Thursday, July 14, 2005

ஹோபோ வாழ்வு (The Train-Hoppers)1. உன் வாழ்வை நீயே தீர்மானி, வேறு ஒருவர் தலையிட விடாதே.

2. நீ செல்லும் ஊர்களின் சட்டங்களையும், மக்களையும் மதிக்கப்பழகிக்கொள்.

3. எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் இலயாமையில் உள்ளவரை உபயோகித்துக் கொள்ளாதே. முக்கியமாக சக ஹோபோவை.

4. எப்போதும் வேலை செய். முக்கியமாக மற்றவர்கள் விரும்பாத வேலையை எடுத்துச் செய்யத் தயங்காதே.

5. வேலை கிடைக்காத பட்சத்தில் உன்னிடம் உள்ள கை வேலைத் திறமைகளை உபயோகப்படுத்து.

6. குடித்து, நிதானம் இழந்து எதிர்மறையான உதாரணமாக மற்றைய ஹோபோக்களுக்கு ஒருநாளும் இருக்காதே.

7. இலவசமாகக் கிடைக்கும் பொருட்களை எறிந்து விடாதே, சக ஹோபோக்களுக்கு அவை உபயோகமானதாக இருக்கலாம்.

8. இயற்கையை மதி, நீ உபயோகித்த சுற்றத்தை பயணத்தின் போது சுத்தமாக வைத்துக்கொள்ளப் பழகு.

9. முடிந்தவரை சுத்தமாக இருக்கப் பழகிக் கொள்.

10. பிரயாணம் செய்யும் போது இரயில் ஊழியர்களுக்குத் தொந்தரவு செய்யாமல், முடிந்தால் உதவி செய்.

11. இரயில் தரிப்பு நிலையங்களில் பிரச்சனை உண்டு பண்ணாதே, வர இருக்கும் மற்றைய ஹோபோக்களுக்கு இதனால் இடைஞ்சல்கள் உண்டாகலாம்.

12. நடைபாதைச் சிறுவர்களுக்கு முடிந்தவரை உதவி செய். அவர்களை அவர்கள் குடும்பத்துடன் இணைப்பதற்கு முயற்சி செய்.

13. சக ஹோபோக்களுக்கு உதவியாகவும் நம்பிக்கையாகவும் எப்போதும் இரு. உனக்கும் அவர்கள் உதவி தேவைப்படலாம்.

14. உன் குரலும் உலகிற்குத் தேவை. மறந்து விடாதே. வேண்டிய நேரங்களில் உனது குரலைக் கொடுப்பது உனது கடமை.இப்படியான சில சுலோகங்களைத் தம்மகத்தே வைத்து இயங்கி வருகின்றது "ஹோபோ" எனும் நாடோடிச் சமூகம். ஜிப்சிகள் என்று ஒரு நடோடிச் சமூகம் போல், இரயில் இடம் விட்டு இடம் பயணித்து வாழ்பவர்கள் ஹோபோக்கள் என்று தம்மை அடையாளம் காட்டுகின்றார்கள். இந்த வாழ்க்கை முறை எப்போது தண்டவாளம் போட்டார்களோ அப்போதிலிருந்து இருப்பதாகக் கூறுகின்றார்கள்.

கனேடியத் தொலைக்காட்சியில் ஹோபோக்கள் பற்றிய ஒரு விவரணப்படம் பார்க்கும் சந்தர்ப்பம் கிடைத்தது. இது வயது வந்தவர்களுக்கு மட்டுமான நிகழ்சியாக அறிவிக்கப்பட்டது. ஹோபோக்களின் வாழ்க்கை முறை ஒரு தவறான செய்தியை இளைஞர்களுக்குக் கொடுத்து விடக்கூடாது என்பதில் தொலைக்காட்சி மிகவும் கவனமாகவே இருக்கின்றது.
சிலர் விரும்பியே ஹோபோ வாழ்வை அமைத்துக் கொண்டாலும், அனேகமாக வீட்டில் இருந்து ஓடிய சிறுவர்களே ஹோபோ வாழ்க்கை முறையில் ஈடுபடுகின்றார்கள். இயந்திர வாழ்க்கை முறையிலிருந்து தம்மை விடுவித்துக் கொண்டு, வட அமெரிக்கா தென் அமெரிக்கா என்று இவர்கள் பயணம் பல நாட்கள், வாரங்கள், மாதங்கள் இரயில் கழிகின்றன. விரும்பிய போது விரும்பிய இடங்களில் கிடைக்கும் வேலையச் செய்து பயணத்தைத் தொடர்வார்கள். எப்போதும் பொருட்களை ஏற்றிச் செல்லும் இரயிலிலேயே சட்ட விரோதமாக இவர்கள் பயணிப்பதால், பயணங்கள் பல இடங்களில் தடைப்பட்டும் போகின்றன. அத்தோடு திசைகள் அறியாது கிடைக்கும் இரயில் பயணம் செய்வதால் இவர்கள் பயணங்கள் பாதைமாறிப் போவதும் உண்டு. அனேக இரயில் நிலைய ஊழியர்கள் இவர்களுக்கு உதவுபவர்களாக இருப்பினும் சிலர் இவர்களை பொலீசுக்குக் காட்டியும் கொடுக்கின்றார்கள். பதினெட்டு வயதிற்குக் குறைந்தவர்கள் ஹோபோக்களாகக் காணப்படும் பட்சத்தில் அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டுக் குடும்ப அங்கத்தவர்களிடம் ஒப்படைக்கப்படுகின்றார்கள். இருப்பினும் இவர்கள் மீண்டும் குடும்பத்தை விட்டு விலகி தம்மைக் ஹோபோ வாழ்க்கையில் இணைத்துக் கொள்பவர்களாகவே இருக்கின்றார்கள்.ஆண் பெண் வேறுபாடற்று இவர்கள் குளங்களைக் காணும் போது நிர்வாணமாகக் குளிப்பதும், ஒருவர் உடையை ஒருவர் அணிந்து கொள்வதும், பலாத்காரம் அற்று விரும்பியவரோடு விரும்பிய நேரம் உறவு கொள்வதும் என்று தமக்கான சுதந்திரத்தை முழுமையான அனுபவிக்கும் இவர்கள் அனேகம் மதுவிற்கும் போதை மருந்துகளுக்கும் அடிமையாகிப் போவதால் பல சமூகங்கள் இவர்களை ஏற்றுக்கொள்ள மறுப்பதாக்கக் கூறுகின்றார்கள். இருந்தும் இவர்கள் சமூக அமைப்பு அதற்குள் உளன்று கொண்டிருக்கும் மனிதர்கள் பற்றிக் கேலியாகவே பேசுகின்றார்கள்.

தமது வாழ்நாள் முழுவதையும் ஹோபோவாகக் கழித்த பலர் இருக்கின்றார்கள். இடையில் இந்த வாழ்வைத் துறந்து மீண்டும் சமூகத்துடன் இணைந்து கொண்டவர்களும் இருக்கின்றார்கள். இவர்களுக்கு என்றொரு விழா ஓகஸ்ட் 11-15 வரை பிறிட் எனும் இடத்தில் லோவா மாநிலத்தில் நடக்கவிருக்கின்றது. இங்கே அனேக ஹோவாக்கள் கூடுவார்கள். ஒரு கொண்டாட்டமாக அன்று அவர்கள் சந்தோஸித்திருப்பார்கள். ஆனால் அதன் பின்னர் சில்லறை கேட்டால் அந்த ஊர் மக்கள் தம்மேல் காறித்துப்புவார்கள் என்று சிரித்த படியே ஹோபோக்கள் கூறுகின்றார்கள்.

ஹோபோக்கள் தம்மேல் வைத்திருக்கும் நம்பிக்கையையும் சமூகத்தின் மேல் வைத்திருக்கும் அவநம்பிக்கையையும் பார்க்கும் போது கொஞ்சம் சிந்திக்க வேண்டியே உள்ளது.

2 comments:

Balaji-Paari said...

மிகவும் சுவாரஸியமான பதிவு இது. நன்றிகள் கறுப்பி.

கறுப்பி said...

பாலாஜி பாரி – எனக்கும் ஹோபோக்கள் போல் நாடோடியாக வாழத்தான் விருப்பம். அதனால்தான் அந்த விவரணப்படம் என்னைக் கவர்ந்து ஒரு பதிவையும் எழுத வைத்தது.
அது சரி தாங்கள் ரொம்ப பிஸி போல காண்பது மிக அரிதாக உள்ளது.