Friday, March 11, 2005

வண்ணாத்திக்குளம்

குறுநாவல் விமர்சனக் கூட்டமும் விமர்சனமும்


ஒஸ்ரேலியாவில் வசிக்கும் மிருக வைத்தியர் டொக்டர் நடேசனின் படைப்பான “வண்ணாத்திக்குளம்” குறுநாவல் வெளியீடும் விமர்சனக் கூட்டமும் தை மாதம் 2ம் திகதி ஸ்புரோவில் இடம் பெற்றது. ஆறு மணிக்குத் தொடங்கிய விழாவிற்கு நான் சென்றது 20நிமிடங்கள் தாமதித்தே. அப்போது இந் நிகழ்வைத் தலைமை தாங்கி நாடாத்திய அ.கந்தசாமி அவர்கள் “வண்ணாத்திக்குளம்” பற்றி தனது சிறிய விமர்சனத்தை வழங்கிக்கொண்டிருந்தார். தொடர்ந்து திரு.ராஜேந்திரா, டி.பி.எஸ் ஜெயராஜ், காலம் செல்வம், தேன்மொழி ஆகியோர் தமது விமர்சனங்களை வைத்த பின்னர் நடேசன் அவர்கள் நன்றி உரை வழங்கி அதன் பின்னர் வாசகர்களின் விமர்சனங்கள் கேள்வி பதில் என்று நிகழ்வு நிறைவு பெற்றது. இந்நிகழ்வில் எழுத்தாளர் நடேசனின் இன்னுமொரு படைப்பான “வாழும் சுவடு”களும் விற்பனைக்கு வந்தது. வாசகர்களால் வாங்கப்படும் இவ்விரு படைப்புகளுக்குமாகச் சேரும் பணம் சுனாமி அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட எம்மக்களுக்குப் போய் சேரும் என்றும் அறிவிக்கப் பட்டது.

“வண்ணாத்திக்குளம்” குறுநாவல் 80-83ம் ஆண்டுகளில் எமது நாட்டைப் பின்னணியாகக் கொண்டு எழுதப்பட்டுள்ளது. இந்த குறுநாவல் காதலைச் சொல்கிறதா? இல்லை அரசியலைச் சொல்கிறதா? என்று விமர்சகர்கள் கொஞ்சம் தடுமாறினார்கள். எதைச் சொல்ல வருகிறது என்பதை கதை சொல்லி வாசகர்களுக்கு அடையாளப்படுத்தும் தேவை என்ன என்பது எனக்குப் புரியவில்லை. காதலும் அரசியலும் எல்லோர் வாழ்க்கையிலும் பின்னிப் பிணைந்த ஒன்று முக்கியமாக எமது நாட்டில் அரசியலின் பாதிப்பு என்பது எல்லா மக்களுக்கும் பொதுவாகிப்போய் விட்ட ஒரு விடையம். எனவே எந்தப்படைப்பாயினும் அரசியல் காதல் என்பதிலிருந்து எந்த ஒரு படைப்பாளியும் தப்பிவிட முடியாது.

வண்ணாத்திக்குளம் சு10ரியன் எனும் ஒரு தமிழ் இளைஞனின் ஒரு குறிப்பிட்ட காலத்தைக் குறித்து நிற்கின்றது. கதை சொல்லி கனமான ஒரு கருவை எடுத்து, கனமான பல தளங்களை இணைத்து ஒரு கனமற்ற குறுநாவலை வாசகர்களுக்குப் படைத்துள்ளார் என்பது எனது சுருக்கமான விமர்சனம். எந்த ஒரு விடையத்தையும் கதை சொல்லி ஆழமாகப் பார்க்கவில்லை. தனது மனதிற்குள் ஆழமாக வடிவமைத்து விட்டு எழுதும் போது மேலோட்டமாக வடித்துவிட்டாரோ என்ற அச்சம் எனக்குள்.. அதே வேளை தான் மனதுக்குள் வடித்த அந்த ஆழமாக கதைவடிவம் வாசகர்கள் படிக்கும் போது அவர்களைச் சேர்ந்து விடும் என்று அவர் கணித்திருக்கவும் கூடும் என்று எண்ணுகின்றேன்.

கதை சொல்லி சேகுவேரா என்று பொதுவாக அழைக்கப்பட்ட ஜே.வீ.பி யினரின் அரசியல் கொள்கை, நோக்கு என்பவற்றையும் அவர்கள் தமிழ் சிங்கள மக்களால் எப்படிப் பார்க்கப் படுகின்றார்கள் என்பது பற்றியும் எழுத்தில் வடித்ததிலும் பார்க்க, இக்குறுநாவலை விமர்சனம் செய்த டி.பி.எஸ் ஜெயராஜ் அது பற்றி விளக்கமாக் கூறினார். அத்தோடு முன்னுரை, தன்னுரை என்பவற்றில் டி.பி.எஸ் ஜெயராஜ் படைப்பாளி அதிகப்பிரசங்கித் தனத்தையும், மேதாவித்தனத்தை காட்டாது சொற் சிக்கனத்துடன் படைத்துள்ளார் என்றும், பாண்டித்தியம் நிறைந்த திறனாய்வு கொள்ளும் வித்தகர்கள் இது இலக்கியமா என்று கேள்வி எழுப்பக் கூடும் என்றும் கூறியுள்ளார். இந்தக் கேள்வி விமர்சகருக்கே ஏற்பட்டதா என்ற சந்தேகம் எனக்கு. மிக மேலோட்டமாக ஆழமான ஒரு கருவைப் படைக்கும் படைப்பாளியை தட்டிக்கொடுப்பதிலும் பார்க்க விமரச்சனங்கள் வைத்து அவரின் எழுத்தை ஆழமாக்க விமர்சகர்கள் உதவ வேண்டும்.

படைப்பாளியான நடேசன் நன்றியுரையின் போது மிகவும் அடக்கமாக நான் பெரிய இலக்கியவாதியல்ல என்னுடைய பல மறக்கமுடியாத அனுபவங்களை குறிப்பாக எழுதி வைத்து பல ஆண்டுகளின் பின்னர் நேரம் கிடைத்த போது அதனை ஒரு படைப்பாக்கினேன் இது நிறைவான ஒரு படைப்பு என்று நான் கூறவில்லை என்றும் கூறினார்.

சு10ரியன் எனும் இக்குறுநாவலின் நாயகனை படைப்பாளி வாசகர்கள் மனதில் ஒரு நன்குணம் கொண்ட, முற்போக்குத் தனமான அறிவாளியாகத் தொடக்கத்திலிருந்தே காண்பித்து விட்டுப் பின்னர் சு10ரியன், சித்ரா எனும் சிங்களப்பெண்ணைக் கண்டு காதல் வயப்படும் போது அவனை ஒரு பதினாறு வயது இளைஞன் போல் சித்தரித்துள்ளார். வண்ணாத்துப்பூச்சி போல்க் கண் சிமிட்டும் அவள் அழகில் அவன் மயங்கும் போதே தனது மனதையும் அவளிடம் சு10ரியன் பறிகொடுத்து விடுகின்றான். அ.கந்தசாமி, காலம் செல்வம் போன்றோர் தமது விமர்சனத்தில் குறிப்பிட்டது போல் கதையின் நாயகி சித்ரா வெறும் காதல் பதுமையாக வந்து செல்லாமல்ää சித்ரா மேல் சு10ரியனுக்குக் காதல் வருவது அவளின் அறிவுபூர்வமான, செயலாலோ, பேச்சாலோ என்பது போல் காட்டியிருந்தால் சித்ரா எனும் நங்கை வாசகர்கள் மனதில் ஓரு நல்ல நாயகியாகப் பரிணமித்திருப்பாள்.
இதே வேளை எனக்குள் ஒரு சிறு குழப்பம். சு10ரியனும், சித்ராவும் இருமுறை சந்தித்துக் கொண்ட பின்னர், சேலை வாங்குவதற்கென்று சு10ரியன் வவுனியா செல்ல முடிவெடுத்து சித்ராவையும் வரும்படி கேட்டுக்கொள்கின்றான். இருவரும் பேருந்தில் சந்தித்துக் கொள்கின்றார்கள். வவுனியாவில் கடைத் தெருவில் பிரச்சனை, இதனால் இருவரும் மீண்டும் பேருந்து நிலையத்திற்கு வந்து காத்திருக்கும் போது சிங்கள ஆமி சு10ரியனின் மார்பில் துப்பாக்கியை வைத்துக் கேள்வி கேட்கின்றது, அவனைக் காக்க எண்ணிய சித்ரா சு10ரியனைத் தனது கணவன் என்று கூறுகின்றாள். எனது வாசிப்பின் புரிதலில் இருந்து சு10ரியனும், சித்ராவும் ஒருவருக்கொருவர் வாயால் தமது காதலைக் கூறவில்லையே தவிர, இருவரும் காதலிக்கத் தொடங்கி விட்டார்கள். அது இருவருக்குமே தெரிந்த ஒன்று, இந்த அனர்த்தத்தின் பின்னர் இருவருமாக சு10ரியனின் இடத்திற்கே செல்கின்றார்கள். சித்ராவின் அண்ணன் ருக்மனிடம் தற்செயலாகக் கடைத்தெருவில் சித்ராவைச் சந்தித்ததாக சு10ரியன் பொய் சொல்கின்றான். ஆனால் விமர்சகர்கள் அனைவரும் சித்ரா, சு10ரியனைக் கணவன் என்று கூறிய பின்னர் தான் அவர்களுக்குள் காதல் வந்ததாக விமர்சனம் செய்கின்றார்கள். அத்தோடு டி.பி.எஸ் ஜெயராஜ் அவர்கள் “மிஸ்டர் அண்ட மிஸிஸ் ஐயர்” திரைப்படத்தில் வரும் ஒரு காட்சியை இந்தக் காட்சியுடன் ஒப்பிட்டும் விமர்சித்தார். மிஸ்டர் அண்ட் மிஸிஸ் ஐயரில் ஒரு முஸ்லீம் இளைஞனிடம் தெரியாமல் தண்ணீர் வாங்கிக் குடித்து விட்டேனே என்று முகத்தைச் சுளிக்கும் பிராமணப் பெண், திருமணமானவள். வளர்க்கப்பட்ட முறை வாழ்க்கை முறை எப்படியாயினும் அவளுக்குள்ளும் மனிதநேயம் இருக்கின்றது என்பதை அவள் செய்கை காட்டி நிற்கின்றது. அத்தோடு ஊரின் அனர்த்தங்களில் இருந்து தப்பிச் செல்ல அந்த இளைஞனின் உதவி அவளுக்குத் தேவையும் படுகின்றது. ஆனால் வண்ணாத்திக்குளத்தின் நாயகி தனது காதலனைக் காக்க அவனைக் கணவன் என்கின்றாள். இதைத்தானே அனேக நாயகிகள் செய்வார்கள்.

மேலும் கலப்புத் திருமணம். சிங்களப்பெண், தமிழ் ஆணைக் காதலிக்கின்றாள். பெரும் புயல் ஒன்று வீசப்போவதாக எண்ணி வாசித்தேன். ஒரு வித சலசலப்பும் இன்றி மிகவும் இலகுவாக இரு குடும்பங்களிடமும் இருந்து பச்சைக் கொடி காட்டி விட்டார்கள். அதிலும் சிங்களக்குடும்பத்தில் மிகமிக எளிதாகக் காட்டி விட்டார்கள். அது கொஞ்சம் கொச்சைத் தனமாக இருந்தது போல் பட்டது. ஒரு தமிழ் இளைஞன் வீட்டிற்கு வருகின்றான். சில காலத்தின் பின்னர் மகளைப் பெண் கேட்கின்றான். பெண்ணின் தாயார் சிறிது வெட்கம் கூடப்படுகின்றார். அவன் ஒரு தமிழ் இளைஞன். அவன் குடும்பம், உறவுகள் எப்படியானவை. மகள் எதிர்காலத்தில் எப்படியான சிக்கல்களைச் சந்திக்கப் போகின்றாள் என்ற எந்த வித எண்ணமும் இன்றி பல்கலைக்கழகத்தில் படித்த நல்ல வேலையில் இருக்கும் இளைஞனைக் காதலிக்கும் யாழ்ப்பாணத்துத் தமிழ் பெண்களை “மாப்பிள்ளை பிடித்து விட்டாள்” என்ற பதத்தில் விமர்சிப்பது போல்தான் இதிலும் நல்ல படித்த இளைஞன் என்பதால் எந்த சங்கோஜமுமின்றி பெண்ணின் பெற்றோர் சம்மதம் கூறியது எனக்குச் சங்கோஜமாக இருந்தது. அடுத்து சு10ரியனின் குடும்பம். மகன் காதலிப்பது சிங்களப்பெண் என்று தெரிந்த போது தந்தையின் சில விதண்டாவாத விமர்சனத்தோடு அங்கும் பிரச்சனை முடிகின்றது. காதல், அரசியல் என்று எழுத்து சென்று கொண்டிருக்கும் போது மனதில் நிற்கும், மனதைத் தாக்கும் சம்பவங்கள் வரப்போகின்றது என்ற எதிர்பார்ப்பை எனக்குள் பல முறை எழுப்பிப் பின்னர் ஒன்றுமே இல்லாது போய் விட்டது எனக்குள் பலத்த ஏமாற்றத்தைத் தந்தது.
படைப்பாளி இந்த எழுத்து முறையைத் தான் படைப்பு முழுவதிலும் கொண்டு செல்கின்றார். மனித வாழ்க்கை அனர்த்தங்களால் அடிபட்டுப் போய்க் கொண்டிருக்கும் வேளையில், ஒவ்வொரு சிறிய நகர்வும் வாசகர்களை எந்த விதப் பாதிப்பிற்குள்ளும் கொண்டு செல்லாமல் நழுவி நழுவிச் சென்று கொண்டிருக்கின்றது. அனைத்துச் சம்பவங்களையும் ஒரு தகவல் தரும் வடிவில் இங்கே ஆமி அடித்தது, அங்கே பெடியங்கள் தாக்கினாங்கள் என்பதாயும், விமர்சகர் காலம் செல்வம் குறிப்பட்டிருந்தது போல் புதிதாக ஒரு இடத்திற்கு நாயகன் செல்லும் போது அந்த இடத்திற்கு வாசகர்களையும் அழைத்துச் செல்லக் கதை சொல்லி தவறிவிட்டார். இருந்தும் அரசியல் பிரச்சாரம் செய்யும் பல சந்தர்ப்பங்கள் கதை சொல்லிக்குக் கிடைத்திருந்தும் அதனைச் செய்யாதது வாசகர்களிற்கு படைப்பாளி மேல் ஒரு மதிப்பைக் கொண்டுவந்திருக்கும்.

இப்படைப்பில் வரும் தலைமுடி வெட்டும் ஆறுமுகம் எனும் பாத்திரத்தினூடாக, பலரின் அரசியல் பார்வைகளை படைப்பாளி கொண்டு வந்திருக்க முடியும், தவறி விட்டார். அதே பொல் சுந்தரம், ருக்மன், காமினி போன்றவர்களையும் ஏனோ வீணடித்து விட்டார்.

இனக்கலவரங்கள், மாறுபட்ட அரசியல் கொள்கை கலப்புத் திருமணம் போன்ற காத்திரமான தளங்களையும், தனது சொந்த அனுபவங்களான மிருகப்பரிசோதனை போன்றவற்றையும் இன்னும் கொஞ்சம் சிரத்தை எடுத்து படைப்பாக்கியிருந்தால், அண்மையில் பலராலும் பாராட்டப்பட்ட “புலிநகற்கொன்றை” போன்ற ஒரு காத்திரமான முழு நாவலை நடேசன் அவர்களால் கொடுத்திருக்க முடியும்.

விமர்சகர்கள் அனைவராலும் ஒட்டு மொத்தமாகத் தரப்பட்ட ஒரு விமர்சனம், இப்படைப்பில் பல குறைகள் இருப்பினும் வாசகர்களுக்கு படிக்கும் போது சோர்வைத் தரவில்லை.. படித்து முடிக்கும் ஆவல் இருந்தது என்று. என்னுள்ளும் அப்படியான ஒர் உணர்வு எழுந்தது, அதற்குக் காரணம் நாம் அறியாத மேட்டுப்பாளையம், திருநெல்வேலி, பாண்டிச்சேரி, கொல்லம் என்று இல்லாமல், கொக்குவில், வவுனியா, மதவாச்சி, பதவியா, கொழும்பு என்று எம்மோடு தொடர்புடைய எம்மைப் பழைய நினைவிற்குள் இழுத்துச் செல்லும் ஊர்களிற்கு கதை சொல்லி எம்மை அழைத்துச் சென்றது தான்.
விமர்சகர் ராஜேந்திரா யாழ்ப்பாணத்துப் பெண்களின் கோழைத் தனத்தையும், பிற்போக்குத் தனத்தையும் கடுமையான விமர்சித்தார். மனதிற்கு வேதனையாக இருந்தாலும் அதுதான் உண்மை என்பதனால் மௌனமாக இருந்து விட்டேன். கலப்புத் திருமணம் வேண்டாம் கடைசி சாதி, தராதரம் பார்க்கும் தன்மையையாவது யாழ்ப்பாணமக்கள் விட்டொழிக்க மாட்டார்களா.

9 comments:

-/பெயரிலி. said...

அதற்குக் காரணம் நாம் அறியாத மேட்டுப்பாளையம், திருநெல்வேலி, பாண்டிச்சேரி, கொல்லம் என்று இல்லாமல், கொக்குவில், வவுனியா, மதவாச்சி, பதவியா, கொழும்பு என்று எம்மோடு தொடர்புடைய எம்மைப் பழைய நினைவிற்குள் இழுத்துச் செல்லும் ஊர்களிற்கு கதை சொல்லி எம்மை அழைத்துச் சென்றது தான்.

கறுப்பி said...

So what No Name?

கறுப்பி said...
This comment has been removed by a blog administrator.
கறுப்பி said...
This comment has been removed by a blog administrator.
-/பெயரிலி. said...

/So what No Name?/
Thousand and one apologies, Blacky. What I had in mind in reply is "totally agreeing with with your (above) sentence." Unfortunately, I missed it while sending the post. Sorry for the confusion.

கறுப்பி said...

apology accepted.

கறுப்பி தன்ர குட்டி நாட்டை ரொம்பத்தான் மிஸ் பண்ணுறாள். தாங்களும் அந்தக் குட்டி நாட்டான் எண்டாத் தெரிஞ்சிருக்கும் கறுப்பீன்ர வேதனை.
கறுப்பி இந்தக் கிழமை ரொம்ப பிஸி. சனியும் ஞாயிறும் வேஷம் கட்டி மேடையில ஆடப்போறாள். ரெண்டு ஆம்பிளைகளுக்கு ஒரு பொம்பிளையா..
எழுத்தெல்லாம் அதுக்குப் பிறகுதான

-/பெயரிலி. said...

/ சனியும் ஞாயிறும் வேஷம் கட்டி மேடையில ஆடப்போறாள்./
பதிவுகளிற் கண்டேன்.


/தாங்களும் அந்தக் குட்டி நாட்டான் எண்டாத் தெரிஞ்சிருக்கும் கறுப்பீன்ர வேதனை./
அப்படியென்கிறீர்கள் ;-)

கறுப்பி said...

hmm, நல்லா எழுதியிருக்கிறீங்கள். எழுதி நாங்கள் என்னத்தைக் கிழிச்சம். என்ன செய்வம். கறுப்பிக்கு அழுகை அழுகையா வருகுது. எண்டாலும் கறுப்பீன்ர சீவன் எங்கட குட்டித்தீவிலதான் போகும். இல்லாட்டிப் பேயா அலையும்

-/பெயரிலி. said...

/எண்டாலும் கறுப்பீன்ர சீவன் எங்கட குட்டித்தீவிலதான் போகும். இல்லாட்டிப் பேயா அலையும்/

ஐயோ! கெதியிலே போய் இலங்கையிலே உயிரை விடுங்கோ. ரிக்கெற் செலவு என்ரை. இப்ப, ஆளை விடுங்கோ. :-))