Friday, July 21, 2006

“புதியதோர் உலகம்”

கோவிந்தன்

"பெப்ரவரி 15 1985 இல் நான் அங்கம் வகித்த தமிழீழ விடுதலை அமைப்பில் இனிமேலும் தொடர்ந்து இருப்பதில் அர்த்தமில்லை என கண்ட பின்பு அதிலிருந்து வெளியேறிய தோழர்களுடன் நானும் சேர்ந்து கொண்டேன். அந்த விடுதலை அமைப்பு சிறிலங்கா அரசுக்கு எதிராக நீண்ட காலமாகப் போராடி வந்த ஒரு பலம் மிக்க அமைப்புத்தான். ஆனால் அந்த அமைப்பில் நிலவிய அராஜகம், ஜனநாயகமின்மை என்பன அவர்கள் நடத்தும் போராட்டம் கூட இன்னொரு அராஜகத்திற்கும் ஒடுக்கு முறைக்கும் காரணமாக அமைந்துவிடும் என்று கருதியதாலேயே நாம் அதிலிருந்து வெளியேறினோம்.
நாம் அந்த அமைப்பிலிருந்து வெளியேறினோமேயன்றி தமிழீழ விடுதலைப் போராட்டத்திலிருந்து வெளியேறவில்லை. தமிழீழ விடுதலைப்போராட்டத்தில் தலையெடுக்கும் அராஜகம் அழிக்கப்பட்டு, போராட்டம் வீரியம் கொண்டதாக முன்னெடுக்கப்படுவதற்கு எமது பணியைத் தொடர்ந்து செய்து கொண்டேயிருப்போம்.

எமது வெளியேற்றத்தை அந்த அராஜகவாதிகள் அங்கீகரிக்கவில்லை. நாம் வெளியேறிய பின்பு எம்மைக் கொன்றொழிப்பதற்காக சென்னை நகரம் எங்கும் சல்லடை போட்டுத் தேடினார்கள். நாம் அவர்களிடமிருந்து எம்மைப் பாதுகாத்துக் கொண்டு இரண்டு மாதங்கள் தலைமறைவாக இருந்தோம். அந்தக் காலத்திலேயே “புதியதோர் உலகம்” எழுதப்பட்டது.

இந்நாவல் கூறும் விடையங்களை சிறிலங்கா அரசு தனக்குச் சாதகமாகப்பயன்படுத்தி தமிழீழ விடுதலைப் போராட்டத்தை சிறுமைப்படுத்தும் பிரச்சாரத்தை மேற்கொள்ளலாமே என்ற அச்சம் இந்நாவல் படைக்கப்படும் போது கூடவே எனக்கு இருந்தது. கூடுமானவரை அந்த உணர்வு வாசகர்களுக்கு ஏற்படாதவகையில் நாவல் உருவாக்கப்பட்டது. இந்த விபரீத அபாயத்தையும் எதிர்நோக்கிக் கொண்டு இந்நாவல் படைக்கப்படுவதற்குக் காரணமாக இருந்தது, தமிழீழ விடுதலைப் போராட்டம் குறைகள் களையப்பட்டு அது முறையாக முன்னெடுத்துச் செல்லப்பட வேண்டும் என்ற அக்கறையினாலேயாகும்.

தமிழீழ விடுதலைப்போராட்டம் வன்முறையில் நம்பிக்கை கொண்ட ஆயுதமேந்திய போராட்டமாயினும் அது ஒருபோதும் அராஜகத் தன்மை கொண்டதாக மாறிவிடுவதை அனுமதிக்க முடியாது. விடுதலைப் போராட்டத்தில் என்றும் மனிதாபிமானமும், மானுட உயிர்ப்பிற்கான ஆவலும் மேலோங்கி இருக்க வேண்டும். தமிழீழ விடுதலைப் போராட்டம் இவற்றை இழந்து செல்லுமாயின் அது இன்னொரு அராஜகத்திற்கும் ஒடுக்குமுறைக்குமான வழியாகவே அமைந்து விடும்.

நாம் அங்கம் வகித்த தமிழீழ விடுதலை அமைப்பின் அராஜகம் தாபனத்திலிருந்து விலகும் உரிமையை மறுத்ததோடு சுதந்திரமாக அரசியல் நடத்தும் உரிமையையும் தடைசெய்தது. அதனால்தான் எம்மைக் கொன்றொழிப்பதற்கு பேயாக அலைந்தார்கள்.

அவர்கள் முயற்சி கைகூடாததால் ஆத்திரமுற்றவர்கள் தமிழீழத்தில் எமது தோழர்களைக் கடத்தியும், சித்திரவதை செய்தும் துன்புறுத்தினார்கள். அந்த அராஜகவாதிகளின் கொலைவெறி இன்னும் அடங்கவில்லை.

அவர்கள் ஒருவேளை எம்மைக் கொல்வதில் வெற்றி பெறலாம். அந்தக் கொலைவெறியர்கள் யார் என்பதை நாம் உங்களுக்குக் கூறவேண்டியதில்லை, ஆனால் அவர்கள் எப்படிப்பட்டவர்கள்? நாம் எப்படி அவர்களுடன் முரண்பட்டு நின்றோம்? என்பதை வெளிப்படுத்துவதற்கு இந் நாவல் பயன்படுத்தியிருக்கின்றோம்.

இந்நாவல் தனியொரு மனிதனின் படைப்பல்ல, பல தோழர்களின் ஆலோசனைகள், ஒத்துழைப்புக்கள் மூலம் உருவாக்கப்பட்ட கூட்டுப் படைப்பே இது.

தமிழீழ விடுதலைப்போராட்டத்தில் கடந்த ஒரு வருட காலமாக நடைபெற்ற உண்மைச் சம்பவங்களிலிருந்தே இந்நாவல் உருப்பெற்றுள்ளது.

இக்கதையின் கதாபாத்திரங்களில் இறந்தவர்கள் உண்மையிலேயே இறந்தவர்கள்தான். உயிரோடு இருப்பவர்கள் இப்போதும் உயிரோடுதான் இருக்கின்றார்கள். “புதியதோர் உலகம்” ஒரு இலக்கியமாகக் கருதி மாத்திரம் படைக்கப்படவில்லை. ஒரு அறைகூவலாகவும் கருதியே இது வெளிவந்துள்ளது. வாசகர்கள் இதனைப் புரிந்து கொண்டு ஆதரவு தர வேண்டும்".


----------------------------------------------------------------------------------
“புதியதோர் உலகம்” நூலாசிரியர் கோவிந்தன் பற்றி சில வரிகள்.

1982 இல் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தில் (புளொட்) இணைந்து கொண்டார்.

1983 இல் முழுநேர உறுப்பினரானதுடன் கழகத்தின் மத்திய குழுவிற்கும் தெரிவானார்.

1985 இல் புளொட் அமைப்பிலிருந்து வெளியேறினார். “தீப்பொறி” ஈழவிடுதலைப் போராட்டக் குழுவை நிறுவிய ஸ்தாபக உறுப்பினர்களில் இவரும் ஒருவர். இக்கால கட்டத்தில் புளொட் இனால் தேடப்பட்டு தலைமறைவாக இருந்து செயற்பட்டார். இக்காலத்தில்தான் “புதியதோர் உலகம்” என்ற நாவல் எழுதப்பட்டது.

1986இல் விடுதலைப்புலிகள் ஏனைய அமைப்புக்களை தடைசெய்தமையால் இவர் தொடர்ந்தும் தலைமறைவாகவே செயற்பட்டார்.

1991 இல் யாழ்ப்பாணத்தில் அமைப்புப் பணிகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது மே மாதம் 17ம் திகதி விடுதலைப்புலிகள் அமைப்பினால் கைது செய்யப்பட்டார். மேற்கொண்டு அவர் பற்றிய எந்த விபரமும் இன்றுவரை கிடைக்கவில்லை.

அண்மையில்தான் கோவிந்தனின் “புதியதோர் உலகம்” படித்தேன். தமிழ் மக்கள் கோவிந்தனை மறந்து போனார்களா? இலக்கிய வாதிகள் கூட அவரை நினைவு கூர்ந்து நான் கண்டதில்லை. கோவிந்தனின் முன்னுரையே நாவலைப் பற்றிக் கூறி விடுகின்றது. இன்னும் எத்தனை எத்தனை கோவிந்தன்கள் தம் கதை கூறாது மறைந்து போனார்கள்?
1991களின் பின்னர் புளொட் அமைப்பின் எத்தனை அங்கத்தவர்கள் தம்மாலேயே அழிந்து போனார்கள். கோவிந்தனுக்குத் தெரிந்திருக்க நியாயம் இல்லை. நேர்மையான ஒரு போராட்ட கழகம் உருவாகவேண்டும் என்ற கனவைத் தாங்கிய அவர் வார்த்தைகளும் பொய்துப் போய்விட்டன.

கோவிந்தன் பற்றிய மேலதிக தகவல்கள் தெரிந்தால் யாராவது தயவுசெய்து பதிவு செய்து விடுங்கள்.

5 comments:

ஈழநாதன்(Eelanathan) said...

கறுப்பி தமிழ்ச்சூழலில் கோவிந்தன் நினைவுகூரப்பட்டதும் பேசப்பட்டதும் உங்களை எட்டவில்லையென நினைக்கிறேன்.பதிவுகள் விவாதக்களத்தில் கோவிந்தனின் புதியதோர் உலகம் விவாதத்திற்குள்ளாகியிருக்கிறது.பெயரிலி,டிசே சில வலைப்பதிவுகளில் இதுபற்றிப் பேசியிருக்கிறார்கள்.புத்தகவாசத்தில் புதியதோர் உலகத்தை வாசிப்புக்கு உட்படுத்தவேண்டுமென்று சொல்லிக்கொண்டிருந்த பெயரிலியைக் காணவில்லை.புதியதோர் உலகம் வாசிக்க விரும்புபவர்களுக்காக நூலகத்திலிருந்து சுட்டி தந்திருக்கிறேன்.

http://www.noolaham.net/library/books/01/92/92.htm

ஈழநாதன்(Eelanathan) said...

புதியதோர் உலகம் நூலாசிரியர் கோவிந்தன் குறித்த விபரங்கள்

சொந்தப் பெயர் : சூசைப்பிள்ளை நோபேட்
புனைபெயர்கள் : டொமினிக், ஜீவன், கேசவன்
பிறப்பு : 1948.5.02 பாலைய10ற்று, திருகோணமலை
தந்தையின் பெயர் : மைக்கல் சூசைப்பிள்ளை
தாயின் பெயர் : நிக்கொலஸ் அன்னம்மா

கல்வியும் தொழிலும் :
இவர் தனது ஆரம்பக் கல்வியை திருகோணமலை புனிதவளனார் தமிழ் வித்தியாலயத்தில் முடித்தார். இடைநிலை கல்வியை திருகோணமலை புனித சூசையப்பர் கல்லூரியிலும், உயர்கல்வியை திருகோணமலை இந்துக் கல்லூரியிலும் முடித்தார். கொழும்பு பல்கலைக் கழகத்தில் கலைப் பிரிவில் பட்டப்படிப்பை மேற்கொண்டார். அக் காலத்தில் மாணவர் அமைப்புகளில் தீவிரமாக பங்கெடுத்தார். மார்க்சியக் கருத்துகளில் ஈடுபாடு செலுத்தினார். பட்டபடிப்பை முடித்துக் கொண்டு கொழும்பு நில அளவையாளர் திணைக்களத்தில் எழுதுவினைஞராக (குமாஸ்தா) பணியாற்றினார். பின்பு திருமலை மாவட்ட கல்விக் கந்தோரில் பணியாற்றினார்.

அரசியல் :
பல்கலைகழக வாழ்வில் பல்வேறு இடதுசாரிக் குழுக்கள், அமைப்புகளுடன் இணைந்து செயற்பட்டார். பின்னர் மலையகத்திலிருந்து வெளியான ~தீர்த்தக்கரை| எனும் அரசியல், இலக்கிய காலண்டிதழின் ஆசிரியர் குழுவில் ஒருவராகவும் அதன் வெளியீட்டாளராகவும் இருந்தார். அப்போது பிரான்சிஸ் சேவியர் எனும் பெயரில் சிறுகதைகள் எழுதியுள்ளார்.

1980 களின் தொடக்கத்தில் ~சங்கப்பலகை| எனும் குழுவை அமைத்து, மாதாந்தம் முக்கிய சமூக, அரசியல், பொருளாதார, கலை இலக்கிய விடயங்கள் தொடர்பான கருத்தரங்குகளை தொடர்ச்சியாக நடாத்தி வந்தார்.

1982 இல் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தில் (Pடுழுவு) இணைந்து கொண்டார்.

1983 இல் முழுநேர உறுப்பினரானதுடன் கழகத்தின் மத்திய குழுவிற்கும் தெரிவானார்.
1985 இல் Pடுழுவு மைப்பிலிருந்து வெளியேறினார். ~தீப்பொறி| ஈழவிடுதலைப் போராட்டக் குழுவை நிறுவிய ஸ்தாபக உறுப்பினர்களில் இவரும் ஒருவர். இக் காலகட்டத்தில் Pடுழுவு இனால் தேடப்பட்டு தலைமறைவாக இருந்து செயற்பட்டார். இக் காலத்தில்தான் ~புதியதோர் உலகம்| என்ற இந்த நாவல் எழுதப்பட்டது.

1986 இல் விடுதலைப் புலிகள் ஏனைய அமைப்புகளை தடைசெய்தமையால் இவர் தொடர்ந்தும் தலைமறைவாகவே செயற்பட்டார்.

1991 இல் யாழ்ப்பாணத்தில் அமைப்புப் பணிகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது மே மாதம் 17ம் திகதி விடுதலைப் புலிகள் அமைப்பினால் கைது செய்யப்பட்டார். மேற்கொண்டு அவர் பற்றிய எந்த விபரமும் இன்றுவரை கிடைக்கவில்லை.

கறுப்பி said...

Thanks Eelanthan


I will see the other blogs too.

I am thinking of doing a stage play based on Puthiyathoor Ulaham.

Do you know what happened to Govinthan?

Boston Bala said...

Puthiyathor Ulagam is a must read story.

Anonymous said...

கோவிந்தன் புலிகளாலேயே கைதுசெய்யப்பட்டார். புளொட் அமைப்பின் நாடித்துடிப்பை நிறுத்துமளவில் தீப்பொறிக் குழுவினர் செயற்பட்ட பின்னர் முற்போக்கு சக்திகளை முளையிலேயே கிள்ளியெறியும் புலிகளின் உத்தியை புலிகள் செயற்படுத்தினர். அவர் யாழ்ப்பாணத்தில் இன்னும் சிலருடன் சேர்த்து கைதுசெய்யப்பட்டார். அவர்களால் கோவிந்தன் எற்கனவே கொலைசெய்யப்பட்டுவிட்டதாக சொல்லப்படுகிறது.

85ம் ஆண்டின் முன்நடுப் பகுதி. புதியதோர் உலகம் நாவலை வெளிப்படையாக கையில் கொண்டுதிரியவோ முகம்தெரியாமல் கொடுக்கவோ முடியாத நிலையில் இரவோடு இரவாக வாசிகசாலை வளவுகளுக்குள் போடப்பட்டன. தெரிந்த மட்டங்களுக்குள்ளேயே கைமாறி பரவலாகின. புலியமைப்பில் இருந்தவர்கள் இந்த நாவலைப் பெற்று வெளிப்படையாக விநியோகித்ததையே நான் நேரில் பார்த்திருக்கிறேன்.

புதியதோர் உலகம் நாவல் பெரும்பாலான உண்மைச் சம்பவங்களின் கோர்வையாகும். கோவிந்தனின் இலக்கிய ஆளுமை இதை நல்லதோர் விடுதலை இலக்கியமாக்கியுமிருக்கிறது. அதனால் புளொட் இன் உள்விவகாரங்கள் தெரியாதோருக்கு இது வெறும் நாவலாக மட்டும் தெரிந்துவிடுகிறது. (இந்த நாவலையும் உண்மை மனிதனின் கதை நாவலையும்தான் பிரச்சார வாடையற்ற விடுதலை இலக்கியமாக தான் கண்டதாக அ.மார்க்ஸ் ஒருமுறை குறிப்பிட்டிருந்தார்.)

இந்த நாவலின் காலப்பகுதியும் நான் அங்கிருந்த காலப் பகுதியும் ஒன்று என்பதால் இந்த நாவலில் கூறப்பட்டுள்ள பெரும்பாலான சம்பவங்களை என்போன்றோர் ஏற்கனவே அறிந்திருந்தோம். எமது ஈழவிடுதலைப் போராட்டத்தில் இப்படியான அனுபவங்கள் (எல்லா இயக்கங்களிலும்) பலரிடம் ஏற்பட்டிருக்கிறது. இயக்கங்களில் உள்ளிருந்தவர்களிடம் நேரில் பேசினால் இது புரியும். ஒவ்வொருத்தரும் உயிரைப் பிடித்துக்கொண்டு ஓடியதும் விரக்தியும் என நிகழ்ந்த வாழ்பரப்பு புதியதோர் உலகம் போன்ற நாவல்கள் வெளிவராமல் போனதற்குரிய முக்கிய காரணமென சொல்லாம். நீண்ட காலத்தின்பின் புலியியக்கத்தில் அனுபவம்கொண்ட எழுத்துடன் சோபாசக்தியின் கொரில்லா இன்னொரு கோணத்தில் வந்தது. எதிர்காலத்தில் இன்னமும் ஏதாவது வெளிவரமாட்டாது என்று நாம் முடிவுபண்ணிவிட முடியாது. இருந்தாலும் இந்த அனுபச் செறிவுகள் நமது இலக்கியத்தில் இதுவரை இழக்கப்பட்டுள்ளதாக பார்க்கமுடியும்.