Saturday, April 29, 2006

“ம்” சோபாசக்தி

83ம் ஆண்டு ஜுலைப் படுகொலையை பக்கத்தலைப்பில் காலமாகக் காட்டி நாவலை ஆரம்பிக்கின்றார் சோபாசக்தி. தொடர்ந்து இடம் என்ற பக்கத்தலைப்பில், அதே காலத்தில் அய்ரோப்பாவின் ஒரு சிறுநகரில் இடம்பெற்ற சம்பவம். நேசகுமார், பிறேமினி தம்பதிகளின் செல்லப் புதல்வி நிறமி (என்ன பெயர் தெரிவோ?) என்ற பதின்ம வயதுடைய சிறுமி கர்ப்பமாக இருக்கின்றாள். மகள் கர்ப்பம் என்று தெரிந்து கொண்ட போது தாய் பிறேமினியின் நடந்து கொண்ட விதம் மிகையான செயற்கைத் தனம். தந்தை நேசகுமார் அசையாது விறைத்துப் போய் விட்டார். மகளின் கர்ப்பத்திற்கு யார் காரணம் என்று அறிய முனைந்து தோற்றுப் போகின்றார்கள் பெற்றோர். நிறமியின் முகத்தில் சாந்தம். எனவே இது வன்புணர்வால் ஏற்பட்ட கர்ப்பம் அல்ல. அவள் தனது இந்த நிலையை இன்பமாக அனுபவிக்கின்றாள் என்பதாய்? அப்படியாயின் அவளுக்கான உடல் உறவில் இன்பத்தைக் கண்டிருக்கின்றாள் என்பதாயும்? இருப்பின் ஆழமான காதலால் ஏற்பட்டதா என்றால் கருக்கலைப்பிற்கு அவள் மறுப்புத் தெரிவிக்காமல் மருத்துவமனையில் கருக்கலைப்புப் பிரிவில் நிர்மலமான முகத்துடன் அமர்ந்திருக்கின்றாள். எனவே காதலன் பற்றிய அக்கறையும் அதில் காட்டப்படவில்லை.

அடிக்கடி அப்பாவான நேசகுமார் என் செல்ல மகள் நிறமியின் கதையைச் சொல்லப் போகின்றேன் என்று ஏதோ சாடை சொல்வதால் “இந்தாள்தான் ஏதோ செய்து போட்டுதோ?” என்ற சந்தேகம் வரத்தான் செய்கின்றது. தொடர்ந்து நிறமியோடு பழகிய இரு இளைஞர்கள் மேல் பெற்றோரிற்கு சந்தேகம் வருவது போல் காட்டி வாசகர்களின் பாதையைத் திருப்பி விட்ட சந்தோஷம் சோபாசக்திக்கு.
இவை அனைத்திற்கும் சோபாசக்தியின் “ம்” நாவலின் கருவிற்கும் சத்தியமாய் எந்தச் சம்மந்தமும் கிடையாது. நாவல் மீண்டும் பின்நோக்கிச் செல்கிறது. நேசகுமார்தான் கதையின் நாயகன். முக்கிய காலம் 83ம் ஆண்டு ஜுலை கலவரமும், அதன் பின்னணிகளும், பாதிப்புக்களும், தொடரும் பாதிப்புக்களும் என்று வைத்துக் கொள்ளலாம். நேசகுமாரை எனும் உருவைத் தவிர மற்றைய கதை உருவங்கள், காலம், இடம் அனைத்தும் உண்மையானவை என்றும் நம்புகின்றேன்.

நேசகுமார் எனும் மனித தெரிவு மிகவும் கவனத்துடன் கையாளப்பட்டிருக்கின்றது. சுவாமி என்ற பெயரோடு, நட்பு, இயக்கம், கொள்கை என்பவற்றை மீறி வெறும் சுயநலவாதியாக ஒரு இயக்கத்தைச் சேர்ந்த இளைஞன் காட்டப்பட்டிருப்பது நாயகன் என்ற வடிவமாகிப் போகாமல் மிகவும் யதார்த்தமாக அமைந்திருக்கின்றது.
அதிகம் எமக்கு வாசிக்கக் கிடைக்காத இலங்கைத் தமிழ் உரைநடை. கட்டுரைகளைத் தவிர நாவலாகவோ, சிறுகதையாகவோ வாசிக்கக் கிடைக்காத மிக முக்கியமான காலப்பகுதி, கதைப்புலம், எழுத்தினூடே இழையோடும் எள்ளல், இவையனைத்தையும் கொண்டு எமது நாட்டின் தொடரும் அவலங்களின் முக்கிய பதிப்பாக சோபாசக்தி “ம்”ஐத் தந்துள்ளார். இருபது வருடங்களுக்கு மேலாக நடைபெற்றுக்கொண்டிருக்கும் போராட்டத்திற்கு ஈழத்தமிழர்களாகிய நாங்கள் கொடுத்துக் கொண்டிருப்பது வெறும் “ம்” மட்டும்தான் என்பதை தெளிவாகச் சொல்லியிருக்கின்றார்.

தனது புனைவில் எந்த விதமான விட்டுக் கொடுப்பும் இல்லாமல் யார் யாரல்லாம் இந்தப் போராட்ட கால கட்டத்தில மக்களைக் கொன்று குவித்தார்கள் என்பதோடு, சிறைச்சாலை வாழ்க்கை, சித்திரவதைகள், திட்டங்கள், வெலிக்கடை உடைப்பு, கொலைகள், போராட்டங்கள் என்று ஒவ்வொரு வினாடியையும் வாசகர்களும் உணர்ந்து கொண்டு நகரும் வகையில் சம்பவங்கள் செயற்கைத்தனமின்றி முன்னேறிச் செல்வது, வெறுமனே செய்திகளாகக் கேள்விப்பட்ட பல சம்பவங்களை பலரும் தம்முள்ளும் உணர்ந்து கொள்ளச் செய்திருக்கின்றது. வாசிப்பினூடே சிறைக்கைதிகளோடு சேர்ந்து வாசகர்களும் கூச்சல் போடவும், போராடவும், சிதைந்து போகவும், வாய்விட்டழவும், இறுதியில் சாவை எதிர்கொள்ளும் நிலைக்கும் தள்ளப்படுகின்றார்கள்.
மிக முக்கியமான ஒரு ஈழப்படைப்பாகவும், ஆவணமாகவும் சோபாசக்தியின் “ம்” காக்கப்படும் என்பதில் சந்தேகமில்லை.

இனி - நாவலின் முடிவு மீண்டும் அய்ரோப்பாவிற்கு வந்து நிறமியின் கர்ப்பத்தில் போய் நிற்கின்றது. நிறமியின் கர்ப்பத்திற்கு காரணம் அவளது தந்தை நேசகுமார். அவர் இப்போது அய்ரோப்பியச் சிறையில். பிறேமினியும், நிறமியும் பிறேமினியின் அண்ணாவோடு வசிக்கின்றார்கள். தண்டணை முடிந்து நேசகுமார் மனைவி, மகளைத் தேடிவருகின்றார். அவமானப்படுத்தப்பட்டு வீதியில் அலைகின்றார். இறுதியில் மகளைப் புணர்ந்தவன் என்ற பெயரோடு ஈழத்து இளைஞர்களால் கொல்லப்படுகின்றார்.

இத்தனை வன்முறைகளையும் வாழ்வில் கண்டு, அனுபவித்து வந்த ஒரு இளைஞன் சாதாரண ஒரு வாழ்க்கை முறையைக் கையாள முடியாது, அவன் மனப் பிறழ்வில் தனது செல்ல மகளைக் கூடப் புணர்ந்து கொள்வான். இல்லவிடின் சாந்தமே உருவான ஒரு பதின்ம வயது மகளுடன் எந்தத் தந்தையும் நல்ல ஒரு (உடல்) உறவை வைத்துக் கொள்ளலாம் (?). இல்லாவிட்டால் இதற்கு மேலால் ஏதாவது? பின்முன் நவீனத்துவம் இருக்கின்றதா?

சின்ன வயதுப் பெண்களைத் தமது பாலியல் வக்கிரத்திற்கு உபயோகப்படுத்துவது என்பது ஒரு தண்டனைக்குரிய விடையம் என்பதோடு, எமது சமுதாயத்தில் பலரால் முக்கியமாக உறவுகளால் மறைக்கப்பட்டு வரும் ஒரு கொடூரச் சம்பவமாகவுமே பலரால் அடையாளம் காணப்பட்டிருக்கின்றது. தம்மைப் பாதுகாக்க முடியாத, தெரியாத, வயதில் தமக்கு வேண்டிய மிக நெருங்கிய ஆண்களால் (அப்பா, அண்ணா, மாமா, சித்தப்பா) அன்பின் மூலமோ, பயம் காட்டியோ உறவு கொள்ளும் போது சிறுமியும் மௌனமாகிப் போகும் சம்பவங்களே இடம்பெற்றிருக்கின்றன. பதின்நான்கு வயதுச் சிறுமி எனும் போது அவளுக்கும் உணர்வுகள் இருக்கலாம். எனவே எட்டு வயது என்பதை விட்டு மெல்ல பதின்மவயதிற்கு சென்றால் சிறுமியை வேறுவிதமாக அடையாளம் காட்ட முடியும் என்பது தற்போது பல ஆண் எழுத்தாளர்களின் (என் நினைவில் இருப்பவவை சாருநிவேதிதாவின் “உன்னத சங்கீரம் ”, ரமேஷ் பிரேமின் “ஆட்ட விதிகளுக்குள் அடைபட்ட கடவுளின் தடம்”, அ.முத்துலிங்கத்தின் ஒரு சிறுகதை பெயரை மறந்து விட்டேன்) படைப்புக்களில் காணக்கூடியதாக இருக்கின்றது. முக்கியமாக அந்தச் சிறுமியும் அனுபவித்தாள் என்ற வகையில் சிறுமி பிரதிபலிக்கப்படுவது. இந்த ஆண் எழுத்தாளர்கள் வரிசையில் தற்போது (என்ன இழவு பிடித்தோ?) சோபாசக்தியும் இணைந்துள்ளார்.

பதின்ம வயதுப் பெண்ணிற்கு உணர்வு இருக்கலாம். அவள் தன் வயது இளைஞனுடன் உறவு வைத்துக் கொள்ளுவாள், ஆனால் தந்தை (அல்லது அதற்குச் சமனான வயதுடைய மூத்தவன் ஒருவன்) எனின் அது நிச்சயமாக வன்புணர்வாக மட்டுமே அமைந்திருக்கும், இல்லாவிடின் சிறுமிக்கு மனப்பிறழ்வு என்று நான் கூறப் போகின், இது உண்மைச் சம்பவத்தைத் தளமாகக் கொண்டு எழுதப்பட்டது, எனக்குத் தெரிந்து இப்படியான சிறுமிகள் இருக்கின்றார்கள் என்று இந்த எழுத்தாளர்கள் கூறிவிடின் நான் வாயைப் பொத்திக் கொண்டு இருக்க நேடிடும். தான் காதல் கொள்ளும் ஆணைத் தவிர வேறு எந்த ஒரு ஆணின் தொடுகையும் பெண்களுக்கு மசுக்குட்டி ஊருவது போல் உணர்வைத்தான் கொடுக்கும். பாலியல் தொழில் ஈடுபடும் பெண்கள் மனதைக் கல்லாக்கிக் கொண்டு மசுக்குட்டியை ஊர விடுகின்றார்கள். ஆனால் சாதாரண குடும்பத்தில் சாதாரண வாழ்க்கை வாழும் ஒரு சிறுமிக்கு இந்தத் தேவை இருக்கப் போவதில்லை. நிச்சயமாக “ம்” இல் வரும் நிறமி போன்ற ஒரு பாத்திரத்திற்கு இப்படி ஒரு தேவை இருந்திருக்காது.
எமது நாட்டுப் போராட்டத்தின் மிக முக்கியமான ஒரு பதிவை எழுதத் தொடங்கிய சோபாசக்திக்குத் தனது எழுத்தின் மேல் நம்பிக்கை இல்லாமலா இப்படி நிறமி என்றொரு சிறுமியைப் புகுத்தி கர்ப்பமாக்கி தன் எழுத்தைக் கேள்விக் குறியாக்கி? நாவலில் முன் பின் சில பக்கங்ளை வெட்டி எறிந்து விட்டால் “ம்” மறக்க முடியாத ஒரு முக்கியமான புனைவு.

Friday, April 14, 2006

சம்சாரா




தனது 29வது வயதில் மனைவி யசோதராவையும், மகன் ராகுலையும் இரவு நேரம் தனியே விட்டுச் செல்லும் போது சித்தார்த கௌதமன் அவர்களின் எதிர்காலம் பற்றியோ யசோதராவின் மனவேதனை, மகன் ராகுலின் ஏக்கம் பற்றியோ ஒரு கணம் சிந்தித்திருக்கவில்லை. சிந்தித்திருந்தால் உலகிற்கு கௌதம புத்தர் கிடைத்திருக்க மாட்டார். துறவு வேண்டிய ஒருவர் எதற்காக லௌகீக வாழ்க்கைக்குள் புகுந்து ஒரு குழந்தையைப் பெற்றெடுக்க வேண்டும்? எதற்காக ஒரு பெண்ணைக் கண்ணீருக்கு ஆளாக்க வேண்டும். இப்படியான வாதமும் இருக்கின்றது. பீஜீ நாட்டில் பட்டிணியால் வாடும் குழந்தைகளை எண்ணிப் பாரதி கண்ணீர் வடித்தான் எனும் போது தன் சொந்தப்பிள்ளைகள் பற்றி சிந்தனையில்லாது என்று “பாரதி” திரைப்படம் வந்த போது விமர்சனங்கள் எழுந்திருக்கின்றன.
2001ம் ஆண்டு ரொறொண்டோ சர்வதேச திரைப்படவிழாவில் திரையிடப்பட்டு பார்வையாளர்களின் தெரிவில் சிறந்த திரைப்படமாகத் தெரிவு செய்யப்பட்ட “சம்சாரா” இந்திய இயக்குனரான நலீன் பானின் முதல் முழுநீளத் திரைப்படமாகும். வடஇந்தியாவில் லடாக் மலைப்பிரதேசத்தில் முற்றுமுழுதாகப் படப்பிடிப்பு செய்யப்பட்டுள்ளது.

தாஷி தனது ஐந்தாவது வயதிலிருந்து துறவற வாழ்வில் ஈடுபட்டு வருகின்றான். மூன்று வருட கடும் தவத்தை முடித்துக் கொண்டு மீண்டும் மடாலயத்திற்குத் திரும்பும் அவன் வாழ்க்கையில், வாழ்வியல் பற்றிய பல கேள்விகள் எழத் தொடங்குகின்றன. தன்பால் உண்டாகும் பாலியல் உணர்வுகள் அவனைக் குழப்பத்திற்குள்ளாக்குகின்றது. வெளியுலகை நோக்கி அவன் தேடல் அதிகரிக்கின்ற போது, பேமா எனும் வயல் வேலை செய்யும் இளம் பெண் அவனைக் கவர்ந்திழுக்கின்றாள். துறவறமா? இல்லை அறவறமா? குழம்பிப்போகும் தாஷி இறுதியில் மடாலயத்தை விட்டு விலகி பேமாவைத் தேடிச் செல்கின்றான்.

இல்லறத்தில் சுகம் கண்டு மகவொன்றிற்குத் தந்தையாகி, மனித மனங்கள், வியாபார யுக்திகள் என்று சாதாரண வாழ்வையும் அடையாளம் கண்டு அதனுடனும் விளையாடப் பழகிக் கொள்ளும் தாஷியின் கவனம் கூலி வேலை செய்யும் கவர்சிகரமாக பெண்ணொருத்தி மேல் திரும்புகின்றது.

மனைவி வீட்டிலில்லாத ஒரு பொழுதில், அப்பெண்ணுடன் அவன் உறவு கொள்வதும், மனைவி திரும்பி வந்த பின்னர் குற்ற உணர்வால் போராடிப் போவதும் “ச்” இதுதானா வாழ்வு என்று அவன் மனம் குன்றி குற்ற உணர்வில் இருந்து தன்னை மீட்க மனைவி, குழந்தையை விட்டு ஒரு இரவு நேரம் தனது உடைகளைக் கழைந்து மீண்டும் துறவறம் பூண்டு மடாலயத்தை நோக்கிச் செல்லும் கணவனை வழி மறிக்கும் பேமா சொல்கின்றாள்
சித்தார்தா தான் சென்ற பின்னர் யசோதா படப்போகும் அவமானம், வாழ்வதற்கான போராட்டம், மனவேதனை பற்றி சிறிதும் யோசிக்க வில்லை, ஆண்களுக்கு இது மிகவும் இயல்பானது, ஆனால் யசோதாவால் முடியாது தூங்கும் தனது குழந்தையை இரவோடு இரவாக விட்டுச் செல்ல இதுதான் ஆணுக்கும் பெண்ணுக்கும் உள்ள வேறுபாடு.”
தாஷி ஆடிப் போகின்றான். தன்னை மன்னித்துவிடும் படி பேமாவின் கால்களில் விழுகின்றான். பேமா அவனைத் துச்சம் செய்து தனது குழந்தையிடம் செல்கின்றாள். ஆண், பெண் மனதை நன்றாகவே படம்பிடித்துக் காட்டியிருக்கின்றார்கள்.


மலைப்பிரதேசத்தில் கண்களுக்கு இதமான படப்பிடிப்பு, இயல்பான நடிகர்களின் நடிப்பு, கம்பி மேல் நடப்பது போன்ற கவனதுடன் சிறிதும் சறுக்கிவிடாமல் மிக நிதானமாக எழுதப்பட்ட பிரதி, முகத்தைச் சுளிக்க வைக்காத மிக அற்புதமான பள்ளியறைக்காட்சிகள் என்று திரைப்படம் மிகத்தரமான பட்டியலில் சேர்க்கப்பட்டிருக்கின்றது.

Saturday, April 08, 2006

Rohinton Mistry




மைக்கல் ஒண்டாச்சி, சியாம் செல்லத்துரை இவர்களின் வரிசையில் றொஹின்ரன் மிஸ்ரியும் எம்மோடு நெருக்கமுடைய கலாச்சார வழி வந்த இன்னுமொரு சிறந்த எழுத்தாளராய் கனடாவில் இருந்து தரமான நாவல்களை எழுதித் தடம் பதித்துள்ளார். சியாம் செல்லத்துரையின் நாவல்கள் கொழும்பைத் தளமாகக் கொண்டது போல் றொஹின்ரன் மிஸ்ரியின் சிறுகதைகள் நாவல்கள் அனேகமானவை மும்பையைத் தளமாகக் கொண்டு அமைந்திருக்கின்றன.

றொஹின்ரன் 1957ஆம் ஆண்டு மும்பையில் ஒரு பாசி குடும்பத்தில் பிறந்தவர். அனைத்து இந்தியர்களின் கனவு, இலட்சியம் போல் உயர்தரக் கல்வியின் பின்னர் வெளிநாடு சென்று வேலை எடுத்து தங்கிவிடுவது என்ற அடைப்புக்குறிக்குள் தனது வாழ்க்கையையும் அடைத்து அதன் காரணமாகக் கனடா வந்தவர். (Quoted in Mehfil, November 1996)

1975இல் கனடாவிற்கு குடிபெயர்ந்து ரொறொண்டோ வங்கி ஒன்றில் வர்த்தகத்துறையின் வேலைக்கமர்ந்த றொஹின்ரன் 1983இல் தனது முதலாவது சிறுகதையான ‘One Sunday’ யை வெளியிட்டு Canadian Hart House Literary Contest பரிசையும் பெற்றார். 85இல் மீண்டும் 'Auspicious Occasion' எனும் சிறுகதைக்குப் பரிசைப் பெற்றதோடு மட்டுமல்லாமல் கனேடி அரசாங்கத்திடமிருந்து கிடைத்த பண உதவி றொஹின்ரனை முழு நேர எழுத்தாறராக மாற்றியது. இவரது முதல் சிறுகதைத் தொகுப்பான ‘Tales from Firozsha Baag’ எனும் தொகுதியை பென்குயின் பதிப்பகம் வெளியிட்டது.

றோஹின்ரன் மிஸ்ரியின் மூன்று நாவல்களான ‘Such a Long Journey’ (1991),
‘A Fine Balance’ (1996), ‘Family Matters’ (2002), மிகுந்த வரவேற்பை வாசகர்களிடமிருந்து பெற்று Booker Prize for Fiction, Man Booker Prize for Fiction போன்ற பரிசுகளையும் பெற்றுத்தந்துள்ளன. அண்மையின் வெளியான மிகச்சிறந்த நாவல் என இவரது ‘A Fine Balance’ அடையாளம் காணப்பட்டிருக்கின்றது.

மிஸ்ரியின் சிறுகதைகள் நாவல்கள் அனைத்துமே முக்கியமாக மும்பையில் வசிக்கும் பாசி குடும்பத்தின் துன்பங்கள், மூடநம்பிக்கைகள் போன்றவற்றைத் தளமாகக் கொண்டு எழுதப்பட்டிருக்கின்றன.

‘Such a Long Journey’ - இந்நாவல் 1971ஆம் ஆண்டு இந்திராகாந்தியின் ஆட்சிக்குக் கீழ் இந்தியா போர் மூலம் பங்களாதேஸ் ஆகப் பிரிவு கண்ட காலத்தை அடித்தளமாகக் கொண்டு மும்பைபில் வசிக்கும் குப்தா எனும் ஒரு வங்கி ஊழியரின் வாழ்க்கையைத் தாங்கி நகர்கின்றது. ஒரு நடுத்தர வங்கி ஊழியன், அவரது மூடநம்பிக்கைகளைக் கொண்ட மனைவி, திறமை இருந்தும் ஒரு சாதாரண தந்தையின் கனவுகளை நிறைவேற்ற விரும்பாத தனித்துவத்தை விரும்பும் மகன், அடிக்கடி நோயின் விழும் மகள்; என்று குப்தாவின் குடும்பத்தை கருவாகக் கொண்டு நாவல் நகர்ந்தாலும், இந்திராகாந்தியின் ஆட்சியின் அக்கிரமச் செயலால் பாதிக்கபட்டு இறக்கும் ஒரு ஓய்வு பெற்ற இராணவ வீரர், மூளை பாதிக்கப்பட்ட இளைஞன் அவனது உணர்வுகள், குப்தாவோடு பணிபுரியும் நண்பர்கள் என்று பலரது அடையாளங்களைத் காட்டி நிற்கின்றது இந்த நாவல்.

‘A Fine Balance’ - இந்நாவல் அண்மையில் வாசித்த மிகச்சிறந்த நாவல் என்று கூறும் தரத்தோடு இருக்கின்றது. 1975இல் இந்தியாவில் ‘அவசரகால ஆட்சி’ பிரகடனப்படுத்தப்பட்ட போது மும்பையில் வசித்த நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்த டயானா எனும் பெண்ணினின் வாழ்வை மையப்படுத்தி அவரது சிறு பிராயத்தில் தொடங்கி முதுமை வரையின் நாவல் நீள்கின்றது. பெண்கள் மேலான ஆண்மையின் அடக்குமுறை அதை எதிர்த்து நிற்கும் டயானாவின் திறமை, பொருளாதார நெருக்கடி, டயானா சந்திக்கும் மனிதர்கள் என்று தன் எழுத்தால் வாசகர்களை பாத்திரங்களுக்குள் கொண்டு சென்றுள்ளார் மிஸ்ரி.
நகர சுத்திகரிப்புத்திட்டம், குடும்பக்கட்டுப்பாடு என்ற பெயரில் வீதியோரப் பிச்சைக்காறர்களையும், பாமர மக்களையும் அரசாங்கம் நடாத்தும் முறை மிகவும் நெகிழ்சி தரும் வகையில் எழுத்தப்பட்டிருக்கின்றது.

இந்திராகாந்தியின் அரசியல் காலகட்டத்தில் இந்திய மக்கள் அவர் மேல் கொண்டிருந்த வெறுப்பை மிகத் துல்லியமாகவும் துணிவோடும் தந்திருக்கின்றார் மிஸ்ரி.
மூன்று வருடங்கள் திருமணத்தின் பின்னர் கணவனை ஒரு விபத்தில் இழந்த டயானா, ஆணாதிக்கவாதியான தனது அண்ணனுடன் தங்க நேர்ந்து விடுமோ என்று அஞ்சி, வாழ்வை ஒரு போராட்டம் நிறைந்த சவாலாக எதிர் கொண்டு முன்னேறும் போது டயானாவின் வீட்டின் அறையில் வாடகைக்கு வந்து சேரும் மொனீக் எனும் பல்கலைக்கழக மாணவன், டயானாவின் தையல் வேலைக்கு என வந்து சேரும் ஐவர், ஓம் எனும் கிராமத்தைச் சேர்ந்த தலித் ஆண்கள் இவர்களுடனான டயானாவின் உறவு என கதை நீண்டு செல்கின்றது.

ராஜ்கௌதமனின் ‘சிலுவைராஜ் சரித்திரம்’, ‘காலச்சுமை’, ஜெயமோகனின் ‘ஏழாம் உலகம்’, எஸ். ராமகிறிஷ்ணனின் ‘நெடுங்குருதி’ போன்ற பல தரமான இந்தியத் தமிழ் நாவல்களின் வரும் சம்பவங்கள் இந்த “A Fine Balance” ஐப் படிக்கும் போது நினைவில் வந்து சென்றது. காரணம் மேற்கூறிய அனைத்து நாவல்களும் இந்திய மக்களின் மூடநம்பிக்கைகள், வாழ்க்கை முறை, போராட்டங்கள், துன்பங்கள் போன்றவற்றை மிக துல்லியமாக எழுத்தில் கொண்டு வந்திருக்கின்றன.


மனித போராட்டத்தை எடுத்துச் செல்லும் படைப்புக்கள் மக்களுக்கு நம்பிக்கை தரும் வகையில் தமது முடிவைக் கொண்டிருக்க வேண்டும் என்று பல வாசகர்கள் சொல்லக் கேட்டிருக்கின்றேன். ஆனல் ஒரு தரமான படைப்பு சமகால சமூகத்தைப் பிரதிபலிப்பதாக இருக்கும் தருணத்தில் மனித போராட்டத்தை அது எடுத்துக்காட்டும், சமகால சமூகம் நம்பிக்கை தருவதாக இருப்பின் முடிவும் அப்படி அமையலாம். ஆனால் படைப்பாளியின் பார்வையில் சமூகம் அதனைப் பிரதிபலிக்கத் தவறும் போது படைப்பின் முடிவும் நம்பிக்கை அற்றதாகவே அமைந்து விடுகின்றது. மிஸ்ரியின் இந்த நாவலில் வாழ்வோடு போராடும் அத்தனை கதாபாத்திரங்களும் தோற்றுப் போகின்றன. பிரமாண்டமாய் வளர்ந்து விட்ட அராஜக உலகின் முன், வெறுமனே மனிதாபிமானத்தோடு, சுதந்திரமாக வாழ முயல்வது எப்படிச் சாத்தியம்? நெஞ்சை நெகிழ வைத்துக் கண்களைப் பனிக்க வைக்கும் காத்திரமாக ஒரு படைப்பு இந்த “A Fine Balance” தரமான ஒரு நாவலை படிக்க ஏங்கும் வாசகர்களுக்கு றொஹின்ரன் மிஸ்ரியின் “A Fine Balance” நிச்சயமாகப் பரிந்துரைப்பேன்.