" "We all came out from under Gogol's 'Overcoat' ரஷ்ய எழுத்தாளர் Nikolai Gogol's “Overcoat” சிறுகதைத் தொகுதி வெளியானதிலிருந்து இந்த வரிகள் பிரபல்யமான "quote" ஆகப் பாவனைக்குட்படுத்தப்பட்டு வருகின்றது. தன்னை மிகவும் பாதித்த Nikolai Gogol's இன் “Overcoat” உம் வேறு பல நாவல்களும்தான் சாதாரன மக்களின் அன்றாக வாழ்வை நகர்த்திச் செல்லும் ஒரு எளிமையான “The Namesake” எனும் நாவலை எழுதத் தூண்டியது என்கின்றார்; லண்டனில் பிறந்து அயர்லாந்தில் வளர்ந்து தற்போது போஸ்டனில் வாழும் நாற்பது வயதுடைய Jhumpa Lahiri. தன்னிடம் யாராவது நீ எந்த நாட்டைச் சேர்ந்தவள் என்று கேட்டால் தான் வளர்ந்த படித்த நன்றாகப் பரிச்சயப்பட்ட நாடான அயர்லாந்தைக் குறிப்பிடும் போது அவர்கள் தன்னை வினோதமாகப் பார்ப்பதாகவும், தன் நிறத்தையும் உருவத்தையும் வைத்து தான் அறியாத தனது பெற்றோரின் நாடான இந்தியாவைக் குறிப்பிடும் போது மட்டுமே அவர்கள் ஏற்றுக்கொள்வதாகவும் இதனால் தான் அடையாளத்தைத் தொலைத்தவளாகப் பல தருணங்களில் உணர்ந்திருப்பதாகவும் குறிப்பிடுகின்றார். ஒரு பெண் படைப்பாளியா இருந்து கொண்டு அவரது படைப்புக்களின் ஆண் பாத்திரத்தை முன்நிறுத்துவதற்கு ஏதாவது பிரத்தியேக காரணம் இருக்கின்றா என்று கேட்ட போது, அப்படி ஒரு பிரத்தியே காரணமும் இல்லை ஆர்வம்தான் காரணம் அத்தோடு ஆண்கள் என்பார்வையில் மிகவும் வினோதமானவர்களாக தெரிகின்றார்கள் என்றும் கூறும் ஹ_ம்பா லாஹிரி தனக்கு ஆண் சகோதரர்கள் இல்லை என்றும் கூறுகின்றார்.
இவரது முதல் சிறுகதைத் தொகுப்பான “Interpreter of Maladies” 2000 ஆம் ஆண்டு “Pulitzer” பரிசைப் பெற்று 16 மொழிகளில் மொழிபெயர்ப்பும் செய்யப்பட்டது. “The Namesake” இவரது முதலாவது நாவல். மிகவும் பிரபல்யமாக விமர்சனங்களுக்கு உள்ளாகி வருகின்றது. மீரா நாயரின் இயக்கத்தில் வெளியான “The Namesake” திரைப்படம் நாவல் அளவிற்குப் பாதிப்பைத் தரவில்லை என்று பார்வையாளர்கள் கூறுகின்றார்கள். எந்த ஒரு நாவலுமே திரைப்படமாக வெளியாகும் போது இதே குற்றச்சாட்டைத்தான் பெறுகின்றது.
எனது பார்வையில் “The Namesake”
நான் நாவலைப் படிக்கவில்லை திரைப்படம்தான் பார்த்தேன் எனவே பார்வை திரைப்படத்திற்கு மட்டும்தான். தீபா மேத்தா அதிகமாக அதிரடியான கருக்களை எடுத்துத் திரைபடமாக்கி பார்வையாளர்களை அதிர வைப்பார். மாறாக மீரா நாயர் அனேகமாக குடும்பங்களுக்குள்ளான சிக்கல்களை ஒரு மெல்லி நீரோட்டமாக ஓட விட்டுப் பார்வையாளர்களைச் சிந்திக்க வைப்பார். தீபா மேத்தாவின் திரைப்படங்கள் பார்த்த உடனே தாக்கத்தை ஏற்படுத்தும், பின்னர் சிந்திக்கும் போது அதிகம் பாதிப்பைத் தராது. மீரா நாயரின்; திரைப்படங்கள் சிந்திக்கச் சிந்திக்கப் புதிய அர்த்தங்களைத் தோற்றுவித்துக் கொண்டே இருக்கும். இத்திரைப்படம் நெருக்கமான குடும்ப உறவுகளோடு வசதியாக வாழ்ந்த ஒரு பெண் திருமணம் காரணமாக புலம்பெயர்ந்து புதியநாட்டில் எதிர்கொள்ளும் பிரச்சனை, குழந்தைகள் பிறந்து வளர்ந்த பின்னர் ஏற்படும் சந்ததி இடைவெளி என்று ஒரு நெருக்கமான குடும்பஉறவில் ஏற்படக் கூடிய சிக்கலைக் ஆர்ப்பாட்டங்கள் எதுவும் இன்றி நகர்த்திச் செல்கின்றது.
ஒரு ரெயில் பயணத்துடன் திரைப்படம் ஆரம்பமாகின்றது. பயணம் செய்யும் முதியவர் ஒருவர் சக பிரயாணியான இளைஞனிடம் அமெரிக்கா சென்றிருக்கின்றாயா? இங்கிலாந்து சென்றிருக்கின்றாயா? என்று கேள்விகள் கேட்டு, வாழ்வில் அனுபவிப்பதற்கு எத்தனையோ இருக்கின்றன கிடைத்ததை கையில் எடுத்துக் கொண்டு நாடுநாடாகச் சென்று வா என்கின்றார். அதற்கு இளைஞன் என் தந்தை கூறுவார் உலகமே உன் கையில் வரும் நீ புத்தங்களைப் படிப்பதனால் என்று விட்டு தனக்குப் பிடித்த எழுத்தாளர் நிகொலாயின் ஓவர் கோட் எனும் படைப்பைப் படிக்கின்றான். அவன் சென்ற ரயில் விபத்திற்குள்ளாகின்றது.
அடுத்த காட்சியாக அதே இளைஞன் அமெரிக்காவிலிருந்து வந்து இந்தியாவில் தபுவைப் பொம்பிளைப் பார்த்துத் திருமணம் செய்து கொள்வதாக் காட்சி அமைக்கப்பட்டிருக்கின்றது. ரெயில் விபத்தும் அந்த முதியவரின் பேச்சும் இளைஞனை மனம்மாறச் செய்துள்ளது.
அமெரிக்கா என்ற போது கற்பனையில் கிடைக்கக் கூடிய அத்தனை ஆடம்பரங்களும் நிஜத்தில் அழிந்து போக ஒடுக்கமான அந்த வீட்டினை ஏக்கத்துடன் பார்க்கின்றார் மனைவி (தபு). பயணக் களைப்பால் எழுந்து, புதிய நாடு, அதிகம் அறிமுகமற்ற கணவன் என்ற புதிய உறவு, அடுத்து என்ன என்பது போல் குழம்பி நின்றவளை “இப்பிடி இரு நான் இருவருக்குமாய் தேனீர் போடுகின்றேன்” என்று கணவன் (இஃரான் கான்) கூறிய போது ஆச்சரியத்துடன் கூடிய புன்சிரிப்பு மனைவியின் முகத்தில் தோன்ற அவர்களின் உறவின் நெருக்கம் மிக இயல்பாக பார்வையாளர்களுக்கு வெளிப்படுத்தப்படுகின்றது. கணவனின் உடைகளை வோஷின் மெஷினில் போட்டு அவை சுருங்கி அளவில் சிறுத்து விட, கணவன் சினந்து கொண்ட போது பொங்கி வந்த அழுகையை அடக்க முடியாமல் குளியல் அறைக்குள் ஒளிந்து கொள்ளும் மனைவி. பின்னர் அவளைச் சமாதானப் படுத்த பூட்டிய அறையின் வெளியில் நின்று பாட்டுப் பாடும் கணவன். சின்னச் சின்னச் சம்பவங்கள் புலம்பெயர்ந்த ஒவ்வொருவரின் நினைவுகளை மீட்டுகொண்டு வரும்.
கருத்தரித்தபோது வாயில் ஏற்படும் தவனத்துக்காய் சீரியலில் மிளகாய்த்தூளையும் உப்பையும் போட்டுச் சாப்பிடும் பெண். மிக மலிவான விலையில் இந்திய வீதிகளில் விற்பனையாகும் பொருட்கள் கூட கருத்தரித்த பெண்ணின் ஏக்கமான நேரத்தில் கிடைகப்பெறாத வாழ்க்கை நிலை.“தனிமையான இந்த நாட்டில் எனது பிள்ளையை வளர்க்க விரும்பவில்லை” மனைவி முதல் மகன் பிறந்த போது கூறுகின்றார். “தனிமைதான் ஆனால் இந்த நாட்டில் இருக்கும் சுதந்திரத்தையும் குழந்தை வளர்ந்து அவனுக்கு எதிர்காலத்திற்காய் கிடைக்கக் கூடிய சந்தப்பங்களையும் சிந்தித்துப் பார்” கணவன் கூறுகின்றார். குழந்தை அங்கேயே வளர்கின்றான். சாத்திர சம்பிரதாயம் பார்த்துப் பெயர் வைக்க நேரம் கிடைக்காமல் மருத்துவரின் அவசரத்திற்கிணங்க முதலில் தன் நினைவிற்கு வந்த தனக்கு மிகவும் பிடித்த எழுத்தாளரான நிகலாய் கோகுல் இன் பெயரில் கோகுலை மட்டும் வீட்டுப் பெயராக மகனுக்கு வைக்கின்றார்கள். அதுவே அவன் வாழ்வில் பல இடங்களில் அவனைச் சங்கடத்துக்கு உள்ளாக்குகின்றது. எழுத்தாளர் ஹ_ம்மா லாஹிரி இந்தியர்கள் தமது குழந்தைகளுக்கு வீட்டிற்கான செல்லப்பெயர் என்று மிகவும் விசித்திரமான பெயர்களைச் சூட்டிப் பின்னர் அதுவே பாடசாலைகளிலும் அழைக்க வசதியாக இருக்கின்றது என்று நிலைத்து விடும் வழக்கம் இருக்கின்றது என்றும், தன்னை ஹ_ம்மா என்று செல்லப் பெயர் கொண்டு அழைப்பது நிலைத்த போதும், கல்கத்தாவின் தன் உறவினர் ஒருவரின் மகனை கோகுல் என்று செல்லப்பெயர் கொண்டு அழைப்பதைப் பார்த்த போதும் இது பற்றித் தனது படைப்பில் எழுத வேண்டும் என்று எண்ணியிருந்ததாகவும் கூறுகின்றார்.
தனக்கு ஏற்பட்ட கொடூரமான விபத்தை மறக்காமல் இருப்பதற்காக அப்போது தான் படித்துக்கொண்டிருந்த நிகொலாய் கோகுலின் ஞாபகார்த்தமாய் கோகுல் என்ற பெயரை செல்லப்பெயராக வைத்ததாக மகனுக்குக் கூறிய தந்தை ஒருநாள் நீ இதைப் புரிந்து கொள்ளுவாய் என்கின்றார். உறவின் ஆழம் என்பது ஒருவரை இழந்த பின்னர்தான் புரிந்து கொள்ளப்படுகின்றது.
இறுக்கமாக தமது கலாச்சாரங்களுக்குள் பிள்ளைகளை வளர்க்க விரும்பும் பெற்றோர். பிள்ளைகள் வளர்ந்து பெரியவர்களான போது கலாச்சாரத்தை விட்டு விலகிப் போகும் தருணம் பிள்ளைகள் மேல் அவர்கள் கொண்ட பாசம் அவர்களை வெறுக்கி ஒதுக்கவும் முடியாமல் அவர்கள் வாழ்வு முறையை முழு மனதோடு ஏற்றுக்கொள்ளவும் முடியாமல் தடுமாறச் செய்யும். பிள்ளைகள் வளர்ந்து கல்வி, வேலை என்று பெற்றோரைப் பிரிந்து செல்வதும், வேலை காரணமாகக் கணவன் மனைவியே சிலகாலம் பிரிந்து இருக்க வேண்டிய கட்டாயம் ஏற்படுவதும் எங்குமே சகஜம் எனினும், புலம்பெயர்ந்த நாடுகளில் சொந்தங்கள், உறவினர்களின் இல்லாமை வயது முதிர்ந்த நிலையில் அவர்கள் வாழ்வு நிலை பற்றித் தடுமாறச் செய்யும். திடீரென்று கணவன் இறந்து, பிள்ளைகளும் தமக்கான எதிர்காலத்தில் இணைந்து விட இனி அமெரிக்காவில் தனக்கான வாழ்வு என்று ஒன்றுமில்லை என்று தனது கடைசிக்காலத்தை இந்தியாவில் கழிப்பதற்காகக் கிளம்புகின்றார் தபு. வெள்ளைஇனப்; பெண்ணைக் காதலித்து தந்தையின் திடீர் மரணத்திற்குப் பின் குடும்;பம் உறவு என்று தடுமாறி காதலியின் காதலின் ஆழத்தை அலட்சியம் செய்து, பின்னர் தாயின் விருப்பத்திற்கு இணங்க இங்கிலாந்தில் பிறந்து வளர்ந்த பெங்காலிப் பெண்ணை மணந்து அவளின் அதிநவீன வாழ்க்கை முறையை எதிர்கொள்ள முடியாமல் மணவாழ்வை முறிந்துக் கொண்டு தந்தை பிறந்தநாள் பரிசாகக் கொடுத்த நிகலாய் கோகுலின் படைப்பைப் படித்த வண்ணம் பயணம் செய்யும் கோகுல். திரைப்படம் நிறைவிற்கு வருகின்றது.
தபு சிறந்த ஒரு நடிகை. தனது பாத்திரத்தை இயக்குனர் எதிர்பார்ப்பதிலும் திறமையாகச் செய்யக் கூடியவர். இருந்தும் என்னை நடிப்பில் கவர்ந்தவர் இஃபன் கான். ஏக்கம், குழப்பம், காதல் போன்ற உணர்வுகளில் திரைப்படத்தில் வாழ்ந்திருக்கின்றார்.
எங்கோ பிறந்து வளர்ந்து வாழ்ந்து, பின்னர் புலம்பெயர்ந்த நாம் எமது இறுதிக்காலத்தில் கூட எமக்காக ஒரு நாடு இருக்கின்றது என்று புறப்பட முடியாத நிலை.
Thursday, April 26, 2007
Subscribe to:
Posts (Atom)