Saturday, November 15, 2008

காஞ்சிவுரம்

இயக்குனர் பிரியதர்சனின் 9வருட உழைப்பில் உருவாகியிருக்கும் கலைத் திரைப்படமான “காஞ்சிவுரம்” அவரது கனவுத் திரைப்படம் என்றும் அவர் கூறியுள்ளார். இத்;திரைப்படம் 33வது ரொறொன்டோ சர்வதேச திரைப்பட விழாவில் “விசா” திரையீட்டுக்காகத் தெரிவு செய்யப்பட்டிருந்தது. முன்பு பல தமிழ் திரைப்படங்கள் ரொறொன்டோ சர்வதேச திரைப்படவிழாவிற்காகத் தெரிவு செய்யப்பட்டிருந்தாலும் பிரியதர்சனின் “காஞ்சிவுரம்”; முதல் முறையாக “விசா” திரையீட்டுக்காத் தெரிவு செய்யப்பட்டு முக்கியத்துவம் பெறுகின்றது. இந்நிகழ்விற்காக இயக்குனர் பிரியதர்சன், படத்தின் கதாநாயகன் பிரகாஷ் ராஜ், மகளாக நடித்த ஷாமு, பிரபல கலைப்பட இயக்குனரும் காஞ்சிவுரம் திரைப்பட தயாரிப்பு உதவியாளருமான சபு சிரில் போன்றோர் திரைப்பட வெளியீட்டில் கலந்து கொண்டார்கள். திரைப்பட வெளியீட்டைத் தொடர்ந்து கனேடிய தமிழ் காங்கிரஸ் திரைப்படக் கலைஞர்களை கௌரவம் செய்த நிகழ்வும் இடம்பெற்றது. இந்நிகழ்விற்கு கனேடிய தமிழ் காங்கிரஸ் உறுப்பினர்கள், ரிவிஐ தொலைக்காட்சி தொழிலாளர்கள், தமிழ் திரைப்பட ஆவலர்கள், பலரும் கலந்து கொண்டார்கள்.



காஞ்சிபுரம் நகரத்தை மையமாகக் கொண்டு 1940களில் காஞ்சிபுரம் பட்டை நெசவு செய்யும் நெசவாளிகளின் வாழ்வை திரைப்படமாக்கியிருக்கின்றார் இயக்குனர். வளர்ந்து வரும் நாடுகளின் முக்கிய பிரச்சனையான தொழிலாளி வர்க்க சுரண்டலை, காஞ்சிப் பட்டை நெசவு செய்யும் வெங்கடம் தனது மகளைத் திருமணத்தின் போது காஞ்சிப்பட்டைச் சீதணமாக் கொடுத்து அனுப்ப வேண்டும் என்ற பகல் கனவு மூலம் வெளிப்படுத்தியிருக்கின்றார். பட்டைக் கண்ணால் பார்க்கவும், தொட்டு உணரவும், நெசவு செய்யவும் மட்டுமே காஞ்சிபுரத்து நெசவாளிகள் அனுமதிக்கபட்டிருகின்றார்கள். தாம் நெசவு செய்யும் பட்டை வாங்கி உடுத்திப்பார்க்க அவர்கள் பொருளாதார நிலை மட்டுமல்ல, வர்க்கப்பாகுபாடும் அவர்களுக்கு இடம்கொடுக்கப் போவதில்லை. உழைக்கும் வர்க்கத்திற்கு ஒரு விடிவு வேண்டுமெனின் அங்கே ஒரு போராட்டம் நிச்சயம் தேவை. நெசவாளிகள் பற்றி எழுதுவதற்கு வந்ததாகக் கூறிக்கொண்டு அந்த ஊருக்கும் நுழையும் எழுத்தாளக் கொம்யூனிச வாதியின் உரையில் கவரபட்ட வெங்கடம், முதலாளியை எதிர்த்து வேலை நிறுத்தம் செய்யும் துணிவோடு செயல் படுகின்றான். மிகக் குறுகிய காலத்தில் ஒரு மனிதன் கொம்யூனிசக் கொள்கையில் கவரப்பட்டு வேலை நிறுத்தம் செய்யும் நிலைக்குத் தள்ளப்படலாம், ஆனால் அவனை ஒரு முழுமையான கொம்யூனிச வாதியாக எப்படி இயக்குனர் கணிக்க முனைந்தார். அதே வேளை நேர்மையானவனாகக் காட்டப்பட்ட வெங்கடத்தின் நண்பன் கூட, வெங்கடம் திருடன் என்று தெரிந்த பின்னர் தனது மகனின் திருமணத்தை நிறுத்தி விடுகின்றான். காலணி ஆட்சியில் கொம்யூனிசக் கொள்ளை தடைச் சட்டத்தின் கீழ் கொல்லப்படுகின்றார் உண்மையான கொம்யூனிச வாதியான எழுத்தாளர். இங்கே இயக்குனர் பிரியதர்சனின் சுலோகமான ““Communists who preach a lot and practice little” by Priyadarshan.


இந்துமதத்தின் படி, பட்டு வாழ்வில் இரு முக்கிய நிகழ்வுகளில் பங்கெடுக்கின்றது. திருமணத்தின் போது கூறைப் பட்டாக தாம்பத்திய உறவைத் தொடக்கி வைக்கும் பட்டு, மரணத்தின் போது அதன் தூய்மையால் மனித ஆவியை சொர்க்கத்திற்கும் அழைத்துச் செல்கின்றது. தன் வாழ்நாள் முழுவதையும் பட்டுச் சேலையைத் திறம்பட நெய்து பெயர் பெற்ற தனது தந்தை இறந்த போது உடலை மூடுவதற்கு ஒரு சிறு பட்டுக்கு வக்கில்லாமல் போய் விட்டோமே என்று வருந்தும் வெங்கடம் தன் வாழ்வில் பட்டை மகளுக்கு சீதனமாக்கி அனுபவிக்க வேண்டும் என்ற வேண்டாத ஆசை அவன் வாழ்வை அழிப்பதுதான் காஞ்சிவுரத்தின் சுருக்கமாக திரைக்கதை.

பல ஜனரஞ்சக தமிழ் மலையாளத் திரைப்படங்களை இயக்கியிருக்கும் பிரியதர்சன் தனது முதல் கலைத் திரைப்படத்தை தரமானதாக வழங்கியிருக்கின்றாரா? வர்த்தகத்தை மட்டும் மனதில் கொண்டு எடுக்கப்படும் ஜனரஞ்சக தமிழ் திரைப்படங்களுடன் காஞ்சிவுரத்தை ஒப்பிட்டால் மிகவும் தரமானது, வித்தியாசமானது என்று பார்வையாளர்கள் கூறலாம். ஆனால் ரொறொன்டோ சர்வதேச திரைப்படவிழாவில் கலந்து கொண்டு பல வேற்று மொழித் திரைப்படங்களைப் பார்வையிட்டவள் என்ற முறையில் காஞ்சிவுரம் திரைப்படம் ஒரு திரைப்பட விழாவிற்கு எதையெல்லாம் கொடுத்தால் தெரிவு செய்வார்கள் என்பதை மனதில் கொண்டு வலிந்துசெய்யப்பட்ட திரைப்படமாகவே காணப்படுகின்றது. சென்ரிமென்டலாகக் காலணித்துவக் காலம், மனைவி, மகள் என்று கதைக்கு வேண்டாத ஒட்டாத இழப்புக்கள் இவைதான் காஞ்சிவுரத்தில் விஞ்சி நிற்கின்றது.
ஒரு நெசவாளி தான் நெய்யும் பட்டில் ஒன்றை எப்படியாவது வாங்கிவிட வேண்டும் என்று ஏங்குகின்றான். சென்ரிமென்ரையெல்லாம் தூக்கிப் போட்டு விட்டு, இந்த ஒரு கருபோதும் தரமான திரைப்படத்தை வழங்க. இவனுக்குப் பட்டுக் கிடைத்து விடுமா என்று பார்வையாளர்கள் மனம் நெசவாளியோடு சேர்ந்து பதைக்க வேண்டும். பார்வையாளர்களின் மனதில் அந்த ஏக்கத்தைத் திரைப்படம் ஏற்படுத்தாத வரையில் அத்திரைப்படம் எங்கோ தவறி விட்டதென்றே கூற வேண்டும்.
சென்ரிமென்ட் மனதைப் பிளிந்த காலம் எப்போதோ மலையேறிப் போய் விட்டது. இப்போதெல்லாம் எந்த கொம்பிரமைஸ்சும் இல்லாமல், மிக யதார்த்தமாக வாழ்வைக் கலைப்படமாக்குகின்றார்கள், யப்பான், இந்தோனேசியா, ஈரான், மற்றும் பல ஐரோப்பிய நாடுகள்.

Tuesday, August 19, 2008

27வது பெண்கள் சந்திப்பும் கனேடிய இலக்கியச் சந்திப்பும்.

தனிமனித சுதந்திரத்தின் அனைத்து அடையாளங்களிலிருந்தும் பெண் ஒதுக்கி வைக்கப்பட்டிருக்கின்றாள். ஆண் முதன்மையானவன் முழுமையானவன், உலகத்தின் தலைவன். அவன் உலகை நிறைவிற்குக் கொண்டு செல்லும் பெண் என்பவள் அவன் அக புற தேவைகளை உணர்ந்து நிறைவேற்றும் ஒரு துணை, அவன்; உபயோகப்படுத்தும் ஒரு பொருள். பெண்ணும் தன் இச்சார் நிலையை ஏகோபித்த மனதோடு ஏற்றுச் சந்தோஷித்திருக்கின்றாள். பெண் ஒரு துணைப்பொருள்



பெண்ணியம் பெண்ணியவாதிகள் பெண்சுதந்திரம் என்றால் என்ன? பெண்களுக்கு என்ன பிரச்சனை இருக்கின்றது? எதற்காக பெண்கள் சந்திப்பு?

பெண்ணியவாதிகள் தங்கள் பெண்மைத் தன்மையை இழந்து ஆண்கள் போல் மாற முயல்கின்றார்கள் என்பது பலரின் தாக்குதல். பெண்கள் இருப்பே கேள்விக்குரியதாகியிருக்கிறது என்கின்றார்கள். சில பெண்கள் பெண்ணின் பலவீனத்தை மறுக்கும் அதே தருணத்தில் ஓர் ஆண் தொண்டனுக்கு நிகராகக் தன்னை அவள் கற்பிதம் செய்துகொள்வதும் உண்டு. இதற்குக் காரணம் ‘பெண்மை’ கருத்தியல் அவர்களுக்கு ஏற்படுத்திய மனவுளைச்சல். திரைகளிலும், கதைகளிலும் சித்தரிக்கப்படும் பண்பாட்டுப் பெண் போல் தானாகி விடவேண்டுமோ என்ற அச்சத்தில் தன்னை ஒரு ஆண் போல் வரிந்து கொள்கின்றாள்.

ஒரு பெண் தான் பெண் என்பதை இழிவாகவும் ஆணை பிரதானன், மேலானவன் ஆக ஏற்றுக்கொள்ளும் பட்சத்தில் அவள் தன்னை ஓர் ஆணாக உருவகிக்க முயலலாம். எனவே அனைத்துப் பெண்ணியவாதிகளின் சிந்தனையிலிருந்து நான் பேசிவிட முடியாது. ஆண் குறி என்று ஒன்று பிறப்பில் கிடைத்து விடுவதனால் அவன் பெண்ணிலிருந்து அனைத்து தகுதிகளாலும் மேம்பட்டவன் என்று நினைக்கும் பெண்களும் இருக்கத்தான் செய்கின்றார்கள். அதே வேளை என்னை ஒரு கருப்பையாகவோ சூலகமாகவோ மட்டுமே ஆண் பார்க்கின்றான் என்று அலறும் பெண்களின் கருத்தோடும் ஒத்துப் போகமுடியாமல் இருக்கின்றது. எந்த ஒரு ஆணாலும் முடியாத பிரத்தியேகமான ஒரு உயிரைக் கருப்பைக்குள் தாங்கும் வல்லமை பெண்ணிற்கு இருக்கின்றது. எமது சமூகப் பார்வையில் பெண் உடல் ஆண்களுக்குச் சொந்தமானது, அவர்களின் சந்ததி விருத்திக்காக உருவாக்கப்பட்டது பெண் உடல் கோட்பாட்டிலிருந்து பெண்கள் தம்மை விடுவித்துக் கொண்டு தமது உடலைக் கொண்டாடும் பட்சத்தில் கருப்பையும் சூலகமும் அவளைச் சிறை வைக்காது.

புலம்பெயர் பெண்களை நோக்கின் வேலைக்குச் செல்லும் பெண்கள் அதிக சுதந்திரம் பெற்றவர்களாகக் கணிக்கப்படுக்கின்றார்கள். பொருளாதார சுதந்திரம் அடையினும் இவர்களது உடல் உழைப்பு அலுவலக வீட்டு வேலை என இரட்டிப்பாக்கப் படுகின்றது. உயர் பதவியற்ற அலுவலக வேலை செய்யும் பெண்களிடம் அவர்கள் திறனை விட அகத்தோற்றமே முக்கியப்படுத்தப்படுகின்றது. இது அவர்கள் செலவை இரட்டிப்பாக்க, அவள் மீண்டும் செலவை சமநிலைப்படுத்த ஒரு ஆணின் துணையை வேண்டிநிற்கின்றாள்.

குடும்பம் என்ற கட்டமைப்பு ஆண்களைச் சௌகர்யப்படுத்துவதாகவும், பெண்ணை அடிமைப்படுத்துவதாகவுமே அமைந்திருக்கின்றது. இந்நிலை தற்போதைய இளம் சமுதாயத்தை சிந்திக்க வைப்பதனால் திருமணத்தைக் கண்டு அவர்கள் அஞ்சுகின்றார்கள்

தமிழ்திரை நிகழ்த்திக் காட்டும் பெண்மைச் செயல்பாட்டைப் பூரணப்படுத்துவதில் இன்னும் சில பெண்கள் திருப்தி அடைகின்றார்கள். சின்னத்திரை புகலிடத்துப் பெண்கள் அனைவரின் வாழ்விடங்களையும் கொள்ளை கொண்டுவிட்டது. புரிதல்களுக்கப்பாற்பட்ட புதிய கலாச்சாரத்திற்குள் எம் அடுத்த சந்ததியர் மூழ்கிப் போகின்றனர்.

பெண்ணியவாதி சிமோன்தி பூவா கூறுகின்றார் “தனியொருவன் அல்லது தனியொருத்தி, காலங் காலமாய் தொடரும் பெண்ணின் பிற்போக்குத் தனத்தையும் அடையாளத்தையும் மறுப்பதென்பது நிகழ் காலத்தில் இவர்கள் இருப்பை மறுப்பதாகாது. அன்றியும் இம்மறுப்பு, சம்பந்தப்பட்டவர்களின் விடுதலைக்கு உதவாததோடு, உண்மையைக் கண்டு ஒளியும் தன்மையது.
மானுடமென்பது, பெண்ணினமும் சேர்ந்ததுதானென்பது, அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட உண்மை இன்றைக்கும், கடந்தகாலங்களை போலவே, மனிதரெண்ணிக்கையில் ஏறத்தாழ சமபாதியாக பெண்ணினமிருக்கிறது. இந்த நிலையில், ‘பெண்மை அழிகின்றது என்று சொல்லிக் கொண்டு திரிகிறார்கள்” பெண்களைப் பார்த்து பெண்களாய் இருங்கள் என்கின்றார்கள். பெண்களாய் இருத்தல் என்றால்? பால் அடிப்படையிலும் பெண்ணை அடையாளப்படுத்த முடியாவி;ட்டால் பெண் என்பவள்தான் யார்? ஆணுக்கு ஒரு துணைப்பொருள்

பெண்களுக்கான வெளி, பெண்ணிய வெளிப்பாடு என்பன அண்மைக் காலங்களில்தான் உயிர்போடு செயல்படத் தொடங்கியிருக்கின்றன. இருந்தும் தற்போது
பெண்ணியம் எனும் பதம் அனேகரால் ஓர் இழிவு சொல்லாகவே பார்க்கப்படுகின்றது. பெண்ணியவாதிகள் என்ற சொல்லாடலைக் கேட்டாலே சினம் கொள்ளும் இவர்கள் பெண்களுக்கு என்ன பிரச்சனை இருக்கின்றது என்கின்றார்கள். பெண்கள் எல்லோரும் சந்தோஷமாகவும் ஒழுங்காகவும்தான் இருக்கின்றார்கள் நீங்கள் உதை எல்லாம் விட்டு விட்டு உருப்படியாக எதையாவது பேசுங்கள் என்று எள்ளலாகவும் கூறுகின்றார்கள்

தம்மை முற்போக்குவாதிகள் என்று அடையாளம் காட்டிக் கொள்ளும் ஆண்கள், பெண்ணியவாதிகள் எனின் அவர்களை சமூக சேவகியாகக் கணித்து, பாதிக்கப்படும் பெண்களுக்கு இவர்கள் என்ன செய்தார்கள் என்ற கேள்விக் கணையை வேறு தொடுக்கின்றார்கள். ஒரு சூப்ப வுமன் போல் பறந்து பறந்து பிரச்சனைக்குள்ளாகும் பெண்களின் வீடுகளின் கதவுகளைத் தட்டி அவர்களைக் காக்கும் கடமையில் பெண்ணியவாதிகள் இயங்கவேண்டும் என்பது இவர்களின் கணிப்பு.
தற்போது அனேகரால் கண்டுபிடிக்கப்பட்ட இன்னொரு புதிய சொல் போலிப் பெண்ணியம் - போலிப்பெண்ணியம் என்ற ஒன்று இருப்பின் கலப்படமற்ற சுத்த பெண்ணியம் என்று ஒன்றும் இருக்க வேண்டுமல்லவா? அதற்கான வரைவிலக்கணத்;தை யாரால் வகுக்க முடியும்?

குடும்பப்பெண் பத்தினிப்பெண் என்று வரைவிலக்கணம் கொடுத்து பெண்களின் ஒவ்வொரு அசைவுகளையும் கண்காணித்து வந்தவர்கள், தற்போதும் பெண்ணியவாதிகள் மேல் ஒரு வரையறையை வகுத்து மீண்டும் அதே கண்காணிப்பைத்தான் மேற்கொள்கின்றார்கள். எனவே எப்போதுமே ஒரு வகுக்கப்பட்ட வரையறைக்குள்தான் பெண்கள் வாழவேண்டும் என்பது இவர்களின் கணிப்பு.

இன்றைய முற்போக்குவாதிகள் சமூகத்திலும் பெண்கள் தனது ‘பெண்மை’யை நிரூபிக்க வேண்டிய நிர்ப்பந்தத்தில்தான் வாழ்ந்து வருகின்றார்கள். இவர்கள் அனேகரின் பார்வைகள் கற்பெனும் பதத்திலிருந்துதான் ஆரம்பிக்கின்றது. முற்போக்கு ஆண்களெனில் தனது மனைவியின் பத்தினித்தன்னையில் மிகவும் பெருமை கொள்கின்றார்கள். அவர் மனைவியரோ தம்மைப் பத்தினியாக பிரகடனப்படுத்துவதில் அனேக நேரத்தை செலவிடுகின்றார்கள். உலக சமூக நோக்கில் முக்கியமாக (ஆசிய- புலம்பெயர்) தமிழ் பெண்களின் நிலை இவ்வாறாகவே இன்றும் இருக்கின்றது.

இந்த நிலையில் 27வது பெண்கள் சந்திப்பும், கனேடிய இலக்கியச் சந்திப்பும் ரொறொன்டோவில் மிக ஆரோக்கியமாக நடந்து முடிந்திருக்கின்றன.
இந்நிகழ்வுகளுக்காக இலங்கை இந்தியா அமெரிக்கா ஐரோப்பா ஆகிய நாடுகளிலிருந்து பல பெண்ணிய, தலித்திய, இலக்கியவாதிகள், கனேடிய குறிப்பா ரொறொண்டோ நகரிலிருக்கும் பெண்களுடன் இணைந்து தமது கட்டுரையை வழங்கியிருக்கின்றார்கள். 90ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட பெண்கள் சந்திப்பின் 27வது நிகழ்வு 2008ம் ஆண்டு கனடாவில் ரொறொன்டோவில் இடம்பெற்றுள்ளது.

27வது பெண்கள் சந்திப்பிலும், கனேடிய இலக்கியச் சந்திப்பிலும் கலந்து கொண்டு கட்டுரைகளைச் சமர்ப்பித்த அனைத்து ஆய்வாளர்களுக்கும், நிகழ்வுகள் சிறப்பாக இடம்பெற உதவிய அனைத்து நண்பர்களுக்கும் பெண்கள் சந்திப்பு, கனேடிய இலக்கியச் சந்திப்பு சார்பில் நன்றியைக் கூறிக் கொள்ள விரும்புகின்றோம்

எந்த அரசியல் சார்பும் அற்ற நிலையில் நடுநிலையாக இயங்குவதே பெண்கள் சந்திப்பின் முக்கிய நோக்கமாகும். இருந்தும் ஒரு அமைப்போ, அரசோ, இயக்கமோ பெண்கள் மீது வன்முறை நடாத்துகின்றது எனும் பட்சத்தில் ஆதாரங்களுடன் ஒரு ஆய்வாளர் கட்டுரை சமர்பித்தால் அதை ஏற்றுக்கொள்வதுதான் நடுநிலையானது. அந்த வகையில் 27வது பெண்கள் சந்திப்பும், கனேடிய இலக்கியச் சந்தப்பும் நடுநிலையாகவே நடந்து முடிந்தன.

உலகெங்கிலுமிருந்து பெண்ணியவாதிகள் கலந்து கொண்டு தமது ஆக்கமான ஆய்வுக்கட்டுரைகளை வழங்கி இந்நிகழ்வைச் சிறப்பித்ததுடன், நிகழ்விற்கான அனைத்து உதவிகளையும் முன்னின்று நிறைவேற்றினார்கள்.

பெண்கள் சந்திப்பு மிகவும் காத்திரமானதாகவும், ஆரோக்கியமானதாகவும் வளர்ந்து வருகின்றது. தொடர்ந்து வரும் வருடங்களில் புதிய நாடுகளுக்கும் பெண்கள் சந்திப்பைக் கொண்டு செல்வதன் மூலம் உலகெங்கிலும் பெண்களுக்கெதிரா வன்முறைக்காகக் குரல் கொடுத்து பெண்களின் மத்தியில் விழிப்புணர்வைக் கொண்டு வரமுடியும். இதுவே பெண்கள் சந்திப்பின் முக்கிய நோக்கமுமாகும்.

பல அரசியல் மோதல்களுக்கிடையிலேயும், உதவிகள் அற்ற நிலையிலும்தான் 27வது பெண்கள் சந்திப்பை எடுத்து நடத்த ஒத்துக்கொண்டிருந்தோம். இருந்தும் தாமாகவே முன்வந்து உதவிய அனைத்து நண்பர்களுக்கு நாம் மிகவும் கடமைப்பட்டிருக்கின்றோம் என்பதை மீண்டும் சொல்லிக்கொள்ள விரும்புகின்றோம்.

அந்த வகையில் - நிகழ்சியைச் திறம்பட தொகுத்துத் தந்த தோடு மேலும் பல உதவிகளைச் செய்த ஜானகி பாலகிருஷ்ணன், அனைவருக்கும் தங்க இடம்கொடுத்து உதவிய ஜெபா, கற்சுறா குடும்பத்தினர், சக்கரவர்த்தி ராதிகா குடும்பத்தினர், ரவி குடும்பத்தினர், தன் வேலைகளுக்கு மத்தியிலும் வரைகலை செய்து தந்து உதவிய டிஜி மீடியா கருணா, அழைப்புக் கடிதத்தைத் தயாரித்துத் தந்த அ.முத்துலிங்கம், வீடியோ படப்பிடிப்பு செய்த ரூபன், பல உதவிகளையும் செய்த இளங்கோ, பவானி, அபிநயா, தர்சினி வரப்பிரகாசம், நீரஜா ரமணி ஆகியோருக்கும், விளம்பரம் செய்து உதவிய ரீ.வீ.ஐ தொலைக்காட்சி, சி.ரி.ஆர் வானொலி, பெண்கள் சந்திப்பில் கலந்து கொள்வதற்காக கனடா வந்ததோடு மற்றுமல்லாமல் பல உதவிகளைளும் செய்த அனைத்துலகப் பெண்களுக்கும், நாடகங்களுக்காக ஒளி அமைப்பைத் திறம்பட வழங்கிய ராகவன் அவர்களுக்கும் 27வது பெண்கள் சந்திப்பு சார்பில் நன்றிகளைக் கூறிக்கொள்கின்றோம்;.

இனி வரும் வருடங்களிலும் இதே போன்று சிறப்புடன் சர்வதேச ரீதியில் பெண்கள் இணைந்து கொண்டு மீண்டும் கனடாவில் ஒற்றுமையாக ஒரு பெண்கள் சந்திப்பை நாடத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்கின்றோம்.

நன்றிகளுடன்

சுமதி ரூபன்
வைகறை

Friday, August 08, 2008

பெண்கள் சந்திப்பும் சில பேய்க் கதைகளும் - எதிர்வாதம்

தமிழ்நதியின் குமுறலான கட்டுரையைப் படித்த போது அதிர்வாகவே இருந்தது. பெண்கள் சந்திப்பின் போது ஒன்பது கட்டுரைகள் பெண்களால் படிக்கப்பட்டது. கனேடிய இலக்கியச் சந்திப்பன்று ஆறு கட்டுரைகள் என்று நினைக்கின்றேன் பெண்களால் வழங்கப்பட்டது. அதில் இரண்டாம் நாள் நிர்மலாவின் கட்டுரை தேசியமும் பெண்ணியமும் என்ற தலைப்பின் விடுதலைப்புலிகள் பெண்கள் மேல் பிரயோகிக்கும் அனர்த்தங்கள் பற்றிக் குறிக்கப்பட்டிருந்தன. தமிழ்நதியின் பதிவு ஏதோ ஒட்டு மொத்தமாக நிகழ்விலும் புலி எதிர்ப்புக் கட்டுரைகள் வாசிக்கப்பட்டது போல் ஒரு பிரமையை ஏற்படுத்துகின்றது.

அடுத்து இந்தியாவிலிருந்து வந்திருந்த பெண்ணியவாதி மாலதிமைத்ரி, இலங்கையிலிருந்து வந்திருந்த நிவேதா ஆகியோரைத் தவிர நான் பிரத்தியேகமாக எந்த ஒருவருக்கும் அழைப்பு விடவில்லை. பெண்கள் சந்திப்பில் வருடாவருடம் கலந்து கொள்ளும் பெண்கள் தாம் வருவதாக அறிவித்திருந்தார்கள். அவர்களுள் நிர்மலாவும் ஒருவர். வருபவர்கள் ஒவ்வொருவரிடமும் கட்டுரைகள் வழங்கும் படி கேட்டிருந்தேன் அந்த வகையில் தங்களையும் நான் கேட்டிருந்தேன். நிர்மலா ஒத்துக் கொண்டு தரமான கட்டுரைகளை வழங்கினார். இதைப் புரிந்து கொள்ளாமல் வீணாக “தெரிந்து” “தேர்ந்து” என்று தாங்கள் போல்ட் பண்ணி எழுத வேண்டிய அவசியமில்லை. பல பேச்சாளர்களின் பின்னர் கேள்விகள் அதிகம் வரவில்லை. நிர்மலாவை நோக்கிப் பல கேள்விகள் வந்தன அதனால் அவருக்கு அதிக நேரம் கொடுத்தோம். அது தவறென்று நான் நினைக்கவில்லை.


மேலும் விடுதலைப்புலி எதிர்பாளர்களினால் நடாத்தப்பட்டது என்ற ஒரு தவறான கருத்தும் இங்கே வைக்கப்பட்டு கருத்துக் கூறுபவர்களும் அதே பாதையில் நகர்ந்து செல்கின்றார்கள். விடுதலைப்புலிகளின் சார்பானர்வள் ஒருபோதும் நடுநிலமையாளர்களை ஏனோ ஏற்றுக்கொள்வதில்லை. விடுதலைப்புலி சார்பு, இல்லையேல் அரசாங்கத்தின் சார்பு என்றே அவர்கள் கணித்துக்கொள்கின்றார்கள். மனித உரிமை மீறல்களுக்குக் குரல் கொடுப்பவர்கள் அரசாங்கம், விடுதலைப்புலிகள் இன்னும் மதம் மொழி இனம் என்று எந்த வர்க்கத்தினராலும் மனித உரிமை மீறல்கள் நடாத்தப்படும் போது குரல் கொடுக்கப்படல் வேண்டும் என்பதைப் புரிந்து கொள்ளாது, விடுதலைப்புலிகளின் மனிதஉரிமை மீறல்கள் அடையாளப்படுத்தப்படும் போது மட்டும் கொதித்தெழுகின்றார்கள்.

பெண்கள் சந்திப்பில் கலந்து கொள்ளுமாறு உலகத்தமிழர் பெண்கள் அமைப்பின் பல
அங்கத்தவர்களை நான் நேரடியாகவே தொலைபேசியில் அழைத்துக் கேட்டிருந்தேன். அவர்கள் ஒருவரும் சமூகமளிக்கவில்லை. தான் வரமுடியாது காரணம் அன்று தமிழர் வொண்டலாண்ட் திருநாள் என்று உலகத்தமிழர் பெண்கள் அமைப்பின் முக்கிய உறுப்பினர் கூறினார். உலகெங்கிலுமிருந்து பெண்கள் தமது செலவில் கலந்து கொண்டு இந்த பெண்கள் சந்திப்பைச் சிறப்பிக்கும் போது இங்குள்ள பெண்களுக்காகக் குரல் கொடுக்கும் அமைப்பின் பெண்களுக்கத் தமது விடுமுறைக் களியாட்டங்கள்தான் முன் நிற்கின்றது என்றால் அவர்கள் அமைப்பையும் வேலைத்திட்டங்களையும் நாம் என் என்பது. இருந்தும் கலந்து கொண்டு கட்டுரை தந்த பெண்களில் விடுதலைப்போராட்டத்தின் சார்பாளர்களே அதிகமாக இருந்தார்கள் என்பதனை நிச்சயமாக தமிழ்நதி கவனிக்கத்தவறியிருக்கமாட்டார் என்றே நம்புகின்றேன்.

27வது பெண்கள் சந்திப்பு தனிமனித தாக்குதல், பெண்கள் மீதான தாக்குதல்கள் அற்ற அரசியல் வாதங்கள் என்பன ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது என்பதனைத் தெளிவாக எனது அறிமுக உரையில் வழங்கியிருந்தேன். அந்த வகையில் மீறல்கள் ஒருவரின் கட்டுரையிலும் நிகழவில்லை. நிர்மலா தேசியவாதமும் பெண்ணியமும் என்ற தலைப்பில் பெண்கள் மேலான விடுதலைப்புலிகளின் அராஜகம் பற்றிக் கட்டுரை படித்தார். இது பெண்கள் சார்ந்த கட்டுரையே தவிர விடுதலைப்புலிகளை விமர்சிக்கும் கட்டுரையல்ல. கட்டுரையின் ஆரம்பத்திலேயே அரசாங்கத்தின் பெண்கள் மீதான அராஜகம் எல்லோரும் அறிந்ததே, அதனால் அதனை கட்டுரையில் தவிர்த்து விடுகின்றேன் என்ற அவர் தெளிவாகத் தெரிவித்த பின்னரும், கலந்துரையாடின் போது தமிழ்நதி எழுந்து ஒருபக்க சார்பான தாக்கத்தை மட்டும் தாங்கியிருக்கின்றது நிர்மலாவின் வாதம் என்றது சிறுபிள்ளைத் தனமாகவே இருந்தது. தவிர தமிழ்நதி பல தளங்களில் வேலை செய்தவர். கனடா ஈழம், இந்தியாவென ஈழப்பெண்கள் புலம்பெயர் பெண்கள் பிரச்சனைகளை நன்கு அறிந்தவர். அவரிடம் நான் கட்டுரை கேட்டபோது கட்டுரை என்றால் போர் அடிக்கும் எனவே தான் இந்தியப் பெண்கவிஞர்கள் பற்றி ஒரு வீடியோ சமர்பிக்க உள்ளேன் என்றபோது எனக்கு உண்மையிலேயே விசனமாகவே இருந்தது. ஈழப் போராட்டம் பற்றிய ஆழமாக அறிந்தவர் போராட்டத்தால் பெண்களுக்கேற்பட்ட பாதி;ப்பு, கடைசி ஈழத்துப் பெண் அகதிகள் இந்தியாவில் எதிர்கொள்ளும் அவலங்கiளாயாவது கட்டுரையாக்கி அப்பிரச்சனைகளை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்திருக்கலாமே.

பெண்கள் பற்றிய கட்டுரை அது எந்த வடிவில் வந்தாலும் பெண்கள் சந்திப்பு ஏற்றுக்கொண்டிருக்கும் என்பதை நான் கட்டுரை வழங்கிய எல்லோருக்கும் அறிவித்தேன். குறமகள் பெண்களுக்கு வீரம் வேண்டும் துணிவு வேண்டும் விடுதலைப்புலிகளில் இருக்கும் பெண்களைப் போன்று என்பதாய் தான் கட்டுரை படிக்கலாமா என்று கேட்டு என் அனுமதியைப் பெற்றார்.

மேலும் கட்டுரையென்றால் “போர்” அடிக்கும் என்று பலமுறை தமிழ்நதி குறிப்பிடக் கேட்டேன். இப்படியொரு கருத்தை எங்கிருந்து அவர் பெற்றார். பணம் கொடுத்து கட்டுரை அமர்வுகளைத் தேடிச் செல்கின்றார்கள் ஆய்வாளர்கள் ஒரு தரமான ஆய்வுக் கட்டுரை தரும் நிறைவு வேறு எதில் பெறமுடியும். சின்னப்பெண்ணான நிவேதா கட்டுரை வாசிக்கும் போது மண்டபமே அசையாது உறைந்து போனதைத் தாங்கள் அவதானிக்கவில்லையா?

பெண்களின் அவலநிலைகளை ஆராயும் ஆரோக்கியமான கட்டுரைகள் எத்தனை இந்தப் பெண்கள் சந்திப்பில் வாசிக்கப்பட்டு கருத்துப் பரிமாற்றம் செய்யப்பட்டது. 27வது பெண்கள் சந்திப்பில் எத்தனை பெயர்களின் ஆய்வுகள் உடல் உழைப்புக்கள் அடங்கியிருக்கின்றன. எல்லாவற்றையும் தங்கள் ஒருவரின் அரசியல் பார்வையில் வைத்து ஒரு பதிவின் மூலம் கொச்சைப்படுத்தி விட்டீர்கள்.

பெண்கள் சந்திப்பின் இறுதியில் மிக ஆரோக்கியமான பிரேரணை எடுக்கப்பட்டது. அதை நான் இங்கு குறிப்பிட விரும்பவில்லை. இருந்தும் கனேடியச் சூழலில் தற்போது இடம்பெற்றுக்கொண்டிருக்கும் எத்தனையோ நிகழ்வுகளுக்கு சமூகமளிக்காத பலர் கலந்து கொண்டு 27வது பெண்கள் சந்திப்பை மிக வெற்றிகரமாக மாற்றியுள்ளார்கள். இது தமிழ் பெண்களுக்குக் கிடைத்த ஒரு வெற்றியென்றே நான் நம்புகின்றேன்.

Wednesday, May 07, 2008

எவடம் எவடம்..

நண்பர் ஒருவரிடம் உரையாடிக்கொண்டிருக்கும் போது என்னிடம் “நீங்கள் யாழ்ப்பாணத்தில் எவடம் என்று யாரிடமாவது கேட்டால் தவறா?” என்று கேட்டார். இலங்கையில் யாழ்ப்பாணத்தில் மட்டுமா தமிழர் வாழ்க்கின்றார்கள், மட்டக்களப்பு, திருகோணமலை இன்னும் எத்தனை எத்தனை யாழ்ப்பாணத்துக்குள் அடங்காத இடங்களிலெல்லாம் தமிழர்கள் வாழ்கின்றார்கள் எனவே தமிழர்களின் வாழும் வட்டத்தை ஒடுக்கி யாழப்பாணம் என்று குறுக்குவது தவறுதானே என்றேன். அதற்கு அவர் ஒருவரிடம் உரையாடும் போது அவரின் பேச்சுமுறையைக் கொண்டு அவரை ஓரளவுக்கேனும் என்னால் அடையாளம் காணமுடியும் அவர் யாழ்ப்பாணமாக இருப்பார் என்ற நம்பிக்கையில் நான் அப்பிடி ஒரு கேள்வியைக் கேட்டிருக்கலாம் தானே என்றார்;.
யாழ்ப்பாண மேலாதிக்கத் தமிழ் மக்களிடம்தான் இத்தகைய போக்கு இருக்கின்றது என்றும், மற்றைய வட்டாரத்தில் வாழ்பவர்கள் இப்படியான கேள்வியைக் கேட்பதில்லை என்பது பொதுவான அபிப்பிராயம் என்றும் அவரிடம் கூறினேன்.

யாழ்ப்பாணத் தமிழர்களிடம்தான் மேலாதிக்கத் தனம் இருக்கின்றது என்பது எமது தமிழ் மக்களின் பொதுவான கருத்தாக இருக்கும் பட்சத்தில் யாழ்ப்பாணத் தமிழர் என்றால் எல்லோருமே மேலாதிக்கவாதிகளாகவல்லவா இருத்தல் வேண்டும். அதே வேளை மற்றைய மாகாணங்களில் வாழ்பவர்கள் எல்லோரும் மேலாதிக்கத் தனமற்றவர்களாகவல்லவா வாழ வேண்டும்.
இது பற்றி உரையாடும் போது இன்னுமொரு நண்பர் கூறினார், மட்டக்களப்பு மேல்மட்ட வாழ்க்கை முறையைக் கொண்டிருக்கும் மக்களிடமும் இதே மேலாத்திக்கத் தன்மை நிறைந்தே இருக்கின்றது என்றும், கனடாவில் இடம்பெற்ற மட்டக்களப்பு ஒன்று கூடலுக்குச் தான் ஒரு நண்பரோடு சென்று வந்த போது ஒரு குட்டி யாழ்ப்பாணத்தைத்தான் தன்னால் பார்க்க முடிந்தது, என்றும் கூறினார். மட்டக்களப்பு வாசிகள் இருவர் சந்தித்துக் கொள்ளும் போது நீங்கள் மட்டக்களப்பில் எவடம் என்று கேட்பதும் வழமையாக இருக்கலாம், அவர் குறிப்பாக எவடம் என்று தெரியும் போதுதானே அவரை சாதீய முறையில் அடையாளம் காணமுடியும்.
தேசியவாதம், பிரதேசவாதம் என்பது எங்கும் நிறைந்துதான் உள்ளது. நான் யாழ்ப்பாணத்தில் கோண்டாவி;ல் எனும் கிராமத்தைச் சேர்ந்தவள். கோண்டாவில் கிராமத்தின் பிரிவாக கிழக்கு, மேற்று, வடக்கு கோண்டாவிலர்கள் என்று பிரவாக வாழ்ந்து வந்தார்கள். எனக்கு நினைவு தெரிந்த நாளிலிருந்து நாங்கள் கோண்டாவில் கிழக்கில்தான் வசித்து வந்தோம். இருந்தும், எனது அப்பாவின் சொந்த இடம் “அன்னங்கை” என்று அழைக்கப்படும் கோண்டாவில் வடக்கு என்பதால், நாமும் “அன்னங்கையார்” என்று கிழக்கு கோண்டாவிலரால் அழைக்கப்பட்டவர்கள். எமது சொந்தங்கள் எல்லோரும் அன்னங்கையில்தான் வசித்தும் வந்தார்கள். இப்போதும் எனக்கு நினைவில் இருக்கும் ஒரு விடையம், எமது வீட்டுக் கொண்டாட்டம் ஒன்றிற்கு வந்திருந்த கோண்டாவில் கிழக்கு அயலவர் சிலர், சாப்பாட்டுப் பந்தி விரித்தபோது எழுந்து சென்றது. அதே வேளை கோண்டாவில் கிழக்கின் இன்னொரு பகுதியாக “கேணியடியர்கள்” வாழ்ந்து வந்தார்கள். இவர்களுடனும் இந்த கிழக்கு மேற்குடிகள் கலந்து கொள்வதில்லை. போய் வருவதோடு மட்டும் சரி தாம் “கை நனைப்பதில்லை” என்பதில் அவர்களுக்குப் பெருமை. அத்தோடு இதில் மிகவும் நகைச்சுவையான விடையம் என்னவென்றால், “கேணியடியர்கள்”, “அன்னங்கையர்” களோடு கலந்து கொள்ள விரும்புவதில்லை, அன்னங்கையர்களும் கேணியடியர்களை ஒதுக்கி வைத்தே பெருமை பேசிக்கொள்வார்கள். ஒரு சிறிய கிராமமான கோண்டாவிலில் இருக்கும் கிழக்குப் பகுதி மக்களிடம் மட்டுமே எத்தனை சின்னத்தனங்களும் பிரதேசவாதமும் இருக்கின்றது என்றால் இலங்கையின் அனைத்து இடங்களையும் மாவட்ட ரீதியாகப் பார்க்கப் போகின் எப்படித்தான் இறுதியில் யார் மேல்மட்டமக்கள், யார் கீழ்மட்டமக்கள் என்று அடையாளம் கண்டு கொள்ள முடியும்?
இந்தக் குழப்பங்களைத் தீர்த்துக் கொள்ளத்தான் தந்திரமாக “நீங்கள் எவடம்?” என்ற ஒரே கேள்வியோடு தமது காரியத்தை முடித்துக் கொள்கின்றார்கள். இந்த “நீங்கள் எவடம்?” என்பது யாழ்ப்பாணத்து மக்களின் “உரித்து” அல்ல. இது இலங்கையில் மட்டுமல்ல உலகெங்கும் பரவிக்கிடக்கும் “வாதப் பிரச்சனை” என்பதுதான் நிறைவான உண்மை. எனவே யாழ்ப்பாணத்தான் ஒருவர் நீங்கள் யாழ்பாணத்தில் எவடம் என்று யாரிடமாவது கேட்கும் போது உங்கள் இரத்த அழுத்தம் ஏறினால் அடக்கிக் கொள்ளுங்கள், அதே வேளை வேறு ஒரு இடத்தில் நீங்கள் திருகோணமலையில் எவடம் என்ற கேள்வியும் மட்டக்களப்பில் எவடம் என்ற கேள்வியும் யாரோ ஒருவரால் யாரிடமோ கேட்கப்பட்டுக்கொண்டுதான் இருக்கும்.

Tuesday, April 15, 2008

பெண் அடிமைத் தனத்தின் வேராய் இருப்பது “குடும்பம்” என்ற நிறுவனமே.

கனேடிய விடுமுறை நாட்களில் தற்போது புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது “குடும்பநாள்”
காதல் தினம், அம்மா நாள், அப்பா நாள், பெண்கள் தினம் இப்படிப் பல தினங்கள் அடையாளப்படுத்தப்பட்டாலும் குடும்பநாள் என்பது விடுமுறையோடு அறிமுகப்படுத்தப்பட்ட ஒன்று.



உறவுகள் என்ற பார்வையை விடுத்து, வியாபாரம் என்ற பார்வையில் இந்நாளை நாம் ஆராய்ந்தால், இனி இந்நாளுக்காக வாழ்த்து மடல்கள், அன்பளிப்புப் பொருட்கள் அறிமுகப்படுத்தப் படும். உணவகங்கள் இந்நாளில் நிரம்பி வழியும், புதிய கழியாட்டங்கள் அறிமுகப்படுத்தப்படும், பயணிப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகமாகும் இவையனைத்தும் வியாபாரத்தந்திரங்கள்.

உறவு முறை எனும் போது தற்போதைய இயந்திர வாழ்வோட்டத்தில் குடும்பங்கள் ஒன்றாகச் செலவிட நேரம் கிடைப்பதில்லை என்பதனால் இந்நாள் குடும்பங்கள் ஒன்றாகக் கழித்து மகிழ ஒதுக்கப்பட்ட நாள். ஆண்டுக்கு ஒருநாள் பெற்றோர் பிள்ளைகள் ஒன்றாக மேசையில் இருந்து சாப்பிட்டு தமது ஓராண்டு வாழ்நாளை அலசக் கொடுக்கப்பட்டுள்ளது.

எம்மவர்கள் ஊரில் இருந்த குடும்ப நெருக்கம் புலம்பெயர்ந்த பின்பு இல்லாமல் போய்விட்டது என்று புலம்புகின்றார்கள். எமது நாடு, புலம்பெயர்ந்த நாடுகள் என்று இங்கே பிரித்துப் பார்த்து வாழ்க்கை முறையை நாம் கணித்துவிட முடியாது. போர் சூழலில் அடிபட்டுக்கொண்டிருக்கும் எமது நாட்டை வளமான ஒரு வாழ்க்கை முறைக் கணிப்பெடுப்பிற்குள் கொண்டு வருவது தவறு. பதிலாக இந்தியத் தமிழர்களின் வாழ்க்கை முறையை நாம் தற்போது பார்த்தோமானால் வீட்டில் இருக்கும் இல்லத்தரசிகள் என்ற நிலை மாறி கணவன் மனைவி இருவரும் வேலைக்கும் போகும் நிலை உருவாகியுள்ளது. அத்தோடு கூட்டுக்குடும்பம் என்ற அமைப்பு முறையும் மருகி வருவதால் குழந்தைகளை ஆயாவுடன் விட்டுச் செல்வது, பிள்ளை பராமரிப்பு நிலையங்களில் விட்டுச் செல்வது என்ற நிலமைதான் அங்கேயும் உருவாகியுள்ளது. உலகெங்கும் தோற்றியுள்ள விஞ்ஞான வளர்ச்சி மாற்றம், அது கொண்டு வந்துள்ள பொருளாதார நெருக்கடி என்பனவே இந்த வாழ்க்கை முறையை மாற்றி அமைத்துள்ளது.

குடும்ப அமைப்பின் உருவத்தைப் பார்த்தால்
"ஆதிகம்யூன்" காலத்தில் (காட்டு மிராண்டிக் காலம்) தாய்வழிச் சமூகமாகவே இருந்தது. அதாவது பெண்கள் எந்த ஒரு அடக்குமுறைக்குள்ளும் ஆளாகாமல் முழுச்சுதந்திரமாக வாழ்ந்து வந்தார்கள். அதன் பின்னர் தோன்றிய, அநாகரீக காலத்தில," குடும்பம் என்ற இரத்த சொந்தங்களான கட்டமைப்புக்குள் பெண்களை வீட்டு வேலைகள் விவசாயம் குழந்தை பராமரிப்பு போன்றவற்றால் வெளி உலகை விட்டு ஒதுக்கும் நிலை ஏற்பட்டது. அடுத்து "நாகரீக காலம்" என்று கூறப்படும் தற்கால அமைப்பு குடும்பம் அரசு தனிச் சொத்து போன்றவையின் தோற்றம் (இவை ஆண்களின் உருவாக்கம்) பெண்களை முற்று முழுதான அடிமைத் தனத்துக்குள் தள்ளி விட்டிருக்கின்றது. இந்தக் காலத்தில் உறவுகள் மிகச் சுருங்கி கணவன் மனைவி குழந்தைகள் (சில இடங்களில் பெற்றோர்) என்று மிகுந்த சுயநல சமுதாயமாக உருப்பெற்றிருக்கின்றது. ஒரு சமூகமாக வாழ்ந்த வாழ்க்கை மருகிக் கூட்டுக்குடும்பமாக உருப்பெற்றுப் பின்னர் தனிக்குடித்தனமாக மாறித் தற்போது தனிப்பெற்றோர்களினால் ஆன குடும்ப அமைப்பு, ஓரினச்சேர்க்கையாளர்களினால் ஆன குடும்ப அமைப்பு என்று உருப்பெற்றிருக்கின்றது. மாற்றங்கள் வேகமாகிக்கொண்டிருந்தாலும், சமூகமும் அரசும் அதனை அங்கீகரிப்பதாகப் பாவனை காட்டினாலும் இன்னமும் குடும்பம் என்றால் கணவன் மனைவி குழந்தைகள் என்ற வடிவம்தான் குடும்பம் என்ற அமைப்பின் வரையறையாகப் பலரால் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒன்றாக உள்ளது. இந்த அமைப்பில் முற்றுமுழுதாகப் பெண் அடிமைத் தனமே மேலோங்கி நிற்கின்றது.

அடக்குமுறைக்குள் பெண்கள் தமது தனித்தன்மையை இழந்து அடிபட்டுப் போகாமல் சுதந்திரமாக வாழ பல வழிகள் இருப்பதாகப் பலர் (எம்மவர்கள் - அதாவது இறுக்கமான கலாச்சாரத்திற்குள்ளிருந்து வந்தவர்கள்) சொல்லிச் செல்கின்றார்கள். குடும்ப அமைப்பு சீராக இருக்கப் புரிந்துணர்வு, விட்டுக் கொடுத்தல் தேவை என்றும் வழி முறைகளையும் சொல்லிச் செல்கின்றார்கள். இவர்கள் கூறும் விட்டுக்கொடுப்பென்பது பெண்களிடம் மட்டும் எதிர்பார்க்கும் ஒன்றாகவே இன்னமும் உள்ளது.

பெண்கள் சுதந்திரமாக வாழப் பல வழிகள் இருக்கின்றன என்று விட்டு பெண்கள் தனியாக வாழலாம் என்று ஒரு கருத்து வைக்கப்பட்டது. இதைச் சற்று ஆராய்ந்து பார்த்தால் - முதலாவது காதல் தோல்வி. காதலித்தவள் என்பதால் திருமணங்கள் பொருந்தி வராமை. கடந்த காலங்களில் இந் நிலமை மிக மோசமாகவே எம் நாட்டில் இருந்து வந்தது. அடுத்து வரதட்சணையின்னை (வறுமை) இறுதியாக தமது அந்தஸ்த்திற்கு ஏற்ற மாப்பிள்ளை கிடைக்கவில்லை என்று திருமணப்பேச்சை இழுத்தடித்து பெண்ணிற்கு வயது ஏறிப்போய் திருமணமாகாமல் இருந்தல் போன்ற காரணங்களால் பல பெண்கள் தனித்து விடப்பட்டுள்ளார்கள். இந்நிலை இவர்கள் தாம் தனித்து வாழ வேண்டும் என்று எடுத்துக் கொண்ட முடிவல்ல. எனது சமூகத்தின் சீரழிவால் ஏற்பட்ட நிலமைகள் இப்படிப்பட்ட பல பெண்களை தனிமையில் வாழ்ந்துகொண்டிருக்கின்றார்கள். என் கேள்வி இவர்களது பாலியல் தேவைகளை எப்படி எமது சமூகம் பார்க்கின்றது. திருமணம் ஆகாதவர்கள் எனவே இவர்களுக்கு அந்தத் தேவையில்லை என்பதுதான் எனது சமூகப்பார்வையாக உள்ளது. தவறி இவர்கள் யாருடனாவது உறவுகொள்ள நேடிட்டு அது வெளியே தெரியவரும் பட்சத்தில் அவர்கள் ஒதுக்கப்படுகின்றார்கள்..

திருமணமாகிப் பின்னர் ஒத்துவராததால் பிரிந்த பெண்களை எடுத்துப் பார்ப்போம். கனடாவில் பல பெண்கள் இருக்கின்றார்கள். சிலர் மீண்டும் காதலித்துத் திருமணம் செய்து கொண்டுள்ளார்கள். சிலர் பல ஆண்டுகளாகத் தனியே இருக்கின்றார்கள். எனவே ஒரு பெண் தானாக விரும்பி தனியான வாழ்வு முறையைத் தெரிவு செய்வதென்பது எமது சமூகத்தில் மிகக் குறைவாக இருப்தோடு, எமது சமூக அமைப்புக் காரணமாகப் பலவந்தமாகத் தனிமைக்குள் தள்ளப்படும் பெண்களின் தொகையே அதிகமாக உள்ளது. இவ்வேளையில் எமது சமூக அமைப்பிலும், அதன் சிந்தனைகளிலும் எந்த மாற்றங்களையும் கொண்டு வர முனையாமல் குடும்பம் அதன் முக்கியம், அதன் பெறுமதி என்று வெறுமனே புலம்பித்திரிவதில் எப்பயனும் இல்லை.

சமதர்ம அரசின் தோற்றத்தில் பெண்கள் பொருளாதார பலத்தை பெற்று உற்பத்தியில் ஈடுபடும் போது சமத்துவமாகவே நடத்தப்படுவார்கள, இது மாக்ஸின் கூற்று. ஆண்டுகள் கடந்தாயிற்று சமதர்ம அரசு மூழ்கி முதலாளித்துவம் தலை தூக்கி ஆட்டம் காணும் நிலையில் பெண் விடுதலை என்பது வெறும் பேச்சோடு மறைந்து விடும் ஒன்றாகிப் போய்க்கொண்டிருக்கின்றது.
தமிழ் சூழலைப் பார்க்கும் போது படிப்படியாக பெண்களின் சிந்திக்கும் திறன் பெருகி பெண்நிலைவாதிகளின் எண்ணிக்கை அதிகரிக்கின்றது என்பது ஒரு புறம் மகிழ்ச்சியைக் கொடுத்தாலும் இது மிகக் குறைந்த வீதத்திலேயே இன்னும் இருக்கின்றது. இந்தப் பெண்நிலைவாதிகள் கூட ஒரே கோணத்திலான பிரச்சனைகளை மட்டுமே அடையாளம் காண்கின்றார்கள். உதாரணத்திற்கு கணவனை இழந்தவளைப் (விதவை) புறக்கணித்தல், பெண் குழந்தை வளர்ப்பில் வேறுபாடு, உயர்கல்வி, சீதணப் பிரச்சனை, பூப்புனித நீராட்டுவிழாக் கொண்டாட்டம், சமனற்ற சம்பளம், இத்யாதி,.. இத்யாதி இப்படியாப் பலராலும் ஏற்கெனவே அடையாளப்படுத்தப்பட்ட பிரச்சனைகளை மீண்டும் மீண்டும் சமூகத்திற்கு எடுத்துச் சொல்வதனால் பெண் ஒடுக்கு முறைக்காக அடித்தளங்கள் அடையாளம் காணப்படாமலே போய் விடும் அபாயம் இருக்கின்றது. இன்னும் பெரும்பாலான பெண்கள் ஆண்-பெண் அசமத்துவ நிலையை உணராதவர்களாகவே இருக்கின்றார்கள்.

Sunday, April 13, 2008

“ராமேஸ்வரம்”

“ராமேஸ்வரம்” திரைப்படம் பார்க்கும் சந்தர்ப்பம் கிடைத்தது. “நந்தா”, “கன்னத்தில் முத்தமிட்டால”; அந்த வரிசையில் இன்று “ராமேஸ்வரம்”. ஈழத்தமிழரின் அகதி நிலையை எடுத்துக்காட்டும் திரைப்படமாக இந்திய இயக்குனர்களால் எடுக்கப்பட்ட திரைப்படங்கள் இவை. இந்த மூன்று திரைப்படங்களிலும் ஒரு ஒற்றுமை என்னவென்றால் இந்தியர்கள் ஈழத்து அகதிகளுக்கு எந்த அளவிற்கு உதவி செய்யத் தவிக்கின்றார்கள் என்பதே. நான் படித்த கட்டுரைகள், சிறுகதைகளிலில் இருந்தும், தனிப்பட்ட முறையில் கேட்டறிந்த சம்பவங்களில் இருந்தும் ராமேஸ்வரத்தில் அகதிகளாக வாழும் ஈழத்தமிழர்கள் எந்த அடிப்படைத் தேவையும் பூர்த்தி செய்யப்படாமலும், அதே வேளை பலவிதமாக வன்முறைக்குள்ளாக்கப்பட்டும் வருகின்றார்கள் என்பதே. ஆனால் மேற்கூறப்பட்ட எந்த ஒரு திரைப்படத்திலும் அதற்கான அடையாளங்கள் எதுவும் காட்டப்படவில்லை. தமிழ்நாட்டின் அரசியல் அட்டூழியங்கள், வன்முறைகள், போன்றவற்றை படத்திற்குப் படம் புடம்போட்டுக் காட்டும் எந்த ஒரு இயக்குனரும் ரமேஸ்வரத்தில் ஈழத்து அகதிகளுக்கு இழைக்கப்படும் கொடுமைகளை சிறிதேனும் காட்டுவதற்கு எதற்காக அஞ்சுகின்றார்கள்?




இதற்கான முக்கியகாரணம் இன்றைய இந்திய தமிழ் சினிமா புலம்பெயர்ந்த ஈழத்தமிழர்களை மிகவும் நம்பியிருக்கின்றது. 80, 90களில் உருவான திருட்டு வீ.சீ.டி விற்பனையும் அதன் பின்னர் சின்னத்திரையின் வரவும் தமிழ் சினிமா உலகை ஆட்டம் காண வைத்தது. திரைப்படத்துறையிலிருந்து பலரும் பகிரங்கமாக உரைகள் நிகழ்த்தி திருட்டு வீ.சீ.டியில் திரைப்படங்களைப் பார்க்காதீர்கள் என்று பொதுமக்களைக் கெஞ்சிக் கேட்கும் அளவிற்கு இறங்கியும் வந்திருந்தார்கள். தொடர்ந்த வருடங்களில் உலகெங்கும் பரவிக்கிடக்கும் ஈழத்தமிழர்கள் இந்தியத் தமிழ் திரைப்படங்களை திரையரங்குளில் திரையிடத் தொடங்கியதும் அவர்கள் தமிழ் சினிமா மீண்டும் உயிர்ப்பெற்றது. தமிழ் சினிமாவை நல்ல முறையில் தக்க வைத்துக் கொள்ள ஈழத்தமிழர்களை தடவிக்கொடுக்கின்றார்கள் இந்திய இயக்குனர்கள். இது முற்று முழுதான வியாபார தந்திரம் இதில் தவறொன்றுமில்லை.
ஈழத்தமிழரும் பாட்டும், சண்டையும் நிறைந்த படங்களைத்தான் வேண்டி நிற்கின்றார்கள். ராமேஸ்;வரத்தில் ஈழத்தமிழருக்கும் நடக்கும் அநியாயங்களை வெறுமமே விவரணப்படமாக எடுத்தால் ஈழத்தமிழர்கள் கூட அதனைப் பணம் கொடுத்து வாங்கிப் பார்க்க மாட்டார்கள் என்ற நிலையில்;தான் புலம்பெயர்ந்த தமிழர்களும் வாழ்கின்றார்கள். இது ஒருபுறமிருக்க இந்திய சினிமாக் கலைஞர்களிலிருந்து, சின்னத்திரைக் கலைஞர்கள் வரை வருடா வருடம் ஈழத்தழிழர்களினால் உலகெங்கும் உலாப் போகின்றார்கள். கலைஞர்களை அழைத்துக் கௌரவிப்பது என்பது நல்ல விடையம்தான், ஆனால் சினேகாவோடு சினேகாவின் அம்மா, சியாமோடு சியாமின் அம்மா என்று குடும்பமாக வந்து பணம் பெற்று ஊர் சுற்றிப்பார்த்துச் செல்வதோடு, கடைகடையா ஷொப்பிங் சென்று ஈழத்தமிழ் இளிச்சவாயர்களை ஒன்று இல்லையென்று ஆக்கிவிட்டுப் பறந்து போகின்றார்கள். கிரடிட் காட்டை அடித்து அடித்து சினேகாவிற்கு ஷொப்பிங் செய்துகொடுத்து விட்டு அந்த பெருமையோடு காலத்தைத் தள்ளுகின்றார்கள் இவர்கள்.

இந்தியக் கலைஞர்களை கனடாவிற்கு அழைத்து நிகழ்ச்சி செய்து அதனால் எம்மவர் ஏதாவது உழைக்கின்றார்கள் என்றால் அது வியாபாரம் என்று விட்டுப் போகலாம். ஆனால் ஒரு சிலரைத் தவிர மற்றவர்கள் வெறும் தற்பெருமைக்காக பெரும் பணத்தைக் கொட்டி தமிழ் சினிமாக்காறர்களை மேலும் மேலும் கொழுக்கப்பண்ணுகின்றார்கள். ஈழத்தமிழர்கள் இளிச்சவாய்கள், எங்களைத் தலையில் வைத்துக் கொண்டாடுவார்கள் என்று கண்டு கொண்ட சினிமாக் கலைஞர்களும் முடிந்தவரை எம்மவரிடமிருந்து வறுகிக்கொண்டு பறந்து விடுகின்றார்கள். சினிமாக்காறர்களைக் கூப்பிட்டு நொடிச்சுப் போன எம்மவர்களின் பட்டியல் அதிகரித்துக் கொண்டே போகின்றது. ஈழத்தமிழர்களின் கடைகளெல்லாம் இந்தியக் கலைஞர்களின் வருகையை அறிவிக்கும் துண்டுப்பத்திரங்களினால் நிறைந்து வழிகின்றது, சின்னத்திரையில் மிமிகிரி செய்யும் வெட்டிப் பெடியங்கள் கூட பணம் பெற்று கனடா சுற்றுலா வந்துவிட்டுப் போகின்றார்கள். ஈழம் கிடைக்கிறதோ என்னவோ புலம்பெயர் ஈழத்தமிழர்களால் தமிழ் சினிமாவிற்கு விடுதலை கிடைத்து விட்டது என்பது தான் உண்மை.

Tuesday, February 05, 2008

Discovering Dominga

by Patricia Flynn with Mary Jo Mchonahay



The Centre for Women’s Studies in Education ஆதரவில் கடந்த செவ்வாய் கிழமை “Discovering Dominga” எனும் விவரணத் திரைப்படம் ரொறொண்டோ பல்கலைக்கழகத்தில் திரையிடப்பட்டு தொடர்ந்து கலந்துரையாடலும் இடம்பெற்றது.

தற்போது ஐஓவாவில; வாழும் டெனீஸ் பெக்கர் இரு குழந்தைகளுக்துத் தாயான 29வயது நிரம்பிய பெண். அமைதியான குடும்ப வாழ்க்கை வாழும் இந்தப் பெண்ணின் இளமைப்பருவம் மறக்கமுடியாத காயங்களைக் கொண்டது. இளமைக்காலக் கொடூரங்களில் இருந்து விடுபட முடியாமல் திணறும் இவர் இறுதியில், தனது வளர்ப்புக் குடும்பத்தால் கிடைத்த உறவினர் ஒருவருக்குத் தனது இளமைக்கால வாழ்வு பற்றிக் கூற அவர் மின்கணனியில் நடத்திய தேடல் டெனீஸ் பெக்கரின் தொலைந்த சில உறவுகள் பற்றிய தகவலை அவருக்கு அறியத்தருகின்றது.

டெனீஸ் குவாட்டமாலாவுக்குப் பயணம் செய்கின்றார். அங்கே அவர் மறந்து போயிருந்த சொந்தங்களின் அறிமுகம் மீண்டும் கிடைக்கின்றது. கண்ணெதிரே பெற்றோர்கள் குவாட்டமாலா இராணுவத்தால் கொலைசெய்யப்படும் போது டொமிங்காவுக்கு ஒன்பது வயது. கைக்குழந்தையான தனது தங்கையுடன் காட்டுப்பாதையூடே பலநாட்கள் ஓடி வழியில் தனது தங்கையையும் பறிகொடுத்து, இறுதியில், ஒரு அகதிமுகாமிற்கு வந்து சேருகின்றார். இரண்டு வருடங்களின் பின்னர் ஒரு அமெரிக்க குடும்பத்தினரால் வளர்ப்பு மகளாக எடுக்கப்பட்டு “டொமிங்கோ”, “டெனீஸ்” ஆக மாறித் தனது 29ஆவது வயது வரை ஐஓவாவில் பழையவற்றை மறக்க முனைந்து வாழ்ந்து வந்தார். காயங்களை மூடினாரே தவிர ஆற்ற முடியவில்லை.

பொன், நிலக்கரி, நிக்கல் போன்றவற்றின் மேல் மோகம் கொண்ட அமெரிக்க, கனேடிய முதலாளிகள் குவாட்டமாலா அரசுடன் இணைந்து 1980 தொடக்கம் 1983ஆம் ஆண்டுவரை ரியோ நெக்ரோ, குவாட்டமாலாவில் மட்டும் 6,000 வரையிலான ஆண்கள் பெண்கள் குழந்தைகள் அழித்திருக்கின்றார்கள். இந்த கொடுமையான அழிவின் நேரடிச் சாட்சியான எஞ்சியிருக்கும் மூவரில் டெனீசும் ஒருவர். 96இல் சமாதானம் அறிவிக்கப்பட்டாலும், இன்றும் இராணுவத்தின் கை மேலோங்கி நிற்பதால் தனது பெற்றோரின் அழிவிற்கு காரணமானவர்களுக்குத் தண்டனை வாங்கிக் கொடுக்க முடியாமல் போராடுகின்றார் டெனீஸ்.
ரொறொண்டோ பல்கலைக்கழக மாணவியான கிறிஸ்டீன் குவாட்டமாலா பற்றி அறிந்து கொண்ட போது எழுந்த ஆர்வம் அவரை அங்கு கொண்டு சென்றுள்ளது. இன்றும் கனேடிய, அமெரிக்கத் தனியார் நிறுவனங்கள் அங்கு சென்று கிராம மக்களை வெளியேற்றம் செய்ய முயல்வது நடைபெற்றுக்கொண்டிருப்பதாகவும் தான் ஒரு கனேடியப் பெண்மணி என்று சொல்வதற்கு வெக்கப்பட்டதாகவும் அந்த மாணவி கலந்துரையாடலின் போது கூறினார்.
பல பெண்களும், சில ஆண்களும் கலந்து கொண்ட இந்தப் பட்டறையின் இறுதியில், மனிதத் தன்மையை இழந்து எவ்வாறு சமூகம் மாறி வருகின்றது என்பது பற்றிக் கலந்துரையாடி பல நாடுகளில் இடம்பெற்ற, இடம்பெறுகின்ற அழிவுகளைச் சுட்டிக்காட்டினார்கள். எப்போதோ நடந்து போன சீன நான்கிங் அழிவுகள் கூடச் சுட்டிக்காட்டப்பட்டது. அழிவுகளைச் சுட்டிக்காட்டக் கால நேரம் தேவையில்லை, எனினும் 2 இலட்சத்திற்கும் மேலாக ஈழத் தமிழர்கள் கனடாவில் வாழ்கின்றார்கள், இந்த நிமிடத்திலும் எமது நாட்;டில் கொலைகள் இடம்பெற்றுக்கொண்டிருக்கின்றன, இவை எல்லாம் உள்நாட்டுப் போர் என்று ஒதுக்கிவிட முடியுமா? ஒருவர் கூட தமிழ் மக்களின் அழிவு பற்றி அங்கே குறிப்பிடவில்லை. இறுதியாக அது பற்றி நான் கேட்ட போது அதிகமான மாணவர்களுக்கு குவாட்டமாலா, கொலம்பியா பிரச்சனை தெரிந்த அளவிற்கு ஈழத்தமிழரின் பிரச்சனை தெரியவில்லை. அதற்கான காரணம் ஈழத்தமிழர் தமது பிரச்சனை பற்றி கனேடிய மக்களுக்கு அறியத்தருவதில்லை, உங்கள் நாட்டுப்பிரச்சனை பற்றிய விவரணப்படங்ளைப் பொதுமக்களுக்குக் காட்டிக் கலந்துரையாடல் செய்யுங்கள், ஆனால் உங்கள் அரசியல் சிக்கலானது, பலர் அது பற்றித் திறந்த மனதோடு கதைக்கத் தயங்குகின்றார்கள் என்று பல்கலைக்கழகப் பேராசிரியர் ஒருவர் கூறினார். இறுதியில் தான் “ ழே ஆழசந வுநயச ளுளைவநச” விவரணப்படம் பார்த்ததாகவும் இப்படியான பட்டறைகளில் அவற்றைக் காண்பித்து உங்கள் நாட்டில் பெண்களுக்கு ஏற்படும் கொடுமைகளை கனேய மாணவர்களுக்கு அறியத் தாருங்கள் என்றவர், அந்த விவரணப்படம் கூட இங்கு வாழும் தமிழ் மக்களால் நிராகரிக்கப்பட்டது என்று அறிந்தேன் என்றும் கூறினார்.

குவாட்டமாலப் பிரச்சனைக்கு மாணவர்கள் ஒன்றாகக் குரல் கொடுக்க வேண்டும் என்ற முடிவு எடுக்கப்பட்டு, அங்கு சென்று தளம் பதிக்க முயலும் கனேடியத் தனியார் நிறுவனங்களின் மின்அஞ்சல் வழங்கப்பட்டு, எல்லோரும் கண்டனக்கடிதம் எழுதுவதாகவும் முடிவு செய்யப்பட்டது.
எம்நாட்டுப் பிரச்சனைக்கு எமது மக்களே முட்டுக்கட்டையான நிற்கின்றார்கள்