Tuesday, August 19, 2008

27வது பெண்கள் சந்திப்பும் கனேடிய இலக்கியச் சந்திப்பும்.

தனிமனித சுதந்திரத்தின் அனைத்து அடையாளங்களிலிருந்தும் பெண் ஒதுக்கி வைக்கப்பட்டிருக்கின்றாள். ஆண் முதன்மையானவன் முழுமையானவன், உலகத்தின் தலைவன். அவன் உலகை நிறைவிற்குக் கொண்டு செல்லும் பெண் என்பவள் அவன் அக புற தேவைகளை உணர்ந்து நிறைவேற்றும் ஒரு துணை, அவன்; உபயோகப்படுத்தும் ஒரு பொருள். பெண்ணும் தன் இச்சார் நிலையை ஏகோபித்த மனதோடு ஏற்றுச் சந்தோஷித்திருக்கின்றாள். பெண் ஒரு துணைப்பொருள்பெண்ணியம் பெண்ணியவாதிகள் பெண்சுதந்திரம் என்றால் என்ன? பெண்களுக்கு என்ன பிரச்சனை இருக்கின்றது? எதற்காக பெண்கள் சந்திப்பு?

பெண்ணியவாதிகள் தங்கள் பெண்மைத் தன்மையை இழந்து ஆண்கள் போல் மாற முயல்கின்றார்கள் என்பது பலரின் தாக்குதல். பெண்கள் இருப்பே கேள்விக்குரியதாகியிருக்கிறது என்கின்றார்கள். சில பெண்கள் பெண்ணின் பலவீனத்தை மறுக்கும் அதே தருணத்தில் ஓர் ஆண் தொண்டனுக்கு நிகராகக் தன்னை அவள் கற்பிதம் செய்துகொள்வதும் உண்டு. இதற்குக் காரணம் ‘பெண்மை’ கருத்தியல் அவர்களுக்கு ஏற்படுத்திய மனவுளைச்சல். திரைகளிலும், கதைகளிலும் சித்தரிக்கப்படும் பண்பாட்டுப் பெண் போல் தானாகி விடவேண்டுமோ என்ற அச்சத்தில் தன்னை ஒரு ஆண் போல் வரிந்து கொள்கின்றாள்.

ஒரு பெண் தான் பெண் என்பதை இழிவாகவும் ஆணை பிரதானன், மேலானவன் ஆக ஏற்றுக்கொள்ளும் பட்சத்தில் அவள் தன்னை ஓர் ஆணாக உருவகிக்க முயலலாம். எனவே அனைத்துப் பெண்ணியவாதிகளின் சிந்தனையிலிருந்து நான் பேசிவிட முடியாது. ஆண் குறி என்று ஒன்று பிறப்பில் கிடைத்து விடுவதனால் அவன் பெண்ணிலிருந்து அனைத்து தகுதிகளாலும் மேம்பட்டவன் என்று நினைக்கும் பெண்களும் இருக்கத்தான் செய்கின்றார்கள். அதே வேளை என்னை ஒரு கருப்பையாகவோ சூலகமாகவோ மட்டுமே ஆண் பார்க்கின்றான் என்று அலறும் பெண்களின் கருத்தோடும் ஒத்துப் போகமுடியாமல் இருக்கின்றது. எந்த ஒரு ஆணாலும் முடியாத பிரத்தியேகமான ஒரு உயிரைக் கருப்பைக்குள் தாங்கும் வல்லமை பெண்ணிற்கு இருக்கின்றது. எமது சமூகப் பார்வையில் பெண் உடல் ஆண்களுக்குச் சொந்தமானது, அவர்களின் சந்ததி விருத்திக்காக உருவாக்கப்பட்டது பெண் உடல் கோட்பாட்டிலிருந்து பெண்கள் தம்மை விடுவித்துக் கொண்டு தமது உடலைக் கொண்டாடும் பட்சத்தில் கருப்பையும் சூலகமும் அவளைச் சிறை வைக்காது.

புலம்பெயர் பெண்களை நோக்கின் வேலைக்குச் செல்லும் பெண்கள் அதிக சுதந்திரம் பெற்றவர்களாகக் கணிக்கப்படுக்கின்றார்கள். பொருளாதார சுதந்திரம் அடையினும் இவர்களது உடல் உழைப்பு அலுவலக வீட்டு வேலை என இரட்டிப்பாக்கப் படுகின்றது. உயர் பதவியற்ற அலுவலக வேலை செய்யும் பெண்களிடம் அவர்கள் திறனை விட அகத்தோற்றமே முக்கியப்படுத்தப்படுகின்றது. இது அவர்கள் செலவை இரட்டிப்பாக்க, அவள் மீண்டும் செலவை சமநிலைப்படுத்த ஒரு ஆணின் துணையை வேண்டிநிற்கின்றாள்.

குடும்பம் என்ற கட்டமைப்பு ஆண்களைச் சௌகர்யப்படுத்துவதாகவும், பெண்ணை அடிமைப்படுத்துவதாகவுமே அமைந்திருக்கின்றது. இந்நிலை தற்போதைய இளம் சமுதாயத்தை சிந்திக்க வைப்பதனால் திருமணத்தைக் கண்டு அவர்கள் அஞ்சுகின்றார்கள்

தமிழ்திரை நிகழ்த்திக் காட்டும் பெண்மைச் செயல்பாட்டைப் பூரணப்படுத்துவதில் இன்னும் சில பெண்கள் திருப்தி அடைகின்றார்கள். சின்னத்திரை புகலிடத்துப் பெண்கள் அனைவரின் வாழ்விடங்களையும் கொள்ளை கொண்டுவிட்டது. புரிதல்களுக்கப்பாற்பட்ட புதிய கலாச்சாரத்திற்குள் எம் அடுத்த சந்ததியர் மூழ்கிப் போகின்றனர்.

பெண்ணியவாதி சிமோன்தி பூவா கூறுகின்றார் “தனியொருவன் அல்லது தனியொருத்தி, காலங் காலமாய் தொடரும் பெண்ணின் பிற்போக்குத் தனத்தையும் அடையாளத்தையும் மறுப்பதென்பது நிகழ் காலத்தில் இவர்கள் இருப்பை மறுப்பதாகாது. அன்றியும் இம்மறுப்பு, சம்பந்தப்பட்டவர்களின் விடுதலைக்கு உதவாததோடு, உண்மையைக் கண்டு ஒளியும் தன்மையது.
மானுடமென்பது, பெண்ணினமும் சேர்ந்ததுதானென்பது, அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட உண்மை இன்றைக்கும், கடந்தகாலங்களை போலவே, மனிதரெண்ணிக்கையில் ஏறத்தாழ சமபாதியாக பெண்ணினமிருக்கிறது. இந்த நிலையில், ‘பெண்மை அழிகின்றது என்று சொல்லிக் கொண்டு திரிகிறார்கள்” பெண்களைப் பார்த்து பெண்களாய் இருங்கள் என்கின்றார்கள். பெண்களாய் இருத்தல் என்றால்? பால் அடிப்படையிலும் பெண்ணை அடையாளப்படுத்த முடியாவி;ட்டால் பெண் என்பவள்தான் யார்? ஆணுக்கு ஒரு துணைப்பொருள்

பெண்களுக்கான வெளி, பெண்ணிய வெளிப்பாடு என்பன அண்மைக் காலங்களில்தான் உயிர்போடு செயல்படத் தொடங்கியிருக்கின்றன. இருந்தும் தற்போது
பெண்ணியம் எனும் பதம் அனேகரால் ஓர் இழிவு சொல்லாகவே பார்க்கப்படுகின்றது. பெண்ணியவாதிகள் என்ற சொல்லாடலைக் கேட்டாலே சினம் கொள்ளும் இவர்கள் பெண்களுக்கு என்ன பிரச்சனை இருக்கின்றது என்கின்றார்கள். பெண்கள் எல்லோரும் சந்தோஷமாகவும் ஒழுங்காகவும்தான் இருக்கின்றார்கள் நீங்கள் உதை எல்லாம் விட்டு விட்டு உருப்படியாக எதையாவது பேசுங்கள் என்று எள்ளலாகவும் கூறுகின்றார்கள்

தம்மை முற்போக்குவாதிகள் என்று அடையாளம் காட்டிக் கொள்ளும் ஆண்கள், பெண்ணியவாதிகள் எனின் அவர்களை சமூக சேவகியாகக் கணித்து, பாதிக்கப்படும் பெண்களுக்கு இவர்கள் என்ன செய்தார்கள் என்ற கேள்விக் கணையை வேறு தொடுக்கின்றார்கள். ஒரு சூப்ப வுமன் போல் பறந்து பறந்து பிரச்சனைக்குள்ளாகும் பெண்களின் வீடுகளின் கதவுகளைத் தட்டி அவர்களைக் காக்கும் கடமையில் பெண்ணியவாதிகள் இயங்கவேண்டும் என்பது இவர்களின் கணிப்பு.
தற்போது அனேகரால் கண்டுபிடிக்கப்பட்ட இன்னொரு புதிய சொல் போலிப் பெண்ணியம் - போலிப்பெண்ணியம் என்ற ஒன்று இருப்பின் கலப்படமற்ற சுத்த பெண்ணியம் என்று ஒன்றும் இருக்க வேண்டுமல்லவா? அதற்கான வரைவிலக்கணத்;தை யாரால் வகுக்க முடியும்?

குடும்பப்பெண் பத்தினிப்பெண் என்று வரைவிலக்கணம் கொடுத்து பெண்களின் ஒவ்வொரு அசைவுகளையும் கண்காணித்து வந்தவர்கள், தற்போதும் பெண்ணியவாதிகள் மேல் ஒரு வரையறையை வகுத்து மீண்டும் அதே கண்காணிப்பைத்தான் மேற்கொள்கின்றார்கள். எனவே எப்போதுமே ஒரு வகுக்கப்பட்ட வரையறைக்குள்தான் பெண்கள் வாழவேண்டும் என்பது இவர்களின் கணிப்பு.

இன்றைய முற்போக்குவாதிகள் சமூகத்திலும் பெண்கள் தனது ‘பெண்மை’யை நிரூபிக்க வேண்டிய நிர்ப்பந்தத்தில்தான் வாழ்ந்து வருகின்றார்கள். இவர்கள் அனேகரின் பார்வைகள் கற்பெனும் பதத்திலிருந்துதான் ஆரம்பிக்கின்றது. முற்போக்கு ஆண்களெனில் தனது மனைவியின் பத்தினித்தன்னையில் மிகவும் பெருமை கொள்கின்றார்கள். அவர் மனைவியரோ தம்மைப் பத்தினியாக பிரகடனப்படுத்துவதில் அனேக நேரத்தை செலவிடுகின்றார்கள். உலக சமூக நோக்கில் முக்கியமாக (ஆசிய- புலம்பெயர்) தமிழ் பெண்களின் நிலை இவ்வாறாகவே இன்றும் இருக்கின்றது.

இந்த நிலையில் 27வது பெண்கள் சந்திப்பும், கனேடிய இலக்கியச் சந்திப்பும் ரொறொன்டோவில் மிக ஆரோக்கியமாக நடந்து முடிந்திருக்கின்றன.
இந்நிகழ்வுகளுக்காக இலங்கை இந்தியா அமெரிக்கா ஐரோப்பா ஆகிய நாடுகளிலிருந்து பல பெண்ணிய, தலித்திய, இலக்கியவாதிகள், கனேடிய குறிப்பா ரொறொண்டோ நகரிலிருக்கும் பெண்களுடன் இணைந்து தமது கட்டுரையை வழங்கியிருக்கின்றார்கள். 90ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட பெண்கள் சந்திப்பின் 27வது நிகழ்வு 2008ம் ஆண்டு கனடாவில் ரொறொன்டோவில் இடம்பெற்றுள்ளது.

27வது பெண்கள் சந்திப்பிலும், கனேடிய இலக்கியச் சந்திப்பிலும் கலந்து கொண்டு கட்டுரைகளைச் சமர்ப்பித்த அனைத்து ஆய்வாளர்களுக்கும், நிகழ்வுகள் சிறப்பாக இடம்பெற உதவிய அனைத்து நண்பர்களுக்கும் பெண்கள் சந்திப்பு, கனேடிய இலக்கியச் சந்திப்பு சார்பில் நன்றியைக் கூறிக் கொள்ள விரும்புகின்றோம்

எந்த அரசியல் சார்பும் அற்ற நிலையில் நடுநிலையாக இயங்குவதே பெண்கள் சந்திப்பின் முக்கிய நோக்கமாகும். இருந்தும் ஒரு அமைப்போ, அரசோ, இயக்கமோ பெண்கள் மீது வன்முறை நடாத்துகின்றது எனும் பட்சத்தில் ஆதாரங்களுடன் ஒரு ஆய்வாளர் கட்டுரை சமர்பித்தால் அதை ஏற்றுக்கொள்வதுதான் நடுநிலையானது. அந்த வகையில் 27வது பெண்கள் சந்திப்பும், கனேடிய இலக்கியச் சந்தப்பும் நடுநிலையாகவே நடந்து முடிந்தன.

உலகெங்கிலுமிருந்து பெண்ணியவாதிகள் கலந்து கொண்டு தமது ஆக்கமான ஆய்வுக்கட்டுரைகளை வழங்கி இந்நிகழ்வைச் சிறப்பித்ததுடன், நிகழ்விற்கான அனைத்து உதவிகளையும் முன்னின்று நிறைவேற்றினார்கள்.

பெண்கள் சந்திப்பு மிகவும் காத்திரமானதாகவும், ஆரோக்கியமானதாகவும் வளர்ந்து வருகின்றது. தொடர்ந்து வரும் வருடங்களில் புதிய நாடுகளுக்கும் பெண்கள் சந்திப்பைக் கொண்டு செல்வதன் மூலம் உலகெங்கிலும் பெண்களுக்கெதிரா வன்முறைக்காகக் குரல் கொடுத்து பெண்களின் மத்தியில் விழிப்புணர்வைக் கொண்டு வரமுடியும். இதுவே பெண்கள் சந்திப்பின் முக்கிய நோக்கமுமாகும்.

பல அரசியல் மோதல்களுக்கிடையிலேயும், உதவிகள் அற்ற நிலையிலும்தான் 27வது பெண்கள் சந்திப்பை எடுத்து நடத்த ஒத்துக்கொண்டிருந்தோம். இருந்தும் தாமாகவே முன்வந்து உதவிய அனைத்து நண்பர்களுக்கு நாம் மிகவும் கடமைப்பட்டிருக்கின்றோம் என்பதை மீண்டும் சொல்லிக்கொள்ள விரும்புகின்றோம்.

அந்த வகையில் - நிகழ்சியைச் திறம்பட தொகுத்துத் தந்த தோடு மேலும் பல உதவிகளைச் செய்த ஜானகி பாலகிருஷ்ணன், அனைவருக்கும் தங்க இடம்கொடுத்து உதவிய ஜெபா, கற்சுறா குடும்பத்தினர், சக்கரவர்த்தி ராதிகா குடும்பத்தினர், ரவி குடும்பத்தினர், தன் வேலைகளுக்கு மத்தியிலும் வரைகலை செய்து தந்து உதவிய டிஜி மீடியா கருணா, அழைப்புக் கடிதத்தைத் தயாரித்துத் தந்த அ.முத்துலிங்கம், வீடியோ படப்பிடிப்பு செய்த ரூபன், பல உதவிகளையும் செய்த இளங்கோ, பவானி, அபிநயா, தர்சினி வரப்பிரகாசம், நீரஜா ரமணி ஆகியோருக்கும், விளம்பரம் செய்து உதவிய ரீ.வீ.ஐ தொலைக்காட்சி, சி.ரி.ஆர் வானொலி, பெண்கள் சந்திப்பில் கலந்து கொள்வதற்காக கனடா வந்ததோடு மற்றுமல்லாமல் பல உதவிகளைளும் செய்த அனைத்துலகப் பெண்களுக்கும், நாடகங்களுக்காக ஒளி அமைப்பைத் திறம்பட வழங்கிய ராகவன் அவர்களுக்கும் 27வது பெண்கள் சந்திப்பு சார்பில் நன்றிகளைக் கூறிக்கொள்கின்றோம்;.

இனி வரும் வருடங்களிலும் இதே போன்று சிறப்புடன் சர்வதேச ரீதியில் பெண்கள் இணைந்து கொண்டு மீண்டும் கனடாவில் ஒற்றுமையாக ஒரு பெண்கள் சந்திப்பை நாடத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்கின்றோம்.

நன்றிகளுடன்

சுமதி ரூபன்
வைகறை

4 comments:

King... said...

\\
பெண்ணியம் பெண்ணியவாதிகள் பெண்சுதந்திரம் என்றால் என்ன? பெண்களுக்கு என்ன பிரச்சனை இருக்கின்றது? எதற்காக பெண்கள் சந்திப்பு?
\\
எதற்காக பெண்கள் சநதிக்கிறார்கள் எனக்கு புரியவில்லை...

இது உங்களுக்கான முதல் கேள்வி...
பேச இன்னும் நிறைய இருக்கு

King... said...

பெண்கள் சந்திப்பில் பெண்கள் என்ன பேசுகிறார்கள் என்பதை தெளிவுலு படுத்துங்கள் முதலில்..

கறுப்பி said...

கிங்
//இது உங்களுக்கான முதல் கேள்வி...
பேச இன்னும் நிறைய இருக்கு\\

இது என் முதல் கேள்வியல்ல. பெண்கள் சந்திப்பிற்கான அறிமுகம்.

துப்பறிவதை விட்டு விட்டு தங்கள் குடும்பத்திலிருக்கும் ஒரு பெண்ணை பெண்கள் சந்திப்பில் கலந்து கொள்ளக் கேட்கலாமே

பெண்கள் சந்திப்பில் என்ன பேசிக்கொள்கின்றார்கள் என்பது பற்றி உங்களுக்குத் தெளிவு படுத்த வேண்டிய அவசியமில்லை. கட்டுரைகளுக்கான தலைப்பு ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது.கறுப்பி

lenin said...

In the whole world there are so many woman who are in need of freedom.But the justice or the fruit of the efforts are being enjoyed by the people who are already in good condition and use that word for cultural degradation.
sitting in Airconditioned rooms in restaraunt and talking about woman rights wont do anything for the woman living in the other face of the metro.