Wednesday, February 02, 2005

"பெண்கள் விடுதலை பெற ஆண்மை அழிய வேண்டும்"

ஓக்டோபர் மாதக் காலச்சுவட்டில் கண்டதும் கேட்டதும் படித்தேன். அண்மைக் காலமாக பல இலக்கிய விரும்பிகள் பெண்களின் எழுத்து அவர்களின் மொழி பற்றி பத்திரிகைகள் சஞ்சிகைகள் இணையத்தளங்கள் என்று வசைபாடிய வண்ணமே இருக்கின்றார்கள். பெண்மொழி கழிப்பறையில் எழுதப்படும் வாசகங்களுக்கு நிகராக இருக்கின்றது என்றும் இப்படியான மொழிகளைத் தாங்கி வரும் படைப்புக்களை காலச்சுவடு உயிர்மை போன்ற பத்திரிகைகள் பிரசுரிப்பது பணம் பண்ணுவதற்கான வித்தை என்றும் சிலர் கருத்து வெளியிட்டுள்ளார்கள். அது மட்டுமல்ல இவற்றை எல்லாம் விழுங்கி ஏப்பம் விடும் வகையில் ஆணின் வக்கிர மனத்தின் பிரதிபலிப்பாக "முலை இல்லாததாலும், இல்லாவிட்டால் சிறிதாக இருப்பதாலும்" என்று ஒருவார் கூற, 'அப்படியாயின் நாயுடு ஹோலில் போய் வாங்கிப் போட்டுக்கொள்ளுவது தானே" போன்ற வக்கிரச் சம்பாஷணைகள் "பெண்கள் விடுதலை பெற ஆண்மை அழிய வேண்டும்" என்ற பெரியாரின் வாத்தைகளை ஞாபத்திற்கு கொண்டு வருகின்றன. (ஓகஸ்ட் 12 - 1928 குடியரசு இதழ்;)

அன்று கணவனை இழந்தவளை உடன்கட்டை ஏறச்செய்ததும், தலை மழித்து வெள்ளைச் சீலை கட்டி இருட்டு அறைக்குள் இருத்தி வைத்ததும். பெண்களின் இந்த முலைகளும், யோனிகளும் ஆண்களுக்கு ஏற்படுத்திய பிரமையும் பீதியும் தான் என்பது என் கருத்து. பிரம்மராஜனின் பார்வையில் பெண்களின் உடல் உறுப்புக்கள் வெறும் வியர்வைச் சுரப்பிகள் தான் எனின் அவற்றை பெண்கள் தமது எழுத்துக்களின் குறிப்பிடுவதை எதற்காக சர்ச்சையாக்க வேண்டும். உடல் உறுப்புக்களை அகற்றி பால் பேதம் என்பதை இல்லாமல் ஆக்கிவிட்டால் இந்த வேறுபாடு எங்கிருந்து வரப்போகின்றது. பெண்ணியப் படைப்பாளிகள் பெண் என அடையாளமிடுதலை நிராகரிக்கின்றனர். பெண்களுக்கான இந்த உடல் உறுப்புக்களே அவர்களை சாதாரண உலகிலிருந்து விலக்கி வைக்கின்றன. ஆண் ஆதிக்க சமுதாயத்தில் ஆண்களும் பெண்களும் வாழப்பழகிக் கொண்டதாலும், அவர்கள் கற்பிதங்கள் வாசிப்புக்கள் ஆண்களை மையப் படுத்தியும் முதன்மைப் படுத்தியும், பெண்ணை இரண்டாம் தர ஆண்களின் சுகபோக இன்பத்திற்காய்ப் படைக்கப்பட்ட ஒரு போதை வஸ்தாக உருவகப்படுத்தி வந்ததாலும் எந்த வித முகச்சுளிப்புமின்றி பெண்ணினம் அதற்கு இசைந்து வாழ்வதாலும் நிறைவோடிருந்த ஆண்களிற்கு தற்போது சில பெண்ணிய எழுத்தாளர்கள் தமது உள்ளக் கிடக்கைகளை பொருமல்களை துணிவோடு எழுதில் தர தமது இலகுவான இயல்பான உலகு உடைந்து விடுமோ என்று அச்சம் வரத் தொடங்கி விட்டது.இந்த அடக்கு முறைகளை உடைத்துக் கொண்டு பெண் வெளியே வருகின்றாள். தன் மேல் இந்த ஆண் ஆதிக்க உலகம் சுமத்தும் சுமைகளை அம்பலப்படுத்துகின்றாள் என்ற பீதி எல்லா ஆண்களுக்கும்.. ஏன் மேலத்தேய நாட்டில் வாழும் ஆண்கள் உட்பட எல்லோருக்குமே ஏற்படத் தொடங்கி விட்டது. மௌனித்திருந்தால் கட்டை உடைத்துக்கொண்டு பாய்ந்து விடுமோ என்ற அச்சத்தில் தொடர்ந்து கூசாமல் பெண்ணியம் பெண் மொழி என்பவற்றை தம்மால் முடிந்தவரை தமது சாமர்த்தியத்தைப் பயன்படுத்திக் கொச்சைப் படுத்தி மீண்டும் அவளை எங்காவது அடைத்து விடலாம் என்று முயன்று பார்க்கின்றார்கள். ஒரு பெண் கொச்சைப் படுத்தப்படும் போது கற்பைக் கேள்விக்குறியாக்கும் போது கூசிப்போவாள் என்று தப்பாகக் கணக்குப் போட்டு மீண்டும் மீண்டும் தம்மைத் தாமே கேவலப்படுத்துகின்றார்கள் இந்த அப்பாவி ஆண்கள். இது ஆண்கள் மட்டும் செய்யும் வேலையில்லை.. பல பத்தினிப் பெண்களும் இப்படியாகக் கோசம் போடுகின்றார்கள். திலகபாமா எனும் வாசகி 'காலச்சுவட்டிற்கு கண்டனம்" என்று பதிவுகள் இணையத்தளத்தில் கூப்பாடு போட்ட வண்ணம் தவறாமல் காலச்சுவட்டையும் உயிர்மையையும் படித்து வருகின்றார். இப்படியான எழுத்துக்களைத் தாங்கி வரும் சஞ்சிகைகளை தங்கள் மனைவி மகளை வாசிக்க அனுமதிப்பீர்களா என்று கேள்விக் கணையைத் தொடத்திருக்கும் திலகபாமாவிற்கு அவர் இவற்றைப் படிக்க அனுமதி வழங்கியது அவர் தந்தையா? இல்லைக் கணவனா? 'காலச்சுவடிற்குக் கண்டனம்' எழுதிய அதே இதழில் பிரேம் ரமேஷின் கவிதையும் அதே மாத உயிர்மையில் அதே பாணியிலான கவிதைகளும் வந்திருக்கிறன என்று அங்கலாய்க்கும்; திலகபாமாவின் அறியாமையை என்னென்பது. ஆணாதிகக் வாதிகளின் மிகப்பெரிய உச்சக்கட்ட வெற்றியே திலகபாமா போன்றவர்களின் தோற்றம்தான். சமுதாயத்தின் பார்வையில் கொச்சைப்பட புறக்கணிக்கப்படப் பயப்படும் பல கோழைப் பெண் எழுத்தாளர்களுள் திலகபாமாவும் ஒருவர் என்பது என் கணிப்பு.

பெண் ஒடுக்கு முறையை மையமாக வைத்து வெளிவரும் படைப்புக்களில் இப்படிப்பட்ட வாசகர்கள் எங்கே யோனி முலை என்ற வார்த்தைகள் வருகின்றன என்பதாய் மட்டும் பார்க்கும் தன்மைதான் இவர்களது விமர்சனங்களைப் பார்க்கும் போது தெரிகின்றன. பெண் உறுப்புக்களை விடுத்து படைப்புக்களின் ஆழம் அதற்குண்டான வலி இவர்களுக்கு ஏன் அதிர்ச்சியையோ நோவையோ தருவதில்லை.

பெண்ணின் உடலமைப்பும் உடல் அவையங்களும் தான் எமது கலாச்சாரம் பண்பாடு சமயம் போன்றவற்றைப் பேணிப்பாதுகாக்கின்றன என்று கூப்பாடு போட்டு அவளை ஒடுக்கி விடும் இந்த ஆண் ஆதிக்க உலகை உடைத்து தனது உள் உணர்வை வெளிக்கொணர பெண்ணிற்கு அவள் உடல் உறுப்புக்களைத் தவிர எது உரிய ஆயுதம் என்பதை சமூகச்சீரழிவில் அக்கறை கொண்ட இலக்கியவாதிகள் யாராவது கூறுங்கள் பார்க்கலாம்.

20 comments:

ROSAVASANTH said...

தயவு செய்து பிண்ணணியை நிறத்தையோ, எழுத்தின் நிறத்தையோ மாற்றுங்கள்! படிக்க (கண்களுக்கு) மிகவும் கடினமாக உள்ளது. கஷ்டப்பட்டு படித்தேன்.

நல்லபதிவு. இந்த முறையும் வாக்களித்தேன் -தவறுதலாக அல்ல.

சன்னாசி said...

//கூப்பாடு போட்டு அவளை ஒடுக்கி விடும் இந்த ஆண் ஆதிக்க உலகை உடைத்து தனது உள் உணர்வை வெளிக்கொணர பெண்ணிற்கு அவள் உடல் உறுப்புக்களைத் தவிர எது உரிய ஆயுதம் என்பதை சமூகச்சீரழிவில் அக்கறை கொண்ட இலக்கியவாதிகள் யாராவது கூறுங்கள் பார்க்கலாம்.//
ஃப்ரைடா காலோ ஓவியத்தைத் தேர்வு செய்திருக்கிறீர்கள். அவளைப்பற்றித் தெரிந்துமா உடல் உறுப்புகளைத் தவிர எது உரிய ஆயுதம் என்கிறீர்கள்? எத்தனை, இருபது வயதிலா அவளது இடுப்பெலும்பு துகள் துகளாகச் சிதறியது? அதைக்கொண்டா அவளது வேதனை வெளிப்பட்டது? அவள் புருவத்தில் தொங்கும் வௌவாலைக்கொண்டு அவள் வேதனையை உணரமுடியாமல் போகிறதா என்ன? இத்தனையும் நான் சொல்வது பெண்கள் உடல் பற்றி எழுதுவதைக் குறித்த சங்கடத்தினால் அல்ல; உடல் என்பதை ஒரு ஆயுதமாகப் பாவித்த ஆண் மனோநிலை போலவே தங்களது சிந்தனையையும் பெண்கள் கொள்ளவேண்டுமா என்றூ நினைப்பதால். ஆணை எதிர்ப்பது ஆணாகித்தான் முடியுமென்று நினைக்கவைப்பதே ஆணாதிக்க மனப்பான்மையின் வெற்றி என்று எனக்குத் தோன்றுவதில் தவறிருப்பின் கூறவும்...

ROSAVASANTH said...

மாண்ட்ரீஸர், நீங்கள் சொல்வது புரியவில்லை. என்ன சொல்லவருகிறீர்கள் என்று இன்னும் கொஞ்சம் தெளிவாக்கினால் நல்லது.எல்லா கட்டத்திலும் சந்தர்பத்திலும் பெண்ணுறுப்பு ஒரு 'ஆயுத'மாக இருக்கமுடியாது என்று சொல்லவருகிறீர்களா? 'ஆயுதம்' என்பதெல்லாம் சமயத்துக்கு இடம் பொருள் சந்தர்பத்திற்கும் ஏற்றவாறுதானே அமையமுடியும்!


பிரைடா காலாவின் ஓவியத்திலும் பெண்ணுறுப்புகள் உள்ளன. சர்ச்சைகுள்ளாக்கபடும் கவிதைகளிலும் பெண்ணுறுப்புகள் உள்ளன. நம் சூழலில் வரும் கூப்பாடு எது குறித்தது எனபது, அதை எப்படி எதிர்கொள்வது என்பதுவுமே இங்கே பிரச்சனை!

ROSAVASANTH said...

//உடல் என்பதை ஒரு ஆயுதமாகப் பாவித்த ஆண் மனோநிலை போலவே தங்களது சிந்தனையையும் பெண்கள் கொள்ளவேண்டுமா என்றூ நினைப்பதால். ஆணை எதிர்ப்பது ஆணாகித்தான் முடியுமென்று நினைக்கவைப்பதே ....//

இந்த குறிப்பிட்ட பிரச்சனையை இந்த வகையில் எப்படி விளங்கி கொள்கிறீர்கள் என்று புரியவில்லை. இதையே விளக்க கேட்கிறேன்.

மாலன் said...
This comment has been removed by a blog administrator.
கறுப்பி said...

ரோசாவசந் இப்ப எப்பிடி இருக்கு? இன்னும் பிரச்சனை எண்டாத் தயவுசெய்து கண்ணாடியை மாற்றிக் கொள்ளவும்

கறுப்பி said...

மான்ரீஸர் - நான் பெரிதாக ஒன்றும் சொல்லவில்லை. மிக இலகுவாக விளங்க வேண்டிய ஒன்றைத்தான் நான் கூறியிருந்தேன். அதாவது பெண்ணைப்பற்றி, பெண்ணின் உணர்வுகளைப்பற்றி, பெண்ணின் நோவைப்பற்றி பெண்ணின் எல்லாவற்றையும் பற்றி ஆண்டாண்டு காலமாக ஆண்கள் மட்டும் படைத்து வந்தார்கள். அதுதான் நியாயம் தர்மர் எல்லாமுமே இல்லையா? பெண்ணைப் பற்றிப் பெண்ணுக்கு என்ன தெரியும் ஆணுக்குத் தானே எல்லாமும் தெரியும்? இவற்றை மீறிய படைப்பாளிகளுள் என்னைக் கவர்ந்த ஓவியர் ப்ரீடா காலா. அதனால் அவரின் ஓவியத்தைத் தெரிவு செய்தேன். இனி ஆண்கள் வந்து கேள்விக் கணைத்தொடுக்க அதற்கு நானும் நாண்டு கொண்டு பதிலளிக்க. வேண்டாமய்யா..

மாலன் - உயிர்மை, காலச்சுவடு பற்றி தங்கள் கருத்தில் தனிப்பட்ட காழ்புணர்வைக் காண்கின்றேன். உலகம் என்பதே வணிகம். அதற்குள் எதை தாங்கள் தேடுகின்றீர்கள்? “கிடைச்ச மூதேவிக்குள் நல்ல மூதேவியைத் தேடும்” நிலைதானே எல்லோருக்கும்.

“இந்தப் பார்வையை மாற்ற வேண்டும் பெண்ணை மனித உயிராகக் கருத வேண்டும் ஆணுக்கு நிகராக சிந்திக்கும் செயல்படும் ஆற்றல் கொண்டவள் என வற்புறுத்துவதுதான் பெண்ணியத்தின் மெய்யான அடிப்படை. அதாவது பெண்ணை அவளது எண்ணங்கள் அறிவாற்றல் அடிப்படையில் அளவிட வேண்டும் உடல் ரீதியாக அல்ல என்பதுதான் மெய்யான அடிப்படை.”

தங்கள் இந்தக் கூற்று funny யாக உள்ளது. பார்க்கத் தொடங்கி விட்டார்களா? எப்போது? எங்கே? பெண்கள் தங்கள் நோவை உணர்வுகளை எழுதுவதற்குத் தளம் கொடுத்த சஞ்சிகைகளைக் கேள்விக் குறியாக்கி, மிகக் குறுகிய காலத்தில் கவனம் பெற பாவிக்கும் உத்தி என்று பெண்களின் எழுத்தையும் கேள்வியாக்கும் தங்களைப் போன்றோர் எழுத்தை ஊன்றிப் பார்க்க மறந்து மீண்டும் மீண்டும் எல்லாவற்றையும் அரசியலாக்கி.. பெண்மொழியில், அவள் ஆக்ரோஷத்தில் எங்கே கிளுகிளுப்பைக் கண்டீர்கள்? பெண்கள் மூளையை நம்ப? அமெரிக்காவில் ஆண்களின் உள்ளாடைகளுக்கும், காரின் ரையர்களுக்கும் அரைகுறை ஆடை அணிந்த அழகிகளை விளம்பரத்திற்குப் பயன்படுத்துகின்றார்கள். (தயதுசெய்து அந்தப் பெண்கள் ஏன் போனார்கள் என்ற கேள்வி எழுப்பாதீர்கள்)
பெண் மொழியையும், அதன் ஆழத்தையும், அதில் இருக்கும் ஆக்ரோஷத்தையும் தங்களைப் போன்ற ஆண்களால் புரிந்து கொள்ள?? கிட்டவே வரமுடியாது.. எதையும் கொச்சைப்படுத்திக் கேள்வியாக்காமல்??

சன்னாசி said...

//பெண்ணைப் பற்றிப் பெண்ணுக்கு என்ன தெரியும் ஆணுக்குத் தானே எல்லாமும் தெரியும்? இவற்றை மீறிய படைப்பாளிகளுள் என்னைக் கவர்ந்த ஓவியர் ப்ரீடா காலா.//
ஃப்ரைடா காலோ எனக்கும் மிகவும் பிடித்த ஓவியர்தான். ஃப்ரைடாவைக் குறித்து இன்று இருக்கும் பிம்பத்துக்குக் காரணமான அவரது ஓவியத் திறன், அக்காலத்தின் தலையாய சுவரோவியரான (muralist) டீகோ ரிவேராவுடனான உறவு, கம்யூனிஸ்ட் தலைவர் லியோன் ட்ராட்ஸ்கியுடனான உறவு, அவரது லெஸ்பியன் ஆர்வங்கள், சமீபத்தில் வந்த 'ஃப்ரைடா' படம், தனது மெக்ஸிக உச்சரிப்பான 'ஃப்ரைடா' என்பது பிடிக்காமல் தனது ஜெர்மானிய வேர்களைக்கொண்டு 'ஃப்ரீடா' என உச்சரிக்க முயன்றது (இது ஏதோ ஆணாதிக்கம் இல்லை. இப்போது வரை பீத்தோவன் கூட Ludwig Van Beethovanதான், அவரே முயன்றும்கூட Ludwig Von Beethovan கிடையாது. என்ன விவரமெனில் தேடிப்பார்த்துக்கொள்ளவும்)- இதில் எது? அனைத்துமே எனில் சந்தோஷம். வெறுமனே ஃப்ரைடா மோஸ்தராக இல்லாவிட்டால் என்னைவிட மகிழ்ச்சியடைபவன் யாரும் இருக்கமுடியாது. ஃப்ரைடா வெறும் உடல் மட்டும் அல்ல. அவரது பெரும்பாலான ஓவியங்கள் close-up portraits தான். அவரது மூதாதையர் வீட்டை (blue houseஆ?) சித்தரிக்கும் ஓவியம்கூட வசீகரமானதுதான். எப்படியும் சித்திரிப்பது உங்கள் விருப்பம். அந்த அடிப்படைப் புரிதல்கூட இல்லாமல் அதைக் குறைசொல்லவில்லை நான்.

//அதனால் அவரின் ஓவியத்தைத் தெரிவு செய்தேன். இனி ஆண்கள் வந்து கேள்விக் கணைத்தொடுக்க அதற்கு நானும் நாண்டு கொண்டு பதிலளிக்க. வேண்டாமய்யா..//
நான் கேள்விகேட்டு நீங்கள் நாண்டுகொண்டு நான் பிறகு நரகத்து எண்ணெய்ச் சட்டியில் வறுபடவா!! என்ன சுயநலம் பாருங்கள் எனக்கு! மறுமொழி இட்டது என் தவறு. மன்னிக்க.

ROSAVASANTH said...

கறுப்பி படிப்பதில் இப்போது பிரச்சனையில்லை. மாற்றியதற்கு நன்றி!

மாண்ட்ரீஸர், மிகவும் மன்னிக்கவும்! முரண்படுவதற்கு நீங்கள் தரும் அழுத்தமும், முரண்படும் விதமும் இடமும் சுத்தமாய் புரியவில்லை, கறுப்பி மறுமொழிந்ததின் தொனியுடன் எனக்கும் முரண்பாடு உண்டேனினும்.

இப்போது இங்கே ஜகா வாங்குவதே சிறந்த அணுகுமுறையாய் எனக்கு படுகிறது.

மாலன் said...

அன்புள்ள கறுப்பி,

>>“இந்தப் பார்வையை மாற்ற வேண்டும் பெண்ணை மனித உயிராகக் கருத வேண்டும் ஆணுக்கு நிகராக சிந்திக்கும் செயல்படும் ஆற்றல் கொண்டவள் என வற்புறுத்துவதுதான் பெண்ணியத்தின் மெய்யான அடிப்படை. அதாவது பெண்ணை அவளது எண்ணங்கள் அறிவாற்றல் அடிப்படையில் அளவிட வேண்டும் உடல் ரீதியாக அல்ல என்பதுதான் மெய்யான அடிப்படை.”

தங்கள் இந்தக் கூற்று funny யாக உள்ளது. "<<

Funny யாக என்ன சொல்லிவிட்டேன் என்று எனக்குப் புரியவில்லை. பெண்ணை அவளது அறிவாற்றல் அடிப்படையில் அளவிடவேண்டும் என்பது அவ்வளவு funnyயானதா?

>>"பார்க்கத் தொடங்கி விட்டார்களா? எப்போது? எங்கே? "<<

பார்க்கத் தொடங்கிவிட்டார்கள் என்று நான் எங்கே சொல்லியிருக்கிறேன்? முதல் வரியே ' மாற்ற வேண்டும்' என்றுதான் துவங்குகிறது.

நீங்கள் விழைவதும் நான் விரும்புவதும் ஒரே மாற்றம்தான். அதை சாதிப்பதற்குரிய வழிமுறைகளில்தான் வேறுபடுகிறோம். "இந்த ஆண் ஆதிக்க உலகை உடைத்து தனது உள் உணர்வை வெளிக்கொணர பெண்ணிற்கு அவள் உடல் உறுப்புக்களைத் தவிர எது உரிய ஆயுதம்?" என்று நீங்கள் எண்ணுகிறீர்கள். ஆனால் நான் அறிவாயுதத்தை நம்புகிறேன்.

>>"உலகம் என்பதே வணிகம். அதற்குள் எதை தாங்கள் தேடுகின்றீர்கள்? “கிடைச்ச மூதேவிக்குள் நல்ல மூதேவியைத் தேடும்” நிலைதானே எல்லோருக்கும்."<<

வணிகமாகாத பல விஷயங்கள் உலகில் இருக்கின்றன. நீங்கள் எழுதிக் கொண்டிருக்கிறீர்களே இந்த வலைப்பதிவு வணிகமா? காசி உருவாக்கித் தந்திருக்கும் இந்தத் தமிழ் மணம் தளம் வணிகமா? திசைகள், திண்ணை, பதிவுகள், தமிழோவியம், நிலாச்சாரல் என்ற இணைய இதழ்கள் வணிகமா? மடலாடற்குழுக்கள் வணிகமா?

மென்பொருள் உலகில் Freeware என்ற ஒன்றைக் கேள்விப்பட்டிருப்பீர்கள். இ-கலப்பை வணிகமா? இணையத்திலிருந்து எத்தனை விஷயங்களை இலவசமாகப் பதிவிறக்கம் செய்து கொண்டிருப்பீர்கள்?

வணிகம் தவறல்ல. ஆனால் வணிக நோக்கம் என்பது ஊக்குவிக்கப்படக்கூடியதல்ல.

இந்த நேரத்தில் இது விற்கும், எனவே காசு பண்ண இதைத் தயாரித்து சந்தைப்படுத்தலாம் என்று செயல்படுவதன் பின் உள்ளது வணிக நோக்கம்.

ஒருவன் ஓர் ஒவியத்தை தனது உள்ள வெளிப்பாடாக வரைவதும், பின் அதை யாரோ ஒருவர் பணம் கொடுத்து வாங்கிக் கொள்வதற்கும், இது விற்கும் என்று நினைத்து வரைவதற்கும் வித்தியாசம் உணடு.

கவிதை வணிகம் அல்ல. ஆனால் திரைப்படப்பாடல் வணிகம்.

நேற்று அலுமினியம் கோப்பை விற்றது அதனால் அதைச் செய்தோம், இன்று பிளாஸ்டிக் கோப்பை விற்கிறது, இப்போது இதைச் செய்வோம், நாளை காகிதக் கோப்பை விற்றால் அதைச் செய்வோம் என்பதன் பின்னுள்ளது வணிக நோக்கம். அவர்களின் நோக்கம் பருகக் கோப்பை தருவதல்ல. காசு பண்ணுவது.

உயிர்மை தனது முதல் பதிப்பாக சுஜாதவைப் பதிப்பித்தது இந்த நோக்கில்தான். இலக்கியம்தான் நோக்கம் என்றால் ஏன் மனுஷ்ய புத்ரன் தரமான இளம் படைப்பாளிகளைப் பதிப்பிக்கவில்லை? மனுஷ்ய புத்ரனே ஒரு மடலில் தன்னை ஒரு சிறு வணிகன் என்றுதான் குறிப்பிட்டுக் கொண்டிருக்கிறார். காலச்சுவடு கண்ணனும் ஒரு வியாபாரிதான் என்று நிரூபிப்பது கடினமல்ல.

அவர்களே ஏற்றுக் கொண்ட ஒன்றை நீங்கள் ஏன் மறுக்க முற்படுகிறீர்கள்?

காலச்சுவடு, உயிர்மை, இவற்றின் வணிக உத்தி பற்றி நான் ஆதாரங்கள் தந்து குற்றம் சாட்டுகிறேன். ஆனால் நீங்கள் நான் காழ்ப்பின் அடிப்படையில் பேசுகிறேன் என்கிறீர்கள். நான் காழ்ப்பின் அடிப்படையில் பேசுகிறேன் என்பதற்கு என்ன ஆதாரம்? குறைந்த பட்சம் நான் வைத்த ஆதராங்களையாவது மறுக்க வேண்டும். அப்படி இல்லாமல் நீங்கள் என் மீது குற்றம் சாட்டுவது நியாயமற்றது.

நான் சிலரைக் கண்டு பரிதாபப்படுகிறேன்; சிலரைக் கண்டு அனுதாபப்படுகிறேன். சிலரிடம் பரிவு காட்டுகிறேன். சிலரிடம் நட்புக் கொள்கிறேன். சிலரை வெறும் அறிமுகத்தோடு நிறுத்திக் கொள்கிறேன். சிலரை மறுதலிக்கிறேன். சிலரை அலட்சியப்படுத்துகிறேன். சிலரை விமர்சிக்கிறேன். ஆனால் யார் மீதும் காழ்ப்புக் கொள்வதில்லை.

உங்கள் ஆக்ரோஷத்தைப் புரிந்து கொள்ள முடியாது என்கிறீர்கள். அதை நான் புரிந்து கொள்ளும்படி சொல்ல நீங்கள் முற்படக்கூடாது? எழுத்தின் நோக்கங்களில் ஒன்று communication அல்லவா?

உங்கள் ஆக்ரோஷம் நியாயமானதாக இருக்கலாம். ஆனால் அதை வெளிப்படுத்தும் முறையும் முகஞ்சுளிக்க வைக்காததாக இருக்க வேண்டும். இலக்கியம் எனது குழாயடிச் சண்டை அல்ல.

விரைவிலேயே இந்த ஞானம் உங்களுக்கு சித்திக்கட்டும்.
மாலன்

கறுப்பி said...

மாலன் மன்னிக்க வேண்டும் funny ஆக இருக்கிறது என்று நான் குறிப்பிட்டது, ” //பெண்ணை மனித உயிராகக் கருத வேண்டும், பெண் ஆணுக்கு நிகராகச் சிந்திக்கும் ஆற்றல் உடையவள் என்று வற்புறுத்துவது தான் பெண்ணியத்தின் மெய்யான அடிப்படை//” இந்த வாய்க்கியத்தைத் தான்.
என் ஒரு சிறிய அனுபவத்தை இங்கே குறிப்பிட விரும்புகின்றேன். ஒருநாள் ஒரு சிறிய கூட்டத்திற்கு நான் சேலை, தலையில் பூ, கொஞ்சம் நகை சகிதம் சென்றிருந்தேன். அங்கே இருந்த எனது ஆண் நண்பர் ஒருவர் எனைக் கண்டதும், "என்ன இது பெண்ணியம் பேசுகின்றீர்கள் இப்பிடிச் சீலையில்" என்றார். நான் சிரித்து விட்டு விலகிக்கொண்டேன்.
அது என்ன சிந்திக்கும், சிந்திக்காத ஆண்கள் எல்லோரது மனநிலையும் ஒன்றாகத்தான் இருக்கின்றது. அதாவது, ஆண்கள் முழுமையானவர்கள் பெண்கள் மிகமிகச் சிரமப்பட்டு தம்மை ஆண்கள் போல் மாற்றி விட்டால் பெண்களுக்குச் சுதந்திரம் கிடைத்துவிட்டது போல்.
தாங்கள் குறிப்பிட்ட //ஆண்களுக்கு நிகராகச் சிந்திக்கும் ஆற்றல் உடையவள் பெண் என்று// மாலன் உண்மையாகக் கேட்கிறேன் பெண் சிந்திக்கத் தெரிந்தவள் என்று யார் ஏற்றுக் கொள்ள வேண்டும்? அதுவும் ஆண்களுக்கு நிகராக.. ஏன்? ஆண்களா? அப்படி ஆண்கள் பெரிய மனதுடன் (தங்களைப் போல்) ஏற்றுக் கொண்டு விட்டால் பெண்களுக்குச் சுதந்திரம் கிடைத்து விட்டது என்று அர்த்தமா.

அடுத்து வரிசையாகப் பல வணிக நோக்கமற்ற இணையத்தளங்களை எடுத்துக் காட்டினீர்கள். இந்த வணிக நோக்கமற்ற இணையத் தளங்கள் அச்சுப்பிரதிகளை இலவசமாக வினியோகிக்கட்டும் அப்போது தாங்கள் சொல்லவதை நான் முற்று முழுதாக ஏற்றுக் கொள்கின்றேன். காலச்சுவடும், உயிர்மையும் வணிக நோக்கமுள்ள சஞ்சிகைகள் தான் ஒத்துக் கொள்கின்றேன். அதை நான் மறுத்தது போல் தாங்கள் எழுதியிருக்கின்றிர்கள். எனது பதிலை ஒருமுறை மீண்டும் படியுங்கள். ஆனால் அவர்கள் குமுதம், ஆனந்தவிடகன் போல் இல்லாதது மகிழ்ச்சியே. இலக்கியத்தை வளர்க்கின்றேன் என்று விட்டு கண்ணனும், மனுஷபுத்ரனும் சாப்பாட்டுக்கு எங்கே செல்வது. இந்தியச் சஞ்சிகைகளுள் படிக்கக் கூடியதாக இப்படியான விரல் விட்டு எண்ணக்கூடிய சில சஞ்சிகைகள் இருக்கின்றன என்று நான் சந்தோஷப்படுகின்றேன்.

மான்ரீஸர் - பெண்மொழி எழுத்துப் போல் ஃ.ப்ரீடாவினது பெண்மொழி ஓவியம். நிச்சயமாக ஃப்ரீடா தான் குறுக்குவழியில் பிரபல்யமடைய வேண்டும் என்பதற்காகத் தனது உடலுறுப்புக்களைக் கொண்டு ஓவியம் வரைந்திருக்க மாட்டார்

ரோசாவசந்த – ஜாகா வாங்கி விட்டீர்கள்.(shame on you) இணையத் தளங்கள் கருத்துப் பரிமாற மட்டுமே.. பலருடைய கருத்துக்களைப் படிக்கும் போது நிறையச் சிந்திக்கும் வாய்ப்புக் கிடைக்கிறது.

சன்னாசி said...

//மாண்ட்ரீஸர், மிகவும் மன்னிக்கவும்! முரண்படுவதற்கு நீங்கள் தரும் அழுத்தமும், முரண்படும் விதமும் இடமும் சுத்தமாய் புரியவில்லை,//
ரோஸாவசந்த்: பெண்ணியம் என்பது masculinisation of femininity என்ற ரீதியில் இருந்ததாக எனக்குப் பட்ட தட்டைத் தொனியுடன்தான் நான் முரண்பட்டது. இதை நான் என்ன நோக்கத்தில் சொல்ல வந்தேனோ, அதை விடுத்து // தமது இலகுவான இயல்பான உலகு உடைந்து விடுமோ என்று அச்சம் வரத் தொடங்கி விட்டது.// என்று பதிவுக்குள் எழுதியிருக்கும் அளவுகோல்களைக்கொண்டு interpret செய்தால், மேற்கொண்டு சொல்வதற்கு ஒன்றுமில்லை!! ஆதரவையும் எதிர்ப்பையும் வித்தியாசப்படுத்திப் பார்க்க யாரால்தான் கற்பிக்கமுடியும்?

கறுப்பி said...

மான்ட்ரீஸர் தங்களுடைய தளத்தின் பெயர் என்ன? Link ஆல் இணைக்க முடியவில்லை.

சன்னாசி said...

http://dystocia.blogspot.com

ஒரு பொடிச்சி said...

எனது இந்த பின்னூட்டம் ஃபிரீடா குறித்த உங்கள் கருத்துக்குள் தொடர்பாக மட்டுமே எழுதுகிறேன்.
நீங்கள் "..ஃப்ரீடா தான் குறுக்குவழியில் பிரபல்யமடைய வேண்டும் என்பதற்காகத் தனது உடலுறுப்புக்களைக் கொண்டு ஓவியம் வரைந்திருக்க மாட்டார்" என்று வாதத்திற்காக குறிப்பிடும்போது அப்படிச் சொல்வதன் அபத்தம் குறித்து எழுத விரும்புகிறேன். ஏனென்றால் ப்ரீடாவின் வாழ்விடமோ, காலப் பின்னணியோ, கலை குறித்த 'அத்தகைய' விமர்சனங்களைக்கொண்டிருந்ததல்ல. அது ஒரு புரட்சிகரமாக காலகட்டம் என்பதோடு மெக்சிக்கரின் கலாச்சாரப் பின்னணிக்கும் நமதிற்கும் பல வித்தியாசங்கள் உள்ளன.
ப்ரீடாவின் ஓவியங்கள் மீது 'இவள் குறுக்குவழியில் பிரபலமடைய பாலுறுப்புகளை கீறுகிறாள்' என்று அங்கு மக்கள் சொல்லியிருப்பார்களென்ற பேச்சுக்கே இடமில்லை. அந்தக் காலத்தில் -அங்கே- அவளது ஓவியத்தின் நிர்வாணம் அல்லது உறுப்புகள் ஒரு பொருட்டே அல்ல. அங்கே, அது 'ஆயுதமும்' அல்ல. எம்மிடையேபோல நவீன ஓவியங்களிற்கும் (ப்ரீடாவின் சர்லியரிஸ ஓவியங்கள்) மக்களிற்கும் இடையே 'இடைவெளியும்' இருந்ததில்லை.
பிரைடாவின் ஓவியங்கள் தந்தது அடிப்படையில் அவளின் காயங்கள் பற்றியதே, அதிலிருந்து பெண்ணின் வாழ்வை (ஒரு புரட்சிகரமான பெண்ணின் வாழ்வை) தான் பார்க்கமுடிகிறது. ப்ரீடாவின் காலத்தில் உடம்பை இப்படி வரைவது ஒரு பொருட்டே இலலை என்கிறபோது உங்களது வாதம் 'அவர் அப்படி நினைத்திருக்க மாட்டார்' என்பது அர்த்தமில்லாமல் போகிறது. அத்தோடு ப்ரீடா பற்றிய மேற்குலக பார்வையோ மான்ட்ரீஸர் சொன்ன காரணங்களிற்காக (முக்கியமான அவளது பாலியல் உறவுகள், லெஸ்பியன் இன்ன பிற)வே 'கவர்ச்சி'கரமாக இருக்கின்றன. அவளைப்பற்றிய திரைப்படத்தைக்கூட அத்தகைய மேற்குலகப் பார்வையின் நீட்சியாகவே என்னால் பார்க்கமுடிகிறது.

நாங்கள் ஒரு கேள்வி எழுப்பகிறபோது எங்களையும் மற்றவர்கள் கேள்விக்கட்படுத்தலாம் என்பது என் கருத்து.
உதாரணத்திற்கு, உங்களது தளத்திலேயே 'கொறில்லா' பற்றிய உங்களது 'வாசிப்புப் பகிர்வில்' அதைப் படிக்க ஆரம்பித்தபோது, ஒரு இளைஞனின் அகதிக்கோரிக்கை என்ற விடயம் உங்களுக்கு 'கவர்ச்சியற்று'ப்போனதாக எழுதியுள்ளீர்கள். (இதைக் குறித்து எனக்கு ஒரு பிரச்சினையுமில்லை, அது உங்கள் இஸ்டம்!)
ஆனால்!
இதே 'கவர்ச்சியின்மை' +carelessness ஆண்களிடத்தில் பெண்கள் வாழ்க்கை இத்தியாதி குறித்து இருக்கிறதென்றால் அதில் முரண்கொள்ள என்ன இருக்கிறது?! சக மனிதரின் துயரத்தைப் படிக்க எமக்கும்தான் 'கவர்ச்சி' தேவைப்படுகிறதே! அத்தோடுமில்லாமல் அந்தப் புத்தகத்தில் 'பொய்த்திரிபுகள்' இருக்குமானால் அதை 'முற்றுமுழுதாக' நிராகரிக்க வேறு சொல்லுகிறீர்கள்!
(இதையே ஒருவர் ஜெயமோகன் பற்றி எழுதினால் 'பிடிக்காவிட்டால் ஏன் படிக்கிறீர்கள்' என்று கேட்பார்களே!)

அத்துடன், 'கனவு மெய்ப்படவேண்டும்' என்கிற படம் பற்றிய உங்கள் 'பார்வைப் பதிவில்' "மங்களபுரத்தின் அழகும் தேவதாசிகளின் அழகையும் கமெரா கச்சிதமாகப் படம் பிடித்திருக்கிறது."
என்பதில் வருகிற 'தேவதாசிகளின் அழகு' (அழகியல் உணர்வு!) என்பதன் தட்டையான ஒரு பதிவில் -ஆணோ பெண்ணோ யாருக்கும்- முரண்பாடு வரலாம்!

இப்படி உங்களிடத்திலையே முரண்பாடாக விவாதிக்க நிறைய இருக்கிறபோது, மான்ட்ரீஸர் இன் ஒரு 'நிச்சயமற்ற கேள்விக்கு' உங்களுக்கு தெரிந்த உண்மையை முன்வைத்து 'விளக்குவதில்' என்ன பிரச்சினை இருக்கிறது என்பது புரியவில்லை.
அப்புறம் ப்ரீடாவை நீங்கள் முன்வைக்கிற விதத்தையும் ஒரு விவாதத்திற்கான உபயோகிப்பாவே பார்க்கிறேன். அது மிகவும் அபத்தம்!

ஈழநாதன்(Eelanathan) said...

பெண் தனக்குத் தோன்றியதையெல்லாம் பேசலாம் எழுதலாம்.அது அவளது பாலியல் உறுப்புகளாகவோ இன்னொரு ஆணின் பாலியல் உறுப்புகளாகவோ இருக்கலாம் அது அவளது சுதந்திரம்.ஆனால் பெண்விடுதலை என்று வருமிடத்து அந்த விடுதலையை ஆன்மையை அழித்துத் தான் பெறவேண்டுமென்று நீங்கள் நினைக்கின்ற பொழுது நீங்கள் மாலனிடம் கேட்ட'பெண்களை ஆண்கள் ஏன் சரிசமமாக ஏற்றுக்கொள்ளவேண்டும் ஏற்றுக்கொள்வதற்கு அவர்கள் யார்?' என்ற உங்கள் வாதம் அடிபட்டுப் போகின்றது.

உடல் குறித்துப் பேசும் மொழிகள் மூலம் இதுவரைகாலமும் ஆண் செய்துவந்ததை இப்போது நாங்களும் செய்கிறோம் என்று நிரூபிக்கவே முடியும் அதன் மூலம் காலம்காலமாக இன்னோரன்ன விடயங்களைப் பேசுவதற்கு பெண்ணுக்கிருந்த தடையை மீற முடியுமாயினும் கடைசியில் போய் ஆண் செய்ததை நாமும் செய்வோம் என்று முட்டிக்கொள்கிறீர்கள்.இங்கே பெண்விடுதலை என்பது ஆணின் அடக்குமுறைகளிலிருந்து விட்டு விடுதலையாதல் என்பதுபோய் ஆணைப் பின்பற்றல் என்றாகிவிடுகின்றது.

பெண்ணின் உடல் உறுப்புகளை ஒரு பெண்ணே வர்ணிப்பதன் மூலமோ அல்லது தனது பாலியல் உறவுகளை பெண்ணே விபரிப்பதன் மூலமோ ஆண்களிடம் மாற்றத்தை அல்லது விழிப்புணர்ச்சியை ஏற்படுத்த முடியும் என்று நீங்கள் நினைக்கின்றீர்கள்.நான் பழகும் சூழலை வைத்து நான் புரிந்துகொண்டது அது முடியாது என்பதே.சுகிர்தராணியின் கவிதைப் புத்தகத்தை விழுந்து விழுந்து படிக்கும் நண்பன் எதை எதிர்பார்க்கிறான் என்பதை நான் சொல்வேன் அதற்கு நீங்கள் சராசரி ஆண் புத்தி அல்லது ஆண்களே இப்படித்தான் என்று சொல்வீர்கள்.

பொதுவாகச் சொன்னால் பறத்தல் அதன் சுதந்திரம் என்கின்ற பெண் மொழி தொகுப்பின் பெயரைப் போன்றதுதான் பெண்ணுரிமை.பேச எழுத எதற்கும் பெண்ணுக்குச் சுதந்திரமுண்டு.அதை ஏற்றுக்கொள்வதற்கு ஆண் யார்? அச்சுதந்திரத்தைப் பெறுவதற்கு தன்னுடல்மொழியை ஆயுதமாக்குவதென்பது அபத்தம்.

ROSAVASANTH said...

//ரோசாவசந்த – ஜாகா வாங்கி விட்டீர்கள்.(shame on you)//

இப்போதுதான் பார்தேன்! நான் கருத்து சொல்ல 'பயந்து' போய் எங்கேயும் ஜகா வாங்கியது கிடையாது. ஒருவிவாதத்தில் கலந்து கொள்வது உசிதமானதா என்பதை, விவாதிக்கபடும் விஷயம், அதன் தன்மை, விவாதிதிக்கும் நபர்கள், விவாதிக்கும் முறை, இன்னும் எனக்கிருக்கும் நேரம் போன்ற சொந்த காரணங்கள் கொண்டு நான்தான் முடிவு செய்யமுடியும். அதுவும் கலந்துகொண்டு இன்னும் கருத்தே சொல்லாத விவாதத்தில் ஜகா வாங்குவதில் வெட்கப்பட என்ன இருக்கிறது?

இங்கே நான் தெரிவித்த கருத்துக்கள் உங்களுக்கு *சார்பானவை* என்பது கூட புரியாத நிலையிலா சிந்திக்கிறீர்கள்?

நான் மாண்ட்ரீஸருடன் முரண்படுகிறேன். அதாவது 'masculinisation of femininity ' என்று சொல்லும்போது.

பெண்ணியம் ஆண்மைத்தன்மை அடைவதை அவர் விமர்சிப்பதை அல்ல. அவ்வாறு எடுத்துகொள்ள முடியுமா என்பதை பற்றியே! அதனாலேயே அவரை இன்னும் கொஞ்சம் விளக்கும்படி கேட்டிருந்தேன். நான் விரும்பியதற்கான விளக்கத்தை அவர் தரவில்லை. நடுவில் மாலன் வேறு வந்து கலங்கடித்திருக்கிறார். இடையில் பேசுவது அலுப்பானது. மாண்ட்ரீஸருடன் பொடிச்சியுடன் விவாதிக்கும் நோக்கம் உள்ளது, அது எனக்கு (அவர்களுக்கும்) விரிவாக செலவழிக்க நேரம் இருக்கும் ஒரு கட்டத்தில், விவாதத்தை தொடங்க உத்தேசம் உள்ளது. அதானால் ஜகா வாங்கினேன். வாங்குகிறேன்.

கறுப்பி said...

Podichi - No comments for you

கறுப்பி said...

ரோசாவசந்த் - தங்கள் கருத்துக்களில், தங்கள் தளத்தில் எனக்கு நிறையவே ஆர்வம் இருக்கின்றது. – தாங்கள் நிச்சயமாக வெக்கப்பட்டு ஜாகா வாங்குவதாக நான் எண்ணவில்லை – எனது பதில் ஒரு நகைச்சுiவாயக மட்டுமே தரப்பட்டது. தவறு இருந்தால் மன்னிக்கவும். வேறு எந்த உள்நோக்கமும் எனக்கு இல்லை. பகிடியாக (ஜோக்காகத்) தரப்படும் எழுத்துப் பதிவு நான் உச்சரித்த விதமும் தாங்கள் உச்சரித்த விதத்திலும் மாறுபட்டுப் போயிருக்கலாம். அதை நான் சிந்திக்கவில்லை. மீண்டும் மன்னிப்புக் கேட்டுக் கொள்கின்றேன்.

மாலன் said...

>>உண்மையாகக் கேட்கிறேன் பெண் சிந்திக்கத் தெரிந்தவள் என்று யார் ஏற்றுக் கொள்ள வேண்டும்? அதுவும் ஆண்களுக்கு நிகராக.. ஏன்? ஆண்களா?<<

ஆணுக்கு நிகராகப் பெண்ணுக்கும் சிந்திக்க இயலும் என்ற கருத்தாக்கத்தை சமூகம் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்கிறேன்.இப்போது அந்த நிலை இல்லை. நம்முடைய இலக்கியங்கள், பத்திர்கைப் பதிவுகள், திரைப்படங்கள் இவற்றிலிருந்து பல சான்றுகளைக் காட்ட முடியும். ஒரு பெண் ஒரு பன்னாட்டு நிறுவனத்தின் தலைமை அதிகாரியாகப் பொறுப்பேற்றால் அதை இன்றும் பத்திரிகைகள் அதிச்யம் போல் செய்தியாக வெளியிடுகின்றன. ஆண்கள் பதவி ஏற்கும் போது அந்த நிலை இல்லை என்பது ஒரு எளிய எடுத்துக்காட்டு.

சமூகம் என்பது யார்? அது ஆண்களும் பெண்களும் கொண்ட ஒரு கூட்டுத் தொகுதி. பெண்கள் தங்களைப் போல் சிந்திக்கும் ஆற்றல் பெற்றவர்கள் என்று ஆண்களும், ஆண்கள் சிந்திக்கும் ஆற்றல் கொண்டவர்கள் என்று பெண்களும் அது சமூக முன்னேற்றத்திற்கு உதவும். மகாகவி சொல்வது போல் "ஆணும் பெண்ணும் நிகரெனெக் கொள்வதால் அறிவிலோங்கி இவ் வையம் செழிக்குமாம்."
ஆண்கள் சிந்திக்கத் தெரிந்தவர்கள் என்பதை பெண்களிடம் எடுத்துச் சொல்லும் அவசியம் இன்று இல்லை. ஏனெனில் பெண்கள் காலங்காலமாக அந்த எண்ணம் ஊட்டப்பட்டே வளர்க்கப்பட்டு வந்திருக்கிறார்கள். ஆண்களிடம் சொல்ல வேண்டிய அவசியம் இருக்கிறது (இது குறைந்து கொண்டு வருகிறது)
அச்சில் வருவதால், survivalலின் பொருட்டு,காலச்சுவடும், உயிர்மையும் வணிக அணுகுமுறையைப் பின்பற்றுகிறார்கள் என்ற வாதம் சாரமற்றது. அவர்கள் விபசாரம் செய்வது சொகுசுக்காக அல்ல,வயிற்றுப் பிழைப்பிற்காக ன்பதைப் போன்ற வாதம் இது.அத்தோடு நல்ல வாசகர்களை நம்பாமல், எண்ணிகக்கையை, அது தரும் பொருளாதார வசதியை நம்பும் சிந்தனையை நிறுவும் முயற்சி.எனவே குமுதம் போன்ற வணிகப்பத்திரிகைகள் மீது நீங்கள் கொண்டிருக்கின்ற அதே விமர்சனப்பார்வையைத்தான் நீங்கள் இவர்கள் மீதும் கொள்ள வேண்டும்.

தமிழில் எத்தனையோ சிறுபத்திரிகைகள் இந்த வணிகத் தன்மையைத் தவிர்த்து வந்து கொண்டிருக்கின்றன. இந்த இரு பத்திரிகைகளும் வரமுடியும். அப்படி வரமுடியாத பட்சத்தில் அவர்கள் வலை உலகை அணுகலாம்.

பி.கு: என் முதல் பதிவு கைத் தவறுதலாக அழிக்கப்பட்டுவிட்டது. தயவு செய்து அதை மீண்டும் இடம் பெறச் செய்யுங்கள். பதிவிற்காக