Thursday, July 27, 2006

படித்த பாதித்த கவிதை - 1

துயில் கொள்ளா இரவு

ஊரின்
கிழக்குப்பக்கம் கடல்
மேற்கில் வயல்வெளி
வயல்வெளிக்கப்பால்
ஆறும் நாணல்க் காடும்

அங்கிருந்து அல்லது
எங்கிருந்தோ
அவர்கள் வருவதாக
கிங்கிலி கத்திப்பறந்த
ஓர் இரவு

அழிஞ்சிப்பொத்தானை
காத்தான்குடிப் பள்ளியில்
படிந்த குரருதியில்
உறைந்த காற்று
அச்சத்தைக் கூட்டியள்ளி
எல்லோர் முகத்திலும்
அறைந்து வீசிற்று.

தெருவோரம்
அறைச்சுவருள்
கட்டிலுக்கடியில்
பயம் சூழ்ந்து ஒடுங்கியது

பூனை பதுங்கி
அடுப்பங்கரை நுழைய
ராக்குரவி மெல்லக்கொடுகி
கூட்டுள்புக
பயம்
தொண்டை அடைக்கும்
திகில்.

பெருவெளியில்
பார்வையெறிந்து
விழித்துக் கிடந்தேன்
எல்லோரையும் போல

பனித்துகள் படிந்து
பூக்களும், இலைகளும்
துவண்டு களைத்து
அயர்ந்து தூங்கிற்று

இருள்விலகி
அதிகாலை அண்மித்தும்
தூக்கம் தொடாது
கண்கள் கனத்துப்பாரிக்க
மங்கிக்கரையும் வெள்ளிகளிடம்
வினவினேன்
அவர்கள் இரவும்
இப்படித்தான் கழியுமா?
ஜீப்வண்டி உருள்கையில்.


அலறி,
தனிமனித உணர்வுகளில் மட்டும்
கரைந்து விடவில்லை
தன் சமூகத்தின் நாவுமாக இருக்கின்றார்.

சட்டப்பட்டதாரி
தற்போது,
பொதுச் சுகாதாரப் பரிசோதகராகப் பணியாற்றுகிறார்.