Tuesday, February 08, 2005

பெண்மை<>ஆண்மைகடவுள் இருக்கிறாரா? இல்லையா? என்பது போல் முடிவின்றித் தொடரக்கூடிய விடையம் இந்த பெண்ணியம் பற்றியது. சுருக்கமாகச் சொல்லப்போனால் “பெண்மை”, “ஆண்மை” என்ற பதங்கள் விலகி ஒரு நாணயத்தின் இருபக்கங்களாக ஆண்,பெண் வாழத்தொடர, ஆண்களிலும் பார்க்கப் பெண்கள் நிறையவே மாற வேண்டியுள்ளது.
இலகு என்று எண்ணும் வாழ்க்கை யாருக்குத் தான் பிடிப்பதில்லை. ஏதோ காலகாலமாக வந்து விட்டது இப்ப எதுக்கு நான் மாற்றியமைக்க வேண்டும் பேசாமல் ஒத்துப் போய் விடலாம் என்ற தன்மை தான் அனேக பெண்களிடம் காணப்படுகின்றது.
இந்தியா போன்ற நாடுகளை விடுங்கள் கனடாவில் வாழும் எம்மவரில் பலர், இங்கு வந்த பின்னரும் சமைப்பதும், சாப்பிடுவதும், கணவன், குழந்தைகள் நன்றாக இருக்க விரதம் பிடிப்பதிலுமே தமது வாழ்க்கையாகக் கொண்டிருக்கின்றார்கள்.

ஒருமுறை ஒரு தமிழ் நிகழ்வு ஒன்றில் ஒருவரின் மனைவி(இவற்றில் ஈடுபாடு அற்றவர்) தனது குழந்தைகளுக்கு வகுப்பு இருப்பதாகக் கணவனை நிகழ்வின் இடையில் அழைத்துக் சென்று விட்டார். இப்படியாகப் பல முறை நடந்ததை கவனித்த நான் ஒருநாள் அந்தப் பெண்ணிடம், “ஏன் நீங்கள் கார் பழகக்கூடாது, அப்படியானால் கணவரின் எதிர்பார்ப்பின்றி உங்கள் குழந்தைகளை நீங்கள் எங்கு வேண்டுமானாலும் அழைத்துச் செல்லலாமே, வீணாக இங்கே வந்து தூங்கிக் கொண்டு” என்றேன். அவர் மிகக் கோவமாக என்னிடம் சொன்னார் “பிறகு என்னத்துக்கு புருஷன் எண்டு அவர் எனக்கு”

இன்னுமொரு நண்பி ஒருநாள் என்னிடம் பெருமையாக “என்ர அவருக்கு நான் வேலைக்குப் போய் கஷ்டப்படுறது விரும்பமில்லை, நான் கார் ஓடினா எனக்கு ஏதாவது நடந்திடுமோ எண்டு அவருக்கு நித்திரை வராது என்னில அந்த அளவுக்கு “அக்கறை”, “விருப்பம்” என்றார். (அப்படியானால் உனக்கு அவரில அந்த அளவிற்கு “அக்கறை”, “விருப்பம்” இல்லையா என்று கேட்டு அவளைக் குழப்பி சிந்திக்க வைக்க நான் விரும்பவில்லை. இதனால் அவளுக்கு ஏற்படும் பாதிப்பிற்கு என்னால் எந்த அளவிற்கு உதவ முடியும் என்ற கேள்வி எனக்குள் எழுந்ததால்)

தங்குதல், ஒருவரில் சார்ந்து இருத்;தல் என்பதைப் பெண்கள் விரும்புகின்றார்கள். அவர்களுக்கு அது இரத்தத்தோடு ஊட்டப்பட்டு விட்டது. வெளியில் அதிகம் பேசாவிட்டாலும் ஒழுக்கம் என்ற ஒன்றிற்கு மிகவும் முக்கியத்துவம் கொடுக்கின்றார்கள். தம்மை முற்போக்குப் பெண்கள் என்று பிரகடனம் செய்பவர்கள் கூட தன் ஒழுக்கத்திலும் விட தனது அம்மாவின் ஒழுக்கத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பவளாகவே காணப்படுகின்றாள். இதற்கான மாற்றங்கள் இலக்கியங்கள் மூலம் ஏந்த அளவிற்கு சாத்தியம?. பெரிய புரட்சியின் பின்னர் தான் மாற்றங்கள் வரமுடியும் என்பது என் கருத்து அதற்கா சாத்தியங்கள் மிகக் குறைவாகவே இருக்கின்றன. அதிலும் அரபு நாடுகளில் எந்த அளவிற்கு சாத்தியப்படப் போகின்றது. தலித்துக்கள் போலவே, பெண்களும் தாங்களாக “நான் ஒரு சுயபிரஞை, தனி மனுஷி” என்ற பிரக்ஞை வர மட்டும் இது மாறப்போவதில்லை.
பெரிய தத்துவஞானிகளின் தத்துவங்களை இவர்கள் படித்து வாழ்க்கை பற்றிய தெளிவைப் பெறப்போகின்றார்களா? அன்றாட வாழ்க்கையில் அவர்கள் விரும்பிப்பார்க்கும் தொடர் நாடகங்கள், திரைப்படங்கள், தமிழ் வானொலி நிகழ்சிகள் போன்றவற்றால் மெல்ல மெல்ல இப்பெண்களை சிந்திக்க வைக்க முடியும். ஆனால் மேற் கூறிய ஒன்றும் இதனைச் செய்வதற்குத் தயாராக இல்லை. மாறாக அவர்கள் பெண்களை மேலும் கோழையாக்குவது போன்ற நிகழ்வுகளையே தந்து கொண்டிருக்கின்றார்கள். கொஞ்சமேனும் சிந்திக்கத் தெரிந்த, படித்த, முற்போக்குத் தன்மை கொண்ட பெண்ணாகச் சித்தரிக்கப் படுபவள், எப்போதும் வில்லியாகவே காட்டப்பட்டு இறுதியில் அவள் திருந்தி நல்ல குடும்பப் பெண்ணாக மாறுவதாகத் தொடர்ந்தும் பெண்களுக்கு ஊடகங்களால் ஊட்டப்பட்டு வருகின்றது. மாறாக கனேடிய ஆங்கில தொலைக்காட்சி நிகழ்வுகளில் பல தரமாக தகவல்களைப் பெண்களுக்காகத் தரப்பட்ட போதிலும், அவை எந்த அளவிற்கு ஆசிய குடும்பப் பெண்களுக்குச் சென்றடைகின்றன. பார்ப்பவர்களும் இது வெள்ளையர்களுக்கான கருத்து எமக்கும் இதற்கும் சம்மந்தமில்லை என்பது போல் விலகிக் கொள்கின்றார்கள்.

அடுத்து, கணவனின் அடக்கு முறையை எதிர்த்து சிறிதளவேனும் போராடத் தொடங்கும் பெண்களுக்கு சமூகத்திடம் இருந்து கிடைக்கக் கூடிய ஒத்துழைப்பு மிகக் குறைவாகவே இருக்கின்றது. இதனால் பலம் இழந்து போகும் பெண்கள் மீண்டும் அடக்கு முறைக்குள் தம் இருப்பு வேண்டி செல்வதையே காணக் கூடியதாக இருக்கின்றது. இல்லையேல் அவள் மிகக் கொடுமையாகக் கொச்சைப் படுத்தப்படுகின்றாள்.
இருந்தும் புலம்பெயர்ந்த மண்ணில் எமது அடுத்த சந்ததியனரில் பலர் இப்படியான அவலங்களை துணிவுடன் சந்திக்கக் கூடிய அளவிற்கு மனபலம் கொண்டவர்களாக உருவாகி வருகின்றார்கள்.

4 comments:

Anonymous said...

Sometime women act ignorant as it helps them to avoid many jobs or tension. Many women are so ignorant and they are taught that Sex is their husband's choice rather right. That is why marital rape is very common.I still remembr how aval appatithaan movie ended. Kamal marries saritha who asks kamal "what is women's liberation" Sometime I hear women boast that their husband's give them lot of independence.They dont realize that independence is their right. It will go on and on..
But at the same time many women give a lots of trouble to their husbands for simple things that they can learn and do it on their own. A woman magazine actually mentioned it is very goodfor a long married life as it boasts a man's ego!!!Women dont come out that much to clean their cars (ASian Indians) or shovel the snow and say "hey its a man's job"
Padma Arvind

Anonymous said...

nantri karuppi.
thodarunkal.

natpudan
chandravathanaa

Boston Bala said...

இப்பொழுதுதான் படித்தேன். பயனுள்ள பகிர்வுக்கு நன்றி.

>>பார்ப்பவர்களும் இது வெள்ளையர்களுக்கான கருத்து எமக்கும் இதற்கும் சம்மந்தமில்லை என்பது போல் விலகிக் கொள்கின்றார்கள்.----

சத்தியமான அவதானிப்பு.

கறுப்பி said...

நன்றி பாலா தங்கள் கருத்திற்கு. பெண்கள் விடும் தவறுகளை நான் என் எழுத்திச் சுட்டிக்காட்டுவதைப் பல பெண்கள் விரும்புவதில்லை. பெண்ணியம் பேசுவோர் பெண்களுக்கு சப்போட்டாக மட்டுமே எழுத வேண்டும் என்று எண்ணுகின்றார்கள். ஆனால் அப்படிப்பட்ட ஒரு பெண்ணிய எழுத்தாளியாய் நான் இருக்க விரும்பவில்லை.