Monday, February 28, 2005

“டூஸ்” தற்பால் நாட்டம்

“Fire” போன்ற திரைப்படங்கள் கல்லூரி மாணவிகளுக்கு ஓரினச்சேர்க்கையைப் பரீச்சித்துப் பார்க்க வைக்கின்றன என்ற உஷாவின் கட்டுரைக்குப் பல வாசகர்கள் தமது கருத்துக்களைக் கூறியிருந்தார்கள். ஆராய்சிக் கட்டுரைகள், எழுத்தாளர்களின் சுயஅனுபவ நாவல்கள் போன்றவை பலரால் மேற்கோள் காட்டப்பட்டிருந்தன.
இத்தகவல்களைப் படிக்கும் போது எனக்குள் எனது பாடசாலை நாட்கள் வந்து,வந்து போனது. இது போல் இன்னும் பலருக்கும் மீட்டிப்பார்க்கும் பல நினைவலைகள் இருக்கலாம். (சொல்ல மறுக்கும் ஞாபகங்கள்)

கறுப்பி ஐந்தாம் வகுப்பு வரை ஒரு கிராமப்பாடசாலையில் படித்து விட்டு உயர்தரக்கல்விக்கு நகரத்தில் இருக்கும் ஒரு மகளீர் பாடசாலைக்குப் போய்ச் சேர்ந்தாள். அம்மாவுடன் இழுபட்டுப் போய் வந்த (எனது அம்மா ஒரு ஆசிரியை) நாட்கள் போய் யூனிபோர்ம்,ரை,சொக்ஸ், சப்பாத்து என்று ஸ்கூல் பஸ்சில் பாடசாலை போய் வருவது மிகவும் த்ரில்லாகவும் கொஞ்சம் பயமாகவும் இருக்க எப்போதும் எல்லோரையும் “ஆ” வென்று பாப்பவளுமான இந்தக் கறுப்பி தனது வீட்டிற்குப் பக்கத்தில் இருந்து போய் வரும் ஒருத்தியுடன் (பாதுகாப்பிற்காக) ஒட்டிக்கொண்டு திரியத் தொடங்கினாள்.
பாடசாலையில் இரண்டு சிறிய இடைவேளைகளும், ஒரு சாப்பாட்டு இடைவேளையும் இருக்கின்றது. கறுப்பியின் நண்பி முதலாவது இடைவேளை வரும் நேரம் நெருங்கும் போதே தனது மேசை லாச்சிக்குள் இருந்து ஒரு பூ, இல்லாவிட்டால் ஒரு இனிப்பு என்று ஏதாவதை எடுத்து வைத்துக் கொண்டு மிகக் கவனமாக மடித்து வைக்கப்பட்ட ஒரு காகித உறையையும் மறைத்து வைத்துக் கொள்வாள். இடைவேளைக்கான மணி அடித்ததுதான் தாமதம் எல்லாவற்றையும் எடுத்துக் கொண்டு தனது “டூஸ்” ஐப்பார்க்கப் போவாள். அது அவளிலும் பார்க்க நான்கு அல்லது ஐந்து வயது கூடிய ஒரு அக்காவாக இருக்கும். அந்த டூஸ் அக்கா தனது வகுப்பறைக்கு வெளியிலோ இல்லாவிட்டால் ஒரு மரத்தடியிலோ இவளுக்காகக் காத்திருப்பாள். ஒருவரையொருவர் காணும் போது காதலர்களைக் காண்பது போல் முகம் சிவந்து வெட்கப்படுவார்கள். பூக்களும், இனிப்புக்களும், கடிதமும் கைமாறும். இப்படியாக மரங்களின் அடியில் வகுப்பறைக்குத் தள்ளிய ஒதுக்குப் புறங்களில் பல டூஸ் ஜோடிகள் ஜொள்ளு விட்டுக்கொண்டிருப்பார்கள். சாப்பாட்டு நேரம் கூட சாப்பிட மறந்து கதைப்பார்கள். அப்படி என்ன கதைக்கின்றார்களோ எனக்குத் தெரியாது.(என்னை எனது நண்பி எப்போதும் தனக்குப் பாதுகாப்பிற்காகவே உபயோகப்படுத்தினாள். யாராவது ஆசிரியர் அந்தப் பக்கம் வந்தால் அவர்களுக்குச் சொல்லும் வேலை எனக்கு)
தொடக்கத்தில் எனக்கு ஒன்றுமாக விளங்கவில்லை. எனது தோழியுடன் சும்மா இழுபட்டுக்கொண்டிருபன். ஒருநாள் எனது தோழி சொன்னாள் நான் தன்னுடன் வருவது தனக்கு தன் டூஸ் அக்காவுடன் கதைக்க டிஸ்ரேபன்ஸா இருக்கு என்று என்னை அழைத்துப் போவதை நிறுத்தி விட்டாள்.
டூஸ் பற்றிய போதிய விளக்கம் எனக்கு அப்போது இருக்கவில்லை. ஆனால் எனக்கும் ஒரு "டூஸ்" பிடிக்க ஆசையாக இருந்தது. இருந்தும் எனது வீட்டு நிலமை – அதாவது எனது மூன்று மூத்த சகோதரிகள் யாழ்ப்பாணத்தின் இன்னுமொரு மகளீர் கல்லூரியில் கல்வி கற்று வந்தார்கள். அவர்கள் வீட்டில் இந்த டூஸ் மார் அடிக்கும் கூத்தைப் பற்றி நக்கலாகக் கதைப்பார்கள். இது எனக்குக் கொஞ்சம் சங்கடமாக இருந்தது. இருந்தும் டூஸ் பிடிக்க ஆசை. ஆனால் எப்படிப் பிடிப்பது? நண்பியிடம் கேட்க கூச்சம். இப்படியான நாட்கள் ஏக்கத்தோடு நகர்ந்து கொண்டிருக்க ஒருநாள் எனது நண்பி சொன்னாள் தனது டூஸ் இன் நண்பி என்னைத் தனக்கு டூஸாக வைத்திருக்க ஆசைப்படுகின்றாள் என்று. நான் வெட்கப்பட்டு நெளிந்து, கிழிந்து சம்மதித்தேன். எனது நண்பியின் உதவியுடன் எனது டூஸ் இற்கு முதல் கடிதம் எழுதப்பட்டது.
அன்புள்ள ஜெயந்தி அக்கா,
நான் நலம் நீங்கள் நலமாக இருக்க இறைவனை வேண்டுகின்றேன் என்று தொடங்கி (இடையில் எழுதியதை மறந்து போய் விட்டேன்)
முடிக்கும் போது நிச்சயமாக எல்லோருடைய கடிதத்திலும்
ஆழ் கடல் வற்றினாலும் என் அன்புக்கடல் வற்றாத
என்று முடிந்திருக்கும்.
முதல் கடிதம் ஆகையால் மிகுந்த பயம், வெட்கம் எல்லாம் கலந்திருக்க கடிதத்தைக் கொண்டு போய்க் கொடுக்கும் துணிவு இல்லாமல் போய் எனது நண்பி தான் கொடுத்து வருவதாகப் போனாள். போய்ச் சிறிது நேரத்தின் பின்னர் முகம் பேயறைந்தது போல் என்னிடம் வந்து அக்கான்ர கிளாஸ் டீச்சர் என்னைக் கூட்டிக்கொண்டு வரட்டாம் என்றாள். நான் கை,கால் உதற அங்கே போனேன். டீச்சர் என்னைப் பார்த்து விட்டு நீர் --- மாஸ்டரின்ர மகளோ? என்று கேட்டார் (அப்பாவும் பாடசாலை ஆசிரியர்) நான் கண்களின் கண்ணீர் மல்க "ஓம்" என்பதாய்த் தலை ஆட்டினேன். இதென்ன கடிதம்? பள்ளிக்கூடத்துக்குப் படிக்க வாறனீங்களோ வேற என்னத்துக்கும் வாறனீங்களோ? என்று பலரின் முன்னால் அவமானப்படுத்தி தான் அப்பாவிடம் அந்தக் கடிதத்தைக் கொடுக்கப் போவதாக என்னை வெருட்டி அனுப்பி விட்டார். எனது முதல் "டூஸ்" உறவு முதல் நாளே முறிந்து போனது. அதன் பின்னர் ஒவ்வொரு நாளும் பாடசாலையால் வீட்டிற்கு வரும் போது மனம் திக்குதிக்கென்று அடித்துக் கொள்ளும். "டூஸ்" பிடிக்கும் ஆசை பின்னர் எழுவில்லை.
என் ஞாபகத்திற்கு எட்டியவரை. அனேகமாக எல்லா "Popular Girls" இற்கும் இந்த டூஸ் உறவு இருந்தது. ஆணைக் காதலிப்பது என்பது கெட்ட விஷயமாகப் பார்க்கப்பட்டதால் காதல் செய்ய விரும்பும் பெண்கள் தமது பெயரைக் காத்துக்கொள்ள ஒரு வடிகாலாக இந்த டூஸ் உறவை வைத்துக் கொண்டடிருக்கலாம். உடல்உறவு என்பது இங்கு சாத்தியம் இல்லை. ஆனால் மனதால் ஒருவகை சுயஇன்பம் காணும் தன்மையே இந்த டூஸ் உறவு எனலாம். அத்தோடு ஹொஸ்டலில் வசித்து வந்த அக்காமார் தமது டூஸ்சை ஹொஸ்டலுக்கு அழைத்துச் சென்று உடல் உறவில் ஈடுபட்டிருக்கிறார்கள் என்று rumour இருந்தது. "டூஸ்" அக்காவிற்குத் திருமணம் நிச்சயமானபோது அதனைத் தாங்க முடியாமல் மருந்து குடித்த ஒரு மாணவி இருக்கின்றாள். ஒருவருக்கு உடல் நலமில்லாவிட்டால் மற்றவர் வகுப்பில் இருந்து அழுவது, (அவருக்குப் பத்துப் பேர் ஆறுதல் சொல்வது) ஒரு டூஸ் சை விட்டு விட்டு இன்னுமொருவரைப் பிடிப்பது. இப்படி காதலருக்கான அத்தனை அடையாளமும் இந்த உறவிலும் காணப்பட்டது. ஹோர்மோன் மாற்றத்தின் சேஷ்டைகளால் சுயஇன்பத்திற்கான தொடக்க நிலை இந்த உறவாகா இருக்கலாம்.
நான் அக்காவாகிய காலங்களில் இந்த உறவு முற்று முழுதாக கல்லூரிகளில் மறைந்து போய் விட்டது. காரணம் தெரியவில்லை.

அமானுஷ சாட்சியங்கள்..









"ஏதோ ஒரு வெளியில் விடுபட்டவளாய் கைகளை அகல விரித்துப் பறந்து கொண்டிருக்கிறேன். இது சுதந்திரத்தின் குறியீடு அல்ல இருக்கைக்கும் இறத்தலுக்குமான போராட்டம். வானுக்கும் மண்ணுக்குமான இடைவெளி. ஆரம்பத்திற்கும் முடிவுக்குமான தத்தளிப்பு. சிந்தனைகள் மாறிமாறி மோதி என்னைக் குழப்பதிற்குள் தள்ளி விட.. வெறுமனே பறந்த வண்ணம் நான்.."

என்ர பெயர் நளாயினி. எல்லாரும் என்னை நளா நளா எண்டு கூப்பிடுவீனம். வயது 18. உயரம் 5’6.5”. கனேடிய உடுப்பு சைஸ் 8க்குள்ள என்ர உடம்பு கச்சிதமாகப் புகுந்து கொள்ளும். நீண்ட தலைமயிரை தூக்கி துணி ரப்பரால இறுக்கித் தொங்க விட்டிருப்பன். புதுசா ஏதாவது அலங்காரம் செய்ய ஆசை இருக்கு கூட கொஞ்சம் தயக்கமும் இருக்கு. கனடா வந்து மூன்று மாதங்கள். முழுநேரப் படிப்பு. பகுதி நேர வேலை எண்டு நேரத்தை ஓடிப் பிடிச்சுக் கொண்டிருக்கிறன். என்னக் காசு கட்டிக் கனடாவிற்கு கூப்பிட்ட அண்ணாக்கும் அக்காவுக்கும் காசைக் கெதியாத் திருப்பிக் குடுத்து விடவேணும் எண்ட வெறி எனக்குள்ள. (அவர்கள் கேட்காவிட்டாலும்)

அக்கான்ர ஒப்பாரி கேட்டு முடிய அண்ணர் எனக்கு போன் அடிச்சு தன்மையா நிதானமா
“என்ன நளா இது.. ஏன் இப்பிடியெல்லாம் செய்யிறா.. அக்கா உனக்காக எவ்வளவு எல்லாம் செய்திருக்கிறா” நான் குறுக்கிட்டன்
“அப்ப நான் என்ன செய்ய? உன்னோட வந்து இருக்கட்டே”.
“என்னடி விளக்கமில்லாமல் கதைக்கிறாய் என்ர வீட்டில எங்க இடமிருக்கு நானே என்ன செய்யிறதெண்டு தெரியாமல்..” நான் திரும்பவும் குறுக்கிட்டன்.
“அப்ப என்ன அண்ணா செய்யிறது? வேலை செய்யிறன் தானே தனியப் போய் எங்கையாவது இருக்கட்..”
“என்னடி எங்கள எல்லாம் அவமானப்படுத்தவெண்டே அங்கையிருந்து இஞ்ச வெளிக்கிட்டு வந்திருக்கிறா நீ வரமுதல் எவ்வளவு நிம்மதியா, சந்தோஷமா நானும் அக்காவும் இருந்தனாங்கள் தெரியுமே? இப்ப நீ வந்தாப் பிறகு எப்ப பாத்தாலும் பிரச்சனை. எங்கள நிம்மதியா இருக்க விட மாட்டியே” குரல் உயந்தது.
“நானென்னண்ண பொய்யே சொல்லுறன்”
குரலின் கடினம் கரைய கனிவு கலந்து “இல்லை நளா.. நான் அப்பிடிச் சொல்லேலை ஆம்பிளைகள் கொஞ்சம் அப்பிடி இப்பிடித்தான் இருப்பினம்..இஞ்சத்தையான் ஆக்கள மாதிரி உடுப்புகளைக் கண்டபடி போடாத, கொஞ்ச நாளைக்குப் பல்லக் கடிச்சுக் கொண்டு கண்டும் காணத மாதிரி இரு அம்மாவும், அப்பாவும் கெதியா வந்திடுவீனம் பிறகு எல்லாம் ஓ.கேயாயிடும். அதுக்கிடேலை சின்ன விஷயத்தைப் பெரிசாக்கி எங்கட குடும்ப மானத்தைக் கப்பலேத்திப் போடாத”
“சரி அண்ண அப்பிடியெண்டா ஒண்டு செய்வமே?”
“சொல்லம்மா..”
“இல்லையண்ண உனக்கும் பதின்மூண்டு வயசில பொம்பிளப்பிள்ளை பெஞ்சாதி எல்லாம் இருக்கீனம் தானே அவேலில ஒராள கொஞ்ச நாளைக்கு அத்தானோட கொண்டு வந்து விடன் நான் நிம்மதியா இருப்பன்”

“அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே
உச்சி மீது வானிடிந்து வீழுகின்ற போதிலும்
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே”


எனக்கான சிறை என்னால் வடிவமைக்கப் பட்டது. பல வகை ஆணிகள் பூட்டுக்களால் அறைக்கதவு இறுகிக் கொண்டது. வெளியில் சாப்பிட்டு அறைக்குள் ரீ குடித்து எனக்கான தொலைபேசி எனக்கான தொலைக்காட்சி என்று என்னை நானே அடைத்துக் கொண்டேன்.
அக்கா பிள்ளைகள் கதவைத் தட்டும் “சித்தி சித்தி” எண்டு குரல் கேக்கும். கொடூரமாக எனைக் கொச்சைப் படுத்திச் செல்லும் அக்காளின் குரல். “சரக் சரக்” கெண்ட சப்பாத்துச் சத்தத்துடன் ஆண்மை வீரியத்தைத் தூக்கி நிற்கும் “பெர்பியூம்” வாசனையுடன் நிதானமாய் வேலைக்குச் சென்று திரும்பும் அத்தான் உருவமாய். தன் கணவனின் ஆண்மையில் திருப்தியும் பெருமையும் காணும் அக்காள்.

சம்பளக் காசு வந்தவுடன வாடைக்கும் சாப்பாட்டுக்கும் எண்டு கொஞ்சத்தை அக்காட்டக் குடுத்தாள் நளா
“உன்னைக் கொண்டு உழைப்பிச்சுக் காசு சேக்கத்தானே இஞ்ச கூப்பிட்டனாங்கள் இஞ்ச எங்க சாப்பிடுறா எண்டு சாப்பாட்டுக் காசு தாறாய். உங்களுக்கெல்லாம் கொழுப்படி”
“எனக்குச் சும்மா ஒரு வீட்டில இருக்க விருப்பமில்லை”
“ஓ உங்களுக்கு கனடா வந்தவுடனயே பிளான் பிடிபட்டிட்டுது ஆ.. காலமடி”

வாடைக்காசை மேசையில வைச்சிட்டு நளா போனாள். அது தொடப்படாமல் மேசையில் பல நாட்களாகக் கிடந்தது.

விரிந்து கிடந்த கனேடியக் கரிய வானத்தில் இலைகளைத் தொலைத்த குச்சி மரங்கள் பல் நிற பல்புகளாய்ப் பூத்து வழி காட்ட அத்தான் அவசரமில்லாது காரை ஓட்டினார். நளாவின் கைகளைத் தனக்குள் புதைத்து “அம்மா அப்பா எப்பியெடி இருக்கீனம் அவையளும் வந்திட்டாப் பிரச்சனை தீந்திட்டும்” அக்கா வார்த்தைகளால் குறுக்கிட கண்களை வெளியே அலையவிட்ட நளாவின் கனவில் பரந்து கிடந்தது எதிர்காலம். குளிரும் உடலின் சிறிய உதறல் மகிழ்ச்சி தர அக்கா பிள்ளைகளை இழுத்து மடியில் போட்டாள்.
“நல்லாப் படிக்க வசதியிருக்காம் முடிஞ்சா கொஞ்ச நேரத்துக்கு ஏதாவது வேலையும் செய்தியெண்டா உன்ர செலவுக்கு உதவும் நாங்களும் கெதியா வந்திடுவம்” அம்மாவின் குரல் அடிக்கடி ஒலித்தது.
அண்ணா தூர இருக்கிறார். நளாவின் அனைத்து வேலைகளையும் சிரித்த முகத்தோடு தன் பக்கம் எடுத்துக் கொண்டார் அத்தான். காரில் முன்னால் இருத்தி ‘இமிகிரேஷன்’ பள்ளிக்கூட ‘அட்மிஷன்’ இத்யாதி இத்யாதி. குளிர் காற்றடிக்க காரின் யன்னல் சாத்திய முழங்கை நளாவின் மார்போடு தேய்த்துச் சென்றது. நளா உடலை ஒடுக்கிக் கொண்டாள்.
இரவு கட்டிலில் புரண்டு “ச்சீ அத்தான் அப்பிடிப் பட்டவரில்லை” சமாதானமாய் நித்திரை கொண்டாள். அக்கா வேலையால் வருமுன்னே நளாவும் அத்தானும் சமையல் முடித்து வைத்தார்கள். கைகள் இடறுப்படும் போது “சொறி” என்றவாறு பார்வையைத் தாழ்த்திக் கொண்ட போது நளாவிற்கு நிம்மதியாக இருந்தது. குளிக்கும் போதும் உடை மாற்றும் போதும் கதவோரத்தில் நிழல் ஆடியது. வேலையால் அடிக்கடி வெள்ளண வீட்டுக்கு வரத்தொடங்கிய அத்தானின் பார்வைகள் நிறம் மாறிப் போயிருந்தன. நளா வேலை எடுத்துக் கொண்டாள். பாடசாலை வேலை என்று அக்காவிற்கு முன்னால் சென்று பின்னால் வீட்டிற்கு வரப் பழகிக் கொண்டாள். எல்லாமும் சமாதானமாயிற்று.

பஸ்சிற்கு நிண்டவளை கடந்து சென்ற கார் சிறிது தூரம் போய்ச் சுற்றி வந்து அழைத்தது. மறுக்கும் துணிவின்றி மீண்டும் சமாதானமாகி ஏறிக்கொண்டாள். படிப்பு வேலை பற்றி யதார்த்தமா மிக யதார்த்தமாக வார்த்தைகளை வீசிய படியே பார்வையை தூர ஊடுவ விட்ட அத்தான் மேல் நளாவிற்கு நம்பிக்கையும் மதிப்பும் ‘ஸ்யரிங்கை” மாற்றும் போது நளாவின் துடையை விரல்கள் உரஞ்சிச் செல்லும் வரை இருந்தது. கால்களை இழுத்துக் கொண்டாள். பேச்சுக்கள் தடைப்பட்டது. மௌனம் ஊடுவியது.
வேலைத் தளத்தில் இறக்கி விடும் போது பார்வையில் நிஷ்டூரம்.

இருமி இருமிக் களைத்துப் போன அக்காள் மகளை தன்னோடு அணைத்துக் கதை சொல்லிப் படுக்க வைக்க முனைந்து கொண்டிருந்த நளாவின் அறைக்குள் திடீரென புகுந்த அத்தான், மகளின் தலை தடவி “எப்பிடி இருக்கடா” என்றவாறு நளாவின் ஒற்றை மார்பை இறுக்கிப் பிடித்துப் பிசைந்து விலகிச் செல்ல திடுக்கிட்டு உடல் உதற விறைத்துப் போனாள்.

“என்னடி சொல்லுறாய்? என்னடி சொல்லுறாய்? பிள்ளை மாதிரி நினைச்சு எல்லாம் ஓடியோடிச் செய்யிற எங்கட வாழ்க்கையைக் கெடுக்க வந்த பாவியடி நீ. நீ இப்பிடிச் சொன்னனீ எண்டு தெரிஞ்சா மனுசன் துடிதுடிச்சுப் போயிடும். “காட்அட்டாக்” வந்து செத்துப் போயிடும்”

பனி படர்ந்த வெளியில் பஸ்சிற்காகக் காத்திருந்த போது வந்து நின்ற காரைத் துச்சம் செய்து விறைத்து நின்றாள் நளா. கார் மறைந்து போனது.

ஒருநாள் -
பல்கனி கம்பியில் சாய்ந்த படியே சாம்பல் பூத்த இரவில் “செல்” போனில் சிரித்த படி நின்றவனை யாரும் பார்க்காத கணம் ஒன்றில் வேகம் கொண்டு தள்ளி விட்டு வீறிட்டுக் கதறி சாய்ந்து விழும் அவன் உருவம் உடைந்து சிதைய மட்டும் பார்த்துக் கொண்டு நின்றாள் நளா

இன்னுமொரு நாள் -

“பாஸ்ரா” அவியப் போடத் துள்ளிக் குதித்துக் கொதிக்கும் தண்ணீரைப் பாத்திரத்துடன் தூக்கி சுவரோரம் சாய்ந்த படி அவளையே வெறித்து நிற்கும் அவன் முகம் நோக்கி வீசி ஊத்தினாள் நளா

இன்னும் இன்னும் ஒருநாள் -

போத்திலை உடைச்சுத் துகளாக்கி சாப்பாட்டுக்குள் கலந்து கொடுத்தாள் நளா

நாட்கள் நகர்ந்தது இன்னும் இன்னும் பல நாட்கள் கனவுகளில் அவள் தொடர்ந்தாள்..

தொலைக்காட்சியில் வேண்டாததற்கெல்லாம் வெற்றுடம்போடு வந்து போனார்கள் அழகிகள்.
அண்ணியின் முகம் தூக்கிய முகச்சுளிப்பில் மொத்தத்தையும் தெரிந்து கொண்டாள். அண்ணா பார்வையைத் தவிர்த்துக் கொண்டான்.
அம்மா அப்பா வரும் நாளை கணக்கிட்டுக் கணக்கிட்டு நாள்காட்டியில் கட்டம் போட்டாள்.

சோதனைக்காகப் படித்தவற்றை இரைமீட்டு இரைமீட்டு மனதில் நிம்மதியுடன் நித்திரையாகிப் போனவள் கனவில் இப்போதெல்லாம் வெறுமை.

இருப்பிற்கும் இறத்தலுக்குமான இடைவெளியின் ஊஞ்சலாடும் இரவுகளின், எண்ணிக்கையைத் தள்ளி விடியும் பொழுது பெருமூச்சாகக் கழியும்.

ஆழ்ந்த நித்திரையில் அவள். மூச்சு சீராக வடிந்து கொண்டிருந்தது. புற அசைவுகள் இம்சிக்காத சமவெளியில் நீச்சலாய்.. ஒலிகள் செவிப்பறையைத் தாக்காத நிசப்தம். தொடைகள் குளிர புழுப்போல் எதுவோ ஊர்ந்து ஊர்ந்து.. வீரிய மூச்சு காதோரம் கூடேற்ற.. பலம் கொண்டு இரு கைகளாலும் தள்ளி உடையை இழுத்து விட்டு.. “அக்கா அக்கா” என்று குரலெடுத்துக் கத்தியவளின் தொண்டை கட்டிப் போயிருந்தது. கதவுகள் அகலத்திறந்து மூடியது.
நடுச்சாமம் சுடு நீரில் அழுதழுது முழுகினாள். நித்திரையற்று இரவைக் கழித்து வெளிச்சம் காணுமுன் உடுத்து கதவை இறுக்கப் பூட்டி வெளியேறினாள். சோதினைப் பேப்பரில் கேள்விகள் நித்திரையற்ற அவள் கண்களுக்குப் புழுவைப்போல் நெழிந்தன. தன் உடலை அருவருப்போடு பார்த்துக் கொண்டாள். கண்களுக்குத் தண்ணீர் தெளித்து முடிந்தவரை பதிலளித்து வெளியே வந்து குளிர்ந்து போன சீமெந்து இருக்கையில் இருந்து சத்தமில்லாது வாய் விட்டழுதாள். இது என்ன விதி? அவளுக்குப் புரியவில்லை.

“பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும்
பாரினிற் பெண்கள் நடத்த வந்தோம்;
எட்டும் அறிவினில் ஆணுக் கிங்கேபெண்
இளைப்பில்லை காணென்று கும்மியடி”


உறைந்த குளிருக்குள் வாயால் புகை போக்கி போல் மூச்சு விட்டபடி வேகமாகக் கடந்து செல்லும் ஆண்களின் உடல்களில் “அந்த” பகுதியில் அவள் கண்கள் நிலைத்து நின்றது. எல்லா ஆண்களுக்குமே காம வேட்டைக்கு அலைவது போல் துருத்திக்கொண்டு நின்றது “அந்த” இடம்.
வீட்டிற்கு வந்த போது இருட்டிவிட்டிருந்தது. அக்காள் கண்டும் காணாது சமையலில் இருந்தாள். பிள்ளைகள் ரீவியில் மூழ்கிப் போய் இருந்தார்கள். எல்லோரும் தமக்கான வாழ்கையில் லயித்திருந்தார்கள். பூட்டைத் திறந்து அறைக்குள் வந்தாள். உறவுகள் இல்லாத உலகொன்றில் தனித்து விடப்பட்டவள் போல் தவிப்பு. கண்கள் சொருகிச் சொருகி வந்தன. கட்டிலில் சரிந்து கண்களை மூடினாள். அத்தானின் ஆண் வீரியம் கலந்த “பெஃர்பியூம்: வாசனை மூக்கைத் தாக்கியது. திடுக்கிட்டெழுந்தாள். அறையை ஒருமுறை சுற்றிப் பார்த்தான். பொருட்கள் அசையாது அப்படியே இருந்தன. எழும்பி போய் பூட்டைப் பார்த்தாள். இறுக்கமாக இருந்தது. நேற்று அவள் தோய்த்து “ஹீற்ரறில்” காயப்போட்ட அவள் “அண்டவெயார்” “பிரா” இரண்டையும் காணவில்லை. திடுக்கிட்டவளாய் உடுப்பு வைக்கும் லாச்சியைத் திறந்து பார்த்தாள். உள்ளே “அதுகள்” அழகாக மடித்து வைக்கப்பட்டிருந்தன. நிம்மதிப்பெருமூச்சோடு விரலால் தனது உடைகளை அழைந்தவள் கையோடு ஒட்டிக்கொண்டு வந்தது ஆண்களின் “அண்டவெயார்” ஒன்று
“இல்லை நளா நான் சொல்லுறதைக் கேள்”
“ஐயோ கடவுளே இவளுக்கேன் புத்தி இப்பிடிப் போகுது”
அண்ணாவுக்கு நன்றிக் கடன். தன்னைக் கனடாவுக்கு கூப்பிட்டு விட்ட அத்தானில நன்றிக் கடன். தன்னிலும் பத்து வயசு மூத்த அத்தானை நிமிந்து பாத்துக் கேள்வி கேட்கப் பயம். அக்கா பிள்ளைகள் பற்றிய அங்கலாய்ப்பு. “பொறுத்துக் கொள்ளடி அம்மா,அப்பா வரமட்டும்”

“பெண்ணுக்கு ஞானத்தை வைத்தான் - புவி
பேணி வளர்த்திடும ஈசன்
மண்ணுக்குள்ளே சில மூடர் - நல்ல
மாதர் அறிவைக் கெடுத்தார்”


அனைத்தையும் விலத்தி விறைத்துப் பொறுத்துக் கொண்டாள்.
அம்மா, அப்பாவும் வந்து விட்டார்கள் இனித் தனியாக ஒரு இடம் பார்த்து மூன்று பேருமாக.. நிம்மதிப் பெருமூச்சு.
வீடு சந்தோஷக் களை கட்டியது. சொந்தங்கள் வந்து போயின. அக்கா அவள் முகம் பார்த்துச் சிரிக்கத் தொடங்கினாள். அண்ணா படிப்பைப் பற்றி விசாரித்தான். தன்னையும் கலகலப்பாக்க முனைந்து அத்தான் வேலையால் வீட்டிற்கு வரும் போது மட்டும் அறைக்குள் அடைந்து.
வீடு முட்டச் சனம். சமையல், சாப்பாடு ஊர்க்கதைகள் எண்டு நீண்ட ஒரு இரவில் அனைத்தையும் மறந்து போயிருந்த நளாவை “பெடியன் அழுறானடி ஒருக்கா என்னெண்டு பார்” அம்மா சொல்ல பாதியில் விட்ட ஊர்க்கதையைக் கேட்கத் துடிக்கும் அவசரத்தில் “வாறனப்பு” என்ற படியே ஓடி அறைக்கதவைத் திறக்க அரை குறை நித்திரையில் அழும் மகனைத் தட்டி விட்ட படியே தனது சாரத்தைத் தளர்த்தி மறு கையால் புடைத்து நிற்கும் தனது குறியை தடவிய அத்தானின் பசளை படர்ந்த பார்வையைத் தழுவிய நளா போன வேகத்தில் அறையை விட்டோடி தனது அறைக்குள் புகுந்து கொண்டு கதவைப் பூட்டிக் கொண்டாள்.
அம்மா, அப்பாவுடன் தனியா இடம் பார்த்து சென்ற பின்னரே மீண்டும் நளா மூச்சு விடத் தொடங்கினாள்.
“என்ன உனக்கும் அக்காக்கும் ஏதும் பிரச்சனையே. ரெண்டு பேரும் முகத்தைத் தூக்கிக் கொண்டு அலையிறியள்” அம்மா கேட்டா
இப்ப நிம்மதியா இருக்கிறன். அத்தானில அம்மாக்கு நிறம்பவே மதிப்பு இருக்கு அதைக் கெடுப்பானேன்.
“ச்சீ ஒண்டுமில்லையம்மா”
படுக்கையில் புரண்ட போது ஒருநாள் அம்மா அப்பாவிடம் சொன்னது நளாவின் காதில் விழுந்தது. “அந்தாளைப் போல ஒரு நல்ல பெடியன் எங்கட நளாக்கும் கிடைச்சிட்டிது எண்டா நிம்மதியா இருக்கும்”
கனேடியச் சட்டம் பெண்களுக்கு எத்தனையோ சலுகைகளைச் செய்து வைத்திருக்கின்றது. பாலியல் துன்புறுத்தல் என்பது இங்கே மிகப் பாரதூரமாக குற்றமாக கணிக்கப்பட்டு குற்றவாளியாக காணப்படுபவருக்கு பல ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கப்படுகின்றது.
இங்கே எனது விட்டுக்குடுப்பு எதற்குள் சேர்த்தி. அக்காள் எண்ட பாசமா? குடும்பமானமா? கடைசிக்காலத்தில் அப்பா, அம்மாவை நிம்மதியாக இருக்க விட வேண்டும் என்ற எண்ணமா?
“அக்காவும் பிள்ளைகளும் இப்பதான் வந்திட்டு போகீனம் கொஞ்சம் வெள்ளண வந்திருந்தாச் சந்திச்சிருப்பாய்”
ஒரு சின்ன யோசினைக்குப் பிறகு “அத்தான் வரேலையோ?”
“பின்ன அந்தாள் வராமல்..” பெருமையான சிரிப்பு முகத்தில் வடிய “எனக்கும் அப்பாக்கும் சுவெட்டர் எல்லே கொண்டு வந்தவர் இந்தா உனக்கு ஒரு சொக்லேட் பெட்டி தந்தவர்”
கறுப்பு சொக்லேட்டின் உள்ளிருந்து வெண்நிறத்தில் வழியும் பாணியின் படம் போட்ட பெட்டி அவளிற்கு அருவருப்பூட்ட அம்மாவிற்குத் தெரியாமல் குப்பைத் தொட்டிக்குள் போட்டு விட்டு தனது அறைக்குள் புகுந்து கொண்டாள்.
அவளின் கனவுகள் இப்போது குரூரத்தைத் தவிர வேறொண்டையும் கொண்டிருப்பதில்லை.

Friday, February 25, 2005

Hotel Rwanda


இனப்படுகொலை என்பது எமக்குப் புதிதல்ல. இருந்தும் இனப்படுகொலையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட ஒரு திரைப்படம் இனப்படுகொலையால் பாதித்த எம்மையே பேச்சு மூச்சு இல்லாமல் ஆக்கி விடும் என்பதை Hotel Rwanda படம் பார்த்த போது நான் உணர்ந்து கொண்டேன். ரொறொண்டோ சர்வதேச திரைப்படவிழாவின் போது இப்படத்தைத் தவற விட்டுப் பின்னர் திரையரங்கிற்கு வந்த போது பார்க்க முடிந்தது. திரைப்படவிழாவில் மக்கள் தேர்விற்கான பரிசை இப்படம் பெற்றுள்ளது.
முற்று முழுதாக உண்மைக் கதையை வைத்து இப்படம் எடுக்கப்பட்டாலும். உண்மை முழுமையாக திரைப்படத்தில் வெளிவரவில்லை என்பது விமர்சகர்களின் கருத்து.
1994 ம் ஆண்டு Rwanda நாட்டின் இரண்டு இனங்களாக Tutsi (சிறுபான்மை)இ Hutu(பெரும்பான்மை) மக்களுக்கிடையிலான உள்நாட்டுப் போராட்டத்தில் Tutsi மக்கள் 100 நாட்களுக்குள் 800,000 மேலாக கொல்லப்பட்டுள்ளார்கள்.
பெல்ஜியம் முதலாளி ஒருவரின் கொட்டேல் ஒன்றில் மனேஜராக வேலை செய்த Paul Rusesabagina எப்படி ஆயிரத்திற்கும் மேற்பட்ட Tutsi மக்களைக் காப்பாற்றினார் என்பதே இப்படத்தில் முக்கியத்துவப்படுத்தப்பட்டுள்ளது. இதுவும் பல மக்களால் விமர்சனத்துக்குள்ளாக்கப்பட்டது. Hutu இனத்தைச் சேர்ந்த அவர் தனது Tutsi மனைவியையும் குழந்தைகளையும் உறவினர்களையும் அயலவர்களையும் காப்பாற்ற என்று ஆயிரத்திற்கும் மேற்பட்ட Tutsi மக்களைத் தான் வேலை செய்த கொட்டேலுக்கு அழைத்து வந்து தனது பேச்சுத் திறமையாலும் தன்னிடமிருந்த பணம்,நகைகள்,குடிவகைகள் போன்றவற்றை லஞ்சமாகக் கொடுத்தும் அவர்கள் எல்லோரது உயிர்களையும் மயிர் இழையில் காப்பாற்றினார் என்பதையே திரைப்படம் காட்டுகின்றது.
இந்த மாபெரும் அழிவு கண்ணுக்கு முன்னால் நடந்தும் எந்த ஒரு நாடும் உதவிக்கு முன்வரவில்லை. மாறாக அங்கு உதவி செய்து கொண்டிருந்த UN ஊழியர்களையும் வேறு பலரையும் நாட்டை விட்டு வெளியேறுமாறு உத்தரவு வழங்கப்பட்டது.
சுனாமியின் போது முண்டியடித்துக் கொண்டு உதவி செய்த நாடுகள் ஏன் Rwanda மக்களுக்கு உதவி செய்யவில்லை என்பது கனேடியத் தொலைக்காட்சிகளில் கேள்வியாக எழுப்பப்பட்டது. ஆனால் சரியான பதில் கிடைக்கவில்லை.
நாம் கறுப்பர்கள் எம்மை உலகு மக்களாகக் கணிக்கவில்லை என்று கொட்டேல் மனேஜர் அடிக்கடி மக்களுக்குச் சொல்லி நாமாக எம்மைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என்று தனக்குத் தெரிந்த வகையில் தனித்து ஒருவராக நின்று போராடி பல மக்களின் உயிர்களைக் காப்பாற்றியுள்ளார்.
உணவிற்காக வெளியே காரில் போன கொட்டேல் முதலாளி புகார் படிந்த பாதையில் கார் ஓட முடியாமல் அசைவதைக் கண்டு கார் எங்கோ தவறான பாதையில் போவதாக நினைத்து நிறுத்தும் படி கூறிவிட்டு இறங்கிப் பார்த்தபோத வீதியில் கால் வைப்பதற்குக் சுட இடமின்றி இறந்த உடல்கள் பரவிக் கிடந்தன.
ஒரே நாட்டின் இரண்டு வேறுபட்ட இனங்கள் ஒரே மொழியைப் பேசுகின்றார்கள் பார்ப்பதற்கு ஒரே மாதிரி இருக்கின்றார்கள். உலகநாடுகள் அவர்களை மக்களாகக் கணித்து அவர்கள் பக்கம் பார்க்க மறுக்கின்றது. இந்நிலையில் எப்படித் தம்மைத் தாமே அழித்துக்கொள்கின்றார்கள்.
இத்திரைப்படத்தில் கொட்டேல் மனேஜராக நடித்த Don Cheadle சிறந்த நடிகர் இறுதித் தேர்விற்கு இவர் தெரிவு செய்யப்பட்டுள்ளார்

Passion of the Christ


யேசுவின் வாழ்க்கையின் மிக முக்கிய நாட்களாகிய அவரது கடைசி மூன்று நாட்களை நடிகர் Mel Gibson இயக்குனராக மாறி Passion of the Christ மூலம் தந்திருக்கின்றார். யேசுவின் வாழ்க்கை பல இயக்குனர்களால் படமாக்கப்பட்டிருந்தாலும் Pier Paolo Pasolini யின் “The Gospel of Matthew”எனும் படம் பலரைக் கவர்ந்திருந்தது.. தற்போது Mel Gibson இன் Passion of the Christ வெளிவந்து வசு10ல் முதலிடம் பெற்று பலரையும் பேச வைத்தது.
கடைசி விருந்திற்குப் பின்னர் தலிவ மலையில் சீடர்களுடன் களித்துக்கொண்டிருக்கும் போதே யேசு தனது இறுதி நாட்கள் நெருங்கி விட்டதாகவும் அதனால் தான் அனுபவிக்கப்போகும் வேதனையும் உள்ளார்த்தமாக உணர்ந்து கொள்கின்றார். மலையடிவாரத்தில் அவர் வானைப் பார்த்து தந்தையுடன் உடையாடுவது போது படமாக்கப்பட்ட காட்சிகள் மட்டுமே சிவப்பு நிறமற்ற காட்சிகள் எனலாம்.

யேசு யூதராக இருந்த போதும் அவரைப் பணக்காற யூதர்கள் வெறுக்கின்றார்கள். அவர் தன்னை கடவுளின் தூதர் என்பதை மக்கள் ஏற்கமறுக்கின்றார்கள். யேசுவின் சீடன் ஒருவரிடமே பணத்தைக் கொடுத்து யேசுவின் கன்னத்தில் முத்தமிடுவதன் மூலம் தமக்கு அடையாளம் காட்ட வைக்கின்றார்கள். கைது செய்யப்பட்ட யேசுவை பிலாத் எனும் தலைவர் முன் நிறுத்தி கடுமையாகத் தண்டிக்கும் படி மக்கள் கோஷமிட்டு வேண்டிக்கொள்கின்றார்கள். ஆனால் பிலாத்திற்கு யேசு குற்றமற்றவராகவே தெரிகின்றார். யேசுவைத் தண்டிக்க அவரால் முடியவில்லை. இருந்தும் மக்களின் கோஷம் அவரைத் தடுமாற வைக்கின்றது. தெற்கு இத்தாலியின் புழுதி படிந்த பகுதியில் பிரமாண்டமான கட்டிடங்களுக்கு மத்தியில் அன்றைய கால உடைகளுடன் பல விதமாக தோற்றமுற்ற மக்களை வைத்து அற்புதமாகக் காட்சி அமைக்கப்பட்டுள்ளது.

யேசு அங்குமிங்குமாகக் கைமாற்றப்பட்டு இறுதியில் மக்களின் கோஷம் வெற்றி பெற கடுமையான தண்டனை வழங்கும் படி தீர்ப்பைக் கூறி விட்டு பிலாத் விலகிக்கொள்கின்றார். அதன் பின்னர் வந்த காட்சிகள் அனைத்தும் மிகவும் குரூரமான முறையில் யேசு கசையடிகளாலும் முள் ஆயுதங்களாலும் இரத்தம் பீறிட தாக்கப்படுவது மட்டுமே திரையில் காணக்கூடியதாக இருந்தது. மனிதன் எந்த அளவிற்கு குரூபியாக மாறி இன்னொருத்தனைத் தாக்கலாம் என்பதை மிக குலோஸ் அப்பில் யேசுவில் உடல் தசைகள் வெடித்துச் சிதறுவதைக் காட்டி மனிதர்களுக்கு உணர்த்த வைக்கும் எண்ணம் மெல்கிப்ஷனுக்கு இருந்திருக்கலாம். இருந்தும் யேசு மேல் அனுதாபம் வருவதற்குப் பதில் காட்சி அமைப்புக்களில் அருவருப்பே எஞ்சியிருக்கின்றது.
ஏதாவது ஒரு வகையில் சென்டிமெல் கூறி திரைப்படத்தை வெற்றி கொள்ளச்செய்யலாம் என்பதில் மெல்கிப்சன் வெற்றி பெற்றுள்ளார். எமது யேசு எமக்காக எவ்வளவெல்லாம் சித்திரைவதை அனுபவித்திருக்கின்றார் என்று கண்கலங்கிய பார்வையாளர்கள் பலர். இத்திரைப்டத்தை ஒருவகை சமய பிரச்சாரம் என்றும் கூறலாம். யேசுவின் பொறுமை கருத்துக்கள் துணிவு என்பவற்றைப் பல திரைப்படங்கள் கூறிவிட்டன எனவே அவர் அனுபவித்த கடைசி மூன்று நாள் சித்திரவதையைக் கூறலாம் என்ற எண்ணம் இயக்குனருக்கு இருந்திருப்பினும் பிரமாண்டமான திரையரங்குகளில் முழுதாக ஒரு மனித உடல் வெடித்துச் சிதறுவதை அங்குல அங்குலமாக எவ்வளவு நேரத்திற்குத் தான் பொறுமையாகப் பார்க்க முடியும்.

வெடித்துச் சிதறிய உடலுடன் சிலுவையை மலையடிவாரத்திற்கு சுமந்து செல்லும் யேசுவை அவரின் தாயார் மேரி கண்ணீர் வடிய பின்தொடர்ந்து செல்கின்றார் சிலுவையில் அறையப்பட்ட யேசுவின் உயிர் உடலில் இருந்து பிரிகின்றது. மூன்றாம் நாள் யேசு உயிர்த்தெழுகின்றார். பைபிளில் உள்ள படியே திரைக்கதை அமைக்கப்பட்டிருக்கின்றது. வசனங்கள் லத்தீன் மொழியில் அமைக்கப்பட்டு ஆங்கில சப்டைட்டிலுடன் திரையிடப்பட்டுள்ளது.

பல பாடசாலைகள் சமய ஸ்தலங்கள் குழந்தைகளை இப்படத்திற்கு அழைத்துச் சென்றதாகக் கேள்விப்பட்டேன். வன்முறைகள் எந்த வகையாக இருப்பினும் குழந்தைகளிற்கு அதைக் காட்டுதல் தடைசெய்யப்பட வேண்டும் என்ற எண்ணம் ஏன் சமயப் பெரியவர்களுக்கு இல்லாமல் போய் விட்டது.

மொத்தத்தில் வன்முறையின் உச்சக்கட்டத்தைப் பார்க்க விரும்புவோர் மட்டுமே ரசித்துப் பார்க்கக் கூடிய ஒரு திரைப்படம் இந்த Passion of the Christ என்பது என் எண்ணம்

Thursday, February 24, 2005

பெண்

1.

இறுக்கங்கள் தளர
இதயத்தின் அடியிலிருந்து வந்தது அது.

உன் முகத்திலும் இறுக்கமில்லை
எனக்கு அதில் சங்கோஜமுமில்லை

விழிகளின் கலப்பில்
சின்னதாய் அதிர்வுகள்.

நெருடல்களும் இருவருக்குமாய்.

என் பிரசவத்தில் உதிர்த்தது
உன் உதிரமே!

உன் புன்னகையின் செயற்கைத் தனம்
என்னிடத்தில் இருப்பது
உனக்குப் புரிவது எனக்கும் தெரியும்.

பதில் காணாக் கடந்து விட்டோம்
காத தூரத்தை
பரீட்சை வேண்டாம்

எனக்கான உச்சத்ததை நானும்
உனக்கான உச்சத்தை நீயும்
எங்கேனும் அடைந்து விட்டு
ஒரே படுக்கையில் தூங்குவோம்
வேறுவேறாய்.

2.

உங்களிடம் திறப்பு உள்ளது.
நான் பூட்டை உடைத்து வெளியே வருகின்றேன்.

உங்கள் குற்றச்சாட்டுக்களை
நான் சிலுவையாய் சுமக்கின்றேன்.

நீங்கள் உலகத்தின் அழகை ரசிக்கிறீர்கள்.
நான் அவலங்களை அடையாளம் காட்டுகின்றேன்.

நீங்கள் மழைத்துளியில் நிறைவைக் காண்கிறீர்கள்
நான் கடலுடன் போராடுகின்றேன்..

அனைத்து மூச்சுக்காற்றின் தீண்டலிலும்
விரகம் தணிப்பவர் நீங்கள்.
கலவிக்கான பிரத்தியேக தெரிவு
என்னிடம் உள்ளது.

நீங்கள் நிரந்தரத்தில் மகிழ்கின்றீர்கள்
நான் நித்தியத்திற்காய் ஏங்குகின்றேன்.

அது உங்கள் வழி
இது என் வழி
நீங்கள் என் எதிரியல்ல..

3.

இரைந்து ஓய்கிறது கொடூர காற்று.
ஈரலிப்பற்ற நிலங்களில் இறுகிப்போய் கிடக்கும்
பனிப்படலம் வெடித்துப் பிளக்கும்
ஓலமற்று
பிளக்கும் வாய்களுக்குள் புகமுயல்வாய் நீ.
இறுகும் மலை முகடுகள்.
சீரற்ற நீடோட்டத்தில்
திளைக்க முயல்கிறோம்
நானும் நீயும்.
தூவானமாய்த் தெளிக்கும்
சிறு துளியின் பின்னும் ஓய்வற்றிருக்கும்
உன் இயக்கம்
நிணம் உலர
வரண்ட உடல்கள் சிதறும் ஓரமாய்

புலிநகக்கொன்றை 3.

வாழ்வு –

பொன்னா பாட்டியின் நினைவலைகளின் போராட்டத்தில் தன் குடும்பம் ஏதோ சாபத்திற்குள்ளானதால் தொடர்ந்து துர்மரணங்கள் இடம்பெற்று வருகின்றன என்பதை உறுதிப்படுத்துவது போல் தொடர்ந்து வந்த மரணங்கள் ஏற்றுக் கொள்ள முடியாமல் இருக்கின்றது.
பொன்னாவின் திருமணம். அவள் கணவன் மேல் கொண்ட வேட்கை. அவன் இறப்பிற்குப் பிறகான பொன்னாவின் வாழ்க்கை முறை. எம் மக்கள் எதனைக் கலாச்சாரம் என்று கட்டிப்பிடித்தபடி இருக்கின்றார்கள். கலாச்சாரம் என்றால் என்ன? இல்லாத ஒன்றை இருப்பதாய் எத்தனை வருடங்களுக்குப் பாசாங்கு பண்ண முடியும். ஆனால் இந்தப் பாசாங்கு மாற்றமின்றித் தொடரப்போகின்றது. (கதை சொல்லியை ஒருவேளை கடியக் கூடும் கலாச்சாரம் பேணும் மக்கள்)
பொன்னாவின் மகள் ஆண்டாள் பால்யதிருமணத்தின் பின்னர் சில நாட்களில் கணவனை இழந்தவள். மறுமணம் என்பது பெற்றோரால் விரும்பப்படினும் ஒருவரின் வாழ்க்கையை தீர்மானிப்பது அந்த ஒருவரோ இல்லைப் பெற்றோரோ என்று இல்லாமல் யாரோ ஒருத்தரின் மறுப்பினால் ஆண்டாள் மறுமணம் நிராகரிக்கப்படுகின்றது. இருந்தும் கணவனை இழந்த பெண்கள் தமது பாலியல் தேவைகளுக்கு வேறு ஒருத்தனைத் துணிவுடன் தேடுவது (கள்ளமாகவேனும்) கதை சொல்லியின் துணிவினைக் காட்டுகின்றது. ஆண்டாளைக் கண்காணிக்கும் பொன்னாவிற்குத் தன் பால்யல் தேவை முக்கியமாகப்படுகின்றது. மகள் ருசி அறியாதவள் என்ற அவளின் தன்நலம் பொன்னா மேல் எமக்கிருக்கும் (சொந்தங்களுக்கு) “அந்த” மரியாதையை உடைத்து விடுகின்றது. பின்னர் தனக்கும் மகளுக்குமாக மருத்துவச்சியிடம் மருந்து வாங்கி உண்ணும் போது இன்றும் இந்த நூற்றாண்டிலும் எத்தனை பெண்கள் இப்படியாக வாழ்கின்றார்கள் என்ற ஆதங்கமே மேலோங்குகின்றது.

முடிவாக நம்பி இறப்பதற்கு முன் கண்ணனுக்கு எழுதிய கடிதம் அவனுக்கு வாழ்வு பற்றிச் சிந்திக்கக் கிடைத்த அந்தக் கணங்கள். (உயிர் எல்லோருக்கும் வெல்லம்)

இதுவரை நான் வாழ்ந்த வாழ்வை நினைத்துப் பார்க்கின்றேன். நீயோ மற்றவர்களோ நான் நல்ல பலனுள்ள வாழ்க்கைதான் வாழ்ந்திருக்கின்றேன் என்று நினைக்கலாம். நம்மை நிறைபோடுவது எப்போதும் மற்றவர்கள்தானே. ஆனால் நான் வாழ்ந்த வாழ்வு எனக்கோ ரோசாவுக்கோ தனிப்பட்ட முறையில் ஒரு பயனையும் இதுவரை தரவில்லை என்று இப்போது தோன்றுகின்றது. தன்னைத் தானே வருத்திக்கொள்ளும் இந்த வாழக்கையால் என்ன பயன்? ஒரு வடிகட்டின முட்டாளின் நினைவாற்றலைக் கொண்டிருக்கும் மக்களுக்காக உழைப்பாதால் என்ன பயன்? நிறைவேறாத கொள்கைகளைக் கட்டிக் காப்பதில் என்ன கிடைக்கப்போகின்றது. தாத்தா சொன்னார் கொழுப்பது வெற்றிகளால்தான் என்று. தோல்விகள் அதைச் சதையே இல்லாத எலும்புக்கூடு ஆக்கிவிடும். மிகச் சிலர்தான் வெற்றிகள் பின்னால் வரலாம் என்று நம்பி தோல்விகளோடு வாழும் வரத்தைப் பெற்றிருக்கின்றார்கள். நானும் அந்தச் சிலரின் ஒருத்தன் என்ற மாயை இப்போது மறைந்து விட்டது.”
சமூகத்திற்கு நல்லவனாக வாழ்ந்து பாமரமக்களுக்காக மனைவி ரோசாவுடன் சேர்ந்து இலவச வைத்தியசேவை செய்து கண்ணனுக்கும் வாசகர்களுக்கும் உதாரண புருஷனா வந்து போன நம்பி “கொம்யூனிஸக்காறன்” என்று கொல்லப்படுகின்றான். மீண்டும் பொன்னாவின் ஒரு வாரிசுக்கு துர்மரணம் ஏற்படுகின்றது.
எல்லாவற்றையும் துறந்து விட்டுப் பெரியவர்களின் பேச்சைக் கேட்டு பஞ்ச சமஸ்காரத்தில் (பூசையில்) கலந்து கொண்டான். கொம்யூனிஸ்டுகள் எப்படி? (எல்லோரையும் போலவே கண்ணனுக்கும் உயிர் என்றால் வெல்லம்)

நாவல் பல காத்திரமாக ஆண்களையும் பெண்களையும் கொண்டு செல்கின்றது. இருந்தும் மனதில் நிற்பவர் சிலரே.
“தலித்” களைப் பற்றிய படைப்பல்ல என்ற “ஒரு” காரணத்தால் எமது “முற்போக்குவாதி”களால் இப்படைப்பு நிராகரிக்கவும் படலாம்.
பி.ஏ கிறிஷ்ணனின் முதல் படைப்பு இது.

Wednesday, February 23, 2005

புலிநகக்கொன்றை 2.

அரசியல் -

19ம் நூற்றாண்டின் ஆரம்ப காலத்தில் கொம்யூனிஸத்தின் வளர்ச்சியில் நம்பிக்கை வைத்து மாக்ஸ்சை மனப்பாடம் செய்து “தோழர்” என்று சிவப்புக் கனவோடு திரிந்த பாட்டாளிகள் வர்க்கம் அதிகம். என் நண்பனோடான ஒரு வாதத்தின் போது அவன் சொன்னான். எந்த ஒரு கொள்கையும் உழைக்கும் வர்க்கத்தைப் போய்ச் சேர வேண்டுமெனின் நாஸ்திகம் கதைத்தால் நடக்கப் போவதில்லை. மதத்தின் மூலம் எடுத்துச் செல்வது மிக இலகு. மக்களின் நலனுக்காக உண்மையாக உழைக்க நினைத்த எவரும் இதனைச் செய்யவில்லை. அதுதான் எல்லாமே தோல்வியில் போய் முடிகிறது என்று. (Max Weber ன் “ The protestant Ethics and the Sprit of Socialism” னைத் தட்டிப்பார்க்கையில் அவரின் "Calvanism" (பிரெஞ்சுப் புரட்டஸ்தாந்துப் போதகர் பின் பற்றிய போதனைகள்) கொள்கைகள் இதை உறுதிப்படுத்துகின்றன.

ஒரு போராட்டம் வெற்றிபெற வேண்டுமெனின் போராளிகளும் பொதுமக்களும் அழிவது தவிர்க்க முடியாதது என்பது போராட்டக்காறர்களின் வாதம். அதே போல் ஒரு கொள்கை வெற்றி பெற (கொம்யூனிஸ்ட்) உழைக்கும் வர்க்கத்தில் பல தெருவிற்கு வரவேண்டும்.
இது கொள்கையாளர்களின் வாதமாக இருக்கலாம்.

கண்ணன் அரசியல் கூட்டம் ஒன்றிற்காக மதுரை ரயில் நிலையத்தில் நின்றபோது சந்தித்த வடை வியாபாரியுடனான உரையாடலில் -

“நீங்க எந்தக் கட்சி?”
(கண்ணனுக்கு உழைக்கும் மக்களின் அருகில் சென்று அவர்களின் குறைகளைக் கேட்டு அவர்களோடு ஒன்றாக உணர வேண்டும் என்ற ஆசை. இவர் உழைக்கும் வர்க்கத்தில் வருவாரா? அல்லது லும்பன் ரகமா? மார்க்ஸ் ரயில் நிலையத்தில் வடை சாப்பிட்டிருக்க வாய்ப்பில்லை).
வடை விற்பவனுக்கு “வாயைப் பொத்திக்கிட்டு போடா பாப்பாரப்பயலே” என்று சொல்ல ஆசை
“அந்த வல்லார ஓளிகளைப் பற்றி ஏன் கேக்கிறீங்க? எல்லாரும் திருடனுக மேக வேட்டைச் சாமானுங்க. இரண்டனா தேவடியா கூடப் பக்கத்தில வர யோசிப்பா”
“எல்லாரையுமா மோசமென்றீங்கள? சில நல்ல ஏழைகளைப் பத்தி யோசிக்கிற கட்சிகளுமிருக்கு. கம்யூனிஸ்ட் கட்சியை எடுத்துக்குங்க”
“கம்யூனிஸ்ட்டா? உள்ளதுக்குள்ளேயே நாறி வீச்சமடிக்கிற பயலுக அவனுக. மில்லில என்பாட்டுக்கு வேலை செய்து கொண்டிருந்த என்னை இந்தக் கண்டாரப் பயலுக சத்தம் போட்டு முதலாளிப்பயலுகளின்ர மயித்தப் பிடுங்கறன் எண்டாங்க நாங்களும் மில்லே எங்கட கைக்கு வரபோறதா நினைச்சுக் கனவு கண்டம். ஆனால் கடைசியா இவங்கள நம்பினதுக்கு வடை வித்துக்கிட்டுத் திரியன் என்னைப் பாத்தா பரம்பரையா வடை விற்கிறவன் மாதிரியா தெரியுது” (சுருக்கப்பட்டுள்ளது)

கொள்கையாளர்களும் அமைப்பாளர்களும் தடம் புரளும் போது பொதுமக்களிடையே நம்பிக்கையின்மை குடி புகுந்து விடுகின்றது. இதைத் தான் எனது நண்பன் பாதிக்கப்பட்ட எவருக்கும் ஒரு கொள்கையை ஒரு மாற்றுக் கருத்தை எடுத்துச் செல்லும் போது மதரீதியா எடுத்துச் செல்ல வேண்டும் என்றானோ தெரியவில்லை. மதம் தலைப் போடும் போது பாதிக்கப்பட்ட மக்களிடையே நம்பிக்கையின்மை அதிகம் இருக்காது என்பது அவன் வாதம். (எனக்கு இதில் உடன்பாடு இல்லை)

புலிநகக்கொன்றை

(பி.ஏ கிறிஷ்ணனின் படைப்பு நீண்டு போனதால் மூன்று பிரவுகளாக்கித் தருகின்றேன்.
இது ஓரு Penguin வெளியீடு)


1.

தோழி கேள்,
அவனுடைய மணலடர்ந்த கரையில் ஒரு புலிநகக் கொன்றை மரம். அதன் தாழ்ந்த பூத்துக் குலுங்கும் கிளைகளில் எப்போதும் கூச்சலிட்ட அழிவு செய்யும் பறவைகள் கூட்டம். அவனை நான் இனி நினைக்க மாட்டேன். எனது கண்களுக்கு சிறிது தூக்கமாவது கிடைக்கும்.

The Tigerclaw Tree
What she said
Friend, listen.
I’ll not think anymore
of that man on whose sandy shore
birds occupy the tigerclaw tree
and play havoc with the low flowering branches,
and my eyes will get some sleep

தமிழ் நாட்டில் வசித்த “தென்கலை ஐயங்கார் குடும்பம்?”; ஒன்றில் மூன்று தலை முறைக்கான கதை இங்கே முன்னும் பின்னுமாக சொல்லப்பட்டிருக்கின்றது.
ஆரம்பம் 1970
பிரிவு
மது ஆண்டுகள்
வருகை
எனப்பிரித்துக் கதையை நகர்த்தியிருக்கின்றார் கதை சொல்லி.
பொன்னம்மாள் எனும் பொன்னா பாட்டியில் தொடங்கி அவளது கொள்ளுப் பேத்தி இந்து வின் பிறப்பு வரையிலான கதை எனும் போது பாத்திரங்களும் சம்பவங்களும் விரிந்து கிடக்கின்றன. பாத்திரங்கள் ஒவ்வொன்றும் மிக நுணுக்கமாக தமது அடையாளத்திலிருந்து சிறிதும் விலகாமல் வாழ்க்கைக்குள் முதிர்ந்து செல்கின்றார்கள். ஒரு சமூகத்தின் அத்தனை பிரச்சனைகளையும் சார்பற்ற நிலையில் கதை சொல்லி நகர்த்திச் சென்றிருக்கின்றார். அரசியல், கலாச்சாரம், மதம், காதல் என்று ஒட்டு மொத்தத்தையுமே கேள்விக்குறியாக்கி மனித மனப்பிறழ்வுகள் அம்பலப்படுத்தப்பட்டிருக்கின்றன.

கதையில் ஹீரோஇஸத்தோடு வந்து போகும் நம்பியை நாவல் வாசித்த எல்லோருக்கும் பிடித்துப் போயிருக்கும். வாழ்வை விளங்கி இறுக்கம் நிறைந்த கூ10ழலிலும் திடமாக முடிவெடுக்கும் ஒரு படித்த பண்பான கொம்யூனிஸ்ட். இருப்பினும் என்னைக் கவர்ந்தவன் கண்ணன்தான். தனது கொள்கையிலேயே அவனுக்குக் குழப்பம். எப்போதும் நம்பியின் கருத்திற்காகக் காத்திருப்பவன். நம்பியென்றால் இப்படிச் சொல்லிச் செய்திருக்கக் கூடும் என்று சிந்திப்பவன். காதலி, கொள்கை, வேலை என்று எங்கு போயினும் குழம்பிப்போகும் பாத்திரம். அரசியல் கொள்கைக்காக காதலையும், கல்வியையும் விட்டுக்கொடுப்பது போல் கதையில் நகர்வு இருப்பினும் காதலி உமாவிற்கு கண்ணனின் தங்கை ராதா கூறுவது:

“கம்யூனிஸ்ட் கட்சியோட சாவாசமா? இந்தப் பைத்தியம் மெட்றாஸ் போனாப்பிறகு புதுசா பிடிச்சிண்டிருக்கு. அதுக்கு முன்னால திமுக பைத்தியம். அதுக்கும் முன்னால எம்ஜியார் பைத்தியம். போன வாரம் கூட எஸ்க்பிரஸ்சில வந்த ஒரு ஆர்டிகல படிண்ணு குடுத்தான் “Beyond the Bamboo Curtain” நினைக்றன். நான் இங்க இருக்கிற துணிக் கேட்டிணுக்குப் பின்னால என்ன இருக்கெண்டு பாக்க முடியல அங்க மூங்கில் கேட்ணுக்குப் பின்னால என்ன இருக்குண்ணு ஏன் பாக்கப் போற எண்டு கேட்டன் அவனுக்கு ரொம்ப கோபம்”
“அப்ப நக்ஸ்லைட்டோட”
“சே சே அதெல்லாம் ஒண்ணுமில்லை எல்லா நதிகளிலையும் குளிச்சுப் பாக்கணும் எண்ணு அவனுக்கு ஆசை ஆழம் அதிம்ணா அவனா திரும்பி வந்திடுவான். உயிர் நம்ம மாதிரியே அவனுக்கும் வெல்லம். நம்பியைச் சொல்லு அவன் உண்மையான கொம்யூனிஸ்ட் ஆனால் இவன் மாவோ சீனாவென்று சொல்லிக்கிட்டு அலையிவன்களோட சேந்து சுத்துறான். சரியான நேரத்தில வெளியில வந்திடுவான்”


மிகுந்த நகைச்சுவை உணர்வோடு கதை நகர்ந்து செல்கின்றது

சின்னதேவதை



சோமரண்ட திசநாயகாவின் சின்னதேவதை மே மாதம் கனடாவில் திரையிடப்பட்டது. இவரின் “சரோஜா” திரைப்படம் உலகளாவிய அளவில் பல விருதுகளைப் பெற்றது எல்லோரும் அறிந்ததே. அதே போல் சின்னதேவதையும் பல நாடுகளில் திரைப்படவிழாக்களில் பரிசில்களை வென்றுள்ளது என்பது எமக்குப் பெருமையே.
1983ம் ஆண்டு 13 சிங்கள இராணுவம் கொலைசெய்யப்பட்ட போது தோன்றிய இனப்படுகொலைகள் பற்றிய ஒரு சில வரிகளுடன் திரைப்படம் ஆரம்பமானது.
பணக்காறக் குடும்பத்தில் பிறந்த சம்பத் எனும் 10 வயதுச் சிங்களச் சிறுவன், சிறுவயதிலிருந்தே பெற்றோரின் கவனிப்பின்மை, அவர்களுக்கிடையிலான வாக்குவாதம் போன்றவற்றை நேரடியாகப் பார்த்து வளர்ந்ததால் மனநிலைபாதிக்கப்பட்டவனாய் வாய் பேசமுடியாத நிலையில், அதை வெளிக்காட்டும் முயற்சியில் பொருட்களைப் போட்டு உடைக்கும் மனவக்கிரம் கொண்டவனாய் இருக்கின்றான். தாம்பத்திய உறவின் சிக்கல் அவனது தாய் வேறு ஒருவனுடன் வீட்டை விட்டு வெளியேற, பாசம் பற்றிய குறைந்த பட்ச அறிவும் இல்லாத பணக்காறத் தந்தை பாசத்தைத் தவிர அனைத்தையும் கொடுத்து அவனை வளர்க்கின்றார்.
சம்பத்தின் வீட்டில் பலவருடங்களாக வேலு எனும் தமிழன் ஒருவன் வேலைபார்த்து வருகின்றான். பணக்கஷ்டம் காரணமாகத் தனது மகளான சத்யாவைத் தன்னுடன் அழைத்து வந்து சின்ன சின்ன வேலைகளைக் கற்றுக் கொடுக்கின்றான். பெரிய கண்களும் நீண்ட முடியும் அழகான சிரிப்புமாய் தனது குறும்பால் பார்வையாளர்களின் மனதை கவர்ந்ததோடு மட்டுமல்லாமல் சத்யா சம்பத்தின் மனதிலும் இடம் பிடிக்க, சம்பத்திடம் மாற்றங்கள் தோன்றிக் கடைசியில் அவன் சத்யாவிடம் சரளமாகத் தமிழ் கதைக்க கற்றுக்கொண்டு விடுகின்றான். தனது மகன் தாய் மொழியான சிங்களத்தை விடுத்து வேலைக்காறியுடன் சேர்ந்து கொண்டு தமிழ் கதைக்கின்றானே என்று முதலில் அவனது தந்தை சங்கடப் பட்டாலும் சத்யாவின் நட்புத்தான் அவனுக்குத் தகுந்த மருந்து என்ற வைத்தியரின் ஆலோசனையை அவரால் புறக்கணிக்க முடியவில்லை.

இதனால் வேலைக்காறி என்று முதலில் ஒதுக்கி வைத்த சத்யாவிலும் அவரிற்கு அன்பு எழத் தொடகுகின்றது. சத்யாவுடன் சேரந்து கொண்டு சாப்பிடுவது படிப்பது விளையாடுவது என்று சம்பத் முற்றுமுழுதாக தேறிவிட
83ம் ஆண்டுக் கலவரம் பல அப்பாவி மக்களைப் பலி கொள்ள அதில் வேலைகாறன் வேலும் உயிரை விடுகின்றான். சத்யாவை சம்பத்தின் குடும்பம் பாதுகாத்தாலும் சிங்களவரும் தமிழரும் சேர்ந்து வாழும் காலம் வரட்டும் அதன் பின்னர் எனது மகளை அழைத்து வருகின்றேன் என்று கூறி சத்யாவின் தாயார் அவளை அழைத்துச் சொல்ல, கலங்கிய கண்களுடன் சம்பதிற்குப் பிடித்த தனது “சின்னதேவதை”எனும் கதைப்புத்தகத்தை அவனுக்குப் பரிசளித்து விட்டு சத்யா போகின்றாள். சத்யாவின் பிரிவைத் தாங்காது சம்பத் மீண்டும் பழைய நிலைக்கே திரும்பி விடுகின்றான்.
திரையில் அடிக்கடி வந்து போகும் சின்ன தேவதை எனும் பாடல் மனதை நிறைக்கின்றது.
இந்திய இயக்குனர்களால் சிதைந்து கொண்டிருக்கும் ஈழப்போராட்டம் அதன் பணம் பண்ணும் வித்தையும் ஒரு சிங்கள இயக்குனரால் காக்கப் பட்டிருக்கின்றது.
எமது நாட்டுக்கலவரத்தை துப்பாக்கி இரத்தம் கொண்டு வக்கிரப்படுத்தாலும் சிந்தனை அற்ற மானிட சமூகத்தின் கேவலத்தை சிறுவர்களின் மனஉளச்சல்களை மையமாகக் கொண்டு இயக்குனர் படைத்திருப்பது பாராட்டப்பட வேண்டியது.
“சின்னதேவதை” சிங்களப் படம் எனினும் பாதிப்பகுதி தமிழிலேயே நகர்கின்றது.
எமது நாட்டைச் சேர்ந்த ஒருவர் தரமான ஒரு திரைப்படத்தை எடுத்துப் பல விருதுகளைப் பெற்றிருந்த போதும் சிங்களத் திரைப்படம் என்ற காரணத்தாலோ என்னவோ தரமற்ற தமிழ்த் திரைப்படத்திற்குக் கிடைக்கும் வரவேற்புக் கூட இத்திரைப்படத்திற்கு கிடைக்கவில்லை. வேதனையான விடையம்.
நடித்தவர்கள் எல்லோரும் அபாரம் . சத்யாவாக நடித்த நித்யவாணி கந்தசாமி தனது சிறந்த நடிப்பிற்காக விருதும் பெற்றுள்ளார்

Monday, February 21, 2005

“YOU2”

“உருப்படாததுகள்” தளத்தில் ஓரினச்சேர்க்கை பற்றிய நீண்ட விவாதத்தைக் கண்டேன். அது பின்னர் பாதை மாறி (இல்லாவிட்டால் இது பாதை மாறி) திருமணமானவர்கள் காதலிக்கலாமா? என்ற தலைப்பில் விவாதிக்கப்பட்டு தள உரிமையாளர் சலிப்படைந்தோ என்னவோ போதும் என்று விட்டார்.

இந்த ஓரினச்சேர்க்கை பற்றிய விவாதத்தைப் பார்த்த போது எனது அடுத்த குறுந்திரைப்படமான “YOU2” பற்றிச் சிறிது கூறலாம் என்று நினைக்கின்றேன். பல வருடங்களுக்கு முன்பு பாரிஸில் இருந்து வெளிவந்த “உயிர்நிழல்” எனும் சஞ்சிகைக்கு நான் எழுதிய “ஆதலினால் நாம்” எனும் சிறுகதையை தளமாகக் கொண்டு இந்த குறுந்திரைப்படத்தை எடுத்து வருகின்றேன். (பல மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன) பெண்கள் இங்கே எடுக்கப்படும் திரைப்படங்களில் நடித்து வந்தாலும் கொஞ்சம் வித்தியாசமான கதை எனும் போது நடிப்பதற்குத் தயங்குவது இந்தக் குறுந்திரைப்படத்தை நான் இயக்குவதற்கு மிகவும் தடையாக இருந்தது.

முடிவில் ஒரு பெண்ணிற்கு நானே நடிப்பதாய் முடிவெடுத்து அடுத்த பெண்ணைத் தேடிக் களைத்து கடைசியில் ஒருவரைக் கண்டு பிடித்து (திருமணமாகாதவர்) எடுக்கத் தொடங்கிய போது (எனது நண்பி) அவர் சிறிது யோசிப்பது போல் இருந்தது. என் படைப்பு ஒன்றில் நடித்து அதனால் அவருக்கு ஏதாவது கெட்ட பெயர் வந்து விட்டால் என்று நான் படப்பிடிப்பை நிறுத்தி விட்டேன். பின்னர் என் இன்னுமொரு நண்பி (திருமணமானவர்) தானாக முன்வந்து நடிப்பதாகக் கூறியதால் தற்போது அக்குறுந்திரைப்படத்தை எடுத்து வருகின்றேன். இது தமிழ் ஆங்கிலம் இரண்டிலும் எடுக்கப்பட்டு கனேடிய குறுந்திரைப்பட விழாவிற்கும் கொடுக்கபட உள்ளது.


தற்போது கனடாவில் ஓரினச் சேர்க்கை என்பது Hot News ஆக இருப்பதால் இது பொருத்தமான காலம் என்றும் எனக்குப் படுகின்றது.
எமது மக்களால் இந்தக் கரு எவ்வளவு தூரம் வரவேற்கப்படுகின்றது என்பதை "You2" குறுந்திரைப்படம் வெளிவந்த பின்னர் அறிந்து கொள்ளலாம். (கல்லெறி கிடைக்காவிட்டால் போதும்)

கனேடிய பெண்கள்

“கருமையம்” எனும் அமைப்பு முதல் முறையாக மூன்று நாடகங்களை மார்ச் மாதம் 19,20ம் திகதிகளில் மேடை ஏற உள்ளன.

கனடாவில் வாழும் பல பெண்கள் ஒன்று சேர்ந்து பெண்களின் பிரச்சனைகளை பட்டறை மூலம் ஆராய்ந்து பாதிக்கப் பட்ட பெண்களுடன் வேலை செய்தும் உதவியும் இருக்கும் பல தகமையாளர்களை அழைத்து வந்து அவர்களது அனுபவங்கள் அவர்கள் எந்த வகையில் பெண்களுக்கு உதவுகின்றார்கள்? போன்ற தகவல்களைத் திரட்டி அத்தகவல்களைக் கொண்டு ஒரு நாடகப் பிரதியை உருவாக்கி பட்டறையில் பங்கு பற்றிய பல இளம் முதிய பெண்களையே வைத்து இந்த நாடகத்தை “கட்டவிழ்ப்பு” எனும் பெயரில் மேடை ஏற்ற உள்ளார்கள்.

இது கனடாவில் இடம் பெறும் முற்று முழுதாக பெண்களின் பங்களிப்பைக் கொண்டு உருவாகும் முதல் நாடகமாகும்.

இந்த பட்டறையை நந்தினி சபேசன் எடுத்து நடாத்துகின்றார். பல வருடங்களாக மனவெளிகலையாற்றுக் குழுவின் அங்கத்தவராக இருந்து தற்போது “கருமையம்” எனும் அமைப்பிலும் இவர் அங்கத்தவராக இருக்கின்றார். ஐரோப்பாவைப் போலல்லாது கனடாவில் பெண்களுக்கான அமைப்பொன்று இல்லாததால் பெண்கள் தாமாக எதையும் செய்யாது எப்போதும் ஆண்களின் உதவியை நாடியும் அவர்கள் இயக்கும் நாடகங்களில் ஒரு பாத்திரத்தை ஏற்று நடிப்பவர்களாகவும் மட்டுமே இருந்து வந்திருக்கின்றார்கள். இந்த நிலமை தங்போது மாறி பெண்கள் கலந்துரையாடல் மூலம் தாமாகவே ஒரு பிரதியை தயாரித்து தாமாகவே ஒன்றாக இணைந்து பெண்கள் எதிர்நோக்கும் ஆறு விடையங்களை முக்கியப்படுத்தி நாடகமாக்கியுள்ளார்கள்.
நாடகம் இலக்கியம் போன்றவற்றில் ஆர்வமுள்ளவர்களை அழைத்து இந்தப் பட்டறை ஆரம்பிக்கப்பட்டது. இதில் ஏற்கெனவே அரங்காடல் நிகழ்வுகளில் நடித்த பல பெண்கள் இணைந்திருக்கின்றார்கள். அது மட்டுமல்ல பல இளம் பாடசாலை மாணவிகள் தாம் நடிக்கவேண்டும் இளம் பெண்கள் எதிர் நோக்கும் பிரச்சனைகள் தம் மூலம் வெளியே கொண்டு வரவேண்டும் என்று ஆர்வம் காட்டித் தாமாகவே இந்தப் பட்டறையில் வந்து கலந்தும் கொண்டுள்ளார்கள்.

என் அனுபவம் -
“கருமையம்” மேடையேற்ற இருக்கும் ஒரு முக்கியமான நாடகமான “மௌனத்தின் மொழிபெயர்ப்பு” கவிஞர் சக்கரவர்த்தியின் ஆக்கத்திலும் இயக்கத்திலும் மேடையேற உள்ளது. இந்த நாடகத்தில் நான் ஒரு முக்கிய பாத்திரம் ஏற்று நடிப்பதால் பெண்கள் பட்டறையில் என்றால் முற்று முழுதாகப் பங்களிப்பு செய்ய முடியவில்லை. இருந்தும் அவ்வப்போது சென்று எனது கருத்துக்களைக் கூறி வருகின்றேன்.

கடந்த ஞாயிற்றுகிழமை பெண்கள் அமைப்பின் “கட்டவிழ்ப்பு” நாடகத்தின் முற்று முழுதான ஒத்திகை பார்க்கப்பட்டது ஐந்து வயது தொடக்கம் ஐம்பது வயது வரை இருபதற்கும் மேற்பட்ட பெண்கள் இதில் இணைந்து நடிக்கின்றார்கள். முதல் முறையாக மேடையேறும் பலரும் இருக்கின்றார்கள். இவர்கள் இந்த நாடகம் வெற்றியளிக்க வேண்டும் என்ற ஒரே நோக்கத்தோடு மிக ஓற்றுமையாக ஒன்றாக இணைந்து பாடுபடுவதைப் பார்க்க மனதிற்கு நிறைவாக உள்ளது. இந்நாடகப்பிரதி ஒருவரால் தயாரானதல்ல. பலரின் அனுபவங்கள் பகிரப்பட்டு பலரின் எண்ணத் துளிகளைக் கலந்து தயாரிக்கப்பட்டது. இப்பட்டறை பல பெண்களை வாசிப்பதற்கும் எழுதுவதற்கும் தூண்டியிருக்கின்றது. அது மட்டுமல்ல நாடகங்களுக்கான ஒலித் தெரிவினைக் கூட பெண்களே முன்வந்து செய்கின்றார்கள்.
இனி வரப்போகும் காலங்களில் மேடயமைப்பு ஒளி அமைப்பு போன்றவற்றையும் தாமாகவே செய்து முற்று முழதாகப் பெண்களாய் ஒரு முழுநாடகத்தைத் தருவதற்கும் முடிவு செய்துள்ளார்கள்.
இந்த நாடகத்தில் நான் ஒரு சிறிய பாத்திரத்தை ஏற்று நடிக்கவுள்ளேன். அத்தோடு 2006ம் ஆண்டு மார்ச் மாதம் 26ம் திகதி எனது ஆக்கத்திலும் இயக்கத்திலும் மூன்று வித்தியாசமாக மேடை நாடகங்களை இந்தப் பெண்களைக் கொண்டு மேடை ஏற்ற உள்ளேன்.

நாடகங்களுக்கான நுழைவுச் சீட்டுக்கள் விற்பனைக்கு வந்து விட்டன. ரொறெண்டோவில் வாழும் தரமான நாடகங்களைப் பார்க்க விரும்புபவர்கள் கருமையத்தின் இந்த நாடகவிழாவை வந்து பார்த்து மகிழலாம்.

Friday, February 18, 2005

Spring Summer Fall Winter...and Spring

South Korea/Germany


திரைப்படங்கள் பல வடிவங்களில் எடுக்கப்படுகின்றன. ஆனால் சில திரைப்படங்கள்தாம் இப்படியும் திரைப்படம் எடுக்க முடியும் என்ற வியப்பை எமக்குள் கொண்டு வருகின்றன. அந்த வகையில் வித்தியாசமாக நல்ல ஒரு திரைப்படத்தைப் பார்க்க விரும்புபவர்களுக்கு இத்திரைப்படத்தை பார்க்கும் படி நான் கூறுவேன். கழுத்தெலும்பு புடைக்க அடுக்கு மொழியில் வீர வசனம் பேசும் திரைப்படங்களில் இருந்து தற்போது மணிரத்னம் பாணி என்று கூறும் வகையில் திரைப்படங்களில் மாற்றங்கள் ஏற்பட்டிருக்கின்றது. இத்திரைப்படம் இதையெல்லாம் தாண்டி வாழ்வியலை ஒன்றே முக்கால் மணிநேரத்திற்கு மிகக் குறைந்த (ஓரு பக்கம் இருக்கும் என்று எண்ணுகின்றேன்) திரைவசனங்களுடன் காட்சிக்கும் நடிப்பிற்கும் கதையின் கருவிற்கும் மட்டும் முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்பட்ட முறை என்னைத் திக்கு முக்காட வைத்தது.
நீண்ட கலைத்திரைப்படங்கள் சலிப்பைத் தருபவை என்ற கருத்தை இப்படம் உடைத்திருக்கின்றது.
நான்கு காலநிலைகளை ஒரே இடத்தில் மையமாக்கி காலநிலை மாற்றத்தோடு காலத்தையும் ஓட வைத்து பௌத்தத்தையும் தியானத்தையும் முன்நிலைப்படுத்தி வாழ்வியல் தத்துவங்களை மிக அழகாகக் படப்பிடிப்புக்குள் அடக்கி ஒரு பெரிய வாழ்வியல் தத்துவத்தையே தந்திருக்கின்றார் இயக்குனர்.

ஒரு பௌத்த “மொங்” கையும் அவரது சிஷ்யனான ஒரு சிறுவனையும் வைத்துத் திரைப்படம் ஆரம்பமாகின்றது. விளையாட்டாக மீன் ஓணான் பாம்பு போன்றவற்ரை பிடித்து சிறுவன் அவற்றில் முதுகில் ஒரு சிறிய கல்லைக் கட்டி விட்டு அவை நகரமுடியாமல் தவிப்பதைப் பார்த்துச் சிரித்து மகிழுவதைக் கண்ட குரு அவன் இரவு நித்திரைக்குப் போன பின்னர் அவன் முதுகில் ஒரு கல்லைக் கட்டி விடுகின்றார். அவன் காலை எழுந்த போது போய், அந்த உயிரனங்களைத் தேடிப்பிடித்து அவன்றில் முதுகில் கட்டியதை அவிழ்த்து விடு அப்போதுதான் உன் முதுகில் இருக்கும் கல்லை நான் அகற்றுவேன் என்பதோடு, அவற்றில் எதுவாவது இறந்திருந்தால் இந்தக் கல்லின் பாரம் நீ இறக்கும் வரை உன் இதயத்தில் கனக்கப் போகிறது என்று கூறகின்றார்.
இயற்கையோடு இணைந்து புறச் சு10ழலின் தாக்கமற்று வாழப்பழகிக் கொண்ட சிறுவன் காலமாற்றத்தோடு இளைஞனாகி அங்கே வைத்தியத்திற்காக வந்த ஒரு இளம் பெண்ணோடு உறவு கொண்டு காமத்திற்கு அடிமையாகி அவள் பின்னால் போய் விடுகின்றான். அதன் பின்னால அவன் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் என்று படம் தொடருகின்றது. புத்தரின் கொள்கைப்படி காமத்தை நிராகரிப்பதாகத் திரைப்படம் அமைந்தது எல்லோராலும் ஏற்றுக் கொள்ள முடியாவிட்டாலும். புறகாரணிகளால் மனிதன் எப்படியெல்லாம் மாறிப் போகின்றான் என்பதை மிகவும் யதார்த்தமாகக் காட்டியிருக்கிறது திரைப்படம். முக்கியமாகத் தியானத்தை வலியுறுத்துகின்றது.

Thursday, February 17, 2005

Mr.X கறுப்பி ஒரு கிசுகிசு

அப்போது எனக்கு பதினாறு வயது. சோப்பு போட்டு தேய்ச்சு தேய்ச்சு குளிச்ச காலம் போய். பள்ளிக்குப் போகும் போது பெடியங்கள் சைட் அடிச்சு லெட்டர் தர சிலுப்பிக் கொண்டு திரிஞ்ச காலம். கமலஹாசனையும் மோகனையும் வெட்டி?? புத்தகக்துக்க வைச்சுக் கொண்டு திரிஞ்ச காலம். அது ஒரு “கனாக்காலம்”
ஒரு பெடியன் மட்டும் நான் சைக்கிளில போனால் தானும் சைக்கிளில வாறது பஸ்ஸில போனா பஸ்ஸில வாறது நடந்து போனா நடந்து வாறது எண்டு ஒரே தொல்லை (*-*)
அடிக்கடி பாத்ததாலையோ என்னவோ அவன் என்ர மனதில பதிஞ்சிட்டான்.
ஒருநாள் இரவு அது ஒரு நிலாக்காலம். நிலவின் ஒளி எனது அறையின் சாளரத்துக்குள்ளால் ஊடுருவி என் படுகையை வெளிச்சமாக்கிய ஒரு பின் இரவில் (கற்பனைய கன்னா பின்னா எண்டு ஓடவிடா) என்ர இதயம் பிளந்து ஒரு காதல் மலர் பூத்தது.
அப்ப எனக்கு பதினாறு வயசு. நானும் அவனும் மாஞ்சு மாஞ்சு காதலிச்சம். ரியூசனுக்கு எண்டிட்டுச் சுத்திறது. சுபாஸ் கபேக்கு போய் ஐஸ்கிறீம் குடிக்கிறது. படத்துக்குப் போறது. சும்மா நடந்து திரியிறது எண்டு படிப்பைத் தூக்கி மூலையில போட்டிட்டு ----மகனோட சுத்தித் திரிஞ்சன்.

கேள்வி – கறுப்பி நீங்கள் காதலிச்சிருக்காவிட்டால் என்னவா வந்திருப்பீர்கள்?

பதில் - டொக்ரறாய்.

எங்கட காதல் கதை வீட்டில தெரிஞ்சு அம்மா தும்புத் தடியால தும்பு பறக்க அடிச்சா.(இப்ப கிழவி கனடாவிலதான் இருக்குது. நான் ஒருநாள் கேட்டன் லவ் பண்ணிறதுக்கும் ஆரும் அடிப்பீனமோ எண்டு? கிழவி பொக்கை வாயைப் பொத்திக் கொண்டு சிரிக்குது) ரியூசனால மறிச்சுப் போட்டீனம். கொஞ்ச நாளா ரேடியோவில சோகப்பாட்டுக் கேட்டு நானும் பாடிக்கொண்டு மெல்ல மெல்ல நடந்து திரிஞ்சன். பிறகு என்னட்டச் சத்தியம் வாங்கிக் கொண்டு (அதாவது அந்த --- மகனைக் கண்டாக் கதைக்கக் கூடாது எண்டு) நான் உள்ள கடவுளில எல்லாம் சத்தியம் பண்ணிப் போட்டு சோகமா முகத்தை வைச்சுக் கொண்டு ரியூசனுக்குத் திரும்பப் போனன். போக முதலே பக்கத்து வீட்டுப் பெடியனிட்டச் சொல்லி ---மகனுக்குத் தகவல் அனுப்பிப் போட்டன் (நான் ஏன் ---மகன் எண்டு போடுறன் எண்டு குழம்பாதேங்கோ கடைசியா உங்களுக்கு விளங்கும்)
நாஸ்திகையான எனக்குத் திடீரெனக் கடவுள் நம்பிக்கை வந்தது. வெள்ளிகளில் விரதம் பிடிச்சன். நல்லூர்த் திருவிழாக்கு 25 நாளும் விரதம். அப்பதான் கோயிலுக்குப் போகலாம் ---மகனைச் சந்திக்கலாம் எண்ட பிளான் எனக்கு. (என்ர லவ்வுக்குத் தன்னை யூஸ் பண்ணிப் போட்டன் எண்டு கடவுளுக்கு என்னோட இன்னும் கோவம். அதுதான் என்னை உருப்படாமல் பண்ணிப் போட்டார்) இப்பிடியே காதல் பறவைகளாய் பறந்து திரிஞ்சம். என்னை அந்தப் பெடியனோட கண்டதெண்டு அப்ப இப்ப அண்ணாக்கள் வந்து அம்மாட்ட அண்டி கோள்மூட்டுவான்கள் உடன நான் ரெண்டு கடவுள இழுத்துச் சத்தியம் பண்ண அம்மா நம்பீடுவா.(என்னவோ தெரியாது)
இப்பிடி நாங்கள் நல்ல சந்தோஷமா அஞ்சு ஆறு வருஷம் இழுபட்டம். அவன் ஒருநாள் சொன்னான் தங்கட வீட்டில பிரச்சனையாம் (அவன்ர அண்ணா என்ர அப்பான்ர ஸ்ருடண்ட்) கொஞ்ச நாளைக்குச் சந்திக்கேலாது எண்டு. நான் திரும்பவும் ரேடியோவில சோகப்பாட்டைக் கேட்டுக் கொண்டு தூணில சாய்ஞ்சு நிண்டு நிலவைப்பாத்துப் பெருமூச்சு வி;ட்டன். பிறகு ஒருநாள் எனக்குத் தகவல் வந்திது தான் கொழும்புக்குப் படிக்கப் போறான் எண்டு. ஏதோ படிச்சு நல்லா வரட்டும். வந்தாத்தானே வசதியா வாழலாம் எண்ட கற்பனையில நான் இருந்தன். பிறகு ஊர் பிரச்சனை நாங்கள் வீடு மாறினம். இப்பிடியெண்டு கறுப்பியின்ர காதல் கந்தறுந்த கதையாப் போய். என்னை அவன் “காய்” வெட்டிப்போட்டான் எண்டு நான் “பேய்” கோவத்தில இருந்தன். (தற்கொலை செய்வமோ எண்டு யோசிச்சது கூட உண்டு) அப்ப எல்லாம் உந்த பெண்ணியம் ஒண்டும் தெரியாது. ஒருத்தனைக் கலியாணம் கட்டி பிள்ளைப் பெத்து. நல்ல வீடு கார் எண்டு வாழ ஆசை.
---மகனோட தொடர்பு முழுத்தலுமா “கட்” பண்ணுப்பட்டிட்டுது. பிறகு நானும் ஐரோப்பா வந்து கலியாணம் கட்டி கனடா வந்து இப்பிடி வருஷங்கள் ஓடீற்றிது.

ரெண்டு வருஷத்துக்கு முதல் இந்தியா போற வழியில பிள்ளைகளோட லண்டன் போனன். என்ர மச்சாளோடதான் தங்கினனான். அவளுக்கும் என்ர வயசுதான். (அப்ப என்ர லவ்வுக்கு அப்பப்ப கடிதம் குடுத்து உதவினவள்.) சொன்னாள் உன்ர ---மகன் இஞ்ச லண்டனில எனக்குக் கிட்டத்தான் இருக்கிறான். எங்கட ரெண்டு பேற்ற பிள்ளைகளும் ஒரே பள்ளிக் கூடத்திலதான் படிக்கினம். நான் அடிக்கடி சந்திக்கிறனான் என்னைக் கண்டிட்டுத் தெரியாத மாதிரிப் போறான் எண்டு அவளுக்குப் பேய் கோவம். பிறகு ஒருமாதிரி தேடிப்பிடிச்சு ---மகனோட போன் நம்பர் எடுத்து வீட்டிற்கு அடிச்சு பிள்ளையப் பற்றிக் கதைச்சுப் போட்டு எங்கட வீட்டுக்கு ஒரு விசிட்டர் வந்திருக்கிறா கதையுங்கோ எண்டு போட்டுப் “படார”; எண்டு என்னட்ட ரெலிபோணைத் தந்திட்டாள். நான் ஆரெண்டு சொன்னா “சொறி” எனக்கு உங்களத் தெரியாது எண்டு சொன்னாலும் சொல்லிப் போடுவான் எண்ட பயம் எனக்கு. நான் சொன்னன் நான் உங்களப் படிப்பிச்ச மாஸ்ரறின்ர மகள் எண்டு அவனுக்கு அஞ்சும் கெட்டு அறிவும் கெட்டிருக்க வேணும் (என்ர கற்பனை) நீங்கள் எங்கட வீட்டுக்கு விசிட்டிங் வர வேணும் என்ர மனுஷி நல்லவ ஒண்டும் சொல்ல மாட்டா எண்டான். (நான் எரிச்சலோட அந்த மனுஷிய ஒருக்காப் பாப்பம் எண்டு) வெளிக்கிட்டுப் போனம் குடும்பத்தோட இருந்து கதைச்சுப் ரீ குடிச்சுப் போட்டு வந்திட்டம். (மனுஷி என்னளவுக்கு இல்லாட்டாலும் பரவாயில்லை – விழுந்தாலும் மீசையில மண் படாது) அடுத்தநாள் அவன் போன் அடிச்சு என்னைக் கேட்டான் ஏன் நான் தன்னை ஏமாத்தினனான் எண்டு?
ம்ம்ம்ம்--- மகனே?

Wednesday, February 16, 2005

கறுப்பிக்கு பரிசு



காதலர் தினத்தன்று
நீலத்தில் வெள்ளைப் பூப்போட்ட சேலை
பரிசாகத் தந்தார் கணவர்(ன்)
இதையும் மடிப்புக் குலையாமல்
அடிக்கி வைத்தேன் நான்

இன்னும் தேய்த்துக்
குளிக்கின்றேன்
நிறம் மாறலாம்
என்ற ஏக்கத்தில்

எனக்குப் பொருத்தமானதை
அம்மாவின் பின்
இவர் வாங்கி வருகின்றார்

மஞ்சள் சேலை
ஊகூம்! சான்ஸே இல்லை

தோழியில் மஞ்சள் சேலை
போர்த்திப் பார்க்கையில்
அழகாக இருக்கின்றேன் நான்.

Friday, February 11, 2005

Shadows of Time


2004ம் ஆண்டு ரொறொன்டோ சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்ட இன்னுமொரு இந்தியத் திரைப்படம் "Shadows of Time". இது ஜேர்மன் இயக்குனரான Florian Gallenberger
ஆல் இயக்கப்பட்ட திரைப்படம்.
Florian Gallenberger
மெக்சிக்கோவைத் தளமாக வைத்து எடுத்த குறுந்திரைப்படமான "Quiero Ser" க்கு 2001ம் ஆண்டு Academy Award ஐ வென்றவர்.
தனது முழுநீளத் திரைப்படத்திற்கான உலகின் மறுபக்கம் சென்று இந்தியாவைத் தளமாக வைத்து "Shadows of Time" ஐத் தந்துள்ளார் இயக்குனர்.
பழைய நினைவுகளை மீட்டிப்பார்ப்பது என்பது (முக்கயமாக "X" காதலர்களை) தற்போது திரையுலகில் ஒரு trend ஆக வந்து விட்டது. "Shadows of Time" இலும் திரைப்படம் தொடங்கும் போது வயது முதிர்ந்த பணக்காறர் ஒருவர் தனது பென்ஸ் காரில் ஒரு கிராமத்திற்கு வந்து அங்கே உள்ள செயலிழந்து பாழடைந்து போயிருக்கும் "காப்பெற்" தொழிற்சாலை ஒன்றினுள் செல்கின்றார். அவரது flash back இல் தொழிற்சாலையினுள் சிறுவர்கள் எப்படியெல்லாம் துன்பத்திற்குள்ளாகின்றார்கள் என்பதாய் திரைப்படம் ஆரம்பமாகின்றது.
அதன் பின்னர் தொடரும் திரைப்படத்தில் இந்தியாவின் இடம் பெறும் இன்னொரு மனதை உலுக்கும் சிறுவர் கைத்தொழிலைக் கருவாகக் கொண்டு திரைப்படம் நகர்கின்றது. திரைப்படத்தின் நாயகள் ரவி. முகத்தில் எப்போது கரியோடு வசீகரமாக கண்களை அங்கே இங்கே ஓட விட்டுத் துடிதுடிப்பாக இயங்குகின்றான். அங்கே வேலைபார்க்கும் சிறுமிகளுக்கு இடம் பெறும் அங்கிரமங்களைக் கண்டு மனம் நோக சுருண்டு போகின்றான் ரவி. வயது வந்த முதலாளிகள் தமக்கு வேண்டிய நேரத்தில் தொழிற்சாலைக்கு வந்து தமக்குப் பிடித்த ஒரு சிறுமியைக் காட்டி விட்டுப் போனால் அன்று இரவு அச்சிறுமி அந்த முதலாளியின் வீட்டிற்கு தொழிற்சாலை அதிகாரியால் அனுப்பப்படுவாள்.
இப்படியானத் தொழிற்சாலைகளில் சிறுவர்களுக்கு நடக்கும் அக்கிரமங்களுடன் திரைப்படம் நகர்ந்து செல்லத் திரையரங்க மொளனாக உறைந்து விட்டது.
இப்போது திரைக்கதைக்குள் புகுந்து கொள்கின்றாள் மாஷா எனும் சிறுமி. அவளை அவளது தந்தை அழைத்து வந்து 50 ரூபாய்க்கு விற்று விட்டு முதலாளி அவளைப் பற்றிக் கேட்ட போது சொன்ன சொல்லுக் கேட்பாள் பிரச்சனை இருக்காது என்றவாறு முதுகில் ஓங்கி ஒரு அறை விட மாஷா மௌனமாக இருந்தது அவள் அந்தத் தொழிற்சாலை அதிகாரியால் வாங்கப்படுவதற்கான தகுதியாகக் கருதப்பட்டது. மாஷாவும் ரவியும் நண்பர்களாகின்றார்கள். சாப்பாடு பகிர்வது பாட்டுப்பாடி ஆடி மகிழ்வது என்று அந்த அழுக்கான தொழிற்சாலைக்குள்ளும் அந்தச் சிறுவர்களின் களிப்பை மனம் நிறையும் வண்ணம் காட்டியிருக்கின்றார்கள். மாஷாவைப் பார்த்து ஒரு முதலாளி ஆசை கொள்கின்றான் அன்று இரவு மாஷா அவனது வீட்டிற்கு அனுப்பப்படல் வேண்டும் இதைத் தெரிந்து கொண்ட ரவி தான் அது வரை சேர்த்து வைத்த பணத்தையெல்லாம் அதிகாரியிடம் கொடுத்து அவளை விட்டு விடுமாறு கேட்கின்றான் மனம் இரங்கிய அதிகாரி மாஷாவை அங்கிருந்து சென்று விடுமாறு கூற செய்வதறியாது நின்ற மாஷாவின் கழுத்தில் ரவி அடையாளத்திற்காக தனது ஒரு சிறிய மாலையை அணிவித்து நம்பிக்கையும் அழித்து ஒரு குறிப்பிட்ட கோயிலைக் கூறி நீ எங்கு சென்றாலும் ஒவ்வொரு பௌணமி அன்றும் அங்கு வா நான் எப்போது இங்கிருந்து வருகின்றேனோ அப்போது அங்கு வந்து சந்திக்கின்றேன் என்று வாக்களிக்கின்றான்.
சிறுவர்களாக இருக்கும் வரைக்கும் திரைப்படம் ஒரு காத்திரமான கதை சொல்லும் கலைப்படமாக நகர்ந்து சென்து பின்னர் வழமை போல் இந்திய ஞனரஞ்சகமாக மாறி பார்வையாளர்களை ஏக்கத்திற்குள் தள்ளி விட்டது.
இந்தியாவில் அனாதையாக விடப்பட்ட பெண் எங்கு செல்வாள்? விபச்சார விடுதிக்கு.
நாட்கள் ஓட மாஷாவின் நினைவோடு கடினமாக உழைத்துத் தொழிலும் கற்றுச் சிறிது பணத்தோடு இளைஞனாக வெளியேறுகின்றான் ரவி. சொன்னபடி கோயிலுக்குச் செல்கின்றான். வழமையான திரைப்படங்கள் போல் மாஷாவும் வருகின்றாள் ஆனால் அவர்கள் சந்திக்கவில்லை.
ரவி ஒரு "காப்பெற்" விற்கும் வயோதிபரிடம் வேலைக்குச் சேர்கின்றான். அவருக்கு ஒரு மகள் அவளிற்கு ரவிமேல் காதல் ரவி தனது "காப்பெற்" அனுவத்தின் மூலம் அந்த வயோதிபரின் வியாபாரத்தை வெளிநாட்டிற்குச் சந்தைப் படுத்த வியாபாரம் கூடு பிடிக்கின்றது. வயோதிபர் இறக்கும் தறுவாயில் மறக்காமல் மகளின் கையை ரவியிடம் பிடித்துக் கொடுத்து இறந்து போகின்றார்.
விபச்சார விடுத்திக்கு வரும் ஒரு பணக்காறனிற்கு மாஷா மேல் காதல். தொடுக்கத்தில் அவனது காதலை மறுக்கும் மாஷா ரவியை ஒரு பெண்ணோடு கோயிலில் கண்ட பின்னர் மணந்து கொள்கின்றாள்.

ஒரு விருந்து உபசாரத்தில் ரவியும் மாஷாவும் சந்தித்துக் கொள்கின்றார்கள். இருவருக்குள்ளும் அமுங்கியிருந்த காதல் வெளியேறுகின்றது. திருட்டுத்தனமாகச் சந்தித்து உறவு கொள்கின்றார்கள். மாஷா கற்பவதியாகின்றாள். தன்னுடன் வந்துவிடுமாறு மாஷா கேட்க இரு குழந்தைகளுக்குத் தாயான தனது மனைவிக்குத் துரோகம் செய்ய முடியாமல் அவன் மறுக்கின்றான். மாஷாவும் கணவனும் பிரிகின்றார்கள். மாஷா தனக்குத் தெரிந்த உலகமான விபச்சாரத்திற்கே மீண்டும் செல்கின்றாள். தனது மகனிற்கு உதவ வேண்டும் என்ற எண்ணத்துடன் மாஷாவைத் தேடிச் சென்று பணம் கொடுக்கின்றான் ரவி. அவள் அதனைத் தூக்கி எறிகின்றாள்.
இறுதியில் வயது முதிர்ந்த ரவி தனது கடைசிக் காலத்தில் மாஷா நிச்சயமாக அந்தத் தொழிற்சாலை அருகில் தான் எங்காவது கழிப்பாள் என்ற நம்பிக்கையுடன்தான் அங்கு வந்திருப்பதாகக் காட்டப்பட்டு தொழிற்சாலையின் வெளியே ஒரு சிறுமி விளையாடிக் கொண்டிருப்பதைக் காட்டுகின்றார்கள். வயது முதிர்ந்தவர் அருகில் செல்ல சிறுமி திரும்பிப் பார்க்கின்றாள். அது சிறுமியாக தொழிற்சாலையில் வேலை பார்த்த மாஷா. தனது குருட்டுப் பாட்டிக்கும் அந்த முதியவருக்கும் தேனீர் கொடுத்து விட்டு முதியவர் சென்ற பின் பாட்டியிடம் கேட்கின்றாள் “அது யார் பாட்டி?” என்று அவள் புன்னகையோடு சொல்கின்றாள்; “ரவி” என்று. திரைப்படம் நிறைவு பெறுகின்றது.
ஹப்பாடா ஒரு மாதிரித் திரைக்கதை முடிந்து விட்டது.
பலத்த கை தட்டல்களுடன் திரைப்படம் பார்வையாளர்களால் வரவேற்கப்பட்டது. QA இல் ஒரு இந்திய இளம் பெண்ணால் கேட்கப்பட்ட கேள்வி மிக அருமையாக ஆரம்பிக்கப்பட்ட திரைப்படம் எதற்காகக் காதல் திரைப்படமாகப் பரணமித்துப் போனது என்று. பதில் தந்த இயக்குனர் கூறினார். இந்தியாவின் இருண்ட பக்கங்களைக் காட்டுவது என் எண்ணமல்ல. சிறுவர் தொழில் இந்தியாவில் இருப்பது தெரியும் அதனைக் காட்ட வேண்டும் என்று எண்ணினேன். ஆனால் அதை முழுப்படைப்பிற்குள்ளும் கொண்டு வரும் எண்ணம் எனக்கில்லை என்று.
சிறுவன் ரவியும் சிறுமி மாஷாவும் நடிப்பிற்காக மிகுந்த பாராட்டைப் பெற்றார்கள். மூன்று மாதங்களாக 6,000 குழந்தைகளைப் பார்த்துத் தெரிவு செய்தேன் என்றார் பெருமையுடன் இயக்குனர்.
தனது சிறந்த நடிப்பாலும் எல்லோரையும் கவரக்கூடியதாக தனது தோற்றத்தாலும் Prashant Narayanan, திரையரங்கிற்கு வரும் போது பார்வையாளர்கள் எழுந்து நின்று கை தட்டி வரவேற்றார்கள். எனது பார்வையில் கதாநாயகன் தோற்றம் அற்ற நல்ல ஒரு கலைஞனிற்குரிய தோற்றத்தில் இருந்தார் நடிகன்.
மிகத் தரமான திரைப்படம் என்று சொல்ல முடியாவிட்டாலும் "Shadows of Time" பார்த்ததற்காக நான் வருந்தவில்லை.

Tuesday, February 08, 2005

பெண்மை<>ஆண்மை



கடவுள் இருக்கிறாரா? இல்லையா? என்பது போல் முடிவின்றித் தொடரக்கூடிய விடையம் இந்த பெண்ணியம் பற்றியது. சுருக்கமாகச் சொல்லப்போனால் “பெண்மை”, “ஆண்மை” என்ற பதங்கள் விலகி ஒரு நாணயத்தின் இருபக்கங்களாக ஆண்,பெண் வாழத்தொடர, ஆண்களிலும் பார்க்கப் பெண்கள் நிறையவே மாற வேண்டியுள்ளது.
இலகு என்று எண்ணும் வாழ்க்கை யாருக்குத் தான் பிடிப்பதில்லை. ஏதோ காலகாலமாக வந்து விட்டது இப்ப எதுக்கு நான் மாற்றியமைக்க வேண்டும் பேசாமல் ஒத்துப் போய் விடலாம் என்ற தன்மை தான் அனேக பெண்களிடம் காணப்படுகின்றது.
இந்தியா போன்ற நாடுகளை விடுங்கள் கனடாவில் வாழும் எம்மவரில் பலர், இங்கு வந்த பின்னரும் சமைப்பதும், சாப்பிடுவதும், கணவன், குழந்தைகள் நன்றாக இருக்க விரதம் பிடிப்பதிலுமே தமது வாழ்க்கையாகக் கொண்டிருக்கின்றார்கள்.

ஒருமுறை ஒரு தமிழ் நிகழ்வு ஒன்றில் ஒருவரின் மனைவி(இவற்றில் ஈடுபாடு அற்றவர்) தனது குழந்தைகளுக்கு வகுப்பு இருப்பதாகக் கணவனை நிகழ்வின் இடையில் அழைத்துக் சென்று விட்டார். இப்படியாகப் பல முறை நடந்ததை கவனித்த நான் ஒருநாள் அந்தப் பெண்ணிடம், “ஏன் நீங்கள் கார் பழகக்கூடாது, அப்படியானால் கணவரின் எதிர்பார்ப்பின்றி உங்கள் குழந்தைகளை நீங்கள் எங்கு வேண்டுமானாலும் அழைத்துச் செல்லலாமே, வீணாக இங்கே வந்து தூங்கிக் கொண்டு” என்றேன். அவர் மிகக் கோவமாக என்னிடம் சொன்னார் “பிறகு என்னத்துக்கு புருஷன் எண்டு அவர் எனக்கு”

இன்னுமொரு நண்பி ஒருநாள் என்னிடம் பெருமையாக “என்ர அவருக்கு நான் வேலைக்குப் போய் கஷ்டப்படுறது விரும்பமில்லை, நான் கார் ஓடினா எனக்கு ஏதாவது நடந்திடுமோ எண்டு அவருக்கு நித்திரை வராது என்னில அந்த அளவுக்கு “அக்கறை”, “விருப்பம்” என்றார். (அப்படியானால் உனக்கு அவரில அந்த அளவிற்கு “அக்கறை”, “விருப்பம்” இல்லையா என்று கேட்டு அவளைக் குழப்பி சிந்திக்க வைக்க நான் விரும்பவில்லை. இதனால் அவளுக்கு ஏற்படும் பாதிப்பிற்கு என்னால் எந்த அளவிற்கு உதவ முடியும் என்ற கேள்வி எனக்குள் எழுந்ததால்)

தங்குதல், ஒருவரில் சார்ந்து இருத்;தல் என்பதைப் பெண்கள் விரும்புகின்றார்கள். அவர்களுக்கு அது இரத்தத்தோடு ஊட்டப்பட்டு விட்டது. வெளியில் அதிகம் பேசாவிட்டாலும் ஒழுக்கம் என்ற ஒன்றிற்கு மிகவும் முக்கியத்துவம் கொடுக்கின்றார்கள். தம்மை முற்போக்குப் பெண்கள் என்று பிரகடனம் செய்பவர்கள் கூட தன் ஒழுக்கத்திலும் விட தனது அம்மாவின் ஒழுக்கத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பவளாகவே காணப்படுகின்றாள். இதற்கான மாற்றங்கள் இலக்கியங்கள் மூலம் ஏந்த அளவிற்கு சாத்தியம?. பெரிய புரட்சியின் பின்னர் தான் மாற்றங்கள் வரமுடியும் என்பது என் கருத்து அதற்கா சாத்தியங்கள் மிகக் குறைவாகவே இருக்கின்றன. அதிலும் அரபு நாடுகளில் எந்த அளவிற்கு சாத்தியப்படப் போகின்றது. தலித்துக்கள் போலவே, பெண்களும் தாங்களாக “நான் ஒரு சுயபிரஞை, தனி மனுஷி” என்ற பிரக்ஞை வர மட்டும் இது மாறப்போவதில்லை.
பெரிய தத்துவஞானிகளின் தத்துவங்களை இவர்கள் படித்து வாழ்க்கை பற்றிய தெளிவைப் பெறப்போகின்றார்களா? அன்றாட வாழ்க்கையில் அவர்கள் விரும்பிப்பார்க்கும் தொடர் நாடகங்கள், திரைப்படங்கள், தமிழ் வானொலி நிகழ்சிகள் போன்றவற்றால் மெல்ல மெல்ல இப்பெண்களை சிந்திக்க வைக்க முடியும். ஆனால் மேற் கூறிய ஒன்றும் இதனைச் செய்வதற்குத் தயாராக இல்லை. மாறாக அவர்கள் பெண்களை மேலும் கோழையாக்குவது போன்ற நிகழ்வுகளையே தந்து கொண்டிருக்கின்றார்கள். கொஞ்சமேனும் சிந்திக்கத் தெரிந்த, படித்த, முற்போக்குத் தன்மை கொண்ட பெண்ணாகச் சித்தரிக்கப் படுபவள், எப்போதும் வில்லியாகவே காட்டப்பட்டு இறுதியில் அவள் திருந்தி நல்ல குடும்பப் பெண்ணாக மாறுவதாகத் தொடர்ந்தும் பெண்களுக்கு ஊடகங்களால் ஊட்டப்பட்டு வருகின்றது. மாறாக கனேடிய ஆங்கில தொலைக்காட்சி நிகழ்வுகளில் பல தரமாக தகவல்களைப் பெண்களுக்காகத் தரப்பட்ட போதிலும், அவை எந்த அளவிற்கு ஆசிய குடும்பப் பெண்களுக்குச் சென்றடைகின்றன. பார்ப்பவர்களும் இது வெள்ளையர்களுக்கான கருத்து எமக்கும் இதற்கும் சம்மந்தமில்லை என்பது போல் விலகிக் கொள்கின்றார்கள்.

அடுத்து, கணவனின் அடக்கு முறையை எதிர்த்து சிறிதளவேனும் போராடத் தொடங்கும் பெண்களுக்கு சமூகத்திடம் இருந்து கிடைக்கக் கூடிய ஒத்துழைப்பு மிகக் குறைவாகவே இருக்கின்றது. இதனால் பலம் இழந்து போகும் பெண்கள் மீண்டும் அடக்கு முறைக்குள் தம் இருப்பு வேண்டி செல்வதையே காணக் கூடியதாக இருக்கின்றது. இல்லையேல் அவள் மிகக் கொடுமையாகக் கொச்சைப் படுத்தப்படுகின்றாள்.
இருந்தும் புலம்பெயர்ந்த மண்ணில் எமது அடுத்த சந்ததியனரில் பலர் இப்படியான அவலங்களை துணிவுடன் சந்திக்கக் கூடிய அளவிற்கு மனபலம் கொண்டவர்களாக உருவாகி வருகின்றார்கள்.

Friday, February 04, 2005

மாயா

திக்விஜேய் சிங்கின் மாயா திரைப்படம் 2001ம் ஆண்டு ரெறொண்டோ சர்வதேச திரைப்பட விழாவில் காண்பிக்கப்பட்டது.

மூன்றாம் உலகநாடுகளின் கலாச்சாரப் பின்னணி பெண்களை எவ்வாறு வதைக்கின்றன என்பது எல்லோரும் அறிந்ததே. முக்கியமாகப் பல சமூகங்களின் கட்டுப்பாடுகளும், மூடநம்பிக்கைகளும் பெண்களை பாலியல் வதைக்கு உள்ளாக்கி வருகின்றன என்பதை “மாத்தம்மா” போன்ற விவரணப்படம் மூலம் நாம் அறியக்கூடியதாக இருந்தது. இறுக்கமான கலாச்சாரப் பின்னணியுடன், வறுமையும் சேர்ந்து கொண்டு இந்தியா போன்ற நாடுகளில் வாழும் பெண்களின் வாழ்க்கை முறையை எப்படியெல்லாம் கொண்டு செல்கின்றன என்பதை பெண் திரைப்பட இயக்குனரான ஜானகி விஸ்வநாதன் தனது “குட்டி”, “கனவு மெய்ப்படல் வேண்டும்” போன்ற திரைப்படங்கள் மூலம் எடுத்துக் காட்டிப் பலரின் பாராட்டையும் பெற்றுள்ளார்.
இருந்தும் ஒருத்தி பெண்ணாய்ப் பிறந்த ஒரே காரணத்திற்காக அவளிற்கு அதிக பட்ச அளவிலான உடல், உளவியல் பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் ஒரு சமூகத்தின் கலாச்சாரம் உருவாக்கப்பட்டிருக்கும் கொடுமையை நான் “மாயா” திரைப்படம் பார்த்த போது உணர்ந்தேன்.


என்னை முற்றுமுழுதாக பேச்சிழக்கவும், அதிரவும் வைத்த திரைப்படம் இதுவென்பேன்.
12 வயது மாயா தனது குடும்ப வறுமை காரணமாக தனது மாமா வீட்டில் அன்பான மாமா, மாமி, 11 வயதுடைய அவர்களது மகன் ஆகியோருடன் வாழ்ந்து வருகின்றாள். ஒரு சிறுமிக்கு கிடைக்கக் கூடிய அத்தனை வசதியும், அன்பும் மாயாவிற்குத் தாராளமாகவே கிடைக்கின்றது. திரைப்படத்தில் முற்கால் பகுதி மாமா, மாமி அவள் மேல் வைத்திருக்கும் அன்பு கண்டிப்பு என்பன மூலமும், அவர்கள் வாழும் அழகிய கிராமத்தில் மாமன் மகனுடன் சேர்ந்து கொண்டு சிறுவர்களுக்கேயான குறும்புடன் ஊரைச் சுற்றி லூட்டி அடிப்பதும் என்று அழகான காட்சிகளுடன் மனம் நிறைகின்றது.

மாயா வயதிற்கு வருகின்றாள். உடல் மாற்றங்கள் பற்றிய போதிய அறிவு இல்லாத சிறுமி அவள். மாமா, மாமி பூரித்துப் போகின்றார்கள், மாயாவின் பெற்றோரிற்குத் தகவல் போகின்றது. எல்லோருமாகக் கூடி மகிழ்ந்து போகின்றார்கள். எம்மவரைப் போலவே சடங்கிற்கான ஆயத்தங்கள் நடக்கின்றது. பட்டுச் சேலைகள் பலகாரங்கள் என்று வீடு களை கட்டுகின்றது. சடங்கிற்காக கோயில் பூசாரியுடன் சேர்ந்து நல்ல நாட் பார்க்கின்றார்கள். எந்த வித சங்கடத்தையும் பார்வையாளர்களுக்குத் தராமல் திரைப்படம் யதார்த்தமாக நகர்கின்றது.
சடங்கிற்கான நாள்: எல்லோரும் பட்டுடுத்தி கோயிருக்குச் செல்கின்றார்கள். ஊர் மக்கள் கோயில் முன் திரண்டு நிற்க, நான்கு பூசாரிகள் மாமா, மாமி, பெற்றோர் சகிதம் பட்டுச் சேலை உடுத்திய மாயா கோயிலைச் சுற்றி வருகின்றாள். ஊர் மக்களுக்கு கோயில் வீதியல் பந்தி போட்டு உணவு பரிமாறப்படுகின்றது. கோயிலைச் சுற்றி வந்த நான்கு பூசாரிகளும் மாயாவும் கோயிலின் உள்ளே செல்ல மற்றவர்கள் விருந்தினரைக் கண்காணிக்கச் சென்று விடுகின்றார்கள். விறைத்த முகத்துடன் ஒற்றைக் கையால் மாயாவை அணைத்த படி வாய் மந்திரத்தை முணுமுணுக்க மூத்த பூசாரி முன்னே செல்ல மற்றைய பூசாரிகள் அவரைப் பின் தொடர்ந்து நடக்கின்றார்கள். இருண்ட அறையினுள் விளக்கு வெளிச்சத்தில் சிறுமி மாயா பயந்த முகத்துடன் சிணுங்குகின்றாள்.

அடுத்த காட்சியாக மாயாவினதும், பூசாரிகளினதும் உடைகள் நிலத்தில் அழகாக மடித்து வைக்கப்பட்டிருக்கின்றன. ஒரு மரத்தினால் ஆன குந்து ஒன்றில் மாயாவின் உடைகளைந்த இரண்டு கால்களும் மட்டுமே காட்டப்படுகின்றன. ஓவ்வொரு பூசாரியாக அருகில் வந்து அவள் கதறக் கதற உடல் உறவு கொண்டுவிட்டு விலகுகின்றார்கள். மாயா எனும் சிறுமி நான்கு கிழட்டுப் பூசாரிகளால் அவர்கள் சம்பிரதாயத்தின் படி ஆசீர்வதிக்கப்படுகின்றாள்.
அந்த ஊரில் கோயிலின் உள்ளே நடப்பது பற்றி பிரக்ஞை இன்றி உணவில் கவனம் செலுத்துகின்றார்கள். மாயாவின் கதறல் கேட்டு மாமாவின் 11 வயது மகன் மட்டும், அவளிற்கு ஏதோ கெடுதல் நடப்பதை அறிந்து கோயில் கதவைத் தட்டிக் கத்துகின்றான். அதனை கண்ட அவனது தந்தை அவனை அடித்து விரட்டுகின்றார். மாயா தனது கன்னித் தன்மையை கிழட்டுப் பூசாரிகளிடம் அவள் பெற்றோர்கள் அன்போடு வளர்த்த மாமா மாமியின் சம்மதத்துடன் இழந்து ஆசீர்வாதம் பெறுகின்றாள். உடல் களைத்த நிலையில் நடக்கும் சக்தி இன்றி வந்தவளை அவளது மாமியும் தாயாரும் தூக்கி அணைத்துக் கொண்டு செல்கின்றார்கள். அவர்களும் இந்த அவலத்ததைத் தாண்டி வந்தவர்கள் தானே.
இப்படியான கேவலமாக கலாச்சாரத்தில் நம்பிக்கை கொண்டு இந்த நூற்றாண்டிலும் மக்கள் கடைப்பிடிக்கின்றார்கள் என்றால்?
இத்திரைப்படத்தை இயக்கிய திக்விஜெய் வெறும் கற்பனைக் கதை என்று எண்ணி விடாதீர்கள். பல காலமாக ஆராய்சி செய்து தகவல்கள் திரட்டி ஆதாரங்களுடன் இந்தத் திரைப்படத்தை எடுத்துள்ளேன் என்று கூறி திரைபட ஆரம்பததிற்கு முன்பே துண்டு பிரசுரங்களை வழங்கினார்.
இது ஒரு சமூகத்தின் கலாச்சாரம். பல ஆண்டு காலமாக அக்கலாச்சாரம் கடைப்பிடிக்கப்பட்டு வந்துள்ளது. அது அம்மக்களின் தனித்தன்னை அதனை நாம் ஏன் கேலிப்படுத்த வேண்டும் இது நான் கேள்விப்பட்ட விமர்சனம் ஒன்று..
பெண்ணே உன் கதி இதுதானே உன் பெண்மை ஆண்மைக்குப் பலிதானா?

Wednesday, February 02, 2005

"பெண்கள் விடுதலை பெற ஆண்மை அழிய வேண்டும்"

ஓக்டோபர் மாதக் காலச்சுவட்டில் கண்டதும் கேட்டதும் படித்தேன். அண்மைக் காலமாக பல இலக்கிய விரும்பிகள் பெண்களின் எழுத்து அவர்களின் மொழி பற்றி பத்திரிகைகள் சஞ்சிகைகள் இணையத்தளங்கள் என்று வசைபாடிய வண்ணமே இருக்கின்றார்கள். பெண்மொழி கழிப்பறையில் எழுதப்படும் வாசகங்களுக்கு நிகராக இருக்கின்றது என்றும் இப்படியான மொழிகளைத் தாங்கி வரும் படைப்புக்களை காலச்சுவடு உயிர்மை போன்ற பத்திரிகைகள் பிரசுரிப்பது பணம் பண்ணுவதற்கான வித்தை என்றும் சிலர் கருத்து வெளியிட்டுள்ளார்கள். அது மட்டுமல்ல இவற்றை எல்லாம் விழுங்கி ஏப்பம் விடும் வகையில் ஆணின் வக்கிர மனத்தின் பிரதிபலிப்பாக "முலை இல்லாததாலும், இல்லாவிட்டால் சிறிதாக இருப்பதாலும்" என்று ஒருவார் கூற, 'அப்படியாயின் நாயுடு ஹோலில் போய் வாங்கிப் போட்டுக்கொள்ளுவது தானே" போன்ற வக்கிரச் சம்பாஷணைகள் "பெண்கள் விடுதலை பெற ஆண்மை அழிய வேண்டும்" என்ற பெரியாரின் வாத்தைகளை ஞாபத்திற்கு கொண்டு வருகின்றன. (ஓகஸ்ட் 12 - 1928 குடியரசு இதழ்;)

அன்று கணவனை இழந்தவளை உடன்கட்டை ஏறச்செய்ததும், தலை மழித்து வெள்ளைச் சீலை கட்டி இருட்டு அறைக்குள் இருத்தி வைத்ததும். பெண்களின் இந்த முலைகளும், யோனிகளும் ஆண்களுக்கு ஏற்படுத்திய பிரமையும் பீதியும் தான் என்பது என் கருத்து. பிரம்மராஜனின் பார்வையில் பெண்களின் உடல் உறுப்புக்கள் வெறும் வியர்வைச் சுரப்பிகள் தான் எனின் அவற்றை பெண்கள் தமது எழுத்துக்களின் குறிப்பிடுவதை எதற்காக சர்ச்சையாக்க வேண்டும். உடல் உறுப்புக்களை அகற்றி பால் பேதம் என்பதை இல்லாமல் ஆக்கிவிட்டால் இந்த வேறுபாடு எங்கிருந்து வரப்போகின்றது. பெண்ணியப் படைப்பாளிகள் பெண் என அடையாளமிடுதலை நிராகரிக்கின்றனர். பெண்களுக்கான இந்த உடல் உறுப்புக்களே அவர்களை சாதாரண உலகிலிருந்து விலக்கி வைக்கின்றன. ஆண் ஆதிக்க சமுதாயத்தில் ஆண்களும் பெண்களும் வாழப்பழகிக் கொண்டதாலும், அவர்கள் கற்பிதங்கள் வாசிப்புக்கள் ஆண்களை மையப் படுத்தியும் முதன்மைப் படுத்தியும், பெண்ணை இரண்டாம் தர ஆண்களின் சுகபோக இன்பத்திற்காய்ப் படைக்கப்பட்ட ஒரு போதை வஸ்தாக உருவகப்படுத்தி வந்ததாலும் எந்த வித முகச்சுளிப்புமின்றி பெண்ணினம் அதற்கு இசைந்து வாழ்வதாலும் நிறைவோடிருந்த ஆண்களிற்கு தற்போது சில பெண்ணிய எழுத்தாளர்கள் தமது உள்ளக் கிடக்கைகளை பொருமல்களை துணிவோடு எழுதில் தர தமது இலகுவான இயல்பான உலகு உடைந்து விடுமோ என்று அச்சம் வரத் தொடங்கி விட்டது.



இந்த அடக்கு முறைகளை உடைத்துக் கொண்டு பெண் வெளியே வருகின்றாள். தன் மேல் இந்த ஆண் ஆதிக்க உலகம் சுமத்தும் சுமைகளை அம்பலப்படுத்துகின்றாள் என்ற பீதி எல்லா ஆண்களுக்கும்.. ஏன் மேலத்தேய நாட்டில் வாழும் ஆண்கள் உட்பட எல்லோருக்குமே ஏற்படத் தொடங்கி விட்டது. மௌனித்திருந்தால் கட்டை உடைத்துக்கொண்டு பாய்ந்து விடுமோ என்ற அச்சத்தில் தொடர்ந்து கூசாமல் பெண்ணியம் பெண் மொழி என்பவற்றை தம்மால் முடிந்தவரை தமது சாமர்த்தியத்தைப் பயன்படுத்திக் கொச்சைப் படுத்தி மீண்டும் அவளை எங்காவது அடைத்து விடலாம் என்று முயன்று பார்க்கின்றார்கள். ஒரு பெண் கொச்சைப் படுத்தப்படும் போது கற்பைக் கேள்விக்குறியாக்கும் போது கூசிப்போவாள் என்று தப்பாகக் கணக்குப் போட்டு மீண்டும் மீண்டும் தம்மைத் தாமே கேவலப்படுத்துகின்றார்கள் இந்த அப்பாவி ஆண்கள். இது ஆண்கள் மட்டும் செய்யும் வேலையில்லை.. பல பத்தினிப் பெண்களும் இப்படியாகக் கோசம் போடுகின்றார்கள். திலகபாமா எனும் வாசகி 'காலச்சுவட்டிற்கு கண்டனம்" என்று பதிவுகள் இணையத்தளத்தில் கூப்பாடு போட்ட வண்ணம் தவறாமல் காலச்சுவட்டையும் உயிர்மையையும் படித்து வருகின்றார். இப்படியான எழுத்துக்களைத் தாங்கி வரும் சஞ்சிகைகளை தங்கள் மனைவி மகளை வாசிக்க அனுமதிப்பீர்களா என்று கேள்விக் கணையைத் தொடத்திருக்கும் திலகபாமாவிற்கு அவர் இவற்றைப் படிக்க அனுமதி வழங்கியது அவர் தந்தையா? இல்லைக் கணவனா? 'காலச்சுவடிற்குக் கண்டனம்' எழுதிய அதே இதழில் பிரேம் ரமேஷின் கவிதையும் அதே மாத உயிர்மையில் அதே பாணியிலான கவிதைகளும் வந்திருக்கிறன என்று அங்கலாய்க்கும்; திலகபாமாவின் அறியாமையை என்னென்பது. ஆணாதிகக் வாதிகளின் மிகப்பெரிய உச்சக்கட்ட வெற்றியே திலகபாமா போன்றவர்களின் தோற்றம்தான். சமுதாயத்தின் பார்வையில் கொச்சைப்பட புறக்கணிக்கப்படப் பயப்படும் பல கோழைப் பெண் எழுத்தாளர்களுள் திலகபாமாவும் ஒருவர் என்பது என் கணிப்பு.

பெண் ஒடுக்கு முறையை மையமாக வைத்து வெளிவரும் படைப்புக்களில் இப்படிப்பட்ட வாசகர்கள் எங்கே யோனி முலை என்ற வார்த்தைகள் வருகின்றன என்பதாய் மட்டும் பார்க்கும் தன்மைதான் இவர்களது விமர்சனங்களைப் பார்க்கும் போது தெரிகின்றன. பெண் உறுப்புக்களை விடுத்து படைப்புக்களின் ஆழம் அதற்குண்டான வலி இவர்களுக்கு ஏன் அதிர்ச்சியையோ நோவையோ தருவதில்லை.

பெண்ணின் உடலமைப்பும் உடல் அவையங்களும் தான் எமது கலாச்சாரம் பண்பாடு சமயம் போன்றவற்றைப் பேணிப்பாதுகாக்கின்றன என்று கூப்பாடு போட்டு அவளை ஒடுக்கி விடும் இந்த ஆண் ஆதிக்க உலகை உடைத்து தனது உள் உணர்வை வெளிக்கொணர பெண்ணிற்கு அவள் உடல் உறுப்புக்களைத் தவிர எது உரிய ஆயுதம் என்பதை சமூகச்சீரழிவில் அக்கறை கொண்ட இலக்கியவாதிகள் யாராவது கூறுங்கள் பார்க்கலாம்.

Tuesday, February 01, 2005

“கொறில்லா”


சோபாசக்தியின் கொறில்லா கையில் கிடைத்தும் வேறு பல நாவல்கள் கையிருப்பில் இருந்ததால் ஒரு வித அசட்டையுடன் “கொறில்லா”வைப் படிப்பதைப் பிற்போட்டுக் கொண்டு வந்தேன். இதற்குப் பல காரணங்கள் உள்ளன. அரசியல் பின்னணியைத் தளமாகக் கொண்டு வடிக்கபட்ட பல எழுத்துக்கள் என்னை அதிகம் கவராமல் போனதும், இல்லாவிடின் வேண்டுமென்றான தீவிரமும் பிடிவாதமும், எழுந்தமானமுமாகத் தாக்கும் தன்மையில் வரட்சி மிக்க படைப்புக்களை மட்டும் பல எம்மவர்கள் சிறந்த எழுத்தாக நினைத்துத் தொடர்ந்து படைத்து வருவதும். காரணங்களாக இருக்கலாம்.
இலக்கிய உலகில் எனக்கான சில இலக்கிய நண்பர்களின் தெரிவுகளின் படி, அவர்கள் குறிப்பிட்டுச் சொல்லும் (எப்போதுமே நான் பின்னால் நிற்பதாலும், என்னைக் கவர்ந்த எழுத்தாளர்களைத் தவிர்த்து) நாவல்களைப் படிப்பது என் வழக்கம் அந்த வகையில் ஒரு இலக்கியச் சந்திபின் போது “சோபாசக்தியின் கொறில்லாப் படித்தீர்களா? நன்றாக இருக்கிறது” என்ற அவர்களின் விமர்சனத்தைத் தாண்டியும் என்னுள் படிக்கவேண்டும் என்ற ஆர்வத்தைத் தூண்டாமல் வெறுமனே அடுக்கி வைக்கப்பட்ட ஒன்றாக இருந்தது.
“ம்” வந்து விட்டது. அது பற்றி விமர்சனங்களும் வரத் தொடங்கி விட்டது. அனேக ஈழத்து இலக்கியவாதிகளாலும் படிக்கப்பட்டு விமர்சனம் செய்யப்படும் ஒரு படைப்பாளின் படைப்பில் எனக்கு ஆர்வம் வராமல் போனதையும் மீறிப் படித்தேன்.
பிரான்ஸில் அகதி கோரிக்கை செய்யும் ஒரு இளைஞன் பற்றிய அறிமுகத்துடன் படைப்பு ஆரம்பமானதால் மீண்டும் கவர்ச்சியற்று, “பெண்டிங்கில்” கிடக்கும் வேறு ஒன்றை எடுக்கும் ஆர்வம் எனக்குள் எழுந்தும்;, மனதை ஒருங்கமைத்து சோபாசக்தியின் “கொறில்லா” படித்தே ஆகவேண்டும் என்று தொடர்ந்தும் படித்து முடித்தும் விட்டேன்.
தற்போது எனக்குத் தெரிந்த சிலருக்கு “கொறில்லா” படித்தீர்களா நன்றாக இருக்கிறது என்று சொல்லித் திரிகின்றேன்.

பிடித்ததற்கான சில காரணங்கள்:
மிகமிக எளிமையான எள்ளல் கூடிய கிராமிய (நான் பாவித்து தற்போது வழக்கில் இல்லாத சொற்பதங்கள்) எழுத்து நடை.
எனக்கு முற்று முழுவதும் பரீச்சயம் இல்லாத தளங்களை என்னால் அனுபவிக்கக் கூடியதாகவும் என்னை அந்தத் தளங்களுக்கு இழுத்துச் செல்லக் கூடிதுமாக கதை கூறி சொல்லியிருப்பதும்.
உண்மைச் சம்பவங்களை ஒரு குறிப்பேடு போல் ஆண்டு உண்மைப் பெயர்கள் இடம் போன்றவற்றால் கீழ் குறிப்பாக இணைத்தமையும்.
பிரான்ஸ் ஈழஎழுத்தாளர்கள் எனும் போது காரணமின்றி தூஷண வார்த்தைகளை எழுத்துக்குள் இணைக்கும் தன்மை இருப்பதாக எனக்குள் இருந்த எண்ணத்தை உடைத்தமையும்.
இக்காரணங்களாலும் சலிப்பின்றிப் படிக்கும் எழுத்தோட்டம், கையில் உளைவின்றி பிடித்துப் படிக்கக் கூடியதாக கச்சிதமாக நாவலில் அளவு இருந்தமையும் என்பேன்.

பின்குறிப்பு :
நடைபெற்ற சம்பவங்களாக கதை சொல்லி குறிப்பிட்டிருந்த சம்பவங்களில் சில கதை சொல்லி உண்மைக்குப் புறம்பாக மாற்றி அமைத்திருக்கின்றார் என்ற விமர்சனம் சிலரிடம் இருந்து வந்தது. இது மிகவும் கொடூரமாக ஒரு விமர்சனம். என்னைப் போன்று போராட்ட கால அனுபவங்கள் அதிகமில்லாத, பதிவுகளால் மட்டும் உண்மையையும் அனுபவங்களையும் பெற முடியும் என்ற நிலையில் இருப்போருக்கு உண்மைக்குப் புறம்பானதை பதிவாக்கிப் பொய்த் தகவல்களை ஒரு படைப்பாளி தன் படைப்பின் மூலம் நம்ப வைக்கிறார் என்றால் அதை விட துரோகம் ஒன்று இருக்க முடியாது.

சோபாசக்தி அதைத்தான் தனது படைப்புகள் மூலம் செய்கின்றார் என்பது உண்மை எனின் அதற்கான தகுந்த ஆதாரங்கள் இருக்குமெனின் இலக்கியவாதிகள் அவரின் படைப்புக்களை முற்றுமுழுதாக நிராகரிப்பதைத் தவிர வேறு ஒன்றும் செய்ய முடியாது.

கனவு மெய்படல் வேண்டும்

கனவு மெய்படல் வேண்டும்”


ஜானகி விஸ்வநாதனின் இரண்டாவது படம். தனது முதல் படமான “குட்டி”க்குப் பல விருதுகளை பெற்றவர் ஜானகி. கனவு மெய்படல் வேண்டும் திரைப்படத்திற்காக அதில் நடித்த ரம்யா கிறிஷ்ணனிற்கு விருது கிடைக்கும் என்று நம்புவதாக அவர் ஒரு பேட்டியில் குறிப்பிட்டிருக்கின்றார்.

“கனவு மெய்படல் வேண்டும்” திரைப்படம் “குட்டி“யைப் போல் சோகமான முடிவில்லாது, வழமை போல் சீர்கெட்டுப் போய் இருக்கும் ஒரு இந்தியக் கிராமத்தை படித்த முற்போக்குச் சிந்தனை உள்ள ஒருவன் சிரமப்பட்டு சீர் திருத்தி எடுப்பதாகத் பல இந்தியர்களின் கனவை படமாக்கி உள்ளார் ஜானகி விஸ்வநாதன். தேவதாசிகளால் வாழும் மங்களபுரம் எனும் கிராமதில் வசிக்கும் ரம்யா கிறிஷ்ணன், யாருக்கோ ஒரு மகனைப் பெற்று(மோகனசுந்தரம்), அவன் மேல் அன்பைப் பொழிந்து வளர்கின்றார். பட்டணம் சென்று சினிமாவில் சேர்ந்தால் இப்படி அடிமை வாழ்க்கை வாழாது பணம் சம்பாதித்து மகனின் கல்விக்கு உதவலாம் என்ற சாதாரண இந்தியக் கனவில் பட்டணம் செல்வதுடன் திரையில் காணாமல் போகின்றார் ரம்யா கிறிஷ்ணன்.

தாய் வருவார் வருவார் என்று காத்திருந்த மகன், தாயாரைக் காணது மனம் உடைந்து அவளைத் தேடி ரயில் ஏறி, டிக்கெட் இல்லாமல் பயணித்ததால் சீர்திருத்தப்பள்ளிக்கு அனுப்பப்பட்டு??? பின்னர் அவனுக்கு கல்வியில் இருந்த ஆர்வம், சீர்திருத்தப் பள்ளியின் வோடனின் துணையுடன் பள்ளி சென்று, முதல் மாணவனாய் ஒரு சிறந்த மருத்துவனாகி, தனது சக மாணவியான ஹேமாவைத் திருமணம் செய்வதென்று வேகமாகத் திரைக்கதை நகர்கின்றது.
மோகனசுந்தரத்தின் குடும்பப் பின்னணி தெரிந்திருந்தும் அவனது திறமை நற்குணம் போன்வற்றால் தமது மருமகனாக மனப்பூர்வமாக ஏற்றுக்கொள்கின்றார்கள் ஹேமாவின் பெற்றோர். ஹேமா கருத்தரிக்கின்றாள்.
எமது மனத்தில் மோகனசுந்தரம் தாயாரை மறந்து விட்டானா? தான் பிறந்து வளர்ந்த ஊரை மறந்து விட்டானா? என்ற கேள்வி எழும் வேளை, அவனது மருந்துவ நண்பன் மங்களபுரத்திற்கு இலவசச் சிகிச்சை செய்வதற்காக செல்வதை அறிந்து அவர்களுடன் தானும் புறப்படுகின்றான் மோகனசுந்தரம். கதையில் வரப்போகும் திருப்பம் எமக்குள்ளும் பரபரப்பைத் தருகின்றது.
மங்களபுரத்து பஸ் நிலையத்திலேயே அந்தக் கிராமம் இன்னும் மாறாமல் இயங்கி வருகின்து என்பதற்கு அடையாளமாக, பஸ் தரிப்பில் பல சிறுவர்கள் இளைஞர்கள் பெண்களின் புகைப்படங்களை வருவோருக்குக் காட்டிக் பேரம்பேசியவண்ணம் இருக்கின்றார்கள். தனது வீட்டையும் அங்கு வாழ்வபர்களையும் அடையாளம் காண்கின்றான் மோகனசுந்தரம். தாயாரைப் பற்றிய எந்தத் தகவலும் இன்றி ஊர் போய்ச் சேருகின்றான். இருந்தும் அவன் மனம் மங்களபுரத்தையே சுற்றிச் சுற்றி வருகின்றது.


ஹேமா அமெரிக்கா போய் அங்கு வாழலாம் என்று ஆசைப்பட, அதை மறுத்த மோகனசுந்தரம் சென்னையில் ஒரு மருத்துவ மனையில் தற்செயலாகத் தனது தாயாரைச் சந்திக்கின்றான். அவளைத் தன்னுடன் வைத்திருப்பதற்காக அழைத்து வந்த போது வீட்டில் பூகம்பம் வெடிக்கின்றது. கணவன் மேல் கோபம் கொண்ட ஹேமா அவனை விவாகரத்துச் செய்து விடுகின்றாள்.
அவன் தாயாரையும் அழைத்துக் கொண்டு மங்களபுரத்திற்கே சென்றுவிடுகின்றான். அதன் பின்னர் ஊரின் பல பெரிவர்களை எதிர்த்து நின்று மங்களபுரப் பெண்களுக்கு கைத்தொழில் செய்யக் கற்றுக்கொடுத்து அவர்களை தேவதாசி வாழ்க்கையில் இருந்து விடுபடச் செய்கின்றான்.
அவனது சேவையைப் பாராட்டி அவனுக்கு விருது கிடைக்கின்றது. அவனுக்கு விருது கிடைத்ததற்காக பத்திரிகையின் சார்பில் அவனைப் பேட்டி எடுக்க வந்தது தனது மகள் என்று அறிந்து நெகிழ்ந்து போகின்றான் மோகனரங்கம். மகள் தொடக்கத்தில் தந்தையைப் புரிந்து கொள்ளாமல், அவன் இறந்த பின்பு, தந்தையின் சேவையைத் தான் தொடரப்போவதாக அறிவிப்பதுடன் திரைப்படம் நிறைவிற்கு வருகிறது.
“தாழம்பூவே வாடா” என்ற அருமையான பாடலை ரம்யா கிறிஷ்ணன் பாடியுள்ளார்.
மங்களபுரத்தின் அழகும் தேவதாசிகளின் அழகையும் கமெரா கச்சிதமாகப் படம் பிடித்திருக்கிறது.
இந்தியாவில் இன்னும் எத்தனை கிராமங்களில் பெண்களைப் பற்றிய கதைகள் அமிழ்ந்து போய்க் கிடக்கின்றன என்று என் மனம் அடித்துக் கொள்கிறது.