வாழ்வு –
பொன்னா பாட்டியின் நினைவலைகளின் போராட்டத்தில் தன் குடும்பம் ஏதோ சாபத்திற்குள்ளானதால் தொடர்ந்து துர்மரணங்கள் இடம்பெற்று வருகின்றன என்பதை உறுதிப்படுத்துவது போல் தொடர்ந்து வந்த மரணங்கள் ஏற்றுக் கொள்ள முடியாமல் இருக்கின்றது.
பொன்னாவின் திருமணம். அவள் கணவன் மேல் கொண்ட வேட்கை. அவன் இறப்பிற்குப் பிறகான பொன்னாவின் வாழ்க்கை முறை. எம் மக்கள் எதனைக் கலாச்சாரம் என்று கட்டிப்பிடித்தபடி இருக்கின்றார்கள். கலாச்சாரம் என்றால் என்ன? இல்லாத ஒன்றை இருப்பதாய் எத்தனை வருடங்களுக்குப் பாசாங்கு பண்ண முடியும். ஆனால் இந்தப் பாசாங்கு மாற்றமின்றித் தொடரப்போகின்றது. (கதை சொல்லியை ஒருவேளை கடியக் கூடும் கலாச்சாரம் பேணும் மக்கள்)
பொன்னாவின் மகள் ஆண்டாள் பால்யதிருமணத்தின் பின்னர் சில நாட்களில் கணவனை இழந்தவள். மறுமணம் என்பது பெற்றோரால் விரும்பப்படினும் ஒருவரின் வாழ்க்கையை தீர்மானிப்பது அந்த ஒருவரோ இல்லைப் பெற்றோரோ என்று இல்லாமல் யாரோ ஒருத்தரின் மறுப்பினால் ஆண்டாள் மறுமணம் நிராகரிக்கப்படுகின்றது. இருந்தும் கணவனை இழந்த பெண்கள் தமது பாலியல் தேவைகளுக்கு வேறு ஒருத்தனைத் துணிவுடன் தேடுவது (கள்ளமாகவேனும்) கதை சொல்லியின் துணிவினைக் காட்டுகின்றது. ஆண்டாளைக் கண்காணிக்கும் பொன்னாவிற்குத் தன் பால்யல் தேவை முக்கியமாகப்படுகின்றது. மகள் ருசி அறியாதவள் என்ற அவளின் தன்நலம் பொன்னா மேல் எமக்கிருக்கும் (சொந்தங்களுக்கு) “அந்த” மரியாதையை உடைத்து விடுகின்றது. பின்னர் தனக்கும் மகளுக்குமாக மருத்துவச்சியிடம் மருந்து வாங்கி உண்ணும் போது இன்றும் இந்த நூற்றாண்டிலும் எத்தனை பெண்கள் இப்படியாக வாழ்கின்றார்கள் என்ற ஆதங்கமே மேலோங்குகின்றது.
முடிவாக நம்பி இறப்பதற்கு முன் கண்ணனுக்கு எழுதிய கடிதம் அவனுக்கு வாழ்வு பற்றிச் சிந்திக்கக் கிடைத்த அந்தக் கணங்கள். (உயிர் எல்லோருக்கும் வெல்லம்)
“இதுவரை நான் வாழ்ந்த வாழ்வை நினைத்துப் பார்க்கின்றேன். நீயோ மற்றவர்களோ நான் நல்ல பலனுள்ள வாழ்க்கைதான் வாழ்ந்திருக்கின்றேன் என்று நினைக்கலாம். நம்மை நிறைபோடுவது எப்போதும் மற்றவர்கள்தானே. ஆனால் நான் வாழ்ந்த வாழ்வு எனக்கோ ரோசாவுக்கோ தனிப்பட்ட முறையில் ஒரு பயனையும் இதுவரை தரவில்லை என்று இப்போது தோன்றுகின்றது. தன்னைத் தானே வருத்திக்கொள்ளும் இந்த வாழக்கையால் என்ன பயன்? ஒரு வடிகட்டின முட்டாளின் நினைவாற்றலைக் கொண்டிருக்கும் மக்களுக்காக உழைப்பாதால் என்ன பயன்? நிறைவேறாத கொள்கைகளைக் கட்டிக் காப்பதில் என்ன கிடைக்கப்போகின்றது. தாத்தா சொன்னார் கொழுப்பது வெற்றிகளால்தான் என்று. தோல்விகள் அதைச் சதையே இல்லாத எலும்புக்கூடு ஆக்கிவிடும். மிகச் சிலர்தான் வெற்றிகள் பின்னால் வரலாம் என்று நம்பி தோல்விகளோடு வாழும் வரத்தைப் பெற்றிருக்கின்றார்கள். நானும் அந்தச் சிலரின் ஒருத்தன் என்ற மாயை இப்போது மறைந்து விட்டது.”
சமூகத்திற்கு நல்லவனாக வாழ்ந்து பாமரமக்களுக்காக மனைவி ரோசாவுடன் சேர்ந்து இலவச வைத்தியசேவை செய்து கண்ணனுக்கும் வாசகர்களுக்கும் உதாரண புருஷனா வந்து போன நம்பி “கொம்யூனிஸக்காறன்” என்று கொல்லப்படுகின்றான். மீண்டும் பொன்னாவின் ஒரு வாரிசுக்கு துர்மரணம் ஏற்படுகின்றது.
எல்லாவற்றையும் துறந்து விட்டுப் பெரியவர்களின் பேச்சைக் கேட்டு பஞ்ச சமஸ்காரத்தில் (பூசையில்) கலந்து கொண்டான். கொம்யூனிஸ்டுகள் எப்படி? (எல்லோரையும் போலவே கண்ணனுக்கும் உயிர் என்றால் வெல்லம்)
நாவல் பல காத்திரமாக ஆண்களையும் பெண்களையும் கொண்டு செல்கின்றது. இருந்தும் மனதில் நிற்பவர் சிலரே.
“தலித்” களைப் பற்றிய படைப்பல்ல என்ற “ஒரு” காரணத்தால் எமது “முற்போக்குவாதி”களால் இப்படைப்பு நிராகரிக்கவும் படலாம்.
பி.ஏ கிறிஷ்ணனின் முதல் படைப்பு இது.