Saturday, April 29, 2006

“ம்” சோபாசக்தி

83ம் ஆண்டு ஜுலைப் படுகொலையை பக்கத்தலைப்பில் காலமாகக் காட்டி நாவலை ஆரம்பிக்கின்றார் சோபாசக்தி. தொடர்ந்து இடம் என்ற பக்கத்தலைப்பில், அதே காலத்தில் அய்ரோப்பாவின் ஒரு சிறுநகரில் இடம்பெற்ற சம்பவம். நேசகுமார், பிறேமினி தம்பதிகளின் செல்லப் புதல்வி நிறமி (என்ன பெயர் தெரிவோ?) என்ற பதின்ம வயதுடைய சிறுமி கர்ப்பமாக இருக்கின்றாள். மகள் கர்ப்பம் என்று தெரிந்து கொண்ட போது தாய் பிறேமினியின் நடந்து கொண்ட விதம் மிகையான செயற்கைத் தனம். தந்தை நேசகுமார் அசையாது விறைத்துப் போய் விட்டார். மகளின் கர்ப்பத்திற்கு யார் காரணம் என்று அறிய முனைந்து தோற்றுப் போகின்றார்கள் பெற்றோர். நிறமியின் முகத்தில் சாந்தம். எனவே இது வன்புணர்வால் ஏற்பட்ட கர்ப்பம் அல்ல. அவள் தனது இந்த நிலையை இன்பமாக அனுபவிக்கின்றாள் என்பதாய்? அப்படியாயின் அவளுக்கான உடல் உறவில் இன்பத்தைக் கண்டிருக்கின்றாள் என்பதாயும்? இருப்பின் ஆழமான காதலால் ஏற்பட்டதா என்றால் கருக்கலைப்பிற்கு அவள் மறுப்புத் தெரிவிக்காமல் மருத்துவமனையில் கருக்கலைப்புப் பிரிவில் நிர்மலமான முகத்துடன் அமர்ந்திருக்கின்றாள். எனவே காதலன் பற்றிய அக்கறையும் அதில் காட்டப்படவில்லை.

அடிக்கடி அப்பாவான நேசகுமார் என் செல்ல மகள் நிறமியின் கதையைச் சொல்லப் போகின்றேன் என்று ஏதோ சாடை சொல்வதால் “இந்தாள்தான் ஏதோ செய்து போட்டுதோ?” என்ற சந்தேகம் வரத்தான் செய்கின்றது. தொடர்ந்து நிறமியோடு பழகிய இரு இளைஞர்கள் மேல் பெற்றோரிற்கு சந்தேகம் வருவது போல் காட்டி வாசகர்களின் பாதையைத் திருப்பி விட்ட சந்தோஷம் சோபாசக்திக்கு.
இவை அனைத்திற்கும் சோபாசக்தியின் “ம்” நாவலின் கருவிற்கும் சத்தியமாய் எந்தச் சம்மந்தமும் கிடையாது. நாவல் மீண்டும் பின்நோக்கிச் செல்கிறது. நேசகுமார்தான் கதையின் நாயகன். முக்கிய காலம் 83ம் ஆண்டு ஜுலை கலவரமும், அதன் பின்னணிகளும், பாதிப்புக்களும், தொடரும் பாதிப்புக்களும் என்று வைத்துக் கொள்ளலாம். நேசகுமாரை எனும் உருவைத் தவிர மற்றைய கதை உருவங்கள், காலம், இடம் அனைத்தும் உண்மையானவை என்றும் நம்புகின்றேன்.

நேசகுமார் எனும் மனித தெரிவு மிகவும் கவனத்துடன் கையாளப்பட்டிருக்கின்றது. சுவாமி என்ற பெயரோடு, நட்பு, இயக்கம், கொள்கை என்பவற்றை மீறி வெறும் சுயநலவாதியாக ஒரு இயக்கத்தைச் சேர்ந்த இளைஞன் காட்டப்பட்டிருப்பது நாயகன் என்ற வடிவமாகிப் போகாமல் மிகவும் யதார்த்தமாக அமைந்திருக்கின்றது.
அதிகம் எமக்கு வாசிக்கக் கிடைக்காத இலங்கைத் தமிழ் உரைநடை. கட்டுரைகளைத் தவிர நாவலாகவோ, சிறுகதையாகவோ வாசிக்கக் கிடைக்காத மிக முக்கியமான காலப்பகுதி, கதைப்புலம், எழுத்தினூடே இழையோடும் எள்ளல், இவையனைத்தையும் கொண்டு எமது நாட்டின் தொடரும் அவலங்களின் முக்கிய பதிப்பாக சோபாசக்தி “ம்”ஐத் தந்துள்ளார். இருபது வருடங்களுக்கு மேலாக நடைபெற்றுக்கொண்டிருக்கும் போராட்டத்திற்கு ஈழத்தமிழர்களாகிய நாங்கள் கொடுத்துக் கொண்டிருப்பது வெறும் “ம்” மட்டும்தான் என்பதை தெளிவாகச் சொல்லியிருக்கின்றார்.

தனது புனைவில் எந்த விதமான விட்டுக் கொடுப்பும் இல்லாமல் யார் யாரல்லாம் இந்தப் போராட்ட கால கட்டத்தில மக்களைக் கொன்று குவித்தார்கள் என்பதோடு, சிறைச்சாலை வாழ்க்கை, சித்திரவதைகள், திட்டங்கள், வெலிக்கடை உடைப்பு, கொலைகள், போராட்டங்கள் என்று ஒவ்வொரு வினாடியையும் வாசகர்களும் உணர்ந்து கொண்டு நகரும் வகையில் சம்பவங்கள் செயற்கைத்தனமின்றி முன்னேறிச் செல்வது, வெறுமனே செய்திகளாகக் கேள்விப்பட்ட பல சம்பவங்களை பலரும் தம்முள்ளும் உணர்ந்து கொள்ளச் செய்திருக்கின்றது. வாசிப்பினூடே சிறைக்கைதிகளோடு சேர்ந்து வாசகர்களும் கூச்சல் போடவும், போராடவும், சிதைந்து போகவும், வாய்விட்டழவும், இறுதியில் சாவை எதிர்கொள்ளும் நிலைக்கும் தள்ளப்படுகின்றார்கள்.
மிக முக்கியமான ஒரு ஈழப்படைப்பாகவும், ஆவணமாகவும் சோபாசக்தியின் “ம்” காக்கப்படும் என்பதில் சந்தேகமில்லை.

இனி - நாவலின் முடிவு மீண்டும் அய்ரோப்பாவிற்கு வந்து நிறமியின் கர்ப்பத்தில் போய் நிற்கின்றது. நிறமியின் கர்ப்பத்திற்கு காரணம் அவளது தந்தை நேசகுமார். அவர் இப்போது அய்ரோப்பியச் சிறையில். பிறேமினியும், நிறமியும் பிறேமினியின் அண்ணாவோடு வசிக்கின்றார்கள். தண்டணை முடிந்து நேசகுமார் மனைவி, மகளைத் தேடிவருகின்றார். அவமானப்படுத்தப்பட்டு வீதியில் அலைகின்றார். இறுதியில் மகளைப் புணர்ந்தவன் என்ற பெயரோடு ஈழத்து இளைஞர்களால் கொல்லப்படுகின்றார்.

இத்தனை வன்முறைகளையும் வாழ்வில் கண்டு, அனுபவித்து வந்த ஒரு இளைஞன் சாதாரண ஒரு வாழ்க்கை முறையைக் கையாள முடியாது, அவன் மனப் பிறழ்வில் தனது செல்ல மகளைக் கூடப் புணர்ந்து கொள்வான். இல்லவிடின் சாந்தமே உருவான ஒரு பதின்ம வயது மகளுடன் எந்தத் தந்தையும் நல்ல ஒரு (உடல்) உறவை வைத்துக் கொள்ளலாம் (?). இல்லாவிட்டால் இதற்கு மேலால் ஏதாவது? பின்முன் நவீனத்துவம் இருக்கின்றதா?

சின்ன வயதுப் பெண்களைத் தமது பாலியல் வக்கிரத்திற்கு உபயோகப்படுத்துவது என்பது ஒரு தண்டனைக்குரிய விடையம் என்பதோடு, எமது சமுதாயத்தில் பலரால் முக்கியமாக உறவுகளால் மறைக்கப்பட்டு வரும் ஒரு கொடூரச் சம்பவமாகவுமே பலரால் அடையாளம் காணப்பட்டிருக்கின்றது. தம்மைப் பாதுகாக்க முடியாத, தெரியாத, வயதில் தமக்கு வேண்டிய மிக நெருங்கிய ஆண்களால் (அப்பா, அண்ணா, மாமா, சித்தப்பா) அன்பின் மூலமோ, பயம் காட்டியோ உறவு கொள்ளும் போது சிறுமியும் மௌனமாகிப் போகும் சம்பவங்களே இடம்பெற்றிருக்கின்றன. பதின்நான்கு வயதுச் சிறுமி எனும் போது அவளுக்கும் உணர்வுகள் இருக்கலாம். எனவே எட்டு வயது என்பதை விட்டு மெல்ல பதின்மவயதிற்கு சென்றால் சிறுமியை வேறுவிதமாக அடையாளம் காட்ட முடியும் என்பது தற்போது பல ஆண் எழுத்தாளர்களின் (என் நினைவில் இருப்பவவை சாருநிவேதிதாவின் “உன்னத சங்கீரம் ”, ரமேஷ் பிரேமின் “ஆட்ட விதிகளுக்குள் அடைபட்ட கடவுளின் தடம்”, அ.முத்துலிங்கத்தின் ஒரு சிறுகதை பெயரை மறந்து விட்டேன்) படைப்புக்களில் காணக்கூடியதாக இருக்கின்றது. முக்கியமாக அந்தச் சிறுமியும் அனுபவித்தாள் என்ற வகையில் சிறுமி பிரதிபலிக்கப்படுவது. இந்த ஆண் எழுத்தாளர்கள் வரிசையில் தற்போது (என்ன இழவு பிடித்தோ?) சோபாசக்தியும் இணைந்துள்ளார்.

பதின்ம வயதுப் பெண்ணிற்கு உணர்வு இருக்கலாம். அவள் தன் வயது இளைஞனுடன் உறவு வைத்துக் கொள்ளுவாள், ஆனால் தந்தை (அல்லது அதற்குச் சமனான வயதுடைய மூத்தவன் ஒருவன்) எனின் அது நிச்சயமாக வன்புணர்வாக மட்டுமே அமைந்திருக்கும், இல்லாவிடின் சிறுமிக்கு மனப்பிறழ்வு என்று நான் கூறப் போகின், இது உண்மைச் சம்பவத்தைத் தளமாகக் கொண்டு எழுதப்பட்டது, எனக்குத் தெரிந்து இப்படியான சிறுமிகள் இருக்கின்றார்கள் என்று இந்த எழுத்தாளர்கள் கூறிவிடின் நான் வாயைப் பொத்திக் கொண்டு இருக்க நேடிடும். தான் காதல் கொள்ளும் ஆணைத் தவிர வேறு எந்த ஒரு ஆணின் தொடுகையும் பெண்களுக்கு மசுக்குட்டி ஊருவது போல் உணர்வைத்தான் கொடுக்கும். பாலியல் தொழில் ஈடுபடும் பெண்கள் மனதைக் கல்லாக்கிக் கொண்டு மசுக்குட்டியை ஊர விடுகின்றார்கள். ஆனால் சாதாரண குடும்பத்தில் சாதாரண வாழ்க்கை வாழும் ஒரு சிறுமிக்கு இந்தத் தேவை இருக்கப் போவதில்லை. நிச்சயமாக “ம்” இல் வரும் நிறமி போன்ற ஒரு பாத்திரத்திற்கு இப்படி ஒரு தேவை இருந்திருக்காது.
எமது நாட்டுப் போராட்டத்தின் மிக முக்கியமான ஒரு பதிவை எழுதத் தொடங்கிய சோபாசக்திக்குத் தனது எழுத்தின் மேல் நம்பிக்கை இல்லாமலா இப்படி நிறமி என்றொரு சிறுமியைப் புகுத்தி கர்ப்பமாக்கி தன் எழுத்தைக் கேள்விக் குறியாக்கி? நாவலில் முன் பின் சில பக்கங்ளை வெட்டி எறிந்து விட்டால் “ம்” மறக்க முடியாத ஒரு முக்கியமான புனைவு.

7 comments:

இளங்கோ-டிசே said...

/ பிறேமினி தம்பதிகளின் செல்லப் புதல்வி நிறமி (என்ன பெயர் தெரிவோ?)/
சுமதி, புலம்பெயர் சூழலில் பெற்றோர் பிள்ளைகளுக்கு வைக்கும் பெயரை எல்லாம் அறிந்துகொள்ளும்போது இந்தப் பெயரால் ஆச்சரியம் எல்லாம் ஏன் வரவேண்டும் :-)?
....
மற்றும்படி,
/எட்டு வயது என்பதை விட்டு மெல்ல பதின்மவயதிற்கு சென்றால் சிறுமியை வேறுவிதமாக அடையாளம் காட்ட முடியும் என்பது தற்போது பல ஆண் எழுத்தாளர்களின் (என் நினைவில் இருப்பவவை சாருநிவேதிதாவின் “உன்னத சங்கீரம் ”, ரமேஷ் பிரேமின் “ஆட்ட விதிகளுக்குள் அடைபட்ட கடவுளின் தடம்”, அ.முத்துலிங்கத்தின் ஒரு சிறுகதை பெயரை மறந்து விட்டேன்) படைப்புக்களில் காணக்கூடியதாக இருக்கின்றது. முக்கியமாக அந்தச் சிறுமியும் அனுபவித்தாள் என்ற வகையில் சிறுமி பிரதிபலிக்கப்படுவது. இந்த ஆண் எழுத்தாளர்கள் வரிசையில் தற்போது (என்ன இழவு பிடித்தோ?) சோபாசக்தியும் இணைந்துள்ளார். /

'உன்னத சங்கீதத்திற்கு' நிகராய் (சாரு பிறகு ஏதோ '...பாம்பு சொன்ன கதைகள்' என்றும் இவ்வாறான இன்னொரு கதையையும் எழுதியிருக்கிறார் என்பது ஒரு உபகுறிப்பாய் இருக்கட்டும்), 'ம்', அ.முத்துலிங்கத்தின்('கொளுத்தாடு பிடிப்பேன்'?) போன்றவற்றை ஒப்பிடமுடியுமா என்றும் தெரியவில்லை.
....
பதின்ம வயதில் ஒரு தகப்பனால் கர்ப்பமாயிருக்கிறாள் என்று சோபாசக்தி முன்வைக்கும் கருத்தை நிராகரித்து நீங்கள் வைக்கும் கருத்தை -ஒரு பெண்ணாய் இல்லாதவளவில் எந்த அளவுக்கு புரிந்துகொள்ளுவது என்ற தயக்கம் இருந்தாலும்- தன்னைச் சிதைத்துவிட்டுப்போன சித்தப்பாவை, தன்னால் ஒருபோதும் வெறுக்கமுடியாது அவரின் கடைசிக்காலத்தில் வைத்து காப்பாற்றுவேன் என்கின்ற பெண்ணை, பதினெட்டு வயதிலும் தன் தகப்பனால் சிதைக்கப்படுவதை பொதுத்தளத்தில் சொல்லமுடியாது தனக்குள் அவதிப்படும் தோழியை கண்டுகொண்டு (ஏன் இப்படி weird யாய் இருக்கினம் என்று அதன் பாதிப்பில்லாத என்னைப்போன்ற ஒருவரால் அப்படித்தான் இவற்றைக் கேட்டபொழுதில் யோசிக்கமுடிந்தது என்பது வேறுவிடயம்) இருக்கும்போது, 'ம்' முன்வைக்கும் சம்பவத்தை எந்தளவுக்கு நிராகரிக்கமுடியுமோ தெரியாது. இந்த நாவலின் விமர்சனத்தை பொடிச்சியோ அல்லது மயூரனோ எழுதியபோது கூட, அந்தப் பாதிக்கப்பட்ட பெண்ணான - நிறமி- தன்னைப்பற்றி பேசுவதற்கான வெளி நிராகரிக்கப்பட்டதை பிரதியின் பலவீனமாய்த்தான் கொள்ளவேண்டுமெனக் கூறியதும் நினைவு. ஆனால் நேசகுமார் என்ற மனிதனின் வாழ்க்கையின் பின்னால் கதை ஓடிக்கொண்டிருக்கின்றதே தவிர, அவர் காட்டிக்கொடுத்த போராளி நண்பர்கள் பற்றியோ, கர்ப்பமாக்கிய மகள் குறித்தோ பிற கிளைக்கதைகளை ஆரம்பிக்கவேண்டிய/ஆராயவேண்டிய பொறுப்பு வாசிக்கும் நமக்குத்தான் உள்ளதே தவிர ஆசிரியர் எல்லாவற்றையும் எழுதித்தீர்க்கவேண்டும் என்று கட்டாயம் பிரதியாளருக்கு தேவையில்லையென்றே நினைக்கின்றேன்.

கறுப்பி said...

டீஜே - ஏனோ நிறமி என்ற பெயர் என்னை மிகவும் irritate பண்ணீச்சு. மேலும் “ம்” ஐ நான் மற்றைய படைப்புக்களுடன் ஒப்பிடவில்லை. ஆனால் தேவையில்லாத பாத்திரப் படைப்பு நிறமி என்பது என் கருத்து. அடுத்துத் தாங்கள் சொல்லியது போல் தங்கள் நண்பிகள். இப்படியா பல பெண்கள் இருக்கின்றார்கள். அவர்கள் நிறம்பவே பாதிக்கப்படுகின்றார்கள். ஆனால் நிறமியின் பாத்திரப் படைப்பு விரக்தி, கோபம், மனஉளச்சல் கொண்ட ஒரு படைப்பாகப் படைக்கப்படவில்லை இரண்டிற்கும் வித்தியாசம் இருக்கிறது அல்லவா? தரமான சோபாசக்தி போன்ற ஒருவர் எதற்காக இப்படி என்பதுதான் என் கேள்வி.

ஷோபாசக்தி said...

"ம்......"

MURUGAN S said...

தமிழ் தகவல் தொழில் நுட்பம் வளர்ச்சியடைய பிளாக்கர் மூலமாக பல அரிய கருத்துக்களை தந்து கொண்டிருக்கின்றீர்கள். உங்கள் கருத்துக்கள் தெளிவாகவும் அருமையாகவும் உள்ளது.

- யெஸ்.பாலபாரதி said...

//நாவலில் முன் பின் சில பக்கங்ளை வெட்டி எறிந்து விட்டால் “ம்” மறக்க முடியாத ஒரு முக்கியமான புனைவு.//

நிச்சயமாக... ஆனால் அப்படி நீக்கப்பட்டால் அது புனைவில் வருமா.. அல்லது பதிவில் வருமா?
உங்கள் கருத்தோடு ஒத்துப் போகிறேன்.

Anonymous said...

/ பிறேமினி தம்பதிகளின் செல்லப் புதல்வி நிறமி (என்ன பெயர் தெரிவோ?)/
சுமதி, புலம்பெயர் சூழலில் பெற்றோர் பிள்ளைகளுக்கு வைக்கும் பெயரை எல்லாம் அறிந்துகொள்ளும்போது இந்தப் பெயரால் ஆச்சரியம் எல்லாம் ஏன் வரவேண்டும் :-)?
- டீஜே


டி.சே இந்தப் பெயர் சம்பந்தமாக எதைச் சொல்லவருகிறார் என்பது புரியவில்லை. இது தமிழ்ப் பெயர் இல்லை என்கிறாரா அல்லது ஏன் இப்படி தமிழ்ப் பெயர் வைக்கவேண்டும் என்கிறாரா அல்லது நிறம் என்றால் வெள்ளை என்ற பொருளில் வியாக்கியானம் செய்கிறாரா என்பது குழப்பமாக இருக்கிறது. எதற்கும் ஒரு தகவலைத் தந்துவிடுகிறேன். கிரியாவின் தற்காலத் தமிழ் அகராதியில் பக்கம்-630 இல் இந்தச் சொல்லுக்கான அர்த்தத்தைக் காணலாம்.

கறுப்பி said...

நன்றி ரவி

ஏற்கெனவே எனது நண்பி ஒருவர் தனது மகளுக்கு "நிறமி" என்று பெயரிட்டிருப்பதாகவும் அதன் கருத்தையும் எனக்கு மின் அஞ்சல் மூலம் தெரிவித்திருந்தார்.
நிறமி என்ற பெயருக்கு க்ரியவில் இருக்கும் கருத்து – தோல், முடி, இலை முதலியவற்றிற்கு நிறம் தரும் இயற்கையான நுண்பொருள் என்பது.
நாவலில் படிக்கும் போது ஏனோ எனக்கு பெரிய நெருடலாக இருந்தது அதனால் விமர்சனத்தில் அப்படி எழுதி விட்டேன் அது என் தவறு. இப்போது அடிக்கடி "நிறமி" எனும் பெயரை உச்சரித்தும் எழுதியும் வருவதால் ரசிக்கக் கூடியதாக உள்ளது