Tuesday, January 25, 2005

August Sun

August Sun (ஐரா மடியம்மா) பிரசன்னா வித்யநங்கேயின் இயக்கத்தில் வெளிவந்த “ஐரா மடியம்மா” எனும் சிங்களத் திரைப்படம் கனேடியத் திரையரங்கில் காண்பிக்கப் பட்டது.
1990இன் நடுப்பகுதியில் போரினால் பாதிக்கப் படும் மூன்று குடும்பங்களை மையமாக வைத்துக் கதை நகர்கின்றது.ஒன்று முஸ்லீம் மக்கள் போராளிகளால் அவர்கள் இருப்பிடத்தை விட்டு அகற்றப்பட்ட போது அம்மக்களின் நிலையை காட்டி நின்றது. அதில் அரபாத் எனும் சிறுவனின் குடும்பம் முக்கியப் படுத்தப் பட்டு ஊரைவிட்டுச் செல்லும் போது boat இல் போக நேர்ந்ததால் தனது நாயை விட்டு அவன் பிரிந்து அழுதபடியே செல்கின்றான்.


ரூபா. 4,000 மட்டும் அனுமதிக்கப் பட்ட நிலையில் மக்கள் பணத்தை எப்படியெல்லாம் போராளிகளுக்குத் தெரியாமல் எடுத்துச் சென்றார்கள் என்பதும் காட்டப்பட்டது.அடுத்து ஒரு இளம் சிங்களப் பெண் தனது காணாமல் போன பைலட் கணவனை விடுதலைப்புலிகள் பிடித்து வைத்திருப்பதாக நம்பி கணவனைத் தேடும் முயற்சியில் தொலைக்காட்சி நிருபர் ஒருவர் விடுதலைப்புலிகளுடன் நேரடியாகச் சென்று கலந்துரையாட இருக்கிறார் என்று அறிந்து தனது கணவனை அவன் ஒருத்தனால் தான் கண்டுபிடித்துத் தர முடியும் என்று அவனிடம் மன்றாடித் தானும் அவனுடன் கணவனைக் கண்டு பிடித்து விடும் நம்பிக்கையில் கிளம்புகின்றாள்.அடுத்து வறுமையின் பிடியில் சிக்கியிருக்கும் ஒரு குடும்பத்தில் இளைஞன் பணத்திற்காக ஆமியில் சேர்கின்றான். அவன் தங்கை விபச்சாரியாகின்றாள். தங்கையை விபச்சார விடுதியில் கண்டு கலங்கி அவளுக்காக ஒரு வாழ்க்கை அமைத்துக்கொடுக்கும் தனது கடமையை அவன் உணர்ந்து கொள்கின்றான்.போர் சூழலால் பாதிக்கப்படும் மூன்று குடும்பங்களின் நிலை காட்டப்பாட்டாலும் இயக்குனர் பிரசன்னா தமிழ் மக்களை அப்புறப்படுத்தி சிங்கள முஸ்லீம்களுக்கு முக்கியத் துவம் கொடுத்திருப்பது சர்வதேச ரீதியில் திரையிடப்படும் திரைப்படம் என்பதால் பொருத்தமாக இல்லை.பைலட்டின் மனைவியாக வரும் நடிகை Nimmi Harasgama மிக அழகாக இருக்கின்றார். கணவனை இழந்த சோகம் அவர் முகத்தில் அதிகம் தெரியவில்லை. நிருபராக வந்த Peter D’Almeida சிறப்பாக நடித்துள்ளார்.


ஒரு அழகான இளம் பெண்ணோடு இரவு பகலாகப் பயணம் செய்யும் போது எழும் உணர்வுகளை மிக யதார்த்தமாக தனது நடிப்பால் கொண்டு வந்துள்ளார். இறுதியில் அவர்களைச் சந்திப்பதாகச் சொன்ன விடுதலைப் புலிகள் முஸ்லீம்களின் பிரச்சனையால் சந்திக்க முடியாமல் போய் விட்டதாக அறியத் தந்த போது கணவன் உயிருடன் இருக்கின்றான் எப்படியும் சந்தித்து விடலாம் என்று நம்பி வந்தவள் சோகம் தாளாது நிருபரை அணைத்துக் கொண்டதும் அவர்களுக்கிடையில் ஏற்பட்ட தடுமாற்றமும் மனிதனின் யதார்த்த நிலையை எடுத்துக் காட்டுகின்றது.


கதையின் முக்கிய பாத்திரங்களை திரைப்படத்தின் தொடக்கத்தில் மூன்று வேறுபட்ட இடங்களில் காட்டி இறுதியில் ஒரே இடத்தில் அவர்களைக் கொண்டு வந்து திரைப்படத்தை முடித்திருக்கின்றார் இயக்குனர்சிறந்த திரைப்படமாக இருந்த போதும் சிங்கள மக்களை மையப்டுத்தியிருப்பதால் தமிழ் பார்வையாளர் நிராகரிக்கும் ஒரு சிறந்த படமாகிப் போய் விட்டது.

Friday, January 21, 2005

Submission

34 வயதுடைய ஹர்சி அலி சோமாலியாவில் பிறந்து வளர்ந்த ஒரு முஸ்லீம் பெண்ணாக இருந்த போதும், தனது மத நம்பிக்கையைக் கைவிட்டவர்.

அகதியாக வந்து நெதர்லாந்தில் தஞ்சம் புகுந்து தற்போது நெதர்லாந்தில் நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கிறார். இவர் எழுதிய திரைக்கதை “Submission" எனும் பெயரில் குறுந்திரைப்படமாக இயக்கனர் தியோ வான் கோவால் படமாக்கப் பட்டது. இக்குறுந்திரைப்படம் நெதர்லாந்துத் தொலைக்காட்சியில் காட்டப்பட்ட போது அங்கு வாழும் இஸ்லாமிய மக்கள் கொதித்தெழுந்தார்கள். முக்கியமாக இஸ்லாமிய ஆண்கள். இஸ்லாமிய நாடுகளில் மட்டுமல்லாது ஐரோப்பிய நாடுகளில் வாழும் இஸ்லாமியப் பெண்களும் மதம் எனும் பெயரால் மிகவும் வன்முறையான வதைக்கு உள்ளாகின்றார்கள். அவற்றை வெளியே கொண்டு வருவதே தனது நோக்கம், இஸ்லாமிய மதத்தைத் சாடுவதில்லை என்று இவர் கூறுகின்றார். “Submission" குறுந்திரைப்படம் மூன்று பகுதியாக வெளிவந்திருக்கிறது.


முழு உடலையும் மறைக்கும், கண்கள் மட்டும் வெளியே தெரியும் வகையில் உடையணிந்த ஒரு பெண் தொழுகையை ஆரம்பிக்கின்றாள். அவளது மேலாடை மெதுவாகக் கண்ணாடி போலாகின்றது. அவளது மார்பிலும் வயிற்றிலும் குரானின் வரிகள் தெரிகின்றன.மணப்பெண் தோற்றத்தில் ஒரு பெண், அவள் முதுகுப் புறம் திறந்திருக்கிறது, அதிலும் குரான் வரிகள். இவ்வரிகள் ஒரு ஆண் தன் உடமையாக பெண்ணை அவன் விரும்பும் நேரத்தில், அவன் விரும்பும் இடத்தில், அவன் விரும்பும் விதத்தில் எல்லாம் பயன்படுத்திக் கொள்ளலாம் என்ற இறைவனின் கட்டளை எழுத்தப்பட்டிருப்பதாக திரைப்பட விமர்சகர்கள் கூறுகின்றார்கள்.தரையில் காயப்பட்ட உடலோடு கிடக்கும் பெண்ணின் உடலில் தகாத உறவு கொண்டாலோ, அல்லது திருமணத்தை மீறிய உறவு கொண்டாலோ கிடைக்கும் தண்டனை இது என வரிகளால் எழுதப்பட்டிருக்கின்றன். இப்படியாக இஸ்லாமிய மதத்தைச் சேர்ந்தவர்களின் பெண்களுக்கு இழைக்கும் கொடுமைகளை இஸ்லாம் மதத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணே வெளியில் கொணர்வதால் நெதர்லாந் வாழ் இஸ்லாமிய மதவாதிகள் ஹர்சி அலியாவிற்கு தமது வழக்கப்படி மரணதண்டனை விதித்துள்ளார்கள். இதனால் நெதர்லாந்து அரசாங்கம் அவருக்கு 24 மணி நேரமும் ஆயுதந்தாங்கிய பாதுகாவலர்களைக் கொடுத்துள்ளது. இப்படத்தை இயக்கிய தியோ வான் கோ தனது பேட்டி ஒன்றில், இந்த அரசியலை எவரும் மறுக்க முடியாது இஸ்லாமியர்கள் கொதித்தெழுவது காரணமற்றது என்றும் கூறியுள்ளார் அதன் கடுமையான தாக்கத்தை உணராத தியோ வான் கோ கார்த்திகை மாதம் 2ம் திகதி 26வயது நிரம்பிய இஸ்லாமிய மத வாதியால் நெதர்லாந்தில் சுட்டுக் கொல்லப்பட்டார்.


இஸ்லாமிய மதவாதிகள் பெண்கள் நடாத்தும் வன்முறைகளைப், பெண்கள் அல்லாவிடம் முறையிடுவதாக அமைந்த இந்த "Submission" எனும் குறுந்திரைப்படம் எப்படி இஸ்லாம் மதத்திற்கு எதிரானது என்பது புரியாமலேயே உள்ளது. இஸ்லாமிய ஆண் ஆதிக்கர்களுக்கு எதிரானதே இந்த "Submission"
எந்த மதத்திலும் நம்பிக்கையற்ற எனக்கு இப்படியான மதவாதிகளின் செயல் புரியாமலேயே இருக்கின்றது.
இக்குறுந்திரைப்படத்தை ifilm.com எனும் இணையத்தளத்திற்குச் செல்வதன் மூலம் பார்க்க முடியும்.

Mr and Mrs. Iyer

எனது பார்வையில் ஒரு தரமான திரைப்படம் எப்படியெல்லாம் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கின்றேனோ அத்தனையும் கொண்டு வெளி வந்த திரைப்படம் Mr.and Mrs. Iyer.
பலதரப்பட்ட பயணிகளுடன் கல்கத்தா செல்லும் ஒரு பஸ் பயணத்துடன் திரைப்படம் ஆரம்பமாகின்றது.


மற்றவர்களைப் பற்றி அலட்டிக்கொள்ளாமல் லுாட்டி அடிக்கும் இளைஞர் யுவதிகள் கூட்டம், அமைதியாக அவற்றையெல்லாம் பொறுத்துக்கொண்டு அமர்ந்திருக்கும் ஒரு முஸ்லீம் முதிய தம்பதிகள், புதிதாகத் திருமணம் செய்த காதல் பறவைகள், இரண்டு சீக்கிய இளைஞர்கள் என்று பலருக்கிடையில் திரைப்படத்தின் நாயகி மீனாட்சி ஐயார் (கொங்கோனா சென்சர்மா) தனது 5மாதக் குழந்தை சந்தானத்துடன், நாயகன் ராஜா செளத்ரி (ராகுல் பொஸ்)முஸ்லீம் வனவிலங்குப் புகைப்படக் கலைஞர் என்று பயணம் ஆரம்பமாகின்றது.
கல்கத்தாவில் இருக்கும் கணவன் வீட்டிற்குத் திடீரென்று போக வேண்டி நேர்ந்ததால் தனது குழந்தையுடன் புறப்பட்டு விட்ட மீனாட்சியைப் பார்த்துக் கொள்ளுமாறு அவர்களின் பெற்றோர் ராஜா செளத்தியிடம் கேட்டுக்கொண்டதை இட்டு, அழும் குழந்தையை விளையாட்டுக்காட்டல், குழந்தையைத் துாங்க வைத்தல் போன்ற சின்னச்சின்ன உதவிகளை ராஜா செளத்ரி மீனாட்சிக்குச் செய்த போதும் தவிர்க்க முடியாத காரணங்களால் முன்பின் தெரியாத ஒரு முஸ்லீம் இளைஞனிடம் தாம் உதவி கேட்க நேரிட்டுவிட்டதே என்ற கடுப்புத்தான் அவள் முகத்தில் தெரிகின்றது. இரவு நேரம் பயணக்களைப்பில் அனைவரும் அயர்ந்து விட பஸ் நிறுத்தப்படுகின்றது.


உள்ளூர் கலவரத்தால் பயணத்தைத் தொடர முடியாத நிலையில் பயத்துடன் பயணிகள் பஸ்ஸில் அமர்ந்திருக்க நெருப்புப் பந்தக்களுடன் இந்து தீவிர வாதிகள் பஸ்ஸில் நுழைந்து பயணிகளின் பெயர்களைக் கேட்டு முஸ்லீம்களை அடையாளம் காண முயல்கின்றார்கள். முஸ்லீம் இளைஞன் என்பதற்காய் ராஜா செளத்ரி கொடுத்த தண்ணீரைக் கூடக் குடிக்க விரும்பாத நிலையில் இருந்த மீனாட்சி தீவிர வாதிகள் அவர்கள் பெயரைக் கேட்ட போது திடமாக Mr. and Mrs Iyer என்று தங்களை அறிமுகப்படுத்தி அவன் கைகளைப் பிடித்துக் கொள்கின்றாள்.
இனவாதம் என்பது மொழி, மதம் என்று தலை துாக்கி ஆடினாலும் அதையும் மீறிய மனிதாபிமானம் இன்னும் இருக்கின்றது என்பதைத் தான் எந்த வித வன்முறைக் காட்சிகளையும் திரையில் கொண்டு வராமல், வன்முறையில் அதி உச்ச பாதிப்பையும் மனிதாபி மானத்தையும் படமாக்கி உள்ளார் அபர்ணா சென்.
அதன் பின்னர் ராஜா செளத்ரி, மீனாட்சிக்குள்ளான நட்பு நம்பிக்கை வளர்வதைக் கவிதையாக் காட்டி, இறுதியில் இந்தியக் கலாச்சாரத்தையும் மென்னையாகக் கேள்விக்குறியாக்கியுள்ளார் அபர்ணா சென்.
ஒரு வன்முறையாளன், வயோதிபன், வியாதிக்காறன் இப்படியான ஒருவனைக் கணவனாகக் கொண்ட ஒரு பெண் வேறு ஒருத்தன் மேல் காதல் வயப்படுவது என்பதைத் தான் நாம் திரையில் பார்த்திருக்கின்றோம். அன்பான படித்து நல்ல நிலையில் இருக்கும் ஒரு அழகான கணவனை மீனாட்சி கொண்டிருந்த போதும் சந்தர்பம் சூழ்நிலை புரிந்துணர்வு என்பன எவரையும் தடுமாற வைக்கும் என்பதை மீனாட்சி, ராஜா செளத்ரிக்கிடையில் ஏற்படும் உடல் ரீதி அற்ற அந்தக் காதல், நாம் பார்க்கும் இளசுகளின் காதலிலும் விட அழகாகக் காட்டப்பட்டிருக்கின்றது.


கொங்கோனா சென்சர்மா பதட்டம், வெறுப்பு, அழுகை, காதல் என்று தன் நடிப்பாற்றலைக் காட்டியிருந்த போதும், ராகுல் போஸ்ஸின் அந்த மின்னும் கண்களும் மெல்லிய புன்னகையும் எல்லாவற்றையும் மெளனமாகச் சொல்லி நிற்பதும் மனதை நிறைக்கின்றது.
சின்னதேவதையைப் போலவே இனக்கலவரத்தின் வன்முறை உச்சத்தை, வன்முறையைத் திரையில் கொண்டு வராமல் எம்மை உறைய வைத்த ஒரு திரைப்படம் இது.ஒட்டு மொத்தமாக ஒரு தரமான திரைப்படத்திற்கு என்னவெல்லாம் தேவையோ அவற்றைக் கொண்டுள்ளது இந்த Mr. and Mrs iyer திரைப்படம்.
Producer: N. Venkatesan Director: Aparna Sen Starring: Rahul Bose, Konkona Sensharma, Bharat Kaul Music: Ustad Zakir Hussain