Monday, February 21, 2005

“YOU2”

“உருப்படாததுகள்” தளத்தில் ஓரினச்சேர்க்கை பற்றிய நீண்ட விவாதத்தைக் கண்டேன். அது பின்னர் பாதை மாறி (இல்லாவிட்டால் இது பாதை மாறி) திருமணமானவர்கள் காதலிக்கலாமா? என்ற தலைப்பில் விவாதிக்கப்பட்டு தள உரிமையாளர் சலிப்படைந்தோ என்னவோ போதும் என்று விட்டார்.

இந்த ஓரினச்சேர்க்கை பற்றிய விவாதத்தைப் பார்த்த போது எனது அடுத்த குறுந்திரைப்படமான “YOU2” பற்றிச் சிறிது கூறலாம் என்று நினைக்கின்றேன். பல வருடங்களுக்கு முன்பு பாரிஸில் இருந்து வெளிவந்த “உயிர்நிழல்” எனும் சஞ்சிகைக்கு நான் எழுதிய “ஆதலினால் நாம்” எனும் சிறுகதையை தளமாகக் கொண்டு இந்த குறுந்திரைப்படத்தை எடுத்து வருகின்றேன். (பல மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன) பெண்கள் இங்கே எடுக்கப்படும் திரைப்படங்களில் நடித்து வந்தாலும் கொஞ்சம் வித்தியாசமான கதை எனும் போது நடிப்பதற்குத் தயங்குவது இந்தக் குறுந்திரைப்படத்தை நான் இயக்குவதற்கு மிகவும் தடையாக இருந்தது.

முடிவில் ஒரு பெண்ணிற்கு நானே நடிப்பதாய் முடிவெடுத்து அடுத்த பெண்ணைத் தேடிக் களைத்து கடைசியில் ஒருவரைக் கண்டு பிடித்து (திருமணமாகாதவர்) எடுக்கத் தொடங்கிய போது (எனது நண்பி) அவர் சிறிது யோசிப்பது போல் இருந்தது. என் படைப்பு ஒன்றில் நடித்து அதனால் அவருக்கு ஏதாவது கெட்ட பெயர் வந்து விட்டால் என்று நான் படப்பிடிப்பை நிறுத்தி விட்டேன். பின்னர் என் இன்னுமொரு நண்பி (திருமணமானவர்) தானாக முன்வந்து நடிப்பதாகக் கூறியதால் தற்போது அக்குறுந்திரைப்படத்தை எடுத்து வருகின்றேன். இது தமிழ் ஆங்கிலம் இரண்டிலும் எடுக்கப்பட்டு கனேடிய குறுந்திரைப்பட விழாவிற்கும் கொடுக்கபட உள்ளது.


தற்போது கனடாவில் ஓரினச் சேர்க்கை என்பது Hot News ஆக இருப்பதால் இது பொருத்தமான காலம் என்றும் எனக்குப் படுகின்றது.
எமது மக்களால் இந்தக் கரு எவ்வளவு தூரம் வரவேற்கப்படுகின்றது என்பதை "You2" குறுந்திரைப்படம் வெளிவந்த பின்னர் அறிந்து கொள்ளலாம். (கல்லெறி கிடைக்காவிட்டால் போதும்)

4 comments:

Narain Rajagopalan said...

கறுப்பி, உருப்படாததின் உரிமையாளர் நான் தான் (இதுல என்ன பெருமை வேண்டிகிடக்கு ;-))"பலூன் பார்க்கும் பெண்கள்" என்ற தலைப்பில் நான் எழுதியதின் பின்னூட்ட நீட்சியாக ஒரின சேர்க்கையாளர்களைப் பற்றிய பேச்சு வந்தது. ஆனால், அந்த பதிவின் தலைப்பிலிருந்து சற்றே விலகியிருந்ததால், அதை தனிபதிவாக இடுகிறேன் என்ற உத்தரவாதத்துடன் நிறுத்திவிட்டேன். ஓரின சேர்க்கையாளர்களை ஆதரிப்பவன், தொடர்ந்து அவர்களின் உரிமைகளுக்காகவும், சமூக இருப்புக்காகவும் குரல் கொடுத்து வருபவன் என்ற முறையிலும் இதனை கூற கடமையுள்ளவனாகிறேன். சலிப்படையவில்லை, பதிவின் போக்கினை மாற்ற வேண்டாமே என்பதனால் தான் நிறுத்தினேன்.

உங்களின் படத்தினைப் பற்றி எழுதுங்கள். இந்தியாவில் (சத்தியமாக சென்சார் கிடைக்காது) பார்க்க இயலாவிட்டாலும், எங்களுக்காக, இணையத்தில் திரையிடுங்கள். கண்டிப்பாக காசு கொடுத்து பார்க்கிறோம் ;-)

கறுப்பி said...

நரேன் எம் (நிர்வாணா கிரியேஷனின்) தயாரிப்பில் வந்த இரண்டு குறுந்திரைப்படங்கள் தற்போது எமது இணையத்தளத்தி;ல் இடப்பட்டிருக்கின்றன. தாங்கள் பார்க்க முடியும். பணம் கொடுக்கத் தேவையில்லை

www.nirvanacreations.ca

Narain Rajagopalan said...

கண்டிப்பாக பார்க்கிறேன். குறும்பட்ங்கள், மாற்று திரைப்படங்களுக்கான ஒரு சந்தையினை உருவாக்கும் முயற்சியிலிருக்கிறேன். உங்களுக்கும் கண்டிப்பாக ஆர்வமிருக்கும் என்று நினைக்கிறேன். என்னைப் போல எப்பவாவது வெட்டியாயிருந்தால் ஒரு மின்னஞ்சல் அனுப்புங்கள். narain at gmail dot com

கறுப்பி said...

மன்னிக்க வேண்டும் வேலைத் தளத்தில் நேரம் கிடைக்கும் போது தட்டுவேன். வீட்டுக்குப் போனால் ஒரே பிஸி. திரைப்படங்கள் (நல்ல) பற்றிய எதுவானாலும் எனது ஒத்துழைப்பு நிச்சயம் உண்டு. அம்சன்குமாரின் “ஒருத்தி” பார்த்தீர்களா? விமர்சனங்களைப் பார்க்கும் போது ஆவலாக உள்ளது. ஆனால் இங்கே கிடைக்காது