Tuesday, October 25, 2005

லண்டனில் ஒரு மாலைப் பொழுது

லண்டனில் இடம் பெற்ற 24வது பெண்கள் சந்திப்பு நிகழ்வில் கலந்து கொள்ளும் சந்தர்ப்பம் இந்த வருடம் எனக்குக் கிடைத்தது. பெண்கள் சந்திப்பு முடிந்த பின்னர் மீதி நாட்களில் பல இலக்கியவாதிகளுடன் கழிக்கும் சந்தர்ப்பம் கிடைத்தது. என்னை ஒரு குறும்பட இயக்குனர் என்ற வகையில் லண்டனில் இயங்கிக்கொண்டிருக்கும் ஈழவர கலைப்பிரிவின் அங்கத்தவர்களான பரிஸ்டர் ஜோசப் விமல் சொக்கநாதன் போன்றோர் ஒரு இரவு விருந்து உபசாரத்திற்கு அழைத்திருந்தார்கள். மாலை ஏழு மணியளவில் ஓவியர் கிருஷ்ணராஜா பத்மநாபஜயர் சகிதம் இலங்கையர் ஒருவரின் உணவகத்தில் சந்திப்பதாக ஒழுங்குகள் செய்யப்பட்டிருந்தன.

இந்த விருந்துபசாரத்தில் பரிஸ்டர் ஜோசப், விமல் சொக்கநாதன், கிருஷ்ணராஜா, பத்மநாபஜயர், பிபிசி ஆனந்தி, இளையஅப்துல்ல, போன்றோரும் இன்னும் சில லண்டன் இலக்கியவாதிகளும் கலந்து கொண்டார்கள். குறும்படங்கள் பற்றிய உரையாடல் ஒன்றை உணவருந்தியபடியே நிகழத்;துவோம் என்று ஜோசப் அவர்கள் முன்பே எனக்குக் கூறியிருந்தார்கள். எனக்கும் லண்டன் ஜரோப்பிய நாடுகளில் குறும்படங்களின் நிலை எப்படி இருக்கின்றது என்று அறியும் ஆவல் இருந்தது.

இது ஒரு நிகழ்வாக இல்லாமல் நண்பர்களுடனான குறும்படம் பற்றிய ஒரு உரையாடலாக அமைந்திருக்கும் என்று எண்ணியிருந்தேன், குளிர்பானங்கள் அருந்திய வண்ணம் உரையாடல் ஆரம்பமானது. முதலில் எல்லோரும் தம்மை அறிமுகப்படுத்திய பின்னர் கலந்துரையாட முனைகையில் பிபிசி ஆனந்தி அவர்கள் பெண்கள் சந்திப்பு பற்றியும் அதன் அனுபங்கள் பற்றியும் என்னிடம் கேட்டார். ஜரோப்பாவில் இருந்து பல பெண் இலக்கிய ஆவலர்களும் இந்தியாவிலிருந்து எழுத்தாளர் திலகபாமா இலங்கையில் இருந்து ஓவியை வாசுகி தினக்குரல் நிருபர் தேவகௌரி போன்றோரும் கலந்து கொண்டிருந்தார்கள். இப்படியாக ஒரு கூரையில் கீழ் பல் துறைகளிலும் மிளிரும் பெண்களைச் சந்திக்கும் சந்தர்ப்பம் கிடைத்தது மிகவும் சந்தோஷமாக இருக்கின்றது என்றேன். 24வது பெண்கள் சந்திப்பிற்குப் பொறுப்பாக இருந்த எழுத்தாளர் ராஜேஸ்வரி பாலசுப்பரமணியம் அவர்கள் தன்னையும் அழைத்திருந்ததாகவும் தனக்கு இந்தப் பெண்கள் சந்திப்பில் உடன்பாடு இல்லாததால் கலந்து கொள்ளவில்லை என்று ஆனந்தி கூறினார்.

கனடாவிலிருந்து பெண்கள் சந்திப்பிற்கு விருந்தினராகக் கலந்து கொண்ட நான் குறும்படங்கள் பற்றிய ஒரு உரையாடல் நிகழ்வில் பல ஆண்கள் கலந்து கொண்டிருக்கும் ஒரு விருந்துபசாரத்தில் அதிகம் பெண்கள் சந்திப்புப் பற்றி உரையாட விரும்பாததால் மௌனமாக இருந்தேன். ஆனந்தி தொடர்ந்தார் பெண்கள் சந்திப்பில் கலந்து கொள்ளும் பெண்கள் விடுதலைப்புலிக்கு எதிரானவர்கள் என்றும் அவர்கள் விடுதலைப்புலிகளைத் தாக்கி பெண்கள் சந்திப்பில் உரையாடுகின்றார்கள் என்றும் அதனால்தான் தான் கலந்து கொள்ள விரும்பவில்லை என்றும் கூறினார்.

ஆனந்தியின் இந்த அறிக்கையின் பின்னர் பெண்கள் சந்திப்பில் கலந்து கொண்டிருந்த நான் மௌனமாக இருப்பது தகாது என்றெண்ணி சில கருத்துக்களைக் கூற வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டேன்.
பெண்கள் சந்திப்பில் முக்கியமாக உலகெங்கும் வாழும் தமிழ்ப் பெண்களின் நிலைபற்றியே பேசப்பட்டது. இந்தியப் பெண்களின் பாதிப்பு ஒருமாதிரியாகவும், போர் சு10ழலில் வாழ்ந்து கொண்டிருக்கும் இலங்கைப் பெண்களின் நிலமை ஒருமாதிரியானதாகவும், புலம்பெயர்ந்து வாழ்ந்து கொண்டிருக்கும் பெண்களின் நிலமை இவற்றிலிருந்து முற்றிலும் மாறுபட்டதாகவும் காணப்படுகின்றது. இப்படியாக உலகெங்கும் பரவிக்கிடக்கும் பெண்களின் வாழ்க்கைமுறை, அவர்களுக்கான பாதிப்புக்கள் பற்றிய ஒரு உரையாடலாகத்தான் பெண்கள் சந்திப்பு அமைந்திருந்தது என்றும், தெற்காசியப் பெண்களுக்காய் வேலை செய்யும் ஓவியை வாசுகி தமிழ் பெண்கள் என்று மட்டுமல்லாமல் தெற்காசியப் பெண்களின் நிலை பற்றி விளக்கமாகக் கூறினார் என்றும் ஆனந்தியிடம் நான் கூறினேன். அத்தோடு அரசியல் என்பது பெண்கள் சந்திப்பின் ஒரு பகுதி ஆகாது என்றும், இருந்தும் அரசியலால் ஒரு பெண் அதாவது இலங்கை ராணுவத்தாலோ இல்லாவிட்டால் இயக்கங்களாலோ அது எந்த இயக்கமாக இருந்த போதும் ஒரு பெண் பாதிப்பிற்குட்பட்டால் அதற்கான எதிர் குரலைப் பெண்கள் சந்திப்பில் கலந்து கொள்ளும் பெண்கள் எழுப்புவார்கள் என்றும் கூறினேன்.

ஆனந்திக்கு இந்தப் பதிலும் திருப்தியைத் தரவில்லை. பல நாடுகளிலிருந்தும் பெண்கள் கலந்து கொண்டு வேண்டாத கதை எல்லாம் கதைக்கின்றார்கள் என்று தொடர்ந்தார். இதன் பின்னர் விளக்கம் கூற நான் விரும்பவில்லை. இலங்கையில் நடந்த பல கொலைகளை நியாயப்படுத்துவதாகவும் சிறுவர்கள் போராட்டத்தில் இணைந்து கொள்வது கட்டாயத்தால் அல்ல அவர்கள் விரும்பி தமக்கான ஒரு நல்ல விடிவிற்காய் இணைந்து கொள்கின்றார்கள் என்றும் அந்த விருதுபசாரத்திற்கு முற்றிலும் மாறன விடயங்களை தொடர்ந்தும் பேசிக்கொண்டிருந்தார். பலரும் மௌனமாக இருந்தார்கள். இந்த உரையாடலுக்கு முற்றுப் புள்ளி வைக்க எண்ணி கொலைகளை நான் நிராகரிக்கின்றேன். அதனோடு என்னால் ஒத்துப் போக முடியாது. அது எந்த வகையாக இருப்பினும் சரி. இலங்கை இராணுவம் அதைச் செய்கின்றதா? அதற்கான காரணங்கள் எமக்குத் தேவையில்லை. தமிழ் இயக்கங்கள் செய்கின்றனவா அதற்கான காரணங்களும் எமக்குத் தேவையில்லை. மனிதாபிமானமற்று கொலைகள் மலிந்து விட்டிருப்பது என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது இந்த உரையாடலை இத்தோடு நிறுத்திக் கொள்வோம். தொடர்ந்தால் வீணான வாக்குவாதம் வரும் என்றேன். பரிஸ்டர் ஜோசப் குறும்படங்கள் பற்றி உரையாடுவோம் என்று பேச்சைத் திருப்பினார். இருந்தும் ஆனந்தி தொடர்ந்து எதையோ கூற முயன்று கொண்டிருந்தார்.

அதன் பின்னர் தீபம் தொலைக்காட்சியில் பணி புரியும் எழுத்தாளர் இளையஅப்துல்லா ஈழத்தில் தற்போது சுத்த தமிழில் பேசுகின்றார்கள் ஜஸ் கிரீமை குளிர்க்கழி என்று சிறுவர்கள் எல்லோரும் அழைக்கின்றார்கள் கேட்பதற்குச் சந்தோஷமாக இருக்கிறது என்றார். எனக்கு சிரிப்பு வந்து விட்டது. இப்படியான மொழி மாற்றம் அவசியம் தானா என்று நான் கேட்டேன். ஏன் தமிழை வளர்ப்பதற்கு இப்படியான மொழி மாற்றம் நல்லது தானே என்றார் அந்த எழுத்தாளர். எங்கள் உரையாடலைக் கேட்டுக் கொண்டிருந்த ஆனந்தி லண்டனில் பல சிறுவர்கள் தமிழ் கதைக்கமாட்டார்கள் என்றும் பெற்றோர் அதனைப் பெருமையாகக் கூறுகின்றார்கள் என்றும் கூறினார். புலம்பெயர்ந்த நாடுகளில் தமிழ் கல்வி முறை தவறானதான இருக்கின்றது. சிறுவர்கள் பிரெஞ்ச் ஸ்பானிஷ் போன்ற மொழிகளை பலிய விரும்புகின்றார்கள் ஆனால் தமிழ்க் கல்வி முறை மிகவும் கடினமாக உள்ளதால் அவர்களுக்கு அதில் ஈடுபாடில்லாமல் இருக்கின்றது. திருக்குறளையும் ஆறுமுகநாவலரையும் எதற்காக புலம்பெயர்ந்த சிறுவர்களுக்கு புகுத்துகின்றார்கள் என்று புரியவில்லை என்றும் எனது குழந்தைகளுக்கு நான் இலங்கை இந்தியா போன்ற நாடுகளில் இருந்து வெளிவந்து கொண்டிருக்கும் ஆங்கிய இலக்கியங்களை படிக்க வலியுறுத்துகின்றேன் இது எமது நாடு வாழ்கை முறை பற்றி போதிய அறிவை அவர்களுக்குக் கொடுக்கும் என்றேன். அதற்கு ஆனந்தி ஏன் திருக்குறளை எமது குழந்தைகள் அறிந்து கொண்டால் என்ன என்றார். திருக்குறளை தமிழ் சரளமாகத் தெரிந்த ஒரு குழந்தை அறிந்து கொள்ளலாம். பேச எழுதப் பயிலு முன்பே திருக்குறளைப் புகுத்த வேண்டுமா என்றதற்கு குழந்தைகளுக்குத் தமிழ் தெரியாது என்று கூறிக்கொண்டு ஆங்கிலத்தில் பேசுவதற்குப் பெருமைப்படுகின்றார்கள். தம்மைப் - பொஷ் - ஆகக் காட்டிக்கொள்ள விரும்பும் பெற்றோர்கள் என்றார் முன்நாள் பிபிசியின் தமிழ் செய்திப் பிரிவைச் சேர்ந்த ஆனந்தி அவர்கள். இந்த விருந்து உபசாரம் கிட்டத்தட்ட 3மணித்தியாலங்களுக்கு நீடித்தது என்று கூறலாம். இந்த மூன்று மணித்தியால நேரத்தில் எத்தனை பேர் எத்தனை தமிழ் வசனங்களைப் பாவித்து உரையாடினார்கள் என்று விரல் விட்டு எண்ணிவிட முடியும். முற்று முழுதாக ஆங்கிலத்தில்தான் உரையாடல்கள் நிகழ்ந்தது. நானும் கூடத்தான். அதிலும் முக்கியமாக முற்று முழதான ஆங்கிலத்தில் உரையாடியவர் முன்நாள் பிபிசி வானொலியின் தமிழ் செய்தி வாசிப்பாளர் ஆனந்தி அவர்கள் எனலாம்.

15 comments:

Boston Bala said...

பகிர்வுக்கு நன்றி.

கொழுவி said...

இதுபற்றி ஏற்கெனவே வந்த இருபதிவுகள்.
ஆனாலும் நேரடியாக பங்குபற்றியிருந்தது நீங்கள்தான்.

http://jananayagam.blogspot.com/2005/10/blog-post_113017979884546254.html

http://thoondil.blogspot.com/2005/10/blog-post_24.html

-/பெயரிலி. said...

கறுப்பி,
அருமையான பதிவு©
அதற்காக ப்ரோவின் நன்றி©


குளிர்க்கழி என்றால் களியோடு சிரிப்பு கழிய வேண்டியது நியாயந்தான். ஒரு சந்தேகம், இளைய அப்துல்லா குளிர்க்கழி என்று எழுதிக்காட்டினாரா, அல்லது நீங்களேதான் அவர் சொன்னதைக் கேட்டு குளிர்க்கழி என்று எழுதினீர்களா? ;-)

நிற்க. ஆனந்தி குறித்து அவரது பிபிஸியின் அண்மைய செய்தித்தருகையை வைத்து விடுதலைப்புலிகளுக்கு எதிரானவர் என்ற மாதிரி விடுதலைப்புலிகள் சார்பான ஓர் இணையச்செய்தித்தளத்திலே (எதுவென மறந்துவிட்டது) அடியோ அடியென அடித்திருந்தார்கள். இப்போது நீங்கள் நேரடியான அனுபவத்தோடு சொல்வதென்னவெனில், மாறாகவிருக்கின்றது.

ஆனந்தியின் ஒரு தலைப்பட்சமான கருத்தினை ஏற்கமுடியாதுதான். ஆனால், நீங்கள் ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் இணையத்திலே பொதுவாக வைக்கும் ஒரு தலைப்பட்சமான கருத்துகளைப் பற்றி ஏதுமே தெரிவிக்கவில்லையே. தவறாக எடுத்துக்கொள்ளாதீர்கள். உங்களைப் போலவே, "கொலைகளை நான் நிராகரிக்கின்றேன். அதனோடு என்னால் ஒத்துப் போக முடியாது. அது எந்த வகையாக இருப்பினும் சரி. இலங்கை இராணுவம் அதைச் செய்கின்றதா? அதற்கான காரணங்கள் எமக்குத் தேவையில்லை. தமிழ் இயக்கங்கள் செய்கின்றனவா அதற்கான காரணங்களும் எமக்குத் தேவையில்லை. மனிதாபிமானமற்று கொலைகள் மலிந்து விட்டிருப்பது என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது" என்ற கருத்தே பெருமளவிலே என்னுடையதுமென (காரணங்கள் எதுவெனத் தேவையென்றபோதுங்கூட) உங்களுக்கு நன்றாகத் தெரியும்

ஜெ. ராம்கி said...

//ஆனந்தி தொடர்ந்தார் பெண்கள் சந்திப்பில் கலந்து கொள்ளும் பெண்கள் விடுதலைப்புலிக்கு எதிரானவர்கள் என்றும் அவர்கள் விடுதலைப்புலிகளைத் தாக்கி பெண்கள் சந்திப்பில் உரையாடுகின்றார்கள் என்றும் அதனால்தான் தான் கலந்து கொள்ள விரும்பவில்லை என்றும் கூறினார்.
//

அதிர்ச்சியான விஷயம். ஆனந்தியின் ஒருதலைப்பட்சமான செயல்பாடுகள் பற்றி இதுவரை கேள்விப்பட்டிருக்கிறேன். கிட்டதட்ட உலக நிகழ்வுகள் அனைத்தும் தெரிந்த ஆனந்தி அக்காவை கிணற்றுத்தவளை ரேஞ்சுக்கு கற்பனை செய்ய முடியவில்லை.

ரஜினியை பற்றி தப்பாக பேசுவார்கள் என்பதற்காக கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை என்று நான் சொன்னால் பெயரிலி போன்ற பெரியவர்கள் ஹே..ஹே என்று எட்டிப்பார்த்துவிட்டு சிரித்துவிட்டு போவார்கள். இப்போது மூன்று பத்திகளில் விளக்கம் கொடுக்குமளவுக்கு பெயரிலி அய்யாவுக்கு சமீப காலத்தில் வந்திருக்கும் பெரிய அக்கறையை வரவேற்க வேண்டியதுதான்!

dondu(#11168674346665545885) said...

Hello pretty young lady,

பல நாட்களுக்கு பிறகு உங்கள் பதிவைக் காண்பதில் மகிழ்ச்சி.

ஆக, தமிழைப் பற்றி எல்லோரும் ஆங்கிலத்திலேயே உரையாடியிருக்கிறார்கள். பேஷ்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

கறுப்பி said...

பெயரிலி இளைய அப்துல்லா எழுதித்தான் காட்டினார் என்று சொன்னால் நீங்கள் அவரிடம் கேட்டவா போகின்றீர்கள்?

மேலும் ராஜேஸ்வரி பாலசுப்ரமணியத்தினது கருத்துப் பற்றிக் கேட்டிருந்தீர்கள். அத்தோடு கொழுவி தந்திருக்கும் இணைப்புக்களுக்கும் சென்று பெண்கள் சந்திப்பு பற்றிய குறிப்புக்களையும் பார்த்தேன்.

பெண்கள் சந்திப்பு அனுபவம் பற்றி எனது தளத்தில் போடுகின்றேன்.

-/பெயரிலி. said...
This comment has been removed by a blog administrator.
-/பெயரிலி. said...

கறுப்பி, இளைய அப்துல்லாவிடம் எழுதிக் கேட்கவல்ல. ஆனால், அது குளிர்க்களியா இல்லை குளிர்க்கழியா என்று சரியாக எழுதத்தெரியாமல், தமிழ் தேவைதானா என்று ஒருவர் வாதம் செய்வது முறையில்லையோ என்று தோன்றுகின்றது. ஆனால், 'குளிர்க்கழி' என்பது தேவையில்லை என்று எழுதமுன்னால், அது 'குளிர்க்கழி'யா அல்லது 'குளிர்க்களி'யா என்று சரிவர அறியாமல் எழுதிக் கழித்துக் களி கொள்வது தமிழின் கலியென்றே கொள்கிறேன் ;-)

உங்களின் முன்னைய பதிவொன்றிலேயே தமிழ்ச்சொற்களின் தேவை குறித்து எழுதியிருக்கின்றீர்கள். இன்னும் வேண்டுமானால், அதை இன்னொரு பதிவிலே தனியே கதைக்கலாம். இங்கே பெண்கள் சந்திப்பு குறித்ததினை மட்டுமே எழுதுவதிலிருந்து வாதம் திசைதிரும்பிவிடக்கூடாது.

Sri Rangan said...

கருப்பி,நான் டோண்டு அவர்களின் கருத்தையே இங்கு மீள் பதிவிடுகிறேன்.அவரைப் போலவே நானும் உணர்கிறேன்.



"Hello pretty young lady,

பல நாட்களுக்கு பிறகு உங்கள் பதிவைக் காண்பதில் மகிழ்ச்சி.

ஆக, தமிழைப் பற்றி எல்லோரும் ஆங்கிலத்திலேயே உரையாடியிருக்கிறார்கள். பேஷ்."

நட்புடன்
ஸ்ரீரங்கன்

வெளிகண்ட நாதர் said...

தமிழை தமிழில் நமக்குள் பேசக் கொள்ள பலர் முன்வருவதில்லை, அதிலும் அதிகம் படித்தது அதிகம் அறிந்து, தாயகம் துறந்து அக்கரை சீமையிலே வசிக்கும் நம்மவர்களை பற்றி சொல்லி பயனில்லை. அந்நிய மொழி மோகம், அதிலும் ஆங்கில மொழி கடவு வாங்கி கருத்து பரிமாறினால்தான் மேன்மையடைவோர் என்ற அக் கால அடிமைத்தனம் உருவாக்கிக் கொடுத்த தாழ்மையுணர்ச்சி. இனி எத்தனையுகமாயினும் இது நம்மை விட்டு அகலப்போவதில்லை,மொழி என்பது அடிப்படை கருத்து பரிமாற்ற கருவி என்பதறியும் வரை.

-/பெயரிலி. said...

கறுப்பி, என் முன்னைய பின்னூட்டமொன்றினை இந்தப்பதிவின் நோக்கிற்கு உதவாதென்பதால் நீக்கியிருக்கிறேன்.

கறுப்பி said...

Boston Bala,Koluvi, peyarili, Ramki, Nathar Thanks and

Specail thanks to Dondu and SriRangan for saying pretty young lady (*_*)

b said...

பகிர்வுக்கு நன்றி கறுப்பி.

(கருப்பியா? கறுப்பியா?)

ஜெ. ராம்கி said...
This comment has been removed by a blog administrator.
Sen Sithamparanathan said...

ஆங்கிலத்தில் பேசி தமிழ் வளர்க்கும் பலர் அவுஸ்ரேலியாவிலும் இருக்கிறார்கள். அவர்களில் ஒருவர்தான் ஆனந்தி போன்ற அரைக்குடங்கள்...