“சிவகாசி” யும், “புலிகேசி” யும் சக்கை போடு போடும். அதேவேளை “காக்க காக்க” வும் உச்சத்திற்குப் பறக்கும், பார்வையாளர்கள் எல்லாத் திரைப்படத்தையும்தான் பார்த்து வைக்கின்றார்களோ?
“காக்க காக்க” அளவுக்கு படம் எடுபடேலை எண்டது உண்மைதான் அதே நேரம் வன்முறை கூடீற்றுது எண்டதையும் என்னால ஒத்துக் கொள்ளேலாமல் இருக்குது. கௌதமின்ர ஸ்ரைல் என்ன எண்டு பாத்தால் சில மனித நச்சுகளை அழிக்கிறதுக்கு உடனடி நடவடிக்கை தேவை. இந்தியா இருக்கிற நிலமையில கோட், கேஸ் எண்டு போனால் எப்பவும் வில்லன்களுக்குத்தான் சார்பா முடியும். எனவே சமூக விரோதி எந்தப் பெரிய கொம்பனா இருந்தாலும் ஒரு உண்மையான பொலிஸ் அதிகாரி உடனேயே அவனை அழித்து விடுறதுதான் அந்தச் சமூகத்துக்காக அவனால செய்யக்கூடியது நன்மை. இதைத்தான் தனது திரைப்படங்கள் மூலம் சொல்லி வருகின்றார் கௌதம்.
தமிழ் திரைப்படங்கள் ரேட்டிங் செய்யப்படுவதில்லையோ, இல்லாவிட்டால் கனேடியத்தமிழ் திரையரங்குகள் அதில் கவனம் எடுக்கவில்லையோ என்னவோ, தமிழ் திரைப்படங்கள் என்றால் குடும்பமாகச் சென்று பார்க்கும் வழக்கம்தான் எல்லோருக்கும் இருக்கிறது. இதனால் வன்முறை கூடிய பல திரைப்படங்களை குழந்தைகள் பார்க்க நேரிடுகின்றது. பெற்றோர் திரைப்படங்களுக்குச் செல்லும் முன்னர் திரைப்படம் பற்றிய விமர்சனங்ளை அறிந்து கொண்டு போனால் இந்த சங்கடங்களைத் தீர்க்க முடியும்.
கௌதமினால் “காக்க காக்க” திரைப்படத்தின் கருவில் இருந்து விலக முடியில்லை, தமிழ் நாட்டில் முழுமையாகப் படப்பிடிப்பு செய்தால் “காக்ககாக்க” வின் மறுபிரதி போல் “வேட்டையாடு விளையாடு” திரைப்படமும் வந்து விடும் என்று நினைத்தோ என்னவோ பாதிக் காட்சிகளை நியூயோர்க்கில் படப்பிடிப்பு செய்திருக்கின்றார்கள். இது ஒரு வியாபாரத்தந்திரமே தவிர திரைப்படத்திற்கு இதனால் ஒரு நன்மையும் இல்லை. இருந்தாலும் நியூயோர்க் காட்சிகள் குளிர்மையாக இருந்தன.
சின்னச் சின்னப் பிரச்சனைகளைத் தாங்கிக்கொள்ள முடியாமல், தம்மில் அன்பாய் இருக்கும் உறவுகளை மறந்து பல பெண்கள் தற்கொலை செய்து கொள்கின்றார்கள். இது தவறு கொஞ்சம் சிந்தித்தால் வாழ்வை மகிழ்ச்சியாக மாற்றிக்கொள்ள முடியும் என்பதை ஜோதிகாவின் பாத்திரத்தின் மூலம் காட்டியிருக்கின்றார். ஜோதிக்காவின் பாத்திரம் மூலம் கற்பு, கல்யாணம், தாய்மை என்று அலட்டிக் கொள்ளாமல் பெண்களுக்கு நல்ல ஒரு செய்தியைச் சொல்லிச் சென்றிருக்கின்றார்.
ஓரினச்சேர்க்கை என்பது நகைச்சுவைக்குரியது என்பதுபோல்தான் எம்மில் பலரும் பார்க்கின்றார்கள். அதைத்தான் கௌதமும் செய்திருக்கின்றார். கமல் “அடேய் நீயென்ன ஹோமோ செக்சுவலா” என்று கேட்ட போது திரையரங்கு சிரிப்பால் அதிர்ந்தது அதற்கு உதாரணம். இந்த இடத்தில் கமல் மிகவும் தாழ்ந்து போய்விட்டார்.
நடிகர்கள் என்று பார்க்கும் போது எனக்கு இரண்டு விடையங்கள் திருப்தியாக இருந்தன ஒன்று ரஜனிக்காந்தைப் போல தன்னை ஒரு இளைஞனாகக் காட்டி கதாநாயகியை டூயட் பாடிக் காதலிக்கும் ஒருவராகத் தன்னைக் காட்டிக்கொள்ளாமல் திருமணம் செய்து மனைவியை இழந்த ஒரு முதிர்ந்த பொலிஸ் அதிகாரியாக கமல் வந்து போவது, அடுத்தது மேக்கப் அதிகம் இல்லாமல் மிகவும் எளிமையாக ஜோதிகா நடித்திருப்பது. கமலின் முதல் மனைவியாக வந்து இறந்து போகும் கமாலினி, முன்னைய நடிகை சாந்தி கிறிஷ்ணாவை ஞாபகப்படுத்துகின்றார். பாடல்கள், பாடல் காட்சிகளும் பிடித்திருக்கின்றன.
மனநோயாளியான இரு இளைஞர்கள் பல கொலைகளைச் செய்து கொண்டு அதே நேரம் தமது படிப்பிலும் உச்சத்திற்கு வருவது என்பது எவ்வளவு சாத்தியம் என்று தெரியவில்லை. கொலைகள் திட்டமிட்டது போல் காட்டப்பட்டாலும் மிக அவசரமாகவும், காரணங்களும் வலுவானதாக இல்லாததாலும் தடையங்கள் பல வெளிப்படையாக உள்ளன. இருந்தும் கொலையாளிகள் அகப்படாமல் இந்தியா நியூயோர்க் என்று பறந்து அங்கும் இங்கும் கொலைகளைச் செய்து வருகின்றார்கள்.
எனக்கொரு சந்தேகம். இந்தியத்திரைப்படங்கள் பலதில் நேர்மையான பொலீஸ் அதிகாரயாக இருந்தால், சமூகவிரோதிகளால் அவர்கள் குடும்பம் பழிவாங்கப்படும் என்று காட்டப்படுகின்றது. ஆனால் உண்மை நிலையில் பொலிஸ் குடும்பங்கள் அழிக்கப்பட்டன என்று செய்திகளில் நான் படித்ததில்லை. அப்படியாயின் இந்திய மண்ணில் நேர்மையா பொலிஸ் அதிகாரிகளே இல்லையா?
குருதிப்புனல், மகாநதி, அன்பேசிவம் போன்ற தரமான படங்களைத் தந்த கமலும், காக்க காக்க திரைப்படத்தைத் தந்த கௌதமும் இணைந்து வெறுமனே வேட்டையாடி விளையாடி இருக்கின்றார்கள். திரையரங்கு சென்று பார்க்க வேண்டிய திரைப்படம் இது என்று நான் நினைக்கவில்லை. டீவீடியே போதும்.
Subscribe to:
Post Comments (Atom)
9 comments:
அவ்வளவு கஸ்டப்பட்டு ஏகப்பட்ட பணம் செலவழித்து 2 1/2 வருடங்களுக்கு மேல் இழுத்து முதல் தயாரிப்பாளர் (ரோஜா கம்பைன்ஸ் காஜா முகைதின்) தற்கொலை வரை போய், அடுத்த தயாரிப்பாளருக்கும் நஸ்டம் என்று கேள்விபட்டிருப்பதால் இந்தப் படத்தை கள்ளத்தனமாக பார்ப்பது (படம் சுமாராக இருந்தாலும்) வேண்டாம் என்றுத்தான் தோன்றுகிறது.
இன்னும் கொஞ்சம் தேவையில்லாத வசனங்களையும் வன்முறையையும் குறைத்திருந்தால் நல்லப் படமாக உருவாகியிருக்கும் வாய்ப்பு அதிகம்.
இருந்தாலும் சமீபத்திய செய்திபடி வினியோகஸ்தர்களுக்கு நல்ல லாபம் கிடைத்திருக்கிறது.
கமல் படம் என்று நினைக்காமல் போனால் கொஞ்சம் ஏமாற்றத்தை தவிர்க்கலாம்.
மற்ற விசயங்கள் எல்லாம் நீங்கள் சொல்வதுப்போலத்தான்.
நல்ல விமர்சனம். அதுவும் உங்க ஊர் தமிழ்ல படிக்கறது தனி குஷி தான். எல்லாம் சரி... ஆன முடிக்கற நேரத்துல
//திரையரங்கு சென்று பார்க்க வேண்டிய திரைப்படம் இது என்று நான் நினைக்கவில்லை. கள்ள டீவீடியே போதும்.//
இது தேவையா? யோசிக்கறவங்களே இப்படி பேசலாமா? படம் நல்லா இல்லைன்னு உங்களுக்கு தோணினா, பாக்காதீங்கடான்னு சொல்லிட்டு போயிருக்கலாமே...
கருப்பி,
//கமல் “அடேய் நீயென்ன ஹோமோ செக்சுவலா” என்று கேட்ட போது திரையரங்கு சிரிப்பால் அதிர்ந்தது அதற்கு உதாரணம். இந்த இடத்தில் கமல் மிகவும் தாழ்ந்து போய்விட்டார்.//
அதை நானும் இங்கு கவனித்தேன். அரங்கம் அதிர்ந்தது உண்மைதான். ஆனால் அது போன்ற 'ஹோமோ செக்சுவல்' என்பது ஒரு மனம் சம்பந்தபட்ட பிரச்சினையாகத்தானே பார்க்கப் படுகிறது.
இதில் கமல் எவ்வாறு தரம் தாழ்ந்து போகிறார்? முதுகில் கண்ட அடையாளத்தைக் கண்டு அவ்வாறு அவனிடத்தே வினவுவது போலவே காட்சி அமைந்ததாக எனக்குப் பட்டது.
மற்றபடி, ஜோதிகாவின் பாத்திரம் நீங்கள் கூறியது போலவே, அருமையாக விளக்கப்பட்டது. மென்மையாக, ஆனால் ஒரு ஆழமான விசயத்தை.
எனது பார்வை இங்கே வேட்டை விளை(யாட்டு): Hollywood effect
எதிர்பார்ப்புகளை அதிகமாக்கிவிட்டு அவற்றைக் காலிசெய்வது சில படங்களில் நிலவுகிறது. அந்த படங்களில் வே.வி. படமும் ஒன்று. ஒரே மாதிரியான வில்லன், ஒரே மாதிரியான காட்சியமைப்பு போன்றவை காக்க காக்க படத்தை நினைவு படுத்தினாலும் காக்க காக்க அளவிற்கு நேர்த்தி இல்லை என்பது நிஜம். ஒருவேளை நிர்வாக பிரச்சினைகள் காரணமாக இயக்கநரின் சிந்தனை தவறிவிட்டதோ என்னவோ.
-----------
ஓரினச்சேர்க்கை என்பது நகைச்சுவைக்குரியது என்பதுபோல்தான் எம்மில் பலரும் பார்க்கின்றார்கள். அதைத்தான் கௌதமும் செய்திருக்கின்றார். கமல் “அடேய் நீயென்ன ஹோமோ செக்சுவலா” என்று கேட்ட போது திரையரங்கு சிரிப்பால் அதிர்ந்தது அதற்கு உதாரணம். இந்த இடத்தில் கமல் மிகவும் தாழ்ந்து போய்விட்டார்.
------------
இது உங்களது கருத்தாக இருக்கலாம். மற்றபடி ஓரனச்சேர்க்கை என்பது மிகவும் புண்ணிய ஆத்மாக்கள் செய்யும் காரியமும் இல்லை. அதனை மதித்து ஏற்ற வேண்டிய அவசியமும் இல்லை. அதற்கு கமலையோ கவுதமையோ குறை சொல்ல வேண்டிய அவசியமோ இல்லை.
மற்றபடி வீடியோ கிராபி கண்களுக்குக் குளிர்ச்சியாக இருந்தது. நெடுநாளைக்கு அப்புறம் கமலுக்கு ஒரு ரகளையான அறிமுகக் காட்சி.
வீடியோகிராபி இசை ராகவன் ஆராதனா மற்றும் கயல்விழியை ரசிப்பவர்கள் தியேட்டருக்குப் போகலாம்
just now returned from theatre (Sathyam, Chennai) seeing Vettaiyadu Vilayaadu....your review of the movie is superb.....the songs are already a hit since many months thereby increasing one's expectations of the movies's release; artists have lived upto the expectations. The camera of RDRajasekar and Editing of Antony have made the film touch new heights. Aptly supported by Harris Jeyaraj, Gowtham scores a tremendous hatrick....
// குருதிப்புனல், மகாநதி, அன்பேசிவம் போன்ற தரமான படங்களைத் தந்த கமலும், காக்க காக்க திரைப்படத்தைத் தந்த கௌதமும் இணைந்து வெறுமனே வேட்டையாடி விளையாடி இருக்கின்றார்கள் //
மிகவும் உண்மை, ஆனால் படம் கமர்ஷியலாக வெற்றி பெற்று விடும் என நினைக்கிறேன்
***
நிறைய பேரை படிக்க வைத்திருக்கிறீர்கள், இவ்விமர்சனத்தை..
பாராட்டுகள் !!
மன்சூர், சித்தார்தா. கள்ள டீவீடி என்று ஒரு பேச்சுக்குத்தான் சொன்னேன். அதனை நான் ஆதரிப்பவள் அல்ல. வெறும் டீவீடி என்று குறிப்பிட்டிருந்திருக்கலாம். என்னுடைய தவறுதான். அதனை நீக்கி விடுகின்றேன் நன்றிகள்.
பாரதி ஓரினச்சேர்க்கை என்பதை நாம் ஆதிரிப்பதோ, நிராகதிப்பதோ என்பது இங்கு பிரச்சனை இல்லை. ஆதரிப்பதற்கும், நிராகரிப்பதற்கும் நாங்கள் யார்? அது அவர்களுடைய வாழ்வு முறை. கமல் போன்ற ஒரு சிந்தனை உள்ள நடிகன் நகைச்சுiவாயக எடுத்துக் கொண்டதுதான் என்னுள் சங்கடத்தைத் தந்தது. இப்போது யோசித்தால் கமல் என்ன அந்தளவிற்கு முற்போக்கானவரா?
மற்றும் விமர்சனம் தந்த அனைவருக்கும் நன்றிகள்.
//கமல் “அடேய் நீயென்ன ஹோமோ செக்சுவலா” என்று கேட்ட போது திரையரங்கு சிரிப்பால் அதிர்ந்தது அதற்கு உதாரணம். இந்த இடத்தில் கமல் மிகவும் தாழ்ந்து போய்விட்டார்.//
இந்த விசயத்தில் நான் கமலை கண்டிக்கிறேன். வில்லனை கதாநாயகன் திட்டுகிற போது மக்கள் மகிழ்ந்து கைத்தட்டுவார்கள். இந்த வசனம் வில்லனை திட்டுகிற, ஏளன படுத்துகிற தோரணையில் தான் வருகிறது. இந்த வசனத்தை பண்பட்ட கலைஞனான கமலிடம் இருந்து நான் எதிர் பார்க்கவில்லை. ஏன் தமிழ் சினிமா 'SEXUAL MINORITIES' மக்களை எப்போதும் கேலிக்குரிய விசயமாகவே பார்க்கிறது.யாரும் இஷ்டப்பட்டு தங்கள் 'SEXUALITY' யை தேர்ந்தெடுப்பதில்லை. அது இயற்கையாகவே அமைவது.யாரும் அதை மதிக்கவும் வேண்டாம், மிதிக்கவும் வேண்டாம்.
//மனநோயாளியான இரு இளைஞர்கள் பல கொலைகளைச் செய்து கொண்டு அதே நேரம் தமது படிப்பிலும் உச்சத்திற்கு வருவது என்பது எவ்வளவு சாத்தியம் என்று தெரியவில்லை//
சாத்தியமே.....
Post a Comment