உங்களுடைய படைப்புலகம் பற்றி....
சிறுவயதிலிருந்தே வாசிப்பதில்தான் அதிகம் நாட்டம் இருந்தது. முதல் முதலாக கனடாவிலிருந்து வெளி வந்த “தாயகம்” பத்திரிகையில் எனது சிறுகதை பிரசுரமானது. அதன் பின்னர் தொடர்ந்து எழுதிக்கொண்டிருக்கின்றேன்.
நீங்கள் நாடகம், குறும்படமென செயல்படுகிறீர்கள். இங்கே உங்கள் படைப்புகள் பல பதிவாகியிருக்கிறது. நீங்கள் உருவாக்கிய கதாபாத்திரங்களில் ரசித்த... பாதித்த பாத்திரம் ஏது? அது பற்றி....
ரசித்த என்று கூறுவதிலும் பார்க்க பாதித்த என்று கூறுவதையே நான் விரும்புகின்றேன். “உஷ்” எனும் குறுற்திரைப்படத்தில் வந்த சிறுமியின் பாத்திரம், வீட்டில் வாடகைக்கு இருக்கும் ஒரு ஆணால் பாலியல் வதைக்கு ஆளாவதாக அந்தப் பாத்திரம் அமைக்கப்பட்டிருக்கின்றது. இக் கதாபாத்திரம்தான் என்னை மிகவும் பாதித்தது. அதில் நடித்த ஆரண்யா பாபுவும் நான் எதிர்பார்த்தது போலவே மிகவும் சிறப்பாக அந்தப் பாத்திரத்தை தனது நடிப்பால் வெளிக்கொணர்ந்திருக்கின்றார்.
குறும்படம் நாடகங்களில் நடித்தவர்கள் பற்றியும,; அவர்களின் கதாபாத்திரம், நடிப்பு பற்றியும்...
நடிப்பு உலகத்திற்குள் பெண்களின் பங்களிப்பு மிகவும் குறைவாகவே இருக்கின்றது. அதிலும் மாற்றுக் கருத்துக்களைக் கொண்ட கதா பாத்திரம் எனும் போது நடிப்பில் ஆர்வமுள்ள பெண்கள் கூட நடிப்பதற்குத் தயங்குகின்றார்கள். அவர்களைக் குறை கூற முடியாது, எமது சமூகச் சூழல் அப்படியாக உள்ளது. இருந்தும் என் குறுற்திரைப்படங்கள், நாடகங்கள் என்று கனடாவில் சிறந்த நடிகைகள் என்று பெயர் எடுத்த பெண்கள் இணைந்து என்னுடன் வேலை செய்கின்றார்கள் இது எனது அதிஷ்டம் என்று கூடக் கூறலாம். குறிப்பாக சத்யா தில்லைநாதன் இவர் இருமுறை கனேடியக் குநற்திரைப்பட விழாவில் சிறந்த நடிகைக்கான பரிசை வென்றிருக்கின்றார். அடுத்து பவானி சத்யசீலன் இவரும் எனது குறுந்திரைப்படத்தில் நடித்து “விம்பம்” அமைப்பு லண்டனில் நடாத்திய குறுற்திரைப்பட விழாவில் சிறந்த நடிகைக்கான விருதைப் பெற்றிருக்கின்றார். மேலும் தர்சினி வரப்பிரகாசம், யசோதா கந்தையா, ஷாலினி சண்முகநாதன் போன்ற பல மேடை நாடகம் குறுற்திரைப்படங்களில் நடித்த பெண்களும் என்னுடன் சேர்ந்து மேடைநாடகங்களில் நடித்திருக்கின்றார்கள்.
இன்றைய குறும்பட உலகம் அதாவது சர்வதே அளவில் அனைத்து மொழி சார்ந்து வெளிவரும் குறும்படங்கள் மற்றும் புலம்பெயர் தமிழ்ச்சூழலிலும், தாயக மண்ணில் வெளிவரும் குறும்படமோ அல்லது சின்னத்திரைத்திரைப்படம் பற்றி உங்கள் பார்வை?
சின்னத்திரை என்று தாங்கள் கூறுவது இந்திய சீரியல்களை என்று நம்புகின்றேன். எப்போது புலம்பெயர்ந்த மண்ணில் இந்தியச் சீரியல்கள் காண்பிக்கத் தொடங்கினார்களோ அப்போதே புலம்பெயர் இலங்கைத் தமிழருக்கு தீராச் சாபம் கிடைத்து விட்டது என்று நம்புகின்றேன். மக்களைச் சிந்திக்க விடாமல் செய்வதற்கான ஒரு வியாபாரத் தந்திரம் என்பதுதான் என் கருத்து. மற்றும் குறும்படங்கள் என்று பார்க்கும் போது இலங்கையில் இருந்து தரமான பல குறுற்திரைப்படங்கள் வெளிவருகின்றன. போர் சூழல் அதன் பாதிப்பு என்பது குறுந்திரைப்படங்களுக்கு நல்ல ஆழமான கருவாக அமைந்து விடுகின்றன. அத்தோடு புலம்பெயர்ந்த குறுந்திரைப்படங்கள் என்று பார்க்கும் போது மற்றைய நாடுகளை விடவும் கனடாவில் இருந்து தரமான படைப்புக்கள் வருகின்றன என்று கூறலாம். அதை விடவும் மற்றைய மொழிகள் என்றால் கனடாவில் பல குறுந்திரைப்பட விழாக்கள் நடை பெறுகின்றன. அங்கே அனைத்து நாடுகளிலும் இருந்து பல தரமான குறுந்திரைப்படங்கள் காட்சிக்கான வருகின்றன. முக்கியமாக ஈரான் சீனா பிரான்ஸ் போன்ற நாடுகளில் இருந்து காட்சிக்காக வரும் குறுந்திரைப்படங்கள் என்னை மிகவும் கவர்ந்திருக்கின்றன.
நீங்கள் இலங்கையில் இருந்து புலம் பெயர்ந்து கனடாவில் வசிக்கிறீர்கள். இவ்விரு தேசங்களிலும் இருக்கும் தமிழ்ச்சமூகம் மற்றும் பெண்கள் பற்றி உங்கள் கருத்து?
நான் 83ஆம் ஆண்டு இலங்கையை விட்டு வெளியேறினேன். அதன் பின்னர் இன்னும் நாட்டிற்குப் போகும் சந்தர்ப்பம் வாய்க்கவில்லை. போர்ச் சூழல் என்பது நான் வாசித்து கேட்டு அறிந்த ஒன்றாகவே எனக்குப் பரிச்சயப்பட்டிருக்கின்றது. ஆனால் இருபது ஆண்டுகளுக்கு மேலாக புலம்பெயர் சமூதாயத்தின் பரிச்சயம் என்று பார்க்கின். அதனை இருவகையாகப் பார்க்கலாம். ஒன்று பெண்கள் மிகவும் முன்னேறியிருக்கின்றார்கள். அதாவது பலதுறைகளில் அவர்களுக்கான ஈடுபாடு, தமது காலில் நிற்கும் சுதந்திரம், துணிவு என்று கூறலாம், அடுத்து புலம்பெயர்ந்ததால் ஏற்பட்ட பொருளாதாரச் சுதந்திரம் பல பெண்களை இன்னும் பின்நோக்கியும் தள்ளியிருக்கின்றது. அதாவது மூடநம்பிக்கைகளோடு கூடியதான கலாச்சாரம், மதம், சாதீயம், சீதணம் என்று போர் சூழல் காரணமாக இலங்கையில் களையப்பட்ட பல விடையங்கள் புலம்பெயர் நாட்டில் இன்னும் வளர்ந்து கொண்டுதான் இருக்கின்றன.
நீங்கள் ஒரு படைப்பாளராக இருப்பதால் மக்களின் மனநிலையினை நன்றாக புரியக்கூடியவர். இலங்கையின் வடக்கு கிழக்குப் பிரதேசத்தை தாயகமாகக் கொண்டிருக்கும் தமிழ் மக்கள், தமக்கான தனிநாடு ஒன்றை நிறுவிக்கொள்வதற்காக ஆயுத ரீதியான போராட்டத்தினை மேற்கொண்டு வருகிறார். இப்போராட்டத்தில் ஏற்பட்டுவரும் நிகழ்வுகள் பற்றி அம்மக்களின் மனநிலை பற்றி?
இருபது ஆண்டுகளுக்கு மேலான இந்தரப் போராட்டம் முடிவற்று நீண்டு கொண்டிருக்கின்றது. போரட்டச் சூழல் வாழ்வு என்பது எத்தனை துயரமானது என்பது எல்லோரும் அறிந்ததே. புலம்பெயர்ந்த என்னைப் போன்றோரிற்கு இதனை விமர்சனம் செய்யும் தகுதி இல்லை என்றே நம்புகின்றேன். பாதிக்கப்பட்டுக்கொண்டிருக்கும் மக்களில் குரலாய் என்னால் ஒலிக்க முடியாது. அது அவர்களின் குரலாலேயே ஒலிக்க வேண்டும். நான் வெறுமனே பேசியும், எழுதிக்கொண்டும் இருப்பதற்கு மட்டுமே லயக்கானவள்.
இன்று இலங்கையின் வடக்கு கிழக்குத்தமிழ் அரசியலில் பெண்களின் நிலை பற்றி உங்கள் பார்வை?
எதற்குத் தனியாகப் பெண்களின் நிலை என்று கேட்கின்றீர்கள்? அரசியலில் பெண்களின் பங்களிப்பு ஆண்களை விட மிகக் குறைந்த அளவிலேயே உள்ளது. பெண்கள் இதனை வேண்டுமென்றே தவிர்க்கின்றார்களோ என்னவோ. உலகம் முழுவதுமான அரசியலை எடுத்துக் கொண்டாலும் அதே நிலைதான். பெண்கள் சிலர் அரசியல் பதவிகளில் ஆண்களால் அமர்த்தப்படுகின்றார்கள். இவற்றைப் பெண்களின் பங்களிப்பு என்று கணிப்பிட்டுவிட முடியாது. உலக அரசியலே ஆண்களின் கைகளில் இருப்தால்தான் இப்படிச் சீர்கெட்டுப் போய் இருக்கின்றது என்பது எனது தனிப்பட்ட கருத்து.
பெண்கள் சுதந்திரம் பற்றி...?
இந்தக் கேள்விக்குப் பதில் கூறிக் கூறி அலுத்து விட்டது. பெண் சுதந்திரம் என்பதை ஒவ்வொருத்தரும் தமக்கான அளவுகோல் கொண்டு அளவிடுகின்றார்கள். மிகவும் கோழைத்தனமாக வாதாடுகின்றார்கள். பெண் சுதந்திரம் பேசும் பெண்களில் பலர் “அந்த” ஆனால்.. என்று இழுக்கும் நிலையில்தான் இன்னும் இருக்கின்றார்கள். பெண் சுதந்திரம் என்று ஒன்று தனியாக இருப்பதாகக் கூறுவதை விடுத்து, தனிமனித சுதந்திரம் என்றே நான் பார்க்கின்றேன். தனிமனித சுதந்திரத்திற்கு முக்கியத்துவம் கொடுத்தால் எல்லாச் சுதந்திரமும் தானாகவே வந்து விடும்.
கடந்து போன காலத்தில் வாழ்ந்த பெண்களில் நீங்கள் குறிப்பிட விரும்பும் பெண் யார்? எதற்காக?
சமூக அக்கறையின் பொருட்டு சிந்தனையுடனான தேடல் கொண்ட எந்த ஒரு பெண்ணும் முக்கியமானவளாகவே எனக்குப் படுகின்றாள். அது எந்த மொழி எந்த நாட்டுப் பெண்ணாக இருப்பினும் அவள் பற்றி அறிந்து கொள்ளவே முயல்வேன். குறிப்பிட்டு ஒருவரைக் கூற நான் விரும்பவில்லை.
கேள்விகள்: நம்மொழி பாஸ்கரன்
பதில்கள்: சுமதி ரூபன்
Saturday, August 26, 2006
Friday, August 18, 2006
Wednesday, August 09, 2006
Subscribe to:
Posts (Atom)