Friday, April 14, 2006

சம்சாரா




தனது 29வது வயதில் மனைவி யசோதராவையும், மகன் ராகுலையும் இரவு நேரம் தனியே விட்டுச் செல்லும் போது சித்தார்த கௌதமன் அவர்களின் எதிர்காலம் பற்றியோ யசோதராவின் மனவேதனை, மகன் ராகுலின் ஏக்கம் பற்றியோ ஒரு கணம் சிந்தித்திருக்கவில்லை. சிந்தித்திருந்தால் உலகிற்கு கௌதம புத்தர் கிடைத்திருக்க மாட்டார். துறவு வேண்டிய ஒருவர் எதற்காக லௌகீக வாழ்க்கைக்குள் புகுந்து ஒரு குழந்தையைப் பெற்றெடுக்க வேண்டும்? எதற்காக ஒரு பெண்ணைக் கண்ணீருக்கு ஆளாக்க வேண்டும். இப்படியான வாதமும் இருக்கின்றது. பீஜீ நாட்டில் பட்டிணியால் வாடும் குழந்தைகளை எண்ணிப் பாரதி கண்ணீர் வடித்தான் எனும் போது தன் சொந்தப்பிள்ளைகள் பற்றி சிந்தனையில்லாது என்று “பாரதி” திரைப்படம் வந்த போது விமர்சனங்கள் எழுந்திருக்கின்றன.
2001ம் ஆண்டு ரொறொண்டோ சர்வதேச திரைப்படவிழாவில் திரையிடப்பட்டு பார்வையாளர்களின் தெரிவில் சிறந்த திரைப்படமாகத் தெரிவு செய்யப்பட்ட “சம்சாரா” இந்திய இயக்குனரான நலீன் பானின் முதல் முழுநீளத் திரைப்படமாகும். வடஇந்தியாவில் லடாக் மலைப்பிரதேசத்தில் முற்றுமுழுதாகப் படப்பிடிப்பு செய்யப்பட்டுள்ளது.

தாஷி தனது ஐந்தாவது வயதிலிருந்து துறவற வாழ்வில் ஈடுபட்டு வருகின்றான். மூன்று வருட கடும் தவத்தை முடித்துக் கொண்டு மீண்டும் மடாலயத்திற்குத் திரும்பும் அவன் வாழ்க்கையில், வாழ்வியல் பற்றிய பல கேள்விகள் எழத் தொடங்குகின்றன. தன்பால் உண்டாகும் பாலியல் உணர்வுகள் அவனைக் குழப்பத்திற்குள்ளாக்குகின்றது. வெளியுலகை நோக்கி அவன் தேடல் அதிகரிக்கின்ற போது, பேமா எனும் வயல் வேலை செய்யும் இளம் பெண் அவனைக் கவர்ந்திழுக்கின்றாள். துறவறமா? இல்லை அறவறமா? குழம்பிப்போகும் தாஷி இறுதியில் மடாலயத்தை விட்டு விலகி பேமாவைத் தேடிச் செல்கின்றான்.

இல்லறத்தில் சுகம் கண்டு மகவொன்றிற்குத் தந்தையாகி, மனித மனங்கள், வியாபார யுக்திகள் என்று சாதாரண வாழ்வையும் அடையாளம் கண்டு அதனுடனும் விளையாடப் பழகிக் கொள்ளும் தாஷியின் கவனம் கூலி வேலை செய்யும் கவர்சிகரமாக பெண்ணொருத்தி மேல் திரும்புகின்றது.

மனைவி வீட்டிலில்லாத ஒரு பொழுதில், அப்பெண்ணுடன் அவன் உறவு கொள்வதும், மனைவி திரும்பி வந்த பின்னர் குற்ற உணர்வால் போராடிப் போவதும் “ச்” இதுதானா வாழ்வு என்று அவன் மனம் குன்றி குற்ற உணர்வில் இருந்து தன்னை மீட்க மனைவி, குழந்தையை விட்டு ஒரு இரவு நேரம் தனது உடைகளைக் கழைந்து மீண்டும் துறவறம் பூண்டு மடாலயத்தை நோக்கிச் செல்லும் கணவனை வழி மறிக்கும் பேமா சொல்கின்றாள்
சித்தார்தா தான் சென்ற பின்னர் யசோதா படப்போகும் அவமானம், வாழ்வதற்கான போராட்டம், மனவேதனை பற்றி சிறிதும் யோசிக்க வில்லை, ஆண்களுக்கு இது மிகவும் இயல்பானது, ஆனால் யசோதாவால் முடியாது தூங்கும் தனது குழந்தையை இரவோடு இரவாக விட்டுச் செல்ல இதுதான் ஆணுக்கும் பெண்ணுக்கும் உள்ள வேறுபாடு.”
தாஷி ஆடிப் போகின்றான். தன்னை மன்னித்துவிடும் படி பேமாவின் கால்களில் விழுகின்றான். பேமா அவனைத் துச்சம் செய்து தனது குழந்தையிடம் செல்கின்றாள். ஆண், பெண் மனதை நன்றாகவே படம்பிடித்துக் காட்டியிருக்கின்றார்கள்.


மலைப்பிரதேசத்தில் கண்களுக்கு இதமான படப்பிடிப்பு, இயல்பான நடிகர்களின் நடிப்பு, கம்பி மேல் நடப்பது போன்ற கவனதுடன் சிறிதும் சறுக்கிவிடாமல் மிக நிதானமாக எழுதப்பட்ட பிரதி, முகத்தைச் சுளிக்க வைக்காத மிக அற்புதமான பள்ளியறைக்காட்சிகள் என்று திரைப்படம் மிகத்தரமான பட்டியலில் சேர்க்கப்பட்டிருக்கின்றது.

5 comments:

dondu(#11168674346665545885) said...

Hello pretty young lady,

"தனது 29வது வயதில் மனைவி யசோதராவையும், மகன் ராகுலையும் இரவு நேரம் தனியே விட்டுச் செல்லும் போது சித்தார்த கௌதமன் அவர்களின் எதிர்காலம் பற்றியோ யசோதராவின் மனவேதனை, மகன் ராகுலின் ஏக்கம் பற்றியோ ஒரு கணம் சிந்தித்திருக்கவில்லை."

எல்லா வினைகளுக்கும் ஒரு எதிர்வினை உண்டுதானே. யசோதரையின் துயரத்தை வார்த்தைகளில் செதுக்கி ஒரு ஹிந்தி கவிஞர் அருமையான ஒரு கவிதைத் தொகுப்பை வெளியிட்டுள்ளார். அது எங்கள் ஹிந்தி வகுப்பில் (மத்தியப் பொதுப்பணித் துறையில் இருக்கும்போது அரசால் நடத்தப்பட்ட வகுப்பு அது) பாடமாக இருந்தது. யசோதரை தன் தோழியிடம் தன் துக்கத்தைப் பற்றிக் கூறுவதாக அமைந்தது அது.

அடுத்த நாளன்று புத்தர் யசோதரை இருக்கும் இடத்திற்கு வரவிருக்கிறார். அப்போது யசோதரைக்குள் பழைய நினைவுகள் கிளர்ந்தெழுகின்றன. அவற்றையே இக்கவிதைத் தொகுப்பு கூறுகிறது.

துரதிர்ஷ்டவசமாக கவிதைத் தொகுப்பின் பெயர் மற்றும் அதன் ஆசிரியர் பெயர் ஆகிய இரண்டும் நினைவுக்கு வரமாட்டேன் என்கிறது. இருந்தாலும் அதில் refrain மாதிரி ஒரு வரி ஒவ்வோரு வெண்பாவிலும் கடைசி வரியாக வருகிறது.

"தோழியே அவர் என்னிடம் கூறிவிட்டுச் சென்றிருக்கலாமே" (சகீ, வோ கஹ்கர் ஜாதே). நினைத்துப் பாருங்கள், திடீரெனக் கணவனைக் காணவில்லை. "இவள் அவரிடம் என்ன கூறினாளோ, அதனால்தான் அவர் கூறாமல் சென்று விட்டார்" என்ற ரேஞ்சில் பலர் அரண்மனையில் பேசியிருப்பார்கள்தானே. கடிதம் ஒன்றும் சித்தார்தன் விட்டுச் சென்றதாகவும் தெரியவில்லை. அப்பெண்மணியின் துயரம் அல்லவா அவளை இவ்வாறு "தோழியே அவர் என்னிடம் கூறிவிட்டுச் சென்றிருக்கலாமே" என்று கூறச் செய்தது? என்னை மிகவும் பாதித்த வரி இது.

அன்புடன்,
டோண்டு ராகவன்

வசந்தன்(Vasanthan) said...

நீண்டநாட்களின்பின் அருமையானதொரு பதிவு தந்ததுக்கு நன்றி.

கறுப்பி said...

டோண்டு உங்கள் கருத்துக்கும்; தகவலுக்கும் நன்றி, வசந்தன் இப்போது கைவசம் கொஞ்சம் நேரம் இருக்கின்றது எனது அடுத்த வேலைத்திட்டத்தை ஆரம்பிக்கும் வரை. சில பார்த்த படங்கள் மனதுக்குள் நிற்கின்றன. மற்றவர்களுடன் பகிர்ந்து கொண்டால் முடிந்தால் பார்ப்பார்கள் அல்லவா. திரைப்படம் கிடைத்தால் எடுத்துப் பார்க்கவும். மிக அருமையான படம்.

ஜெயஸ்ரீ said...

டோண்டு ஐயா,

கவிஞர் பெயர் - மைதிலி ஷரண் குப்தா
புத்தகம் - யஷோதரா

dondu(#11168674346665545885) said...

மிக்க நன்றி ஜெயஸ்ரீ அவர்களே. இது, இதைத்தான் எதிர்ப்பார்த்தேன்.

அன்புடன்,
டோண்டு ராகவன்