Saturday, December 24, 2005

தொடரும் அவலநிலை

போராட்டமும் அதன் அவலநிலையும் என்ற செய்தியைக் கடந்து, தற்போது இலங்கையில் பெண்கள் மேலான பாலியல் வன்முறை என்பது அதிகமாக கட்டவிழ்த்து விடப்பட்டிருக்கின்றது. பாதிக்கப்பட்ட பெண்கள், கொலைசெய்யப்பட்ட பெண்கள், அவர்கள் மேலான அக்கறை, அவர்களுக்கான குரல் கொடுப்பு, ஆர்ப்பாட்ட ஊர்வலங்கள், மனித உரிமைப் போராட்டங்கள் என்பன போய், யார் செய்தார்கள் என்ற கண்டுபிடிப்பில் சிறுபிள்ளைத் தனமான தாக்குதல்கள் மட்டுமே எம்மக்களிடையே எஞ்சி விட்டிருக்கின்றது.
வெறும் விரல் நீட்டல்களோடும், ஒரு சிறு கண்டனக் கூட்டத்தோடும் எம் மக்கள் மௌனித்துத் தம் வாழ்வைத் தொடர மீண்டும் தொடரும் பெண்களுக்கெதிரான வன்முறைகள். வெறும் செய்தியாய் இப்பெண்களின் வாழ்வை நாம் படித்து, முடித்து, அதிர்ந்து மீண்டும் மறந்து போவோம். பெண்களின் பெயர் பட்டியல் நீண்டு கொண்டே போக அதற்கான தீர்வு அறியப்படாமலேயே அமிழ்ந்து போகின்றது.

முன்பு ஒருநாள் கோணேஸ்வரியின் அவலம் கேட்டு அதிர்ந்தது தமிழினம். பின்னர் கவிதை படித்தோம். கலந்தாலோசித்தோம் எல்லாம் காற்றில் மறைய மீண்டும் செய்தியாய் கிரிசாந்தி கதை கேட்டோம். மீண்டும் அதே ஆக்ரோஷம். பதிவுகளாய் செய்திகள் நாலா பக்கமும் பறந்தன. மீண்டும் ஓய்ந்தோம். பின்னர் விஜிகலா, தற்போது தர்சினி. இந்தப் பெயர்களும் சிலகாலத்திற்கு மின்தளங்களையும் செய்தித்தாள்களையும் நிறைக்கும். குரல் கொடுக்கப் பலர் இருக்கின்றார்கள். அதைக் கேட்க யாருமில்லாத அவலநிலையில் தமிழ் மக்கள்.

தொடரும் அவலங்கள்..

1995 ஓகஸ்ட் மாதம் லக்சுமி எனும் பெண் இரண்டு சிங்கள இராணுவத்தால் பாலியல் வன்புணர்ச்சிக்கு ஆளாகியிருக்கின்றார். 1996ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் கிரிசாந்தி குமாரசாமி எனும் இளம் பெண் சிங்கள இராணுவத்தால் பாலியல் வன்புணர்சிக்கு ஆளாகி கொலை செய்யப்பட்டுள்ளார். கந்தசாமி விஜயகுமாரி எனும் கர்பிணிப் பெண் கொழும்பு வைத்தியசாலைக்குச் செல்லும் வழியில் வவுனியாவில் வைத்து இராணுவத்தினரால் தடுத்து நிறுத்தப்பட்டதால் வைத்திய வசதி இன்றிக் கொட்டும் மழையில் மரத்தடியில் குழந்தையைப் பிரசவித்து இறந்து போயிருக்கின்றார். வேலாயுதபிள்ளை ரஜனி எனும் இளம் பெண் 1996ம் ஆண்டு செப்டெம்பர் மாதம் கோண்டாவில் எனும் கிராமத்தில் வைத்து சிங்கள இராணுவத்தினரால் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டுக் கொல்லப்பட்டிருக்கின்றார். 1997ம் ஆண்டு நான்கு குழந்தைகளுக்குத் தாயான கோணேஸ்வரி என்பவர் மீண்டும் சிங்கள இராணுவத்தின் வெறிகொண்ட பாலியல் தாக்குதலுக்கு ஆளாகிக் கொல்லப்பட்டிருக்கின்றார். 1998இல் புஸ்பமலர் எனும் 12 வயதுச் சிறுமியும், 1999இல் புங்குடுதீவைச் சேர்ந்த சாரதாம்பாள் எனும் 29 வயதுப் பெண்ணும் இதே மிருக வெறிக்கு உள்ளாகி இறந்திருக்கின்றார்கள். இப்படியாகப் பெயர் பட்டியலை நீட்டிக்கொண்டே போக..

1996ம் ஆண்டு மனித உரிமை அமைப்பு உறுப்பினரின் கணிப்பின் படி, 150இற்கும் அதிகமான தமிழ் பெண்கள் சிங்கள இராணுவத்தினராலும், பொலீஸ் அதிகாரிகளாலும் பாலியல் வன்புணர்விற்கு ஆளாகிக் கொலை செய்யப்பட்டிருக்கின்றார்கள். இது பதிவு செய்யப்பட்டிருக்கின்றது. அதே வேளை ஆட்சியில் இருந்த அரசியல் வாதிகளும், மனித உரிமை அமைப்புக்களும் குற்றம் செய்யும் இராணுவம், மற்றும் பொலீஸ் அதிகாரிகளைக் கண்டு பிடித்து சட்டத்தின் முன் நிறுத்துமாறு கட்டளை இட்டிருக்கின்றார்கள். மீண்டும் 2000ம் ஆண்டு மார்ச் மாதம் யூ.என் பெண்களுக்கு எதிரான வன்முறையைக் கண்டித்து, வன்முறைக்குக் காரணமான இராணுவத்தையும் பொலி;ஸ் அதிகாரிகளையும் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கும் படி கேட்டுக் கொண்டிருக்கின்றது. பல பாடசாலை மாணவர்கள், பெண்கள் அமைப்புக்கள் என்பன கோணேஸ்வரி, கிரிசாந்தி போன்றோரின் மரணத்தின் பின்னர் கண்டன ஊர்வலங்கள் நடாத்தியிருக்கின்றார்கள். இருந்தும் நடந்ததென்ன 1996ம் ஆண்டில் இருந்து தற்போது 2006ம் ஆண்டிற்குள் புகுந்து விட இருக்கின்றோம். இன்னும் அதே செய்திகள் அதே கண்டன ஊர்வலங்கள் கூட்டங்கள். உலகின் மனித உரிமை அமைப்புக்களும், பெண்களின் மேலான வன்முறைக்கு எதிராகக் குரல் கொடுக்கும் அமைப்புக்களும் செய்தவைதான் என்ன?

யாழ்ப்பாணத்தில் மட்டும் தற்போது 20,000 மேலான பெண்கள் கணவரை இழந்த நிலையில் தனியாக குடும்பப் பாரத்தைச் சுமந்து வறுமைக் கோட்டிற்குக் கீழே வாழ்கின்றார்கள். இவர்கள் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கு உதவும் வகையில் எந்த அமைப்புக்களும் அங்கே இயங்கவில்லை என்று கூறப்படுகின்றது. உள்நாட்டுப் போராட்டத்தால் மனநிலை பாதிக்கப்பட்டு தற்கொலை செய்யும் பெண்களின் தொகையும் கணிசமான அளவு அதிகரித்துள்ளது என்று கூறப்படுகின்றது.

சர்வதேச ரீதியாக உள்நாட்டுப் போராட்டத்தால் இராணுவத்தாலும், போராளிகளாலும் அந்நாட்டுப் பெண்கள் பாலியல் வன்புணர்ச்சிக்கு ஆளாகி வருவது நாளாந்தம் பதியப்பட்டு வரப்படும் ஒன்று. 2004ம் ஆண்டு நவம்பம் மாதம் அம்னெஸ்ரி இன்ரநெஷனல் அமைப்பு பாலியல் பலாத்காரம், கொலை போன்ற குற்றங்களுக்கு மரணதண்டனை எனும் சட்டத்தை கொண்டு வந்திருக்கின்றது என்பதுதான் வேடிக்கை. மனித உரிமையாளர்களும் இன்னும் பெண்களின் மேலான வன்முறைக்கு எதிராகக் குரல் கொடுக்கும் சர்வதேச அமைப்புக்களும் புதிதாக எதையாவது பிரகடனப்படுத்திய படியே இருக்கின்றார்கள். உலகப் போர், உள்நாட்டுப் போர் என்பவற்றால் பெண்கள் பாலியல் வன்புணர்சிக்கு உள்ளாவதும் கொலை செய்யப்படுவதும், மனநிலை பாதிக்கப்பட்டு தற்கொலை செய்து கொள்ளுவதும் முதலாம் உலக போரின் காலத்தில் இருந்து தொடரும் ஒன்று. சட்டங்களும், திட்டங்களும், கண்டன ஊர்வலங்களும், கண்டனச் செய்திகளும் தொடர்ந்து கொண்டே போக அவலமாய், அநியாயமாய், அழியும் பெண்களின் பட்டியலும் தொடர்ந்து கொண்டே போகின்றது.

5 comments:

Sudhakar Kasturi said...

உள்நாட்டுப் போர், படையெடுப்பு ,ஆக்ரமிப்பு என்பதில் முதலில் பாதிக்கப்படுவது பெண்களும்,குழந்தைகளும்தான். இது மனிதன் மிருகமாக படையெடுப்பு என்பதில் ஈடுபட்ட காலம்தொட்டே இருந்துவருகிறது. போர்ச்சட்டதிட்டங்கள், பண்டைக்காலத்தில் இயற்றப்பட்ட போது, ' முதியோர், பெண்கள், குழந்தைகள் போன்றவர்களை பாதிக்கலாகாது' என்று இருந்ததாகப் படித்திருக்கிறேன்.
இது சர்வதேசப் பிரச்சனையென்னும் அளவில் பலமாக எடுத்துரைக்கப்படவில்லை என்பது வேதனைக்குரியது. அம்னெஸ்டி பல் பிடுங்கிய பாம்பாக எதாவது அவ்வப்போது சொல்லும் - அதுவும் சில நாடுகளுக்கு பாதிப்பு வராவண்ணம்...
இரண்டாம் உலகப்போரில் கொரியாவும், சீனாவும் ஜப்பானிய ஆதிக்கத்தில் சீரழிந்தது இன்னும் பாதிக்கப்பட்டவர்களிடம் வெறுப்பாக மண்டிக்கிடப்பதையும், அவ்வப்போது வெளிப்படுவதையும் காணலாம்.
பங்களாதேஷ் போரில் ஈடுபட்டிருந்த ஒரு வீரர் எனது அண்டைவீட்டுக்காரராக இருந்தார். அவர் சொன்ன கதைகளைக்கேட்டால் பாகிஸ்தானிய இராணுவத்தினரின் கொடுமைகள் இன்றைய இலங்கை ராணுவத்தினரைவிட எள்ளவும் குறைந்தவரில்லை எனத் தெளிகிறது. இவ்வாறு கொடுமையிழைக்கும் இராணுவத்தினருக்கும் சமூகக் குற்றவாளிகளுக்கும் உள்ள ஒரே வேறுபாடு சீருடை என்பதுதான். மற்றபடி, மிருகங்கள் மிருகங்களே.
உலகளவில் இக்கொடுமைகளை ஜெனீவா ஒப்பந்தம் போல ஒரு சட்டமியற்றி, நடுநிலையான அமைப்பொன்றின் மூலம் தண்டிப்பு செய்தாலொழிய இக்கொடுமைகள் குறையாது. பூனைக்கு மணிகட்டுவது யார்?

Gnaniyar @ நிலவு நண்பன் said...

அங்கு மட்டுமல்ல சகோதரி..?

எல்லா இடங்களிலும் பெண்களுக்கு எதிரான பாலியல் அநியாயங்கள் கட்டவிழ்த்துவிடப்பட்டிருக்கிறது.

சந்தனக்கடத்தல் வீரப்பனை தேடும் சாக்கில் மலைவாழ்பெண்கள் கற்பழிப்பு

காஷ்மீரில் தீவிரவாதிகளைத் தேடுகிற சாக்கில் இராணுவத்தின் பாலியல் அட்டூழியங்கள்

நாட்டில் பாதுகாக்க வேண்டிய காவலர்களே கற்பை சூறையாடுகின்ற அவல நிலை..

இதற்கெல்லாம் தீர்வு என்னவென்றே தெரியவில்லை..?

'கத்தரிக்கும்' கடுமையான தண்டனைதான் கொடுக்க வேண்டும்.

பிருந்தன் said...

கற்பழிக்கும் ராணுவத்தினர் கற்பழிப்பை ஒரு ஆயுதமாக பயன் படுத்துகிறார்களா? அல்லது அவர்களது தனிப்பட்ட காம வெறியா? அனைத்து ராணுவமே இதை செய்கிறதே, அந்த சமுதாயத்தை சேர்ந்த ஒரு பகுதியுனரை மைளனிகள் ஆக்குவதுதான் இதன் நோக்கமாக இருக்கும், ஏனெனில் அவ் அரசுகளும் இதனைக்கண்டு கொளவதில்லையே.

வசந்தன்(Vasanthan) said...

கறுப்பி, பதிவுக்கு நன்றி.
நேற்று கிளிநொச்சியில் இவ்வாறு பாதிக்கப்பட்ட பெண்கள் சிலரின் தரவுகள் பெண்கள் அமைப்பினரால் வெளியிடப்பட்டுள்ளன. அவற்றில் நீங்கள் தந்த விவரங்களும் அடங்குகின்றன.
நேற்று கிளிநொச்சியல் இணைத்தலைமை நாடுகளின் பிரதிநிதிகளிடம் மனுவைக் கையளிக்க நீண்டநேரம் காத்திருந்த மக்களைப் புறக்கணித்து மனுவைப்பெறாமல் அப்பிரதிநிதிகள் சென்றுவிட்டதாகச் செய்திகள் வருகின்றன.
'இராணுவமென்றால் இதெல்லாம் செய்யும்' என்ற மனநிலை பலரிடம் வந்துவிட்டதுபோல.

இன்னொரு விசயம். யாழ்ப்பாணத்தில் இருப்பதாக நீங்கள் கூறும் விதவைகள் கணக்கு இடிக்கிறது. இருபதாயிரமாக இருக்குமோ என்பதே எனக்கு ஐயம். யாழை விட விதவைகளின் எண்ணிக்கை கிழக்கில்தான் மிகஅதிகமென்பது என் கணிப்பு.

கறுப்பி said...

பின்னூட்டங்களுக்கு நன்றி.
பாலியல் துன்புறுத்தல்கள் என்பது அனேகமாக போராட்டத்தின் ஒரு ஆயுதமாகவே அனேகமாக எல்லா நாடுகளிலும் பாவிக்கப்பட்டு வரப்படுகின்றது. எம் சமகால வாழ்வில் நாம் இவை அனைத்தையும் ஒரு செய்தியாகப் படித்து விட்டுப் போக வேண்டிய கையால் ஆகாத நிலையில் இருக்கின்றோம்.
என் வாழ்வின் கால்வாசிப் பகுதியை அமைதியான புழுதி பரப்பும் கிராமத்தில் கழித்தேன். வன்முறைப் பாதிப்பிற்கு ஆளாகும் சந்தர்ப்பம் இலங்கை வாழ் அத்தனை பெண்களுக்கும் இருக்கின்றது. புலம்பெயர்ந்து விட்டதால் நாம் அதிஷ்டசாலிகள் தப்பித்து விட்டோம் என்று சுயநலமாக எண்ணிக்கொள்ளவா? யாரால் என்ன செய்ய முடியும். எல்லோருமே கையால் ஆகாதவராய் வாழ்ந்து வருகின்றோம்.

வசந்தன் தாங்கள் கூறியது சரியான கணக்கு. யாழ்ப்பாணத்தில் இருபதினாயிரத்திற்கு மேலாகக் கணவரை இழந்த பெண்கள் வாழ்கின்றார்கள் என்பதுதான் சரி. திருகோணமலையில் ஆறாயிரம் என்று இருக்கின்றது.