Friday, June 24, 2005

வெளிச்சம்



“உண்மைகள் அற்ற உலகில் பொய்கள் நிழலாய் தொடர, பொய்யை பொய் என மறுத்து உண்மையாய் ஏற்றுக்கொள்ள வேண்டிய நிர்ப்பந்தத்தில் நானும் பொய் பேசி அதை உண்மை என நம்பி ஏற்று வாழப்பழகிக் கொண்டு..”
இனிமேல் இது வேண்டாம்.

மணம் மூக்கைத் தாக்க நான் மூச்சை இறுக்கிக் கொண்டேன். பஞ்சு முகம் முழுக்க உலாவந்து ஓய்ந்தது. “இஞ்ச பார் எவ்வளவு ஊத்தை. இவ்வளவும் ஒயில். அடிக்கடி துடைக்காட்டி முகத்தில பருவாத்தான் வந்து கொட்டும். அருமந்த வடிவான முகம் பருவாக் கொட்டிக்கிடக்கு. உனக்கு அதைப்பற்றி ஒரு கவலையும் இல்லை என்ன? அம்மா தனக்கான அம்மா பாசம் மேலிட என்னை விட என் முகப்பருவிற்காய் நொந்து பேசி விட்டுப் போனாள். நான் கண்ணாடியில் முகத்தை ஊன்றிப் பார்வையிட்டேன். நெற்றியிலும் கன்னங்களிலும் அள்ளிப்போட்டிருந்தது முகப்பரு. என் வகுப்பில் அனேகமாகப் பலருக்கு முகப்பரு வரத்தொடங்கியிருந்தாலும் என்னுடையது கொஞ்சம் கூடுதலாகவே பட்டது. ஆனால் அது என்னைத் தொந்தரவு செய்யவில்லை. (ஷேரா பாவம் இரண்டு முகப்பரு நெத்தியில் வந்ததால் ஒரு கிழமை பாடசாலைக்கு வரவில்லை).

“இது எங்கட குடும்ப ஜீன்ஸ்” என்று அம்மாவின் காய்ந்து போன முகத்தழும்புகளைப் பார்த்த படியே சொன்னேன். “உண்மைதான் அப்ப எங்க வசதியிருந்தது நாங்கள் பாலாடையும், முட்டை வெள்ளைக்கருவையும் பூசிப் பூசிப் பாப்பம் போனால்தானே. ஆனால் இஞ்ச எவ்வளவு வசதியிருக்கு எத்தின விதமான மருந்திருக்கு பூசிக் கொஞ்சம் குறைக்கலாமே. உனக்குப் பஞ்சி உன்ர முகம் பற்றி எனக்கிருக்கிற அக்கறை உனக்கில்லை.” அம்மா வீட்டு வேலைகளின் நடுவில் புறுபுறுத்த படியே வீடு முழுக்க நடந்து திரிந்தாள். கொஞ்சம் கிட்ட வந்து குரலைத் தாழ்த்தி “டேய் இப்பிடியே கவனிக்காமல் விட்டாயெண்டால் முகம் அசிங்கமாப் போயிடும் பிறகு ஒரு பெட்டையும் உன்னைப் பாக்காது பிறகு கேர்ள் பிரெண்ட் கிடைக்கேலை எண்டு நீதான் கவலைப்படுவாய்” சொல்லி முடித்த பின்னர் தான் கூறிய நகைச்சுவையைத் தானே நினைத்துச் சிரித்துக் கொண்டாள். “உங்கள அப்பா லவ் பண்ணினவர் தானே? அப்பிடி என்னையும் ஆரும் லவ் பண்ணிவீனம்” போனவள் திரும்பி வந்தாள். அவள் கண்கள் கனவுகளில் நிறைந்திருந்தன.

ம்.. பெருமூச்சு எழுந்து அடங்க “அது ஒரு காலம்” என்றாள். பிறகு ஏதோ நினைத்தவளாய் “இஞ்ச வந்து எவ்வளவு காலமாப் போச்சு ஒருக்காப் போய் அம்மா, அப்பாவைப் பாத்திட்டு வரக்கூட வசதியில்லாமல் போயிட்டுது” திரும்பவும் அதே மாதிரியான ஒரு பெருமூச்சு. வேண்டுமென்ற நேரமெல்லாம் நெஞ்சை உயர்த்தி ஒரே பாணியில் அம்மா பெருமூச்சு வி;டக் கற்றுக்கொண்டிருந்தாள். எனக்கு அவளைப் பார்க்கப் பாவமாக இருந்தது. என்ன வயதிருக்கும்? வயதுக்கு மீறிய முதிர்சியுடன் எப்போதும் வாயுக்குள் ஏதோ புறுத்த படியே ஓடியோடி எதையாவது செய்து கொண்டிருந்தாள். அப்பா அதிகார தோறணையில் வலம் வருவதால் நானும், தம்பியும் அம்மாவிடம் தான் ஒட்டிக் கொண்டோம்.
அம்மாவின் கவனிப்பில் என் முகப்பருக்கள் குறைந்திருந்தன. மூக்கின் கீழே கீறலாக மீசை முளைவிட்டிருந்தது. குரல்கள் ஆணினதும், பெண்ணினதுமாக மாறி மாறி வேடிக்கை காட்டியது. தலையைக் கலைத்து வேறு விதமாக இழுத்து விட்டேன். பிடிக்காத உடைகளையெல்லாம் சுருட்டிச் சுருட்டி அம்மாவிற்குத் தெரியாத இடத்தில் தள்ளி விட்டிருந்தேன். நண்பர்களுடன் கடைக்குப் போகப் பழகிக் கொண்டேன். “என்னடா இது உடுப்பு கறுப்பங்கள் மாதிரி தொள தொள எண்டு” கோவம் போல் குரலை உயர்த்திப் பாவனை காட்டியபடியே என்னைச் சுற்றிச் சுற்றிப் பார்வையிட்டு முகத்தில் பெருமை பொங்க “என்னடா இது வடிவாவே இருக்கு?” நான் சிரித்தேன். வடிவோ வடிவில்லையோ எனக்குப் பிடிச்சிருந்துது போட்டுக் கொண்டேன்.

குடும்பத் தலைவனாம் தான் என்ற மிடுக்கோடு என் அப்பாவும், அவருக்கு அடங்கிய மனைவியாம் தான் என்ற பணிவோடு என் அம்மாவும், ஏதோ பாவனைகள் பல வீட்டில் இருந்தாலும் கட்டுப்பாடுகள் அற்ற குடும்பம் எங்களுடையது. எனக்கான முழுச் சுதந்திரம் தரப்பட்டிருந்தது. பதிலாக என்னிடம் அம்மா கேட்டுக் கொண்டது “நல்லாப் படி” நான் படித்தேன். அம்மா கேட்டுக்கொண்டதற்காக இல்லை. படிப்பு எனக்கு இயல்பாகவே வந்ததால்.
அம்மாவின் பெருமூச்சு ஒரு திட்டமாக உருவெடுத்து அப்பாவிடம் ஊருக்குப் போகவேணும் எங்கட சொந்தங்கள், ஊரையெல்லாம் சுத்திப் பாக்க வேணும் கனடாவில் பிறந்த என்ர பிள்ளைகளை பாட்டி, தாத்தாவுக்குக் காட்ட வேணும் என்று அடம் பிடித்து வெற்றி கொண்டது. “தாங்க முடியாத வெக்கை எலெக்ரிசிட்டி இல்லை அதால ரீவி இல்லை அங்க ஒண்டுமே இல்லை.. நல்லாக் கஷ்டப்படப் போறாய்” போய் வந்த என்னுடைய நண்பர்கள் போகு முன்பே எனக்குள் வெறுப்பை ஏற்றினார்கள். நான் அடம் பிடித்து அழுது பார்த்தேன். “நான் இப்ப பெரிய பெடியன் நான் தனிய இருப்பன் குரலையும் உயர்த்திப் பார்த்தேன் ஆனால் என்னுடைய குரல் எடுபடவில்லை. ரீவி இல்லாத உலகம் பயம் காட்டியது. வீடியோ கேம்ஸ், புக்ஸ் என்று பொழுது போக்க கொஞ்சம் சேர்த்துக் கொண்டேன். அப்பாவின் வேலையால் அவரால் வரமுடியவில்லை. எங்களை அனுப்பி வைத்தார்.

மெல்லிய மழைத்தூறல்களினூடே இளம் பச்சை தென்னை ஓலை அசைய கிளிகள் குரல்கள் எழுப்பும் ஒரு பின்னேரப் பொழுதில், புழுதி மண் விரல்கள் புக நிலம் தேய்த்து நான் நடந்தேன். வீட்டுக் கூரை புகை எழுப்ப அம்மம்மா இருமி இருமி சமையல் செய்தாள். வீடு அமைதியாய் இருந்தது. எல்லோருமே பின்னேர நித்திரையில் இருந்தார்கள். அம்மம்மா ஓய்ந்து நான் பார்த்ததில்லை. எனக்கு எல்லாமே பிடித்திருந்தன. அடுப்பிலிருந்து ஆற்றங்கரை வரை ஓடியோடி ஆராய்ந்தேன். வீடியோ கேமும் புத்தகங்களும் தம்பியின் கைகளுக்குள் அடங்கிக் கொண்டன. முதல் முறையாக சாரம் கட்டக் கற்றுக் கொண்டேன். அம்மப்பாவும், மாமாக்களும் சைக்கிளில் ஊரச்சந்தை, விளையாட்டுப் போட்டிகள், கோழிச்சண்டைகள் என்று என் கற்பனைக்கு எட்டாத பல இடங்களுக்குக் கூட்டிச் சென்றார்கள். வெளிநாட்டுப் பெடியன் கொச்சைத் தமிழ் கதைக்கிறான் என்று முதலில் ஒதுங்கி நின்ற சிறுவர்கள் சாரம் கட்டி காலில் செருப்பின்றி ஓடித்திரிந்த என்னைக் கண்டதும் தாமாகவே ஒட்டிக் கொண்டார்கள்.

நாட்கள் நகராமல் ஓட்டம் கண்டன. என் ஆராய்சியில் பல முடிவுறாமல் போய் விடுமோ என்ற ஆதங்கம் எனக்குள். “கனடா வேண்டாமம்மா இஞ்சையே இருப்பமே” அம்மா கண்கள் மிளிர என்னை வினோதமாகப் பார்த்தாள். அம்மப்பா பொக்கை வாயை அசைத்து, அசைத்துச் சிரித்த படியே “அதுக்கென்ன அவனை விட்டிட்டுப் போவன் இஞ்ச இருந்தே படிக்கட்டும்”. அம்மாவின் முகத்தில் பயம் தெரிந்தது “உனக்கென்ன விசரே அங்க பள்ளிக்கூடம், படிப்பு எல்லாம் விட்டிட்டு அப்பா என்னைக் கொண்டு போட்டிடுவார்” என் மனக்கண்ணில் என் பாடசாலை நண்பர்கள், என் அறை, மீன் தொட்டி, மீன் குஞ்சுகள் எல்லாமே ஒருமுறை வந்து வா வா என்று அழைக்க மனதுக்குள் ஒரு ஏக்கம் பிறந்தது. நான் சிரித்தேன். “ஓரு கிழமை கூட இருந்திட்டுப் போவம்” என்றாள் அம்மா என் தலையைத் தடவிய படியே.

அம்மப்பா மெல்ல மெல்ல நடந்து வந்து வழமை போல் விறாந்தையின் ஓரத்தில் இருந்தார். அவர் கையில் “பெற்றோல்மாக்ஸ்” (விளக்கு) இருந்தது. நானும் வழமைபோல் அவர் அருகில் போயிருந்து அம்மப்பா செய்வது ஒவ்வொன்றையும் கண் வெட்டாமல் பார்க்கத் தொடங்கினேன். திரியை இழுத்து நீளத்தைப் பார்த்து விட்டு அருகில் வைத்தார். சிம்னியைக் கைகள் நடுங்க மெல்லக் கழற்றி வாயால் ஊதி ஊதி படிந்திருந்த கரும்புகையை துணியால் துடைத்தார். எண்ணெயை கொஞ்சமாய் விட்டுக் குலுக்கிப் பார்த்து மேலும் கொஞ்சம் விட்டார். சின்னதாக இருந்த பம்ப் ஒன்றை மெல்ல மெல்ல அடித்து பின் மூடியைப் பொருத்தி திரியை இழுத்து நெருப்பைக் கொழுத்தினார். வெளிர் நீலச் சுவாலை இருள் மேவும் அந்த மாலைப் பொழுதை ஊடுருவிச் சென்றது. “அம்மா எனக்கு ஒரு “பெற்றோல்மாக்ஸ்” வாங்கித் தாங்கோ கனடாக்குக் கொண்டு போக” அம்மப்பா பெரிதா ஏதோ ஜோக்கை கேட்டு விட்டது போல் பொக்கை வாயைப் பொத்திப் பொத்திச் சிரித்தார். “ம் உதெல்லாம் காவிக்கொண்டு போகேலாது” அம்மா எழுந்து போய் விட்டாள். அம்மப்பா இருமினார். “பெற்றோல்மாக்ஸ்சை” நிலையில் இருந்த ஒரு கம்பியில் கொழுவி விட்டு “மாட்டுக்கு வைக்கல் போட வேணும்” தனக்குள் சொன்ன படியே படியால் இறங்கிப் போனார். நான் பெற்றோல்மாக்ஸின் திரியை உற்றுப் பார்த்தபடி நின்றேன். வீட்டிற்கும், முற்றத்திற்கும் வெளிச்சம் தந்தபடி இருந்த அந்த விளக்கு எனக்கு வினோதமாகப் பட்டது.

அன்று மழை அதிகமாய் அடித்தது. அம்மப்பா இருமிய படியே முனகிக்கொண்டு பாயில் படுத்திருந்தார். கரு மேகக் கூட்டத்தின் அசைவால் வீடு இருளில் மூழ்கி அமைதியாய் இருக்க, எல்லோரையும் மழைக்குளிர் நித்திரைக்குள் இழுத்து விட்டிருந்தது. குசினிக்குள் மட்டும் சின்னதாக ஒரு தேங்காய் எண்ணெய் விளக்கு மின்னிய வண்ணம் மின்மினி போல் ஆட்டம் காட்டியது. நான் பெற்றோல்மாக்ஸ் உடன் அம்மப்பா வழமையாய் இருக்கும் இடத்தில் வந்து இருந்தேன். சிம்னியை மெல்லக் கழற்றி ஊதி ஊதிக் கரும் புகையைத் துடைத்தேன். திரியை இழுத்து விட்டு அளவு பார்த்தேன். எண்ணெயின் அளவைக் குலுக்கிப் பரிசோதித்தேன். இன்னும் கொஞ்ச எண்ணெய் விட்டேன். பம்பை மெல்ல மெல்ல இழுத்து அம்மப்பா போல் அடித்தேன். நெருப்புப் பெட்டியை எடுத்து திரியைக் கொழுத்தினேன். எங்கே தவறினேன்?

கண் விழித்த போது எழுந்த மணம் மருத்துவமனை என்பதை அடையாளம் காட்டியது. அம்மா பக்கத்தில் இருந்த கதிரையில் நித்திரையாய் இருந்தாள். கண்கள் வீங்கியிருந்தன. என் முகம் முழுவதும் துணியால் கட்டுப் போட்டிருப்பது தெரிந்தது. “அம்மா” என்று மெல்ல முனகினேன். கண் விழித்தவள் என்னைக் கட்டிக் கொண்டு கதறினாள். நான் புரியாமல் அவளைப் பார்த்துக் கொண்டிருந்தேன். அம்மப்பா, அம்மம்மா, மாமாக்கள், இன்னும் தெரியாத சொந்தங்கள் நண்பர்கள் என்று யார் யாரோ வந்து போனார்கள். எல்லோர் முகத்திலும் சோகம். கண்கலங்க என் தலை தடவி விலகினார்கள். நான் இறக்கவில்லை. ஆனால் வேறு ஏதோ மிகவும் பாரதூரமாக மனம் அடித்துக் கொண்டது. வாயில் வார்த்தைகள் வரமறுக்க, வழிந்த கண்ணீர் பாண்டேஜிக்குள் மறைந்து போனது. நான் பாண்டேஜில் வெட்டப்பட்டிருந்த ஓட்டைகளினால் பார்த்து, மூச்சு விட்டுச், சாப்பிட்டு, தண்ணீர் குடித்துக் கொண்டிருந்தேன். அப்பா போனில் “என்னால உடன வடிமுடியேலைத் தம்பி உன்ன இஞ்ச கொண்டுவாறதுக்கான அலுவல்ல ஓடித்திறியிறன் ராசா..” குரல் கம்ம “யோசிக்காதை இஞ்ச நல்ல டொக்ரேஸ் இருக்கினம் எல்லாம் சரியாப் போகும்” அப்பா விம்மினார்.

நண்பர்களுடன் வெளியே சென்ற ஒருநாள் கலைந்திருந்த என் தலைமயிரை ஒதுக்கி கன்னத்தில் மெல்லத் தட்டி “வடிவாய் இருக்கிறாய்” என்றாள் அம்மா. வெளியே கிளம்பிய நான் போக மனமின்றி அறைக்குள் மீண்டும்; புகுந்து கொண்டேன். அம்மா கதவைத் தட்டினாள். கதவைத் திறந்த என் கண்களில் கோபம் இருந்தது. “என்னப்பு” என்றாள். “அம்மா ஏனம்மா பொய் சொல்லுறீங்கள்? நீங்கள் மட்டுமில்லை தம்பி, அப்பா, என்ர ஃபிரெண்ஸ் எல்லாரும் ஏனம்மா பொய் சொல்ல வேணும். என்ர முகத்தைப் பாக்க என்னாலேயே சகிக்க முடியேலை. எல்லாம் கருகி பேய் மாதிரி இருக்கு நான் சாகேலை ஆனால் என்ர முகம் செத்திட்டுது. இனி அது திரும்ப வராது. இதுதான் உண்மை. நீங்கள் எல்லாரும் வடிவா இருக்கிறாய், வடிவாய் இருக்கிறாய் எண்டு சொல்லச் சொல்ல எனக்கு என் மேலையே வெறுப்பா இருக்கு. என்னைச் சந்தோஷப்படுத்திறதா நினைச்சு நீங்கள் ஒருத்தரும் பொய் சொல்ல வேண்டாம். வாழ்க்கை எண்டது ஒரு பாடம். நான் என்ர விபத்துக்குள்ளால இருந்து என்னை மீட்டுத் திரும்பவும் வாழ முயற்சிக்கிறன். ஆனால் என்னைச் சுத்தி எல்லாரும் நடிக்கிறது என்ர முயற்சியைப் பாழாக்கிப் போடுமோ எண்டு பயமா இருக்கம்மா? முகப்பருவுக்கே முகம் வடிவில்லாமல் போயிடும் எண்டு ஓடியோடி வைத்தியம் பாத்த நீங்கள், இப்ப என்ர முகம் வடிவாய் இருக்கிற மாதிரியும் அதுக்கு ஒண்டும் தேவையில்லாத மாதிரியும் ஒண்டுமே பூசி விடுறேலை. ஏனம்மா.? பூசுங்கோ தழும்புகள் மறைய ஏதாவது கிறீம் இருந்தால் வாங்கிப் பூசி விடுங்கோ எனக்கு என்ர அம்மா திரும்ப வேணும் என்ர முகத்தில ஒண்டுமில்லாத மாதிரி நீங்கள் நடக்கிறது என்னால தாங்கேலாமல் இருக்கம்மா” அம்மா என்னைக் கட்டிக் கொண்டு கதறினாள்.

நான் கண்ணாடியில் என் முகத்தை ஊன்றிப் பார்த்தேன். உடை மாற்றிப் பாடசாலைக்கு ஆயத்தமானேன். அம்மா ஓடிவந்து சாப்பாட்டுப் பார்சலைக் கையில் வைத்தாள். சிறிய ஒரு டப்பாவில் இருந்த கிறீமை ஒற்றை விரலால் அள்ளி என் முகத்தில் பூசினாள். நெற்றியில் கொஞ்சி, என் கை விரலை அழுத்தி வழி அனுப்பினாள். இப்போதெல்லாம் அம்மா அதிகம் கதைப்பதில்லை. அவள் கண்களில் ஒரு வித ஒளி படர்ந்திருக்கின்றது. எனக்கு மிக நெருக்கமானாள். என்னுடைய நல்ல நண்பியானாள். பொய்கள் அகன்று, இந்த அழகிய உலகில் என் வாழ்வு சந்தோஷமானது.

2 comments:

சினேகிதி said...
This comment has been removed by a blog administrator.
சினேகிதி said...

கறுப்பி எனக்கு இந்தக் கதை பிடிச்சிருக்கு.நான் இப்படி ஒரு கருகிப்போன நண்பியின் முகத்தைப் பக்கத்திலேயே பார்த்து வளர்ந்தவள் நான் அவள் பட்ட அவஸ்தைகளையும் பார்த்திருக்கிறேன்.
வெளிநாடுகளில் இருந்து ஊருக்குப் போகிற பிள்ளைகளுக்கு ஊர் பிடிக்கிறது ஆனால் பெரியாக்களுக்குத்தான் அங்க குடிக்கிற தேத்தண்ணியில இருந்து நிறைய விடயங்கள் அருவருப்பாயிருக்குதாம் இதை நான் சொல்லவில்லை ஊர் போய் வந்த சில 'கனேடியரமிழர்கள்' சொன்னவை.