Monday, June 20, 2005

நண்பா!

இலகுவாகச் சொல்லி விட்டேன்.

நீ முகம் திருப்பி கண்ணீர் தட்டியதை
காணாததுபோல் பாசாங்காய் அமர்ந்திருந்தேன்.

அதன் பின்னர் நான் கதைத்தது எதுவுமே
என் ஞாபகத்தில் இல்லை.
உனக்கு இருக்கிறதா?
இருந்தால் சொல்லு,
உறைந்த பொழுதுகளில்
என் வார்த்தைகளை நான் அடையாளம் காண விரும்புகின்றேன்.

கைகள் நடுங்க புகையாய் நீ இழுத்து விட்டதை
உன் வார்த்தைகளாய் நான் அர்த்தம் கொண்டேன்.
உன்னைப் புதிதுபோல் அதிசயத்துப் பார்த்த
எனைப் பார்த்து நீ புன்னகைத்தாய்,
உன்னால் முடிந்தது அவ்வளவே.

நண்பா! உன்னை நோகாமல் பாதுகாப்பாய்
எங்கோ கொண்டு போக மனம் துடிக்கிறது,
நோவே நானெனும் போது பாதை எனக்குத் தெரியவில்லை.

நான் சொல்ல வருவது ஏதாவது உனக்குப் புரிகிறதா?
எனக்கே புரியாத போது
எப்படி நீ புரிந்து கொள்வாய்?
இருந்தும் கேட்கின்றேன்
தயவுசெய்து எனைப் புரிந்து கொள்.

1 comment:

சத்தியா said...

நட்பிற்காய் ஓர் கவிதை. என் மனதையும் தொட்டது.

வாழ்த்துக்கள் சினேகிதி.