Monday, May 30, 2005

புலம்பெயர் இலக்கிய வளர்ச்சி

தமிழ் இலக்கியத்தின் தாய் நாடு, தமிழ் சினிமாவைப் பிரசவித்தவள், தமிழ் இசையின் வேர் இப்படியாகத்தான் ஈழத்தமிழர் இந்தியத் தமிழ்நாட்டை அடையாளம் காணுகின்றார்கள். ஈழத்தமிழ் மக்களின் தாய் நாடும் இந்தியா எனும் போது அவர்களை ஈழத்தமிழர்கள் துதிப்பதில் தவறில்லை. இருப்பினும், இலங்கை எனும் சிறீலங்காவில் தமிழ்மொழி பேசும் மக்களின் உணவு, உடை, மொழி வழக்கு, கலாச்சாரப் பண்பாடுகள் இந்தியத் தமிழ் நாட்டு மக்களின் கலாச்சாரம் பண்பாட்டில் இருந்து (முற்றுமுழுதான இல்லாத போதும்) வேறுபட்டே இருக்கின்றன. ஈழத்தமிழருக்கென்றொரு தனித்தன்மை இருக்கின்றது. தமிழ்நாடு ஆதிக்க, பொருளாதார பலம் கூடடியதாக இருப்பதால் ஈழத்தமிழ்கள் அனேகமாக அடையாளம் காணப்படாமலேயே இருக்கின்றார்கள்.

80களின் பின்னர் உள்நாட்டுப் போராட்டத்தால் புலம்பெயர்ந்து பல நாடுகளில் குடியேறி விட்ட ஈழத்தமிழருக்கு போராட்டப் பின்புலம், பன்முகக் கலாச்சார அறிமுகம் போன்றவை தமிழ்நாட்டு எழுத்தாளர்களுக்குக் கிடைக்காத ஒரு புதிய இலக்கியத் தளமாக இருக்கின்றன. புதிய தளத்தில் இருந்து பல தரமான இலக்கியப் படைப்புக்கள் வரவும் தொடங்கி விட்டன. இருந்தும் கனேடிய ஆங்கிலச் சமுதாயம் எப்படி அமெரிக்கர்களின் அங்கீகாரத்திற்காக வாய் பிளந்து நிற்கின்றார்களோ? இல்லையேல் அடையாளம் காணப்படும் போது அமெரிக்கா நோக்கி ஓடிவிடும் தன்மை (பணம் புகழ் காரணமாக) கொண்டு வாழுகின்றார்களோ அதே வகையில்தான் பல தரமாக ஈழத்துப் படைப்பாளிகளும் தமது படைப்பிற்கான தமிழ்நாட்டு அங்கீகாரத்தை எதிர்பார்த்துக் காத்துக்கிடக்கின்றார்கள். அட ஈழத்து இலக்கியவாதிகளான சேரனையும், ஜெயபாலனையும், சோபாசக்தியையும், அ.முத்துலிங்கத்தையும் இனம் கண்டு பேசுகின்றார்கள் எங்களை இன்னும் காணவில்லையே என்ற ஆதங்கம் சிலருக்கு. தமிழ் இலக்கியத்தின் உச்சமாக தமிழ்நாடு இயங்குவதால் ஈழத்தமிழர்களின் இந்த ஆதங்கம் எதிர்பார்ப்பு மனித உணர்வுகளின் அடிப்படையில் நியாயமானதே. (என் படைப்புக்கள் இந்திய சஞ்சிகையில் வெளிவந்த போதும், சல்மா போன்ற பெண்ணிய எழுத்தாளர்கள் என்னுடன் எனது படைப்பு பற்றிக் கலந்துரையாடியபோதும் எனக்குள்ளும் இந்த ஆதங்கள் இருந்ததை நான் உணர்ந்திருக்கின்றேன்)
இருந்தும் தமிழ்நாட்டு இலக்கியவாதிகள் அவர்களுக்குள்ளான அரசியல் உளைச்சல்களால் புலம்பெயர்ந்த ஈழத்தமிழர்களின் இலக்கியத்தை அதிகம் அடையாளம் காணாமல் உதாசீனம் செய்கின்றார்கள். போராட்டத்தை பின்புலமாகக் கொண்டு எழுதப்படும் (சோபாசக்தி போன்றோரின்) படைப்புக்களை அடையாளம் காணும் அளவிற்கு புலம்பெயர்ந்த இலக்கியம் அடையாளம் காணப்படுவதில்லை. சேரனும், ஜெயபாலனும், அ.முத்துலிங்கமும் புலம்பெயர்ந்த இலக்கியவாதிகளாக அடையாளம் காணப்பட்டவர்கள் அல்ல அவர்கள் ஈழத்து இலக்கியவாதிகளாக அடையாளம் காணப்பட்டுப் பின்னர் புலம்பெயர்ந்த பின்னர் அந்த அடையாளம் தொடருகின்றது. புலம்பெயர் இலக்கியம் இந்திய இலக்கியத் தரத்திற்கு இல்லாமல் போயினும் தமிழ்நாட்டு இலக்கியவாதிகள் தவிர்க்கும் அளவிற்கு இவை தரமற்றவை அல்ல. ஈழத்து நாடகக் கலைஞராக பாலேந்திரா அவர்கள் இந்திராபார்த்தசாரதியின் பல நாடகங்களை மேடையேற்றியுள்ளார். இருந்தும் இந்திராபார்த்தசாரதி தான் எழுதிய (பெயர் மறந்து விட்டேன்) தனது நாடக மேடை ஏற்றம் பற்றிய தொகுப்பில் பாலேந்திரா அவர்களைக் குறிப்பிடவில்லை. இது வேண்டுமென்றான தவிர்ப்பாகவே படுகின்றது.
இந்நிலையில் புலம்பெயர்ந்த ஈழத்தமிழ் இலக்கியவாதிகள் எதற்காக தமிழ்நாட்டு இலக்கியவாதிகளின் அங்கீகாரத்திற்காக ஏங்க வேண்டும்? (ஒட்டு மொத்தமாக ஏங்குகின்றார்கள் என்று கூறவில்லை)
இதே வேளையில் புலம்பெயர்ந்த இலக்கியவாதிகளால் வெளியிடப்படும் சஞ்சிகைகள் தற்போது தமிழ்நாட்டு இலக்கியச் சஞ்சிகைகள் போல் மாறிவருகின்றன. உதாரணத்திற்கு “காலம்” எனும் கனடாவில் வெளிவரும் புலம்பெயர் இலக்கியச் சஞ்சிகை பல வருடங்களாக ஈழத்து இலக்கியவாதிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து ஒரு சிறந்த புலம்பெயர் சஞ்சிகையாக வெளிவந்து கொண்டிருந்தது. ஆனால் தற்போது ஜெயமோகனும், சுந்தரராமசாமியும் என்று ஒரு "காலச்சுவடு" போலோ "உயிர்மை" போலோ மாறிவிட்டிருக்கின்றது. "காலச்சுவடு", "உயிர்மை" போன்ற சஞ்சிகைகள் தமக்கான குறிப்பிட்ட எழுத்தாளர்களின் எழுத்தைத் தாங்கி திரும்பத்திரும்ப வெளி வந்து கொண்டிருக்கும் இந்த வேளையில் அதே எழுத்தாளர்களைக் கொண்டு "காலம்" சஞ்சிகையும் கனடாவில் இருந்து வெளிவருவது வருந்தத்தக்கதே. இதற்கு முக்கிய காரணம் பொருளாதாரப் பின்னணியே. யாரோ பெயர் தெரியாத ஒரு புலம்பெயர்ந்த எழுத்தாளரின் படைப்பிலும் பார்க்க சு.ராவின் பத்தியோ, சிறுகதையோ வந்திருக்கின்றது என்றால் அவை இலகுவில் விலை போய்விடும்.
எனவே புலம்பெயர் இலக்கியச் சஞ்சிகைகளைக் கூட தமிழ்நாட்டு இலக்கியத்தில் தங்கி இருக்கும் நிலையில்தான் இருக்கின்றன. புலம்பெயர் இலக்கியவாதிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து வெளிவந்து கொண்டிருந்த "உயிர்நிழல்", "எக்சில்" போன்ற சஞ்சிகைகள் பொருளாதாரப் பிரச்சனையால் நிறுத்தப்பட்டுவிட்ட நிலையில் "காலம்" சஞ்சிகையின் ஆசிரியர் மேல் கோபம் கொள்வதில் நியாயம் இல்லை. நிறுத்தப்படுவதிலும் பார்க்க இந்திய எழுத்தாளர்களைத் தாங்கி ஒரு சஞ்சிகை வருகின்றது என்று எண்ணிவிட்டுப் போய் விடுவோம்.
புலம்பெயர் இலக்கியத்தைத் தாங்கி ஒரு சஞ்சிகை வெளிவராத பட்சத்தில் புலம்பெயர் இலக்கியம் வளர்ச்சியடையாமல் போய் விடும் அபாயம் உள்ளது. இருந்தும் இணைத்தளங்களின் செயல்பாடு சிறிது நம்பிக்கையைக் கொடுப்பதாகவே உள்ளது. சஞ்சிகைகளில் வெளிவரும் படைப்புக்களுக்கான கருத்துக்கள் அனேகம் வாசகர்களைச் சென்றடைவதில்லை. ஆனால் இணையத்தளங்களில் ஆசிரியரின் மின்அஞ்சல் இணைக்கப்படும் பட்சத்தில் உலகெங்குமிருந்து படைப்புகள் பற்றி விமர்சனங்கள் உடனுக்குடன் எழுத்தாளருக்கு மின்அஞ்சல் மூலம் வந்து சேருகின்றன. இது புதிய இலக்கியவாதிகளுக்கு ஊக்கம் அளிப்பதாகவே உள்ளது.

புலம்பெயர் ஈழத்து இலக்கியவாதிகள் இனிமேல் செய்யவேண்டியது தமிழ் நாட்டு இலக்கியவாதிகளைக் கணக்கில் எடுக்காமல் தரமான தமிழ் இலக்கியங்கள், மொழிபெயர்ப்பு இலக்கியங்கள் போன்றவற்றைப் படித்து இலக்கியத்திறனை பெருக்கும் அதே வேளை தமது படைப்புக்களை இணையத்தளங்கள் மூலமேனும் தந்துகொண்டிருத்தல் வேண்டும். ஈழத்தில் இருக்கும் போது தமிழ்நாட்டு அங்கீகாரத்தை எம்மவர்கள் எதிர்பார்த்திருக்கலாம் ஆனால் தற்போது இந்தியாவை விட எல்லாவற்றிலும் உயர்ந்த நிலையில் இருக்கும் நாட்டில் நாம் வசிக்கின்றோம். இங்கே கிடைக்கும் சேவைகளை துர்பிரயோகம் செய்யாது உபயோகப்படுத்தின் நல்ல ஒரு இலக்கியத்தளத்தை ஈழத்தமிழரால் உருவாக்க முடியும். ஈழத்தமிழரான சியாம் செல்லத்துரை போன்று பல நல்ல படைப்பாளிளை நாம் உலகிற்கு அறிமுகப்படுத்தலாம்.

30 comments:

Jayaprakash Sampath said...

கறுப்பி : இக்கரைக்கு அக்கரைப் பச்சை என்று தான் தோன்றுகிறது. ஈழத்தமிழ் இலக்கியம் / இந்தியத் தமிழ் இலக்கியம் என்று இருபிரிவுகள் அமைந்து விட்டது இயற்கையான விஷயம் தான். ஈழத்தமிழ் இலக்கியம், இந்தியத் தமிழ் இலக்கியவியாதிகளிடம் அங்கீகாரம் வேண்டி நின்றதற்கு, புகழ், வீச்சு, பொருளாதாரம் ஆகியவை மட்டுமே-இலக்கியத் திறம் அல்ல-காரணமாக இருந்திருக்கும் என்று நினைக்கிறேன். இந்தியத் தமிழ் இலக்கிய விமர்சகர்கள், ஈழத்தமிழ் இலக்கியங்களை பற்றி ஒரு வார்த்தை கூட சொன்னதில்லை என்று சொல்லிவிட முடியாது. இல்லை என்றால், நான் அவர்களை அறிந்திருக்க மாட்டேனே. முறையாக, தகுந்த அளவுக்குச் சொல்லவில்லை என்று வேண்டுமானால் சொல்லலாம். இன்னும் சொல்லப் போனால், தமிழ் எழுத்தாளர்கள் பலரையும் விடவும், ஈழத்தமிழ் எழுத்தாளர்கள் வாசிக்க உகந்தவர்களாக எனக்கு இருந்திருக்கிறார்கள்.

கறுப்பி said...

பிரித்துப் பார்ப்பதென்றில்லை icarus, அத்தோடு ஈழத்தமிழ் இலக்கியத்தில் பல இலக்கியவாதிகள் அடையாளம் காணப்பட்டிருக்கின்றார்கள். கவிஞர்களாக சேரன், சோலைக்கிளி, ஜெயபாலன், இன்னும் நாவல்கள் இலக்கியக் கட்டுரைகள் என்று எஸ்.போ, மு.பொ, தளையசிங்கம் ,சிவத்தம்பி, கைலாசபதி சொல்லிக் கொண்டே போகலாம். நான் குறிப்பிட்டது புலம்பெயர்ந்து அந்தத் தளத்தில் இலக்கியம் படைப்பவர்களை. போராட்டப் பின்னணியும், புலம்பெயர்ந்த ச+ழலும் புலம்பெயர் ஈழமக்களுக்கு நல்ல ஒரு தளத்தை அமைத்துக் கொடுத்திருக்கின்றது. இது இந்தியர்களிடம் இல்லாத புதிய தளம். இங்கிருந்து நிச்சயமாக நல்ல படைப்புக்கள் வர வேண்டும். அதற்கு புலம்பெயர்ந்து வாழும் இலக்கிய ஆவலர்கள் முயற்சி எடுக்க வேண்டும் என்பதே என் அவா. அப்போதுதான் புலம்பெயர் இலக்கியம் வளரும்

Choochu said...

புலம் பெயர்ந்த எழுத்தாளர்கள் இன்னும் ஏன் தமிழில் எழுதிக்கொண்டிருக்கிறார்கள் என்று தெரியவில்லை. ப்ரெஞ்ச், ஆங்கிலம், ஜெர்மன் என்று எழுதப்போகவேண்டியதுதானே. அவர்கள் பிள்ளைகளுக்கு தமிழில் எழுதவோ வாசிக்கவோ தெரியாது. தெரிந்தாலும் அலட்டிக்கொள்ளப்போவதில்லை. இந்த ஒரு தலைமுறைதான் இப்படி புலம் பெயர்ந்த எழுத்தாளருக்கு அங்கீகாரம் கொடு என்று நச்சரித்துக்கொண்டிருக்கும். அடுத்த தலைமுறை தென்னாப்பிரிக்காவின் தமிழர்கள் மாதிரி ஜாதிப்பெயர் மட்டுமே தமிழில் வைத்துக்கொண்டு எங்கோ முன்னேறிக்கொண்டிருக்கும். தமிழ்நாட்டுக்குள் தான் தமிழில் ஏதேனும் நடக்கும். ஈழத்தில் இருக்கும் சூழ்நிலையில் வாயைத்திறந்து பேசக்கூட முடியாது. அப்புறம் எங்கே எழுதுவது? ஆகவே மிச்சம் ஒரு தலைமுறை புலம் பெயர்ந்து உட்கார்ந்து கொண்டு என்னை கவனி என்று கேட்கும். அதுவும் காணாமல் போனதும் தமிழ்நாட்டில் மட்டும் தமிழ் இலக்கியம் தொடர்ந்து வாழும்.. அதுவரைக்கும் இந்த நச்சரிப்பைத் தாங்கிக்கொள்ளத்தான் வேண்டும்

கறுப்பி said...

அங்கீகாரம் யாருக்கு யார் கொடுப்பது. சியாம் செல்லத்துரை போல் வேற்று மொழியில் ஈழத்தைத் தளமாக வைத்து எழுதும் நாவல்கள் வரத்தான் செய்யும். ஆனால் தற்போது புலம்பெயர்ந்து வாழும் ஈழத்தமிழரின் இலக்கிய எழுத்தைப் பதிய இணைத்தளங்களைத் தவிர வேறு ஒரு இடம் இல்லாமல் இருக்கின்றது. ஈழத்து இலக்கியவாதிகள் கூட இந்திய எழுத்தாளர்களின் படைப்புக்களைத் தான் பிரசுரிக்கின்றார்கள். ஒரு நல்ல சஞ்சிகை புலம்பெயர் இலக்கியத்திற்குத் தேவை என்பதே என் கருத்து. எனக்கு நேரம் இருந்தால் புலம்பெயர் இலக்கியவாதிகளிடம் படைப்புக்களைச் சேமித்து ஒன்று வெளியிட்டு விடுவேன். ஆனால் எனக்கு அதற்காக நேரம் இல்லாமல் இருக்கின்றது. வெளியிடுபவர்கள் அதனைச் செய்யலாமே என்றுதான் சொல்கின்றேன்.

-/பெயரிலி. said...
This comment has been removed by a blog administrator.
கொழுவி said...

நல்ல பதிவு. அவசரியமானதுங்கூட.

//ஈழத்தமிழ் மக்களின் தாய் நாடும் இந்தியா எனும் போது //

இதற்கு என்ன அர்த்தம்?
ஈழத்தமிழர்கள் தமிழகத்திலிருந்து சென்றுகுடியேறியவர்களே என்று இணையத்தில் கருத்து எழுதப்பட்ட நேரத்தில் இதை எழுதியிருக்கிறீர்கள். நீங்களும் அக்கருத்தைக் கொண்டிருப்பவரா?

குறிப்பிட்ட ஈழத்தவர் சிலர் அடையாளங்காணப்படுவதற்கு அரசியற்காரணிகளுண்டு. காசியானந்தனை நெடுமாறன் ஐயாவும் அவர்சார்ந்தவர்களும் ஆதரிப்பதும் போசிப்பதும் போலவே சோபாசக்தியும் இன்ன பிற சிலரும். ஈழத்து இலக்கியமோ ஈழப்பின்னணியைக் கொண்ட புலம்பெயர்இலக்கியமோ இனப்பிரச்சினை அரசியல் சார்ந்தே இருக்கவேண்டுமென்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுவிட்டது. ஆகவே ஆதரவும் எதிர்ப்பும் அந்த அரசியலைப்பொறுத்தே கிடைக்கும்.
(புலிகளால் தடை செய்யப்பட்டது என்ற மகுட வாக்கியத்தோடு உங்கள் புத்தகத்தை விற்றுப் பாருங்கள்)

தரமான ஒரு புலம்பெயர்இலக்கியச் சஞ்சிகை உருவாக ஆசிகள்.

Sri Rangan said...

கருப்பி,கவலைப்பட என்னயிருக்கு?மொளனித்துக்கொண்டிருக்கும் மக்கள் குரலை வார்த்தையிற் சொல்லும் கலையை புதுவை இரத்தினதுரை வியாசகன் எனும் பெயரில் எழுதியபோது அந்தக் கதை அற்புதமாக வந்தது.எங்கட வானமும் கட்டாக்காலி எருமைகளும் என்பது அந்தக் கதையின் பெயர்.இதே பாணியில் சோபா சக்தி இன்னொரு வகையிற் பேசும்போது,அது 'ம்' மாகி உலகத்தின் மூலை முடுக்கெல்லாம் பரவுகிறது.அக்கதையை பிரஞ்சிலும் வெளியிட பிரஞ்சிய மொழிமாற்று இடம்பெறுவதாகக் கதை...
உங்கள் ஆதங்கம் நியாயமானது.

Muthu said...

கறுப்பி,
இது தொடர்பாய் எனது கருத்துக்கள் சில. இலக்கியம் எழுதப்படுவதன் நோக்கம் என்ன?. இங்கே புலம்பெயர் தமிழிலக்கியம் என்பதாய்க் கொண்டால் அதன் முக்கிய நோக்கம் புலம்பெயர்ந்து வாழும் ஈழத்தமிழர்களுக்கு மட்டுமானது என்று நினைத்தால் முழுவதும் தமிழ்நாட்டை தவிர்த்துவிடலாம். புலம் பெயர்ந்த மொத்த மக்களின் எண்ணிக்கையைப் போல் நூற்றுக்கணக்கான மடங்கு தமிழர்கள் வாழும் இடம் என்பதாய் தமிழ்நாட்டை நினைத்தால் அதன் பங்கும் பெரியதாகவே இருக்கும்/இருக்கவேண்டும். எழுதப்படுபவை நிறையத் தமிழர்களை எட்ட வேண்டுமென்று நினைத்தால் தமிழ்நாட்டைத் தவிர்ப்பது இயலாததுதானே?.

Muthu said...

////ஈழத்தில் இருக்கும் போது தமிழ்நாட்டு அங்கீகாரத்தை எம்மவர்கள் எதிர்பார்த்திருக்கலாம் ஆனால் தற்போது இந்தியாவை விட எல்லாவற்றிலும் உயர்ந்த நிலையில் இருக்கும் நாட்டில் நாம் வசிக்கின்றோம்.///

கறுப்பி,
வசதி இரண்டாம்பட்சம்தான். முதலில் தமிழிலக்கியம் படிக்கும் ஆர்வமுள்ளோரின் எண்ணிக்கைதான் முக்கியம், அதுதான் ஆதாரமே. இல்லையென்றால் மலைக்குகையில் நகைக்கடை வைத்த கதையாய்த்தான் இருக்கும். நகைக்கடை வைக்கப் பணம் மட்டும் இருந்தால் போதும், எங்கும் ஆரம்பிக்கலாம். ஆனால் கடைவைப்பதுமட்டுமே பிரச்சினை என்பதாய் இல்லை.

பிரச்சினை புலம்பெயர்ந்த இடத்தில் தமிழ் இலக்கியத்தை வளர்ப்பது மட்டும் என்பதாய் நான் நினைக்கவில்லை. அடுத்த தலைமுறைக்குத் தமிழை எடுத்துச் செல்வதே பெரிய சவாலாய் இருக்குமோ என்று பெரும்பாலோர் கவலைப்படுகிறார்கள்.

சின்னதாய்ச் சதவீதக் கணக்கைப் பார்த்தாலே புரியும். புலம் பெயர்ந்த தமிழ் பேசும் மக்களில் அவ்வாறு தொடர்ந்து தமிழைப் பேச வேண்டும் என்று நினைப்பவர்களின் சதவீதம் என்ன?. அவ்வாறு நினைக்கும் மக்களில் தமிழில் எழுத ஆர்வ கொண்டோரின் சதவீதம், ஆர்வம் கொண்டோரில் எழுதும் அளவுக்குத் தமிழைப் பயின்றோரின் சதவீதம், அவர்களில் எழுதும் வாய்ப்பும் வசதியும் வாய்க்கப்பட்டோரின் சதவீதம், எழுதிக்கொண்டிருப்போரின் சதவீதம் என்று கணக்கிட்டால் கிணற்றில் போட்ட கல்லைப்போல் சதவீதம் வேகமாய்க் மங்கிக்கொண்டே வந்து எங்கே நிற்கும் என்றே சரியாய்த் தெரியவில்லை.

நல்லதே நடக்குமென நம்புவோம்.

கறுப்பி said...

ஈழத்து வரலாறு அப்படித்தானே சொல்கிறது. விளக்கமாக இன்னுமொருநாள் ஒரு பதிவில் போடுகின்றேன்.

சிறீரங்கன் நன்றி. புலம்பெயர் இலக்கியத்தைத் தாங்கி வருவதற்கு ஒரு தரமான சஞ்சிகை ஒன்று தொடர்ந்து வரவேண்டும் என்பதுதான் என் ஆதங்கம். வேறு ஒன்றுமில்லை.

முத்து – நான் வசதிகள் என்று கூறியது பணத்தை மட்டுமல்ல. மின்கணனி வசதியில் இருந்து உலக இலக்கியங்கள் அனைத்தையும் நாங்கள் வசிக்கும் இடங்களிலேயே பெற்றுக் கொள்ளக் கூடியதாக உள்ளது. இந்த வசதிகள் ஈழத்தில் அதிகம் இல்லை. நிச்சயமாக இலக்கியத்தில் ஆர்வம் இருந்தால்தான் நல்ல இலக்கியம் வரும்.
கனடாவில் வசிக்கும் சிலர் இந்திய சஞ்சிகைகளில் தமது படைப்பு வரவேண்டும் என்பதற்காக இந்தியத் தமிழில் இந்தியாவில் நடப்பது போன்ற சிறுகதைகளை எழுதும் கிறுக்குத்தனம் இங்கே நடக்கின்றது.

ஈழநாதன்(Eelanathan) said...

கறுப்பி ஈழத்தவர்களுக்கு இந்தியாதான் தாய்நாடு என்று நீங்கள் எந்த ஈழத்து வரலாற்று நூலில் படித்தீர்கள் என்றறிய ஆவலாக உள்ளேன்.
புலம்பெயர் இலக்கியப் படைப்புகளை மட்டும் தாங்கி(தமிழகப் பெருநிலப்பரைப்பை தவிர்த்த)காத்திரமான தொகுப்புகள் வந்திருக்கின்றன.அவற்றிற்கான வரவேற்பு குறைவுதான் என்ற உண்மையை ஒத்துக்கொள்ளவேண்டும் அதனால் உங்களின் சில கூற்றுகளோடு உடன்படமுடியும்.

நீங்கள் புலம்பெயர் சஞ்சிகை ஒன்றை உருவாக்க நினைப்பது பாராட்டுதற்குரியது அதற்கு முன்னர் உங்களுக்குத் தெரிந்த புலம்பெயர் படைப்பாளிகளை எங்களுக்கும் அறிமுகஞ் செய்யலாமே.எனக்கென்றால் நீங்கள் கூட சேரன்,ஜெயபாலன்,முத்துலிங்கம்,சோபாசக்தி என்று ஒரே ஒரு வட்டம்தான் வரைவீர்கள் என்று தோன்றுகின்றது.அதற்கு ஒரே ஒரு மையம்தான்.

உங்கள் படைப்புகளை தமிழகச் சஞ்சிகையில் போடும்போது உங்களுக்கு குற்ற உணர்ச்சி எழுதந்ததாகக் குறிப்பிடுகிறீர்கள் அது தப்பித்துக்கொள்வதற்கான வரியாகத் தான் தொன்றுகின்றது.இதனை கேலிக்காகச் சொல்லவில்லை.இந்தியாவைத் திட்டும் எஸ்போ கூட அங்கேதானே சரணம்.
சும்மா திட்டுவதில் பிரயோசனமில்லை வெளிக்காட்டிக்கொள்ள ஏதாவது செய்யலாமே என்று யோசிப்போம்.

இந்தியாவுக்குள்ளேதான் இனிவரும் காலங்களில் தமிழும் இலக்கியமும் வளரும் என்று சொல்கிற அனாமதேயத்துக்கு.
உங்கடை பகிடி நல்ல பகிடி பாருங்கோ.சிரி சிரியெண்டு சிரிச்சன்

கறுப்பி said...

ஈழநாதன் தாங்கள் தவறாக விளங்கிக் கொண்டுள்ளீர்கள். நான் சேரன், ஜெயபாலன், முத்துலிங்கம், சோபாசக்தி போன்றோரை மட்டும்தான் இந்திய இலக்கியவாதிகள் ஈழத்து இலக்கியவாதிகள் என்ற பட்டியலில் சேர்த்துக் கொள்ளுகின்றார்கள். இவர்களில் சோபாசக்தியைத் தவிர மற்றைவர்கள் ஈழத்தில் இருக்கும் போதே இந்தியர்களால் அடையாளம் காணப்பட்டிருக்கின்றார்கள். அதனை இப்போதும் தொடருகின்றார்கள் என்றே நான் கூறினேன். புலம்பெயர்ந்தபின்னர் அத்தளத்தில் இருந்து எழுதுபவர்களின் படைப்பை வெளிக்கொணர ஒரு சஞ்சிகை தேவை என்றே கூறினேன். நான் கொண்டு வரும் எண்ணம் எனக்கில்லை. வெளிவரும் சஞ்சிகைகள் (காலம் போன்றவை) இந்திய எழுத்தாளர்களில் தங்காமல் இருக்க வேண்டும் என்று விரும்புகின்றேன்.

//உங்கள் படைப்புகளை தமிழகச் சஞ்சிகையில் போடும்போது உங்களுக்கு குற்ற உணர்ச்சி எழுதந்ததாகக் குறிப்பிடுகிறீர்கள்\\

நான் இப்படிக் கூறவில்லை. அவசரத்தில் படித்தீர்களா? நானும் இந்தியச் சஞ்சிகைகளில் (காலச்சுவடு உயிர்மை) எனது படைப்பு வரும் போது பெருமைப்பட்டேன். சல்மா எனது கதையைப் பற்றி விமர்சிக்கையில் சந்தோஷமாக இருந்தது. அப்படித்தான் எழுதியிருந்தேன்.

//புலம்பெயர் இலக்கியப் படைப்புகளை மட்டும் தாங்கி(தமிழகப் பெருநிலப்பரைப்பை தவிர்த்த)காத்திரமான தொகுப்புகள் வந்திருக்கின்றன\\

இது எதுவோ?

சயந்தன் said...
This comment has been removed by a blog administrator.
ஈழநாதன்(Eelanathan) said...

ஆக நீங்கள் சுகன்/சோபா சக்தியின் இருள்வெளி.பத்மநாப ஐயரின் முயற்சியில் வெளிவந்த ஐந்து தொகுப்புகள்,எஸ்பொ தொகுத்த பனியும் பனையும் இன்னும் பெண்கள் சந்திப்பு மலர்கள் போன்ற எதையும் படிக்காமலேயே இதனை எழுதியிருப்பது புரிகிறது.

மன்னிக்கவும் கறுப்பி அக்கா நீங்கள் ஆதங்கங்கள் என்றதை குற்ற உணர்ச்சி என்று விளங்கிவிட்டேன்.
நீங்கள் சொல்ல வந்த கருத்தின் அடிநாதமாக இருக்கும் ஈழத்து/புலம்பெயர் படைப்புகள் இந்தியாவைச் சாராது வெளிவரவேண்டும் என்ற கருத்தினைப் புரிந்துகொண்டேன்கூடவே தமிழக இலக்கியவாதிகளின் புறக்கணிப்பு பற்றியும் குறிப்பிட்டுள்ளீர்கள்.அதனை வெளிப்படுத்தியதற்கு நன்றி.

நான் கூறியது நீங்கள் சஞ்சிகை கொண்டுவரவேண்டுமென்பதல்ல இருக்கும் சஞ்சிகைகள் இந்தியாவைச் சாராதிருக்க நாங்கள் வணிக ரீதியான உதவிகளை வழங்கலாம்.நீங்கள் சொல்லும் இணையத் தளங்களை மற்றவர்களுக்கும் அறிமுகப்படுத்தும் வகையில் உங்கள் பதிவில் இடலாம்.உதாரணமாக அப்பால்தமிழ் தளத்தில் எவ்வளவு நல்ல விடயங்கள் பெரும்பாலும் புலம்பெயர் தமிழர்களுடைய ஆக்கங்கள் வருகின்றன அவற்றை விமர்சிக்கலாம்.

இவற்றையெல்லாம் நீங்களும் செய்தால் என்னவென்றுதான் கேட்டேன்.

ஜெ. ராம்கி said...

இணையம் வந்தபின்னரும் ஈழத்தமிழ், தமிழ்நாட்டு தமிழ் என்றெல்லாம் பிரித்துப்பார்க்கும் முயற்சியை தடுப்பதுதான் நம்மைப் போன்ற இணைய தமிழர்களின் வேலையாக இருக்கவேண்டும். தமிழ் படைப்புகளைப் பொறுத்தவரை எழுத்துகளிலும், எடுத்துக்கொள்ளப்படும் விஷயங்களிலும் ஏகப்பட்ட மாற்றங்கள் வந்துவிட்டன. ஆனால், ஈழத்து படைப்புகளில் அப்படியில்லை என்றுதான் படித்தவர்கள் சொல்கிறார்கள். ஈழப்போராட்டத்தை மட்டுமே சித்தரிக்கும் ஈழத்து படைப்புகள், தொண்ணூறுகளில் படிக்க ஆரம்பித்த என்னைப் போன்றவர்களுக்கு தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு விருப்பமானதாக இல்லையென்பதுதான் நிதர்சனம். தமிழ்நாட்டு படைப்புகள் போலவே ஈழத்து படைப்புகளும் கொஞ்சம் மாற்றம் பெற்றால் நன்றாக இருக்கும். எந்தவொரு படைப்பாக இருந்தாலும் எல்லாவித சமூகத்திற்கும் பொருந்தும்படி இருந்தால் மட்டுமே சாகாவரம் பெறமுடியும் என்பது எனது நம்பிக்கை.

கொழுவி said...

என்ன செய்வது? யுத்தத்தின் சத்தம் மட்டுமே கேட்கிற ஒரு பூமியிலிருந்து கொண்டு சத்தமோ சகாப்தமோ என்றெல்லாம் எழுத முடியாதே..

ஈழத்திலிருந்து எந்த வகையான எழுத்து எழுத புறப்பட்டாலும் அங்கே யுத்தம் வந்தே நிற்கும். யுத்தத்தை தொட்டே செல்லும். தவிர்க்க இயலாத படி

தமிழ்நாடு உஜாலாக்கு மாறிட்டுதாம். நீங்களும் மாறிடுங்கப்பா

கறுப்பி said...

ஈழநாதன் வேண்டுமென்றே எழுதுகின்றீர்களோ என்று ஐயம் வருகின்றது. பத்மநாபஐயரின் தொகுப்புக்களில் கறுப்பியின் படைப்புக்களும் வந்திருக்கின்றன. பெண்கள் சந்திப்பு மலரிலும் வந்திருக்கின்றன. பனியும் பனையும் இருள்வெளி இன்னும் பல தொகுப்புகள் படித்தவள்தான் நான் படிக்காமல் எழுதவில்லை. இவையெல்லாம் ஒருவருடத்திற்கு ஒன்றாகவோ இல்லை ஒன்று வந்து விட்டு மறைவனவாகவோதான் இருக்கின்றன. (அதாவது வருகின்றதே என்ற நீங்கள் கூறவேண்டாம்) நான் கேட்டது “சஞ்சிகைகள்” தொகுப்புக்களை அல்லை. உயிர்நிழல் எக்ஸில் போன்ற சஞ்சிகைகளை நான் நிச்சயம் மிஸ் பண்ணுகின்றேன். இங்கே யார் எது படித்தார் யார் அறிவாளி கூடியவர் என்ற போட்டியல்ல ஈழநாதன். என் ஆதங்கம் புலம்பெயர் இலக்கியத்தைத் தாங்கி வரும் சஞ்சிகைகள் மட்டுமே குறித்து நிற்கின்றது. இணையத்தளங்களிலும் பார்க்க எழுத்துப் பிரதியாக வரவேண்டும் என்ற விருப்பமும் எனக்கிருக்கின்றது.

ராம்ஜி இது உங்கள் கருத்து. அதனோடு எனக்கு உடன்பாடு இல்லை. இந்தியாவில் இலக்கிய விருதுகள் பெறும் பெரும் எழுத்தாளர்களிலும் விடச் சிறந்த ஈழத்து இலக்கியவாதிகள் இருக்கின்றார்கள். ஈழத்து இலக்கியம் என்பதிலும் விட நான் குறிப்பிட்டது புலம்பெயர் இலக்கியத்தையே. எமது பண்பாடு கலாச்சாரத்தையும் கட்டிக் கொண்டு முற்றிலும் வேறுபட்ட ஒரு நாட்டடிற்குப் புலம்பெயர்ந்த மக்களில் வாழ்கைப் பின்னணியைக் கொண்டு எழுதப்பட்டவை. இந்தியர்களில் ஒருவரும் தரமான புலம்பெயர் இலக்கியம் தந்ததாக எனக்குத் தெரியாது.

must do நன்றி

மதி கந்தசாமி (Mathy Kandasamy) said...

நீங்கள் எழுதியிருக்கும் சில வி்ஷயங்களில் உடன்பாடு இல்லை.

//புலம்பெயர் ஈழத்து இலக்கியவாதிகள் இனிமேல் செய்யவேண்டியது தமிழ் நாட்டு இலக்கியவாதிகளைக் கணக்கில் எடுக்காமல் தரமான தமிழ் இலக்கியங்கள், மொழிபெயர்ப்பு இலக்கியங்கள் போன்றவற்றைப் படித்து இலக்கியத்திறனை பெருக்கும் அதே வேளை தமது படைப்புக்களை இணையத்தளங்கள் மூலமேனும் தந்துகொண்டிருத்தல் வேண்டும். ஈழத்தில் இருக்கும் போது தமிழ்நாட்டு அங்கீகாரத்தை எம்மவர்கள் எதிர்பார்த்திருக்கலாம் ஆனால் தற்போது இந்தியாவை விட எல்லாவற்றிலும் உயர்ந்த நிலையில் இருக்கும் நாட்டில் நாம் வசிக்கின்றோம். இங்கே கிடைக்கும் சேவைகளை துர்பிரயோகம் செய்யாது உபயோகப்படுத்தின் நல்ல ஒரு இலக்கியத்தளத்தை ஈழத்தமிழரால் உருவாக்க முடியும். ஈழத்தமிழரான சியாம் செல்லத்துரை போன்று பல நல்ல படைப்பாளிளை நாம் உலகிற்கு அறிமுகப்படுத்தலாம்.
//

இதை நீங்களே செய்யலாமே கறுப்பி. ஏன் அடுத்தவர் கையையே எதற்கெடுத்தாலும் பார்த்துக் கொண்டிருக்கிறோம் நாம் என்பது எனக்குப் புரியாத வி்ஷயம்.

நீங்கள் பல வருடங்களுக்கு முன்பு புலம் பெயர்ந்தவர். பெயர் சொன்னால் தெரிந்துகொள்ளக் கூடிய அளவு மக்களிடம் பிரபலமானவர். குறும்படங்கள் எடுப்பதோடு, அது தொடர்பான செயற்பாடுகளிலும் இலக்கியம் சம்பந்தப்பட்ட வி்ஷயங்களிலும் ஈடுபட்டு வருபவர். உங்களை விட, தகுதியானவர் வேறு யார் இருக்க முடியும்? உங்களோடு ஒத்தகருத்துள்ள நண்பர்களையும் சேர்த்துக் கொண்டு செய்யலாமே? பெரிதாகத் தொடங்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. இந்தியாவிலிருந்தும் ஈழத்திலிருந்தும் வரும்/வந்த சிறுபத்திரிகைகளில் பல அவற்றின் கருத்தாளத்தின் காரணமாக இன்றும் பேசப்படுகின்றனவே.

-மதி

மதி கந்தசாமி (Mathy Kandasamy) said...

//ஒரு நல்ல சஞ்சிகை புலம்பெயர் இலக்கியத்திற்குத் தேவை என்பதே என் கருத்து. எனக்கு நேரம் இருந்தால் புலம்பெயர் இலக்கியவாதிகளிடம் படைப்புக்களைச் சேமித்து ஒன்று வெளியிட்டு விடுவேன். ஆனால் எனக்கு அதற்காக நேரம் இல்லாமல் இருக்கின்றது. வெளியிடுபவர்கள் அதனைச் செய்யலாமே என்றுதான் சொல்கின்றேன்.
//

எனக்கு இலக்கிய அறிவு அதுவும் ஈழத்து இலக்கிய அறிவு குறைவு. இப்போதுதான் தெரிந்துகொண்டு வருகிறேன்.

எனக்குத் தெரிந்தவரை, கனடாவில் 'காலம்' வருகிறது. சமீபத்தில் டொராண்டோவிலிருந்து 'அற்றம்' என்னும் சஞ்சிகையும் வருகிறது. நீங்கள் தனித்துச் செயற்பட இயலாது என்றால், இவர்களுக்கு உங்களால் ஆன உதவிகளைச் செய்யலாமே?

இன்னொரு வேண்டுகோள். கனடா(டொரொண்டோ), ஐரோப்பா, ஆஸ்திரேலியா, அமெரிக்கா போன்ற இடங்களில் வசிக்கும், உங்களுக்குத் தெரிந்த புலம்பெயர்ந்த ஈழத்தமிழ் எழுத்தாளர்களை எங்களுக்கு அறிமுகப் படுத்தலாமே?

ஈழநாதன், தனியாக பல பதிவுகளை வைத்திருக்கிறார், அதிலிருந்து நான் தெரிந்துகொண்டவை ஏராளம். நீங்களும் இதிலிருந்தே தொடங்கலாமே?(நேரம், பொருள் பிரச்சினை என்றால்)

-மதி

கறுப்பி said...

மதி, எனக்கு மேடை நாடகங்களிலும், குறும்படங்களிலும் இருக்கும் அளவிற்கு ஆர்வம் சஞ்சிகை கொண்டு வருவதில் இல்லை. படிக்க விருப்பம் சிறுகதைகள், பத்திகள் எழுத விருப்பம் அத்தோடு நிறுத்திக் கொள்ளவே நான் விரும்புகின்றேன். எனது நண்பர் ஒருவர் இலங்கையில் இருக்கும் அடையாளம் காணப்படாத எழுத்தாளர்களின் தொகுப்பு ஒன்றைக் கொண்டு வருவோம் அதற்கு உதவுங்கள் என்று கேட்டார். நான் என்னால் முடிந்ததைச் செய்கின்றேன் என்றேன். பணஉதவி, ரைப்செட்டிங் போன்றவற்றில் நான் உதவமுடியும். அது சஞ்சிகையான மாதா மாதம் வராது ஒரு தொகுப்பாக ஒன்றோ இரண்டோ வரலாம். ஈழத்தில் பல கிராமங்களில் வசிக்கும் வசதியற்ற நல்ல எழுத்தாளர்கள் இருக்கிறார்கள் அவர்ளின் எழுத்தை நாம் வெளிக்கொணர வேண்டும் என்பது அவரின் அவா.
அடுத்து “காலம்” சஞ்சிகை தற்போது முற்று முழுதாக இந்திய சஞ்சிகையாக மாறி வருகின்றது. இது வருந்தத் தக்கதே. மற்றும் தாங்கள் கூறிய “அற்றம்” ஒரு பிரதி வந்திருக்கின்றது. அதில் அனேகமானவை நாம் வலைப்பதிவுகளில் ஏற்கெனவே படித்தவை. அதில் தவறில்லை. வலைப்பதிவைத் தெரியாவதர்களுக்கு அது உதவக் கூடும். அதே போல் “அறிதுயில”; “மற்றது” போன்ற இரு சஞ்சிகைகள் ஒவ்வொரு பிரதி வந்திருக்கின்றது. அடுத்து வருமா வராதா தெரியாது. இப்படி அங்கொன்றும் இங்கொன்றுமான வராமல் புலம்பெயர்ந்தவர்களுக்கா ஒரு காத்திரமான சஞ்சிகை வந்தாலே போதுமானது என்பதுதான் என் கருத்து.

-/பெயரிலி. said...
This comment has been removed by a blog administrator.
-/பெயரிலி. said...

கறுப்பியின் சில கருத்துகளோடு (நான் நீக்கிய பின்னூட்டத்திலே இருந்ததுட்பட, குறிப்பாக, /ஈழத்தமிழ் மக்களின் தாய் நாடும் இந்தியா எனும் போது அவர்களை ஈழத்தமிழர்கள் துதிப்பதில் தவறில்லை./ என்பதுடன்) எனக்கு முரண்பாடுகள் உண்டு. ஆனால், /அடுத்து “காலம்” சஞ்சிகை தற்போது முற்று முழுதாக இந்திய சஞ்சிகையாக மாறி வருகின்றது. இது வருந்தத் தக்கதே./ என்பதை ஒத்துக்கொள்ளத்தான் வேண்டும். ஆனால், அது செல்வம் அவர்களின் தனிப்பட்ட விருப்பினைப் பொறுத்தது. ஒரு புலம்பெயர் சஞ்சிகை கட்டாயம் ஈழத்தமிழர்களின் கருத்துகளைமட்டுமே கொண்டு வரவேண்டுமென்ற கட்டாயமில்லையே; புலம்பெயர்சஞ்சிகைகள் பெருமளவிலே சிறுசஞ்சிகைகளே; சிறுசஞ்சிகைகளின் "நண்பர்கள்_வட்ட_படைப்பு-வாசிப்பு" பண்பு அவற்றுக்கும் தவிர்க்கமுடியாதது. ;-) அதேநேரத்திலே, இப்படியான சஞ்சிகைகளை ஈழத்துப்படைப்பாளிகளின் சஞ்சிகைகள் என்று சொல்லிக்கொள்வதினைத் தவிர்த்துக்கொள்ளவும் வேண்டும்.

நிற்க, இனி கறுப்பியின் முரண்படுநிலை குறித்து (இரட்டைநிலை? ;-)):
ஈழப்படைப்புகளுக்குத் தமிழக விமர்சனக்குஞ்சுகளின் விளம்பரம், அங்கீகாரம் தேவையில்லை என்பதை ஒத்துக்கொள்கின்றவர்களிலே (சொல்லப்போனால், ஒற்றைக்காலிலே நின்றாடுகின்றவர்களிலே) நானும் ஒருவன் என்பதை முதலிலேயே சொல்லிக்கொண்டால், உங்களுக்கு வசதியும் எனக்குப் பாதுகாப்பும் ;-)

தமிழக எழுத்தாளர்களுடனான/வாசகர்களுடனான நட்பினையும் தமிழக எழுத்தாளர்களின்/வாசகர்களின் அங்கீகாரத்தினையும் வேறுபடுத்திப் பார்க்க ஈழ, ஈழத்திலிருந்து புலம்பெயர்ந்த படைப்பு_ஆளிகள்/ஆழிகள் உணர்ந்துகொள்ளவேண்டும். தமிழகத்திலிருந்து கனடாவுக்கு அழைத்துப் புத்தகவெளியீட்டுவிழா நடத்த என்ன தேவை என்பதையும் ஈழ/புலம்பெயர் களங்களிலினான நூல்களுக்குத் தமிழக இலக்கியவாதிகள் முன்னுரை எழுத என்ன அவசியமென்பதையும் அடிக்கடி புண்ணியயாத்திரைபோல, தமிழக எழுத்தாள/பதிப்பாளர்களை நாடித் தமிழகம் போய் இலக்கியச்சந்திப்பு நடத்தும் தேவை என்ன என்பதையும் யோசித்தால், இந்த அங்கீகார உளமலச்சிக்கல் தீர்ந்துவிடும் ;-)

ஈழத்துப்படைப்பாளிகளின் நிலைப்பாடு ஏன் எதற்காக எப்படியாக இருக்கவேண்டுமென்று நான் நெடுங்காலமாகச் சொல்லிக்கொண்டுவருவதற்காக, சுருக்கமான செவ்விய நடமாடும் காரண உதாரணமாக இனி, ரஜனி ராம்கியின் பின்னூட்டத்தினைக் காட்ட இருக்கிறேன். ;-)

மீதி விபபபபபபபபபபரமாக எங்காவது என்றாவது எழுத, படும். ;-)

Jayaprakash Sampath said...

// (நான் நீக்கிய பின்னூட்டத்திலே இருந்ததுட்பட, குறிப்பாக, /ஈழத்தமிழ் மக்களின் தாய் நாடும் இந்தியா//

ரமணீ, ஏன் உங்கள் மறுமொழிகளை நீக்கினீர்கள்?

கறுப்பி said...

பெயரிலி ஈழம் தமிழ்நாடு என்று பிரித்துப் பார்பதை பலர் முக்கியமாக இந்தியர்கள் விரும்பவில்லை என்பது எனக்கு வந்த பின்னூட்டங்களில் இருந்து தெரிகின்றது. தமிழ்நாட்டு எழுத்தாளர்களுக்கு தமது படைப்புக்களைப் பிரசுரிப்பதற்கு பல சஞ்சிகைகள் இருக்கின்றன. ஆனால் புலம்பெயர் எழுத்தாளர்களுக்கு அது இல்லை. அவ்வேளையில் கனடாவில் இருந்து தொடர்ந்து வெளிவந்து கொண்டிருக்கும் காலம் சஞ்சிகையும் இந்த பிரபல்யமான இந்திய எழுத்தாளர்களின் எழுத்தையே தாங்கி வருகின்றது. இது பற்றிச் செல்வத்திடம் நான் கேட்ட போது இந்தக் கேள்வி பலரிடமிருந்து ஏற்கனவே அவர் கேட்டிருப்பார் போல மெல்லிய ஒரு புன்னகையுடன் பதிலை முடித்துக் கொண்டார். இருந்தும் எனக்குச் சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் கூட்டங்களில் நான் இந்தக் கேள்வியை எழுப்பிக் கொண்டுதான் இருக்கின்றேன். எப்போது பேச்சு வாங்கப் போகின்றேனோ தெரியவில்லை.
ஈழத்தமிழரின் மூதாதையர்தான் தமிழ்நாட்டுத் தமிழர் என்று நான் படித்திருக்கின்றேன். எங்கு எப்போது என்று இப்போது தகவல்கள் தரமுடியவில்லை. அது தவறானதாகவும் இருக்கலாம். ஆனால் ஒரு நாட்டில் பல மொழிகள் உருவாவதற்கு சாத்தியங்கள் இருக்கின்றது. ஆனால் ஒரு மொழி இருநாட்டில் உருவாவதற்காக சாத்தியங்கள் குறைவே. வல்காவிலிலுந்து கங்கைவரை புனைவுப் பதிவாக இருப்பினும் இடப்பெயர்சியை அழகாகக் கொண்டு சென்றுள்ளது. இந்த இடப்பெயர்ச்சியில் தமிழ்நாட்டில் இருந்து குடியேறியவர்கள் தாம் ஈழத்தமிழ் மக்கள் என்பது என் கருத்து. சிங்களவர்களின் மூதாதையர் மலையாளிகள் என்றும் எங்கோ படித்திருக்கின்றேன். எங்கு என்று ஞாபகத்தில் இல்லை

-/பெயரிலி. said...

/பெயரிலி ஈழம் தமிழ்நாடு என்று பிரித்துப் பார்பதை பலர் முக்கியமாக இந்தியர்கள் விரும்பவில்லை என்பது எனக்கு வந்த பின்னூட்டங்களில் இருந்து தெரிகின்றது./

ஆனால், தாய்நாடு சேய்நாடு என்று பேராளர் மேற்பார்வைக்கு அரசியல், இலக்கிய வகைகளிலே விரும்பும் கூட்டமொன்றாக இவர்கள் இருக்கின்றதை நீங்கள் காணவில்லையா, என்ன? கறுப்பி, ஈழத்தமிழர்-இந்தியத்தமிழர் என்று பிரிக்க நானும் விரும்பவில்லை. இந்தப்பிரிப்பு சொல்லப்போனால், அண்மையிலே ஒரு நூற்றாண்டுக்குள்ளேயே வந்ததென்பதை நீங்களும் அறிவீர்கள். நான் சொல்வது, இந்திய ஒருமைப்பாட்டினை முன்வைக்கின்றோம், காத்துக்கொடிபிடிக்கின்றோம் என்று எண்ணிக்கொண்டு, தென்னைத்தேள்கொட்டலுக்குப் பனைவடலியிலே நெறிகட்டலைத் தேடி, ஈழத்தமிழர்களை தங்களுக்காகும் ஒவ்வொரு விதத்திலும் அழுத்திக்கொல்லும் குழுவினைச் சேர்ந்த சில சில்லறைகளைத்தான்; இவர்களைத் தமிழ்நாட்டிலேயும் இணையத்திலேயும் புலம்பெயர்நாடுகளிலேயும் நீங்கள் காணலாம். இலக்கியம், அரசியல், பண்பாடு, மொழி, பொருளாதாரம் என்று பல கோணங்களிலே இவர்கள் சம்மட்டிகளாகவும் வாழைப்பழ ஊசிகளாகவும் தாக்கவும் நுழையவும் செய்வார்கள். வேண்டுமானால், தமிழக இளைஞர்களைக் கவரும் வண்ணம் புலம்பெயர் ஈழத்தமிழர்களிலே ரஜனி மகிமை என்றோ அல்லது இலங்கையிலே சந்திரமுகியின் வெற்றி என்றோ விவரணச்சித்திரம் எடுத்தீர்களானால், உங்களுக்குத் தமிழக அங்கி+காரம் கிடைக்கலாம் ;-) எஸ். ராமகிருஷ்ணனையே உங்கள் பாபா விவரணத்துக்குப் பின்பாட்டு.. அடச்சீ.. பின்குரல் கொடுத்து விவரிக்க வைக்கலாம். இந்த வகையான மனிதர்களுக்கு ஈடானாவர்கள், யாழ்ப்பாணமேலாதிக்கத்தினை மலையகத்திலே ஒரு காலத்திலே செலுத்திய சில வாத்திமார், வைத்தியர், வியாபாரிகள்தான். இண்டையப்பாட்டுக்கு, வாயைக் கிண்டாதீங்கோ; வேலை கையிலே; மூளை குழம்புது ;-)

பிரகாஷ், தனியே எழுத நேற்று எண்ணியதாலே, அழித்திருந்தேன். ஆனால், நேரமும் நிலையும் விடாது போலை; ஆகவே, இங்கே, அவசரத்திலே.

கொழுவி said...

'வொல்கா முதல் கங்கை வரை' என்றதையும் விட சிறப்பான 'வரலாற்று' நூல் உண்டு. அதில ஓர் இனத்தின் வேரிலிருந்து சொல்லப்படுகிறது. காட்டிலிருந்த சிங்கமொன்று வேட்கை மிகுதியுற்று பெண்ணொருத்தியைப் புணர்ந்து ஒரு குழந்தையையும் பெற்றுக்கொள்கிறது. (மிருகத்திலிருந்து மனிதன் தோன்றியை நிருபிக்க இதுகூட நல்ல சான்று). அந்தக்குழந்தையிலிருந்து தோன்றியது ஓர் இனம். இதை அந்த இன மக்களும் ஏற்றுக்கொண்டுள்ளனர்.அப்படியேதான் சொல்லியும் வருகின்றனர். நீங்கள் என்னடாவென்றால் அவர்கள் மலையாளிகளிலிருந்து வந்தவர்கள் என்கிறீர்கள்.

சரி கறுப்பி, சிங்களத்துக்கும் மலையாளத்துக்குமான காலத்தைக் கருத்திற்கொண்டாலே மீண்டும் ஐந்தாம் வகுப்புக்குப் போய் திரும்ப கணக்குப் படிக்க வேணும்போல கிடக்கே?

ஈழநாதன்(Eelanathan) said...

என்ன கறுப்பி அக்கா இப்பிடிக் கோபிக்கிறீர்கள்.நீங்கள் போகிற போக்கில் அள்ளித் தெளித்துவிட்டுப் போகும் கருத்துகளை உதாரணமாக ஈழத்தமிழரின் மூதாதையர் தமிழகத் தமிழர் போன்றவை விளக்கச் சொல்லிக் கேட்டால் நான் பெரிசா நீ பெரிசா கேள்வியெல்லாம் கேட்கிறீர்கள்.நான் அது படித்தேன் இது படித்தேன் அவரைத் தெரியும் இவரைத் தெரியும் என்று சொல்லி என்னை நீங்கள் குறிப்பிடும் இன்ரலெக்சுவலாக என்றைக்குமே காட்டிக் கொள்ள விரும்பியதில்லை.

எனது விருப்பமெல்லாம் ஈழத்தமிழ் இலக்கியங்களாயினும் சரி புலம்பெயர்ந்த ஈழத்தமிழர்களது கலை இலக்கியப் படைப்புகளாயினும் சரி தமிழக எழுத்தாளர்களது புறக்கணிப்பை கருதாது அவர்களது அங்கீகாரத்தை எதிர்பாராது வெளிவரவேண்டும். அதையே நீங்களும் இதில் சொல்லியிருப்பதால் அதில் எனக்கும் உடன்பாடே
காத்திரமான தொகுப்புகள் வந்திருப்பதாக நான் சொல்ல அது எதுவோ என்று நீங்கள் கேட்க தெரிஞ்ச சிலதை நான் சொன்னேன்.அதையெல்லாம் ஏற்கனவே படித்தாயிற்று என்று சொல்லும் உங்களை உண்மையிலேயே படித்தீர்களா இல்லை சும்மா பெயரை மட்டும் தெரிந்து வைத்துக்கொண்டு எழுதினீர்களா என்று பரீட்சை வைத்துப் பார்ப்பது எனக்கு வேலையல்ல.அப்படிப் படிப்பதை நான்கு இடத்தில் எழுதினால் என்னைப் போன்ற இளம்பிள்ளைகளுக்கும் உதவியாக இருக்கும்.அதை நீங்கள் தான் செய்யவேண்டும் ஏன் இதுவரை செய்யவில்லை என்று கேட்கவிரும்புகிறேன்.இல்லை எழுதினேன் அங்கே இங்கே என்று நீங்கள் பதிலளித்தால் ஈழத்துப் படைப்பு எத்தனை தமிழகப் படைப்பு எத்தனை என்று நான் கணக்கு காட்டுவன் ஏனென்றால் நீங்கள் எழுதுவதை ஒன்றும் விடாமல் தேடிப் படிப்பவன் நான் எங்கெங்கே எந்த நூல்விமர்சனம் எழுதினீங்கள் என்று சேமித்து வைத்திருக்கிறேன்.(இதைச் சொல்லவும் பயமாயிருக்கு ஏதோ உங்களிலை பிழை பிடிக்க அலையிறான் என்று நினைக்கவேண்டாம் எதோ வலைப்பதிவிலை எழுதுற பெண் எழுத்தாளர்களிலை நீங்கள்தான் பெடியளுக்கும் பிடிச்ச மாதிரி முசுப்பாத்தியா எழுதுறதிலை உங்கள்டை எழுத்திலை ஒரு இது அவ்வளவுதான்)

இதை இப்படியே நீட்டிக்கொண்டு போனால் கடைசியில் ஈழநாதனுக்கும் கறுப்பிக்கும் ஆகாது என்றுதான் கதை வரும் ஏற்கனவே ஒருத்தர் நீங்கள் ஏன் அந்த மனுஷியோடை நெடுகலும் மல்லுக்கட்டுறீங்கள் என்று கேட்டும் விட்டார்.

ரஜனி ராம்கி ஏன் தமிழகத்திலை இருந்து வாற படைப்புகள் முக்கால்வாசியும் பார்ப்பான் - தலித் சண்டையாகவே இருக்கு எழுதுவதற்கு வேறு தளங்கள் விடயங்கள் இல்லையா?

P.V.Sri Rangan said...

கறுப்பியைக் கொல்லுறது எண்டு முடிவெடுத்துக் கருத்துச் சொல்லும் பசங்களே!போதுமடா சாமி.இந்தக் கறுப்பியை விடுங்கோடா தம்பிமாரே.அவர் கம்யூனிசத்தையும்... எல்லாத்தையும் புரிஞ்ச கறுப்பி.கறுப்பி கொஞ்சம் மார்க்சீயம் படிக்கலாமே?ஏதோ,என்மோ சொல்லுங்க!உவங்கள் பெடிப் பசங்கள் சும்மா கூத்தாடுகிறாங்கள்.நீங்க தொடருங்கோம்மா.ருஷ்யா...கியூபா..சீனா... உந்தக்கோதாரியெல்லாம் தானே கம்யூனிசம்?

கறுப்பி said...
This comment has been removed by a blog administrator.
கறுப்பி said...

ஈழநாதன் என்னுடைய படைப்புகளி;ல் பல தவறிவிட்டன தங்களிடமிருந்துதான் பெற்றுக் கொள்ள வேண்டும். அதுவரை போதுமடா சாமி உங்கள் மல்லுக்கட்டல்.

மஸ்ட்டூ மூடநம்பிக்கைகள் அல்ல சாத்தியக் கூறு என்று ஒன்ற உள்ளது.

கருணா ஆணாதிக்கவாதி என்பதை நிரூபித்திருக்கின்றீர்கள். தாங்கள் வாத்தியார் யாதுமறிந்திருப்பீர்கள். நான் வெறும் மாணவிதான். தங்களிடம் நான் தான் கற்க வேண்டும். இருந்தும் ஒரு கட்சி எந்தக் கொள்கையோடு இருக்கின்றது என்று தெரிந்தால் அதன் சரிவு உயர்வில் இருந்து சாதாரண எந்தக் குடிமகனும் விமர்சனம் வைக்கலாம். அதுசரி யார் யார் எது பேசலாம் என்று தாங்களே முதலில் கூறிவிட்டால் நாம் அதுபோல் கடைப்பிடிப்போம். தங்கள் பெண்களுக்கு அனுமதி இருக்கும் என்று நம்புகின்றேன். அவர்கள் அறிவாளிகள். நான் வெறும் போர்வைக்குள் வாழ்பவள் அவ்வளவே.