Tuesday, November 15, 2005

பெண்கள் - மூன்று திரைப்படங்கள்

அண்மையில் கலாச்சாரம் என்பது எப்படி அதிஉச்ச பாதிப்பைப் பெண்கள் வாழ்வில் ஏற்படுத்தி வந்திருக்கின்றது என்பதைக் காட்டுமுகமாக எடுக்கப்பட்ட மூன்று திரைப்படங்களைப் பார்த்தேன்.

“வோர்டர்” 30களில்; கணவனை இழந்த பெண்களின் வாழ்க்கை முறையைச் சித்தரிக்கும் படம். முக்கியமாக இத்திரைப்படத்தில் பால்யமணம்; செய்து கணவனை இழந்த பெண் குழந்தைகள் ஆச்சிரமத்தில் தமது மீதி வாழ்வைக் கழிக்க வேண்டிய கட்டாயம் என்பது இந்துக்களின் கலாச்சாரத்தில் கடுமையாக இருந்திருக்கின்றது என்பதை எடுத்துக் காட்டுகின்றது.
“மாக்டெலீனா சிஸ்டேஸ்” திரைப்படத்தில் கடந்த காலங்களில் அயர்லாந்து மக்களின் வாழ்க்கை முறையில் தவறிழைக்கும் பெண்களைச் சீர்திருத்தும் முகமாக எப்படிக் கத்தோலிக்க ஆச்சிரமங்கள் இயங்கிக்கொண்டிருந்திருக்கின்றன என்பதை எடுத்துக் காட்டுவதாக அமைந்திருக்கின்றது.
“மாத்ரபூமி” இதுவும் இந்தியாவைத் தளமாக் கொண்டு கள்ளிப்பால் கொடுத்துப் பெண் சிசுக்களை முற்றாக அழிக்கப்பட்டால், பின் வரும் சமுதாயம் அதனை எப்படி எதிர் கொண்டிருக்கும் என்று ஒரு அதீத கற்பனையை ஓட விட்டுப் படமாக்கியுள்ளார் இயக்குனர் மானிஷ் ஜஹா.

தீபா மேத்தா சர்ச்சைகளைக் கொடுக்கும் திரைக்கதைக்குள் அழகியலைப் புகுத்தி எல்லா மட்ட பார்வையாளர்களையும் திருப்திப்படுத்தும் உத்தியைக் கையாளுபவர். வோர்டரில் முக்கிய பாத்திரத்தில் நடிக்கும் லீசா ரேயின் அழகு, திரைப்படக் கதையின் முக்கியத்திற்குத் தேவையற்ற ஒன்றாகும். அவரது அழகும், காதல் காட்சிகளும், திரைக்கதையின் முக்கியத்திலிருந்து பார்வையாளர்கள் விடுவித்துக் கொண்டு அழகியலை ரசிக்கும் நிலைக்குத் தள்ளிச் செல்கின்றது. இது பெண்களுக்கு அன்று இழைக்கப்பட்ட கொடுமைகளை மனதில் பதிக்காமல் ஒரு திரைப்படம் பார்த்த பாதிப்பையே பார்வையாளர்களுக்கு ஏற்படுத்துகின்றது.
அதேவேளை “மாத்ரபூமி” பெண்களுக்கு கலாச்சாரம் என்ற பெயரில் இழைக்கப்படும் கொடுமைகளைப் பார்வையாளர்களின் மனதில் பதிய விட வேண்டும் என்ற ஆர்வம் அக்கறையுடனோ இல்லாவிட்டால் வேறு ஏதும் வியாபார உள்நோக்கத்துடனோ, பெண்ணுக்கு இழைக்கப் படக்கூடிய அதி உச்ச வன்முறைகளைப் படமாக்கி, பார்வையாளர்களுக்கு இரக்கத்திற்குப் பதிலாக ஒருவித சலிப்பையும், அருவருப்பையுமே விட்டுச் செல்கின்றது. திரைக்கதை பல விடைகளற்ற கேள்விகளுடன் தொக்கி நிற்கின்றது. கள்ளிப்பால் சிசுவதைத் தீவிரமாக் கையாளும் கிராமங்கள் சிலவற்றில் காலப்போக்கில் பெண்களே அழிந்து போய் விடும் நிலையில் எப்படி ஆண் சமுதாயம் இதனை எதிர்கொள்கின்றது என்பதே “மாத்ரபூமியின்” கரு. புல யதார்த்த முரண்பாடுகளோடு பெண் என்பவள் வெறும் வேலைக்காறியாகவும் போகப் பொருளாகவுமே பார்க்கப்படுகின்றாள் என்பதை தன்னால் முடிந்த அளவிற்கு வக்கிரமாகப் படமாக்கியுள்ளார் இயக்குனர்.

ஹோலிவூட்டைத் தவிர்த்து அனேக வேற்றுமொழித்திரைப்படங்கள் இயல்பாகக் கதை சொல்லத் தெரிந்தவை. அந்த வகையில் அயர்லாந்தில் பெண்களுக்கு ஏற்பட்ட கொடுமைகளை “மாக்டெலீனா சிஸ்டேஸ்” எனும் திரைப்படம் ஆர்ப்பாட்டமற்று மனதைத் தொடும் வகையில் காட்டியுள்ளது. இத்திரைப்படம் பாலியல்வன்புணர்விற்கு ஆளான இளம்பெண், திருமணத்திற்கு முன்பு குழந்தை பெற்ற ஒரு பெண், ஆண்களைக் கவரும் அழகிய பள்ளிமாணவி ஒருத்தி ஆகியோரின் வாழ்க்கையைச் சுற்றி, இவர்கள் மூவரும் சமூகத்திற்கு ஒவ்வாதவர்களா அவர்கள் குடும்பங்களாலேயே கணிக்கப்பட்டு மாக்டெலீனா கத்தோலிக்க ஆச்சிரமத்திற்கு அனுப்பப்படுவதாகவும், அங்கே அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள, அவமானங்கள் போன்றவற்றையும் கத்தோலிக்க சபையில் தொண்டு செய்யும் போதகர்கள், சிஸ்டர்மார் போன்றோரின் குரூரமான மனோபாவங்கள் போலித்தன்மைகள் போன்றவற்றை அடையாளம் காட்டுவதாக அமைந்திருக்கின்றது. வழமைபோல் ஹொலிவூட் அழகிய நடிகைகள் அழகற்றவர்களாகத் தோன்றாமல் பாத்திரப் பொருத்தம் மிகக் கச்சிதமாக அமைந்துள்ளது.

சமூக நோக்குள்ள கலைஞர்கள் தமது படைப்புக்களில் சமூகச்சீர்கேட்டை எடுத்துக்காட்டும் போது அழகியலுக்கு முக்கியத்துவம் கொடுத்து படைப்பின் முழு நோக்கத்தையும் திசை திருப்பி விடுகின்றார்கள். இது அனேகமாக தெற்காசியப்படைப்புக்களிலேயே காணக்கூடியதாக உள்ளது. முதியோர், குழந்தைகள், பெண்கள் இவர்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகள் படைப்பாக்கப்படும் போது பார்வையாளர்களை அது உளவியல் ரீதியாக மிகவும் தாக்குகின்றது என்பதை படைப்பாளிகள் நன்றாக அறிந்து வைத்திருக்கின்றார்கள். இது அவர்களுக்குப் பணம் பண்ணுவதற்கு ஒரு சிறந்த மூலதனமாகவும் அமைந்து விடுகின்றது. தீபா மேத்தா அதற்குள் அழகியலையும் இணைத்துவிடுகின்றார்.

Monday, November 14, 2005

எனக்கும் ஒரு வரம் கொடு..



குசினி மூலையில் வருபவர்களுக்குத் தேத்தண்ணி போடும் சாக்கில் நேரத்தைக் கடத்திக்கொண்டு நின்றாள் கௌசி. நினைவு மைவிழியையே சுத்திச் சுத்தி வந்துகொண்டிருந்தது. “தலைக்கு வாருங்கோ” எண்டு அண்ணா கூப்பிட்டுவிட ஆயாசத்தோடு மனம் நிறைய தண்ணியை அள்ளி அள்ளி வார்த்தாள் கௌசி “சரி காணும்” கிண்ணியைப் பிடுங்கி அண்ணியின் அக்கா அடுத்த பொம்பிளையிடம் குடுத்தாள்.
கன்னங்கள் சிவக்க முகத்தில வடிந்த தண்ணியை சிரித்த படியே வாங்கிக் கொண்டு, மைவிழி கௌசியின் கைய வருடி விட்டாள். சிலிர்த்த உடம்பு அடங்க முதல் அவளை கட்டிப்பிடித்து ஈரம் சீலையில் ஊறியதும் உணராமல் கொஞ்சிக் கண்கலங்கி “என்ர குஞ்சு” எண்டாள். உருண்ட முகத்தில், விரிந்த கண்களால் கௌசியைப் பாத்து வெட்கத்துடன் சிரித்தாள் மைவிழி.

மைவிழியின் ஒவ்வொரு அசைவையும் பாக்க ஆசைப்பட்டவளாய் அங்குமிங்கும் அலைந்து கொண்டிருந்த கௌசியிடம் “அண்ணி வாறாக்களுக்குப் பாத்துப் பலகாரம் குடுக்கிறீங்களே, அண்ணி வாறாக்களுக்குப் பாத்து தேத்தண்ணி குடுக்கிறீங்களே” கைக் குழந்தையோடும் பட்டோடும் வேர்க்க விறுவிறுக்கப் பறந்து கொண்டிருந்தாள் அண்ணி.

“என்ன கக்காத் துணி தோச்சனீரே” பெட்டைகள் பின்னேர நேரத்தில அரட்டையடிக்க கிணத்தடியில சந்திக்கேக்க கேக்கிற போது கையையும், சட்டையையும் மணந்து மணந்து பாப்பாள். தோள் பட்டையில எப்பவுமே ஒரு புளிச்ச மணம் நிரந்தரமாய் வீசும். கௌசி தலையச் சரிச்சுச் சரிச்சு மணந்து பாப்பாள். ஒருவித சுகம் அவளை அணைத்துக் கொள்ளும். சட்டை திட்டுத் திட்டாய் அங்குமிங்கும் விறைத்துக் கிடக்கும். பிரசவத்தின் முழு மோகனங்களுடனும் அலைந்து கொண்டிருப்பாள் அவள்.

“நல்லா பால் மண்டீட்டாள் ஒருக்கா ஏவறைக்குத் தட்டுறீரே” குழந்தையைக் குடுத்து விட்டுப் போவாள் அண்ணி. நிமித்தி தோளோட சேத்து அணைத்து முதுகை மெல்ல மெல்லத் தட்ட, நெளிந்து தலையத் தூக்கித் தூக்கி மோதி, தோளைச் சூப்பி பெரிதாகச் சத்தமாய் ஏவறை விட, தோள் ஈரமாகத் திரைஞ்ச பால் பின் சட்டையில் வடியும். வாய் துடைத்து இறுக அணைத்துக் கொஞ்ச, அவள் மார்போடு முகம் தேச்சு முலையை வாயால் கௌவ முயலும் குழந்தை “ச்சீ போடி கெட்ட பெட்டை என்னட்டைப் பால் இல்லை, அம்மாட்டக் குடிச்சது காணாதே குடிகாறப் பெட்டை” கன்னத்தில் செல்லமாய் அடிக்க, சின்னதாய் துடித்து வீடிட்டுக் கத்த இறுக அணைத்துக் கொள்ளுவாள்.

“கக்கா இருந்திட்டாள் போல” அண்ணி கை நீட்ட “நான் மாத்திறனே” கட்டிலில் துணி விரிச்சு குழந்தைய நிமித்திக் கிடத்த அது சிணுங்கும். “எண்ட செல்லமெல்லோ, எண்ட குஞ்செல்லோ” சொன்ன படியே முகத்தோடு முகம் தேச்சுக் கொஞ்ச குழந்தை சிரிக்கும்.
“எண்ர செல்லம் சிரிக்குதோ, ஆ.. என்ர ராசாத்தி சிரிக்குதோ” கண்ணுக்குள் பாத்துக் கேட்டபடியே உடுப்பைக் கழற்றி துணிக்குக் குத்தியிருக்கும் பின்னை ஆட்டாமல் கழற்றுவாள். “சீ கக்காப் பெட்டை, என்னடி செஞ்சு வைச்சிருக்கிறாய்?” கேட்டபடியே மூக்கைச் சுளிச்சு துணியை அகற்றி, சின்னத் துவாயை ஈரமாக்கி உடம்பைத் துடைப்பாள். கால்களை அகற்றி பௌடர் போட்டு “இப்பிடியே கிடந்து கொஞ்ச நேரம் விளையாடு காத்துப் படட்டும்” பக்கத்தில படுத்திருப்பாள்.

“சின்னப்பாப்பா எந்தன் செல்லப் பாப்பா
சொன்ன பேச்சைக் கேட்டாத்தான் நல்ல பாப்பா-
சின்னப் பாப்பா எந்தன் செல்லப் பாப்பா

தின்ன உனக்குச் சீனி மிட்டாய் வாங்கித்தரணுமா
சிலுக்குச் சட்டை சீனாப் பொம்மை பலூண் வேணுமா
கண்ணாமூச்சி ஆட்டம் உனக்குச் சொல்லித் தரணுமா
அப்போ கலகலலெண்டு சிரிச்சுக் கிட்டு
என்னைப் பாரம்மா…”

குழந்தை அவள் பாட்டை ரசிச்ச படியே “ங்க ங்க” எண்டு சேர்ந்து பாடும்.

“அண்ணி அண்ணி இஞ்ச ஓடிவாங்கோ” பதறியடிச்சு ஓடிவந்த அண்ணியிடம் மைவிழிக் குட்டி உடம்பு பிரட்டப்பாக்கிறாள்” எண்டு பரவசமாய்ச் சொல்லுவாள். “போடி அடுப்பில கறி, நீ கத்த நான் பயந்திட்டன்.” அண்ணி கொஞ்ச நேரம் நிண்டு பாத்துவிட்டு போய் விடுவாள். “என்னடி குட்டி ஏமாத்தீட்டாய்.. இஞ்ச இப்பிடி இப்பிடித் திரும்பு” எண்டு குழந்தைக்குப் பக்கத்தில் கிடந்து தன் உடம்பை பிரட்டிப் பிரட்டிக் காட்டுவாள். அண்ணா அண்ணியைக் கூப்பிட்டு “இஞ்ச எங்கட கௌசிக் குட்டி உடம்பு பிரட்டுறாள் படம் எடுப்பம் கமெராவைக் கொண்டு வாரும்” முகம் சிவக்க சட்டையை இழுத்து விட்டு எழும்பி இருப்பாள்.

“நடவடி சக்கை மாதிரி இருக்கிறாய்.. உன்ர வயசில எல்லாம் ஓடித்திரியுதுகள்” மைவிழியின் கையைப் பிடித்து எழுப்பி, நிப்பாட்டி தன் கைகளோடு அவள் கைகளைப் பிணைத்து, பின்பக்கமாய் தான் நடந்து சின்னச் சின்ன அடியாய் அவளை நடக்கச் செய்வாள். “என்ர குஞ்செல்லே நடவம்மா.. ஆ.. கெட்டிக்காறி அப்பிடித்தான் அப்பிடித்தான்..” கௌசிக்கு முதுகு பிடித்துக் கொள்வதுதான் மிச்சம். முதலாவது பிறந்தநாளுக்கு மைவிழி நடக்காமல் போனது கௌசிக்கு வெக்கக் கேடாய் இருந்தது. “என்ர அக்கான்ர மகள்.. என்ர அண்ணான்ர மகன்.. பெட்டைகள் சொல்லிக் கொண்டே போவார்கள்..

“கௌசிமாமி அந்த ராஜாக்கதை.. கௌசிமாமி பொரியல் தாங்கோ.. கௌசிமாமி எனக்குக் காச்சல் நான் பள்ளிக்கூடம் போகேலை.. கௌசிமாமி..கௌசிமாமி..”

மைவிழியைக் குளிக்கவார்த்தபடியே “சின்னச் சின்னக் கை, சின்ன மூக்கு, சின்ன வாய்” கௌசி அடுக்கிக் கொண்டு போக “இதென்ன கௌசிமாமி, சின்னப் பாப்பா” தன்ர மார்பைத் தொட்டுக் கேட்டுச் சிரிப்பாள். “போடி கள்ளப் பெட்டை” கன்னத்தைத் தட்டுவாள் கௌசி. “உங்களுக்கு மாதிரி எனக்கும் பெரிசாகுமா” கண்கள் அகல கௌசியின் உடம்பைப் பார்த்த படியே கேட்பாள் மைவிழி. அவளின் உடம்பில் சவுக்காரத்தைத் தேச்ச படியே “ஓம் கொஞ்சம் கொஞ்சமாப் பெரிசாகும், அப்ப மைவிழிக் குட்டி பெரிய பொம்பிளையா வளந்து வளந்து வருவாள்.. கௌசி மாமி மைவிழிக் குட்டிக்குச் சீலை கட்டி, தலையெல்லாம் பூ வைச்சு, நகைகளெல்லாம் போட்டு வடிவா வெளிக்கிடுத்தி விடுவன், மைவிழிக் குட்டி ராசாத்தி மாதிரி இருப்பாள் என்ன?” மைவிழியின் கண்கள் கனவில் மிதக்க ஒரு கணம் எங்கோ சென்று திரும்புவாள். “கனக்க ஆக்களெல்லாம் வருவீனமே.. நிறம்ப பிரசெண்ட் எல்லாம் கிடைக்குமே”, “ம்..போடி உனக்கு பிரசெண்ட்தான் முக்கியம்” அவள் துடையில் அடிப்பாள். “ஆ..ஆ” அழுவது போல் நடிக்கும் மைவிழியின் தலையில்
“ஒரு குடம் தண்ணி – நூறாண்டு
ரெண்டு குடம் தண்ணி – நூற்றிப் பத்தாண்டு
மூண்டு குடம் தண்ணி – நூறு நூறு நூறாண்டு
ஐயோ தண்ணி முடிஞ்சுதே” சோகமாக முகத்தை வைத்துக் கொள்ளுவாள்..

துவாயை உதறி தலையைத் துடைச்சு, உடம்பை சுத்தி நடுங்கும் மைவிழியைத் தன் உடலோடு அணைத்துத் தூக்கி அறைக்குள் ஓடி வந்து, உடம்பைத் தேய்த்துத் துடைத்து, பௌடர் போட்டு, தலைக்கு ஓடிக்கொலோன் பூசி, சுருங்கியிருக்கும் கைகளைத் தன் கையோடு சேர்த்துத் தேச்சுச் சூடாக்கி, பொக்கிள் மேல் வாயை வைத்து ஊதிவிட்டு, மைவிழி கூசி நெழிந்து கலகலவென்று சிரிப்பாள்..


கௌசியின் முதலிரவன்று மைவிழி நித்திரை கொள்ளவில்லை. “எனக்குக் கௌசிமாமியோட படுக்க வேணும்” குரலெடுத்துக் கத்தியவளை இரவிரவாகக் கொண்டு அலைந்ததாய் அண்ணி இப்பவும் சொல்லிச் சிரிப்பாள்.
“கௌசி மாமி ஒருக்கா வீட்டை வாறீங்களே” காலம வெள்ளணை போன் வந்தபோது பயந்து போனாள் கௌசி. “என்னம்மா என்ன நடந்தது” கேட்டவளிடம் “நீங்க இப்ப உடன இஞ்ச வாங்கோ” விசும்பினாள். “என்னடா அம்மா எங்கை? என்ன நடந்தது? சொல்லனம்மா” “அம்மாவும், அப்பாவும் நித்திரை, எனக்கு உங்களோட கதைக்க வேணும்” கௌசிக்கு கொஞ்சம் விளங்கியது, கணவனிடம் சொல்லி விட்டு மனம் குதூகலிக்க “உடன மாமி வாறன் நீங்கள் போய் அறைக்குள்ள இருங்கோ சரியே” அண்ணி எழும்பு முதல்லே மைவிழிக்கு நப்பிண் பாவிக்கச் சொல்லிக் குடுத்தாள் கௌசி.

“பதின்மூண்டு பொம்பிளைகள் வேணும் தட்டுத் தூக்க கூப்பிடுங்கோ நேரம் போகுது” அண்ணியின் அக்கா பெரிய குரலில் கத்தினாள். “இஞ்ச உதில இருந்து கொசிப்படிக்காமல் தட்டுத் தூக்க வரட்டாம் பொம்பிளைகளே போங்கோ” பட்டும், நகையுமாய் ஜொலித்த பொம்பிளைகளைக் கிண்டலாய் கூப்பிட்டு குசினிக்குள் வந்து “இஞ்ச என்ன செய்யிறாய் தட்டுக் கொண்டு வரக் கூப்பிடீனம் போ” அண்ணா சொல்லி விட்டுப் போனான். “கௌசி மைவிழி கூப்பிடுறாள், தன்னோட உங்களையும் வரட்டாம்.. அவளுக்குப் பக்கத்தில தட்டோட வாங்கோ” அழுத மகனைத் தோளில போட்டு ஆத்திய படியே அண்ணி வந்து கையைப் பிடித்து இழுத்தாள். “இல்லை அண்ணி உவனை என்னட்டத் தந்திட்டு நீங்கள் போங்கோ”, “இஞ்ச நேரம் போகுது, மைவிழி உங்களத்தான் வேணுமெண்டு கேக்கிறாள் போங்கோ” பிடிச்சுத் தள்ளாத குறையாச் சொல்லிவிட்டுப் போய் விட்டாள் அண்ணி.
வரிசையாகப் போன பெண்களோடு தானும் சேர்ந்து கொண்ட கௌசியைப் பார்த்து கண்களால் சிரித்துத் தலையாட்டினான் அவள் கணவன். கௌசிக்கு வெட்கமாக இருந்தது. “இண்டைக்கு இரவைக்கு இருக்கு உங்களுக்கு” அவளும் கண்களால் சொல்லிவிட்டுப் போனாள்.

“இந்தாங்கோ பலகாரத்தட்டு, இந்தாங்கோ பழத்தட்டு, இந்தாங்கோ பூத்தட்டு..” தட்டுகளைத் தூக்கித் தூக்கிப் பெண்களிடம் குடுத்துக் கொண்டிருந்தாள் அண்ணியின் அக்காள். கௌசியில் தோள் மேலால் தட்டுகள் பின்னேறிப் போய்க் கொண்டேயிருந்தன. கௌசி மௌனமாக நின்றாள். சுவர்கள் ஒடுங்கி நீள, மூச்சு முட்டுவதுபோல் சுவாசமின்றித் தடுமாறினாள். தலையில் சடைநாகத்துடன், மூக்கு மின்னியும், நெத்திப் பொட்டும், சீலையுமாய் மைவிழி யாரை ஞாபகப்படுத்துகின்றாள். மைவிழி அவளைக் கட்டிப்பிடிச்சு மார்போடு முகம் வைத்துக் கண்கள் கலங்க கைகளை இறுக்கினாள். “நீர் இப்பவும் சின்னப்பிள்ளையில்லை தெரியுமோ? பெரியபிள்ளை மாதிரி ஃபிகேவ் பண்ணும் பாப்பம், மேக்கப்பெல்லே குழம்பீடும்” கையைப் பிடித்து மைவிழியை இழுத்து விட்டாள் லண்டனிலிருந்து வந்திருந்த அண்ணியின் அக்காள்.
தொண்டைக் குழி இறுக, தொடைகள் நடுக்கம் கண்டன. கௌசியின் கால்கள் இயங்க மறுத்தன. பெரிதாய் நாதஸ்வரம் அலறியது. சிரிப்பும் சிங்காரமுமாய் பெண்கள், ஆண்கள், குழந்தைகள், முதியவர்கள்..

எங்கோ காட்டில் தனித்து விடப்பட்டவள் போல் கௌசியின் மனம் பயம் கண்டது. கணவனை இறுக அணைத்து உடலுறவு கொள்ளவேண்டும் போல் வேகம் கொண்டது உடம்பு. உன்னை நான் இறுக அணைத்துக் கொள்கின்றேன். என் கருப்பைக்குள் உன் விந்தைக் கொடு, அது கருக்கட்டி உருப்பெற்றுக் குழந்தையாக மாறட்டும்.. என் அடிவயிறு நோக் காண கால்கள் வலிக்கட்டும். என் வயிற்றைக் காலால் சிசு எட்டி உதைக்கட்டும், என் பெருத்த வயிறுடன் உன் தோள் தாங்கி நெடுந்தூரம் நடந்து வருகின்றேன். பிரவச வலி எனக்கும் வேண்டும். என்னைத் தாங்கு உன்னுடன் பிணைத்துக் கொள்.. உலகின் எல்லா நோவும் என்னைத் தாக்கட்டும்.. என் யோனி கிழித்து உலகை குழந்தை ஒன்று எட்டிப் பார்க்கட்டும்;, என் முலையின் கட்டிப் போன பாலை அது சப்பி உறிஞ்சிக் குடிக்கட்டும்... என் உடலிலிருந்து உதிரம் வழிந்து தெருவெங்கும் ஓடட்டும்.. நானும் தாயாக எனக்கும் ஒரு வரம் கொடு.. எனக்கும் ஒரு வரம் கொடு.. எனக்கும் ஒரு வரம் கொடு..

“தட்டுத் தூக்க ஒரு ஆள் குறையுது கூப்பிடுங்கோ” அண்ணியின் அக்கா குரல் எங்கோ தொலைவில் கேட்டது.

Sunday, November 13, 2005

எமக்கும் இதுதான் ஊர் - நிகழ்வு

வடபுலத்திலிருந்து விடுதலைப்புலிகள் அமைப்பினால் விரட்டியடிக்கப்பட்ட முஸ்லீம் மக்களிற்காகக் குரல் கொடுக்கும் வகையில் 12ம் திகதி ஸ்காபுரோவில் இடம்பெற்ற நிகழ்வின் தொகுப்பும் - குறிப்பும்.

நிகழ்வைத் தொகுத்து வழங்கிய கருமையத்தின் முக்கிய அங்கத்தவர்களில் ஒருவரான தர்ஷன், நல்ல ஒரு இலக்கிய வாசகர், விமர்சகர், அண்மையில் நாடகங்களிலும் நடித்து வருகின்றார். முஸ்லீம் மக்களின் வாழ்வின் அவலத்தை நினைவு கூறும் விதமாக கவிதை ஒன்றைப் படித்து நிகழ்வை ஆரம்பித்து வைத்தார். தொடர்ந்து பதினைந்து வருடத்திற்கு முன்பு இடம்பெற்ற ஒரு சம்பவத்தை, எதற்காக இப்போது தூக்கிப் பிடித்து நிகழ்வு வைக்கின்றார்கள் என்ற சில பொதுமக்களின் புறுபுறுப்பிற்கும், முழக்கம் பத்திரிகை வெளியிடப்பட்ட அலசலுக்கும் பதில் சொல்லும் வகையில், ஐம்பது வருடத்திற்கு முன்பு ஜேர்மனிய சர்வாதிகார ஆட்சியில் நாசிகளால் அழிக்கப்பட்ட லட்சக்கணக்கான யூதர்களை எப்போதும் உலகம் நினைவு கூறும், அதே போல் பதினைந்து வருடத்திற்கு முன்பு தமது சொந்தமண்ணிலிருந்து தூக்கி எறியப்பட்ட முஸ்லீம் மக்களை மனிதாபிமானம் உள்ள எந்த மனிதனும் நினைவு கூறுவான் என்றும் கூறினார்.

குறிப்பு – முஸ்லீம் மக்கள் தாம் பிறந்து வளர்ந்த மண்ணிலிருந்து தூக்கியெறியப்பட்டு பதின்நான்கு வருடங்கள் ஆகிவிட்டன. அவர்கள் புத்தளத்தில் தம்மால் முயன்றவரை சந்தோஷமாக வாழத்தொடங்கிவிட்டார்கள் இனி எதற்காக இதனை தூக்கிப் பிடித்து திடீரென்று நிகழ்வு நடத்துகின்றார்கள். முழக்கம் பத்திரிகையின் அங்கலாய்ப்பு இது.

இந்தப் பத்திரிகையின் ஆசிரியர் தனது சொந்தநாட்டிலிருந்து துரத்தியடிக்கப்பட்டு கிட்டத்தட்ட இதே காலஅளவு இருக்கலாம். இன்றும் தனது பத்திரிகையில் தமிழ்காக்கப் பெரிதும் போராடிக்கொண்டிருக்கின்றார். தமிழீழம் கிட்ட வேண்டும் என்பது பற்றி மிகவும் சிரத்தையுடன் செய்திகள் வெளியிட்டு வருகின்றார். கனடாவில் தன்னால் முயன்றவரை சந்தோஷமாக வாழ்ந்து வரும் இவர் போன்றவர்கள், இனியாவது ஈழம், மொழி, மண் என்ற பேச்சை விடுத்து கனேடியச் செய்திகளில் கவனம் செலுத்துதல் சாலச்சிறந்தது.
சரி இத்தனை வருடம் மௌனம் சாதித்து விட்டு எதற்கு பதினைந்து வருடத்தின் பின்னர் திடீரென்று? இந்தக் கேள்வி எனக்குள்ளும் எழுந்ததுதான்.

நிகழ்வில் உரையாற்றிய கற்சுறா முஸ்லீம் மக்களின் அவலங்கள் கணிசமான அளவில் பதியபடவில்லை என்றும், அன்று முஸ்லீம் மக்களின் அவலத்தைத் தனது எழுத்தில் கொண்டு வந்த வ.ஐ.ச ஜெயபாலன், இன்று அதற்கு எதிர்மாறான கருத்துக்களை எழுத்தில் வைக்கின்றார் என்று ஆதாரங்களுடன் எடுத்துக் காட்டினார். தொடர்ந்து ஒட்டாமடி அரபாத், இளையஅப்துல்லா, றாஷ்மி, சோலைக்கிளி போன்ற சில எழுத்தாளர்களும், தாயகம், சரிநிகர், தேடல், எக்சில், போன்ற சில சஞ்சிகைகளும் மட்டுமே முஸ்லீம் மக்களின் அவலங்களுக்காகக் குரல் கொடுத்திருக்கின்றார்கள என்றும் கூறினார்.
கனேடியச் சூழலிலிருந்து கொண்டு, ஈழத்தில் இடம்பெற்று வரும் அராஜகமான போராட்டித்திற்கு எதிர்குரல் காட்டியவர்கள் பலர். இவர்களில் சிலர் காலப்போக்கில் “கொள்கை மாற்றம்” கொண்டும், இன்னும் சிலர் விரக்தியின் பேரிலும், இன்னும் சிலர் வேறுநாட்டங்களினால் விலகி தாமும் ஏதோ செய்வதாய் ஜாலம் காட்டிக்கொண்டும் இருக்கின்றார்கள். இருந்தும் தனது சிறுகதைகள், கவிதைகள், கவிதா நிகழ்வு, நாடகம் போன்றவற்றால் அன்று தொடக்கம் இன்று வரை மனிதக்கொலைக்கு எதிராகவும், முஸ்லீம் மக்களின் அவலத்துக்காகவும் குரல் கொடுத்து வரும் எழுத்தாளர் சக்கரவர்தியை எப்படி கற்சுரா குறிப்பிட மறந்தார்? எழுத்தாளர் சக்கரவர்தி ஒரு தனி மனிதனாக அன்று எக்சிலில் தொடங்கி இன்று கருமையத்தின் முக்கிய உறுப்பினராக இருந்து கொண்டும் தனது கொள்கையில் எந்த மாற்றமும் இன்றி, விட்டுக்கொடுப்பு இன்றி மனிதக்கொலைகளுக்கு எதிராகக் குரல் கொடுத்து வருபவர். எனவே பதினைந்து வருடத்தின் பின்னர் திடீரென்று ஏன்? என்று சக்கரவர்தியை பார்த்துக் கேட்டுவிட முடியாது.

முன்னாள் காங்கிரஸ், தமிழரசுக்கட்சிகளின் உறுப்பினர், இடதுசாரியும் என்று தன்னை அறிமுகம் செய்து கொண்ட அடுத்த பேச்சாளர் நடராஜான் படுகொலை செய்யப்பட்ட கோப்பாய் கல்லூரி அதிபர் நடராஜா சிவகாட்சம் அவர்களையும், யாழ்மத்தியகல்லூரி அதிபர் இராஜதுரை அவர்களையும் நினைவு கூர்ந்தார். அதிபர் இராஜதுரை தனது மாணவன் என்றும் அழிந்து நிலையில் இருந்து யாழ்மத்தியகல்லூரியைக் கட்டி எழுப்பி யாழ்ப்பாணத்து மாணவர்களுக்கு கல்வியை வழங்க முனைந்த ஒரு நல்ல மனிதரைக் கொன்றதன் காணரம் என்ன? என்று குரல் தழுதழுக்கக் கேள்வி எழுப்பினார். இரண்டு அதிபர்களின் படுகொலையின் பின்னர் ஊடகங்கள், அதிபர் நடராஜாவிற்குக் கொடுத்த கவனத்தை அதிபர் இராஜதுரைக்குக் கொடுக்கவில்லை இதற்கு சாதியம் ஒரு காரணமாக இருக்கலாம் என்றும் கூறினார். தொடர்ந்த இவர் உரையில் என் தலைவர் ஆனந்தசங்கரி என்று விழித்த போது கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது. டக்ளஸ் தேவானந்தா, கருணா, ஆனந்தசங்கரி போன்றோரை அழிக்கும் வரை விடுதலைப்புலிகள் ஓயமாட்டார்கள் என்றும், எமது நாடு அழிந்து விட்டது, யாழ்ப்பாணத்தில் உயிர்பு இல்லை, இனி ஒரு போர் சூழல் வரப்போவதில்லை, விடுதலைப்புலிகள் இயக்கம் இதனை முற்றாக உணர்ந்து கொண்டு விட்டதால் மிகவும் அவசரமாகப் புலம்பெயர்ந்த தமழிர்களிடம் அடுத்த போர் வரப்போகின்றது என்ற பொய்யான தகவலைக் கூறி பணம் சேகரித்துத் தம் பைகளை நிறப்பிக் கொள்கின்றார்கள் என்றும் கூறினார்.

கன்னிகா திருமாவளவன் பேசுகையில் இனத்துவேசம் நாம் அறிந்த வகையில் நிறம் மதம் மொழி சமுதாயம் நாடு என்று பலவகையாக பரவிக்கிடக்கின்றது, நாம் அறியாத வகையில் ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் சாதிய வெறி இருக்கின்றது. எம்மை அறியாமலேயே இனத்துவேசர்களா நாம் வாழ்ந்து வருகின்றோம், அன்றாட வாழ்க்கையில் எமது பேச்சு வாழ்க்கை முறையிலேயே நாம் இதனை அவதானிக்கலாம் என்றும் கூறினார்.

பலர் தம்மை சிறந்த முற்போக்கிகளாகப் பிரகடணம் செய்யப் பிரயோகிக்கும் வார்த்தையில் முக்கியமானது “நான் சாதி பார்ப்பவன் அல்ல” இவ்வரிகளை ஒரு தலித் பாவிக்க முடியுமா? இவ்வரிகளைக் கொண்டு தன் உயர்சாதியை மறைமுகமாக நிலை நாட்டுகின்றான் யாழ்ப்பாணத்து முற்போக்குத் தமிழன். நான் சாதி பார்ப்பவன் அல்ல, நான் நல்ல முற்போக்குவாதி, நல்ல மனம்கொண்ட பிரஜை. ஆகா!

"நம்மொழி" ஆசிரியர் பாஸ்கரன் முஸ்லீம் மக்களிற்கு ஏற்பட்ட அநியாயங்களை தனது பேச்சில் எடுத்துக்கூறித் தமிழனாய் வாழ்வதற்காகத் தான் தலை குனிந்து நிற்பதாகக் கூறினார்.

ப.அ ஜெயகரன் தேடல் சஞ்சிகையில் முஸ்லீம் மக்களின் இடம்பெயர்வு தொடர்பாக வெளிவந்த கவிதை ஒன்றை படித்துக் காட்டினார்.

கருமையம் அமைப்பின் சார்பாக முஸ்லீம் மக்களின் அவலத்தை முன்நிறுத்தி “கைநாட்டு” எனும் சஞ்சிகை வெளியிடப்பட்டது.

தொடர்ந்த நிகழ்வாக காத்தான்குடியில் இடம்பெற்ற முஸ்லீம் மக்களின் படுகொலையைக் காட்டும் விவரணப்படம் பார்வைக்காகப் போடப்பட்டது.

சக்கரவர்தியின் ஆக்கத்தில் “ஞானதாண்டம்” எனும் குறுநாடகம் இறுதி நிகழ்வாக இடம்பெற்று பார்வையாளர்களின் பாராட்டைப் பெற்றது.

இறுதியாக நிகழ்வு பற்றிய விமர்சனங்கள் வாதங்களுடன் நிகழ்வு நிறைவிற்கு வந்தது.