இதற்கான முக்கியகாரணம் இன்றைய இந்திய தமிழ் சினிமா புலம்பெயர்ந்த ஈழத்தமிழர்களை மிகவும் நம்பியிருக்கின்றது. 80, 90களில் உருவான திருட்டு வீ.சீ.டி விற்பனையும் அதன் பின்னர் சின்னத்திரையின் வரவும் தமிழ் சினிமா உலகை ஆட்டம் காண வைத்தது. திரைப்படத்துறையிலிருந்து பலரும் பகிரங்கமாக உரைகள் நிகழ்த்தி திருட்டு வீ.சீ.டியில் திரைப்படங்களைப் பார்க்காதீர்கள் என்று பொதுமக்களைக் கெஞ்சிக் கேட்கும் அளவிற்கு இறங்கியும் வந்திருந்தார்கள். தொடர்ந்த வருடங்களில் உலகெங்கும் பரவிக்கிடக்கும் ஈழத்தமிழர்கள் இந்தியத் தமிழ் திரைப்படங்களை திரையரங்குளில் திரையிடத் தொடங்கியதும் அவர்கள் தமிழ் சினிமா மீண்டும் உயிர்ப்பெற்றது. தமிழ் சினிமாவை நல்ல முறையில் தக்க வைத்துக் கொள்ள ஈழத்தமிழர்களை தடவிக்கொடுக்கின்றார்கள் இந்திய இயக்குனர்கள். இது முற்று முழுதான வியாபார தந்திரம் இதில் தவறொன்றுமில்லை.
ஈழத்தமிழரும் பாட்டும், சண்டையும் நிறைந்த படங்களைத்தான் வேண்டி நிற்கின்றார்கள். ராமேஸ்;வரத்தில் ஈழத்தமிழருக்கும் நடக்கும் அநியாயங்களை வெறுமமே விவரணப்படமாக எடுத்தால் ஈழத்தமிழர்கள் கூட அதனைப் பணம் கொடுத்து வாங்கிப் பார்க்க மாட்டார்கள் என்ற நிலையில்;தான் புலம்பெயர்ந்த தமிழர்களும் வாழ்கின்றார்கள். இது ஒருபுறமிருக்க இந்திய சினிமாக் கலைஞர்களிலிருந்து, சின்னத்திரைக் கலைஞர்கள் வரை வருடா வருடம் ஈழத்தழிழர்களினால் உலகெங்கும் உலாப் போகின்றார்கள். கலைஞர்களை அழைத்துக் கௌரவிப்பது என்பது நல்ல விடையம்தான், ஆனால் சினேகாவோடு சினேகாவின் அம்மா, சியாமோடு சியாமின் அம்மா என்று குடும்பமாக வந்து பணம் பெற்று ஊர் சுற்றிப்பார்த்துச் செல்வதோடு, கடைகடையா ஷொப்பிங் சென்று ஈழத்தமிழ் இளிச்சவாயர்களை ஒன்று இல்லையென்று ஆக்கிவிட்டுப் பறந்து போகின்றார்கள். கிரடிட் காட்டை அடித்து அடித்து சினேகாவிற்கு ஷொப்பிங் செய்துகொடுத்து விட்டு அந்த பெருமையோடு காலத்தைத் தள்ளுகின்றார்கள் இவர்கள்.
இந்தியக் கலைஞர்களை கனடாவிற்கு அழைத்து நிகழ்ச்சி செய்து அதனால் எம்மவர் ஏதாவது உழைக்கின்றார்கள் என்றால் அது வியாபாரம் என்று விட்டுப் போகலாம். ஆனால் ஒரு சிலரைத் தவிர மற்றவர்கள் வெறும் தற்பெருமைக்காக பெரும் பணத்தைக் கொட்டி தமிழ் சினிமாக்காறர்களை மேலும் மேலும் கொழுக்கப்பண்ணுகின்றார்கள். ஈழத்தமிழர்கள் இளிச்சவாய்கள், எங்களைத் தலையில் வைத்துக் கொண்டாடுவார்கள் என்று கண்டு கொண்ட சினிமாக் கலைஞர்களும் முடிந்தவரை எம்மவரிடமிருந்து வறுகிக்கொண்டு பறந்து விடுகின்றார்கள். சினிமாக்காறர்களைக் கூப்பிட்டு நொடிச்சுப் போன எம்மவர்களின் பட்டியல் அதிகரித்துக் கொண்டே போகின்றது. ஈழத்தமிழர்களின் கடைகளெல்லாம் இந்தியக் கலைஞர்களின் வருகையை அறிவிக்கும் துண்டுப்பத்திரங்களினால் நிறைந்து வழிகின்றது, சின்னத்திரையில் மிமிகிரி செய்யும் வெட்டிப் பெடியங்கள் கூட பணம் பெற்று கனடா சுற்றுலா வந்துவிட்டுப் போகின்றார்கள். ஈழம் கிடைக்கிறதோ என்னவோ புலம்பெயர் ஈழத்தமிழர்களால் தமிழ் சினிமாவிற்கு விடுதலை கிடைத்து விட்டது என்பது தான் உண்மை.
10 comments:
நிதர்சன நிலையை மிக அழகாகச் சொல்லியிருக்கிறீர்கள் கறுப்பி.
(பெயர்க் காரணம் தெரியவில்லையெனினும் இப்படி உங்களைக் கூப்பிட சங்கடமாக இருக்கிறது.)
'ராமேஸ்வரம்' திரைப்படத்தில் கூட ஈழப்பிரச்சினை அவர்களது திரைக்கதைக்குக் கிடைத்த வித்தியாசமான பின்புலம்.அவ்வளவே.மற்றப்படி ஈழம் மீது உண்மையான அன்பினால் அவர்கள் திரைப்படம் எடுக்கவில்லை.
சமீபத்தில் 'ஆணிவேர்' என்றொரு படம் பார்த்தேன்.ஈழத்தின் வலியை ஒவ்வொரு காட்சிகளிலும் உணர்த்த முயற்சித்திருக்கிறார்கள்.ஒரு காட்சியில் கூட அபத்தமில்லை,ஆபாசமில்லை.
நீங்கள் பார்த்தீர்களா சகோதரி?முடிந்தால் அது பற்றியும் ஒரு பதிவு போடுங்கள்.
கறுப்பி,
பார்த்து பல மாதங்களாச்சே, நலமா?
உங்கள் விமர்சனத்தில் சில விடயங்களோடு ஒத்துப்போவதாகவும், சில விடயங்களில் சினிமாவை பார்த்தீர்களா இல்லை 'போஸ்டரை' பார்த்து விட்டு ப்ளாக்க ஆரம்பித்தீர்களா என்று கேட்கும்படியாகவும் உள்ளது.
ஒரு படத்தை வைத்து நேரில் நடப்பவை இப்படித்தான் என்று அப்படியே நம்பும், எழுதுவது எந்த அளவுக்கு சரியானது? இது எதைச் சாதிக்கப்போகிறது?
ஒத்துக்கொள்ளாதவைகள்/மாற்று கருத்துக்கள் பற்றி மட்டும் இங்கே.
1. 'இராமேஸ்வரம்' படத்திலே ஈழத்தமிழ் அகதிகள் 'அடிப்படை வசதிகள் கூட' இல்லாததை காட்டவில்லையா? அப்போ மணிவண்ணன் தனது சட்டையை அந்த சின்னப் பெடிச்சிக்கு அணிவிக்கும் காட்சி என்னவாம்?
2. அடிப்படை வசதிகள் இல்லையென்பதை எதை வைத்துச்சொல்கிறீர்கள்? நேரில் பார்த்தா?
எதையாவது வாசித்தா? ஏன் கேட்கிறேன் என்றால், இந்திய இறையாண்மையை நிலைநாட்ட அல்ல, அங்கு சென்று வந்த நண்பர் ஒருவர், உணவு துணி தண்ணீர் போன்ற வசதிகளுக்கு பிரச்சினை பெரிதாக இல்லை என்றவகையில்தான் சொன்னார். ஆனால் அதும்
15 ஆண்டுகளுக்கு முன்னே என்பதையும் இங்கே சொல்லிக்கொள்ள எனக்கு சங்கடமில்லை.
சமீபத்தில் கூட , எம் எல் ஏ இரவிக்குமார் எழுதிய கட்டுரையின் பேரில் , 'தமிழினத்தலைவர்' கலைஞர் அவர்கள் 50 இலட்சங்களுக்கு சீரமைப்பு வேலைகளை இராமேஸ்வரம் கேம்ப் இல் செய்தது பற்றி வாசித்தீர்களா? அது போதுமா இல்லையா என்பது ஒருபக்கம் இருக்கட்டும். அக்கறைப்பற்றிய அடையாளமாக கறுப்பி கொள்ளலாம் அல்லவா?
தனிப்பட்ட அளவில் , "இராமேஸ்வரம்" அபத்தமில்லாத வசனங்கள், 'இந்தியத் தமிழன்' இன்ஸ்பெக்ட்ராக இருந்தால் அவர் செய்ய்க்கூடய அட்டூழியங்கள், 'அகதி'யின் (ஆகா! இந்தியத்தமிழர்களின் இரக்கத்தைச் சம்பாதிக்க இப்படி எழுதலைன்னா எப்படி? ;) ) காதல் மனம் என சில கதையமைப்பு அம்சங்கள் உள்ளதாக 'சினிமா' என்ற அள்விலே பார்க்கும்படியாகத்தான் உள்ளது?
வணக்கம் கறுப்பி நீண்ட நாட்களுக்கப்புறம் ஒரு பதிவு.
//சமீபத்தில் 'ஆணிவேர்' என்றொரு படம் பார்த்தேன்.ஈழத்தின் வலியை ஒவ்வொரு காட்சிகளிலும் உணர்த்த முயற்சித்திருக்கிறார்கள்.ஒரு காட்சியில் கூட அபத்தமில்லை,ஆபாசமில்லை.
நீங்கள் பார்த்தீர்களா சகோதரி?முடிந்தால் அது பற்றியும் ஒரு பதிவு போடுங்கள்//
:)
நீங்க வலைப்பதிவுலகுக்கு புதிது தானே ரீஷான் :)
ஆணிவேரை பற்றி கறுப்பியிடம் விமர்சனம் கேட்கிறீர்கள்
:)))))))))))))))))))))))))))))))))))
நலம் கார்திக்
இந்தியத் தமிழர் ஈழத்தமிழர் என்று பிரித்துப் பார்க்க வேண்டியதில்லை. தங்கள் கருத்தில் கோவம் தெரிகின்றது.
படத்தைப் பலதடவைகள் பார்த்தேன். திரைப்படம் பார்க்கு முன்பே ஈழத்தமிழர்கள் இந்தியக் கலைஞர்களை தலையில் வைத்து ஆடுவதைக் கண்டு தலையிடியில் இருந்தேன். படத்தைப் பார்த்த போது தலையிடி இன்னும் அதிகரித்து விட்டது.
ஈழத்தமிழர் பிரச்சனை என்பது மிகவும் மென்மையான ஒரு விடையம். ஈழத்தமிழர்கள் களைத்துப் போய் விட்டார்கள். மனநிலை பாதித்தவர்களும், உடல் அங்கங்களை இழந்தவர்களும்தான் அங்கே மிஞ்சப் போகின்றார்கள். இந்த நிலை போரிடும் இரு சாராருக்கும் தெரிந்திருந்தும் தொடர்கின்றது இந்த அவலநிலை.
ராமேஸ்வரத்திற்கு நான் இன்னும் செல்லவில்லை. ஆனால் தெரிந்தவர்கள் மூலம் பல விடையங்களை அறிந்திருக்கின்றேன். அதிக விளக்கம் தர நான் விரும்பவில்லை. அடிப்படைத் தேவைகள் அற்ற நிலையில் இருக்கின்றார்கள் என்பதற்கு ஆதாரங்கள் இருக்கின்றன. வெறும் திரைப்டத்தைப் பார்த்து விட்டு நான் எழுதவில்லை. மணிவண்ணன் சட்டையைக் கழற்றிக் கொடுத்தது என்னை ஒன்றும் 'டச்' பண்ணவில்லை. அவர்களின் எதிர்காலம் என்ன? பல அடிப்படைத் தேவைகள் நிராகரிக்கப்பட்டிருப்பதாக அறிந்தேன். வெறும் வதந்தியாக இருப்பின் சந்தோஷம்தான். இந்தியாவின் பொருளாதார நிலையில் ஈழத்து அகதிகளை அவர்கள் ஏற்றுக்கொண்டதே பெரும் விடையம் என்று எண்ணிவிட்டுப் போக என்னால் முடியவில்லை. அதற்காக கனடாவில் நாங்கள் ஒன்றும் வெட்டி விழுத்தவில்லை. இங்கு பல புலம்பெயர்ந்தவர்களின் செழித்த வாழ்வும் ஈழப்போராட்டத்தால்தான் கிடைக்கின்றது.
திரைப்பட இயக்குனர்களுக்கு இது இன்னுமொரு சினிமா.. அதை அவர்கள் எப்படியும் எடுத்து விட்டுப் போகட்டும்.. ஈழத்தமிழர்கள் ஏன் இந்தியச் சினிமாவைப் பார்கின்றார்கள் என்று நான் கேட்கவில்லை. எதற்காக இந்தியக் கலைஞர்களைத் தலையில் வைத்து ஆடுகின்றார்கள் என்றுதான் கேட்டேன். அதனை அவர்கள் தமக்கான ஒரு தகுதியாக நினைப்பது எனக்கு உண்மையிலேயே வெட்கமாக உள்ளது.
கறுப்பி
வருக! நீண்ட இடைவெளிக்கு பிறகு!
உங்கள் விமர்சனத்தில் கோபம் அதிகம் தெரிகிறது.
இராமேஸ்வரம் படம், நிச்சயம் தவறான படம் அல்ல! நல்ல வசனங்கள், நல்ல ஒளிப்பதிவு! ஓரளவு நல்ல கதையும் கூட...
ஈழ் தமிழர்களின் வாழ்வு நிலை மற்ற தமிழனுக்கும் புரிய வேண்டும், அதே சமயத்தில் அவர்கள் மனம் புண்படாத படி நடந்து கொள்ளவும் வேண்டும்.
"கன்னத்தில் முத்தமிட்டாலை" விட இராமேஸ்வரம் படம் பரவாயில்லை என்பது என் கருத்து. நந்தாகூட நல்ல படம்.
ஈழத் தமிழர்களால் ஓர் படத்தை வெற்றிப் படமாக மாற்ற முடியும் என்ற நம்பிக்கை எனக்கு இல்லை!
மற்றப்படி உங்கள் கருத்துகளில் கார்த்திக் சொன்னதைப் போல பலவற்றில் உடன்பாடு இல்லை!
மயிலாடுதுறை சிவா...
உண்மை.....
நீண்ட இடை வெளிக்கு பிறகு எழுதி இருக்கிறீர்கள்... கருத்துக்களத்தில் இப்பொழுதும் எழுதுவீர்களோ..
கறுப்பி,
கேம்ப் களில் நிலைமை மோசமானதாக இருப்பதாகவே சமீபத்திய அறிக்கைகள்
இருக்கின்றன. உதாரணமாக, இந்த 2006ஆம் ஆண்டு அறிக்கையை இணையத்தில் தேடி வாசித்தேன்.
http://www.pucl.org/Topics/International/2006/refugees-srilanka-report.html
நான் சொல்லவந்தது சினிமாவிலே இப்படி காட்டினால் அப்படித்தான் இருக்குமோ என்று நல்லாதோ கெட்டதோ எதுவாக இருந்தாலும் அதை அப்படியே கள நிலவரம் போல எடுத்துக்கொண்டு விமர்சிப்பதை விமர்சிப்பதுதான்.
மற்றபடி நிலைமை மோசமாக இருந்தால் அதை எழுத/கண்டிக்க எனக்கும் ஆசையே.
நன்றி.
// மணிவண்ணன் சட்டையைக் கழற்றிக் கொடுத்தது என்னை ஒன்றும் 'டச்' பண்ணவில்லை//
உங்களை 'டச்' பண்ணவில்லை என்றால் படத்தில் இல்லை என்று எழுதுவீர்களா? :)
//அதிக விளக்கம் தர நான் விரும்பவில்லை//
இதுக்கு ஒரு பத்து ஸ்மைலி போடலாம் தாயே !
கோவமெல்லாம் இல்லை :)
இந்தப்படம் சுமார்/நல்லா இருக்கு என்றே எனக்கு பட்டது. ஒருவேளை ஈழப்பிரச்சினையை
வாசிப்பதால் இருக்கலாமோ தெரியவில்லை.
ஷரீப்
கறுப்பி என்று அழைக்கலாம். அழகான பெயர் அது. ஆணிவேர் படத்தில் கழுத்து நரம்பு புடைக்கக் கத்துவதும், இரத்த வெள்ளத்தில் சிதறுண்ட உடல்களும், மேக்கப் கலையாத மதுமிதாவும்தான் உள்ளன. இது வெறும் ஜனரஞ்சகத் திரைப்படம். அதைவிட ஈழத்தில் இருந்து வெளிவரும் ஒளீவீச்சுப் பிரதிகளும் குறுந்திரைப்படங்களும் யதார்தமாக உள்ளன
குழைக்காட்டான்
சும்மா இருங்கள் பார்க்கலாம். (*_*)
மயிலாடுதுறை சிவா!!
நீங்கள் சொன்னாலும் சொல்லாட்டாலும் அதுதான் நிஜம். புலம்பெயர்ந்த ஈழத்தமிழர்கள் வாராவாரம் டொலர்களையும், பௌன்ஸ்களையும், யூரோக்களையும் (இன்னும் தெரியாத நாணயங்கள்) அள்ளிக் கொடுத்து தமிழ் திரைப்படங்களை வாங்காமல் விட்டால் தமிழ் நாட்டு சினிமாவின் கதி அதோ கதிதான்.(*-*)
தமிழன் நன்றி!!
கார்த்திக்
திரைப்படம் என்று பார்த்து விட்டுப் போவதென்றால் சரி. அது சரி எப்படி இருக்கின்றீர்கள்?
அனாமினஸ்
பெயரோடு வந்தால் நல்லது. பரவாயில்லை.. ஒரு திரைப்படத்தைப் பற்றி எழுத நினைக்கையில் பல தடவைகள் பார்ப்பது எனது வழக்கம். அதுவும் குறை கூற நினைக்கையில் நிச்சயம் தேவை. அத்தோடு எனக்கும் ராமேஸ்வரம் செல்லும் எண்ணம் இருக்கிறது என்றும் வைத்துக் கொள்ளலாம்.
கனகாலத்துக்குப்பிறகு வந்திருக்கிறியள்.
படத்தலைப்பைச் சுருக்கிவிட்டீர்கள். 'யாழ்ப்பாணத்திலிருந்து 36 மைல்' எண்டு வேலை மினக்கெட்டு ஏன் பெயர் வைத்திருக்கிறார்கள்?
அங்கதான் இருக்கு விசயமே...
கதை ஏதோ இப்ப நடக்கிறமாதிரித்தான் படம் போகுது.
அகதிகளை வெளித்தள்ளும் மன்னாரை விட்டுவிட்டு என்ன கோதாரிக்கு யாழ்ப்பாணம் படத்தலைப்பா வருது எண்டு விளங்கேல.
அதைவிட, கூப்பிடு தூரத்திலயிருக்கிற மன்னாரை விட்டிட்டு தள்ளியிருக்கிற யாழ்ப்பாணம் ஏன் தலைப்பில வந்ததெண்டும் விளங்கேல.
"ராமேஸ்வரம்: மன்னாரிலிருந்து 18 மைல்" எண்டு தலைப்பை வைச்சிருக்கலாமெல்லோ?
இதுகள் விளங்கினா ஏனிந்தப்பாடு.
இன்குலாப் எழுதி வாணி ஜெயராம் பாடின பாட்டொண்டு இருக்கு.
'கத்திடக் கேட்டிடும் துரமெல்லோ - அலை
கைவந்து தாங்கிடும் நீளமெல்லோ'
vanakam, ungaludaya tamil parru ennai viyapuraseidadu. indruthan ungaludaya valaithalathai kanden. ungaludaya vimarisanam unmai nilaiai unarthukiradhu, nanry vanakam.
Post a Comment