Wednesday, May 11, 2005

Journey of Hope -1990

DIRECTOR - Xavier Koller
Journey of Hope, a Swiss film, won the Academy Award in 1990 as Best Foreign Language Film.


ஐரோப்பாவைத் தளமாக வைத்து "தாய்மண்" என்ற பெயரில் தங்கபச்சான் ஈழத்தமிழரின் "எல்லை கடத்தல்" (Border Crossing) ஐப் படமாக்க உள்ளார் என்று அறிந்தேன். 1980களில் புலம்பெயர்ந்து வந்த ஈழத்தமிழ் இளைஞர்கள் பலரின் வாழ்வில் இந்த "எல்லை கடத்தல்" அனுவம் என்பது மறக்க முடியாத ஒன்றாக அமைந்திருக்கும். இன்னல்களின் நடுவில் வெற்றி பெற்றவர்கள் தோல்வி உற்றவர்கள் என்று பலவாறு இருப்பினும் தமது எதிர்காலக் கனவுடன் மொழி, காலநிலை போன்றவற்றின் அடிப்படைத் தெரிதல்கள் அற்று வெற்றி ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு புதிய கனவுடன் நாட்டை விட்டுக் கிளம்பிய எத்தனை இளைஞர்கள் நடுவழியில் காணாமல் போயுள்ளார்கள். கடல்களில் கொட்டப்பட்டு மூழ்கிப் போனவர்களும், இரும்புப் பெட்டிகளுக்குள் அடைக்கப்பட்டு மூச்சுத் திணறி இறந்தவர்களும், கரையோரம் கப்பலோடும், மொழி தெரியாத நாடுகளில் ரோட்டு ஒரமும் நிர்கதியாக விடப்பட்டவர்களும்... தொடர்கதையாகப் பல ஆண்டுகள் தொடர்ந்த கதைகள் இவை. இப்போது நாம் மறந்து போன சோகக்கதைகள். அனேகமாக இப்படியான இன்னல்களை ஈழப் பெண்களும், குழந்தைகளும் சந்தித்திருக்க மாட்டார்கள் என்றே நம்புகின்றேன்.

இலங்கையில் இடம்பெறும் உள்நாட்டுப் போரினால் எமது மக்கள் புலம்பெயருகின்றார்கள். இப்படியான இன்னல்கள் எங்களுக்கும் போரால் பாதிக்கப்படும் மற்றய நாட்டு மக்களுக்கும் மட்டுமே சொந்தமானது என்று நான் நம்பியிருந்தேன். ஆனால் அண்மையில் நான் பார்த்த திரைப்படமான "Journey of Hope" இல் துருக்கி நாட்டைச் சேர்ந்த ஒரு குடும்பத் தலைவன் மனைவி மறுத்த போதும் பிடிவாதமாக நின்று குடும்பச் சொத்தை எல்லாம் (காணி, கால்நடைகள், நகைகள்) விற்று சுவிஸ்லாந்திற்குச் சென்று உழைத்து நாடு திரும்பி வந்து நன்றாக வாழ வேண்டும் என்ற கனவோடு தனது ஆறு பெரிய குழந்தைகளை பெற்றோருடன் விட்டு விட்டு மனைவியையும், தனது கடைசி எட்டு வயது மகனையும் அழைத்துக் கொண்டு பயணம் செய்கின்றான்.
எம் நாடு போலவே பாஸ்போட் எடுப்பதிலிருந்து தில்லுமுல்லுக்களும், ஏமாற்றங்களும் ஆரம்பமாகி ஆட்டு மந்தை போல் ஐரோப்பிய மோகம் கொண்டு புறப்பட்ட அகதிகள் அனைவரையும் வாகனத்திற்குள் அடைத்து சுவிஸ்லாந்து எல்லையில் இறக்கி விட்டு அவர்கள் போக வேண்டிய மலைப் பாதையைக் காட்டி இதனூடே நடந்து வாருங்கள் நான் உங்களுக்காக சுவிஸ்லாந்தில் காத்து நிற்கின்றேன் என்ற அழைத்து வந்தவன் போய் விட தமது உடமைகளுடனும் கனவுகளுடனும் மலை ஏறத் தொடங்கும் அகதிகள் ஒவ்வொரு பொருட்களாகத் தவற விட்டுக் கடைசியில் பனிப் புகாருக்குள் அகப்பட்டு குளிரின் கொடுமையில் உயிர் பிழைத்தால் போதும் என்று பாதை தெரியமால் ஓடத் தொடங்க உறவுகள் பிரிகப்படுகின்றார்கள். குளிருக்குள் விறைத்துப் போகும் தன்மகனை பல உடைகள் போடச் செய்து போர்வையால் போர்த்தி மனைவியையும் தவறவிட்டு வழி தெரியாமல் கடவுளே என்னைக் காப்பாற்று என்று கதறியவன் காலை சுவிஸ் நாட்டு பொலீசாரால் காப்பாற்றுகின்றார்கள். அவன் மனைவி கால் உடைந்த நிலையில் காப்பாற்றப்பட்டு மற்றய அகதிகளுடன் இருப்பதா அவனுக்குத் தகவல் கிடைக்கின்றது. கைகளில் விறைத்துப் போயிருக்கும் சிறுவனை ஆஸ்பத்திரிக்கு எடுத்துச் சென்று அவன் இறந்து விட்டான் என்று தந்தைக்கு அறிவித்த பொலீசார் எதற்காக உனது நாட்டில் இருந்து இங்கு வந்தாய் என்று விசாரணையை ஆரம்பிக்க கலங்கிய கண்களுடன் "Hope" என்ற அவனது பதிலோடு நிறைவிற்கு வருகின்றது. படம் முழுவதும் சிறுவனின் குறும்பையும் அவன் பயணித்தின் போது மற்றவர்களைக் கவர்ந்ததையும் தொடர்ந்து காட்டி வரும் போதே இவனுக்கு ஏதோ ஆகாப் போகின்றது என்று மனம் அடிக்கத்தொடங்கி விட்டது.

கூட்டுக் குடும்பமாகச் சந்தோஷமாக வாழ்ந்த ஒருவன் வாழ்வில் எப்படி மேல்நாட்டு மோகம் வந்து அழித்து விடுகின்றது என்பதோடு. அகதிகள் எப்படி பிற நாட்டு மக்களால் நடத்தப்படுகின்றார்கள் என்பதையும் மிகவும் தத்தூபமாகக் காட்டியுள்ளார்கள். எம்நாட்டு மக்களின் அனுபவங்களோடு ஒத்திருந்ததால் பாத்திரங்களோடு ஒன்றிப் பார்க்கக் கூடியதாக இருந்தது.

3 comments:

-/பெயரிலி. said...

/கூட்டுக் குடும்பமாகச் சந்தோஷமாக வாழ்ந்த ஒருவன் வாழ்வில் எப்படி மேல்நாட்டு மோகம் வந்து அழித்து விடுகின்றது என்பதோடு. அகதிகள் எப்படி பிற நாட்டு மக்களால் நடத்தப்படுகின்றார்கள் என்பதையும் மிகவும் தத்தூபமாகக் காட்டியுள்ளார்கள்./
இது மிகவும் எளிமைப்படுத்தப்பட்ட கருத்து.

கறுப்பி said...

ம்.. உயிருக்கு ஆபத்து, வறுமை இரண்டு காரணங்களுக்காப் புலம்பெயரலாம். Better life க்காக மனைவியின் பேச்சையும் கேட்காமல் நிர்பந்திப்பது????
புலம்பெயர்ந்து ஒரு நாட்டிற்குள் குடிபுகுந்து, வதிவுரிமையும் எடுத்து, வேலை செய்யத் தொடங்கியும் விட்டால் பிரச்சனை இல்லை. ஆனால் அந்த முதல் நாள் அகதிகள் நடத்தப்படும் விதம். நிச்சயம் நாகரீகமில்லாதது.

சுந்தரவடிவேல் said...
This comment has been removed by a blog administrator.