Thursday, June 09, 2005

கறுப்பியின் வாசகசாலை.

என்னை இந்த விளையாட்டிற்கு அழைத்த பத்மா அரவிந்திற்கு நன்றிகள். என்னுடைய வாசிப்பு அம்புலிமாமாவில் தொடங்கியது. (அனேகருக்கு அப்படித்தான் இருந்திருக்கும்) தொடர்ந்து குமுதம்,ஆனந்தவிகடன், கல்கி, கலைமகள், சாவி, குங்கும் என்று வீட்டில் எல்லா இந்திய சஞ்சிகைகளும் காலுக்குள் இடறுபடும். எமது ஊரில் எங்கள் வீடுதான் வாசகசாலை. அங்கு ஒருவரும் சஞ்சிகைகள் வாங்கிப் படிப்பதில்லை. எனது அப்பாவும், அம்மாவும் தமிழ் ஆசிரியர்களாக இருந்ததால் அவர்களுக்கு வாசிப்பில் ஆர்வம் இருந்தது. பக்கத்து வீட்டுப் பெண்கள் நாங்கள் வாசித்து முடித்த பின்னர் வந்து வாங்கிச் செல்வார்கள். எல்லோருமே எங்கள் குடும்பத்தை விட வசதியானவர்கள் என்பது வேறு கதை. எங்கள் வீட்டில் ஐந்து பெண்கள், அம்மா, ஆச்சியோடு சேர்த்து ஏழு. எல்லோரும் தொடர்கதைகள் வாசிப்பவர்கள். புத்தகம் வீட்டிற்கு வந்து விட்டால் எப்போதும் ஆச்சிக்குத்தான் முதல் உரிமை. கொடுக்காவிட்டால் கோபித்துக் கொண்டு போய் சாப்பிடாமல் மூலையில் இருந்து விடுவார். இரவானால் கைவிளக்கை (லைட் வேலை செய்தாலும்) முகத்திற்கு அருகே பிடித்து அவர் வாசிக்கும் அழகே தனி அழகு. ரேயின் "பதர்பாஞ்சாலி" ஆச்சியைப் பார்த்த போது, எனக்கு அடிக்கடி எனது ஆச்சி நினைவிற்கு வருவார். நானும் அந்த வகையில் அப்போது வெளிவந்த எல்லாத் தொடர்கதைகளையும் படித்திருக்கின்றேன். சுஜாதா, பாலகுமாரன், ஜெயகாந்தன், ஜானகிராமன், சிவசங்கரி, அனுராதாரமணன், இந்துமதி என்றும் ஈழத்து எழுத்தாளரான அ.முத்துலிங்கம் அவர்களும் அப்போது எனக்கு அறிமுகமான எழுத்தாளர்கள்.

புலம்பெயர்ந்த பின்னர் அறிமுகமான எழுத்தாளர்கள் ஏராளம்.

என் வாசகசாலையில் 250+ புத்தகங்கள் இருக்கலாம். கனடாவில் புத்தங்கள் வாங்குவது எனக்குக் கட்டுப்படியாகாத விடையமாக இருந்ததால் தொடக்கத்தில் அதிகம் வாங்குவதில்லை. பின்னர் 2000ஆம் ஆண்டு அளவில் காலச்சுவடு பதிப்பகத்தோடு ஒரு டீல் போட்டேன். அதாவது அவர்களால் வெளியிடப்படும் அனைத்துப் புத்தகங்களையும் எனக்கு அனுப்பி விடுமாறு. கிழமைக்கு ஒரு பார்சல் வரத் தொடங்கியது. ஒன்று வாசித்து முடிக்கு முன்னே என் அலுமாரியில் இருபது சேர்ந்து விடும். எனவே அதையும் நிறுத்தி விட்டேன். தற்போது பெயர்களைத் தெரிந்து எழுதி எடுப்பிக்கின்றேன். அத்தோடு எனது சகோதரிக்கும் எனக்குள்ளும் ஒரு டீல். தொடக்கத்தில் ஒரே புத்தகங்களை நாங்கள் இருவருமாக வாங்கிக்குவித்து விட்டோம். சில புத்தகங்கள், எனக்கு நிச்சயம் வேண்டும் என்று படுபவையை மட்டும், நான் இப்போது வாங்குகின்றேன். நான் வாங்காதவற்றை அக்காவிடம் பெற்று வாசித்து வருகின்றேன்.

அண்மையில் வாசித்தவை (ஞாபகத்தில் இருப்பவை)

காடு – ஜெயமோகன்
ஏழாம் உலகம் - ஜெயமோகன்
உபபாண்டவம் - எஸ். ராமகிஷ்ணன்
நெடுங்குருதி – எஸ்.ராமகிஷ்ணன்
ரத்தஉறவு – யூமா வாசுகி
என் பெயர் ராமசேஷன் - ஆதவன்
சொல்லாத கதைகள் - வாய் மொழி வரலாற்றுப் பயிலரங்கில் பெண்களின் பதிவுகள் - அம்பை எஸ்.சிவசுப்ரமணியம் அ.சிறீனிவாசன்
பயணப்படாத பாதைகள் - காட்சி வடிவ வரலாற்றுப் பயிலரங்கில் பெண் கலைஞர்களின் பதிவுகள் - அம்பை எஸ் சிவசுப்ரமணியம் அ.சிறீனிவாசன்.
வண்ணாத்திக்குளம் - கணேசன்
யாரும் யாரோடும்?? இல்லை – உமாமகேஷ்வரி
சினிமா கோட்பாடு – எம். சிவகுமார்
கதாகாலம் - தேவகாந்தன்
கொறில்லா – சோபாசக்தி
புலிநகற்கொன்றை – பி.கிறிஷ்ணன்.
நத்தையும் ஆமையும் - ஜோர்ஜ் சந்திரசேகர்
Frenzy For Two or More – Eugene Ionesco
Ivan the Fool: A Lost Opportunity and Polikushka – Leo Tolstoy
The House of Bernarda Alba – Federico Garcia Lorca.

படித்தவற்றில் ஏன் படித்தேன் என்று நொந்தவை அதிகம் இல்லை. இருந்தும்

மனதில் பதிந்தவை -

தாய் - மார்க்சீம் கார்க்கி
ஏழாம்உலகம் - ஜெயமோகன்
உபபாண்டவம் - எஸ் ராமகிஷ்ணன்.
மோகமுள் - ஜானகிராமன்
ஜே.ஜேயின் சில குறிப்புக்கள் - சுந்தரராமசாமி.
கருக்கு – பாமா.
சிவரமணி கவிதைகள்.
Anna Karenina – Leo Tolstoy

படிக்காமல் எனது வாசகசாலையில் தூங்குபவை பல. அவை பற்றிப் பின்னர் ஒருநாள்.

நான் இந்த விளையாட்டில் புகுந்து விளையாடப் கூப்பிடுபவர்கள்

சயந்தன்
வசந்தன்
கதிர்காமஸ் (ஹேஹே)
ப.சிறீரங்கன்
முத்து
குழைக்காட்டான்.

12 comments:

பத்மா அர்விந்த் said...

நன்றிகள் பல. தாய் பற்ரி உங்கள் பார்வையில் எழுதுங்களேன். நீங்கள் சிறுகதை எழுத்தாளர் என்பதாலும் தீவிர சிந்தனை உடையவராக இருப்பதாலும் சுவாரஸ்யமாக இருக்கும் என்று நினைக்கிறேன்

கறுப்பி said...

தேன்துளி, "தாய்" பல பக்கங்களைக் கொண்ட ஒரு நாவல். விமர்சனம் எழுதுவதானால் மீண்டும் ஒரு முறை படிக்க வேண்டும். பல நாவல்களுக்கு விமர்சனம் எழுத விருப்பமாக இருக்கின்றது. ஆனால் நேரம்தான் போதவில்லை. நேரம் கிடைக்கும் போது நிச்சயம் ஒருநாள் எழுதுவேன்.

பத்மா அர்விந்த் said...

நான் கல்லூரியி சென்ற போது படித்தேன்.இப்போது முழுவதுமாக நினைவில் இல்லை.

ஜெயச்சந்திரன் said...

கறுப்பி அழைப்புக்கு நன்றி..........கலந்து கொள்ளலாம் .......ஆனால்......உடன முடியுமோ தெரியேல்லை.......

கறுப்பி said...

குமிலி பேசாமல் பெயரிலியின் பாலிஸியைப் பொலோ பண்ணுங்கள் நேரம் மிச்சம்.

-/பெயரிலி. said...

அதுசரி கறுப்பி. குழப்பியின் நிலை குழப்பிக்குத்தான் தெரியும்:-( கறுப்பியின் நிலை கறுப்பிக்குத்தான் தெரியும் பெயரிலி படம் மட்டும் போடுறது எழுத விசயமில்லை எண்டில்லை; விட்டால், கறுப்பியை விடவும் வாசிச்சுக்கொண்டிருப்பன், எழுதிக்கொண்டிருப்பன் :-) ஆனால், அம்மா, வீட்டிலே தவ்வல், வேலையிலே தாவல். வாலே இல்லாமல், இத்தனையும் பண்ணவேண்டிக்கிடக்கு. இதுக்குள்ளே பட்டியல் போட ஆசையிருந்தாலும், வாசிக்கவேணுமே தாயே,

வேணுமெண்டால், அவசரத்துக்குப் பட்டியல் போடலாம் ;-)

ஜெயச்சந்திரன் said...

அதுக்கு கூட இப்ப வசதியில்லை ஏன எண்டா என்னுடைய அலுமாரியலில் உள்ள 6/7 புத்தகங்களும் பாடப்புத்தகங்கள். அதை விட மேலதிகமாக எதுவுமில்லை. அத்துடன் நீண்ட காலமாக கதை புத்தகங்கள் வாசித்து. தற்போது இணையத்தில் வரும் கதை கவிதை தான் பொழுது போக்கு. எனது வாசிப்பு அதிகமாக எனது பாடசாலை காலத்தில் தான் இருந்ததால் பல புத்தகங்களின் பெயர்கள் தற்போது ஞாபகம் வர மறுக்கிறது. எழுத்தாளர்களது பெயர் மட்டுமே ஞாபகம் வருகிறது.

குழைக்காட்டான்/kumili

ஜெயச்சந்திரன் said...

http://kumili.yarl.net/archives/003103.html

வசந்தன்(Vasanthan) said...

அடடா!
பழிவாங்கி விட்டீர்களே.
ஆனாலும் பெயர்க்குழப்பப் பிரச்சனைகள் தீரும்வரை எழுதும் எண்ணம் இல்லை. (வேலை நிறுத்தப் போராட்டம்)
எனக்கே எழுத வேணும்போல் தோன்றினால் எழுதுவேன்.

சயந்தன் said...

//ஆனாலும் பெயர்க்குழப்பப் பிரச்சனைகள் தீரும்வரை எழுதும் எண்ணம் இல்லை//

ஆனால் நான் எழுதுவன்.. (நானே யார் என்னை கூப்பிடுவினம் எண்டு பாத்துக்கொண்டிருக்கிறன்.. இதுக்குள்ளை மானமாவது மண்ணாங்கட்டியாவது.. கறுப்பி நன்றி.. எழுதுறன் கொஞ்சம் லேற்றாக..

கறுப்பி said...

உண்மைதான் பெயரிலி. யாருக்காவது வாசிக்க நிறம்ப விருப்பமிருந்தால் கலியாணம் கட்டாதேங்கோ. அப்பதான் பிச்சல் பிடுங்கல் இல்லாமல் வாசிக்கலாம். கட்டுற எண்டு முடிவெடுத்தால் நீங்கள் வாசிக்க விரும்பிற தற்போதுள்ள புத்தகங்களை வாசித்து முடித்து விட்டுக் கட்டுங்கள். இல்லாவிட்டால் அவற்றைக் கையால் தொட குறைஞ்சது பதினைஞ்சு வருஷமாவது எடுக்கும்.

எனக்குத் தெரியும். சயந்தன் வசந்தனில ஒருத்தர்தான் எழுதுவீனம் எண்டு. ஹ ஹ ஹ

குழைக்காட்டான் நன்றி

ரவி ஸ்ரீநிவாஸ் said...

கட்டுற எண்டு முடிவெடுத்தால் நீங்கள் வாசிக்க விரும்பிற தற்போதுள்ள புத்தகங்களை வாசித்து முடித்து விட்டுக் கட்டுங்கள்

அது வரைக்கும் அந்த நபர் காத்திருக்க வேண்டுமே. இப்படி ஒரு காரணம் சொல்லாலேன்று தெரியாமல் போய்விட்டதே :>