Tuesday, March 01, 2005

Osama

Winner of two awards at the 2003 Cannes Film Festival
Osama Directed By: Siddiq Barmak
Afghanistan/Japan/Ireland, 2003


தலிபான் ஆட்சியின் போது ஆப்கானிஸ்தானில் பெண்கள் வேலைக்குச் செல்வது தடைசெய்யப்பட்டது. அப்படியானால் ஆண்கள் இல்லாத குடும்பத்தின் நிலை? இதனை மையமாக வைத்து வெளிவந்திருக்கின்றது “ஒசாமா” எனும் ஆப்கான் திரைப்படம்.
தனது கணவனை கபால் போரிலும் சகோதரனை ரஷ்யப் போரிலும் இழந்து விட்டு பாட்டி, 12 வயது மகள் என்று ஆண் துணையின்றித் தனித்து நிற்கின்றாள் தாய். பெண்கள் வேலைக்குச் செல்லக் கூடாது என்ற தலிபான் ஆட்சியின் கீழ் வீட்டிற்கு உணவிற்காக மகளை ஆண் பிள்ளை போல் மாற்றி வேலைக்கு அனுப்பு என்ற பாட்டி கூற முதலில் மறுத்தாலும் வேறுவழியின்றித் தனது மகளை ஆண் போலாக்கி “ஒசாமா” என்று பெயரிட்டு குடும்ப நண்பர் ஒருவரின் கடைக்கு வேலைக்கு அனுப்புகின்றாள்.

மருண்ட கண்களுடன் வேலைக்குச் செல்லும் ஒசாமா வேலை முடிந்ததும் முதலாளி கொடுக்கும் உணவுப் பொருட்களுடன் வீட்டிற்கு ஓடி வந்து சேர்ந்து விடுவாள். தலிபான்களின் கையில் அகப்பட்டால் மரணதண்டனை நிச்சயம் என்பது அவளுக்குத் தெரியும்.
தலிபான்களால் அனைத்து சிறுவர்களும் இராணுவப்பயிற்சிக்கும், குர்ரான் படிப்பதற்கு அழைக்கபடுகின்றார்கள். வேறு வழியின்றி ஒசாமாவும் செல்கின்றாள். அவளை பெண் என்று தெரிந்த அவள் வீட்டிற்கு அண்மையில் இருக்கும் ஒரு சிறுவனைத் தவிர அனைத்துச் சிறுவர்களும் ஒசாமாவை பெண் போல மென்மையாகவும் அழகாகவும் இருக்கிறான் என்று கேலி செய்கின்றார்கள். அவர்களின் கேலிப்பேச்சிலிருந்து அந்தச் சிறுவன் ஒசாமாவைக் காப்பாற்றுகின்றான். ஆனால் எவ்வளவு காலத்திற்கு?
சிறுவர்களுக்கு குளிக்கும் முறை காட்டிக் கொடுக்கப்படுகின்றது. உடைகளைக் களைந்து விட்டு தண்ணீர்த் தொட்டிக்குள் ஏறியிருந்து ஆண் குறியைக் கழுவும் முறை சொல்லிக் கொடுக்கப்பட்டுக் கொண்டிருக்கும் போது ஒசாமா அவர்கள் கண்களின் படாமல் ஒளித்துக் கொள்கின்றாள். ஆனால் சிறுமிதானே ஆர்வ மிகுதியால் தலையை நீட்டிப்பார்க்க அவளையும் அழைத்துக் குளிக்கும் படி உத்தரவிடுகின்றார்கள். இது இப்படத்தின் ஒரு முக்கிய காட்சி ஆனால் மிகவும் எளிதாக ஒசாமா மேல் சட்டையை மட்டும் களைந்து விட்டுத் தண்ணீருக்குள் போகின்றாள். 12 வயதுச் சிறுமியான அவள் மார்பகங்கள் தட்டையாக ஒரு ஆணைப் போல இருக்கின்றன. இது எப்படிச் சாத்தியம் என்று கேள்வி கேட்காமல் திரைப்படத்தைப் பார்க்க வேண்டிய கட்டாயம்.
சில தினங்களின் பின்னர் அவளை சிறுவர்கள் “நீ உண்மையிலேயே ஒரு ஆண் எனில் துணிவாக மரத்தில் ஏறு” என்று கட்டளை இட அவள் துணிந்து ஏறுகின்றாள். ஆனால் உச்சிக்குப் போன பின்னர் பயந்து தன்னை இறக்கி விடும் படி அழுதவளுக்கு அருகில் தலிபான் மேற்பார்வையாளர்கள் வருகின்றார்கள். அவர்களுக்கு அவள் ஒரு பெண்ணோ என்ற சந்தேகம் எழுந்த போது அங்கிருந்து தப்புவதற்காக அவள் ஓடுகின்றாள். சிறுவர்கள் கூச்சலுடன் ஓடிச்சென்று ஒசாமாவைப் பிடித்து வர அவள் ஒரு கயிற்றில் கட்டப்பட்டு கிணற்றுக்குள் இறக்கப்படுகின்றாள். வாய்விட்டுக் கதறிக் கதறி தாயைக் கூப்பிடும் அவளை வெளியே எடுக்கின்றார்கள் அவள் தொடைகளிலும் கால்களிலும் இரத்த ஓட்டம். இந்த இரத்த வெளியேற்றம் பெண் என்பதை நிச்சயப்படுத்த அவள் சிறையில் அடைக்கப்படுகின்றாள்.


சிறையில் பெண் உரிமைக்காகக் குரல் கொடுத்த பல ஆப்க்கான் பெண்கள் ஏற்கெனவே சிறையில் அடைக்கப்பட்டிருக்கின்றார்கள்.
தீர்ப்புக்கான நாள் ஒன்றில் பெண்கள் வேலைக்குச் செல்ல உரிமை வேண்டும் என்று போராட்டம் நடாத்திய போது அங்கு சென்ற வெள்ளை இன நிருபர் ஒருவர் அந்தப் போராட்டத்தை ஒளிப்பதிவு செய்ததற்காக முதலில் அவருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்படுகின்றது. பின்னர் “ஒசாமா”வை அழைக்கின்றார்கள். அவளுக்குத் தீர்ப்பு வழங்கும் முன்பு அவர்களின் குடும்ப நண்பன் ஒருவன் தலைவரிடம் அவளைக் கொல்லாது தாங்கள் திருமணம் செய்து கொள்ளுங்கள் என்று கேட்ட போது அந்த வயது முதிர்ந்த தலைவர் அதற்கு ஒத்துக் கொள்கின்றார். அதனால் ஒசாமா உயிர் பிழைக்கின்றாள்.
அமெரிக்கா தலையிட்டு தலிபான் ஆட்சியை நீக்கியது இல்லாவிட்டால் ஆப்பானிஸ்தான் நிலை இன்னும் இப்படியேதான் இருந்திருக்கும் என்று ஒரு வெள்ளை இன ஆண் ஒருவர் பெருமை அடித்துக் கொண்டார்.

பெண்அடிமைத் தனத்தின் ஆரம்பம் மதங்களில் இருந்து உருவாகியிருக்கின்றது. இருந்தும் இஸ்லாம் மதத்தைப் போல் பெண்களுக்கான அடிப்படைத் தேவைகள் மறுக்கப்படுவது எந்த ஒரு மதத்திலும் காணப்படவில்லை. மாறாக வேறு எந்த ஒரு மதமும் மதக் கொள்கையில் இருந்து தம்மை நீக்கிக் கொள்ள நினைப்பவர்களுக்கு கடுமையான தண்டனைகள் வழங்குவதுமில்லை. இஸ்லாமின மத மக்கள் மட்டுமே வேற்று மதங்களாலும் தம் சொந்த மதத்தினாலும் பாதிக்கப்படும் துர்பாக்கிசாலிகள் ஆகின்றார்கள். இஸ்லாம் மதத்திலிருந்து தன்னை விடுவித்துக் கொண்டு ஹொலண்ட் நாட்டில் சஞ்சம் புகுந்த சோமாலிய நாட்டுப் பெண்மணி ஹர்ஷி அலிக்கு அவர் தனது மதத்தின் மேல் கேள்வி எழுப்பியதற்காக இஸ்லாமிய மதத் தலைவர்கள் மரணதண்டனை விதித்துள்ளார்கள். மேலும் ஈழப்போராட்டத்தின் போது எம்நாட்டில் வாழும் முஸ்லீம் மக்களுக்கு நடந்த கொடுமை யாவரும் அறிந்ததே.
“எம்மதமும் எனக்குச் சம்மதமில்லை"

10 comments:

-/பெயரிலி. said...

/மேலும் ஈழப்போராட்டத்தின் போது எம்நாட்டில் வாழும் முஸ்லீம் மக்களுக்கு நடந்த கொடுமை யாவரும் அறிந்ததே. /
இந்தக்கூற்றுக்கும் மீதிக்கட்டுரைக்குமான தொடர்பு என்னவோ?

கறுப்பி said...

அதை எழுதி விட்டேனே. முஸ்லீம் மக்கள் மட்டும்தான் மற்றைய மத மக்களாலும் தம் மத மக்களாலும் பாதிக்கப்படும் ஒரே ஒரு மதம் என்று கூறினேன் அல்லவா? உண்மையா இல்லையா?

Thangamani said...

//மேலும் ஈழப்போராட்டத்தின் போது எம்நாட்டில் வாழும் முஸ்லீம் மக்களுக்கு நடந்த கொடுமை யாவரும் அறிந்ததே.
“எம்மதமும் எனக்குச் சம்மதமில்லை” //

இந்த வரி செயற்கையாக இணைந்திருப்பதுபோல தோன்றுகிறது. ஹர்ஷி அலி குறித்து எழுதியிருக்கும் நீங்கள் இதைக்குறித்தும் எழுதியிருக்கலாம்.

அது இஸ்லாமிய மதவாதத்தை மட்டுமல்லாது, அதனோடு இயைந்த அரசியலையும் புரிந்துகொள்ள உதவியாய் இருந்திருக்கும். அப்போது பிரச்சனைக்குள்ளாவது வெறும் மதம் மட்டுமா அல்லது அதை முன்வைத்து செய்யப்படும் அரபு அரசியலா என்பதும் தெரியும். அது முஸ்லீம்களுக்கும், அவர்களால் மற்றவர்களுக்கும் விளையும் பிரச்சனையை அணுகியதாக இருக்குமென நினைக்கிறேன்.

ஏனெனில் அரசியலை நேரடியாக அணுகும் மதமாக இஸ்லாமை மட்டுமே நான் பார்க்க்கிறேன்.

கறுப்பி said...

இங்கே நான் அரசியலை ஆராய முனையவில்லை. அரசியலில் ஈடுபாடு அற்ற மதம் ஒன்றினால் முஸ்லீமாக அடையாளம் காட்டப்பட்ட (மத நம்பிக்கை அற்றவர்களாகவும் இருக்கலாம்) மக்கள் தமது மத அடையாளம் ஒன்றிற்காக பாதிப்பிற்குள்ளாவதையே கூறியிருக்கின்றேன். ஹர்ஷி அலி இஸ்லாமிய மதவாதிகளை எதிர்த்து நின்றவர். இஸ்லாமிய மதத்தை அல்ல.

Thangamani said...

நான் சரியாகக் குறிப்பிடவில்லை என நினைக்கிறேன். இஸ்லாமிய அரசியல் என்பதற்கு அந்த மக்கள் அரசியல் ஈடுபாடு கொண்டிருக்கவேண்டியதில்லை; மாறாக மதத்தலைமை அல்லது அடிப்படைவாதம் அப்படியொரு அரசியலைக்கொண்டிருக்கலாம்; அதை மதமென்ற பாவனையில் மக்களிடம் புழக்கத்துக்கு விடலாம். அதை ஆதரிக்கும் பொழுதே அவர்கள் உள்ளேயும் வெளியேயும் பிரச்சனைக்கு ஆளாகிறார்களா என்று பார்ப்பது அவசியம் என்று கருதினேன்.

அப்புறம் ஹர்ஷி அலியின் நாடக பாத்திரங்கள் தமது உடம்பில் பெண்களுக்கெதிரான குரான் வசனங்களை எழுதியிருந்தபடியே தோன்றினார்கள் என்றே படித்தேன்; இஸ்லாமைப் பொருத்தவரை அது நேரடியான மதத்தாக்குதலாகவே கொள்ளப்படும்.

-/பெயரிலி. said...

/ஹர்ஷி அலி இஸ்லாமிய மதவாதிகளை எதிர்த்து நின்றவர். இஸ்லாமிய மதத்தை அல்ல./இல்லை என்று நினைக்கிறேன்.
PBS- Religion பகுதியிலே அவர் சென்ற ஆண்டு கொடுத்த செவ்வி ஒன்றினைக் கவனியுங்கள்.
|She is Ayaan Hirsi Ali, a Somali-born Dutch legislator and former Muslim herself,|
==========

/அரசியலில் ஈடுபாடு அற்ற மதம் ஒன்றினால் முஸ்லீமாக அடையாளம் காட்டப்பட்ட (மத நம்பிக்கை அற்றவர்களாகவும் இருக்கலாம்) மக்கள் தமது மத அடையாளம் ஒன்றிற்காக பாதிப்பிற்குள்ளாவதையே கூறியிருக்கின்றேன்./இந்நிலை முஸ்லீங்களுக்கு மட்டுமே பொருந்துமென்று நினைக்கவில்லை. பொதுவாக, பிறப்பிலே (பெற்றோர் காரணமாக) ஒரு மதத்துக்கு "உரியவர்" என்று அடையாளம் காட்டப்பட்ட, ஆனால் தம்மளவிலே மத அடையாளங்களை முழுக்கப் புறக்கணித்தவர்களுக்கும் நிகழ்வதுதான். மார்க்ஸினை யூதர் என்று அடையாளமிடப்பட்டுத் தாக்கப்பட்டிருக்கின்றார்.

ஆனால், ஒஸாமா என்ற பெண் பற்றிப் பேசுகின்ற அளவிலே இலங்கையிலே முஸ்லீங்கள் மற்றோரினாலே தாக்கப்பட்டது (அதிலே உண்மை உண்டு என்பதை மறுக்கவில்லை - நீங்கள் இலங்கை அரசியலை மிகவும் கறுப்பு-வெளுப்பாக எளிமைப்படுத்த விரும்புகின்றீர்கள் என்பதாக எனக்குத் தோன்றுகின்றபோதுங்கூட) மிகவும் செயற்கையாக, உங்களின் நடுநிலைமையை வாசிக்கின்றவர்கள் நம்பும்படி முன்னிறுத்தத் திணிக்கப்பட்டதாகவே எனக்குத் தோன்றுகின்றது. எனது புரிதல் தவறாகவும் இருக்கக்கூடும்.
==========

தங்கமணி,
/அரசியலை நேரடியாக அணுகும் மதமாக இஸ்லாமை மட்டுமே நான் பார்க்க்கிறேன்./ உலக அரசியலிலே இந்நிலை ஈரானின் அயத்துல்லா புரட்சியின்பின்னாலே உண்மையாக இருப்பினுங்கூட (அல்லது மேற்குல ஊடகங்கள் அவ்வாறு காட்டினாலுங்கூட), மதநூல்களை என்ன விதமாகப் புரிந்து கொள்கின்றார்கள் என்பதைப் பொறுத்து, பின்பற்றுகின்றவர்கள் சிலராலே, அரசியலை நேரடியாக அணுகும் மதமாக பொதுவாக எல்லா மதங்களுந்தான் இருக்கின்றன. இஸ்ரேல் முதல் இன்றைய ஐக்கிய அமெரிக்க நாடுகள் வரைக்கும் இக்கூறுகளை நாங்கள் காணமுடியுமென்று தோன்றவில்லையா?

ஈழநாதன்(Eelanathan) said...

கறுப்பி ஈழப்போராட்டத்தில் முஸ்லிம்களுக்கு இழைக்கப்பட்ட தீங்கு பற்றி உங்களுக்குக் கருத்து இருக்கலாம்.ஆனால் வேறு ஒருந் ஆட்டில் முஸ்லிம் என அடையாளப்படுத்தப்பட்டவருக்கு இழைக்கப்பட்ட தீங்கிற்கும் இதற்கும் முடிச்சுப் போட்டு என்ன சொல்ல வருகிறீர்கள்.எல்லா நாட்டிலும் எல்லா வேளையிலும் பாதிப்புறுவது முஸ்லிம்கள் என்றா.படு செயற்கையானதாகவும் உங்களை முன்னிறுத்துவதாகவும் இருக்கிறது உங்கள் கூற்று.
இலங்கையில் முஸ்லிம் என்பது மத அடையாளமாக அன்றி தங்களுக்கான இன அடையாளமாக ஆக்கிக்கொண்டு பல வருடங்களாகின்றது.

கறுப்பி said...

//அப்புறம் ஹர்ஷி அலியின் நாடக பாத்திரங்கள் தமது உடம்பில் பெண்களுக்கெதிரான குரான் வசனங்களை எழுதியிருந்தபடியே தோன்றினார்கள் என்றே படித்தேன்; இஸ்லாமைப் பொருத்தவரை அது நேரடியான மதத்தாக்குதலாகவே கொள்ளப்படும்//
தங்கமணி - ஹர்ஷி அலியின் குறுந்திரைப்படங்களில் பெண்கள் உடலில் குர்றான் வாக்கியங்களை எழுதி "அல்லா" முன்னர் முறையிடுகின்றார்கள். இஸ்லாமிய மதவாதிகளுக்கு அது மதத் தாக்குதலாகப் படுவதற்கு ஹர்ஷி அலி காரணம் அல்ல அந்த மதவாதிகளே காரணம்.

பெயரிலி – மதவாதிகள் மத ஸ்தலங்கள் ஒருவருக்கு வெறுப்பை ஏற்றுபவையாக இருக்கலாம். இதனால் அவர் மதத்தில் இருந்து விலகலாம். அதை ஹர்ஷி அலி செய்திருக்கின்றார். ஆனால் "அல்லா" என்று ஒன்றிற்கும் அதன் மகிமைக்கும் அவர் தனது குறுந்திரைப்படங்களில் முக்கியத்துவம் கொடுத்திருப்பது போல் தெரிகின்றது.

ஈழநாதன் - எல்லா தளத்திலும் முஸ்லீம்கள் மட்டும் பாதிக்கப்பட்டு வருகின்றார்கள் என்பது என் கருத்து அல்ல மற்றைய மதங்களிலும் பார்க்க இஸ்லாமிய மத மக்கள் தமது சொந்த மதத்தாலும் மற்றைய இன்ன பிற மதங்களாலும் பாதிக்கப்படுவது அதிகமாக உள்ளது. இதற்குக் காரணம் அவர்கள மதம் மிகவும் கடுமையானதாக இருப்பதே. ஈழப் போராட்டத்தை எடுத்துக் கொண்டால் யாழ்ப்பாண முஸ்லீம் மக்கள் பேசுவது தமிழாக இருந்தும் அவர்களின் மதத்தின் கடுமையான கோட்பாடு காரணமாக அவர்கள் வேறு இனமாகக் கணிக்கப்பட்டு வந்துள்ளார்கள். சிங்களவரையும் தமிழரையும் பிரித்தது மொழி. ஒரே மொழி பேசும் முஸ்லீம்களையும் தமிழ் மக்களையும்(கிறிஸ்தவ இந்து) பிரித்தது மதம். நான் மதம் மொழி அனைத்தையும் விடுத்து மக்கள் பாதிப்பை மட்டுமே பார்க்கின்றேன்.

கறுப்பி said...

since you don't have your own blog and proper identity I am deleting your comment.

ஈழநாதன்(Eelanathan) said...

கறுப்பி யாழ்ப்பாணத்தில் தமிழர் மூன்று மதங்களைச் சார்ந்திருந்தார்கள்.முஸ்லிம்களை விட அதிகமான அளவு கிறிஸ்தவர்கள் இருந்தார்கள் ஆனால் தமிழர் இந்துத் தமிழர் என்றோ கிறிஸ்தவத் தமிழர் என்றோ பிளவுறவில்லை.யாழ்ப்பாணத்தில் இருந்து முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டமை புலிகளின் தவறு என்றால் அதற்கு முதலே தங்களை தனியானவர்களாகக் காட்டுவதற்கு முஸ்லிம்கள் முயன்றுள்ளார்கள்.
அது அவர்களின் மதத்தால் ஏற்படுத்தப்பட்ட அடையாளம் இல்லை.ஒரே மதக்குழுவினராக இருந்தவர்கள் அதனையே தமக்குச் சார்பாக்கி அரசியல் அடையாளம் ஒன்றை உருவாக்க முயன்றனர்.இன்று யாழ்ப்பாணத்தில் என்ன நிலை என்பது உங்களுக்குத் தெரியாமலிருக்கலாம்.