Tuesday, May 08, 2007

Rootless but Green are the Boulevard Trees

நான் கலந்து கொள்ளும் ஒரு நாடக அமைப்பின் நாடகப்பட்டறையில் புலம்பெயர்ந்த ஆசிய எழுத்தாளர்களின் நாடகப்பிரதிகளை வாசித்துக் கலந்துரையாடுவோம். கடந்த நிகழ்வின் போது தமிழ் நாட்டைப் பிறப்பிடமாகக் கொண்டவரும் தற்போது வினிபெக் பல்கலைக்கழகத்தில் ஆங்கிலப் பேராசிரியராகவும் பணியாற்றும் உமா பரமேஸ்வரனின் “Rootless but Green are the Boulevard Trees” எனும் நாடகக் பிரதியை வாசித்துக் கலந்துரையாடினோம். இப்பிரதி 1987ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. புலம்பெயர்ந்து வாழும் இந்தியத் தமிழ் குடும்பங்கள் சந்திக்கும் பல பிரச்சனைகளை இப்பிரதி ஆராய்ந்துள்ளது. நேரடியாக பிரச்சனைகளை நீண்ட உரையாடல் மூலம் நகர்த்திச் சென்றது இப்பிரதியை ஒரு வானொலி நாடகப்பிரதியாக மட்டுமே என்னை பார்க்க வைத்தது.

இருந்தும் இப்பிரதியில் வரும் ஒரு காட்சி அனேகரின் கவனத்தையும் ஈர்த்தது. அதாவது கல்லூரி மாணவியான தனது மகளின் காதல் வாழ்க்கையை அறிந்து கொண்ட தாயார் அவளைத் தன்னுடன் சென்று குடும்ப வைத்தியரைப் பார்த்து கருத்தடைக்கான மாத்திரையை வாங்கி உட்கொள்ளும் படி கேட்கின்றார். அவளது காதல் வாழ்க்கை அவள் கல்வியைக் குலைத்துவிடுமளவிற்குப் பாதிப்பை ஏற்படுத்தாமல் பாதுகாப்பதே அத்தாயின் எண்ணமாக் காட்டப்பட்டுள்ளது. பல பெற்றோர்களைப் போல் கத்திக் கூச்சல் போட்டு ஆர்ப்பாட்டம் பண்ணாமல், மிக ஆசுவாசமாகத் தன் மகளுடன் உரையாடுவது போல் அந்தக் காட்சி அமைக்கப்பட்டிருந்தது. இருபது வருடங்களுக்கு முன் இந்தியத் தமிழ் நாட்டுப் பெண் எழுத்தாளரிடமிருந்து இப்படியான ஒரு பிரதி வெளிவந்திருந்தது பட்டறையில் கலந்து கொண்ட அனைவருக்கும் அதிர்ச்சியாகவே இருந்தது. நாடகப் பிரதியின் கனம், காட்சிகள் அமைக்கப்பட்ட முறை, பாத்திரங்களின் தேவை போன்ற வழமையான ஆய்வுகளை விடுத்து இப்படியான ஒரு கருவைக் கொண்ட நாடகப் பிரதியை எழுத முடியுமே தவிர யதார்த்தத்தில் இது எந்த அளவிற்குச் சாத்தியம் என்பதைத்தான் அன்று நாடகப் பட்டறை ஆராய்ந்தது. எமது மக்களிடையே இப்படியான பிரதிகளை மேடை ஏற்றுவது கூட எந்த அளவுக்கு வரவேற்பைப் பெறப் போகின்றது என்ற கேள்வியும் எழுந்தது.

அங்கு பட்டறையில் கலந்து கொள்ளும் ஒரே ஈழத்தமிழ் பெண் என்ற வகையில் என்னுடைய கருத்துக் கேட்கப்பட்ட போது இப்படியான கருவைக் கொண்ட நாடகங்களை மேடை ஏற்ற என்னால் முடியும் ஆதரவு கிடைக்குமா என்பது கேள்விக் குறியே என்றேன்.

பின்னர் கடந்த வாரம் பெண்களுக்கெதிரான வன்முறையைப் பற்றிக் சில பெண்களுடன் கலந்துரையாட நேர்ந்த போது அங்கு கலந்து கொண்ட குடும்ப ஆலோசகர் ஒருவர் குடும்பவன்முறை என்று நாம் பிரச்சனையை ஒடுக்கி விடுவதால் சிறுமிகள், பதின்மவயதினர் முதியோரின் பிரச்சனைகள் அதிகம் ஆராயப்படுவதில்லை என்றும் நாம் அது பற்றியும் ஆராய வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். அப்போது நாடகப்பட்டறையின் எனது அனுபவத்தைக் கூறி எமது சமுதாயத்தில் இளம் பெண்களுக்குப் பெற்றோர் கருத்தடை சாதனங்கள் பற்றி அறிமுகப்படுத்துவது எந்த அளவிற்குச் சாத்தியம் என்று கேட்டேன். எமது சமுதாயத்தில் கணிசமான அளவிற்குப் திருமணமாகாத இளம் பெண்கள் கருச்சிதைவு செய்து கொள்ளுவதாகவும், இதனால் குடும்பத்தில் அப்பெண் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் அவர்களை உளவியல் தாக்கத்திற்கு தள்ளி விடுவதனால் தன்னிடம் உதவிக்கும் வருகின்றார்கள் என்றும் அவர் கூறினார்.எமது சமுதாயத்தின் மீது கொண்டுள்ள அதிகபட்சமான பயம் காரணமாக உறவு கொள்ளத் துணியும் பெண்கள் கூட கருத்தடைப் பாதுகாப்பைப் பெறத் தயங்குகின்றார்கள். இது பற்றி பொதுவாக மக்களிடையே நாம் உரையாடும் அளவிற்கு வளர்ந்து விட்டோமா என்பது கேள்விக் குறியே. அப்படி உரையாட முயன்றாலும் சும்மா இருக்கும் பெண்களுகளைத் தூண்டி விடுகின்றார்கள் என்ற முறைப்பாடே எஞ்சும். அத்தோடு எமது பிள்ளைகள் இப்படியான கேவலம் கெட்ட வேலையை செய்ய மாட்டார்கள் என்பது இன்னொரு வாதமாக இருக்கும். தமது எதிர்காலத்தைக் கவனத்தில் கொண்டு தமது சுயசிந்தனையில் தேவையற்ற உறவுக்குள் செல்லாத பெண்கள் பலர் இருக்கின்றார்கள். இவர்களுக்கு ஆலோசனைகள் தேவையில்லை. அவர்கள் தமது எதிர்காலத்தையும் தமது உறவு பற்றியும் தெளிவு கொண்டவர்கள். அதே வேளை எதிர்காலம், உறவுகள் பற்றிய தெளிவற்ற இளம் பெண்கள் பலர் தகாத உறவுக்குள் சிக்கி, தமது எதிர்காலத்தைக் கேள்விக் குறியாக்கிப் பின்னர் ஆலோசனைக்கு அலைகின்றார்கள். ஒரு சிறிய பாதுகாப்பைப் பெறத் தயங்குவதால் அவர்கள் எதிர்காலமே அழிந்து போகும் நிலைக்குத் தள்ளப்படுகின்றது. வெறுமனே முகமூடிகளைப் போட்ட படி அலைய மட்டுமே பலருக்குத் தெரிந்திருக்கிறது. யதார்த்தை எதிர்கொண்டு அதற்கான வழிமுறைகளை இனிமேலாது கையாளுவார்களா?

Sunday, May 06, 2007

Vanaja

Director: Rajnesh Domalpalli
Principal Cast:: Mamatha Bhukya, Urmila Dammannagari, Ramachandriah Marikanti, Krishnamma Gundimalla, Karan Singh



ஆணோ பெண்ணோ சிறுவர் பிராயத்தைக் கடந்து பதின்ம வயதில் கால் வைக்கும் போது உடல் உள மாற்றங்களால் பல வித உணர்வு போராட்டங்களுக்குத் தள்ளப்படுவது வழமை. வளர்ச்சியடைந்த நாடுகளில் இவ்வயதினருக்கு அவர்கள் உடல், உணர்வு மாற்றங்கள் பற்றிப் பாடத்திட்டத்திலேயே அடக்கி விடுகின்றார்கள். கலாச்சாரக் கட்டுப்பாடு நிறைந்த நாடுகளில் பிள்ளைகளுக்கு இந்த மாற்றம் பற்றி எடுத்துரைக்கும் பொறுப்பு பெற்றோரிடம் விடப்படுகின்றது. ஆனால் வறுமைக் கோட்டிற்குக் கீழ் வாழும் பிள்ளைகளுக்கு அதிலும் தலித்தாகப் பிறந்து, ஒதுக்கபட்ட நிலையில் தனது அன்றாட உணவுக்காக எங்காவது வேலை செய்து, எதையாவது உண்ண வேண்டிய நிலையில் இருக்கும் குழந்தைகளுக்கு உடல் மாற்றங்கள் உணர்வுகள் என்பன அவர்களுக்கு ஏற்படும் பாலியல் விபத்துக்கள் மூலமே அறிந்து கொள்ளக் கூடிய ஒன்றாக இருக்கின்றது.



ரொறொண்டோ சர்வதேச திரைப்படவிழாவில் நான் பார்த்துப் பிரமித்த இன்னுமொரு இந்தியத் திரைப்படம் “வனஜா”. கொலம்பியா பல்கலைக்கழகத்தில் திரைப்படத்துறையில் கல்வி பயிலும் ராஜேஸ் டுமால்பாலியின் முதல் படைப்பாகிய “வனஜா” ஒரு பதினைந்து வயது சிறுமியை மையமாகக் கொண்டு படைக்கப்பட்டிருக்கின்றது. பதின்ம வயதில் ஏற்படும் உடல், உணர்வு மாற்றங்களாலும், அது அவள் வாழ்வில் பெண், தலித், அந்தஸ்த்து என்பவற்றோடு பின்னிப் பிணைந்து எப்படி அவள் வாழ்வை மாற்றி அமைக்கின்றது என்பதை மம்தா எனும் தலித் சிறுமியின் அபார நடிப்பின் மூலம் பார்வையாளர்களை வியக்க வைத்திருக்கின்றார் இயக்குனர். ஆந்திரப் பிரதேசத்தில் வாழும் ஒரு ராஜ குடும்பத்துப் பெண்ணின் வீட்டில் வேலைக்கு சேர்ந்து கொள்ளும் தலித் பெண்ணான பதினைந்து வயது வனஜா அந்தக் குடும்பத்தினரால் எப்படி நடத்தப்படுகின்றாள் என்பதே கதையின் கரு. முதலாளி அம்மாள் வனஜாவை அன்பாக நடத்துகின்றார். இந்த அன்பு நிலை என்பது ஒரு எல்லையைத் தாண்டாத வண்ணம் அவர்களின் வாழ்க்கை முறை அமைந்து விடும் அவலம். வேலைக்காறி என்றால் நிலத்தில் சாக்கைப் போட்டுப் படுப்பது, பழயதை உண்பது உடுப்பது என்பது எழுதப்படாத சட்டம். இதற்கு மேல் இருபக்கத்தினரும் எதையும் எதிர்பார்ப்பதில்லை. வனஜா குச்சிப்புடி நடனத்தில் ஆர்வம் உள்ளவள் என்று கண்ட முதலாளி அம்மா அவளுக்கு நடனம் கற்றுத் தருக்கின்றார். அதிஉச்சமாக இதைத்தான் அவர்களால் செய்ய முடிகின்றது. அமெரிக்காவிலிருந்து வந்த முதலாளி அம்மாளின் மகன் சேகர் குளிக்கும் போது அவன் வெற்றுடலை ஒளிந்திருந்து பார்க்கும் வனஜா, கடிதக்காறப் பெடியனை தனியாக அழைத்து அவனுடன் குழைந்து கதைத்துச் சிரிக்கும் வனஜா, இந்த இடங்களில் சிறுமி மம்தாவின் முகபாவம், நடிப்பு மிகவும் தத்ரூபமாக வியக்கும்படி அமைந்திருக்கின்றது.
சேகரால் பலாத்காரத்துக்குள்ளான வனஜா கற்பம் தரித்துப் பெற்ற குழந்தை ராஜவம்சத்தைச் சேர்ந்து என்பதால் குழந்தையை முதலாளி அம்மாள் தன்னுடன் வைத்திருப்பதும், தனக்கு அந்த வீட்டில் ஒரு அந்தஸ்தான இடம் கிடைக்குமா என்று ஏங்கும் வனஜாவை, வெறும் வேலைக்காறியாக மட்டும் அந்த வீட்டில் உலவ விட்டிருப்பதும், முதலாளி அம்மாளுக்கு வனஜா மேல் அன்பு, பாசம் வைக்க முடிகின்றது, ஆனால் அவரால் எந்த ஒரு நிலையிலும் அவளை தன் வீட்;டுப் பெண்ணாக நினைக்க முடியவில்லை, இப்படியே போனால் தான் சேகரின் வெறும் பாலியல் பொம்மையாகவும், வேலைக்காறியாகவும் மட்டுமே அந்த வீட்டில் வாழ்நாள் முழுக்க வாழ்ந்து இறக்க நேரிடும் என்பதை உணர்ந்த வனஜா, தனது குடிசைக்குத் திரும்பச் சென்று எப்படியாவது தனது குழந்தையை மீட்டுத் தன்னுடன் கொண்டு வந்து விட வேண்டும் என்ற தவிப்போடும், நம்பிக்கையோடும் காத்திருப்பதோடு திரைப்படம் நிறைவு பெறுகின்றது.

திரைப்பட இறுதியில் பார்வையாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்த இயக்குனர், இத்திரைப்படம் ஆந்திராவில் ஒரு கிராமத்தில் படமாக்கப்பட்டது என்றும் இதில் நடித்த பலருக்கு இத்திரைப்படமே முதல் நடிப்பு அனுபவம், முக்கியமாக சிறுமி மம்தாவிற்கு என்றும், சிறுமியின் நடிப்புத் திறனை அடையாளப்படுத்தியதோடு, இரண்டு மாதங்களில் மிக ஆர்வமாக குச்சிப்புடியை கற்றுக் கொண்டார் என்றும் கூறினார். ஞனரஞ்சகத் திரைப்படங்களைத் தான் வெறுப்பதாகவும், தனது அடுத்த திரைப்படமும் இந்தியக் குக்கிராம மக்களை அடிப்படையாகக் கொண்டிருக்கும் என்பதையும் தெரிவித்தார்.

Friday, May 04, 2007

Toronto News

இன்று காலை செய்தியில் மிசிசாகாவைச் சேர்ந்த 12 வயது நிரம்பிய மனவளர்ச்சி குன்றிய சிறுமி ஒருத்தியை அவளது தாயாரும், ஆறு ஆண் நண்பர்களும் சேர்ந்து கொண்டு பலவிதமான பாலியல் தொல்லைகளுக்கு ஆளாக்கி வந்துள்ளமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என்று அறியத்தந்தார்கள். பலவந்தமாக அந்தச் சிறுமிக்கு போதை மருந்துகளும் ஊட்டியுள்ளார்கள் (கொகேயின் உட்பட) சிறுமியின் பெயர் விபரங்கள் தெரிவிக்கப்படவில்லை. இதில் வேதனையான விடையம் என்னவென்றால் அந்த ஆறு ஆண்கள் பெயர்கள் குறிப்பிடப்பட்ட போது அதில் ஒருவரின் பெயர் முரளி பாலா (பாலசுப்ரமணியம்) மற்றையோர் வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள். காலையில் வேளைக்கு வெளிக்கிடும் வேளையில் அவசரமாகச் செய்தியை மேலோட்டமாகப் பார்ப்பதுண்டு. மனம் எம் பெண்கள் யாராவது கொலைசெய்யப்பட்டார்களா, தற்கொலை செய்து கொண்டார்களா என்ற பதட்டம் எப்போதுமே இருந்துகொண்டிருக்கும். ஆனால் இன்றைய செய்தி, வேலைத்தளத்தில் இது பற்றி மற்றவர்கள் கதைக்கும் போது நான் கலந்து கொள்ளாமல் தவிர்த்துக் கொண்டேன்.

Thursday, May 03, 2007

Male supremacy

"Male supremacy has kept woman down. It has not knocked her out". – by: Clare Boothe Luce

அடிமேல் அடி அடித்தால் அம்மியும் நகரும் என்பார்கள். எங்கள் சமுதாயக் கட்டமைப்பும், நோக்கும் பாறாங்கல்லைத் தூக்கித் தலையில் போட்டாலும் மாற்றங்களைக் காணுமா என்ற கேள்விக் குறிதான் தற்போது எனக்குள் எஞ்சி நிற்கின்றது. சிலவாரங்களுக்கு முன்பு ரொறொன்டோவில் நடந்த இரட்டைக் கொலைகளுக்காக ஒரு கட்டுரையை எழுதியிருந்தேன்.

சாடுதல்கள் அற்று நடுநிலையாக எமது மக்களின் உளவியல் தாக்கங்கள்தான் இப்படியான தற்கொலை, கொலைகளுக்குக் காரணம் என்பதாய் பலரின் பார்வைகள் இருந்ததும், இந்த உளவியல் தாக்கங்களை எமது மக்கள் அடையாளம் கண்டு தக்க நேரத்தில் அதற்கான மருத்துவத்தையும், ஆலோசனைகளையும் பெற்றுக்கொண்டால் இவற்றிலிருந்து விடுபட முடியும் என்ற மருத்துவ ஆராய்சியாளர்கள் ஆலோசகர்களின் உரைகளைக் கேட்டதாலும், படித்ததாலும் இப்படியான உயிரிழப்புகளிலிருந்து எம் மக்களுக்கு நிவாரணம் கிடைத்து விடும் என்ற நம்பிக்கை எனக்குள் எழுந்திருந்தது. மாறாக ஒரு சம்பவத்தின் பின்னர் அரைத்து அலசும் கும்பல்களின் வாயில் இருந்து வந்த தகவல்களை அண்மையில் செவிமடுத்ததால் இருந்த நம்பிக்கை எல்லாம் போய், முன்னேற்றப் பாதையை விடுத்து எமது சமூகம் எப்போதோ அழிந்து புதைந்து போயிருக்கும் எமது கலாச்சாரங்களை சிறப்பு என்று வெளியே இழுத்து விட்டுவிடுமே என்று பயமாக இருக்கின்றது. கொலைசெய்யப்பட்ட இளம் பெண், குழந்தைகளின் தாய், தாய் தந்தையரின் மகள், சகோதரங்களின் அன்புச் சகோதரி, உற்றார் உறவுகளின் தோழி இவையனைத்தையும் விடுத்து, தனக்குள்ளான கனவுகளைச் சுமக்கும் ஒரு சாதாரண மனுசி. எம்மக்கள் சிலரின் தீர்ப்பு செய்த குற்றத்திற்கான தண்டனை என்பதே. கணவன் கடுமையான உழைப்பாளி, மென்மையான குணம் கொண்டவன், அன்பானவன். அவனுக்கு வாழ்வில் கிடைத்த பெரிய ஏமாற்றம்தான் இந்த கொலைக்குக் காரணம் என்று கூசாமல் கொலைசெய்த கணவனுக்காக குரல் கொடுக்கும் ஒரு சாரார்.
ஒருவனுக்கு ஒருத்தி என்றும், சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுவது திருமணம் என்றும் இந்திய நாடக வசனங்களைக் கேட்டுக் கேட்டுப் பழகிப் போனவர்களுக்கு, இருவருக்கிடையிலான அலைவரிசை என்பது புரியப் போவதில்லை. உறவுக்குள் விரிசல் ஏற்படின் அதனைப் புரிந்து கொண்டு குடும்பம் பிளவு படக்கூடாது என்று இருவருமே விரும்பின் அதற்கான ஆலோசனைகளைப் பெறுவதற்குப் பல ஆலோசனை நிலையங்கள் இருக்கின்றன. அதைக் கூடப் பெறுவதற்கு எம்மக்களுக்குத் தயக்கம். தமது திருமணம் ஆட்டம் காண்கின்றது என்பதை மற்றவர் அறியக் கூடாது என்ற எண்ணம்தான் இவர்களுக்குப் பெரிதாக இருக்கின்றது. இப்படியாகப் பிறருக்கான வாழ்ந்து முடிவில் உளவியல் தாக்கத்தின் உச்சத்தில் கொலை தற்கொலை என்று தள்ளப்பட்டு ஒட்டு மொத்தமாக எல்லாவற்றையுமே அழித்துக் கொள்கின்றார்கள்.இதில் பெரிய நகைச்சுவை என்னவெனின் சட்டத்தைப் பற்றிய குறைந்த பட்ச அறிவு கூட இல்லாமல் ஒருவர், மனைவி செய்த பெரீய்யய தவறுக்காக கணவன் கோவம் கொண்டு கொலை செய்து விட்டானாம் எனவே அவனுக்கு அதிகம் தண்டனை கிடைக்காது என்பதுதான். இவர்கள் எல்லாம் இந்தியா சென்று பஞ்சாயத்துப் பண்ணத்தான் லாயக்கு.
அண்மையில் பெண்கள் அமைப்புகளில் தாக்கங்களுக்கு உள்ளாகும் பெண்களின் பதிவு கணிசமான அளவு உயர்ந்துள்ளது. உப்புசப்பற்ற விடையங்களுக்கும், முக்கியமாக சந்தேகம் எனும் நோய்க்குமே பெண்கள், ஆண்களால் மிக்கக் கடுமையாகத் தாக்கப்படுகின்றார்கள். அமைப்புகளுக்கு வந்து மனம் திறந்து தமது கவலைகளைக் கூறி கண்ணீர் விட்டுச் செல்ல இவர்களால் முடிகின்றது. அடுத்த படியாக அதற்கான தீர்வு எனும் போது தமது சமூகம், குடும்பவாழ்வு, குழந்தைகள் என்ற தயக்கம் தான் இவர்களை ஆட்கொள்கின்றது. தொடர்ந்து பலதரப்பட்ட வன்முறைகளுக்கு முகம் கொடுக்கும் பெண்கள், உளவியல் தாக்கங்களுக்குத் தள்ளப்பட்டு, முடிவில் தவறான முடிவையே நாடுகின்றார்கள். இதனைப் பற்றி எனது மக்களுக்கோ குறிப்பாக இந்த நிலைக்குப் பெண்களைத் தள்ளும் ஆண்களுக்கோ எந்தக் கவலையும் இல்லை.
தமது குடும்ப கௌரவம், கலாச்சாரம் என்று வரட்டுப் பிடி பிடித்துத் தொங்குகின்றார்கள். இப்படியே போனால் மனைவியின் கற்பை நிரூபிக்க தீ மிதிக்கச் சொன்னாலும் சொல்வார்களோ என்று சந்தேகமாக உள்ளது.
செப்டெம்பர் மாதம் 21ம் திகதி வெளியான உலக சுகாதார அமைப்பின் கணிப்பின்படி 2020 ஆண்டு "யூனிபோல டிப்பிறஷன்” எனும் மனஅழுத்த நோய், மேற்குலக நாடுகளில் பாதிப்பை ஏற்படுத்தும் இரண்டாவது முக்கிய நோயாகக் கணிக்கப்பட்டுள்ளது. இந்நோயினால் ஆண்களை விடப் பெண்களே அதிகம் பாதிக்கப்படுவார்கள் என்றும் கூறப்படுகின்றது. தற்போது உலகளாவிய அளவில் 121 மில்லியன் மக்கள் மனஅழுத்தம், உளவியல் தொடர்பான நோயினால் பீடிக்கப்பட்டிருக்கின்றார்கள். கடந்த ஒரு வருடத்திற்குள் 6சதவீதம் பெண்களும், 3சதவீதம் ஆண்களும் இவ்வகை நோயினால் ஒன்றாரியோ நகரத்தில் பாதிப்பிற்குள்ளாகி இருக்கின்றார்கள். அனேகர் 15-25 வயதுக்குள்ளான பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆய்வாளர்கள் தரவுகளை வெளியிட்ட வண்ணம் இருக்கின்றார்கள். பாதிப்பிற்குள்ளாவோர் எங்கே எப்படி உதவிகளைப் பெறலாம் என்று தொலைக்காட்சிகள், பத்திரிகைகள், சுவரொட்டிகள் சுட்டிக்காட்டிய வண்ணம் இருக்கின்றன. இருந்தும் உதவி பெறுவோரின் எண்ணிக்கை மிகக் குறைவாகவே இருக்கின்றது. இதற்கான காரணம் அடையாளம் காணப்படாமை என்பது ஆய்வாளர்களின் கருத்தாக இருப்பினும், எமது மக்கள் எனும் போது அறியாமை, போலி கௌரவம் என்பதே உண்மையாக உள்ளது.

Wednesday, May 02, 2007

Killing us softly….

விளம்பரங்கள் இளைஞர்கள் மத்தியில் ஏற்படுத்தும் தாக்கங்களை மையமாக வைத்து ஜீன் கில்போன் பல விவரணப்படங்களை எடுத்து விருதுகளையும் பெற்றுள்ளார். “Spin the Bottle”, “Deadly Persuasion” போன்ற இவரது விவரணப்படங்கள் மதுபானங்கள், சிகரெட் போன்றவற்றை விளம்பரங்கள் மூலம் கல்லூரி மாணவர்கள் மத்தியில் எப்படி வியாபாரிகள் நுழைக்கின்றார்கள் என்றும் அதனால் மாணவர்களிடையே ஏற்படுத்தும் தாங்களை ஆதாரங்களோடும் விளக்கியுள்ளார். ஜீன் கில்போனின் ““Killing us softly” ” விளம்பரங்கள் பெண்களை எப்படியான இழிவுபடுத்துகின்றன என்பதோடு, விளம்பர நடிகைகளின் தோற்றங்கள் இளம்பெண்களின் மத்தியில் எப்படியான தாகங்களை ஏற்படுத்துகின்றன என்பதைக் காட்டி நிற்கின்றது. மின்னும் கன்னங்களும், பட்டுப்போல குலுங்கும் தலைமயிரும், வாரி எடுத்து விட்டது போல் கால்கள், இடுப்பு என்று ஆறு அடி உயரப் பெண்களை விளம்பரங்கள் மூலம் அலையவிட்டு இளைஞர்கள் மத்தியில் அழகு என்பதற்கு வரைவிலக்கணம் வகுத்து உடல்பருத்த, முகப்பரு கொண்ட பெண்களை மனஅழுத்தத்திற்கு உள்ளாக்கி தற்கொலைக்கு தூண்டும் அளவிற்கு கொண்டு சென்றிருக்கிறது.
இப்படியான விளம்பரங்களை கல்லூரி, பல்கலைக்கழகங்களுக்கு எடுத்துச் சென்று மாணவர்கள் மத்தியில் அதனைப் போட்டுக்காட்டி அவர்களுடைய கருத்துக்களையும் இந்த விவரணப்படங்களில் இணைத்திருக்கின்றார்கள். பெண்களுக்கு மட்டுமல்லாமல் ஆண்களுக்குக் கூட இந்த விளம்பரங்கள் தாக்கங்களை ஏற்படுத்தியிருக்கின்றன என்பதை விளம்பர நடிகைகளின் தோற்றங்கள் கொண்ட பெண்களை தங்கள் மனம், கண்கள் நாடுகின்றன என்றும், தமது காதலி உடல்பருத்தால் தமக்குள்ளும் தாக்கங்கள் ஏற்படுகின்றது என்பதாய் இந்த மாணவர்கள் கூறுகின்றார்கள். அழகு என்றால் என்ன என்பதை வியாபாரிகள், ஊடகங்கள் விளம்பரங்கள் மூலம் தமக்கான குறுகியவட்டத்திற்குள் வரவிலக்கணம் கொடுத்து இஞைர்களை அதற்கு அடிமையாக்கி தம் அழகு சாதனப்பொருட்களைச் சந்தைப்படுத்துகின்றார்கள். அத்தோடு தேவையற்ற பல பொருட்களுக்கும் பெண்களின் உடல் அங்கங்கள், அரைகுறை உடையணிந்த பெண்களின் தோற்றங்கள் என்பனவற்றைப் பயன்படுத்தி பெண்களை ஒருகாட்சிப் பொருளாக்குகின்றார்கள். இவையனைத்து மேற்குலக வியாபாரத் தந்திரங்கள். இந்த வியாபாரிகளுக்கும், விளம்பதார்களுக்கும் எதிராக ஜீன் கில்போன் போன்றவர்களும், பல பெண்ணியவாதிகளும் குரல் கொடுத்த வண்ணமே இருக்கின்றார்கள்.
அண்மையில் “டவ்” சவர்காரப் பொருட்களுக்கு ரொறொண்டோவின் அனைத்துப் பாகங்களிலும் விளம்பரங்கள் ஒட்டப்பட்டிருந்தது. பல நிறங்களில, பல அளவுகளில் பெண்களை இந்த சவர்க்காரப் பொருளுக்குப் பயன்படுத்தி ஒரு சாதனையை ஏற்படுத்தியிருக்கின்றார்கள் என்றால் மீண்டும் பெண்களின் உடல்கள்தான் இங்கே காட்சிப் பொருளாக்கப்படுகின்றது. இவையனைத்தும் அமெரிக்க கனேடிய சஞ்சிகைகள், தொலைக்காட்சிகளுக்கான விளம்பரங்கள். போன கிழமை எனது நண்பர் ஒருவரின் வீட்டில் கனேடிய தமிழ் தொலைக்காட்சியை சில மணிநேரம் பார்க்க முடிந்தது. அந்த சிலமணி நேரங்களில் தமிழ் தொலைக்காட்சிகளில் காட்டப்பட்ட விளம்பரங்கள் அதிர்சி தரக்கூடியதாக அமைந்திருந்தன.
ஒன்று – "ரப்பின் புளோரிங்" இற்கான விளம்பரம். ஒருவர் வேட்டி சால்வையோடு மரத்தின் மேல் கையில் தாலிக்கயிற்றோடு தொங்குகின்றார், அந்த இளைஞன்?? இவரின் பேச்சு மூளை பாதிக்கப்பட்டவர் போல் காட்டப்பட்டது. அதன் தேவை எனக்குப் புதியவில்லை. கீழே அவரின் தந்தை என்று சொல்லிக் கொண்டு அதே ஆண் வேறு வேடத்தில் நின்று கொண்டு “வடிவான பிள்ளை வீடும் சீதணமாத் தருகின்றார்கள் முகூர்த்த நேரம் போகப்போகுது வந்து தாலியைக் கட்டு” என்பதாய் கெஞ்ச மரத்தில் தொங்கும் மகன் “வீட்டுக்கு ரப்பிட் புளோரிங்கை கூப்பிட்டு காட்வூட் புளோர் காப்பெட் போன்றவை போட்டால்தான் வந்து தாலி கட்டுவன” என்று கேட்பதாய் அந்த விளம்பரம் அமைந்திருக்கின்றது.
பெண்ணுக்குத் தாலி கட்டுவதென்பது எவ்வளவு சிறுமைத்தனமாக பெண்ணால் ஒன்றும் செய்ய முடியாது என்பது போலும், புளோரின், காட்பெட் போன்று பெண்ணையும் ஒரு பொருளாக்கி இந்த விளம்பரத்தில் காட்டியிருக்கின்றார்கள். அந்த ஆண் எதற்கு அசட்டுத்தனமாகவே கதைக்கின்றார் என்பது எனக்கு எப்போதும் புரியாத புதிராகவே இருக்கின்றது. இந்த ஆணை எந்த ஒரு பெண்ணும் முன்வந்து கட்டிக்கொள்ளுவாளா என்பது பற்றி இந்த விளம்பரத்தை எடுத்தவருக்கு ஏன் சிந்தனை எழவில்லை. இந்த விளம்பரம் எந்த வகையில் ரப்பிட் புளோரிங்கின்று வியாபாரத்தைக் கூட்டிக்கொடுக்கப் போகின்றது.

அடுத்து “நிரு ப்ராண்ட்” சமையல் பொருட்களுக்காக இந்தியா சென்று டொலர்களை அள்ளிக் கொடுத்து ஒரு விளம்பரம் பண்ணிக்கொண்டு வந்திருக்கின்றார்கள். “சமையல் நல்லாவே இல்லை, அம்மா சமையல் போல் இல்லை” என்று சாப்பாட்டு மேசைமேல் இருந்து சாப்பிட்டுக்கொண்டிருக்கும் இளைஞன் முகத்தைச் சுளித்து தனது அருகில் நிற்கும் இளம் மனைவியைப் பார்த்துச் சொல்லி விட்டுப் போகின்றார். இளைஞனின் தாயார் “நிரு ப்ராண்ட்” பொருட்களோடு வந்து மருமகளுக்கு சாப்பாட்டில் அதனை சேர்த்துக் கொள்ளச்சொல்லி குடுக்கின்றார் என்பதாய் விளம்பரம் அமைந்திருக்கின்றது.

புலம்பெயர்ந்து வந்த ஈழத்து ஆண்களில் பலரும், கனடாவில் பிறந்து வளரும் பல ஆண்களும் தமது வீட்டு வேலைகளை தமது மனைவிமாருடன் சந்தோஷமாகப் பகிர்ந்து கொள்ளத் தொடங்கி விட்டார்கள். மீண்டும் எதற்காக இந்தியக் குப்பைகளை இங்கே இழுத்து வந்து தொலைக்காட்சியில் போட்டுக்காட்டுகின்றார்கள். திரும்பத் திரும்ப ஒன்றை பார்ப்பதன் மூலம் மனதில் அது சரி என்று பதிந்து விடுவதாய் ஆய்வுகள் கூறுகின்றன. அதனால்தான் தற்போது இரவில் குழந்தை அழும்போது எழுந்து கொள்வது, டயப்பர் மாத்துவது, வீடு துப்பரவு செய்வது, உடுப்பு துவைப்பது போன்ற பல விளம்பரங்களுக்கு ஆண்களையும் பயன்படுத்துகின்றார்கள் சிந்திக்கத் தெரிந்த சமூக அக்கறை கொண்ட விளம்பரதார்கள்.
தமிழ் தொலைக்காட்சிகளில் இந்திய நாடகங்கள் தேவையில்லைத மனஅழுத்தங்களை புலம்பெயர்ந்த பெண்கள் மத்தியில் கொடுத்துக்கொண்டிருக்கும் சமயத்தில் இப்படியான விளம்பரங்களை எதற்கான விளம்பரதாரர்கள் இணைத்துக்கொள்ளுகின்றார்கள் என்பது தெரியவில்லை. புலம்பெயர்ந்த எம்மவர் தயாரிப்பு நிரூப்ராண்ட் பொருட்கள். இதற்கு இப்படியான விளம்பர தேவை எதற்கு??பழக்க தோசத்தில் நிரூ ப்ராண்டை வாங்கி வந்த நான் அந்த விளம்பரம் பார்த்த பின்னர் வாங்குவதில்லை. என்னால் முடிந்தது இவ்வளவே.

பின் குறிப்பு இது கனேடித் தமிழ் பத்திரிகை ஒன்றிற்காக நான் எழுதிய கட்டுரை இக்கட்டுரை வெளிவந்த பின்னர் இரு கனேடிய வர்த்தகர்களும் தமது விளம்பரங்களை நிறுத்திவிட்டிருந்தார்கள். ஆனால் "ரப்பிர் புளோர்" மீண்டும் அந்த விளம்பரத்தை போடத் தொடங்கியுள்ளது. பலர் ஒன்று சேர்ந்து ஒரு போராட்டமாகக் கொண்டு வந்துதான் கனேடியத் தமிழ் ஊடகங்களில் பெண்களைக் கொச்சைப் படுத்துவதைத் தடுக்க முடியுமே தவிர வெறுமனே ஒரு சில பெண்கள் குரல் கொடுப்பதால் ஒன்றும் நடந்து விடப் போவதில்லை. என்ன செய்வது கனேடியப் பெண்களின் நிலை இப்படியாக உள்ளது.

Tuesday, May 01, 2007

சாயவனம் கந்தசாமி

ஒருவர் அவர் வாழ்க்கை முறை எப்படியிருப்பினும், பிறருக்குத் தன்னை அடையாளம் காட்டும் போது தனக்கு ஒத்த கூட்டத்திற்குப் பொருத்தமானவராகவே அடையாளப்படுத்திக் கொள்வார். சமூகநலவாதி, அரசியல்வாதி, முற்போக்குவாதி, பெண்ணியவாதி, இலக்கியவாதி என்று பல வடிவங்களில் தனது வட்டத்திற்கு ஏற்றபடி தன்னை உருமாற்றிக் கொண்டு, அதற்கேற்ப தனது கதையையும் மாற்றிக் கொள்பவரான இருந்தால்தான் அவரால் வாழ்வைக் கொண்டு நடத்த முடியும். இவை எல்லாம் வெளித்தோற்றத்திற்காகப் போடும் வேசம் எனினும் கட்டாயமாகிப் போன ஒன்றாகவே உள்ளது.சிலமாதங்களின் முன்னர் கனடா வந்திருந்த எழுத்தாளர் “சாயவனம்” கந்தசாமியுடன் ஒரு இலக்கியச் சந்திப்பு இடம்பெற்றிருந்தது. அதற்கு நானும் சென்றிருந்தேன். “வைகறை” பத்திரிகையில் வெளிவந்திருந்த அவரது நேர்காணல் அவர் மேல் எந்த வித மரியாதையையும் எனக்கு வழங்கவில்லை. மாறாக இப்படியாக ஒரு பிற்போக்குத்தனமான பேட்டியைக் கொடுக்கும் ஒரு இலக்கியவாதி எப்படி சாகித்திய அகாதெமி விருதைப் பெறும் நாவலை எழுதினார் என்ற கேள்வியே எஞ்சியிருந்தது. இருந்தும் சந்திப்பின் நேரம் அவரின் உரை அவர் மேல் எனக்கு ஒரு மதிப்பை உண்டு பண்ணலாம் என்ற நம்பிக்கையில் சென்றிருந்தேன். இருந்தும் மீண்டும் எனக்கு ஏமாற்றத்தை அவரது உரை வழங்கியிருந்தது. கொடுத்த தலைப்பை விட்டு எதையோ நீண்ட நேரமாகப் பேசி முடித்தவர் தொடர்ந்து வந்த கேள்விகளுக்கும் பொருத்தமற்ற தனமாக பதிலளித்த வண்ணமிருந்தார். ஒரு நல்ல இலக்கியவாதிக்கான எந்த ஒரு அடையாளத்தையும் நான் அவரிடம் காணவில்லை. இருந்தும் மிகவும் புகழ் பெற்ற “சாயவனம்” நாவலில் அவரின் எழுத்தை நான் பார்த்து விடவேண்டும் என்று முயன்றும் நாவல் எனக்குக் கிட்டவில்லை. கடந்த வாரம் தற்செயலாக அவரின் “அவன் ஆனது” நாவல் கிடைக்கப்பெற்று இருமுறைகள் வைப்பதற்கு மனமின்றி வாசித்து முடித்தேன். நாவலின் தரம் சா.கந்தசாமியா இப்படி எழுதினார் என்று என்னை வியக்க வைத்தது. இப்படி ஒரு தரமான நாவலை எழுத முடிந்த எழுத்தாளருக்கு ஏன் நாகரீகமாக பேச முடியவில்லை. ஒரு படைப்பாளிக்கு அவனின் மனதில் இருக்கும் கருத்தே படைப்பாக வெளிப்படும். அப்படியிருக்கும் போது படைப்பில் இவ்வளவு சிந்தனைத் தெளிவைக் கொண்ட இந்த எழுத்தாளரால் ஏன் கூட்டத்தில் முறையாக உரையாட முடியவில்லை என்பது எனக்கு இன்னும் புரியாமல் உள்ளது. இனி அவரின் “அவன் ஆனது” நாவலைப் பற்றிச் சிறிது பார்த்தோமானால், கடினமான வார்த்தை பிரயோகங்களைக் காட்டி வாசகரைப் பிரமிக்கவும், சிரமப்படுத்தவும் முயலும் பல முற்போக்கு இலக்கியவாதிகள் மத்தியில் எளிய எழுத்து நடையில் ஒரு மனேதத்துவ நாவலைப்; படைத்துள்ளார் சாயவனம் கந்தசாமி. ஒவ்வொரு மனிதனும் ஏதோவகையில் மனநிலை பாதிக்கப்படுபவனாகவே இருக்கின்றான் என்பதை அன்றாடம் நாம் காணும் மனிதர்களில் இருந்து அடையாளப்படுத்தியிருக்கின்றார். ஒவ்வொருவரும் தம்மை தமது வாழ்வை முழுமையாப் பார்த்த படி மற்றையோரை ஏன் இப்பிடி இருக்கிறார்கள் என்று கேள்வி எழுப்பிய வண்ணமே இருக்கின்றார்கள். இந்தச் சுழற்சியின் எழுத்து வடிவம் தான் “அவன் ஆனது” நாவல். ஜானகிராமனும், ஜெயகாந்தனும் ஆர்ப்பாட்டமாகவே கலாச்சார உடைப்புக்களை எழுதிப் பெயர் பெற்றிருக்கின்றார்கள், ஆனால் அதிகம் அலட்டிக்கொள்ளாமல் “ரோஸ்மேரி” என்ற ஒரு பெண்பாத்திரத்தைப் படைத்து பெண்களுக்கான அத்தனை அடைப்புக்களையும் ஆர்ப்பாட்டம் இல்லாமல் உடைத்தெறிந்திருக்கின்றார்.


“சாயவனம்” கந்தசாமி ஒரு எழுத்தாளராகவும், ஓவியராகவும், சிற்பிகள் பற்றிய விவரணப் படம் எடுப்பவராகவும் பெயர் பெற்றிருக்கின்றார். இருந்தும் என்னுள் எஞ்சியிருக்கும் கேள்வி எதுவெனில் ஒரு தரமான இலக்கியவாதியாக ஏன் சா.கந்தசாமியால் பொதுக்கூட்டம் ஒன்றில் பேச முடியவில்லை?. அவர் தனது எழுத்தில் வேஷம் போடுகின்றாரா என்றால், இவ்வளவு தூரம் மனித மனங்களை ஆராய்து எழுத்தில் கொண்டு வரும் ஒரு எழுத்தாளன் நிச்சயமாகத் சிந்தனைத் தெளிவுடையவனாகவே இருப்பான். எனவே சா.கந்தசாமியுடனான சந்திப்பை ஒரு கெட்ட கனவாக மறந்து அவரின் படைப்புக்ளைத் தேடி வாசிப்போம்.