுமே இல்லை.. நல்லாக் கஷ்டப்படப் போறாய்” போய் வந்த என்னுடைய நண்பர்கள் போகு முன்பே எனக்குள் வெறுப்பை ஏற்றினார்கள். நான் அடம் பிடித்து அழுது பார்த்தேன். “நான் இப்ப பெரிய பெடியன் நான் தனிய இருப்பன் குரலையும் உயர்த்திப் பார்த்தேன் ஆனால் என்னுடைய குரல் எடுபடவில்லை. ரீவி இல்லாத உலகம் பயம் காட்டியது. வீடியோ கேம்ஸ், புக்ஸ் என்று பொழுது போக்க கொஞ்சம் சேர்த்துக் கொண்டேன். அப்பாவின் வேலையால் அவரால் வரமுடியவில்லை. எங்களை அனுப்பி வைத்தார்.

மெல்லிய மழைத்தூறல்களினூடே இளம் பச்சை தென்னை ஓலை அசைய கிளிகள் குரல்கள் எழுப்பும் ஒரு பின்னேரப் பொழுதில், புழுதி மண் விரல்கள் புக நிலம் தேய்த்து நான் நடந்தேன். வீட்டுக் கூரை புகை எழுப்ப அம்மம்மா இருமி இருமி சமையல் செய்தாள். வீடு அமைதியாய் இருந்தது. எல்லோருமே பின்னேர நித்திரையில் இருந்தார்கள். அம்மம்மா ஓய்ந்து நான் பார்த்ததில்லை. எனக்கு எல்லாமே பிடித்திருந்தன. அடுப்பிலிருந்து ஆற்றங்கரை வரை ஓடியோடி ஆராய்ந்தேன். வீடியோ கேமும் புத்தகங்களும் தம்பியின் கைகளுக்குள் அடங்கிக் கொண்டன. முதல் முறையாக சாரம் கட்டக் கற்றுக் கொண்டேன். அம்மப்பாவும், மாமாக்களும் சைக்கிளில் ஊரச்சந்தை, விளையாட்டுப் போட்டிகள், கோழிச்சண்டைகள் என்று என் கற்பனைக்கு எட்டாத பல இடங்களுக்குக் கூட்டிச் சென்றார்கள். வெளிநாட்டுப் பெடியன் கொச்சைத் தமிழ் கதைக்கிறான் என்று முதலில் ஒதுங்கி நின்ற சிறுவர்கள் சாரம் கட்டி காலில் செருப்பின்றி ஓடித்திரிந்த என்னைக் கண்டதும் தாமாகவே ஒட்டிக் கொண்டார்கள்.

நாட்கள் நகராமல் ஓட்டம் கண்டன. என் ஆராய்சியில் பல முடிவுறாமல் போய் விடுமோ என்ற ஆதங்கம் எனக்குள். “கனடா வேண்டாமம்மா இஞ்சையே இருப்பமே” அம்மா கண்கள் மிளிர என்னை வினோதமாகப் பார்த்தாள். அம்மப்பா பொக்கை வாயை அசைத்து, அசைத்துச் சிரித்த படியே “அதுக்கென்ன அவனை விட்டிட்டுப் போவன் இஞ்ச இருந்தே படிக்கட்டும்”. அம்மாவின் முகத்தில் பயம் தெரிந்தது “உனக்கென்ன விசரே அங்க பள்ளிக்கூடம், படிப்பு எல்லாம் விட்டிட்டு அப்பா என்னைக் கொண்டு போட்டிடுவார்” என் மனக்கண்ணில் என் பாடசாலை நண்பர்கள், என் அறை, மீன் தொட்டி, மீன் குஞ்சுகள் எல்லாமே ஒருமுறை வந்து வா வா என்று அழைக்க மனதுக்குள் ஒரு ஏக்கம் பிறந்தது. நான் சிரித்தேன். “ஓரு கிழமை கூட இருந்திட்டுப் போவம்” என்றாள் அம்மா என் தலையைத் தடவிய படியே.

அம்மப்பா மெல்ல மெல்ல நடந்து வந்து வழமை போல் விறாந்தையின் ஓரத்தில் இருந்தார். அவர் கையில் “பெற்றோல்மாக்ஸ்” (விளக்கு) இருந்தது. நானும் வழமைபோல் அவர் அருகில் போயிருந்து அம்மப்பா செய்வது ஒவ்வொன்றையும் கண் வெட்டாமல் பார்க்கத் தொடங்கினேன். திரியை இழுத்து நீளத்தைப் பார்த்து விட்டு அருகில் வைத்தார். சிம்னியைக் கைகள் நடுங்க மெல்லக் கழற்றி வாயால் ஊதி ஊதி படிந்திருந்த கரும்புகையை துணியால் துடைத்தார். எண்ணெயை கொஞ்சமாய் விட்டுக் குலுக்கிப் பார்த்து மேலும் கொஞ்சம் விட்டார். சின்னதாக இருந்த பம்ப் ஒன்றை மெல்ல மெல்ல அடித்து பின் மூடியைப் பொருத்தி திரியை இழுத்து நெருப்பைக் கொழுத்தினார். வெளிர் நீலச் சுவாலை இருள் மேவும் அந்த மாலைப் பொழுதை ஊடுருவிச் சென்றது. “அம்மா எனக்கு ஒரு “பெற்றோல்மாக்ஸ்” வாங்கித் தாங்கோ கனடாக்குக் கொண்டு போக” அம்மப்பா பெரிதா ஏதோ ஜோக்கை கேட்டு விட்டது போல் பொக்கை வாயைப் பொத்திப் பொத்திச் சிரித்தார். “ம் உதெல்லாம் காவிக்கொண்டு போகேலாது” அம்மா எழுந்து போய் விட்டாள். அம்மப்பா இருமினார். “பெற்றோல்மாக்ஸ்சை” நிலையில் இருந்த ஒரு கம்பியில் கொழுவி விட்டு “மாட்டுக்கு வைக்கல் போட வேணும்” தனக்குள் சொன்ன படியே படியால் இறங்கிப் போனார். நான் பெற்றோல்மாக்ஸின் திரியை உற்றுப் பார்த்தபடி நின்றேன். வீட்டிற்கும், முற்றத்திற்கும் வெளிச்சம் தந்தபடி இருந்த அந்த விளக்கு எனக்கு வினோதமாகப் பட்டது.

அன்று மழை அதிகமாய் அடித்தது. அம்மப்பா இருமிய படியே முனகிக்கொண்டு பாயில் படுத்திருந்தார். கரு மேகக் கூட்டத்தின் அசைவால் வீடு இருளில் மூழ்கி அமைதியாய் இருக்க, எல்லோரையும் மழைக்குளிர் நித்திரைக்குள் இழுத்து விட்டிருந்தது. குசினிக்குள் மட்டும் சின்னதாக ஒரு தேங்காய் எண்ணெய் விளக்கு மின்னிய வண்ணம் மின்மினி போல் ஆட்டம் காட்டியது. நான் பெற்றோல்மாக்ஸ் உடன் அம்மப்பா வழமையாய் இருக்கும் இடத்தில் வந்து இருந்தேன். சிம்னியை மெல்லக் கழற்றி ஊதி ஊதிக் கரும் புகையைத் துடைத்தேன். திரியை இழுத்து விட்டு அளவு பார்த்தேன். எண்ணெயின் அளவைக் குலுக்கிப் பரிசோதித்தேன். இன்னும் கொஞ்ச எண்ணெய் விட்டேன். பம்பை மெல்ல மெல்ல இழுத்து அம்மப்பா போல் அடித்தேன். நெருப்புப் பெட்டியை எடுத்து திரியைக் கொழுத்தினேன். எங்கே தவறினேன்?

கண் விழித்த போது எழுந்த மணம் மருத்துவமனை என்பதை அடையாளம் காட்டியது. அம்மா பக்கத்தில் இருந்த கதிரையில் நித்திரையாய் இருந்தாள். கண்கள் வீங்கியிருந்தன. என் முகம் முழுவதும் துணியால் கட்டுப் போட்டிருப்பது தெரிந்தது. “அம்மா” என்று மெல்ல முனகினேன். கண் விழித்தவள் என்னைக் கட்டிக் கொண்டு கதறினாள். நான் புரியாமல் அவளைப் பார்த்துக் கொண்டிருந்தேன். அம்மப்பா, அம்மம்மா, மாமாக்கள், இன்னும் தெரியாத சொந்தங்கள் நண்பர்கள் என்று யார் யாரோ வந்து போனார்கள். எல்லோர் முகத்திலும் சோகம். கண்கலங்க என் தலை தடவி விலகினார்கள். நான் இறக்கவில்லை. ஆனால் வேறு ஏதோ மிகவும் பாரதூரமாக மனம் அடித்துக் கொண்டது. வாயில் வார்த்தைகள் வரமறுக்க, வழிந்த கண்ணீர் பாண்டேஜிக்குள் மறைந்து போனது. நான் பாண்டேஜில் வெட்டப்பட்டிருந்த ஓட்டைகளினால் பார்த்து, மூச்சு விட்டுச், சாப்பிட்டு, தண்ணீர் குடித்துக் கொண்டிருந்தேன். அப்பா போனில் “என்னால உடன வடிமுடியேலைத் தம்பி உன்ன இஞ்ச கொண்டுவாறதுக்கான அலுவல்ல ஓடித்திறியிறன் ராசா..” குரல் கம்ம “யோசிக்காதை இஞ்ச நல்ல டொக்ரேஸ் இருக்கினம் எல்லாம் சரியாப் போகும்” அப்பா விம்மினார்.

நண்பர்களுடன் வெளியே சென்ற ஒருநாள் கலைந்திருந்த என் தலைமயிரை ஒதுக்கி கன்னத்தில் மெல்லத் தட்டி “வடிவாய் இருக்கிறாய்” என்றாள் அம்மா. வெளியே கிளம்பிய நான் போக மனமின்றி அறைக்குள் மீண்டும்; புகுந்து கொண்டேன். அம்மா கதவைத் தட்டினாள். கதவைத் திறந்த என் கண்களில் கோபம் இருந்தது. “என்னப்பு” என்றாள். “அம்மா ஏனம்மா பொய் சொல்லுறீங்கள்? நீங்கள் மட்டுமில்லை தம்பி, அப்பா, என்ர ஃபிரெண்ஸ் எல்லாரும் ஏனம்மா பொய் சொல்ல வேணும். என்ர முகத்தைப் பாக்க என்னாலேயே சகிக்க முடியேலை. எல்லாம் கருகி பேய் மாதிரி இருக்கு நான் சாகேலை ஆனால் என்ர முகம் செத்திட்டுது. இனி அது திரும்ப வராது. இதுதான் உண்மை. நீங்கள் எல்லாரும் வடிவா இருக்கிறாய், வடிவாய் இருக்கிறாய் எண்டு சொல்லச் சொல்ல எனக்கு என் மேலையே வெறுப்பா இருக்கு. என்னைச் சந்தோஷப்படுத்திறதா நினைச்சு நீங்கள் ஒருத்தரும் பொய் சொல்ல வேண்டாம். வாழ்க்கை எண்டது ஒரு பாடம். நான் என்ர விபத்துக்குள்ளால இருந்து என்னை மீட்டுத் திரும்பவும் வாழ முயற்சிக்கிறன். ஆனால் என்னைச் சுத்தி எல்லாரும் நடிக்கிறது என்ர முயற்சியைப் பாழாக்கிப் போடுமோ எண்டு பயமா இருக்கம்மா? முகப்பருவுக்கே முகம் வடிவில்லாமல் போயிடும் எண்டு ஓடியோடி வைத்தியம் பாத்த நீங்கள், இப்ப என்ர முகம் வடிவாய் இருக்கிற மாதிரியும் அதுக்கு ஒண்டும் தேவையில்லாத மாதிரியும் ஒண்டுமே பூசி விடுறேலை. ஏனம்மா.? பூசுங்கோ தழும்புகள் மறைய ஏதாவது கிறீம் இருந்தால் வாங்கிப் பூசி விடுங்கோ எனக்கு என்ர அம்மா திரும்ப வேணும் என்ர முகத்தில ஒண்டுமில்லாத மாதிரி நீங்கள் நடக்கிறது என்னால தாங்கேலாமல் இருக்கம்மா” அம்மா என்னைக் கட்டிக் கொண்டு கதறினாள்.

நான் கண்ணாடியில் என் முகத்தை ஊன்றிப் பார்த்தேன். உடை மாற்றிப் பாடசாலைக்கு ஆயத்தமானேன். அம்மா ஓடிவந்து சாப்பாட்டுப் பார்சலைக் கையில் வைத்தாள். சிறிய ஒரு டப்பாவில் இருந்த கிறீமை ஒற்றை விரலால் அள்ளி என் முகத்தில் பூசினாள். நெற்றியில் கொஞ்சி, என் கை விரலை அழுத்தி வழி அனுப்பினாள். இப்போதெல்லாம் அம்மா அதிகம் கதைப்பதில்லை. அவள் கண்களில் ஒரு வித ஒளி படர்ந்திருக்கின்றது. எனக்கு மிக நெருக்கமானாள். என்னுடைய நல்ல நண்பியானாள். பொய்கள் அகன்று, இந்த அழகிய உலகில் என் வாழ்வு சந்தோஷமானது.

Wednesday, June 22, 2005

ரத்த உறவு

தமக்கான பெறுதல்களை நாடிப் போராடும் குணாம்சம் தவிர்க்க முடியாத ஒன்று. உரிமைக்குக் குரல் கொடுத்து மனிதன் மிருகமாகிப் போகும் பல சந்தர்ப்பங்கள் இருக்கின்றன. அங்கே சில நியாயப்படுத்தலுக்கும் இடமுண்டு. திருமணம், குடும்பபந்தம், ஆண்பெண் உறவு, குழந்தைகள் பெற்றோரிற்கான உறவு என மிகவும் இதமாக அணைப்புக்களும், பகிர்தல்களும் கொண்டு நகர வேண்டிய இந்த உறவு பல இடங்களில் சிதறிப் போகின்றது. காரணம் உலகின் ஒட்டுமொத்த ஆணாதிக்கத் தன்மை. நிரூபித்தல, அடக்குமுறை, தலைமை, என்று ஆண்கள் தமது குடும்ப அங்கத்தவர்களிடமே ஆளுமையைச் செலுத்தும் போது உறவுகள் உடைகின்றன. நம்பிக்கை இன்மை வளர அதுவே குடும்பத்தின் வெடித்தலுக்குக் காரணியாகின்றது. நாடு, கலாச்சாரம், நிறம்குணம் அற்று ஒட்டு மொத்த உலகும் ஆணாதிக்க வடிவில் தழைத்து நிற்கின்ற தருணத்தில் ஆணாதிக்கத்தின் உச்சக் கட்டமாக சட்டங்களுக்கு அப்பாற்பட்டு அனேக மூன்றாம் உலக நாடுகளில் குடும்பம் எனும் கூட்டினுள்ளும், ஆணாதிக்க வெறி தலை தூக்கி ஆடுவதால் பல பெண்கள் வார்தைகளற்று அடிமைகளாக உளன்று கொண்டிருக்கின்றார்கள்.

இதமான அலங்காரங்களுடனான மனதை வருடிவிடும் வசன அமைப்புக்களின் தேடல்களுக்காய் மனம் ஏங்க, நெஞ்சில் உதைக்கும் சம்பவக்கோர்வைகளால் வாசகர்களைக் கட்டிப்போட்டு எங்கேனும் எங்கேனும் ஒரு பொழுதாவது நிம்மதியாக மூச்சை இழுத்து விசுவாசம் கொள்ளத் துடிக்கும் வாசக நெஞ்சங்களை யாதார்த்தம் இது, உறைந்து போ என்று கட்டிப்போட்டுத் தாக்கி, "ரத்த உறவை" நகர்த்தியுள்ளார் எழுத்தாளர் யூமா வாசுகி.

ஒரு குரூரமான ஆளுமையின் உருவு. தனது தலமையில் உழைப்பில் குடும்பத்தை இயக்கிச் செல்லும் அதீத திமிர். நியாய தர்மங்களுக்கு அப்பாற்பட்ட அதர்மவாதி. அலட்சிய ஆண்மையின் திமிரால் தன் சொந்த மகனையே நோயுக்குக் காவு கொடுக்கும் குரூரம். தனது சகோதரனின் மனைவியுடனான உறவு இருந்தும், சமூக இயக்கத்தில் நிராகரிப்பின்றி வாழும் மனித மிருகம். அப்பா என்ற உருவ அமைப்பின் அசைவில் திடுக்கிடும் குழந்தைகள். மனதில் “அப்பா” என்ற பொருளுக்கான அன்புப் பீறிடல்கள் மதிப்பாய் ஊசலாடல நெருக்கத்தைக் கனவிலில் விரிக்கும் ஆதங்கம். தமக்கு இயமனாக இருந்திருக்கக் கூடிய தந்தையின் சாவு வீட்டில்; “டேய் தம்பி அப்பாவெடா” என்று உடலைக் காட்டிக்கதறும் மகள். தண்டிக்கப்படுவது எதற்கென்று தெரியாத தடுமாற்றத்துடனும், அப்பாவின் பசுமையான ஒரு பார்வை வீச்சுக்காகவும், அப்பாவைக் கோபம் கொள்ளாமல் செய்வதிலேயுமே வாழ்நாளைக் கழிக்கும் சின்னஞ் சிறுசுகள். அப்பாவின் அதீத இம்சைகளால் இறந்தாளோ என்று தாயின் உடலைப் புரட்டிப் போட்டு பார்த்து கண்ணீருடன் நிம்மதி கொள்ளும் அவர்களின் அன்றாட வாழ்க்கை வாசகர்களின் இருதயத்தைப் பலவீனப்படுத்தி எப்படியாவது உதவிடத் துடிக்கின்றது.

திருக்கை வாலுடன் வந்த அப்பா, மெதுவாக அதற்கு எண்ணெய் போட்டு உருவி எடுத்துக் காய வைக்கும் போது அதன் உபயோகத்தை எண்ணி கைகள் நடுங்குகின்றது. நாவலின் எந்த ஒரு பகுதியிலும் நியாயமான தீர்வுக்கான சாயல்கள் காட்டப்படவில்லை. குரூரமான மிருகத்திடம் விடப்பட்ட அபலைக் குஞ்சுகளின் வேதனையை வேடிக்கை பார்க்கும் உறவுகள், சமூகங்களுடன் சேர்ந்து ஒரு குரூரமான இறப்பை காண்பதற்கு வாசகர்களையும் தயார் படுத்தி நாவலை நகர்த்துகின்றார் எழுத்தாளர். அப்பாவின் அந்தக் குடூரமான கைகளுக்குள் அகப்பட்டு இறக்கப் போவது அம்மாவா, அக்காவா, பெரியதம்பியா, தம்பியா என்று மனம் அடித்துக் கொள்கின்றது. "டேய் தம்பி சின்னப்பிள்ளைத் தனமாக அப்பாவுக்குப் பிடிக்காத எதையும் தயவுசெய்து செய்து வைக்காதே" என்று வாசகர்கள் வாயும் புலம்புகின்றது.

அப்பாவின் இறப்பிற்குப் பின்னர் குடும்பத்தில் ஏற்பட்ட மாற்றம் சில பக்கங்களில் மட்டும் காட்டப்பட்ட போதும் வாசகர்கள் ஒவ்வொருவரும் வேண்டி நின்றது அதைத்தான் என்ற நிம்மதியுடன் நாவலை மூட முடிகின்றது. "அக்கா" என்று கதையில் விழிக்கப்படும் அந்தச் சிறுமி பாவாடை தாவணி அணிந்து பாடசாலை போகும் காட்சி ரம்மியமாக மனதை நிறைக்கின்றது. இத்தனை இம்சைகளை தாங்கி வாழப்பழகிய அந்தக் குடும்பம் இனித் தப்பிவிடும் என்ற நிம்மதி. இப்படியான குடும்பங்கள் இயங்கிக்கொண்டுதான் இருக்கின்ற என்ற உண்மையை எச்சில் விழுங்கி ஏற்றுக்கொண்டே ஆக வேண்டும்.
மனதை உலுக்க வைக்கும் கதைப் பின்னணியை தனது எளிமையான நடையில் வாசகர்களுக்குத் தந்த யூமா வாசுகியின் "ரத்த உறவு" அண்மைக்காலங்களில் வந்த சிறந்த நாவல்களில் ஒன்று என்று வாசகர்கள் எல்லோராலும் வாதங்களின்றி ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.

Tuesday, June 21, 2005

கு-டிக்டிக்-கதை

நேரம் தாமதித்து வீட்டிற்கு வந்ததால், அடித்துத் துன்புறுத்திய அண்ணனைப் பற்றி, பொலீசாரிடம் புகார் கொடுத்தாள் ஈழத்துத் தமிழ் இளம்பெண் ஒருத்தி. இந்த வழக்கு கோட்டிற்குச் வந்தபோது கனேடிய வாரப்பத்திரிகை ஒன்று, தெற்காசிய பெண்கள் அமைப்பில் ஆலோசகராகப் பணிபுரியும் தமிழ் பெண் ஒருவரிடம், இந்தச் சம்பவம் பற்றி அவர்கள் என்ன நினைக்கின்றார்கள், இவ்வாறான உபாதைக்கு உள்ளாகும் தெற்காசியப் பெண்களுக்கு அவர்கள் எந்த வகையில் உதவப் போகின்றார்கள் என்று கேட்ட போது, அந்த தமிழ் ஆலோசகர் இப்படியான பிரச்சனைகள் அனேகமாக எங்கள் நாட்டுக் கீழ்ச்சாதி மக்களாலேயே வருகின்றன. இதற்காக நான் மிகவும் மனம் வருந்துகின்றேன், வெட்கப்படுகின்றேன் என்று கூற அச்செய்தி ஆங்கிலப்பத்திரிகை ஒன்றில் வெளியானது.
இச் செய்தியைப் படித்த தமிழ் சமூக விரும்பிகள் சிலர் கொதித்தெழுந்து அந்தப் பெண்ணிற்கு எதிராகப் பத்திரிகையில் அறிக்கை விடவேண்டும், அவரைப் பணியில் இருந்து தூக்க வேண்டும் என்று அவசரக் கூட்டம் ஒன்றைக் கூடினார்கள். அக் கூட்டத்தில் எப்படிப் புலம்பெயர்ந்த தமிழ் மக்கள், புலம்பெயரும் போது சாதி வெறியையும் தம்முடன் காவி வந்துள்ளார்கள் என்று கலந்துரையாடப்பட்டது.

கூடியிருந்தவர்களில் ஒருவர் எழுந்து தனது ஊரில் தனது அயலவர்கள் எவ்வாறு தாழ்த்தப்பட்டோரை நடாத்துகின்றார்கள் என்றும், தனது பெற்றோர் மிகவும் பெருந்தன்மையாக பாரபட்சம் பார்க்காமல் கீழ்ச்சாதி மக்களை அணுகுகின்றார்கள் என்று கூறி அமர்ந்தார். அடுத்து ஒரு பெண்மணி தனது சொந்தங்கள் தமக்கு மாவிடிக்கும் மனுசிக்கு தம்முத்தத்தில் வைத்து வாழை இலையில் உணவு பாரமாறுவார் என்றும், தான் தனது குசினிக்குள் அவளை இருந்தி அவளுக்கான பிரத்தியேக கோப்பையில் உணவைப் பரிமாறுவேன் என்றும் பெருமையாகக் கூறி அமர்ந்தார். அடுத்தவர் தன் வீட்டிற்கு விளையாடவரும் கீழ்ச்சாதிப் பிள்ளைகளை தான் பாரபட்சம் பார்க்காமல் சேர்த்துக் கொள்ளுவதாகக் கூறினார். இப்படியாக கலந்து கொண்டவர்கள் உரையாற்றி, உரையாற்றி உலர்ந்து விட்ட வாயை ஈரப்படுத்த ஒருவர் அருகில் இருக்கும் ரிம்ஹோட்டன் கடைக்குச் சென்று எல்லோருக்கும் டபுள் டபுள் கோப்பி வாங்கி வந்தார்.

அதன் பின்னரும் பலரின் அநுபவப் பகிர்தலோடு பல மணிநேரங்கள் தொடர்ந்த கூட்டத்திலிருந்து, தெற்காசியப் பெண்கள் அமைப்பில் ஆலோசகராக வேலை பார்க்கும் அந்த தமிழ் பெண்ணிற்கு எதிராக ஒரு கடிதத்தை எழுத முடிவெடுத்த கூட்டத்தில் கலந்து கொண்டவர்களின் சிந்தனை சிதறல்களால் உடல்கள் நொந்து நூடில்சாகிப் போக (ஈழநாதனின் சிலாங்) இரவு உணவாகச் சைனீஸ் நூடில்ஸ் ஓடர் பண்ணலாம் என்று ஒருவர் ஆலோசனை கூற, கொஞ்சம் சிக்கின் விங்சும் சொல்லி பியர் போத்திலும் வாங்குவம் நாளைக்கு வேலையில்லைத்தானே என்று இன்னுமொருவரின் ஆலோசனையின் படி கடிதம் தயாராகும் அதே வேளை நூடில்ஸ் பியர் போன்றவையும் வந்து சேர்ந்ததன. கடித்துக், குடித்து கடிதத்தைத் தயார் செய்த மனத்திருப்தியுடன் அந்தக் கூட்டம் நிறைவிற்கு வந்தது.

(இந்தக் கதையில் இடம்பெற்ற சம்பவங்கள் அனைத்தும் கதாசியரியின் கற்பனை என்று சொல்ல மாட்டேன்)

வலைப்பதிவாளர் மகாநாட்டிற்கான ஆயத்தங்கள்

2006ம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் ரொறொண்டோவில் இடம்பெறவிருக்கும் உலக அனைத்து வலைப்பதிவாளர்கள் மகாநாட்டிற்காக ஆயத்தங்கள் இப்போதே தொடங்கி விட்டன என்பதை மகிழ்ச்சியுடன் அனைவருக்கும் அறியத்தருகின்றோம்.
அதற்கான சாட்சியங்களா மும்மரமாக வேலையில் ஈடுபட்டுக்கொண்டிருக்கும் இலவச ஊழியர்களின் புகைப்படங்களை இங்கே இணைத்துள்ளேன்.



சமையல் வேலையில் ஈடுபட்டுக்கொண்டிருக்கும் - ஜிம்மி



பாதுகாப்பிற்காக – ரெக்ஸ்



ஆலோசகர்கள் - ஜானி, லல்லி, லில்லி, பேபி, ரெக்ஸி



சுகாதாரப்பிரிவில் - ரோசி



திட்டங்களைக் கவனமாகச் செவிமடுக்கும் - பிளாக்கி



ஹொப்பஹட்டிற்குப் பயணம்



கமெரா ரெடி



ஓய்வுப்பகுதி – ப்றொண்ணி


காதல் பிரிவு – லசி, சைறண்

Monday, June 20, 2005

நஷ்ட ஈடு



“வாழாவெட்டி” என்று சமூகத்தால் விழிக்கப்படும் தாயினால் வளர்க்கப்பட்டவன் நான். இரண்டு அறைகளைக் கொண்ட மண்ணாலான கொட்டில் வீட்டின் முன்னே, உச்சி வெய்யில் நேராய் இறங்க, தன்னை ஒடுக்கி கந்தல் சேலையால் தலையை மூடிக் குந்தியிருந்து, கிடுகு பின்னி பாரமாய் சுமந்து சென்று விற்றும், பால் அப்பம், முட்டை அப்பம் என்று வட்ட வட்டமாய் வாயில் நீரூறும் சுவையுடன் அப்பங்களைச் சுட்டு விற்றும், பிள்ளைகளை வளர்த்தவள் என் அம்மா. "அம்மா" என்றால் பல காலமாய் என் மனதில் வர்ணங்கள் அற்ற கந்தல் சேலையுடன் குந்தியிருக்கும் ஒரு கொத்தியாத்தை உருவமே பதிந்திந்தது. அவள் முகத்தில் தீவிரத்தின் கீறல்கள் நிரம்பி வழியும். புன்னகைக் கோடு எங்காவது ஓடுகின்றதா என்று அவள் நித்திரையில் ஆழ்ந்திருக்கும் தருணங்களில் பக்கத்தில் இருந்து பார்த்த நாட்கள் ஏராளம். எனக்கும், என் அக்காவிற்கும் கல்வியின் முக்கியத்துவத்தை உணர வைத்தவள் அவள். என் நான்காவது வயதில் அக்காவின் படிப்பில் பலதையும் நான் தெரிந்து வைத்திருந்தேன். சாப்பாடு, நித்திரைக்கான நேரம் போக என் நேரங்கள் அனேகம் படிப்பிலேயே கரைந்தன. சிறுவயதுக்கான குறும்புகள் அனைத்தையும் இழந்தவன் நான். ஆனால் அதற்காக வருந்தியதாக ஞாபகம் இல்லை.

இரண்டு குழந்தைகளுடன் தனியாக விடப்பட்ட போதுதான் அம்மாவிற்கு கல்வியின் அருமை புரிந்தது என்பாள். தன் பெற்றோர் விட்ட தவறைத் தான் விடக்கூடாது என்பதில் மிகவுமே கவனமாக இருந்தாள். புன்னகை மறைந்த முகமானாலும் அன்பைச் சுரக்க அவள் மறந்ததில்லை. மரத்துத் சுருங்கிய கைகளால் பள்ளியால் வரும் என்னை இழுத்து நெற்றி வியர்வையை அவள் வழிப்பதில் சுகம் காண்பவன் நான். எப்போதும் என் பார்வை அவள் முகத்தில் பதிந்து எதையோ தேடும். எதைத் தேடுகின்றேன் என்பதும் புரிந்ததில்லை. என் அம்மாவை வேறு உருவமாகப் பார்க்க விரும்பினேனோ என்னவோ. பளிச்சென்ற முகத்துடன், பொட்டும், பூவும் கலர் சேலையும், சிரிப்புமாக.

அம்மாவின் பத்து விரல்களை நம்பி எமது குடும்பம் இயங்கியது. பஞ்சத்தில் படுத்தாலும் பாடசாலையை நாங்கள் ஒருநாளும் தவற விடுவதில்லை. பழுப்பேறி, மூலை சுருண்ட பாடப்புத்தக்தை நெஞ்சோடு அணைத்துக் கல்வி கற்றோம். இரவு நேரங்களில் வீட்டு வேலைகள் முடிந்த பின்னர், என்னையும் அக்காவையும் இருபுறங்களாகப் படுக்க வைத்து எங்கள் தலையைக் கைகளால் அழைந்த படியே படிப்பு, சமூகம், வாழ்வு என்று தனக்குத் தெரிந்தவற்றை எமக்குள் புகுத்தி எம்மைச் சிந்திக்க வைக்கும் அம்மா, அப்பாவின் பார்வைக்கு அழகற்றவள். கறுப்பாக, கட்டையாக இருக்கும் அவள் முகத்தில் பற்கள் துருத்திக்கொண்டிருக்கும். அப்பா அழகானவராம் அம்மா சொல்லி நான் அறிந்து கொண்டது. நான் அப்பாவைக் கொண்டிருப்பதாக அடிக்கடி சொல்லுவாள். அதன் பின்னர் அழகு என்பது வெறும் மாயை, அழிந்து போகக் கூடியது, அழகென்று கர்வம் கொள்பவர்கள் கோழைகள், அறிவிலிகள் எல்லாமே பார்ப்பவர் கண்களில்தான் இருக்கிறது என்றும் சேர்த்து சொல்லுவாள். எனக்கு என் நிறத்தில், அழகில் கூச்சம் இருந்தது. இதில் பெருமைகொள்ள என்ன இருக்கிறது என்ற கேள்வியும் இருந்தது.

அப்பா பக்கத்து ஊர் பெண் ஒருத்தியின் அழகில் மயங்க, அவருடனான தன் உறவை துண்டித்துக் கொண்டாள் அம்மா. தொழில் பார்க்கும் தன் உதவியில்லாமல் அம்மாவால் இரண்டு பிள்ளைகளுடன் வாழ முடியாது என்று எண்ணியிருந்த அப்பாவின் முகத்தில் கரி பூசி வாழ்ந்து காட்டினாள். பண உதவியைச் சாட்டாக வைத்து தன் பிள்ளைகளுடனான தொடர்பைத் தொடரலாம் என்று எண்ணியிருந்த அப்பாவிற்கு ஒன்றும் செய்ய முடியவில்லை. அம்மாவின், அம்மா பிள்ளைகளாக வாழ்ந்து, வளர்ந்தோம் நானும் அக்காவும். நான் அப்பாவை வெறுத்தேன். வெறும் உடல் அழகிற்காக என் அம்மாவை மோசம் செய்த மிகப் பாவியாக அவரை நான் என் மனதில் உருவகித்துக் கொண்டேன். நல்ல குணமும், படிப்பும்தான் உலகில் முக்கியம் வெளிப்புற அழகு என்பது அழிந்து போகும் என்பது சின்னவயதிலேயே எனக்குள் ஆழமாகப் புகுந்து கொண்டவை.

என் அக்கா அம்மாவை ஒத்திருந்தாள். அவளிற்குப் பாடசாலையில் பல பட்டப்பெயர்கள் இருந்தன. அவள் காது பட யாராவது படம் தெளித்தால் சுருண்டு போவாள். வீட்டு மூலையில் அம்மா பார்க்காத வண்ணம் ஒளித்திருந்து அழுவாள். ஒன்றுக்கும் மனம் உடைந்து போகக் கூடாது, அழக் கூடாது என்பது அம்மாவின் இன்னுமொரு வேண்டுகோள். என் உலகம், எனது அம்மாவையும் அக்காவையும் மட்டுமே கொண்டிருந்ததால், வக்கிரம் படைத்த வெளி உலகை நான் வெறுத்தேன். முடிந்தவரை அம்மாவையும், அக்காவையும் சந்தோஷப்படுத்துவதிலேயே எனது உலகம் உருண்டு கொண்டிருந்தது. சொந்தங்கள் “அட ஆம்பிளப்பிள்ளை வெள்ளையா வடிவா இருக்கிறான் பெட்டைச்சிதான் இப்பிடிப்போயிட்டாள்” என்று அம்மாவிடம் அங்கலாய்த்துக் கொள்ளுவார்கள். நான் என் சொந்தங்களையும் வெறுத்தேன்.

அக்கா படிப்பில் கெட்டிக்காறி. அவளுக்கு இலக்கியத்தில் ஆர்வம் அதிகமாக இருந்தது. என்னை அழைத்துக் கொண்டு யாழப்பாணத்தின் பெரிய வாசகசாலைக்குப் போவாள். எனக்கு வாசிப்பில் ஆர்வம் இல்லாது போனாலும், சும்மா இருந்து தட்டித்தட்டி அதுவே ஒரு ஆர்வமாகி மிகச் சின்ன வயதிலேயே ஈழத்து இலக்கியங்கள், தமிழ் நாட்டு இலக்கியங்கள் என்று நல்ல பல இலக்கியங்களை அடையாளம் கண்டு கொண்டேன். எனது திறமை விஞ்ஞானத்தில் இருந்தாலும் நானும் ஒரு முழுநேர இலக்கிய விரும்பியாக மாறிப்போயிருந்தேன். என் வாசிப்புக்களைப் பகிர்ந்து கொள்ள என் பாடசாலையில் ஒருவரும் இல்லை. இதனால் நான் வாசிப்பவற்றையெல்லாம் அம்மா பாத்திரங்கள் கழுவும் போதோ, மீன் கழுவும் போதோ, அருகில் குந்தியிருந்து விளக்கத் தொடங்கினேன். அம்மா புரிந்து கொண்டாளா இல்லையா தெரியிவில்லை ஆனால் என்னை ஊக்குவிப்பதற்காக “உம்” கொட்டத் தவறுவதில்லை.

பின்னர் இலக்கியக் கட்டுரைகள், அரசியல் கட்டுரைகள், வேற்றுமொழி படைப்புக்கள் என்று எனது வாசிப்புப் பரவத் தொடங்கியது. சிறு சிறு இலக்கியச் சந்திப்புகள் பற்றி அறிந்து கொண்டு வெறும் பார்வையாளனாக சுவரோரம் நின்று கேட்கத் தொடங்கினேன். தொடக்கத்தில் என்னை ஒருவரும் பெரிதாகக் கண்டு கொள்ளவில்லை. என் கருத்துக்கள் என் வாய் வரை வந்து மடிந்து கொண்டிருக்கும். பல சந்திப்புக்களின் பின்னர் நான் அடையாளம் காணப்பட்ட போது, நானும் கருத்துக்களைக் கூறத் தொடங்கினேன். என் ஆர்வம் அந்த இளைஞர்களைக் கவர்ந்திருந்தது. எல்லோருமே என்னிலும் விட வயதில் மிகவும் மூத்தவர்கள். இருந்தும் வாழ்வு, அரசியல், இலக்கியம் என்று என்னால் அவர்களுடன் கலந்துரையாட முடிந்தது. நான் அவர்களை நண்பர்களாகக் கொண்டதற்காப் பெருமைப்பட்டுக் கொள்வேன். எல்லாம் அறிந்த, நல்ல மனம் கொண்ட முழுமையான நண்பர்கள் அவர்கள் என்பது என் கணிப்பு. இலக்கியக் கலந்துரையாடல் என் வீட்டிலும் சில வேளைகளில் இடம்பெறுவதுண்டு. எனது நண்பர்கள் என்று வயதில் மூத்த இளைஞர்களை வீட்டிற்கு அழைத்து வந்த போது அம்மா கொஞ்சம் சங்கடப்பட்டாள். வயதுக்கு வந்த அக்கா வீட்டில் இருக்கிறாள், பல ஆண்கள் வீட்டிற்கு வந்து போவது அம்மாவிற்குச் சரியாகப் படவில்லை. இவர்கள் மற்றைய ஆண்கள் போல் நடந்து கொள்ள மாட்டார்கள். இவர்களுக்கு சமூகம் பற்றிய மிதமான அக்கறை இருக்கின்றது என்று அவளுக்கு எடுத்துச் சொல்லி சம்மதம் வாங்கிக் கொண்டேன். தொடக்கத்தில் அக்கா உள்ளே ஒளிந்து கொண்டாலும், போகப் போக அவர்கள் பேச்சு அவளுக்கு சுவாரசியத்தையும் ஆர்வத்தையும் கொடுக்கத் தானாகவே வெளியே வந்து எங்களுடன் கலந்து கொண்டு “அம்மாவந்தாள்” அப்பு “மோகமுள்” ஜானகி “அக்கினிப்பிரவேசம்” கங்கா என்று அலசினாள்.

எனக்கு பாடசாலையில் மாலை நேரங்களில் வாசகசாலையில் பகுதி நேர வேலையும், அக்காவுக்கு பாடசாலை நேரம் போக ஒரு தனியார் கல்விச் சாலையில் பகுதி நேர வேலையும் கிடைத்தன. அம்மா இப்போதெல்லாம் குந்தியிருந்து கிடுகு பின்னுவதில்லை. நாங்கள் கொண்டு வரும் பணத்திலேயே எங்கள் குடும்பம் தேவைகளைப் பூர்த்தி செய்து கொண்டது. நானும் நண்பர்களும் நாடகங்கள், திரைப்படங்கள் பார்க்கச் செல்லும் போது அக்கா தயங்காமல் எங்களுடன் இணைந்து கொள்வாள். விடுமுறை நாட்களில் கட்டுச் சாப்பாட்டுடன் கடற்கரைக்கோ, பூங்காவிற்கோ சென்று இலக்கிய வாதங்களுடன் நாட்களைக் கழிக்கப் பழகிக் கொண்டோம். என் நண்பர்களில் ஒருவர் எனது அக்காவை விரும்பித் திருமணம் செய்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்று நான் அவ்வப்போது எண்ணுவதுண்டு. அக்கா சமூகப்பார்வைக்கு அழகற்றவள். சீதணம் என்று கொடுக்க எங்களிடம் ஒன்றுமிருக்கவில்லை. அக்காவிடமிருந்தது அறிவும், குணமும் மட்டுமே. அறிவையும் குணத்தையும் யாசித்து திருமணம் செய்து கொள்ள முன்வரும் ஆண்கள் பரந்த மனம் உடையவர்களாக இருக்க வேண்டும். என் நண்பர்கள் அப்படியானவர்களாக இருந்த போதும், வெறும் நட்பு என்ற ரீதியில் பழகி விடும் மிக நல்லவர்களாக இருப்பது எனக்குக் கொஞ்சம் சங்கடமாகவே இருந்தது.

அக்கா தமிழ் இலக்கியப் பட்டப்படிப்பை முடித்துக் கொண்டு ஆசிரியராக வேலைக்குச் சேர்ந்தாள். நான் பொறியிலல் துறையில் மேற்படிப்பை மேற் கொண்டேன். நண்பர்களில் சிலர் திருமணம் செய்து கொண்டு குடும்பஸ்தர்களாகி விட, சிலர் வேலை நிமித்தம் வேறு ஊருக்குப் போய் விட்டார்கள். நான் என் ஆசையை விழுங்கிக் கொண்டேன். எல்லா அம்மாக்களையும் போல் என் அம்மாவும் ஆசைப்பட்டாள் என் அக்காவின் திருமணத்திற்காக. சாதகத்தை வெளியே எடுத்தாள். மெல்லி படலம் போல் முகத்தை மேவியிருக்கும் சோகத்துடன் அக்கா மறுப்போ, சம்மதமோ எதுவுமின்றி மௌனமானாள். நான் அவளின் விருப்பம் கேட்டுப் பல தடவை கதை தொடக்கிய போது பேச்சை வேறு திசைமாற்றினாள். என் எதிர்ப்பையும் மீறி பெண்பார்க்கும் சடங்கு என் வீட்டிலும் தொடங்கியது. பெண்ணிற்கு அழகு குறைந்திருந்ததால், பெருந்தன்மையுடன் பணத்தைக் கூட்டிக் கேட்டார்கள் மாப்பிள்ளைச் சிங்கங்கள். பல சாதகங்கள் தட்டிப் போய் கடைசியில் தன்னிலும் பதினைந்து வயது மூத்த மாப்பிள்ளைக்குக் கழுத்தை நீட்டி வீட்டை விட்டு வெளியேறினாள் அக்கா. அக்காவைப் பிரிவதற்காய் அம்மா கண் கலங்கினாள். நான் கலங்கிப் போனேன். இந்த உலகம், மனித மனங்கள், சமூகவழக்கங்கள் எல்லாவற்றின் மேலும் எனக்கு வெறுப்பு. மிக நல்லவர்களா இருந்த என் நண்பர்களையும் நான் வெறுத்தேன்.

அக்காவிடமிருந்து எனக்கு ஒரு கடிதம் வந்தது.



அன்புள்ள தம்பிக்கு,

உன் சுகம் எப்படி? நான் இங்கே நல்ல சந்தோஷமாக இருக்கின்றேன். இந்தக் கடிதம் உனக்கு மட்டுமே எழுதுகின்றேன். படித்தவுடன் கிழித்து எறிந்து விடு. அம்மாவிடம் காட்டி விடாதே. தம்பி என் திருமணத்தின் போது நீ கலங்கி நின்றது எனக்கு இன்னும் கண்களுக்குள் நிற்கின்றது. நீ திருமணம் பற்றிய எனது எதிர்பார்ப்புக்களை கேட்ட போதெல்லாம் நான் பேச்சைத் திசை மாற்றினேன் என்பது உனக்குப் புரிந்திருக்கும். புரிந்து நீ குழம்பியதை நான் அறிவேன். தம்பி மனிதர்களில் ஒருவமே நிறைவானவர்கள் இல்லை. பல அறிஞர்களின் புத்தகத்தை வாசித்து விட்டதால் பெருந்தன்மையுடன் எல்லோரும் நடப்பார்கள், இருப்பார்கள் என்று எதிர்பார்ப்பது தவறு. எல்லோருமே சுயநலவாதிகள். நானும் நீயும் கூடத்தான். உன் படித்த நல்ல வேலையில் இருக்கும் நண்பர்களில் ஒருவராவது என்னை விரும்பித் திருமணம் செய்ய மாட்டார்களா என்று நீ மனதுக்குள் ஏங்கியதை நான் அறிவேன். அது உன் சுயநலம். எனக்குள்ளும் அதே சுயநலமிருந்ததால் அழகான உன் நண்பன் ஜெகனை நான் காதலித்தேன். அவனும் காதலித்தான். ஆனால் அது உனக்குத் தெரியாது. பின்னர் அவன் தன் சுயநலமாக பணக்காற அழகி ஒருத்தியைக் கலியாணம் செய்து கொண்டு விட்டான். இங்கே யாரும் யாரையும் குறை சொல்ல முடியாது. எல்லோருமே சுயநலமாகத்தான் காயை நகர்த்துகின்றோம். வெற்றி சிலருக்குக் கிடைக்கிறது. தோற்பவர்கள் இறப்பதில்லை. வாழ்ந்துதான் முடிக்கின்றார்கள். நான் இப்போது சந்தோஷமாக இருக்கின்றேன். இவர் எனக்குப் பொருத்தமான நல்ல நண்பராக இருக்கின்றார். நீ அதிகம் யோசிக்காமல் சந்தோஷமாக இரு. அம்மா எப்படி இருக்கின்றா? பதில் போடு.

இப்படிக்கு உனது அக்கா.

நான் கடிதத்தைத்தோடு, எனக்குள்ளிருந்த பலவற்றைக் கிழித்துப் போட்டேன். எல்லோரும் சுயநலவாதிகள். அக்கா அழகாகச் சொல்லிவிட்டாள். என்னால் ஏற்க முடியாமல் இருந்தது. ஒருவேளை சுயநலவாதிகள் ஒப்பீட்டல் கூடுதலாக இருக்க முடியும். ஆனால் உலகில் எல்லோருமே சுயநலவாதிகள் என்று ஒட்டு மொத்தமாக கூற முடியுமா? என் அப்பா சுயநலவாதி. ஆனால் அம்மா அவளை எப்படி சுயநலவாதியென்பேன். அம்மாவைப்பற்றி எனது மனம் ஆராயத் தொடங்கியது. தனியாக கிடுகு பின்னி என்னையும் அக்காவையும் படிப்பித்தவள். தன் சுகங்களை காவு கொடுத்தவள். இவள் எப்படி சுயநலவாதியெனும் அடைப்புக்குறிக்குள்?.
“அம்மா நானும் அக்கா மாதிரித் தமிழ் இலக்கியம் படிக்கப் போறன். எனக்கு விஞ்ஞானத்தில நாட்மில்லாமல் இருக்குது” நான் மண்டாடியபோது. “அப்பா இல்லாமல் கூனிக்குறுகி நிண்டு கிடுகு பின்னி உன்னைப் படிப்பிச்சனான். சாப்பாட்டுக்கு வழியில்லை, பிள்ளை என்ஜினியரா வர வேணுமெண்டு கனவு காணுறாள், எண்டு என்னைப் பழிச்சாக்களுக்கு நான் வெண்டு காட்ட வேணும்” அம்மாவின் அந்த வார்த்தைகள் என் தலையின் ஒரு மூலையில் ஓடி மறைந்தது.

நான் சுயநலவாதியாக இருக்க விரும்பவில்லை. முடிந்த வரை நான் என் வாழ்க்கையின் ஒவ்வொரு முடிவையும் கண்காணித்து, சுயநலமற்று வாழ முனைய வேண்டும் என்று உறுதி கொண்டேன். அதன் பின்னர் என் ஒவ்வொரு அசைவும் மிக நிதானமாக சுயநலமற்றிருந்தது எனக்குள் பெருமையையும், நிம்மதியையும் தந்தன. கல்வியை முடித்துக் கொண்டு வேலையில் சேர்ந்த போது பணக்காற அழகிகளின் சாதகங்களுடன் அம்மா வந்தாள். எல்லாவற்றையும் ஒதுக்கி விட்டு என் அம்மாவும், அக்காவும் எதற்காக நிராகரிக்கப்பட்டார்களோ அதே காரணமான அழகற்றவள் என்று சமூகத்தால் பட்டம் கூ+ட்டப்பட்ட ஒரு பெண்ணை மணந்து கொண்டேன். மீண்டும் பெருமையும், நிறைவும் எனக்குள். சுயநலமற்ற விட்டுக் கொடுப்போடு என் வாழ்வு நிறைவாக நகர ஒன்று, இரண்டு என்று இரண்டு குழந்தைகளுக்கு நல்ல அப்பாவானேன்.

எனக்கு மலை நாட்டிற்கு மாற்றல் வந்தது. கைக் குழந்தையுடன் கஷ்டம் வேண்டாம் முதலில் தனியே போய் செட்டில் ஆகிப் பின்னர் குடும்பத்தை அழைத்துக் கொள்ளலாம் என்று ஒரு வீட்டில் கிடைத்த சிறிய அறையில் இரண்டு மாதங்கள் போக்கிக் கொண்டேன். புதிய வேலைத்தளம், வேலைப் பழு அதிகமாக இருந்ததால் கிழமைக்கு ஒரு முறை மட்டும் தொலைபேசியில் மனைவி, அம்மாவுடன் கதைக்கும் வாய்ப்புக் கிடைத்தது. வேலை முடிந்து வீட்டிற்கு உடம்பு அலுப்போடு வந்தால், வீட்டு வேலைக்காறி சாப்பாடு கொண்டு வந்து அறையில் பரிமாறுவாள். தொடக்கத்தில் புதிய வேலை, புதிய மனிதர்கள் என்று என் கவனம் எங்கோ இருந்து காலப்போக்கில் வேலைக்காறியின் மேல் திரும்பியது. சின்னப்பெண். கலியாணமானவள். மருண்ட விழிகளுடன் கொள்ளை அழகாக இருந்தாள். வேண்டுமென்றே உடைகளை விலத்துவாளா? இல்லை தற்செயலானதா என்ற கேள்வி எனக்குள் இல்லாமல் அவள் அழகை படிக்கத் தொடங்கினேன். பொன்நிற பூனை மயிர்கள் மார்பில் புரள, மெல்லிய மண்ணிறத்து விம்மல் எனக்குள் இரசாயண மாற்றத்தை உண்டு பண்ணியது. கண்கள் கருகருவென்று காமம் பொங்கிமிதக்க நின்றாள். நான் கால்களை வேகமாக ஆட்டி ஆட்டி என்னைக் கட்டுக்குள் கொண்டு வந்தேன். மெல்லிய உதட்டுக்குள் எப்போதும் இருக்கும் ஒரு சிறு புன்னகை எத்தனை நாளுக்கு பாப்போம் என்று பயம் காட்டியது. வற்றிய என் மனைவியின் உடலில் உருண்டு புரண்டது ஞாபகம் வர மனதுக்குள் ஏக்கம் பற்றிக் கொண்டது. தொடைகள் திரள கால்களை நிலத்தில் ஊன்றி அழுத்தினேன். இப்படி ஒரு உடலை அனுபவிக்கும் சாத்தியமே வாழ்வில் இல்லாமல் போய் விடுமா? துக்கம் மனதுக்குள் மேவத்தொடங்கியது. சாப்பாடு தொண்டைக் குழிக்குள் சிக்கி மூச்சுத் திணற அவள் கையைப் பிடித்து இழுத்து அணைத்து முத்தமிட்டேன். அவளின் விம்மிய மார்புகள் என் நெஞ்சோடு உரசி என் உஷ்ணத்தை உச்சிக்குக் கொண்டு வந்தது. என் பிடியை விலக்கி அவள் நிதானமாக வெளியேறி தூரப் போய் புள்ளியாகி மறைந்து போனாள்.