Tuesday, March 08, 2005

பெண்கள் தினம்

பெண்கள் தினம் என்று மார்ச் மாதம் 8ம் திகதியைப் பிரகடனப்படுத்திப் பெண்களுக்குப் பெருமையைச் சேர்த்திருக்கின்றார்கள் ஆண்கள். “அங்கவீனம் உற்றோர் நாள்” கறுப்பர் நாள், “முதியோர் நாள்”, “தாய் நாள்”, “தந்தை நாள்??” என்பது போல் பெண்களுக்காக ஒருநாள். எல்லா சிறுபான்மை பாதிக்கப்பட்டவர்களுக்கும் விசேடமாக ஒருநாள். தம் வலியை மறந்து அவர்கள் சந்தோஷித்திருக்க. முதியோர் இல்லத்தில் பிள்ளைகளால் விடப்பட்ட முதியோரிற்கும், கை விடப்பட்ட அப்பாவிற்கும், அம்மாவிற்கும், இன்னும் அங்கவீனம் உற்றவர்களுக்கும், பெண்களுக்கும் ஒரு விசேட நாள் இதற்காகப் பெண்ணாப் பிறந்த பலர் பெருமை கொள்கின்றார்கள். இந்த நாளில் மட்டும் பெண்களின் சாதனைகள் நினைவு கூரப்படுகின்றன. (மற்றைய நேரங்களில் மறந்து போனதால்)

ஆண்களுக்காக ஒரு விசேஷ நாள் ஏன் இல்லாமல் போனது? கணவனாக, அரசிலயல்வாதியாக, தொழில்அதிபராக எந்தத் துறையை எடுத்துக் கொண்டாலும் தோல்வியைத் தழுவிக்கொண்டிருக்கும் இந்த ஆண்களை குஷிப்படுத்த ஒரு விசேட நாள் ஏன் வைக்க நாம் மறந்தோம். அழகான இந்த உலகத்தை பாதை விலக்கி, ஆதாள பாளத்திற்குள் கொண்டு செல்லும் இந்த பெரும்பான்மை ஆண்களின் இயலாத்தனத்தை ஒருநாள் அவர்கள் நாளாகப் பிரகடணப்படுத்திக் கொண்டாடுவதன் மூலம் ஆண்கள் கொஞ்சம் மகிழ்ந்து போவார்கள் அல்லவா? ஆண்கள் பலவீனமானவர்கள் உடலால் அல்ல மனதால். திருமணமாகிக் குடும்பம் என்ற கட்டுக்குள் வந்தவுடன் தாயில் சார்ந்திருந்த ஆண் மகன் மனைவியில் சாரத் தொடங்குகின்றான். தான் உட்கொள்ளும் உணவைச் சமைப்பது கூட அவனால் முடியாமல் போகின்றது. அவன் உடைகள், உடமைகள் இருக்கும் இடம் அவனுக்குத் தெரிவதில்லை. குழந்தை வளர்ப்பு? ஊகூம் கேட்க வேண்டியதில்லை. மனைவியை இழந்து போகும் ஆண்களுக்கு ஒரு பெண் துணையின்றிக் குடும்பத்தைக் கட்டிக்காக்க முடிவதில்லை. அவனுக்கு உடனேயே மறுமணம் தேவைப்படுகின்றது. இதுவும் ஒருவகை அங்கவீனம் தானே? இப்படி இருக்கும் போது அவர்களை இந்த உலகம் கண்டு கொள்ளாமல் போகலாமா?

97:3 வீதத்தில் ஆண் பெண் உடல் வலிமையில் 3 சதவீதப் பெண்கள் மட்டுமே ஹோர்மோர்களின் தரத்தில் ஆண்களுக்கு இணையாக இருக்கின்றார்கள். இருந்தும் ஒப்பீட்டளவில் உடல் உழைப்பிலும், மனவலிமையிலும் பெண்கள் மிகவும் உச்சத்தில் இருக்கின்றார்கள். பெண்கள் உலகத்தில் தற்போது ஆண்களின் தேவை மிகவும் மருகி வருகின்றது. ஆண்களின் அசட்டைத்தனம், மிதமிகுந்த தலைக்கனம் கூடிய தன்நம்பிக்கை, அலட்சியம் போன்றவற்றால் பெண்களிடையே ஓரினச்சேர்க்கை அதிகரிக்க வாய்ப்பு இருக்கின்றது. இது பெண்களின் உலகத்தில் ஆண்களின் தேவையை முற்றாக ஒழித்து விடக் கூடும். இனப்பெருக்கம் வேண்டி ஆண்களின் விந்தினை மட்டுமே பெண்கள் செயற்கையாகப் பெற்றுக்கொள்ளும் நிலைக்கும் வரக்கூடும். “ஆண்கள் ஜாக்கிரதை”
ஆண் உலகை துணிவோடு எதிர்நோக்கும் பெண்களுக்கு இந்த “பெண்கள் தினம்” ஒரு பொருட்டல்ல. மதம், கலாச்சாரம், சமூகம் பொன்றவற்றால் தினம் தினம் நசுக்கப்படும் பெண்களுக்காகக் குரல் கொடுக்கும் ஒருநாள் அல்ல பல நாட்கள் தேவை. அந்தக் குரல் கொடுப்பு அவர்களின் இந்த ஒடுக்கப்பட்ட வாழ்க்கை முறையில் ஏதாவது மாற்றத்தைக் கொண்டு வருமெனின். வெறுமனே பொழுது போக்கிற்காக ஒருநாளைப் பெண்களுக்காகப் பிரகடனப்படுத்தி விட்டு தினம் தினம் ஒடுக்குமுறைக்குள் ஆளாகி வரும் பெண்களைக் கண்டு கொள்ளாத அமைப்புக்களின் பெண்கள் தினக் கொண்டாட்டமும் அறிக்கையும் எதற்காக?

3 comments:

Muthu said...

கறுப்பி,
உங்களின் பார்வையில் இருந்து நான் வேறுபட்டுச் சிந்திக்கிறேன். உலகத்தில் எத்தனையோ நாட்கள் இருக்க நாம் ஏன் குறைப்படுத்தப்பட்ட சிலநாட்களுடன் பெண்கள் தினத்தை சம்பந்தப்படுத்தி குழப்பிக்கொள்ள வேண்டும்?.

காதலர் தினம், குழந்தைகள் தினம், ஆசிரியர் தினம், புனிதர் தினம் என்று இன்னும் எத்தனையோ பெருமை மிக்க நாட்கள் இருக்கின்றனவே. ஆண்கள் தினமும் கூட இருக்கிறது. ஆனால் அந்த நாள் எது என்றுகூட பெரும்பால ஆண்கள் அறிந்திருக்கவில்லை என்பதில் எனக்குக் கொஞ்சம் வருத்தம்தான் :-). இந்த வருடத்தில் இருந்தாவது ஆண்கள் தங்கள் நாளை பெண்கள்போல கொண்டாட ஆரம்பித்தால் நன்றாகத்தான் இருக்கும். முடிந்தால் எனது வலைப்பூவில் அது பற்றி எழுதி ஆண்குல மக்களின் விழிப்புணர்வை அதிகரிக்க சேவை செய்ய முயலவேண்டும். :-)

அது சரி. பெண்கள் தினம் என்று ஒன்று இருப்பது ஏன் உங்களுக்குப் பிடிக்கவில்லை என்றுதான் எனக்குத் தெரியவில்லை.

Anonymous said...
This comment has been removed by a blog administrator.
கறுப்பி said...

பெண்கள் தினம் உருவானதின் வரலாற்றைத் தாங்கள் அறிந்து கொண்டால் தெரியும்.
அடக்குமுறையால் பாதிக்கப்படும் பெண்களை ஊக்கப்படுத்தி அவர்களை அடக்கு முறைக்குள் இருந்து வெளியே கொண்டு வருவதற்காகவும், பெண்கள் செய்த சாதனைகளை நினைவு கூருவதற்காகவும், இப்படி இரண்டாம் பட்சமாகப் பெண்களை இந்த ஆண் உலகம் வரிந்து பின் அவர்களைச் சமாதானப்படுத்தி “தைலம்” தடவுவது போல்த்தான் நான் பார்க்கின்றேன். அடக்குமுறை என்று ஒன்று இருக்கும் இடத்தில்தானே சுதந்திரம் தேவை. அது எதற்கு உருவானது. எதற்காகப் பெண்கள் அடையாளப்படுத்தப்பட வேண்டியவர்களா இருக்கின்றார்கள். மாலன் கூறலாம் யதார்த்தம் அது என்ன செய்வதென்று. ஒத்துக் கொள்கின்றேன். இருப்பினும் அந்த யதார்த்தை நான் வெறுக்கின்றேன் என்பதில் தவறு இல்லைத் தானே?.

//International Women's Day is the story of ordinary women as makers of history; it is rooted in the centuries-old struggle of women to participate in society on an equal footing with men. In ancient Greece, Lysistrata initiated a sexual strike against men in order to end war; during the French Revolution, Parisian women calling for "liberty, equality, fraternity" marched on Versailles to demand women's suffrage.
The idea of an International Women's Day first arose at the turn of the century, which in the industrialized world was a period of expansion and turbulence, booming population growth and radical ideologies.\\