Tuesday, May 08, 2007

Rootless but Green are the Boulevard Trees

நான் கலந்து கொள்ளும் ஒரு நாடக அமைப்பின் நாடகப்பட்டறையில் புலம்பெயர்ந்த ஆசிய எழுத்தாளர்களின் நாடகப்பிரதிகளை வாசித்துக் கலந்துரையாடுவோம். கடந்த நிகழ்வின் போது தமிழ் நாட்டைப் பிறப்பிடமாகக் கொண்டவரும் தற்போது வினிபெக் பல்கலைக்கழகத்தில் ஆங்கிலப் பேராசிரியராகவும் பணியாற்றும் உமா பரமேஸ்வரனின் “Rootless but Green are the Boulevard Trees” எனும் நாடகக் பிரதியை வாசித்துக் கலந்துரையாடினோம். இப்பிரதி 1987ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. புலம்பெயர்ந்து வாழும் இந்தியத் தமிழ் குடும்பங்கள் சந்திக்கும் பல பிரச்சனைகளை இப்பிரதி ஆராய்ந்துள்ளது. நேரடியாக பிரச்சனைகளை நீண்ட உரையாடல் மூலம் நகர்த்திச் சென்றது இப்பிரதியை ஒரு வானொலி நாடகப்பிரதியாக மட்டுமே என்னை பார்க்க வைத்தது.

இருந்தும் இப்பிரதியில் வரும் ஒரு காட்சி அனேகரின் கவனத்தையும் ஈர்த்தது. அதாவது கல்லூரி மாணவியான தனது மகளின் காதல் வாழ்க்கையை அறிந்து கொண்ட தாயார் அவளைத் தன்னுடன் சென்று குடும்ப வைத்தியரைப் பார்த்து கருத்தடைக்கான மாத்திரையை வாங்கி உட்கொள்ளும் படி கேட்கின்றார். அவளது காதல் வாழ்க்கை அவள் கல்வியைக் குலைத்துவிடுமளவிற்குப் பாதிப்பை ஏற்படுத்தாமல் பாதுகாப்பதே அத்தாயின் எண்ணமாக் காட்டப்பட்டுள்ளது. பல பெற்றோர்களைப் போல் கத்திக் கூச்சல் போட்டு ஆர்ப்பாட்டம் பண்ணாமல், மிக ஆசுவாசமாகத் தன் மகளுடன் உரையாடுவது போல் அந்தக் காட்சி அமைக்கப்பட்டிருந்தது. இருபது வருடங்களுக்கு முன் இந்தியத் தமிழ் நாட்டுப் பெண் எழுத்தாளரிடமிருந்து இப்படியான ஒரு பிரதி வெளிவந்திருந்தது பட்டறையில் கலந்து கொண்ட அனைவருக்கும் அதிர்ச்சியாகவே இருந்தது. நாடகப் பிரதியின் கனம், காட்சிகள் அமைக்கப்பட்ட முறை, பாத்திரங்களின் தேவை போன்ற வழமையான ஆய்வுகளை விடுத்து இப்படியான ஒரு கருவைக் கொண்ட நாடகப் பிரதியை எழுத முடியுமே தவிர யதார்த்தத்தில் இது எந்த அளவிற்குச் சாத்தியம் என்பதைத்தான் அன்று நாடகப் பட்டறை ஆராய்ந்தது. எமது மக்களிடையே இப்படியான பிரதிகளை மேடை ஏற்றுவது கூட எந்த அளவுக்கு வரவேற்பைப் பெறப் போகின்றது என்ற கேள்வியும் எழுந்தது.

அங்கு பட்டறையில் கலந்து கொள்ளும் ஒரே ஈழத்தமிழ் பெண் என்ற வகையில் என்னுடைய கருத்துக் கேட்கப்பட்ட போது இப்படியான கருவைக் கொண்ட நாடகங்களை மேடை ஏற்ற என்னால் முடியும் ஆதரவு கிடைக்குமா என்பது கேள்விக் குறியே என்றேன்.

பின்னர் கடந்த வாரம் பெண்களுக்கெதிரான வன்முறையைப் பற்றிக் சில பெண்களுடன் கலந்துரையாட நேர்ந்த போது அங்கு கலந்து கொண்ட குடும்ப ஆலோசகர் ஒருவர் குடும்பவன்முறை என்று நாம் பிரச்சனையை ஒடுக்கி விடுவதால் சிறுமிகள், பதின்மவயதினர் முதியோரின் பிரச்சனைகள் அதிகம் ஆராயப்படுவதில்லை என்றும் நாம் அது பற்றியும் ஆராய வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். அப்போது நாடகப்பட்டறையின் எனது அனுபவத்தைக் கூறி எமது சமுதாயத்தில் இளம் பெண்களுக்குப் பெற்றோர் கருத்தடை சாதனங்கள் பற்றி அறிமுகப்படுத்துவது எந்த அளவிற்குச் சாத்தியம் என்று கேட்டேன். எமது சமுதாயத்தில் கணிசமான அளவிற்குப் திருமணமாகாத இளம் பெண்கள் கருச்சிதைவு செய்து கொள்ளுவதாகவும், இதனால் குடும்பத்தில் அப்பெண் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் அவர்களை உளவியல் தாக்கத்திற்கு தள்ளி விடுவதனால் தன்னிடம் உதவிக்கும் வருகின்றார்கள் என்றும் அவர் கூறினார்.எமது சமுதாயத்தின் மீது கொண்டுள்ள அதிகபட்சமான பயம் காரணமாக உறவு கொள்ளத் துணியும் பெண்கள் கூட கருத்தடைப் பாதுகாப்பைப் பெறத் தயங்குகின்றார்கள். இது பற்றி பொதுவாக மக்களிடையே நாம் உரையாடும் அளவிற்கு வளர்ந்து விட்டோமா என்பது கேள்விக் குறியே. அப்படி உரையாட முயன்றாலும் சும்மா இருக்கும் பெண்களுகளைத் தூண்டி விடுகின்றார்கள் என்ற முறைப்பாடே எஞ்சும். அத்தோடு எமது பிள்ளைகள் இப்படியான கேவலம் கெட்ட வேலையை செய்ய மாட்டார்கள் என்பது இன்னொரு வாதமாக இருக்கும். தமது எதிர்காலத்தைக் கவனத்தில் கொண்டு தமது சுயசிந்தனையில் தேவையற்ற உறவுக்குள் செல்லாத பெண்கள் பலர் இருக்கின்றார்கள். இவர்களுக்கு ஆலோசனைகள் தேவையில்லை. அவர்கள் தமது எதிர்காலத்தையும் தமது உறவு பற்றியும் தெளிவு கொண்டவர்கள். அதே வேளை எதிர்காலம், உறவுகள் பற்றிய தெளிவற்ற இளம் பெண்கள் பலர் தகாத உறவுக்குள் சிக்கி, தமது எதிர்காலத்தைக் கேள்விக் குறியாக்கிப் பின்னர் ஆலோசனைக்கு அலைகின்றார்கள். ஒரு சிறிய பாதுகாப்பைப் பெறத் தயங்குவதால் அவர்கள் எதிர்காலமே அழிந்து போகும் நிலைக்குத் தள்ளப்படுகின்றது. வெறுமனே முகமூடிகளைப் போட்ட படி அலைய மட்டுமே பலருக்குத் தெரிந்திருக்கிறது. யதார்த்தை எதிர்கொண்டு அதற்கான வழிமுறைகளை இனிமேலாது கையாளுவார்களா?

4 comments:

சென்ஷி said...

//இருபது வருடங்களுக்கு முன் இந்தியத் தமிழ் நாட்டுப் பெண் எழுத்தாளரிடமிருந்து இப்படியான ஒரு பிரதி வெளிவந்திருந்தது பட்டறையில் கலந்து கொண்ட அனைவருக்கும் அதிர்ச்சியாகவே இருந்தது//

:)) நல்ல முற்போக்கு சிந்தனை உடையவர் போலும்.

//இப்படியான கருவைக் கொண்ட நாடகங்களை மேடை ஏற்ற என்னால் முடியும் ஆதரவு கிடைக்குமா என்பது கேள்விக் குறியே என்றேன்.//

உண்மைதான். உலகமெங்கும் ஆண்களின் பார்வையில் பெண்கள் பேசாபொருளை பேசுவது தவறெனவே படுகிறது.

உங்கள் பதிவின் தாக்கம் எத்தனை பேரை சென்று அடையும் என்றுதான் எனக்கு தெரியவில்லை :(

சென்ஷி

கறுப்பி said...

Thanks சென்ஷி :)-

சோமி said...

நல்ல முயற்சி .

பேசாப் பொருட்களை பேசுவதற்க்கு எடுக்கும் எல்லா முயற்சிகளுக்கும் ஒரு கூட்டிணைவு அவசியம்.

தகவல் அறியத் தந்தமைக்கு நன்றி.

நளாயினி said...

mm.சிந்திக்க வைக்கிறீர்கள்.