Saturday, November 15, 2008

காஞ்சிவுரம்

இயக்குனர் பிரியதர்சனின் 9வருட உழைப்பில் உருவாகியிருக்கும் கலைத் திரைப்படமான “காஞ்சிவுரம்” அவரது கனவுத் திரைப்படம் என்றும் அவர் கூறியுள்ளார். இத்;திரைப்படம் 33வது ரொறொன்டோ சர்வதேச திரைப்பட விழாவில் “விசா” திரையீட்டுக்காகத் தெரிவு செய்யப்பட்டிருந்தது. முன்பு பல தமிழ் திரைப்படங்கள் ரொறொன்டோ சர்வதேச திரைப்படவிழாவிற்காகத் தெரிவு செய்யப்பட்டிருந்தாலும் பிரியதர்சனின் “காஞ்சிவுரம்”; முதல் முறையாக “விசா” திரையீட்டுக்காத் தெரிவு செய்யப்பட்டு முக்கியத்துவம் பெறுகின்றது. இந்நிகழ்விற்காக இயக்குனர் பிரியதர்சன், படத்தின் கதாநாயகன் பிரகாஷ் ராஜ், மகளாக நடித்த ஷாமு, பிரபல கலைப்பட இயக்குனரும் காஞ்சிவுரம் திரைப்பட தயாரிப்பு உதவியாளருமான சபு சிரில் போன்றோர் திரைப்பட வெளியீட்டில் கலந்து கொண்டார்கள். திரைப்பட வெளியீட்டைத் தொடர்ந்து கனேடிய தமிழ் காங்கிரஸ் திரைப்படக் கலைஞர்களை கௌரவம் செய்த நிகழ்வும் இடம்பெற்றது. இந்நிகழ்விற்கு கனேடிய தமிழ் காங்கிரஸ் உறுப்பினர்கள், ரிவிஐ தொலைக்காட்சி தொழிலாளர்கள், தமிழ் திரைப்பட ஆவலர்கள், பலரும் கலந்து கொண்டார்கள்.காஞ்சிபுரம் நகரத்தை மையமாகக் கொண்டு 1940களில் காஞ்சிபுரம் பட்டை நெசவு செய்யும் நெசவாளிகளின் வாழ்வை திரைப்படமாக்கியிருக்கின்றார் இயக்குனர். வளர்ந்து வரும் நாடுகளின் முக்கிய பிரச்சனையான தொழிலாளி வர்க்க சுரண்டலை, காஞ்சிப் பட்டை நெசவு செய்யும் வெங்கடம் தனது மகளைத் திருமணத்தின் போது காஞ்சிப்பட்டைச் சீதணமாக் கொடுத்து அனுப்ப வேண்டும் என்ற பகல் கனவு மூலம் வெளிப்படுத்தியிருக்கின்றார். பட்டைக் கண்ணால் பார்க்கவும், தொட்டு உணரவும், நெசவு செய்யவும் மட்டுமே காஞ்சிபுரத்து நெசவாளிகள் அனுமதிக்கபட்டிருகின்றார்கள். தாம் நெசவு செய்யும் பட்டை வாங்கி உடுத்திப்பார்க்க அவர்கள் பொருளாதார நிலை மட்டுமல்ல, வர்க்கப்பாகுபாடும் அவர்களுக்கு இடம்கொடுக்கப் போவதில்லை. உழைக்கும் வர்க்கத்திற்கு ஒரு விடிவு வேண்டுமெனின் அங்கே ஒரு போராட்டம் நிச்சயம் தேவை. நெசவாளிகள் பற்றி எழுதுவதற்கு வந்ததாகக் கூறிக்கொண்டு அந்த ஊருக்கும் நுழையும் எழுத்தாளக் கொம்யூனிச வாதியின் உரையில் கவரபட்ட வெங்கடம், முதலாளியை எதிர்த்து வேலை நிறுத்தம் செய்யும் துணிவோடு செயல் படுகின்றான். மிகக் குறுகிய காலத்தில் ஒரு மனிதன் கொம்யூனிசக் கொள்கையில் கவரப்பட்டு வேலை நிறுத்தம் செய்யும் நிலைக்குத் தள்ளப்படலாம், ஆனால் அவனை ஒரு முழுமையான கொம்யூனிச வாதியாக எப்படி இயக்குனர் கணிக்க முனைந்தார். அதே வேளை நேர்மையானவனாகக் காட்டப்பட்ட வெங்கடத்தின் நண்பன் கூட, வெங்கடம் திருடன் என்று தெரிந்த பின்னர் தனது மகனின் திருமணத்தை நிறுத்தி விடுகின்றான். காலணி ஆட்சியில் கொம்யூனிசக் கொள்ளை தடைச் சட்டத்தின் கீழ் கொல்லப்படுகின்றார் உண்மையான கொம்யூனிச வாதியான எழுத்தாளர். இங்கே இயக்குனர் பிரியதர்சனின் சுலோகமான ““Communists who preach a lot and practice little” by Priyadarshan.


இந்துமதத்தின் படி, பட்டு வாழ்வில் இரு முக்கிய நிகழ்வுகளில் பங்கெடுக்கின்றது. திருமணத்தின் போது கூறைப் பட்டாக தாம்பத்திய உறவைத் தொடக்கி வைக்கும் பட்டு, மரணத்தின் போது அதன் தூய்மையால் மனித ஆவியை சொர்க்கத்திற்கும் அழைத்துச் செல்கின்றது. தன் வாழ்நாள் முழுவதையும் பட்டுச் சேலையைத் திறம்பட நெய்து பெயர் பெற்ற தனது தந்தை இறந்த போது உடலை மூடுவதற்கு ஒரு சிறு பட்டுக்கு வக்கில்லாமல் போய் விட்டோமே என்று வருந்தும் வெங்கடம் தன் வாழ்வில் பட்டை மகளுக்கு சீதனமாக்கி அனுபவிக்க வேண்டும் என்ற வேண்டாத ஆசை அவன் வாழ்வை அழிப்பதுதான் காஞ்சிவுரத்தின் சுருக்கமாக திரைக்கதை.

பல ஜனரஞ்சக தமிழ் மலையாளத் திரைப்படங்களை இயக்கியிருக்கும் பிரியதர்சன் தனது முதல் கலைத் திரைப்படத்தை தரமானதாக வழங்கியிருக்கின்றாரா? வர்த்தகத்தை மட்டும் மனதில் கொண்டு எடுக்கப்படும் ஜனரஞ்சக தமிழ் திரைப்படங்களுடன் காஞ்சிவுரத்தை ஒப்பிட்டால் மிகவும் தரமானது, வித்தியாசமானது என்று பார்வையாளர்கள் கூறலாம். ஆனால் ரொறொன்டோ சர்வதேச திரைப்படவிழாவில் கலந்து கொண்டு பல வேற்று மொழித் திரைப்படங்களைப் பார்வையிட்டவள் என்ற முறையில் காஞ்சிவுரம் திரைப்படம் ஒரு திரைப்பட விழாவிற்கு எதையெல்லாம் கொடுத்தால் தெரிவு செய்வார்கள் என்பதை மனதில் கொண்டு வலிந்துசெய்யப்பட்ட திரைப்படமாகவே காணப்படுகின்றது. சென்ரிமென்டலாகக் காலணித்துவக் காலம், மனைவி, மகள் என்று கதைக்கு வேண்டாத ஒட்டாத இழப்புக்கள் இவைதான் காஞ்சிவுரத்தில் விஞ்சி நிற்கின்றது.
ஒரு நெசவாளி தான் நெய்யும் பட்டில் ஒன்றை எப்படியாவது வாங்கிவிட வேண்டும் என்று ஏங்குகின்றான். சென்ரிமென்ரையெல்லாம் தூக்கிப் போட்டு விட்டு, இந்த ஒரு கருபோதும் தரமான திரைப்படத்தை வழங்க. இவனுக்குப் பட்டுக் கிடைத்து விடுமா என்று பார்வையாளர்கள் மனம் நெசவாளியோடு சேர்ந்து பதைக்க வேண்டும். பார்வையாளர்களின் மனதில் அந்த ஏக்கத்தைத் திரைப்படம் ஏற்படுத்தாத வரையில் அத்திரைப்படம் எங்கோ தவறி விட்டதென்றே கூற வேண்டும்.
சென்ரிமென்ட் மனதைப் பிளிந்த காலம் எப்போதோ மலையேறிப் போய் விட்டது. இப்போதெல்லாம் எந்த கொம்பிரமைஸ்சும் இல்லாமல், மிக யதார்த்தமாக வாழ்வைக் கலைப்படமாக்குகின்றார்கள், யப்பான், இந்தோனேசியா, ஈரான், மற்றும் பல ஐரோப்பிய நாடுகள்.

4 comments:

Shan Nalliah / GANDHIYIST said...

Greetings!please continue your services!

Inilan said...

நான் இன்னும் இந்த திரைப்படத்தை பார்க்கவில்லை.. ஆனால் பார்க்க மிக்க ஆவலாக உள்ளேன்..தாங்கள் கொடுத்த insight was very interesting..

Santhosh Guru said...

எனக்கு இந்த படம் மிகவும் அலுப்பினையே தந்தது. நல்ல படங்கள் பல வரும் இக்காலத்தில் வந்த கடியான “art film” போல இருந்தது.

sankarkumar said...

very good article.
plz se my review about kanjevarm movie in my blog.
sankarkumar