Friday, January 21, 2005

Mr and Mrs. Iyer

எனது பார்வையில் ஒரு தரமான திரைப்படம் எப்படியெல்லாம் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கின்றேனோ அத்தனையும் கொண்டு வெளி வந்த திரைப்படம் Mr.and Mrs. Iyer.
பலதரப்பட்ட பயணிகளுடன் கல்கத்தா செல்லும் ஒரு பஸ் பயணத்துடன் திரைப்படம் ஆரம்பமாகின்றது.


மற்றவர்களைப் பற்றி அலட்டிக்கொள்ளாமல் லுாட்டி அடிக்கும் இளைஞர் யுவதிகள் கூட்டம், அமைதியாக அவற்றையெல்லாம் பொறுத்துக்கொண்டு அமர்ந்திருக்கும் ஒரு முஸ்லீம் முதிய தம்பதிகள், புதிதாகத் திருமணம் செய்த காதல் பறவைகள், இரண்டு சீக்கிய இளைஞர்கள் என்று பலருக்கிடையில் திரைப்படத்தின் நாயகி மீனாட்சி ஐயார் (கொங்கோனா சென்சர்மா) தனது 5மாதக் குழந்தை சந்தானத்துடன், நாயகன் ராஜா செளத்ரி (ராகுல் பொஸ்)முஸ்லீம் வனவிலங்குப் புகைப்படக் கலைஞர் என்று பயணம் ஆரம்பமாகின்றது.
கல்கத்தாவில் இருக்கும் கணவன் வீட்டிற்குத் திடீரென்று போக வேண்டி நேர்ந்ததால் தனது குழந்தையுடன் புறப்பட்டு விட்ட மீனாட்சியைப் பார்த்துக் கொள்ளுமாறு அவர்களின் பெற்றோர் ராஜா செளத்தியிடம் கேட்டுக்கொண்டதை இட்டு, அழும் குழந்தையை விளையாட்டுக்காட்டல், குழந்தையைத் துாங்க வைத்தல் போன்ற சின்னச்சின்ன உதவிகளை ராஜா செளத்ரி மீனாட்சிக்குச் செய்த போதும் தவிர்க்க முடியாத காரணங்களால் முன்பின் தெரியாத ஒரு முஸ்லீம் இளைஞனிடம் தாம் உதவி கேட்க நேரிட்டுவிட்டதே என்ற கடுப்புத்தான் அவள் முகத்தில் தெரிகின்றது. இரவு நேரம் பயணக்களைப்பில் அனைவரும் அயர்ந்து விட பஸ் நிறுத்தப்படுகின்றது.


உள்ளூர் கலவரத்தால் பயணத்தைத் தொடர முடியாத நிலையில் பயத்துடன் பயணிகள் பஸ்ஸில் அமர்ந்திருக்க நெருப்புப் பந்தக்களுடன் இந்து தீவிர வாதிகள் பஸ்ஸில் நுழைந்து பயணிகளின் பெயர்களைக் கேட்டு முஸ்லீம்களை அடையாளம் காண முயல்கின்றார்கள். முஸ்லீம் இளைஞன் என்பதற்காய் ராஜா செளத்ரி கொடுத்த தண்ணீரைக் கூடக் குடிக்க விரும்பாத நிலையில் இருந்த மீனாட்சி தீவிர வாதிகள் அவர்கள் பெயரைக் கேட்ட போது திடமாக Mr. and Mrs Iyer என்று தங்களை அறிமுகப்படுத்தி அவன் கைகளைப் பிடித்துக் கொள்கின்றாள்.
இனவாதம் என்பது மொழி, மதம் என்று தலை துாக்கி ஆடினாலும் அதையும் மீறிய மனிதாபிமானம் இன்னும் இருக்கின்றது என்பதைத் தான் எந்த வித வன்முறைக் காட்சிகளையும் திரையில் கொண்டு வராமல், வன்முறையில் அதி உச்ச பாதிப்பையும் மனிதாபி மானத்தையும் படமாக்கி உள்ளார் அபர்ணா சென்.
அதன் பின்னர் ராஜா செளத்ரி, மீனாட்சிக்குள்ளான நட்பு நம்பிக்கை வளர்வதைக் கவிதையாக் காட்டி, இறுதியில் இந்தியக் கலாச்சாரத்தையும் மென்னையாகக் கேள்விக்குறியாக்கியுள்ளார் அபர்ணா சென்.
ஒரு வன்முறையாளன், வயோதிபன், வியாதிக்காறன் இப்படியான ஒருவனைக் கணவனாகக் கொண்ட ஒரு பெண் வேறு ஒருத்தன் மேல் காதல் வயப்படுவது என்பதைத் தான் நாம் திரையில் பார்த்திருக்கின்றோம். அன்பான படித்து நல்ல நிலையில் இருக்கும் ஒரு அழகான கணவனை மீனாட்சி கொண்டிருந்த போதும் சந்தர்பம் சூழ்நிலை புரிந்துணர்வு என்பன எவரையும் தடுமாற வைக்கும் என்பதை மீனாட்சி, ராஜா செளத்ரிக்கிடையில் ஏற்படும் உடல் ரீதி அற்ற அந்தக் காதல், நாம் பார்க்கும் இளசுகளின் காதலிலும் விட அழகாகக் காட்டப்பட்டிருக்கின்றது.


கொங்கோனா சென்சர்மா பதட்டம், வெறுப்பு, அழுகை, காதல் என்று தன் நடிப்பாற்றலைக் காட்டியிருந்த போதும், ராகுல் போஸ்ஸின் அந்த மின்னும் கண்களும் மெல்லிய புன்னகையும் எல்லாவற்றையும் மெளனமாகச் சொல்லி நிற்பதும் மனதை நிறைக்கின்றது.
சின்னதேவதையைப் போலவே இனக்கலவரத்தின் வன்முறை உச்சத்தை, வன்முறையைத் திரையில் கொண்டு வராமல் எம்மை உறைய வைத்த ஒரு திரைப்படம் இது.ஒட்டு மொத்தமாக ஒரு தரமான திரைப்படத்திற்கு என்னவெல்லாம் தேவையோ அவற்றைக் கொண்டுள்ளது இந்த Mr. and Mrs iyer திரைப்படம்.
Producer: N. Venkatesan Director: Aparna Sen Starring: Rahul Bose, Konkona Sensharma, Bharat Kaul Music: Ustad Zakir Hussain

8 comments:

Anonymous said...
This comment has been removed by a blog administrator.
Chithran Raghunath said...

Nice review.

I have seen this film twice.

Voice on Wings said...

Bioscope வலைப்பதிவில் மறுபதிப்பு செய்யப் பட்ட இந்த பதிவை இப்போதுதான் படித்தேன். இந்த படத்தைக் குறித்து வேறொரு பெண் நண்பருடன் சண்டையிட்டிருக்கிறேன்.

//அன்பான படித்து நல்ல நிலையில் இருக்கும் ஒரு அழகான கணவனை மீனாட்சி கொண்டிருந்த போதும் சந்தர்பம் சூழ்நிலை புரிந்துணர்வு என்பன எவரையும் தடுமாற வைக்கும் என்பதை மீனாட்சி, ராஜா செளத்ரிக்கிடையில் ஏற்படும் உடல் ரீதி அற்ற அந்தக் காதல், நாம் பார்க்கும் இளசுகளின் காதலிலும் விட அழகாகக் காட்டப்பட்டிருக்கின்றது.//

அப்படி காதலித்ததை ஏதோவொரு சாதனை போல் காண்பித்திருந்தார்கள். நிலை தடுமாறும் ஒரு ஆணை கண்டனம் செய்ய தயார் நிலையில் ஒரு கூட்டமிருக்க (உ-ம்: 'சிந்து பைரவி', 'ரெட்டைவால் குருவி' போன்ற படங்களைக் குறித்து பெண்ணிய வட்டாரங்களில் எழுந்த சலசலப்புகள்), இந்த படத்தில் நிலைதடுமாறும் பெண்ணைக் குறித்து யாரும் மூச்சு விட கூட முனையவில்லை. நீங்கள் வேறு 'அழகாக காட்டப் பட்டிருக்கிறது' என்று தோத்திரம் பாடிவிட்டீர். இதை இன்று நிலவும் 'double standards' என்று எடுத்துக்கொள்ள வேண்டுமா?

மதக் கலவரம் என்ற மைய கருத்தைக் கொண்டதால் மற்ற அம்சங்கள் கவனம் பெறாதிருந்திருக்கலாம். இருந்தும், இந்த 'காதல்' என்ற திருப்பம் படத்திற்கு ஒரு jarring noteஆகவே இருந்தது.

Jayaprakash Sampath said...

VoW : தான் ஒரு ஆண் என்ற காரணத்தால் மட்டுமே, இன்னொரு பெண் ( other woman) மீது, மோகம் கொள்ள உரிமை இருக்கிறது என்றும், அதற்கான நியாயமான காரண காரியங்கள் இருக்கிறது ( சுலக்ஷணா இசை அறிவில்லாத தத்தி, அர்ச்சனா, குழந்தை பெற்றுக்கொள்ள விரும்பும் கணவனின் ஆசை தெரியாத அளவுக்கு insensitive) என்றும் நினைக்கும் கதாநாயகனுக்கும், தன்னந்தனியான ரயில்கூப்பேயில், ராஹ¤ல் போஸ் மீது, முந்திய நாளின் சம்பவங்களின் தொடர்ச்சியாக, இயற்கையாக சஞ்சலம் கொள்கின்ற மிஸிஸ் ஐய்யருக்கும் அதிக வித்தியாசம் இருக்கின்றது

Voice on Wings said...

இத, இத, இதத்தான் நான் எதிர்பார்த்தேன் :) என்னங்க, icarus பிரகாஷ், ஒரு பெண் நிலை தடுமாறுனா அது புனிதமான சஞ்சலம், தூய்மையான ஒன்று, அதே ஒரு ஆண் செஞ்சா அது ஆண் என்ற ஒரே காரணத்துனால இருக்கற திமிரோட செஞ்சது, அப்படித்தானே? இரு (அல்லது மூன்று) சூழ்நிலைகளுக்கும் இருக்கும் பெரியதொரு வித்தியாசத்தைக் கூறுங்கள் பார்ப்போம்? இவர்கள் அனைவருமே செய்வது, திருமணம் என்ற அமைப்புக்குள் இருந்து கொண்டு செய்யும் நம்பிக்கைத் துரோகம் என்பதைவிட வேறொன்றும் எனக்குப் புலப்படவில்லை. காரண காரியங்கள் கற்பிப்பது இந்த Mrs.Iyer விஷயத்திலும் நீங்கள் செய்கின்ற ஒன்று தானே (சமீபத்திய சம்பவங்கள் etc etc)?

கறுப்பி said...

Voice of wings/ icarus
சரி, பிழை என்று மனித மனங்களின் விளையாட்டை ஒரே வரியில் கூறிவிட்டுப் போக முடியாது. சலனம் எவருக்கும் வரலாம். அதற்குப் பால், வயது, மொழி, மதம் ஒன்றுமில்லை. ஆனால் எமது சமூகத்தில் ஆண்களுக்கு அது வரலாம் என்ற சார்பு நிலை இருக்கின்றது. ராமர் போல் ஆண்கள் இருக்க வேண்டும் என்று விரும்பினாலும் சலனப்படும் ஆண்களைத் திட்டி விட்டு ஏற்றுக்கொள்கிறது எமது சமூகம். ஆனால் பெண்களுக்கு கற்பு என்று ஒன்றை வைத்துப் பூச்சாண்டி காட்டி மீறுபவர்களு மரண தண்டனை கூட வழங்கத் தயங்காது. இந்த நிலையை உடைக்கும் வகையில் வெளிவந்திருப்பதுதான் என்னைக் கவர்ந்திருக்கின்றது. இங்கே குடும்பம், துரோகம் என்று ஆராயத்தேவையில்லை என்பதே என் கருத்து.

Voice on Wings said...

கறுப்பி, சலனங்கள் யாருக்கு வேண்டுமானாலும் வரலாம் என்பதை ஆமோதிக்கிறேன். சரி / தவறு என்று தீர்ப்பு கூறாவிட்டாலும், திருமணம் என்ற பந்தத்துக்குள் இருக்கும் ஒருவர் சலனப்படுவது விரும்பத்தக்க ஒன்றல்ல என்ற வரையில் நீங்களும் என்னோடு ஒத்து போவீர்களென நம்புகிறேன். நீங்கள் கூறுவது போல் சமுதாயத்தின் பார்வையில் சில ஆண் - பெண் பேதங்கள் இருப்பதையும் நான் மறுக்கவில்லை (மரண தன்டனை என்ற exaggerationஐத் தவிர்த்து).

நான் கூறுவதெல்லாம், 'சலனப்படும் ஆண்' சினிமா போன்ற மீடியாக்களில் கண்டனத்துக்கும் விமர்சனத்துக்கும் ஆளாகிறான் (ஹாலிவூட்டிலும் ஏறக்குறைய அதே நிலைதான்). அப்படி காண்பிக்கவில்லையென்றால் அது படத் தயாரிப்பாளர்களின் குற்றமாக பாவிக்கப்படும், சமூகநல விரும்பிகளால் (பெண்ணியவாதிகளையும் சேர்த்து). நான் குறிப்பிட்ட படங்களுக்கு எழுந்த எதிர்ப்புக் குரல்களே இதற்கு சான்று. அதுவே சலனப்படுவது பெண் என்றால், அது அவளது விடுதலையின் அறிகுறியாகப் புரிந்துகொள்ளப் படுகிறது, போற்றப் படுகிறது. நீங்கள் விமரிசித்த இந்த படத்தையே எடுத்துக் கொள்ளுங்கள். படத்தின் இறுதியில் கணவனும் குழந்தையும் அருகிலிருக்க, அவளது பிரிவுத்துயரும், காதலனை பார்க்கும் ஏக்கப் பார்வையுமே பிரதானமாக காட்டப் படுகிறது. நம் படம் பார்க்கும் சகோதர சகோதரிகளின் கண்ணீரையும் வரவழைக்கும் வகையில். 'தெய்வீகம்' நிரம்பிய அந்தக் காதல் நிறைவேறாது போகும் சோகம் படம் பார்ப்பவரை வாட்டுகிறது. Short of glorifying, her act of straying is given a stamp of approval.

என்னவோ, என்னால் ஒத்து போக முடியவில்லை. ஒருவனது உயிரைக் காக்க அவனே என் கணவன் என்றறிவித்தபோது அவள் மீது ஏற்பட்ட மதிப்பு, அவளது சலனத்தைக் கண்டு முற்றும் சரிந்தது என்பதே உண்மை.

கறுப்பி said...

தாங்கள் கூறுவதில் சிறிது உண்மை இருந்தாலும் எமது சமூகம் பெண்கள் சலனப்படுவதை பார்ப்பதிலும் ஆண்கள் சலனப்படுவதைப் பார்ப்பதிலும் மிகுந்த வேறுபாடு இருக்கின்றது. நான் மரணதண்டனை என்று குறிப்பிட்டது கோட் மூலம் கிடைப்பதை அல்ல. எமது தமிழ் சினிமா எப்படிக் கூறி வருகின்றது என்று ஒருமுறை பாருங்கள். ஒரு பெண் பாலியல் வல்லுறவிற்கு ஆளானாள் அவள் தனது பெண்மையைக் கற்பை இழந்து விட்டதாகவும் இந்தச் சமூகத்தில் தனக்கு வாழ இனி அருகதை இல்லை என்பதாயும் தற்கொலை செய்து கொள்வதா எத்தனை படங்கள் வந்திருக்கின்றன. அதே நேரம் அவளைப் பலாத்காரம் செய்தவனுக்கு ஒன்றுமில்லை. இல்லாவிட்டால் அந்தப் பெண் பலாத்காரம் செய்தவனைத் தான் திருமணம் செய்து கொள்வாள். அவள் எவ்வளவு கொடுமையானவனாக இருப்பினும். இப்படியான ஒரு சமூகத்தில் ஒரு குடும்பப்பெண் நல்லவள் ஒரு நல்ல ஆணோடு பயம் செய்து பல இன்னல்களுக்கிடையில் தப்பிப்பிழைத்து வரும் போது அவன் மீது ஒரு கவர்ச்சி வரும். இந்த அண்ணா தங்கை டயலாக் எல்லாம் தமிழ் படங்களுக்குத் தான் சரி. அந்தப் பெண்ணிற்கு அந்த ஆணின் மீது ஒரு கவர்ச்சி சலனம் வராவி;ட்டால் அவளை நான் ஒரு சாதாரண மனுசியாகக் கணிக்கமாட்டேன். தனது சலனத்தைக் காட்டாமல் வேணுமென்றால் ஒளித்திருக்கலாம். ஆனால் மீனாட்சி அதைச் செய்யவில்லை. மிக யதார்த்தமாக உண்மை நிலையை படமாக்கியிருக்கின்றார் அபர்ணா சென். இது தங்களுக்கு ஏற்க முடியாமல் இருந்தால் அது உங்கள் கருத்து. ஆனால் என்னால் முற்றுமுழுதாக ஏற்க முடிகிறது.