Tuesday, May 31, 2005

சூட் வாங்கப் போறன்நெஞ்சை எதுவோ அழுத்தி, அழுத்தி இறுக்கிக் கொள்ள பொய்யற்ற வேதனையுடன் அந்த வீதியால் நடந்து செல்கின்றேன். பல முக்கிய சந்தர்ப்பங்களில் எனது கார் என்னை கை விட்டு விடுவதுண்டு. இன்றும் அப்படித்தான். அனேகமாக இந்த வீதியால் காரில் செல்லும் போது அந்த ஃப்யூன்றல் ஃகோம்மைக் கடக்கையில் எனக்குள் பலவிதமான கற்பனைகள் வந்து செல்லும். எத்தனை உயிரற்ற உடல்கள் இந்த மண்டபத்திற்கு வந்து சென்றிருக்கும். கைக்குழந்தையில் இருந்து கைத்தடிக்காறர்கள் வரை, ஒரு வினாடியில் விபத்தால் இறந்தவரும் பலவருடங்களாக நோயால் அவதிப்பட்டுச் சிதைந்தவரும், வாழ ஆசைகொண்ட கொலைசெய்யப்பட்டோரும் வாழ்வை வெறுத்த தற்கொலையாளிகளும், வடதுருவம் தென்துருவம், மொழிகளால் வேறுபட்டோர் நிறங்களால், குணங்களால்.. இப்படியே என் கற்பனை வளர்ந்து செல்ல செல்ல வேண்டிய இடத்திற்கு கார் தானாக எனைக் கொண்டு சேர்பதுண்டு. இரவு நேரங்களில் இந்த வீதியால் தனியே வருவதை தவிர்ப்பேன். ஆவி, பேய் போன்றவற்றில் எனக்கு நம்பிக்கை இல்லாததுபோல் வெளி உலகிற்குக் காட்டிக் கொண்டாலும் தனியே இந்த வீதியில் வரும் போது தேவையில்லாத கற்பனை எல்லாம் வந்து என்னைப் பயமுறுத்தும். அவசரமாக அந்தப் பொழுதுதான் நான் பார்த்த பேய்ப்படத்தில் ரீல் மனக்கண்ணில் ஓடும். நண்பன் சொன்ன ஆவிக்கதையில் ஞாபகம் வரும். பல வருடங்களிற்கு முன்னமே இறந்த உறவுகளின் முகம் தெரியும். பேய் இருக்கோ என்னவோ நான் வீணாக "ரிஸ்க்" எடுக்க விரும்பாதவனாக்கும்.

ஒருநாள் என் தற்போதைய மனைவியும் முன்னாள் காதலியுமான சாரதாவோடு இந்தப் பாதையால் இரவு வரவேண்டியிருக்க நான் காரை வேறுபக்கமாகத் திருப்புவதைக் கண்டு விட்டு “எங்க போறியள்?” எண்டாள். உண்மையைச் சொன்னால் என் ஆண்மைக்கு இழுக்கென்று விட்டு நான் சமாளிக்க, அவள் வாயுக்க சிரிச்சுக் கொண்டு “அப்ப பிள்ளை சொன்னது உண்மைதான்” எண்டாள். எனக்குக் கொஞ்சம் விளங்கி விட நான் மௌனமானேன். “அப்பாக்குப் பேய்க்குப் பயமம்மா” மகள் சொல்லிச் சிரிச்சது நினைவுக்கு வந்தது. அப்ப நான் மட்டுமா இந்த ரோட்டால போகப் பயப்பிடுறன். மற்றாக்கள் என்னை மாதிரியெல்லாம் கண்ட, கண்ட கற்பனை பண்ணிப் பயப்பிடுறேலையோ? எனக்குள் குடையத் தொடங்கியது.

பள்ளிக் கூட நாட்களில வகுப்புக்குக் குண்டு போட்டிட்டு பெடியளோடை ராணி தியேட்டருக்க புகுந்து படம் பார்க்கும் போது எல்லாப் பெடியங்களும் நாயகிகளின் மார்பு, இடை, தொடை எண்டு ரசிச்சு விசிலடிக்க நான் மட்டும் நாயகிக்கு மிக நெருங்கியிருக்கிற நாயகனின்ர “குறி” யில கண்ணாய் இருப்பன். ஒரு வடிவான பொம்பிளையோட இவ்வளவு கிட்டக் கட்டிப்பிடிச்சுக் கொண்டு இருந்தால் உணர்ச்சிகள் கிளறுப்படாதோ? எண்ட கேள்வி என்னைப் போட்டுக் குடையும். ஆங்கிலப் படம் பாக்கேக்க முத்தக் காட்சிகளில இவர்களின் வாய் மணக்காதோ? கேள்வி எழும்பும். இப்பிடி வினோதமான கேள்வி எழும்பி, எழும்பி அடங்குமே தவிர நான் ஒருத்தரிடமும் இதுபற்றிக் கேட்பதில்லை.

இன்னும் கொஞ்சத் தூரம் தான் இருந்தது அந்த ஃபியூன்றல் ஃஹோமை அடைவதற்கு. வழியில் இருந்த கண்ணாடிக் கட்டிடம் ஒன்றை நான் கடக்கும் போது என் உருவபிரதிபிலிப்பைக் கண்டு சிறிது நேரம் அங்கு நின்று எனது உடை, தலைஇழுப்பு போன்றவை சரியாக இருக்கிறதா? என்று நோட்டம் விட்டேன். செத்த வீட்டிற்காக கறுப்பு பாண்ட்ஸ்உம், வெள்ளை சேட்டும் போட்டிருந்தேன். கனநாட்களாக அலுமாரியில் போடப்படாமல் தூங்கியதால் சேட் கொஞ்சம் இறுக்கமாய் இருந்தது. புதுசா ஒண்டு வாங்குவம் எண்டால் மனம் வரவில்லை. ஒருநாள் கூத்துக்கு ஏன் வீணாக் காசைச் சிலவழிப்பான் என்று இறுக்கி பட்டினைப் பூட்டிவிட்டு வந்து விட்டேன். கொஞ்ச நேரம் தானே சரிக்கட்டுவம் என்று மூச்சை இழுத்துப் பிடித்துக் கொண்டு நடந்தேன்.
கனடா வந்து இத்தின வருஷத்தில நான் ஒரு நாளும் ஃபியூன்றல் ஃஹோம் போனதில்லை. யாராவது செத்தா அவர்கள் வீட்டிற்கு போய் ஒருக்கா முகத்தைக் காட்டி விட்டு மாறி விடுவது எனது வழக்கம். ஆனால் இது என்னுடைய நண்பன் நேசனின் மரணவீடு. அதுவும் என்னோடு ஒன்றாய் படித்து. ஒன்றாய் வேலை செய்து ஒரு உடன் பிறப்பு போல வாழ்ந்தவன் திடீரெண்டு நெஞ்சு நோவென்று சொல்லி இறந்து போனான்.
சாரதா கத்தினாள். “சொன்னாக் கேக்கிறியளே ஆடு ஆடாச் சாப்பிடுங்கோ. பத்தாததுக்கு தேங்காய்ப்பூ போட்ட புட்டு வேற ஒரு நாளைக்கு நீங்களும் இப்பிடித்தான் திடீரெண்டு போகப்போறியள், நான் இந்தப் பிள்ளைகளோட கிடந்து மல்லுக்கட்டுறன்” எனக்கு அவள் அவசரமாக நாள் குறித்தாள். நான் என்னைக் குனிந்து பார்த்தேன் கால்களைக் காணவில்லை. நாளையில இருந்து விடி விடிய வீட்டைச் சுத்தி ஓட வேணும். முடிவெடுத்தேன். அடிக்கடி இப்பிடி முடிவெடுத்த படியே இருந்தேன்.

இறப்பதற்கு முதல்நாள் கூட நேசன் என்னுடன்தான் கழித்தான். ஊர்ப் பெடியளின் விளையாட்டுப் போட்டியைப் பார்த்து விட்டு இரவு என்னுடைய வீட்டில் ஆட்டு இறைச்சிக்கறியும், புட்டும் சாப்பிட்டு விட்டுச் சென்றவன் அடுத்தநாள் காலை வேலையில் நெஞ்சு நோகுது எண்டான் மௌனமாக ஆர்பாட்டம் இன்றி இறந்து போனான்.
நான் பொக்கெற்றுக்குள் இருந்து சீப்பை எடுத்து தலையை ஒருமுறை இழுத்துக் கொண்டேன். ஆட்டு இறைச்சிக்கறியும், புட்டும் என் மனதுக்குள் வந்தது. இதனால்தான் நேசன் இறந்தானோ? நான் தான் அவனைக் கொன்றேனோ? அவனுக்கு ஏன்கெனவோ இருதயக்கோளாறு இருப்பது தெரிந்தும் கொழுப்புக் கூடிய சாப்பாட்டை சாப்பிட வைத்தது என் தவறோ? குற்றஉணர்வு எனைத் தாக்கி, அந்த வேகத்திலேயே “சா” யாருக்கும் எந்த நேரமும் வரும் சும்மா நான் என்னை குற்றவாளியாக்கிக் கொண்டு என்று என்னை நானே சமாதானப் படுத்தி கண்ணாடியில் முகத்தை சோகமாக வைத்துப் பார்த்து மரணவீட்டிற்கு இது போதும் என்ற திருப்தியோடு அந்த ஃப்யூன்றல் ஃஹோமிற்குள் நுழைந்தேன்.
வாசுகி கதறிக்கொண்டிருந்தாள். அவளை யாரோ ஒரு பெண் அணைத்துக் கொண்டிருந்தாள். நல்லா நடிக்கிறான் எப்ப பாத்தாலும் நேசனை பேசிக்கொண்டிருப்பாள் இப்ப கத்துறாள். “பாவம் அந்தப் பிள்ளை நேசன் குடிச்சுப் போட்டுக் கார் ஓடினா பேசுவாள்தானே, உங்களுக்கு உங்கட ப்ரெண்டுக்கு புத்தி சொல்ல வக்கில்லை அந்தப் பிள்ளையில குறைகண்டு பிடிச்சுக் கொண்டு” என் பாரியார் என் மேல் பாய்ந்தாள். "ஆம்பிளைகள் அப்பிடி இப்பித்தான் இருப்பீனம் பொம்பிளைகள் தான் அட்ஜெஸ் பண்ணிக் கொண்டு போக வேணும், ஆக்களுக்கு முன்னால இப்பிடிப் புருசனை மரியாதை இல்லாமல்” வாய்வரை வந்ததை விழுங்கிக் கொண்டன்.

நேசன் படுத்திருந்தான். முகத்தில் சின்ன ஒரு புன்னகை தெரிந்தது. முகம் கறுத்திருந்தது. நெற்றியில் விபூதி சந்தணம். 42 வயசிருக்கும் ரெண்டு சின்னப் பிள்ளைகளுக்கு அப்பா. என்னைப் போல இல்லை நேசனுக்கு கனக்க கெட்ட பழக்கவழக்கங்கள் இருந்தன. குடி, சிகரெட் எண்டு.. கனக்க எண்டு போட்டு ரெண்டு மட்டும்தான் சொல்ல முடிந்தது. மௌனமாக நின்றேன். அவனுக்குக் கெட்ட பழக்கவழக்கங்கள் இருந்தன அதானால்தான் செத்தான். "நேசன் கெட்டவன்".

“மல்லி” என் கண்களுக்குள் வந்தாள். என்னோடு வேலை செய்பவள். திருமணம் முடித்துப் பிரிந்து தனியாக வாழ்பவள். தனது உடலின் அம்சங்களை அம்மபலப்படுத்தவென்றே உடை உடுத்தி கண்களால் சிரித்துத் திரிபவள். நேசன் சொன்னான் “நல்ல வடிவா இருக்கிறாள். புருசனோட இல்லாட்டியும் வேற யாரையாவது கலியாணம் கட்டிக்கொண்டு சந்தோஷமா இருக்கலாமே. ஏன் சும்மா பேரைக் கெடுக்கிறாள்” எனக்கு அதில் உடன்பாடு இல்லை. திருமணம் என்ற பந்தத்தை அவள் விரும்பினால் என்போன்ற திருமணமான ராமர்கள் என்ன செய்வது. மல்லி என் கண்கள் பார்த்துச் சிரித்தாள். என் கைகள் அவள் உடல் கசக்கத் துருதுருத்தன. நான் ரூம் போடுவம் எண்டன், ஒத்துக் கொண்டாள். இன்றும் தொடருகிறது எமது உறவு. ஆனால் ஒரு காக்கை குருவிக்கும் தெரியாது. சிகரெட், குடிபோல் இது வெளியில் காட்டிக்கொடுத்து விடாத கெட்ட பழக்கம். "நான் நல்லவன்".

பலர் வந்து பார்த்து அழுது செல்லும் பார்வைப் பொருளாக நேசன் படுத்திருந்தான். எனக்கும் அவனுக்குமான நெருக்கம் பலர் அறிந்திருப்பதால் நான் பிரத்தியேகமாக என்னை முன் வரிசையில் அமர்த்திக் கொண்டேன். அழகான பூக்களின் அலங்காரத்தின் நடுவே நேசன் படுத்துக் கிடந்தான். என் பார்வை அவனைச் சுற்றிச் சுற்றி வந்துகொண்டிருந்தது. நேற்று நேசன் என்று அழைக்கப்பட்டவன் இன்று பிரேதம், "(b)பொடி" என்று பல பெயர்களால் அழைக்கப்படுகின்றான். நாளை மீண்டும் அவன் பார்வைக்கு வைக்கப்படுவான். நாளை மாலை நெருப்புப் போறணைக்குள் வைக்கப்பட்டுப் பொசுங்கிப் போவான். அதன் பின்னர் மெல்ல மெல்ல மறக்கப்பட்டு சுவடுகள் அழிந்து போகும். என் கண்கள் அவனைச் சுற்றிச் சுற்றி வந்தன. இது நேசன். இன்று அவனின் மரணச்சடங்கு. இதுபோல் ஒருநாள் எல்லோருக்கும் வரும். உறவுகள் அழுது சிதறும். இதுபோல ஒருநாள் எனக்கும் வரும். நினைத்தபோது என் உடல் புல்லரித்தது. நான் குனிந்து பார்த்தேன். கால்களைக் காணவில்லை. நடந்து களைக்கும் போது மூச்சு வாங்கியது. சாப்பாட்டைக் குறைக்க வேணும். உடற்பயிற்சி செய்ய வேணும். மனம் சுழன்று சுழன்று வந்தது. பாவம் சாரதா நான் திடீரென்று செத்துப் போனால் துடித்துப் போவாள். தனிய பிள்ளைகளுடன் ஐயோ நினைக்கவே நெஞ்சு நடுங்கியது. தனியே அவள் என்ன செய்வாள்? ஒருவேளை மறுமணம் செய்து கொள்வாளோ? என் உடம்பில் கோபம் உருப்பெற்றது. அழகாகவும் இளமையாகவும் இருக்கின்றாள். நான் செத்தால் நிச்சயம் மறுமணம் செய்வாள். நான் உறுதியானேன். சிலவேளை இப்பவே யாரோடையாவது தொடர்பிருக்குமோ? கடைக்குப் போனனான் அது இது என்று சாட்டுச் சொல்லி அவள் வேலையால் நேரம் கழித்து வரும் நாட்கள் நினைவிற்கு வந்தன. அப்பிடி ஏதாவது இருந்து மாட்டுப் பட்டால் கொலைதான் விழும். நான் கால்களை இறுக்கி அடித்துக் கொள்ளப் பக்கத்தில் நின்றவர் என்னை ஒரு மாதிரிப் பார்த்தார். நான் நிலத்தில் எதையோ மிதிப்பது போல் பாவனை செய்தேன் (எறும்போ?)

யாரோ தேவாரம் பாடினார்கள். நேசன் அசையாமல் கிடந்தான். அவனின் தலை சிறிது உயர்ந்து இருப்பது போல்ப்பட்டது. பாவம் கிடத்தியவர் கவனிக்கவில்லை. உயிரற்ற உடல் என்ற அலட்சியம். தலையை பதித்து விட வேண்டும் போல் மனம் பரபரத்தது. நெஞ்சு நோகேக்க எப்பிடி உணர்ந்திருப்பான். நான் கார் விபத்து ஒன்றில் அடிபட்ட போது உயிர் போவது போல் நோ கண்டேன். ஆனால் உயிர் போகவில்லை. அப்பிடியாயின் உயிர் போகும் நெஞ்சு நோ இன்னும் கூடுதலாக இருந்திருக்கும். பாவம் நேசன். என் பார்வை அவனின் உடல் மேய்ந்தது. அவன் கால் விரல்களிலிருந்து தலை வரை நினைவலைகளால் மேய்ந்தேன். துடையில் பெரிதாக ஒரு மச்சமிருக்கு. கடற்கரையில் குளிக்கும் போது கண்டுள்ளேன். எல்லாமே பொசுங்கப் போகுது. ஐயோ ஐயோ ஐயோ ஏன் சாவென்று ஒன்று உலகில்?

என் பார்வை அவன் நெஞ்சுப் பகுதியில் வந்து நின்றது. கறுப்பு சூட்டிற்கு வெள்ளை சேட் போட்டிருந்தான். கறுப்பு சூட்டின் கொலர் பகுதி மெல்லி மினுங்கும் கடும் கறுப்பு நிறத்தில் இருந்தது. நான் உற்றுப் பார்த்தேன். நேசனிடம் ஒரே ஒரு சூட் மட்டும்தான் இருக்கிறது. கடும் நீல நிறம். அது மிகப் பழையது. அவனுக்குக் கொஞ்சம் கட்டையும் கூட. இருந்தும் அவன் அதைத்தான் எல்லா விழாக்களுக்கும் போட்டு வருவான். இது கறுப்பு. புதிதுபோல் இருக்கிறது. அப்பிடியெண்டால் இதை எப்போது வாங்கினான். செத்தவீட்டிற்காக புதிதாக வாங்கியிருப்பார்களோ? இருக்காது. நேற்று செத்தவன் இண்டைக்கு பார்வைக்கு வைக்கப்பட்டிருக்கிறான். அதற்கிடையில் யார் சூட் வாங்கக் கடைக்கு ஓடுவார்கள். உது உவன் புதிதாக வாங்கியிருக்கிறான். எனக்கு மறைச்சுப் போட்டான். எனக்கு நேசன் மேல் கோவம் வந்தது.
“இப்ப உங்களுக்கு என்னத்துக்கு சூட்? ஒருநாள் கூத்துக்கு இவ்வளவு காசைச் செலவு செய்ய வேணுமே. பேசாமல் வேட்டி கட்டிக்கொண்டு வாங்கோ” புதுச் சீலையில் இருந்த சாரதா ஒரேயடியாகச் சொல்லிப் போட்டாள். கலியாண வீடு என்றால் வேட்டி, சால்வை வேறு விழா வென்றால் வெறும் பாண்ட், சேர்ட் என்று என்னைக் கட்டுப் படுத்தி வைத்திருந்தாள். நான் செத்தாப் போட உருப்படியா ஒரு சூட் இல்லை. பதினைந்து வருடத்திற்கு முன்பு என்னுடைய திருமணத்துக்கு வாங்கிய ஒன்று அலுமாரியில் எங்கோ தொங்கிக் கொண்டிருப்பது ஞாபகத்திற்கு வந்தது. அது இப்ப ஒற்றக் காலுக்க நுழையுமோ தெரியவில்லை. நான் செத்தால் அதைத்தான் போடுவார்களோ? சாரதா மேல் கோவம் வந்தது. நான் உழைக்கிறன். எனக்கு அவ ஒரு முதலாளி. நாளைக்கே நான் போய் நல்ல வடிவான ஒரு சூட் வாங்கப் போறன். நேசனின்ரையிலும் விட வடிவா விலையா..
யாரோ ஒருவர் நேசனை நினைவு கூர்ந்து பேசிக்கொண்டிருந்தார்…

பிள்ளை கெடுத்தாள் விளை

சுந்தரராமசாமியின் “பிள்ளை கெடுத்தாள் விளை” சிறுகதை பல சர்ச்சையைக் கிளப்பியிருப்பது எல்லோரும் அறிந்ததே. காலச்சுவட்டில் இச்சிறுகதையைப் படித்த போது மிக மிக நல்ல கதை என்றோ, இல்லாவிட்டால் தலித்களைக் கேவலப்படுத்தும் ஒரு சிறுகதை என்றோ என் மனதில் எதுவும் எழவில்லை. படைப்பாளியின் பின்புலங்கள், சாதி, சமயம் என்று பாராமல் ஒரு படைப்பு என்ற விதத்தில் பெரிதாக எனைத் தாக்காத ஒரு சாதாரண கதையாகவே என்னால் பார்க்க முடிந்தது. அதன் பின்னர் தொடர்ந்து வந்த விமரச்சனங்கள் சு.ரா வேண்டுமென்றே தலித்களைக் கேவலப்படுத்தியிருக்கின்றார் என்ற கருத்துக்கள் என்றால் ஏற்றுக்கொள்ள முடியாமல் இருந்தது. பதிவுகளில் ரவிக்குமாரின் பார்வையும், ஆதவன் தீட்சண்யாவின் பார்வையும் இரு வேறுபட்ட கோணங்களில் இருந்தன. எல்லாவற்றையும் படித்த படியே இருந்தேன். வலைப்பதிவுகளிலும் பல சர்ச்சைகள் கிளம்பியிருந்தன. அனேகமா எல்லோரும் சு.ரா தலித்களைக் கேவலபடுத்தியிருப்பதாக ஒத்துக் கொண்டே எழுதியிருக்கின்றார்கள்.
கடந்த சனிக்கிழமை ஒரு ஒன்று கூடலிலும் இது பற்றிய பேச்சு எழுந்தது. அங்கும் சு.ராவைத் திட்டியே எல்லோரும் கதைத்தார்கள். நான் என்னால் அவர்கள் பார்வையை ஒத்துக் கொள்ள முடியவில்லை என்று கூறியபோது, சு.ரா ஒரு பார்ப்பன் அவர் ஏன் தலித் பெண்ணைக் கேவலப்படுத்தி எழுத வேண்டும் என்ற கேள்வி எழுந்தது. அந்தத் தலித் பெண் இருக்கும் இடத்தில் ஒரு பார்பானியப் பெண்ணை வைத்துச் சுராவால் எழுத முடியுமா என்ற கேள்வியும் வைக்கப்பட்டது. என் கருத்தாக ஒரு பார்பானியப் பெண் இந்த நாயகியின் இடத்தில் இருந்திருந்தால் இப்படியான அவலத்திற்கு ஆளாகியிருக்கமாட்டாள். கதை வேறுமாதிரித் திரிக்கப்பட்டிருக்கும். அவளைப் புனிதப்படுத்திச் சிறுவனைக் கேவலப்படுத்தியிருக்கும் இந்த உலகம். ஆனால் தலித் பெண் எனும் போது அங்கே அப்பெண் கேவலப்படுத்தப்பட்டிருக்கின்றாள் இங்கிருந்துதான் படைப்பின் தேவை உள்ளது என்றேன். இல்லை சுராவால் தலிப்பெண்ணைக் கேவலமாக எழுத முடியும், ஒரு பார்பானியப் பெண்ணை எழுத முடியாது என்று இந்த வாதாட்டத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. சு.ராவின் அத்தனை நாவல்களையும் வாசித்துள்ளேன். சிறுகதைகளும், கட்டுரைகளும் அனேகம் படித்திருக்கின்றேன். தலிக்களை மையமாக வைத்து இமையம், பாமா, பூமணி போன்று சு.ரா படைப்புக்களைப் படைத்ததில்லை. இருந்தும் "தோட்டிமகன்", "செம்மீன்" போன்ற நாவல்களை மொழிபெயர்ப்பு செய்திருக்கின்றார்.
நான் பின்பு யோசித்துப் பார்த்தேன் என் கருத்தில் எனக்கு எந்த மாற்றமும் தோன்றவில்லை அதற்குக் காரணங்களாக சுரா. எனக்கு மிகவும் பிடித்த படைப்பாளி மட்டுமல்ல, அவர்கள் குடும்ப அங்கத்தவர்கள் என் நண்பர்களும் கூட. இது என்னை சு.ராவைத் தவறாகப் பார்க்க அனுமதிக்கின்றது இல்லை. (அப்படியாயின் என் பார்வை தவறானதே) இல்லாவிடில் சு.ரா உண்மையாகவே தலித்களைக் கேவலப்படுத்தி எழுதவில்லை. அவர் பார்ப்பன் என்பதால் மட்டும் அவர் விமர்சிக்கப்படுகின்றார். இதில் ஒன்றுதான் காரணமாக இருக்கும். ஆனால் சு.ரா வாசகர்களால் வைக்கப்பட்ட அவர் படித்த அத்தனை விமர்சனங்களுக்கும் பதில் சொல்லக் கடமைப்பட்டிருக்கின்றார்.

Monday, May 30, 2005

புலம்பெயர் இலக்கிய வளர்ச்சி

தமிழ் இலக்கியத்தின் தாய் நாடு, தமிழ் சினிமாவைப் பிரசவித்தவள், தமிழ் இசையின் வேர் இப்படியாகத்தான் ஈழத்தமிழர் இந்தியத் தமிழ்நாட்டை அடையாளம் காணுகின்றார்கள். ஈழத்தமிழ் மக்களின் தாய் நாடும் இந்தியா எனும் போது அவர்களை ஈழத்தமிழர்கள் துதிப்பதில் தவறில்லை. இருப்பினும், இலங்கை எனும் சிறீலங்காவில் தமிழ்மொழி பேசும் மக்களின் உணவு, உடை, மொழி வழக்கு, கலாச்சாரப் பண்பாடுகள் இந்தியத் தமிழ் நாட்டு மக்களின் கலாச்சாரம் பண்பாட்டில் இருந்து (முற்றுமுழுதான இல்லாத போதும்) வேறுபட்டே இருக்கின்றன. ஈழத்தமிழருக்கென்றொரு தனித்தன்மை இருக்கின்றது. தமிழ்நாடு ஆதிக்க, பொருளாதார பலம் கூடடியதாக இருப்பதால் ஈழத்தமிழ்கள் அனேகமாக அடையாளம் காணப்படாமலேயே இருக்கின்றார்கள்.

80களின் பின்னர் உள்நாட்டுப் போராட்டத்தால் புலம்பெயர்ந்து பல நாடுகளில் குடியேறி விட்ட ஈழத்தமிழருக்கு போராட்டப் பின்புலம், பன்முகக் கலாச்சார அறிமுகம் போன்றவை தமிழ்நாட்டு எழுத்தாளர்களுக்குக் கிடைக்காத ஒரு புதிய இலக்கியத் தளமாக இருக்கின்றன. புதிய தளத்தில் இருந்து பல தரமான இலக்கியப் படைப்புக்கள் வரவும் தொடங்கி விட்டன. இருந்தும் கனேடிய ஆங்கிலச் சமுதாயம் எப்படி அமெரிக்கர்களின் அங்கீகாரத்திற்காக வாய் பிளந்து நிற்கின்றார்களோ? இல்லையேல் அடையாளம் காணப்படும் போது அமெரிக்கா நோக்கி ஓடிவிடும் தன்மை (பணம் புகழ் காரணமாக) கொண்டு வாழுகின்றார்களோ அதே வகையில்தான் பல தரமாக ஈழத்துப் படைப்பாளிகளும் தமது படைப்பிற்கான தமிழ்நாட்டு அங்கீகாரத்தை எதிர்பார்த்துக் காத்துக்கிடக்கின்றார்கள். அட ஈழத்து இலக்கியவாதிகளான சேரனையும், ஜெயபாலனையும், சோபாசக்தியையும், அ.முத்துலிங்கத்தையும் இனம் கண்டு பேசுகின்றார்கள் எங்களை இன்னும் காணவில்லையே என்ற ஆதங்கம் சிலருக்கு. தமிழ் இலக்கியத்தின் உச்சமாக தமிழ்நாடு இயங்குவதால் ஈழத்தமிழர்களின் இந்த ஆதங்கம் எதிர்பார்ப்பு மனித உணர்வுகளின் அடிப்படையில் நியாயமானதே. (என் படைப்புக்கள் இந்திய சஞ்சிகையில் வெளிவந்த போதும், சல்மா போன்ற பெண்ணிய எழுத்தாளர்கள் என்னுடன் எனது படைப்பு பற்றிக் கலந்துரையாடியபோதும் எனக்குள்ளும் இந்த ஆதங்கள் இருந்ததை நான் உணர்ந்திருக்கின்றேன்)
இருந்தும் தமிழ்நாட்டு இலக்கியவாதிகள் அவர்களுக்குள்ளான அரசியல் உளைச்சல்களால் புலம்பெயர்ந்த ஈழத்தமிழர்களின் இலக்கியத்தை அதிகம் அடையாளம் காணாமல் உதாசீனம் செய்கின்றார்கள். போராட்டத்தை பின்புலமாகக் கொண்டு எழுதப்படும் (சோபாசக்தி போன்றோரின்) படைப்புக்களை அடையாளம் காணும் அளவிற்கு புலம்பெயர்ந்த இலக்கியம் அடையாளம் காணப்படுவதில்லை. சேரனும், ஜெயபாலனும், அ.முத்துலிங்கமும் புலம்பெயர்ந்த இலக்கியவாதிகளாக அடையாளம் காணப்பட்டவர்கள் அல்ல அவர்கள் ஈழத்து இலக்கியவாதிகளாக அடையாளம் காணப்பட்டுப் பின்னர் புலம்பெயர்ந்த பின்னர் அந்த அடையாளம் தொடருகின்றது. புலம்பெயர் இலக்கியம் இந்திய இலக்கியத் தரத்திற்கு இல்லாமல் போயினும் தமிழ்நாட்டு இலக்கியவாதிகள் தவிர்க்கும் அளவிற்கு இவை தரமற்றவை அல்ல. ஈழத்து நாடகக் கலைஞராக பாலேந்திரா அவர்கள் இந்திராபார்த்தசாரதியின் பல நாடகங்களை மேடையேற்றியுள்ளார். இருந்தும் இந்திராபார்த்தசாரதி தான் எழுதிய (பெயர் மறந்து விட்டேன்) தனது நாடக மேடை ஏற்றம் பற்றிய தொகுப்பில் பாலேந்திரா அவர்களைக் குறிப்பிடவில்லை. இது வேண்டுமென்றான தவிர்ப்பாகவே படுகின்றது.
இந்நிலையில் புலம்பெயர்ந்த ஈழத்தமிழ் இலக்கியவாதிகள் எதற்காக தமிழ்நாட்டு இலக்கியவாதிகளின் அங்கீகாரத்திற்காக ஏங்க வேண்டும்? (ஒட்டு மொத்தமாக ஏங்குகின்றார்கள் என்று கூறவில்லை)
இதே வேளையில் புலம்பெயர்ந்த இலக்கியவாதிகளால் வெளியிடப்படும் சஞ்சிகைகள் தற்போது தமிழ்நாட்டு இலக்கியச் சஞ்சிகைகள் போல் மாறிவருகின்றன. உதாரணத்திற்கு “காலம்” எனும் கனடாவில் வெளிவரும் புலம்பெயர் இலக்கியச் சஞ்சிகை பல வருடங்களாக ஈழத்து இலக்கியவாதிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து ஒரு சிறந்த புலம்பெயர் சஞ்சிகையாக வெளிவந்து கொண்டிருந்தது. ஆனால் தற்போது ஜெயமோகனும், சுந்தரராமசாமியும் என்று ஒரு "காலச்சுவடு" போலோ "உயிர்மை" போலோ மாறிவிட்டிருக்கின்றது. "காலச்சுவடு", "உயிர்மை" போன்ற சஞ்சிகைகள் தமக்கான குறிப்பிட்ட எழுத்தாளர்களின் எழுத்தைத் தாங்கி திரும்பத்திரும்ப வெளி வந்து கொண்டிருக்கும் இந்த வேளையில் அதே எழுத்தாளர்களைக் கொண்டு "காலம்" சஞ்சிகையும் கனடாவில் இருந்து வெளிவருவது வருந்தத்தக்கதே. இதற்கு முக்கிய காரணம் பொருளாதாரப் பின்னணியே. யாரோ பெயர் தெரியாத ஒரு புலம்பெயர்ந்த எழுத்தாளரின் படைப்பிலும் பார்க்க சு.ராவின் பத்தியோ, சிறுகதையோ வந்திருக்கின்றது என்றால் அவை இலகுவில் விலை போய்விடும்.
எனவே புலம்பெயர் இலக்கியச் சஞ்சிகைகளைக் கூட தமிழ்நாட்டு இலக்கியத்தில் தங்கி இருக்கும் நிலையில்தான் இருக்கின்றன. புலம்பெயர் இலக்கியவாதிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து வெளிவந்து கொண்டிருந்த "உயிர்நிழல்", "எக்சில்" போன்ற சஞ்சிகைகள் பொருளாதாரப் பிரச்சனையால் நிறுத்தப்பட்டுவிட்ட நிலையில் "காலம்" சஞ்சிகையின் ஆசிரியர் மேல் கோபம் கொள்வதில் நியாயம் இல்லை. நிறுத்தப்படுவதிலும் பார்க்க இந்திய எழுத்தாளர்களைத் தாங்கி ஒரு சஞ்சிகை வருகின்றது என்று எண்ணிவிட்டுப் போய் விடுவோம்.
புலம்பெயர் இலக்கியத்தைத் தாங்கி ஒரு சஞ்சிகை வெளிவராத பட்சத்தில் புலம்பெயர் இலக்கியம் வளர்ச்சியடையாமல் போய் விடும் அபாயம் உள்ளது. இருந்தும் இணைத்தளங்களின் செயல்பாடு சிறிது நம்பிக்கையைக் கொடுப்பதாகவே உள்ளது. சஞ்சிகைகளில் வெளிவரும் படைப்புக்களுக்கான கருத்துக்கள் அனேகம் வாசகர்களைச் சென்றடைவதில்லை. ஆனால் இணையத்தளங்களில் ஆசிரியரின் மின்அஞ்சல் இணைக்கப்படும் பட்சத்தில் உலகெங்குமிருந்து படைப்புகள் பற்றி விமர்சனங்கள் உடனுக்குடன் எழுத்தாளருக்கு மின்அஞ்சல் மூலம் வந்து சேருகின்றன. இது புதிய இலக்கியவாதிகளுக்கு ஊக்கம் அளிப்பதாகவே உள்ளது.

புலம்பெயர் ஈழத்து இலக்கியவாதிகள் இனிமேல் செய்யவேண்டியது தமிழ் நாட்டு இலக்கியவாதிகளைக் கணக்கில் எடுக்காமல் தரமான தமிழ் இலக்கியங்கள், மொழிபெயர்ப்பு இலக்கியங்கள் போன்றவற்றைப் படித்து இலக்கியத்திறனை பெருக்கும் அதே வேளை தமது படைப்புக்களை இணையத்தளங்கள் மூலமேனும் தந்துகொண்டிருத்தல் வேண்டும். ஈழத்தில் இருக்கும் போது தமிழ்நாட்டு அங்கீகாரத்தை எம்மவர்கள் எதிர்பார்த்திருக்கலாம் ஆனால் தற்போது இந்தியாவை விட எல்லாவற்றிலும் உயர்ந்த நிலையில் இருக்கும் நாட்டில் நாம் வசிக்கின்றோம். இங்கே கிடைக்கும் சேவைகளை துர்பிரயோகம் செய்யாது உபயோகப்படுத்தின் நல்ல ஒரு இலக்கியத்தளத்தை ஈழத்தமிழரால் உருவாக்க முடியும். ஈழத்தமிழரான சியாம் செல்லத்துரை போன்று பல நல்ல படைப்பாளிளை நாம் உலகிற்கு அறிமுகப்படுத்தலாம்.

Wednesday, May 25, 2005

நேர்கொண்ட பார்வை

த்ரிஷாவின் குளியல் அறைக்காட்சி என்று சஞ்சிகைகள் இணையத்தளங்களில் படித்திருக்கின்றேன். நடிகைகளைப் பற்றி அவதூறு வருவதென்பது ஒன்றும் புதிதல்ல. நடிகர்களுக்கு மிஞ்சிமிஞ்சிப் போனால் ஒரு பெண்ணுடன் தொடர்பு என்பதோடு கிசுகிசு நின்று விடும். ஆனால் நடிகைகள் எனும் போது அவரின் அன்றாட வாழ்க்கையே கண்காணிக்கப்பட்டு இரட்டை அர்த்தமாக்கிப் பிரசுரித்து மகிழ்கின்றன ஊடகங்கள். நடிகை மூக்கு ஒப்பரேஷன் செய்து கொண்டார் என்பதிலிருந்து விபச்சாரம் செய்கின்றார் என்பது வரை ஆண்களுக்குப் பிடித்த கிசுகிசுவாகவே உள்ளன. திரைப்படங்களில் கமெராவை உடல் முழுவதும் ஊர விட்டு இன்பம் காண்கின்றது சினிமா. பார்வையாளர்களின் விசில் அடி சகிக்க முடியாமல் இருக்கின்றது.
முன்பு ஒரு காலத்தில் சினிமா நடிகைகள் என்றால் பணக்கஷ்டம் உள்ளோர் என்று கொஞ்சம் தரம் குறைவாக எடை போடும் காலம் இருந்தது. ஆனால் இப்போது கல்லூரிப் பெண்களில் இருந்து வசதிபடைத்த பெண்கள்வரை நடிக்கும் ஆர்வத்தால் வருகின்றார்கள். நடிகைகளைச் சினிமா உலகம் கௌரவமாக நடாத்துகின்றது என்பதாய் சில மேலோட்டமாக கருத்துக்கள் பரவி வருகின்றன. இப்படியான கருத்துக்களும் பார்வைகளும் வரவேற்க வேண்டியவை. ஆனால் இக்கருத்துக்கள் உண்மையா என்றால்? சந்தேகமாகவே உள்ளது.
அண்மையில் எனது நண்பர் ஒருவர் வீட்டில் த்ரிஷா பாத்ரூம் இல் குளிக்கும் போது எடுத்த வீடியோ பார்க்கும் சந்தர்ப்பம் கிடைத்தது. (பார்த்த பின் எனக்கு மிகவும் குற்ற உணர்வாக இருந்தது) ஒரு சின்னப் பெண். முன்னணி நடிகையாக இருக்கின்றார். அவரை நிர்வாணமாக அக்குவேறு ஆணி வேறாக படம் பிடித்து எல்லோரின் பார்வையிலும் கிடைக்கும் படி செய்திருக்கின்றார்கள்.
இந்தியாரூடேயில் இந்த சம்பவத்தை த்ரிஷா எப்படிச் சந்தித்தார் என்பதைக் குறிப்பிட்டு அவரைப் பாராட்டி உள்ளார்கள். முன்னணி நடிகையாக இருக்கும் ஒருவரை இப்படியாகக் கேவலப்படுத்தும் போது அவர் உடைந்துபோய் சினிமாவை விட்டு விலகி விடலாம் என்று எடுத்தவர் திட்டம் போட்டிருக்கலாம். இல்லாவிட்டால் வெறும் பணத்திற்காகவோ? கிளுகிளுப்பிற்காகவோ செய்திருக்கக் கூடும். த்ரிஷா உடைந்து விடாமல் இச்சம்பவத்தை துணிவுடன் எதிர்நோக்கி தனக்குச் சந்தேகமானவரைப் பிடித்துக் கொடுத்துள்ளதாகவும் படித்தேன். அதன் பின்னர் என்ன நடந்தது என்ற தகவல் எனக்குக் கிடைக்கவில்லை.
இருந்தும் அந்தச் சின்னப் பெண்ணின் துணிவு எனக்குள் மிகுந்த மகிழ்சியைத் தந்தது. குட்டக் குட்டக் குனிவார்கள் பெண்கள் என்று நினைத்திருக்கும் எங்கள் சீர்கெட்ட சமூகத்திற்குப் பாடம் புகட்ட த்ரிஷா போன்றவர்கள் நிச்சயம் தேவை.

கனவு

எல்லோருக்கும் ஒரு நிறைவேறாத கனவு, ஆசை இருக்கும். எப்படியாவது அதை நிறைவேற்றிக் கொள்ள வேண்டும் என்ற துடிப்பு இருக்கும். சில சாத்தியமான கனவாகவும், சில சாத்தியமற்றுமிருக்கும். என் கனவு சாத்தியமானது. ஆனால் நிறைவேறுமா என்ற குழப்பம் இப்போதெல்லாம் அடிக்கடி வரத் தொடங்கிவிட்டது. என் கனவு கன்யாகுமாரியிலிருந்து இமையம் வரை பயணம் செய்ய வேண்டும். ஆடம்பரமான பயணமாக இல்லாமல் மடங்களில் சாப்பிட்டுப் படுத்து வெறுமனே ஒரு பாண்ட் ரீசேட்டுடன் முடிந்தவரை நடையாக ஒரு பயணத்தை மேற்கொள்ள வேண்டும் கால அளவு பற்றிய கவலை எனக்கில்லை. பயணத்தின் வழியில் உயிர் போயினும் அக்கறையில்லை. பயணம் மேற்கொண்ட திருப்பதி இருந்தால் போதும் என்ற கனவு தற்போதெல்லாம் ஒரு உந்துதாலக என்னை அலைக்கழிக்கின்றது. இது சாத்தியமா? என்று அடிக்கடி மனம் உழலத்தொடங்குகின்றது. குடும்பம், குழந்தைகள் என்று கட்டுப்பட்ட பின்பு இப்படியான வினோத ஆசை வரக்கூடாதோ? ஆனால் வந்து விட்டது. குழந்தைகள் வளர்ந்த பின்பு என்று தள்ளிப் போட்டால்?
என் கனவுக்குள் தான் இல்லாததால் என் கணவருக்கு என்மேல் கோபம். தனியாக இந்தியாவில் பயணம் செய்வது சாத்தியமில்லை என்பது என் நண்பர்களின் வாதம். எந்த ஒரு உறவும் இல்லாமல் புதிய இடம், புதிய மனிதர்கள் இதில் கிடைக்கும் திருப்திதான் எனக்கு வேண்டும். எது எப்படியிருப்பினும் என் கனவு இதுவாக இருக்கும் பட்சத்தில் அதை எப்படியாவது சாத்தியப்படுத்த முயல வேண்டும். முடியுமா? வெறும் கனவுதானா?

எவ்வளவுதான் சாப்பாட்டைக் கட்டுப்பாட்டில் வைத்திருந்தாலும் (நினைக்கின்றேன்) உடல்பருக்கின்றது. எவ்வளவுதான் உடற்பயிற்சி செய்தாலும் (இதுவும் நினைப்புத்தான்) சுறுசுறுப்பு இழந்து களைக்கின்றது. I am not getting any younger.. (So Sad)

பெண்கள்: நான் கணிக்கின்றேன்பயணம் நிச்சயமாகி விட்டது. .எப்படியாவது யன்னலருகிலுள்ள சீட்டை புக் பண்ணுங்கள் என்ற போது “என்ன கடைசி நேரத்தில இப்பிடி கேக்கிறீங்கள்” என்று அவன் சினப்பது தெரிந்தது.. “வரேக்க ஒரு பட்டு வேட்டி சால்வை வாங்கிக்கொண்டு வருவன்” என்றதும்.. வினோதமான ஒரு ஒலியுடன் அவன் சிரித்தான் அவ்வளவுதான்..


எனக்கான இருக்கை எண்ணை கத்திதமான ஒருத்தி சுட்டிக்காட்ட பட்டுவேட்டி சால்வைக்கு முழுக்குப் போட்டு உடலை நுழைத்துக்கொண்டேன்.. நெருக்கமாக இருந்தது.. இடதுபக்கத்தில் பின்னால் இருந்து யாரோ பின்னால் குத்துவதுபோல் ஒருவித ஒலியை எழுப்பியபடியே பிலிப்பீனோ தம்பதி ஒருவர். சண்டை போடுகிறார்களா? சம்பாஷிக்கிறார்களா? புரியவில்லை.. புரிந்து என்ன பண்ணுவது.. தொடரும் ஆறுமணித்தியாலங்களிற்கு எனக்கான பின்ணணி இசை அது என்று மட்டும் புரிந்தது.. வலதுபக்கத்திலிருந்த வெள்ளப்பெண்ணிடமிருந்து வந்த விலையுயர்ந்த வாசனை தலையிடியைத் தந்தது.. சுற்றுமுற்றும் பார்த்தேன்.. கனடா பல்கலாச்சார நாடு என்பது உறுதியானது.. வடஇந்தியப் பெண்மணி ஒருத்தி கணவனின் உழைப்பில் குடும்பத்தைப் பார்க்க ஊருக்குப் போகிறாள் போலும்.. கழுத்து கைகள் எல்லாம் கணவனின் உழைப்பால் நிறைந்திருந்தது..தலையணையை அணைத்தபடி எப்போது விமானம் கிளம்பும் குறட்டை விட்டு நித்திரை கொள்ளலாம் என்பதான நிலையில் அவள் காத்திருந்தாள்.. எடுத்துச் சென்ற புத்தகத்தைக் கூட பிரிக்க முடியாத இறுக்கத்தில் இறுகிப்போய் நான்.. என்னைத் தவிர எல்லோருமே வாழ்வில் பலமணி நேரங்களை வீணடித்துக்கொண்டிருக்கிறார்கள் என்ற எண்ணம் மீண்டும் எனக்குள் எழுந்தது.. நான் தயாரானேன்..பயணத்திற்காய்..


அவள் என்னை இறுக அணைத்துக்கொண்டாள்.. அதே நீள் சதுர முகம் வயதாகிப்போயிருந்தது.. கட்டையாய் வெட்டப்பட்ட தலைமயிரை தூக்கிக் கட்டியிருந்தாள்.. கருகருவென்றிருந்தது.. நிச்சயம் டை அடித்திருப்பாள்.. உடல் இறுகி ஆண் தனத்தைக் காட்டியது.. மீண்டும் அணைத்துக்கொண்டோம்.. “எத்தினை வருஷமாச்சு.. இப்பவாவது வந்தியே..” என்னுடைய பையைப் பறித்து கழுத்தில் மாட்டியபடியே குதிரை போல் அவள் நடந்தாள்.. நீண்ட தலைமயிரும் மெல்லிய இடையும் நாணமும்.. கூச்சமுமாக பெண்களுக்கே ஆதாரமாக இருந்தவள்.. இன்று.. என்னை நான் குனிந்து பார்த்துக்கொண்டேன்.. விதியை நொந்தபடியே அவள் பின்னால் நான்..


லண்டனின் நெளிந்த குறுகிய ரோட்டும்.. நெருப்புபெட்டி போன்ற கார்களும் வினோதமாக இருந்தது.. அவள் ஆங்கிலப் பாடல் ஒன்றைப் ஓட விட்டு என் கைகளுக்குள் தன் கையைப் பிணைத்து “நல்ல குண்டா வந்திட்டாய்.. அம்மா மாதிரி இருக்கிறாய்” என்றாள்.. பிள்ளைகள் கணவன் குடும்ப வாழ்க்கை எல்லாம் எப்பிடிப் போகுது என்றாள்.. என் அளவில் எனது சந்தோஷங்கள் எனக்குப் பிடித்திருந்தது.. பெருமையாயும் இருந்தது.. அவளை நோகடிக்க விரும்பாது நான் சிரித்தேன்.. அவளும்..


கச்சிதம் என்ற வார்த்தைக்கு அர்த்தத்தை அவள் இருப்பிடத்திற்குள் புகுந்த போது புரிந்துகொண்டேன்.. வீடு ஒரு பல்கலாச்சார பள்ளியாய் சீனர்களின் சிரித்த வாய் குண்டுப் புத்தாவிலிருந்து.. கறுப்பர்களின் நார்பின்னல் தலையுடனான சின்னச் சின்னச் சிலைகள் ஓவியங்களுடன் ஒவ்வொரு பகுதியும் வெவ்வேறு நாட்டவர்களின் கலையுணர்வைக் காட்டி நின்றது.. கண் விழித்து நான் வியப்போடு பார்க்க தனது வேலை அப்படிப்பட்டதென்றாள்.. கட்டிடக்கலை ஆராய்ச்சில் தான் வேலை செய்வதாகவும் பல நாட்டு நண்பர்கள் தனக்கு இருப்பதாகவும் சொல்லி என்னை நான் தங்கும் அறைக்கு அழைத்துச் சென்று காட்டினாள்.. எல்லாமே புதுமையாகவும் கொஞ்சம் அதிசயக்கக்கூடியதாகவும் இருந்தன..


நான் அவளுடன் தங்கும் அந்த ஒரு கிழமையில் எங்கெல்லாம் செல்வது, என்ன சாப்பிடுவது என்பதை மிகவும் நேர்த்தியாக எழுதி வைத்து என்னிடம் காட்டி சம்மதமா என்றாள்? நான் யாரையாவது பிரத்தியேகமாகச் சந்திக்க வேண்டுமா என்றும் கேட்டாள்.. அவள் எல்லாவற்றையும் ஒழுங்கு முறையோடு எழுதி வைத்து அதன்படி நடப்பது ஒரு வித செயற்கைத் தனம் போல் இருந்தாலும் அதில் இருக்கும் கச்சிதம் அவள் எனக்காக எடுத்துக்கொண்ட பிரயத்தனம் என்னைக் கவர்ந்திருந்தது.. பதினைந்து வருட நண்பியை முதல் முதலாய் பார்ப்பது போல் வினோதமாகப் பார்த்தேன்.. இருந்தும் அந்த வீடு நிறைவற்றதாய் எனக்குள் பெருமூச்சை வெளிக்கொணர்ந்ததை தவிர்க்கமுடியவில்லை..


கால்கடுக்க லண்டன் "ஹைட்" பாக்கில் பொடேரோ சிப்ஸ் சாப்பிட்டபடியே பாடசாலை நாட்களை மீட்டு மீட்டு வாய்விட்டுச் சிரித்து மீண்டும் எம்மை சிறுமிகளாக்கி புளகாந்கிதம் அடைந்தோம்.. மீட்டுப்பார்க்க எமக்குள் அடங்கியிருக்கும் நினைவுகளைப்போல் புலம்பெயர்ந்து வாழும் குழந்தைகளுக்கு இல்லை என்ற படியே அவளின் கண்பார்வையைத் தவிர்த்து “ஏன் இன்னும் கலியாணம் கட்டாமல் தனியா இருக்கிறாய்” என்ற போது அவளின் தொலைபேசி ஒலித்தது.. என்னிடம் கண்ணால் பொறு என்பதாய் காட்டி விட்டு சிறிது தூரமாய் போய் சிரித்துச் சிரித்துக் கதைத்தவள்.. பின்னர் ”என்ர ப்ரெண்ட் மைக்கல் வெரி இன்ரறஸ்ரிங் பெலோ.. நைஜீரியன் யூனிவேர்சிட்டிலிய வேலை செய்யிறான்.. எப்ப பாத்தாலும் ரிசேஜ் அது இது எண்டு உலகம் சுத்துவான்.. இப்ப பிரான்ஸ்சில நிக்கிறானாம் இன்னும் ட்ரூ வீக்ஸில இஞ்ச வந்திடுவன் எண்டான்.. நீ வாறது அவனுக்குத் தெரியும்.. உனக்கும் ஹாய் சொல்லச் சொன்னான்..” மூச்சு விடாமல் கூறியவள்.. சிறிது நிறுத்தி “வந்தால் என்னோடதான் தங்கிறவன்..” என்றாள் இயல்பாய்.. என் இயல்பு களங்கப்பட்டது..

எனக்கான அந்தக் கிழமை.. அவளுடன் சேர்ந்து ஒவ்வொரு இடமாகச்செல்லும் போதும் மிகவும் அர்த்தம் பொதிந்ததாக பிரமிப்பபை ஏற்படுத்தியது.. குடும்பத்துடன் எத்தனை இடங்களுக்குச் சென்றுள்ளேன்.. எப்போதும் பதட்டமும், களைப்பும், அலுப்பும் எப்படா வீட்டிற்கு வருவோம் என்றிருக்கும்.. வீணான சிடுசிடுப்புக்கள் கோபங்கள்.. வெறிச்சிடும் வாழ்வு.. ஆனால் இப்போது.. இவள் வாழ்வின் ஒவ்வொரு விடயத்தையும் அர்த்தமாக்கி அனுபவிக்கிறாள்.. தோள் தேய்த்து நடக்க கணவன்.. காலுக்குள் இடற குழந்தைகள் அற்ற நிலையிலும்..இவளால் சிரிக்க குதூகலிக்க முடியுமெனின்.. கணவன் குழந்தைகள்.. வீடு கார்.. அதற்கும் மேலாய் இன்னும் கொஞ்சம் போய் வாசிப்பு, எழுத்து என்று என்னை மேன்மை படுத்தி பெண்ணியம், முற்போக்குத்தனம் என்று பவிசு பண்ணி.. மேதாவியாய் உலவி.. இப்போது.. என் முற்போக்குத்தனம் பெண்ணியக் கருத்துக்கள் என்னுள் முரண்டு பிடிக்கத்தொடங்கியது.. இருந்தும் எனக்குள் இவள் ஏன் இன்னும் கலியாணம் கட்டாமல்.. ஆண்களோடு இவ்வளவு க்ளோஸாக..


லண்டனில் பிரசித்தி பெற்ற சுற்றுலாப்பயணிகள் பார்க்க வேண்டிய இடங்கள் என்ற பட்டியலை முடித்து அவளது வேலைத்தளத்திற்கும் அழைத்துச் சென்றாள்.. பல இனத்து நாட்டவர்களும் அவளைக் கண்டதும் ஓடிவந்து அணைத்து என்னையும் சுகம் விசாரித்தார்கள்.. பாடசாலை நாட்களில் ஆண்களை நிமிர்ந்து பார்க்க மாட்டாள்.. ஆனால் இப்போது.. சரளமாக ஆண்களை அணைப்பது அவர்களின் கையைப் பிடித்தபடியே உரையாடுவது.. அவளின் இந்த “போல்ட்நெஸ்” எனக்குள் வியப்பாய்..விரிய.. அவள் இடுப்பை வளைத்துப் பிடித்திருக்கும் வெள்ளையன் ஒருத்தனை தானும் அணைத்து அவன் உதட்டில் முத்தமிட்டு ஈரப்படுத்தி எல்லோரிடமும் இருந்து விடைபெற்றுக்கொண்டாள்.. நான் என்னிலிருந்து மீண்டு வர பல மணிநேரமானது..


அவளை நான் உன்னிப்பாகக் கவனித்தேன்.. ஒருவேளை தீர்க்க முடியாத நோயினால் சாகப்போகிறாளோ? இல்லாவிட்டால் காதல் தோல்வியை மறைக்க சந்தோஷமாக இருப்பதாய் பாசாங்குபண்ணுகிறாளோ..? கர்ப்பம் கொள்ளாததால் கண்டிப்போன உடல்.. நேர்கோடாய் நிமிர்ந்து நிற்கும் விதம்.. நுனிநாக்கு ஆங்கிலம்.. காற்றில் கலைந்து நெற்றியில் வழியும் கருமயிர், கன்னத்தில் குழி விழ குழந்தைபோல் சிரிப்பு.. எனக்குள் எதுவோ எழுந்து என்னைக் கேள்வி கேட்க தலையை உலுக்கி மீள முயன்று மீண்டும் தோற்றேன்..


லெமன் ரீக்குள் கொஞ்சம் தேனை விட்டு எனக்கு ஒரு கப்பை நீட்டியவள்.. சோபாவில் இரு கால்களையும் தூக்கிப்போட்டு தன்னை குஷனுக்குள் புதைத்து தனது ரீ கப்பை இரு கைகளாலும் அணைத்துப் பிடித்து வெளியேறும் சு+ட்டை உள்ளங்கைக்குள் வாங்கி ஒரு குழந்தையைப் போல் கவனமாகக் வாயருகே கொண்டு சென்று கண்களை மூடி முகர்ந்து பார்த்துப் பின்னர் ஒரு முறை மெதுவாக உறிஞ்சி.. ச்ஆஆஆஆ.. என்றாள்.. ஒரு தேனீரைக் கூட இவளால் எப்படி இவ்வளவு அலாக்காக அனுபவிக்க முடிகிறது..


எனக்குள் எழுவது என்ன?.. புரியவில்லை..புரியவதில் சம்மதமுமில்லை.. மௌனமாக இருந்து விட்டு பின்னர் மீண்டும் கேட்டேன்.. “ஏன் நீ இன்னும் கலியாணம் கட்டேலை..?” நான் கேட்பதைப் பொருட்படுத்தாது மீண்டும் ஒரு முறை தேனீரை உறிஞ்சியவள்.. என்னைப் பார்த்துச் சிரித்தாள்.. “எதுக்கு நீ இந்தியா போறாய்” தெரியாததுபோல் கேட்டாள்.. நான் அலுத்துக்கொண்டேன்.. இவள் எதையோ மறைக்கிறாள்.. உண்மையான நட்பு என்பதற்கு இவளிற்கு அர்த்தம் தெரியவில்லை என்ற கோபமும் வந்தது.. அவள் என்னையே பார்த்தபடி இருக்க.. “அதுதான் சொன்னனே.. இலக்கியச்சந்திப்பு ஒண்டு.. “பெண்ணியம்” எண்ட தலைப்பில நான் ஒரு கட்டுரை வாசிக்கப் போறன். எங்கட கலாச்சாரத்தில எப்பிடியெல்லாம் பெண்கள் அடக்கப்படுகிறார்கள்.. எண்ட கட்டுரை” என்றேன் பெருமையாய்.. பின்னர் நான் வாசிக்கும் புத்தகங்கள்.. பற்றியும் எனது முற்போக்குச் சிந்தனை கொண்ட எழுத்து.. பெண்ணியக் கருத்துக்கள் என்பன எவ்வளவு தூரம் பரவலாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது, பேசப்படுகிறது என்பது பற்றியும் பெருமை இல்லாது சொல்லி வைத்தேன்.. “குட்.. வாவ்;” என்று விட்டு மீண்டும் தேனீரை உறிஞ்சிய படியே “உன்னை நினைக்க எனக்குப் பெருமையா இருக்கு” என்றாள். எனக்குள் நான் மீண்டும் என்னைத் துளைத்தெடுத்து கேட்டேன் “ஏன் இன்னும் கலியாணம் கட்டாமல் இருக்கிறாய் ஏதாவது பேர்சனல் பிரைச்சனையா?”


அவள் கண்மூடி மீண்டும் தேனிரை உறிஞ்சியது எரிச்சலைத் தந்தது.. “நான் கேக்கிறதை நீ இக்நோ பண்ணுறாய் எனக்கு விளங்குது.. நான் நினைச்சன் நீ என்ர உண்மையா ப்ரெண்ட் எண்டு உன்னுடைய கவலை வேதனைகளை என்னோட பகிரந்து கொள்ளாமல் நீ என்னை தூரத்தில வைக்கிறாய்” நான் கொஞ்சம் உணர்ச்சிவசப் பட..அவள் வாய் விட்டுச்சிரித்தாள்.. பின்னர் எழுந்து வந்து என்னருகில் இருந்தவள்.. “ரெண்டு பிள்ளைகளுக்கு அம்மா எண்டுறாள் இன்னும் அதே குழந்தைத்தனம்” என்று என் முதுகில் தட்டி விட்டு என் ரீ கப்பையும் வாங்கிக்கொண்டு குசினியை நோக்கிச் சென்றாள்.. என்ன குழந்தைத் தனம்? நான் கேட்டதில என்ன பிழை? இந்தளவு வயதாகியும் கலியாணம் கட்டேலை.. வாரிசு எண்டு சொல்ல ஒரு பிள்ளை இல்லை.. இதில நகைச்சுவைக்கு எங்கே இடம்.. மனம் அடித்துக்கொள்ள.. நான் மௌனமாக அவளைத் தொடர்ந்தேன்..


மீண்டும் தொலைபேசி அழைத்தது.. இப்போது எல்லாமே எனக்கு கோபத்தைத் தந்தது.. அவளின் ஒவ்வொரு அசைவும் எனக்குள் அசிங்கமாகி.. உன்னிப்பாய் நான் கண்காணிக்க.. ஆங்கிலத்தில் அவள் உரையாடலில் காதல் தெரிந்தது.. இது யார் இன்னுமொருத்தனா? முதலில் நைஜீரியக் கறுப்பன் தன்னுடன் வந்து தனியாகத் தங்குவான் என்றாள்.. பின்னர் வெள்ளையனை அணைத்து முத்தமிட்டாள்.. இப்போது யார் சைனாக்காறனா? கடவுளே நல்ல காலம் நான் தனியாக இங்கு வந்தது.. இவர் வந்திருந்தால் இதுதான் உம்மட க்ளோஸ் ப்ரெண்டின்ர லச்சணமோ என்று கேட்டு என்னையும் தவறாகக் கணித்திருப்பார்.. அவள் தனது தனிமையை முழுமைபெறாத தனது வாழ்க்கையைப் பற்றிக் கதைக்காதது எனக்குள் எரிச்சலை ஏற்படுத்த எப்படியும் ஏதாவது சாக்குச் சொல்லி கெதியாக இங்கிருந்து கிளம்பிவிட வேண்டும்.. இவளோடு தனித்திருந்தால் தெரிந்தவர்கள் பார்வையில் பட்டு வைத்தால்? நானும் கணிக்கப்பட்டு விடுவேன்..


வாய்க்குள் ஏதோ பாடலை முணுமுணுத்தவள்.. நான் அவளையே உற்றுப்பார்த்தபடி நிற்பதைக் கவனித்து விட்டு “என்ன?” என்பது போல் தலையை ஆட்டினாள்..

“நீ எதையோ என்னட்ட இருந்து மறைக்கிறாய்.. நீ இன்னும் கலியாணம் கட்டாமல் இருக்கிறதுக்கு ஏதோ பெரிய காரணம் இருக்க வேணும் சொல்ல விருப்பமில்லாட்டி விடு..” நான் முகத்தை தூக்கி வைத்துக்கொண்டேன்.. அவள் என்னைப் பார்த்து ஒரு விதமாகச் சிரித்தபடியே.. “ சரி சொல்லு. நீ சந்தோஷமா இருக்கிறாயா?” கேட்டாள்.. “ ஓம் அதில என்ன சந்தேகம்.. நல்ல அண்டஸ்ராண்டிங்கான புருஷன் நல்ல வடிவான கெட்டிக்காரப் பிள்ளைகள்.. வசதிக்கும் குறைவில்லை.. அதோட என்ர வாசிப்பு, எழுத்து எண்டு எவ்வளவு சந்தோஷமா இருக்கிறன்.. இதுக்கு மேல ஒரு பொம்பிளைக்கு என்ன வேணும் சொல்லு” என் முகத்தில் அதி உயர்ந்த பெருமை வழிய.. அவள் என்னை உற்றுப் பார்த்தாள்.. அவள் கண்களின் தீவிர ஒளி எனைத் தாக்க நான் பார்வையைத் தாள்த்திக்கொண்டேன்.. என் கைகளைப் பற்றிய படியே அவள் சொன்னாள்.. “நீ சந்தோஷமா இருக்கிறாய் எண்டதை முற்றும் முழுதாக நான் நம்பிறன்.. ஏன் கலியாணம் கட்டினனீ பிள்ளைகளைப் பெத்தனீ எண்டு நான் உன்னட்ட எப்பவாவது கேட்டனானா? என் நெற்றியில் முத்தமிட்டவள் தனது கைகளைக் கழுவி விட்டு படுப்பதற்கான ஆயத்தங்களைச் செய்யத் தொடங்கியிருந்தாள்.. நீண்ட நேரமாக என்னால் நின்ற இடத்தை விட்டு அசையமுடியவில்லை..

Tuesday, May 24, 2005

புலம்பெயர்ந்த ஒரு பார்வைதிறந்து விட்ட யன்னல்
உட்புகுந்து எனைப் பார்க்கும் காற்று
விறைத்து நிற்கும் மேப்பிள் மரம்
அதன் மேல் பாதை தவறிய வெண்புறா
தூங்கி வழியும் தபால்பெட்டி.

எல்லாவற்றின் பார்வையும்
என்மேல் என்பதாய் என்பார்வை.

ஆமைபோல் உள்ளிழுத்த தலையுடன் நான்.

பார்வையின் அர்த்தத்தை
சொல்ல மறுக்கும் கண்ணாடி.

விறகடுப்பும்
கிணற்றடியும்
தும்புத்தடியும்
வேற்று மொழியாய்
எனைப் பார்த்துக் கண் சிமிட்ட,
நான்கு சுவரும்
அருவருப்போடு
முகந் தூக்கிக் கொண்டன.

கேட்பதற்கு யாருமின்றி மூச்சு முட்ட
இழுத்து மூடும் அகலத் திறந்த யன்னல்.
மீண்டும்
திறந்து கொள்ளும் இறப்பதற்கு மனமின்றி.

கடந்து செல்லும் அவன் பார்வையும்
பிரிதாபமாய் எனைப் பார்க்கும்.

2001 கணையாழி

கவிதைஎன்னை நான் உங்களுக்கு அறிமுகப்படுத்துகின்றேன்
நான் ஒரு பெண்
பிறந்த போதே
பெண் என்று உங்களால் அடையாளப்படுத்தப்பட்டவள் நான்
அடையாளங்கள் உங்களுக்கு இலகுவாயிற்று
அடையாளங்களை ஆகர்ஷித்தீர்கள்
அடையாளங்களைக் கொண்டு என்னைக் கட்டிப்போட முனைந்தீர்கள்

அடையாளங்களை நான் வெறுக்கின்றேன்
அவை புற்று நோயைப் போல் என்னை அரிக்கக் கூடியவை
விலங்குகளாகி எனை சிறையில் பூட்ட முயலுபவை
பொதியை என்மேல் திணிப்பவை
அடையாளங்கள் அழிக்கப்பட வேண்டியவை

பெண் என்பதாய்
உங்களால் எனக்குக் கொடுக்கப்பட்ட
அத்தனை அடையாளங்களையும் அழித்து விட்டேன்
அடையாளங்களின் அடைகலம் எனக்கு வேண்டியதில்லை
இனி எப்படி என்னை அடையாளம் காணப்போகின்றீர்கள்?

நான் என்னை நானாக அடையாளம் காண்கின்றேன்
முடிந்தால்
உங்கள் அடையாளங்களையும் அழித்துக் கொள்ளுங்கள்
துருப்பிடித்த இரும்புகளாலான
உங்கள் இதயங்களை உடைத்து விடுங்கள்
உங்களை என்னால் அடையாளம் காண முடியும்


விலாசம் அற்ற வீடு என்னுடையது
நான் ஒரு பெண்
பெண் என்பதற்காய் நான் பெருமைப்படுகின்றேன்.

Friday, May 20, 2005

பிரிதலின் ரகசியம்....


சிறு இடைவெளியின் பின்னர்
மீண்டும் அதே கேள்வி உன்னிடமிருந்து.
மென்று விழுங்குகின்றேன் நான்.
வாய் வரை வந்த பதில்
எச்சிலாய் உள்ளே அடங்கிற்று.
உன் ஏக்கப் பார்வை நெஞ்சைத் தாக்க
உதிர்கிறது என் உறுதி.

கைகோர்த்து நீண்ட தூரம் நடக்கின்றோம்.
திரும்பிப் பார்க்க,
நினைவுகள் நிழலாய் தொடர்கிறது...

காலமறிந்து இடம்பெயரும் பறவைக் கூட்டம்.
வண்டுகளமரா பூக்களின் வாடல்.
சினத்துடனான சிறுவனின் அழுகை.

இன்னும் நடக்கின்றோம்;
எதிர்பார்ப்புகளோடு நீ...

எனக்குப் பிடித்த (சகோதர) நடிகைகள்.


ஆரண்யா பாபு


ஸ்வரலயனி பாபு

Thursday, May 19, 2005

The Piano Teacher

"மூன்று விஷயங்கள் ஒண்டுகொண்டு தொடர்பிருக்கு"

1- கறுப்பியின் முதல் மேடை நாடக அரங்கேற்றம் (நடிகையாக) 99இல் பா.அ ஜெயகரனின் “இன்னொன்று வெளி” எனும் நாடகம் மூலம் இடம் பெற்றது. 40 வயதை எட்டிக்கொண்டிருக்கும் முதிர்கன்னி ஒருத்தியின் மரப்போராட்டம் இந்நாடகத்தின் கரு. தமது ஊர் பெருமைகளை புலம்பெயர்ந்த பின்னும் பேசிக்கொண்டு நிகழ்கால வாழ்க்கைக்குள் தம்மைப் புகுத்த முடியாத ஒரு தந்தை, மகளின் உளவியல் பிரச்சனையை தந்தையாக கே.எஸ் பாலச்சந்திரனும், மகளாக கறுப்பியும் நடித்துப் பலரின் பாராட்டைப் பெற்றிருந்தார்கள்.

2- சில வருடங்களுக்கு முன்பு கறுப்பியின் பெற்றோர் இந்தியா இலங்கைச் சுற்றுப்பயணம் ஒன்றை மேற்கொண்டு திரும்பி வந்து கறுப்பி பிறந்து, வளர்ந்த ஊர், படித்த பாடசாலை இன்னும் மிஞ்சியிருக்கும் அயலவர்கள், சொந்தங்கள் என்று பற்றிய தகவல்களைக் கூறிக்கொண்டு போகும் போது இடையில் ஒரு தகவலாக கறுப்பியின் தூரத்துச் சொந்தமான ஒரு பெண்ணைப் பற்றிய கதை வந்தது. ஐம்பதை எட்டிக்கொண்டிருக்கும் அவளுக்குத் தந்தையும் இறந்து போய் விட்டார். ஆண் சகோதரர்கள் திருமணமாகிப் போய் விட்டார்கள். கறுப்பியின் அப்பாவை அந்தப் பெண் சந்தித்த போது “எனக்கு ஒரு கலியாணம் பேசுங்கள்” என்று கேட்டாளாம்.

பல தோட்டத்திற்குச் சொந்தக்காறர்களாக இருந்த அந்தக் குடும்பம் பல ஆண் உறுப்பினர்களைக் கொண்டது. ஆண்கள் இராச்சியம் அங்கே. பெண்களுக்கு படிதாண்டா வெளியில் முகம் காட்டா வாழ்வு. வயதுக்கு வந்த பின்னரும் சீதணம் என்று ஒன்றை யாரோ ஒருவருக்குக் கொடுக்க மனம் வராததால் பெண்கள் வீட்டின் பின்னாலேயே அடைபட்டுப் போய் விட்டார்கள். நாட்டு நிலமை மாற ஆண்கள் தமக்குப் பிடித்தவர்களைத் திருமணம் செய்து கொண்டு போய் விட தளர்ந்த பெற்றோருடன் சில காலங்களைக் கழித்துப் பின்னர் தந்தையும் இறந்து விட முதிர்ந்த தாயுடன் எதிர்காலம் கேள்விக் குறியாய் காண்பவரையெல்லாம் “எனக்குக் கலியாணம் பேசுங்கள்” என்று கூனிக் குறுகித் தானே கேட்கும் நிலை.

"The Piano Teacher"


2004ம் ஆண்டு இலக்கியத்திற்காக நோபல் பரிவு பெற்ற ஒஸ்ரியன் எழுத்தாளர் Elfriede Jelinek புகழ் பெற்ற நாவலான “The Piano Teacher” திரைப்படம் பார்த்தேன். பியானோவில் மிகவும் திறமை கொண்ட முப்பத்தெட்டு வயதான பெண் “உன் நன்மைக்காக” என்ற வடிவில் தாயினால் அடித்து அடக்கப்பட்டு வருகின்றாள். தாயைத் தூக்கி எறிய முடியாவில்லை மனம் வக்கிரமடைய அது அவளது மாணவர்கள் மேல் திரும்புகின்றது. தனது பாலியல் தேவைகளை நிவர்த்தி செய்ய Turkish peep களுக்குச் செல்கின்றாள். தாயின் ஆசைகளைச் சிறிது சிறிதாக அசட்டை செய்து வேண்டு மென்று தாயை நோகச் செய்வதற்காக உடைகள் வாங்குவதும் நேரம் கழித்து வீட்டிற்கு வருவதும் தாய் அவளிற்கு அடிக்கும் போது திரும்ப அடிப்பதும் பின்னர் அணைத்துக் கொள்ளுவதும் இப்படியாக அவளது மனப்பிறழ்விற்குள்ளான கதாபாத்திரம் அழகாக திரையில் வளர்க்கப்படுகின்றது.
மாணவன் ஒருவனுக்குத் தன்மேல் காதல் என்று தெரிந்தபோது அவனைக் காதலித்து அந்த உணர்வுகளைப் பூர்த்தி செய்ய நினைக்காமல் அவனைச் சீண்டி அவன் உணர்வுகளுடன் விளையாடத் தொடங்குகின்றாள். இறுதியில் அவளினால் சீண்டப்பட்ட நிலையில் அவளின் உண்மைச் சுபாவத்தைப் புரிந்து கொண்ட அந்த மாணவன் அவள் வீட்டிற்கு வந்து அவளுடன் உடல் உறவு (வன்புணர்சியல்ல) கொண்டு விட்டு தன் வாழ்க்கை பாதைக்குச் செல்கின்றான்.
ஒரு ஆசிரியருக்கும் மாணவனுக்குமான காதல் கதையோ என்று முதலில் எண்ணத் தோன்றியது. ஆனால் மிகவும் மனப்பிறழ்விற்குள்ளான ஒரு பெண்ணின் பாலியல் வேட்கையை வெளிப்படுத்தும் கதைதான் இந்த “The Piano Teacher”. நடிப்பு என்றால் என்ன என்பதை இதைப்போன்ற படங்களைப் பார்ப்பதன் மூலம் வளர்த்துக் கொள்ளலாம். குழந்தைகள் முன்னால் பார்க்க முடியாது. பார்க்கக் கூடிய திரைப்படம்.

Wednesday, May 18, 2005

முதல் பிரசவம்

என்னுடைய முதல் சிறுகதைத் தொகுதி, வெளியீடு பற்றிய அறிவித்தலை இணைத்திருந்தேன். என்ன நடந்ததென்று தெரியவில்லை. தொடர்பற்றுப் போய் விட்டது எனவே மீண்டும் இணைக்கின்றேன்.

Wednesday, May 11, 2005

மெதுவாக உன்னைத் தொட்டு

எமது கலைஞராக ரவி அச்சுதனின் “மெதுவாக உன்னைத் தொட்டு” திரைப்படம் பற்றிய எனது விமர்சனத்தை இங்கே வைக்கின்றேன்.1995இல் இருந்து ரவி அச்சுதன் அவர்கள் தனது கலைப்படைப்புக்களான நவராகங்கள் (இந்தியத் திரைப்படப்பாடல்களுக்கு எமது கலைஞர்கள் நடித்தல்), தொலைக்காட்சி நாடகங்கள், திரைப்படங்கள் என்று வழங்கி வருவதன் மூலம் கனடா வாழ் மக்களிடையே நல்ல பரிச்சியமான ஒரு கலைஞராக விளங்குகின்றார்.
ரவி அச்சுதன் பல திரைப்படங்களிற்கு படப்பிடிப்பாளராகவும், இயக்குனராகவும் பணியாற்றியிருந்த போதும் “மெதுவாக உன்னைத் தொட்டு” திரைப்படம் தான் அவர் ஒரு முழு நீளத் திரைப்படமாக இலங்கை, இந்தியா, கனடா போன்ற நாடுகளில் படப்பிடிப்புச் செய்தும் பாடல் காட்சிகள் இணைத்தும் மிகவும் எதிர்பார்ப்புடன் வெளியிட்ட திரைப்படம் என்று கூறலாம். இனி இத் திரைப்படம் பற்றிய எனது விமர்சனத்திற்கு வருவோம்
நாம் பல இந்தியத் தமிழ் திரைப்படங்களைப் பார்த்திருக்கின்றோம். ஒரு திரைப்படம் வெற்றி பெற்றால் பின்னர் அதே சாயலில் பல திரைப்படங்கள் வந்து போகும். இது இந்தியத் திரைப்பட இயக்குனர்களுக்குப் பிடித்த சாபக்கேடு எனும் போது, எமது கலைஞர்க ரவி அச்சுதனும் அதே பாங்கில் பல இந்தியத் திரைப்படங்களின் கதையை அங்கே கொஞ்சம் இங்கே கொஞ்சம் கிள்ளி, சில காட்சிகளையும் இந்தியப் பாணியில் காட்டி மிகச் சிரமப்பட்டு ஒரு இந்தியக் கலவையை எமது கலைஞர்கள், இந்தியக் கலைஞர்கள் என்று இணைத்துத் தந்துள்ளார்.
இலங்கையில் வாழும் ஒரு இன நாட்டுப் பற்றுள்ள ஒரு இளைஞன் எழுதிய ஒரு கவிதைக்காய் இலங்கை ராணுவத்தால் தாக்கப் படுகின்றான். மகனின் எதிர்காலத்தை எண்ணிக் கலங்கிய அவனது பெற்றோர் அவனை கனடாவிற்கு அனுப்பு முகமாக முதலில் அவன் செல்வது இந்தியாவிற்கு. அங்கே அவன் தனது பொருட்களைத் தொலைத்து விட்டு சீர்காழியில் தங்கியிருக்கும் போது இந்தியக் கிராமப்புறப் பெண்ணான சுஜிமேல் காதல் கொள்கின்றான். பின்னர் பயணம் சரி வந்ததும் சுஜியைக் காத்திருக்குமாறு வாக்குக் கொடுத்து விட்டு கனடா வந்து தெரிந்தவர் ஒருவர் வீட்டில் தங்கியிருப்பவன் மேல் வீட்டுக்காற நாகரீக மங்கைக்கு(மாயா) காதல் நாயகனின் மிக மிக நன் நடத்தையில் மயங்கிய பெற்றோரும் மகளிற்காக நாயகனுடன் கதைத்துப் பார்க்கின்றார்கள்.
காதலி சுஜிக்கு பல கடிதங்கள் போட்ட போதும் பதில் இல்லை.. குழம்புகிறான் நாயகன். இறுதியில் சுஜி தனது மாமன் மகனைத் திருமணம் செய்து விட்டாள் என்ற செய்தி புகைப்பட அத்தாட்சியுடன், மாயாவின் காதலை தனக்கு உதவி செய்த குடும்பதிற்காக ஏற்று அவளை மணக்கச் சம்மதித்தாலும் அவளது அதி உச்ச நாகரீகம் அவனுக்கு குழப்பத்தைத் தருகின்றது.
இறுதியில் சுஜிக்குத் திருமணம் ஆகவில்லை, அது மாமன் மகன் செய்த சதி என்றறிந்து சீர்காழிக்குப் பறந்து செல்கின்றான் நாயகன். மாயா, அவளது பெற்றோரின் சம்மதத்துடன்.
அவன் அங்கே போய் இறங்க மாமன் மகன் கையில் தாலியைச் சுழற்றி “என்ர கரக்டறையே புரிஞ்சு கொள்ளேலையே” என்று கூறிய படி சுஜியை நோக்கி வர சுஜி பயந்தபடியே தாய்க்குப் பின்னால் ஒதுங்க நாயகன் பாய்ந்து மாமன் மகனைத் தாக்க
என்ன சொல்ல.. என்ன சொல்ல...
முதலில் நாயகனுக்கு எப்படி சுஜி மேல் காதல் வந்தது என்று பார்ப்போம்
குறுக்குக் கட்டோடு நாயகி குளத்தில் குளித்துக்கொண்டு இருக்கின்றார். நாயகன் Pants Shirt உடன் பை ஒன்றைத் தோளில் போட்ட படியே வயல் வரம்பால் இயற்கையை ரசித்த படி வருகின்றார். நாயகன் வர நாயகி குளத்தால் எழும்ப கண்ணும் கண்ணும் மோதிக் காதல் வந்திச்சாம்.
அடுத்து நாயகன் கனடா வந்து இறங்கியவுடன் தனது கவர்ச்சியைக் கொள்ளையாகக் காட்டி அவனைக் காதலிக்கின்றாள் மாயா.

பெண்களிடம் காதலிப்பதற்கு உடல் ஒன்று மட்டும்தான் உள்ளது போன்றும், அவர்களுக்கு ஆண்கள் காதலிப்தற்கான தனித்தன்மை, திறமை ஒன்றுமே இல்லாதது போலும், பெண்களை மிகவும் கொச்சைப் படுத்தியுள்ளார் ரவி அச்சுதன்.
நீச்சல் உடையில் மாயாவை வீட்டுக் குளியல் அறைக்குள் குளிப்பது போன்ற காட்சி இத்திரைக் கதைக்கு எதற்காக என்பது இன்னும் எனக்குப் புரியவில்லை.
மொத்தத்தில் பல தரமற்ற இந்தியத் திரைப்படங்களின் கலவையில் வெளிவந்த ஒரு எம்மவர் படைப்பு இந்த “மெதுவாக உன்னைத் தொட்டு”

ரவி அச்சுதன் இந்தியா போய் இந்தியப் படம் போல் ஒன்றை எடுத்து விட்டார் என்று கனடாவில் இருக்கும் மற்றய இயக்குனர்களும் இந்தியா நோக்கிப் பறக்கத் தொடங்கி விட்டார்கள். இது எங்குபோய் முடியுமோ தெரியவில்லை.

ம்.. கறுப்பிக்கும் ஒரு எண்ணம் இருக்கிறது. முடிந்தால் ஈழத்தில் முடியாவிட்டால் இந்தியாவில் போய் ஒரு விவரணப்படம் எடுக்க வேண்டும் என்று

Journey of Hope -1990

DIRECTOR - Xavier Koller
Journey of Hope, a Swiss film, won the Academy Award in 1990 as Best Foreign Language Film.


ஐரோப்பாவைத் தளமாக வைத்து "தாய்மண்" என்ற பெயரில் தங்கபச்சான் ஈழத்தமிழரின் "எல்லை கடத்தல்" (Border Crossing) ஐப் படமாக்க உள்ளார் என்று அறிந்தேன். 1980களில் புலம்பெயர்ந்து வந்த ஈழத்தமிழ் இளைஞர்கள் பலரின் வாழ்வில் இந்த "எல்லை கடத்தல்" அனுவம் என்பது மறக்க முடியாத ஒன்றாக அமைந்திருக்கும். இன்னல்களின் நடுவில் வெற்றி பெற்றவர்கள் தோல்வி உற்றவர்கள் என்று பலவாறு இருப்பினும் தமது எதிர்காலக் கனவுடன் மொழி, காலநிலை போன்றவற்றின் அடிப்படைத் தெரிதல்கள் அற்று வெற்றி ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு புதிய கனவுடன் நாட்டை விட்டுக் கிளம்பிய எத்தனை இளைஞர்கள் நடுவழியில் காணாமல் போயுள்ளார்கள். கடல்களில் கொட்டப்பட்டு மூழ்கிப் போனவர்களும், இரும்புப் பெட்டிகளுக்குள் அடைக்கப்பட்டு மூச்சுத் திணறி இறந்தவர்களும், கரையோரம் கப்பலோடும், மொழி தெரியாத நாடுகளில் ரோட்டு ஒரமும் நிர்கதியாக விடப்பட்டவர்களும்... தொடர்கதையாகப் பல ஆண்டுகள் தொடர்ந்த கதைகள் இவை. இப்போது நாம் மறந்து போன சோகக்கதைகள். அனேகமாக இப்படியான இன்னல்களை ஈழப் பெண்களும், குழந்தைகளும் சந்தித்திருக்க மாட்டார்கள் என்றே நம்புகின்றேன்.

இலங்கையில் இடம்பெறும் உள்நாட்டுப் போரினால் எமது மக்கள் புலம்பெயருகின்றார்கள். இப்படியான இன்னல்கள் எங்களுக்கும் போரால் பாதிக்கப்படும் மற்றய நாட்டு மக்களுக்கும் மட்டுமே சொந்தமானது என்று நான் நம்பியிருந்தேன். ஆனால் அண்மையில் நான் பார்த்த திரைப்படமான "Journey of Hope" இல் துருக்கி நாட்டைச் சேர்ந்த ஒரு குடும்பத் தலைவன் மனைவி மறுத்த போதும் பிடிவாதமாக நின்று குடும்பச் சொத்தை எல்லாம் (காணி, கால்நடைகள், நகைகள்) விற்று சுவிஸ்லாந்திற்குச் சென்று உழைத்து நாடு திரும்பி வந்து நன்றாக வாழ வேண்டும் என்ற கனவோடு தனது ஆறு பெரிய குழந்தைகளை பெற்றோருடன் விட்டு விட்டு மனைவியையும், தனது கடைசி எட்டு வயது மகனையும் அழைத்துக் கொண்டு பயணம் செய்கின்றான்.
எம் நாடு போலவே பாஸ்போட் எடுப்பதிலிருந்து தில்லுமுல்லுக்களும், ஏமாற்றங்களும் ஆரம்பமாகி ஆட்டு மந்தை போல் ஐரோப்பிய மோகம் கொண்டு புறப்பட்ட அகதிகள் அனைவரையும் வாகனத்திற்குள் அடைத்து சுவிஸ்லாந்து எல்லையில் இறக்கி விட்டு அவர்கள் போக வேண்டிய மலைப் பாதையைக் காட்டி இதனூடே நடந்து வாருங்கள் நான் உங்களுக்காக சுவிஸ்லாந்தில் காத்து நிற்கின்றேன் என்ற அழைத்து வந்தவன் போய் விட தமது உடமைகளுடனும் கனவுகளுடனும் மலை ஏறத் தொடங்கும் அகதிகள் ஒவ்வொரு பொருட்களாகத் தவற விட்டுக் கடைசியில் பனிப் புகாருக்குள் அகப்பட்டு குளிரின் கொடுமையில் உயிர் பிழைத்தால் போதும் என்று பாதை தெரியமால் ஓடத் தொடங்க உறவுகள் பிரிகப்படுகின்றார்கள். குளிருக்குள் விறைத்துப் போகும் தன்மகனை பல உடைகள் போடச் செய்து போர்வையால் போர்த்தி மனைவியையும் தவறவிட்டு வழி தெரியாமல் கடவுளே என்னைக் காப்பாற்று என்று கதறியவன் காலை சுவிஸ் நாட்டு பொலீசாரால் காப்பாற்றுகின்றார்கள். அவன் மனைவி கால் உடைந்த நிலையில் காப்பாற்றப்பட்டு மற்றய அகதிகளுடன் இருப்பதா அவனுக்குத் தகவல் கிடைக்கின்றது. கைகளில் விறைத்துப் போயிருக்கும் சிறுவனை ஆஸ்பத்திரிக்கு எடுத்துச் சென்று அவன் இறந்து விட்டான் என்று தந்தைக்கு அறிவித்த பொலீசார் எதற்காக உனது நாட்டில் இருந்து இங்கு வந்தாய் என்று விசாரணையை ஆரம்பிக்க கலங்கிய கண்களுடன் "Hope" என்ற அவனது பதிலோடு நிறைவிற்கு வருகின்றது. படம் முழுவதும் சிறுவனின் குறும்பையும் அவன் பயணித்தின் போது மற்றவர்களைக் கவர்ந்ததையும் தொடர்ந்து காட்டி வரும் போதே இவனுக்கு ஏதோ ஆகாப் போகின்றது என்று மனம் அடிக்கத்தொடங்கி விட்டது.

கூட்டுக் குடும்பமாகச் சந்தோஷமாக வாழ்ந்த ஒருவன் வாழ்வில் எப்படி மேல்நாட்டு மோகம் வந்து அழித்து விடுகின்றது என்பதோடு. அகதிகள் எப்படி பிற நாட்டு மக்களால் நடத்தப்படுகின்றார்கள் என்பதையும் மிகவும் தத்தூபமாகக் காட்டியுள்ளார்கள். எம்நாட்டு மக்களின் அனுபவங்களோடு ஒத்திருந்ததால் பாத்திரங்களோடு ஒன்றிப் பார்க்கக் கூடியதாக இருந்தது.

Tuesday, May 10, 2005

அன்புள்ள அப்பா

"மரணத்தை எண்ணிக் கலங்கிடும் மனிதா மரணத்தின் மேன்மை சொல்வேன். மானிட ஆன்மா மரணமெய்யாது மறுபடி பிறந்திருக்கும் மேனியைக் கொல்வாய், மேனியைக் கொல்வாய்.. நீ விட்டு விட்டாலும் இவர்களின் மேனி வெந்துதான் போகும் ஓர்நாள்".

என் அப்பாவிற்கு கடந்த மார்ச் மாதம் 80ஆவது பிறந்தநாள் நிறைவு பெற்றது. உடலின் சின்னச் சின்ன உபாதைகளோடு முற்றாக நரைத்த முடியுடன் இன்னும் காலையில் தவறாமல் யோகாசனம் செய்து வரும் ஆறு அடி உயர ஆஜானபாகுத் தோற்றம் கொண்ட எனது அப்பாவைப் பார்க்கும் போது எனக்குள் இப்போதெல்லாம் ஓர் குற்ற உணர்வு. எதற்கு? தெரியவில்லை. அப்பாவின் எதிர்பார்ப்பிற்கு ஏற்ற மகளாக வாழ்ந்தேனா? நிச்சயமாக இல்லை என்பது தெரிந்த போது குற்ற உணர்வைத் தவிர்க்க முடியவில்லை. எட்டுப் பிள்ளைகளைக் கொண்ட குடும்பத்தில் ஒவ்வொன்றும் ஒவ்வொரு மாதிரி இருக்கும். இருந்தும் ஒரு சாதாரண ஈழத் தமிழ் குடும்பம் எதிர்பார்க்கும் ஒரு சாதாரண தமிழ் பெண்ணாக அப்பாவிற்கு நான் இல்லை என்பது எனக்குத் தெரியும். ஏன் இல்லை என்ற கேள்வியை நான் கேட்டு என்னை சமாதானப்படுத்த என் விடையாக "நான் என்பது தனி மனுசி பெற்றோரின் விருப்பை நிறைவேற்ற ஒரு தனி மனுசியின் விருப்புக்கள் கொல்லப்படக் கூடாது. நான் நானாக வாழ விரும்பின் என் அப்பாவின் விருப்புக்களை நான் நிராகரிக்க வேண்டும்". செய்தேன்.
கனேடித் தமிழ் முதியோர் சங்கத்தில் இணைந்து எனது பெற்றோர் முடிந்தவரை தம்மை சுறுசுறுப்பாகவும், சந்தோஷமாகவும் வைத்திருக்கின்றார்கள். என் குடும்பம், என் குழந்தைகள், வேலை என்று நேரம் போகக் கிடைக்கும் சில இடைவெளி இலவச நேரங்களில் என் பொழுதுகள் என் பொழுது போக்கிற்காக மட்டும் செலவழிந்து போக அருகில் இருந்தும் பெற்றோரைக் காண்பது கூட பல சமயங்களில் மாதக்கணக்காக நீளும். இடைவெளி நீள்கையில் காணும் போது கூட என்ன கதைப்பது என்பது தெரியாமல் போகும். நெருக்கமாகி சுகம் விசாரிக்க முற்படுகையில் நடிக்கின்றேனோ என்று ஒன்று வந்து என்னைத் தடுத்து நிறுத்தும். என் அன்பு, அப்பாவிற்குத் தெரிகின்ற மாதிரி எதையாவது செய்ய வேண்டும் என்று மனம் துடிக்கும். வயதாகி விட்டது. அப்பாவிற்கு ஒன்றாகி விட்டால்? நான் அவர் மேல் கொண்ட பாசம் தெரியாமல் போய் விடுமோ என்று மனம் தடுமாறும். இருந்தும் என் ஒரு அசைவும் நடித்தலோ என்று எனக்குள்ளேயே கேள்வி எழுகின்றது. இந்த சமூகத்தில் எல்லோருமே நடிக்கின்றார்களோ? என்ற ஐயம் மிஞ்சி நிற்கின்றது. அப்படியாயின் எனக்கு மட்டும் ஏன் நடிக்க முடியவில்லை. இல்லை எல்லோருமே இயல்பாக இருக்கின்றார்கள். நான் மட்டும்தான் இயல்பற்றவள் என்றும் மனம் தடுமாறுகின்றது.

மரணம் என்பது இயல்பானது. எண்பதை எட்டி விட்ட எனது தந்தையின் நடை தளர்ந்து விட்டது, பற்கள் சிலவற்றைக் காணவில்லை. எட்டுப் பிள்ளைகள், பதினாறு பேரப்பிள்ளைகள், இரண்டு பூட்டப்பிள்ளைகள் கண்டு சில சறுக்கல்ளையும், பல ஏற்றங்களையும் கொண்ட நிறைந்த வாழ்வு. “அப்பா இப்ப என்ன நினைக்கிறீங்கள்? சந்தோஷமா வாழ்ந்தனீங்களா? அடுத்தடுத்து வந்து கொண்டிருக்கும் உங்ளுடைய நண்பர்களின் சாவு உங்களுக்கு என்னத்தைச் சொல்லிப் போகுது? கேட்க ஆசை. இது தவறாக அணுகுமுறையோ? நான் அடுத்த முறை அப்பாவைக் காணும் போது என்ன கதைக்க?. என் அப்பாவுடன் மனம் விட்டுக் கதைப்பதற்கு ஏன் ஒன்றும் இல்லாத வெறுமை எனக்குள் தேங்கி நிற்கின்றது. புரியவில்லை. புரிதல் விரைவில் நிகழவேண்டும். இல்லாவிடின் நித்திரையற்ற என் இரவுகளுக்கு அர்த்தமற்றுப் போய் விடும்.

மரணத்தை எண்ணிக் கலங்கிடும் மனிதா மரணத்தின் மேன்மை சொல்வேன். "மானிட ஆன்மா மரணமெய்யாது மறுபடி பிறந்திருக்கும்" மேனியைக் கொல்வாய், மேனியைக் கொல்வாய்.. நீ விட்டு விட்டாலும் இவர்களின் மேனி வெந்துதான் போகும் ஓர்நாள்.

இதில் எனக்கு நம்பிகை இல்லை

Monday, May 09, 2005

கவிதை

ஏதாவது எழுது என்பாய்.
என்ன எழுதுவது என்பது தெரியாமல்
நீ கேட்டதற்காய் எழுதுகின்றேன்.
இந்த எழுத்து உனக்குத் திருப்தி தந்தால்,
அது எனக்கும் திருப்தியே.
நீ எதிர்பார்த்ததை நான் எழுதவில்லை என்று நீ நினைத்தால்,
நீ என்னிடம் எதிர்பார்த்தது தவறு.
எழுத ஒன்றுமில்லாத போது
இவ்வளவு எழுதியதே பெரிய விடயம்;
அதுவும்
உன் எழுதப்படாத மின்அஞ்சலுக்கு.
எனக்கு நிறையவே நேரம் இருப்பதாய் நீ குற்றம் சொல்லலாம்.
நேரம் மட்டும் போதுமானதல்ல எழுதுவதற்கு.
ஒருநாள் எழுதுவேன் நீ எதிர் பார்த்தவற்றையும்,
எதிர்பாராதவற்றையும்.

Thursday, May 05, 2005

தமிழுக்கு அமுதென்று பெயர்

சந்திரமுகி அலை ஓய்ந்தபின்னர் தற்போது நல்ல தமிழ் தமிழை வளர்க்கும் கோசம் கொஞ்சம் பதிவுகளில் எழுந்துள்ளது. சரி இது பற்றி நானும் ஏதாவது எழுதிப் பார்ப்போம் என்ற போது ஒரு நகைச்சுவை நினைவிற்கு வந்தது. அதை புளொக்கு நண்பர்களுடன் பகிர்ந்து கொள்கின்றேன்.

இப்போதெல்லாம் திரைப்படங்களுக்குத் சுத்த தமிழில் பெயர் வையுங்கள் என்றும். பிள்ளைகளுக்கு வடமொழி கலக்காமல் நல்ல தமிழில் பெயர் வையுங்கள் என்றும் பரவலாக ஊடகங்கள் கனடாவில் வேண்டுகோள் விடுத்து வருகின்றார்கள். ஈழத்தில் இந்தத் தமிழ் மொழிப் பற்று எப்போதோ பெடியளால் தொடங்கி விட்டது என்று அறிந்து கொண்டேன்.
பெடியளின் இந்த அதீத தமிழ் மொழிப்பற்றால் நகரத்தில் இருக்கும் வியாபாரத் தளங்களுக்கு சுத்த தமிழில் பெயரிடப்படல் வேண்டும் என்ற சட்டத்தின் பெயரில் பல வியாபரத்தலங்களின் பெயர் பலகையை சுத்த தமிழில் மாற்றும் படி அறிக்கை விடப்பட்டது. வியாபாரிகள் உடனேயே தமது வியாபாரத் தளங்களின் பெயர்பலகையை தமிழாக்கிக் கொண்டார்கள்.
உதாரணத்திற்கு –

மஞ்சுளா பாஷன் - மஞ்சுளா நாகரீகம்

சிட்டி பேக்கறி – நகர வெதுப்பம்

அம்பிகா யுவெர்லேஸ் - அம்பிகா நகைமாடம்


இப்படியான மாற்றங்கள் பெடியளுக்கு மனத்திருப்தியை அழித்தாலும் ஒரு வியாபாரி தனது பெயர்பலகையை கழற்றி வைத்து விட்டு வெறும் கடையில் இருந்து வேலை செய்தது அவர்களுக்கு கோபத்தைக் கொடுத்தது. "பெயர் பலகை இல்லாமல் நீர் என்ன தொழில் செய்கின்றீர் என்று யாருக்குத் தெரியும்? தமிழில் பெயரை உடனே மாற்றி பலகையைத் தொங்கவிடும்" என்று கூறி விட்டுப் போய் விட்டார்கள். ஒரு கிழமையாயிற்று பெயர்பலகை மாட்டப்படவில்லை. வியாபாரி விசாரணக்கு உட்படுத்தப் பட்டார். தன்னால் பெயர்மாற்றம் செய்ய முடியவில்லை. தாங்கள் உதவ முடியுமா? என்று வியாபாரி அவர்களைக் கேட்க பெடியங்கள் கோபத்துடன் சம்மதித்தார்கள். அடுத்த நாட் காலை வியாபாரி தனது தளத்திற்கு வந்த போது இப்படி ஒரு பெயர்பலகை தனது வியாபார தளத்தின் முன்னால் தொங்குவதைக் கண்டார்.

- அருளப்பர் சின்னப்பர் ஓட்டுவது ஒட்டகம் -

இதன் ஆங்கில வடிவம் தங்கள் கற்பனைக்கு

Wednesday, May 04, 2005

ஒரு படம் பல பாடங்கள்

நாராயணனின் பதிவு ஒன்றில் தங்கமணி இட்ட பின்னூட்டம் என் மனதுக்குள் எங்கோ ஒரு மூலையில் ஒளிந்து கொண்டு அடிக்கடி வந்து அவதிப்பட வைக்கிறது. பெண்ணியம் பற்றிய பார்வை உள்ள எல்லோரும் அறிந்திருக்கும் ஒரு கருவாக இருப்பினும் எதற்காக என்னுள் இந்தளவிற்கு நெருடலை உண்டு பண்ணியிருக்கின்றது என்பது தெரியவில்லை. அதன் பின்னர் உஷாவின் பதிவு ஒன்றில் தங்கமணி நாராயணன் போன்றோர் தந்த பின்னூட்டங்களும் நான் பார்த்த விவரணப்படமும் சேர்ந்து என்னை நித்திரை இல்லாமல் பண்ணிவிட்டது என்று சொல்லலாம்.

நாராயணன் பதிவில் தங்கமணியின் பின்னூட்டம் -

//ஒவ்வொருவரும் சமூகத்துக்கு தெரிவிக்க என ஒரு பண்பாட்டு முகமூடியை வைத்திருக்கின்றனர். பண்பாட்டை போதிப்பதற்க்கான (சமூகத்துக்கு) முழு உரிமையுடன் வந்திருப்பதாக என்ணிக்கொள்கின்றனர். இது ஒரு மன வளர்ச்சியற்ற தன்மை.

அதுக்கப்புறம் இதில் தேசபக்தி இந்தியக் கலாச்சாரம் என்ற மசாலாக்கள் வேறு இருந்துவிட்டால் நமக்கு வெறியே வந்துவிடும்.

விஜய்-ஷாலினி நடித்த படம். காதலை புனிதமாகச் சொல்கிறேனென்று ஜல்லி அடித்த படம். அதில் ஷாலினி விஜயையை திருமணம் செய்யவேண்டாம் என்று முடிவு செய்து தம் வீடு திரும்புவார். வீட்டில் அம்மாவிடம் (அண்ணன்களிடம்) நான் கெட்டுப்போகலேம்மா, உங்க்க பொண்ணும்மா என்பார். எல்லோரும் கண்ணீர் விடுவார்கள். இப்படி ஒரு அருவருப்பான காட்சியை நான் எங்கும் கண்டதில்லை. அதுவரை எனது மற்ற மொழி நண்பர்களுக்கு அவ்வப்போது மொழியெயர்த்து வந்தேன். அப்போது சொன்னேன் "இதை மொழி பெயர்க்கமுடியாது, உங்களுக்குப் புரியாது. இதில் இரண்டாயிர வருட பண்பாடு, ஒழுக்கம், குடும்பப் பாரம்பரியம் இதையெல்லாம் தனது இரண்டு தொடைகளுக்கு நடுவில் வைத்துக்காப்பாற்றும் தமிழ் பண்பாடு இருக்கிறது இது மிக நுட்பமானது"

அப்படி ஒரு பாரம்பரியம் நமக்கு.http://urpudathathu.blogspot.com/2005/04/blog-post_18.html

http://womankind.yarl.net/archives/2005/05/03/427#comments

என்னுடன் வேலை செய்யும் வெள்ளை இனப்பெண்ணெருத்தி (Tammy வயது 22) வெள்ளிக்கிழமையானால் மிகவும் சந்தோஷமாகத் தனது காதலன் இன்று வரப்போகின்றான் சனி, ஞாயிறு அவனுடன் கழிக்கப் போகின்றேன் என்று சொல்வாள். நாங்கள் சிரித்து அவளைக் கிண்டல் அடிப்போம். எங்களோடு சேர்ந்து கொள்ளாமல் முகத்தைத் தூக்கியபடி இருக்கும் வடநாட்டு இந்தியப் பெண் என்னிடம் திருமணம் ஆகவில்லை காதலனுடன் வார இறுதி நாட்களைக் கழித்துக் கும்மாளம் அடிக்கின்றாள். என்ன இந்தக் கலாச்சாரம் என்றாள். நான் அந்த இந்தியப் பெண்மணி முன்னால் Tammy யிடம் சனி ஞாயிறு முழுவதும் காதலனுடன் களிக்கப் போகின்றாயே அப்போ உடலுறவு எல்லாம் உண்டா? என்றேன். அவள் என்னை வினோதமாகப் பார்த்து விட்டு ஏன் என்று கேட்டாள். எங்கள் பண்பாட்டில் திருமணத்திற்கு முன்னர் உடல் உறவு கொள்ளக் கூடாது அதுதான் என்றேன். Tammy சிரித்த படியே நானும் கேள்விப்பட்டிருக்கின்றேன். மனதை, சிந்தனையை, நாட்களை, உணவை எல்லாவற்றையும் நான் எனக்குப் பிடித்தவனுடன் பகிர்ந்து கொள்கின்றேன். இது ஒன்றும் பெரிய விடையமாக உங்களுக்குத் தெரியவில்லை உடல் என்றவுடன் மட்டும் ஏன் வித்தியாசமாகப் பார்க்கின்றீர்கள் என்றாள். இந்தியப் பெண்மணி மௌமாக இருந்தாள். நான் கேட்டேன் நீ அவனைத்தான் திருமணம் செய்யப்போகின்றாயா? என்று, அவள் தெரியாது என்றாள். இன்னும் அதுபற்றி நாங்கள் அலட்டிக் கொள்ளவில்லை. நேரம் வரும்போது இருவருக்கும் பிடித்திருந்தால் செய்து கொள்ளலாம் என்றாள். இந்தியப் பெண்மணி வாய்க்குள் புறுபுறுத்த படியே எங்கள் நாட்டுப் பண்பாட்டிற்காக நாங்கள் பெருமைப்பட வேண்டும் என்றாள். நானும் ஓம் என்று தலையை ஆட்டி வைத்தேன்.

Born into Brothelsபாட்டி, அம்மா, இனி நான். எமது பரம்பரைத் தொழில் விபச்சாரம். வேலைக்குப் போகாத அப்பா, குடிக்க அம்மாவிடம் பணம் கேட்டு அம்மாவை அடித்தார். இடிந்து விழப்போகும் நிலையிலிருக்கும் கட்டிடங்களுக்குள் உணவுப் பொருட்களும், உடைகளும், செருப்புக்களும் கலந்து கிடக்கும் இடத்தில் குடியிருப்பு. காலையில் சாராயத்தைக் குடித்து விட்டு பெண்களைத் தேடிச் செல்லும் ஆண் வர்க்கம். குடியிருப்பில் இருக்கும் அத்தனை பெண்களுக்கும் தொழில் விபச்சாரம். கல்வி கற்க ஆசை இருப்பினும் எந்த ஒரு பாடசாலையும் சேர்த்துக் கொள்ளாத அவலம். இந்தக் குடியிருப்பில் இருக்கும் சிறார்களுக்கு உதவி செய்யும் அமெரிக்கப் பெண்மணியின் அனுபவங்கள், சாதனைகள், வேதனைகள், ஏமாற்றங்கள், வெற்றிகள் தான் "Born into Brothels".

சேலையுடன், நகையணிந்து, நெற்றியில் பொட்டுடன் என்னைப் போல் பல பெண்கள். இவர்களை வேறாகப் பார்க்க என்னால் முடியவில்லை. எங்களில் இவர்கள்; இவர்கள் வாழ்க்கை கலந்துள்ளது. எமது கலாச்சாரம், பண்பாடு உயர்ந்தது என்று வெள்ளையர்களை மட்டம் தட்டும் ஆசியப்பெண்கள், ஆண்கள். அவர்கள் இந்தப் படங்களைப் பார்ப்பதில்லையா? மூச்சு விட இடமின்றி ஒடித்தப்ப வழியின்றி பாலியல் தொழிலில் ஈடுபடும் எம் பெண்கள் இவர்கள் கண்களில் படுவதில்லையா? எப்படி நாம் பெருமை கொள்ளலாம் எமது கலாச்சாரம் பண்பாடுபற்றி?

பெண்கள், பெண் உடல் தரும் பிரமை, உடல் உறவு தரும் மாயம் கலந்த மோகம் போன்றவற்றால் மனப்பிறழ்விற்குள் ஆளாகிப் போயுள்ளார்கள் இந்த ஆசிய ஆண்கள். எல்லாமே பெண்ணின் உடல் சார்ந்த புனிதமாக இவர்கள் பார்ப்பதால்தான் கட்டாயப் பாலியல் தொழில் என்பது கூட பிரசித்தி பெற்று, இப்படியான நாடுகளில் மிக உச்சத்தில் உள்ளதோ என்ற ஐயத்தைத் தருகின்றது.

"Born into Brothels" பல விருதுகளை வென்றுள்ளது. இந்தச் சமூகத்திற்கு அது மாற்றங்களைக் கொண்டு வராத பட்சத்தில் என்ன பயன்?

Tuesday, May 03, 2005

நம்பினால் நம்புங்கள்

வரும் ஜூலை மாதம் ரொறொண்டோவில் புளொக் நண்பர்களுக்கான ஒரு கிழமைக்குத் தொடர்ந்து பல்சுவை நிகழ்ச்சியுடன் ஒரு கூட்டம் (கருத்தரங்கு, விடுமுறை எப்படி வேண்டுமானாலும் வைத்துக் கொள்ளுங்கள்) ஒன்றை கறுப்பி ஒழுங்கு செய்திருக்கின்றாள். இந்நிகழ்வில் அனைத்து புளொக் நண்பர்களும் கலந்து கொள்ள வேண்டும் என்று ஆசை இருந்தாலும் கறுப்பியின் பாங்க் பலன்ஸ் அதற்கு இடம் கொடுக்காததால் கனேடியர்களைத் தவிர்த்து பிற நாடுகளில் இருப்பவர்களில் முதல் விண்ணப்பத்தை நிறப்பி அனுப்பும் 25 நபர்களுக்கு இந்த சலுகை வழங்கப்படுகின்றது. இந்தியா, இலங்கை போன்ற நாடுகளில் இருப்பவர்களுக்கு விசா இழுபறிகள் இருப்பதால் இந்நிகழ்வு ஓகஸ்ட் மாதத்திற்கு பிற்போடும் சாத்தியங்களும் இருக்கின்றன.

நிகழ்ச்சி நிரலாக –

நாள் ஒன்று –

வரவேற்பு (நடனமல்ல)
காலை உணவு – ரிம் ஹோட்டன்ஸ் டோனட்ஸ் உம் கோப்பியும்
குளிரூட்டப்பட்ட உல்லா பேரூந்தில் ரொறொண்டோ நகரத்தைச் சுற்றி
சுற்றுலா.

மதிய உணவு சைவ உணவு – செட்டி நாட்டு உணவகம்
அசைவ உணவு – மட்றாஸ் பலஸ்
தொடர்ந்து – அதே குளிரூட்டப்பட்ட (பேரூந்) பஸ்ஸில் நிகழ்ச்சிக்காக
ஒதுக்கப்பட்ட மண்டபத்தில் சிற்றுண்டிகளுடனான அமர்வு?
நிகழ்சியில் - உலக திரைப்படங்கள்
நனைவிடை தோய்தல் பற்றியும் கலந்துரையாடல்கள்
இறுதியில் கேள்வி பதில்கள் உண்டு

இரவு உணவு இடியப்பம், சொதி, சம்பல். ஒரு கப் பால், வாழைப்பழம்


நாள் இரண்டு

காலை உணவு மக்டொனால்ஸ் பிரேக் பாஸ்ட் பெஷல்
அதே குளிரூட்டப்பட்ட பஸ்ஸில் நயாகரா நீர்;வீழ்ச்சி பயணம்

மதிய உணவு நயாகரா ரெஸ்ரோறெண்ட்
நயாகரா பார்க்கில் மும்பை எக்பிரஸ் சந்திரமுகி பற்றி ஒரு அலசல்
(செக்கியூரிட்டி நயாகராவில் பலமாக இருப்பதால் கமல், ரஜனி ரசிகர்களுக்கான மோதல் தவிர்க்கப்படும்) ரொறொண்டோ திரும்புதல்

இரவு உணவு புட்டு, சொதி, சம்பல், மாம்பழம்


நாள் மூன்று

காலை உணவு வீட்டில் தயாரிக்கப்பட்ட பால் அப்பம்
அதே குளிரூட்டப்பட்ட பஸ்ஸில் ஒன்றாரியோ வாவி ஒன்றிற்குப் பயணம்
மதிய உணவு வாட்டிய கோழி வாட்டிய மரக்கறிகள் வாவியின் அருகில் தயாரிக்கப்படும்.

எமது நாட்டுச் சிறப்பும் நாம் புலம்பெயர்ந்து வாழும் நாட்டின் சிறப்பும என்ற பெயரில் புளொக் மெம்பர்கள் சிலர் புழுகித் தள்ளுவர்
கேள்வி பதில்கள் உண்டு.

இரவு உணவு தோசை சட்னி சாம்பார் பால் கோப்பி

நாள் நாலு

காலை உணவு சீரியல் (மெகா இல்லை சதா)
அதே குளிரூட்டப்பட்ட வண்டியில் மீண்டும் ஒரு பூங்காவிற்குச் சென்று இரு பிரிவுகளாகப் பிரித்து விளையாட்டுப் போட்டிகள் வைத்தல்.
(கிளித்தட்டு கெந்திப்பிடித்து கில்லி ஒளித்துப் பிடித்து)

மதிய உணவு சோறு கறி சைவ அசைவ உணவு வகைகள்
கலந்துரையாடல் (தலைப்பு அன்று அங்கு தெரிவு செய்யப்படும், பெண்ணியத்தை விட்டு விடுவோம்) இந்நேரம் பல புதிய நட்புகள் பூத்திருக்கும்- புளொக்கில் அடிபட்டவர்கள் கை குலுக்கிக் கொள்ளலாம்)

இரவு உணவு ரோஸ் பாண் சம்பல் பால் தேத்தண்ணி (கறுப்பியின் ஸ்பெஷல்)
புருட் சலாட்


நாள் ஐந்து


காலை உணவு சான்விச் சைவ அசைவ
அது கு.ஊ வண்டியில் மீண்டும் ரொறொண்டோவின் பிரசித்தி பெற்ற இடங்களைப் பார்வை இடப் பயணம். (சீ.என் ரவர் போன்றவை)

மதிய உணவு பொம்பே பலஸ்
(சின்னத் தூக்கம்)

இரவு குடி, இசை, நடனம் உணவுகளுக்கான ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.

(இரவை கனேடிய புளொக் மெம்பர்கள் வீட்டில் கழிக்கலாம். இட நெருக்கடி ஏற்படின் மோட்டல்கள் ஒழுங்கு செய்யப்படும்)

நாள் ஆறு பிரியா விடை (அழுதல் கட்டிப்பிடித்தல் போன்றவை)

புகைப்படப் பொறுப்பு பெயரிலியிடம் கொடுக்கப்பட்டுள்ளது.

இந்தச் சந்திப்பின் குறிக்கோளாகவும் வேண்டுகோளாகவும் கலந்து கொண்டவர்கள் தொடர்ந்து தமது அனுபங்களை புளொக்கில் புகைப்படங்களுடன் எழுதித் தள்ள வேண்டும்

இப்பிடியெல்லாம் சொல்லக் கறுப்பிக்கு ஆசை ஆனால் பாங்க் பலன்ஸ் விடுகுதில்லை. அடுத்த வெள்ளிக்கிழமை Super 7 $22,000,000 மில்லின் என்கிறார்கள் விழுந்தால்?? (பாப்பம்)