Friday, August 08, 2008

பெண்கள் சந்திப்பும் சில பேய்க் கதைகளும் - எதிர்வாதம்

தமிழ்நதியின் குமுறலான கட்டுரையைப் படித்த போது அதிர்வாகவே இருந்தது. பெண்கள் சந்திப்பின் போது ஒன்பது கட்டுரைகள் பெண்களால் படிக்கப்பட்டது. கனேடிய இலக்கியச் சந்திப்பன்று ஆறு கட்டுரைகள் என்று நினைக்கின்றேன் பெண்களால் வழங்கப்பட்டது. அதில் இரண்டாம் நாள் நிர்மலாவின் கட்டுரை தேசியமும் பெண்ணியமும் என்ற தலைப்பின் விடுதலைப்புலிகள் பெண்கள் மேல் பிரயோகிக்கும் அனர்த்தங்கள் பற்றிக் குறிக்கப்பட்டிருந்தன. தமிழ்நதியின் பதிவு ஏதோ ஒட்டு மொத்தமாக நிகழ்விலும் புலி எதிர்ப்புக் கட்டுரைகள் வாசிக்கப்பட்டது போல் ஒரு பிரமையை ஏற்படுத்துகின்றது.

அடுத்து இந்தியாவிலிருந்து வந்திருந்த பெண்ணியவாதி மாலதிமைத்ரி, இலங்கையிலிருந்து வந்திருந்த நிவேதா ஆகியோரைத் தவிர நான் பிரத்தியேகமாக எந்த ஒருவருக்கும் அழைப்பு விடவில்லை. பெண்கள் சந்திப்பில் வருடாவருடம் கலந்து கொள்ளும் பெண்கள் தாம் வருவதாக அறிவித்திருந்தார்கள். அவர்களுள் நிர்மலாவும் ஒருவர். வருபவர்கள் ஒவ்வொருவரிடமும் கட்டுரைகள் வழங்கும் படி கேட்டிருந்தேன் அந்த வகையில் தங்களையும் நான் கேட்டிருந்தேன். நிர்மலா ஒத்துக் கொண்டு தரமான கட்டுரைகளை வழங்கினார். இதைப் புரிந்து கொள்ளாமல் வீணாக “தெரிந்து” “தேர்ந்து” என்று தாங்கள் போல்ட் பண்ணி எழுத வேண்டிய அவசியமில்லை. பல பேச்சாளர்களின் பின்னர் கேள்விகள் அதிகம் வரவில்லை. நிர்மலாவை நோக்கிப் பல கேள்விகள் வந்தன அதனால் அவருக்கு அதிக நேரம் கொடுத்தோம். அது தவறென்று நான் நினைக்கவில்லை.


மேலும் விடுதலைப்புலி எதிர்பாளர்களினால் நடாத்தப்பட்டது என்ற ஒரு தவறான கருத்தும் இங்கே வைக்கப்பட்டு கருத்துக் கூறுபவர்களும் அதே பாதையில் நகர்ந்து செல்கின்றார்கள். விடுதலைப்புலிகளின் சார்பானர்வள் ஒருபோதும் நடுநிலமையாளர்களை ஏனோ ஏற்றுக்கொள்வதில்லை. விடுதலைப்புலி சார்பு, இல்லையேல் அரசாங்கத்தின் சார்பு என்றே அவர்கள் கணித்துக்கொள்கின்றார்கள். மனித உரிமை மீறல்களுக்குக் குரல் கொடுப்பவர்கள் அரசாங்கம், விடுதலைப்புலிகள் இன்னும் மதம் மொழி இனம் என்று எந்த வர்க்கத்தினராலும் மனித உரிமை மீறல்கள் நடாத்தப்படும் போது குரல் கொடுக்கப்படல் வேண்டும் என்பதைப் புரிந்து கொள்ளாது, விடுதலைப்புலிகளின் மனிதஉரிமை மீறல்கள் அடையாளப்படுத்தப்படும் போது மட்டும் கொதித்தெழுகின்றார்கள்.

பெண்கள் சந்திப்பில் கலந்து கொள்ளுமாறு உலகத்தமிழர் பெண்கள் அமைப்பின் பல
அங்கத்தவர்களை நான் நேரடியாகவே தொலைபேசியில் அழைத்துக் கேட்டிருந்தேன். அவர்கள் ஒருவரும் சமூகமளிக்கவில்லை. தான் வரமுடியாது காரணம் அன்று தமிழர் வொண்டலாண்ட் திருநாள் என்று உலகத்தமிழர் பெண்கள் அமைப்பின் முக்கிய உறுப்பினர் கூறினார். உலகெங்கிலுமிருந்து பெண்கள் தமது செலவில் கலந்து கொண்டு இந்த பெண்கள் சந்திப்பைச் சிறப்பிக்கும் போது இங்குள்ள பெண்களுக்காகக் குரல் கொடுக்கும் அமைப்பின் பெண்களுக்கத் தமது விடுமுறைக் களியாட்டங்கள்தான் முன் நிற்கின்றது என்றால் அவர்கள் அமைப்பையும் வேலைத்திட்டங்களையும் நாம் என் என்பது. இருந்தும் கலந்து கொண்டு கட்டுரை தந்த பெண்களில் விடுதலைப்போராட்டத்தின் சார்பாளர்களே அதிகமாக இருந்தார்கள் என்பதனை நிச்சயமாக தமிழ்நதி கவனிக்கத்தவறியிருக்கமாட்டார் என்றே நம்புகின்றேன்.

27வது பெண்கள் சந்திப்பு தனிமனித தாக்குதல், பெண்கள் மீதான தாக்குதல்கள் அற்ற அரசியல் வாதங்கள் என்பன ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது என்பதனைத் தெளிவாக எனது அறிமுக உரையில் வழங்கியிருந்தேன். அந்த வகையில் மீறல்கள் ஒருவரின் கட்டுரையிலும் நிகழவில்லை. நிர்மலா தேசியவாதமும் பெண்ணியமும் என்ற தலைப்பில் பெண்கள் மேலான விடுதலைப்புலிகளின் அராஜகம் பற்றிக் கட்டுரை படித்தார். இது பெண்கள் சார்ந்த கட்டுரையே தவிர விடுதலைப்புலிகளை விமர்சிக்கும் கட்டுரையல்ல. கட்டுரையின் ஆரம்பத்திலேயே அரசாங்கத்தின் பெண்கள் மீதான அராஜகம் எல்லோரும் அறிந்ததே, அதனால் அதனை கட்டுரையில் தவிர்த்து விடுகின்றேன் என்ற அவர் தெளிவாகத் தெரிவித்த பின்னரும், கலந்துரையாடின் போது தமிழ்நதி எழுந்து ஒருபக்க சார்பான தாக்கத்தை மட்டும் தாங்கியிருக்கின்றது நிர்மலாவின் வாதம் என்றது சிறுபிள்ளைத் தனமாகவே இருந்தது. தவிர தமிழ்நதி பல தளங்களில் வேலை செய்தவர். கனடா ஈழம், இந்தியாவென ஈழப்பெண்கள் புலம்பெயர் பெண்கள் பிரச்சனைகளை நன்கு அறிந்தவர். அவரிடம் நான் கட்டுரை கேட்டபோது கட்டுரை என்றால் போர் அடிக்கும் எனவே தான் இந்தியப் பெண்கவிஞர்கள் பற்றி ஒரு வீடியோ சமர்பிக்க உள்ளேன் என்றபோது எனக்கு உண்மையிலேயே விசனமாகவே இருந்தது. ஈழப் போராட்டம் பற்றிய ஆழமாக அறிந்தவர் போராட்டத்தால் பெண்களுக்கேற்பட்ட பாதி;ப்பு, கடைசி ஈழத்துப் பெண் அகதிகள் இந்தியாவில் எதிர்கொள்ளும் அவலங்கiளாயாவது கட்டுரையாக்கி அப்பிரச்சனைகளை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்திருக்கலாமே.

பெண்கள் பற்றிய கட்டுரை அது எந்த வடிவில் வந்தாலும் பெண்கள் சந்திப்பு ஏற்றுக்கொண்டிருக்கும் என்பதை நான் கட்டுரை வழங்கிய எல்லோருக்கும் அறிவித்தேன். குறமகள் பெண்களுக்கு வீரம் வேண்டும் துணிவு வேண்டும் விடுதலைப்புலிகளில் இருக்கும் பெண்களைப் போன்று என்பதாய் தான் கட்டுரை படிக்கலாமா என்று கேட்டு என் அனுமதியைப் பெற்றார்.

மேலும் கட்டுரையென்றால் “போர்” அடிக்கும் என்று பலமுறை தமிழ்நதி குறிப்பிடக் கேட்டேன். இப்படியொரு கருத்தை எங்கிருந்து அவர் பெற்றார். பணம் கொடுத்து கட்டுரை அமர்வுகளைத் தேடிச் செல்கின்றார்கள் ஆய்வாளர்கள் ஒரு தரமான ஆய்வுக் கட்டுரை தரும் நிறைவு வேறு எதில் பெறமுடியும். சின்னப்பெண்ணான நிவேதா கட்டுரை வாசிக்கும் போது மண்டபமே அசையாது உறைந்து போனதைத் தாங்கள் அவதானிக்கவில்லையா?

பெண்களின் அவலநிலைகளை ஆராயும் ஆரோக்கியமான கட்டுரைகள் எத்தனை இந்தப் பெண்கள் சந்திப்பில் வாசிக்கப்பட்டு கருத்துப் பரிமாற்றம் செய்யப்பட்டது. 27வது பெண்கள் சந்திப்பில் எத்தனை பெயர்களின் ஆய்வுகள் உடல் உழைப்புக்கள் அடங்கியிருக்கின்றன. எல்லாவற்றையும் தங்கள் ஒருவரின் அரசியல் பார்வையில் வைத்து ஒரு பதிவின் மூலம் கொச்சைப்படுத்தி விட்டீர்கள்.

பெண்கள் சந்திப்பின் இறுதியில் மிக ஆரோக்கியமான பிரேரணை எடுக்கப்பட்டது. அதை நான் இங்கு குறிப்பிட விரும்பவில்லை. இருந்தும் கனேடியச் சூழலில் தற்போது இடம்பெற்றுக்கொண்டிருக்கும் எத்தனையோ நிகழ்வுகளுக்கு சமூகமளிக்காத பலர் கலந்து கொண்டு 27வது பெண்கள் சந்திப்பை மிக வெற்றிகரமாக மாற்றியுள்ளார்கள். இது தமிழ் பெண்களுக்குக் கிடைத்த ஒரு வெற்றியென்றே நான் நம்புகின்றேன்.

4 comments:

வளர்மதி said...

அன்புடன் கறுப்பி,

கிட்டத்தட்ட உங்களுடைய் இந்தப் பதிவை சில விமர்சனங்களூடே மிக ஆதரித்த பின் ... விருப்பமற்ற சில இழிந்த வாழ்வு ... கதைகளைத் தவிர்த்து எனை சந்திக்க முடியுமா என்று முயற்சி செய்து பாருங்களேன் .. விருப்பமிருப்பின் ... எனக்கொரு கவலையுமில்லை ....

வளர் ...

தமிழ்நதி said...

சுமதி!நான் இதில் வந்து கருத்துச் சொன்னால் குடுமிப்பிடிச் சண்டைப் போலிருக்கும், அதனால் பேசாமலிருக்கலாம் என்றுதான் முதலில் நினைத்தேன். ஆனால்,அதுவும் தவறான புரிதலுக்கு இட்டுச் செல்லும் என்பதனால் எழுதுகிறேன்.
"நிர்மலா விடுதலைப்புலிகளின் அராஜகம் பற்றிக் கட்டுரை படித்தார். இது பெண்கள் சார்ந்த கட்டுரையே தவிர விடுதலைப்புலிகளை விமர்சிக்கும் கட்டுரையல்ல."

விடுதலைப் புலிகளின் அராஜகம் பற்றிப் பேசுவது விடுதலைப் புலிகளை விமர்சிப்பதாகாதா? எனக்கு நீ்ங்கள் சொல்வது புரியவில்லை சுமதி. விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இருக்கும் பெண்கள் பலவிதமான இன்னல்கள், இடர்ப்பாடுகள் மத்தியில் வேறு வழியின்றி அதற்குள் இருப்பதாகத்தானே பொருள்படுகிறது. மனமொப்பி இனவுணர்வோடு இருப்பவர்களை உங்கள் வாதம் கொச்சைப்படுத்துவதாகவே எனக்குத் தோன்றுகிறது.

"கட்டுரையின் ஆரம்பத்திலேயே அரசாங்கத்தின் பெண்கள் மீதான அராஜகம் எல்லோரும் அறிந்ததே, அதனால் அதனை கட்டுரையில் தவிர்த்து விடுகின்றேன் என்ற அவர் தெளிவாகத் தெரிவித்த பின்னரும், கலந்துரையாடின் போது தமிழ்நதி எழுந்து ஒருபக்க சார்பான தாக்கத்தை மட்டும் தாங்கியிருக்கின்றது நிர்மலாவின் வாதம் என்றது சிறுபிள்ளைத் தனமாகவே இருந்தது."

அப்படித் தவிர்த்துவிட்டுப் பேசியதைத்தான் தவறு என்கிறேன். எத்தனையோ பாலியல் வன்கொடுமைகளை, இழிவுகளை,கொலைகளைச் செய்த சிறிலங்காப் படைகளின் அராஜகத்தை அவ்வளவு சாதாரணமாகக் கடந்துசெல்வதென்பதை தந்திரமான மறதி அல்லது மறைத்தலாகவே கொள்ளவேண்டியிருக்கிறது. ஒற்றை வாக்கியத்தில் அதை மூடி மறைத்துவிட்டு தனது நோக்கமாகிய, விடுதலைப் புலிகளைத் தரம்தாழ்த்துவதைச் செய்திருக்கிறார். முன்னுக்கு ஒரு வசனத்தைச் சொல்லிவிட்டு எதை வேண்டுமானாலும் பேசலாமா? பேசும் உள்ளடக்கத்தின் உண்மைத்தன்மையை பொருட்படுத்த வேண்டியதில்லையா?

நான் எனது கட்டுரையின் ஆரம்பத்திலேயே சொல்லியிருக்கிறேன். கூட்டம் முழுவதையும் 'இதை இவர் இப்படி வழங்கினார்'என்பது மாதிரியான விமர்சனம் இதுவல்ல. அது அரசுசாரா நிறுவனங்கள் அளிக்கும் புள்ளிவிபரங்கள் போல இருக்கும். அதனால் என்னை உறுத்திய விடயங்களையே உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன் என்று.

"உலகெங்கிலுமிருந்து பெண்கள் தமது செலவில் கலந்து கொண்டு இந்த பெண்கள் சந்திப்பைச் சிறப்பிக்கும் போது இங்குள்ள பெண்களுக்காகக் குரல் கொடுக்கும் அமைப்பின் பெண்களுக்கத் தமது விடுமுறைக் களியாட்டங்கள்தான் முன் நிற்கின்றது என்றால் அவர்கள் அமைப்பையும் வேலைத்திட்டங்களையும் நாம் என் என்பது."

அதை இப்படியும் எடுத்துக்கொள்ளலாமே சுமதி... அவர்கள் உங்களால் நடத்தப்படும் கூட்டத்தில் கலந்துகொள்ள விரும்பவில்லை. ஏற்கெனவே நடந்த பெண்கள் சந்திப்புகளைப் பற்றி அவர்கள் அறிந்திருக்கலாம். இதில் கலந்துகொண்டால் வீண் விசனங்களுக்காட்பட வேண்டியேற்படும் என்ற முன்னறிவு இருந்தமையால் அவர்கள் கலந்துகொள்ளவில்லை என்றும் எடுத்துக் கொள்ளலாம். இப்போது நான் அறிவது அவ்வாறாகத்தானிருக்கிறது. அவர்களில் யாராவது வந்து இதில் கருத்துக் கூறுவார்கள் என்று நம்புகிறேன்.

மேலும்,கட்டுரை என்பது சரியான முறையில் சபையில் சமர்ப்பிக்கப்படாவிட்டால் சலிப்பேற்படுத்தும் என்றே நான் இப்போதும் சொல்கிறேன். அதை நான் அன்று உங்கள் பெண்கள் சந்திப்பிலும் உணர்ந்தேன். பெயர்களைக் குறிப்பிட்டு அவர்களின் மனங்களைப் புண்படுத்த விரும்பவில்லை. இன்ன காலம் இது நடந்தது என்பதெல்லாம் கட்டுரையல்ல; ஆண்டறிக்கை. அதன் காரணங்களை ஆராய்ந்து வழங்குவதே சிறப்பு. அதை சுவாரசியமாக வழங்கக்கூடிய திறன் எனக்கில்லை என்று நான் நினைப்பதும் கட்டுரையை நான் தவிர்த்ததற்குக் காரணம். நிவேதா கட்டுரை வாசித்தபோது நான் வந்திருக்கவில்லை. அவருக்கு அந்த ஆளுமை இருப்பதை மறுப்பதற்கில்லை.

பெண்கள் சந்திப்பின் இறுதியில் ஆரோக்கியமான பிரேரணை எடுக்கப்பட்டதாகச் சொல்லியிருக்கிறீர்கள். சந்திப்பின் இறுதிவரை நான் அங்கிருந்தேன். எனது தோழிகளிற் சிலரும் அங்கிருந்தார்கள். ஆக,நாங்கள் அறியக்கூடாத பிரேரணையை நீ்ங்கள் உங்களவர்கள் எனக் கருதும் சிலருடன் இணைந்து எடுத்திருக்கிறீர்கள் என அதைக் கொள்ளலாமா?

கறுப்பி said...
This comment has been removed by the author.
கறுப்பி said...

தமிழ்நதி

பெண்கள் மீது யார் வன்முறை பிரயோகித்தாலும் அது விமர்சிக்கப்பட வேண்டும் என்பது பெண்கள் சந்திப்பின் நோக்கமாக இருக்கும் போது விடுதலைப்புலிகள் அதைச் செய்கிறார்கள் என்று ஒருவரால் விமர்சனம் வைக்கப்பட்டால் அதைத் தடுக்க முடியாதுதானே. அதற்காக கட்டுரை படிப்பவர்களின் அனைத்துக் கருத்துக்களையும் எல்லோரும் ஏற்கவேண்டும் என்ற அவசியமும் இல்லை. அது அவர்கள் கருத்து ஏற்பதும் விடுவதும் பார்வையாளர்களின் அறிவைப் பொறுத்தது. பெண்கள் சந்திப்பின் நோக்கம் பெண் வாழ்வு சூழ்ந்தே.
தமிழ் மின்தளங்கள் எல்லாம் சிங்கள அரசாங்கம் தமிழ் பெண்கள் மீது ஏற்படுத்தும் வன்முறையை நிறையவே தாங்கி நிற்கின்றன. அரசாங்கம் தமிழ் பெண்கள் மீது வன்முறை செய்கின்றன என்று பெண்கள் சந்திப்பில் வந்து எவரும் கட்டுரை படித்திருந்தால் அது ஆய்வாக அமைந்திருக்காது. எல்லோருக்கும் தெரிந்த விடையத்தை, செய்தியை மீண்டும் கூறி விட்டுப் போவதாகவே அமைந்திருக்கும்.

எனக்கு ஒன்று மட்டும் விளங்காமல் உள்ளது. தலிபான் பெண்கள் மீதான வன்முறையை நாம் விமர்சிக்கின்றோம், அனைத்து உலகிலும் எந்த அராஜக அமைப்போ அரசோ பெண்கள் மீது வன்முறை செய்தால் அதை நாம் விமர்சிக்கின்றோம். ஆனால் விடுதலைப் புலிகள் செய்தார்கள் என்று யாராவது விமர்சனம் வைத்தால் அதை உள்வாங்கி ஆராய்ந்து பார்க்கும் பக்குவம் அற்று உடனேயே கோவித்துக் கொள்கின்றார்கள் தமிழ் மக்கள். தமிழ் மக்களுக்கான தீர்வு விடுதலைப்புலிகளால்தான் என்று ஏற்றுக்கொள்ளும் பட்சத்தில் தமக்கான தலைமை நேர்மையானதாக இருக்க வேண்டும் என்று தமிழ் மக்கள் ஏன் சிந்திப்பதில்லை.

//சுமதி... அவர்கள் உங்களால் நடத்தப்படும் கூட்டத்தில் கலந்துகொள்ள விரும்பவில்லை. ஏற்கெனவே நடந்த பெண்கள் சந்திப்புகளைப் பற்றி அவர்கள் அறிந்திருக்கலாம். இதில் கலந்துகொண்டால் வீண் விசனங்களுக்காட்பட வேண்டியேற்படும் என்ற முன்னறிவு இருந்தமையால் அவர்கள் கலந்துகொள்ளவில்லை என்றும் எடுத்துக் கொள்ளலாம்\\

இதை நான் ஏற்றுக்கொள்ளுகின்றேன். அது காரணமாகவும் இருக்கலாம். கடந்த ஆண்டு சாந்தி சத்திதானந்தம் பெண்கள் சந்திப்பில் கலந்து கொண்டு கட்டுரை படித்தார். பெண்கள் சந்திப்பு அரசியல் சார்பற்று உலகளாவிய அளவில் பெண்களின் இன்னல்களை ஆராய்ந்து வெளிச்சத்திற்கு கொண்டு வருவதாகவே அமைந்திருக்கும். பெண்கள் மீது வன்முறையை பிரயோகிக்கும் அனைத்து அராஜக அரசுகளும், இயக்கங்களும் தனிமனிதரும் விமர்சிக்கப்படுவார்கள். தாம் சார்ந்திருக்கும் ஒரு அரசோ இயக்கமோ விமர்சிக்கப்படாலம் என்று நினைக்கும் பட்சத்தில் அதில் கலந்து கொள்ளாமல் தவிர்ப்பது சாலச்சிறந்ததே. என்னைப் பொறுத்தவரை கலந்து கொள்ளாமல் தவிர்ப்பது கூட அவர்கள் மௌனமாகத் தாம் சார்ந்த அமைப்பின் வன்முறையை ஏற்றுக்கொள்வதாகவே எனக்குப் படுகின்றது.

தாங்கள் பெண்கள் சந்திப்பின் இறுதிவரை இருக்கவில்லை என்றே நம்புகின்றேன். பிரேரணையை ஜானகி பாலகிருஷ்ணன் படித்து, அதை ஏற்றுக்கொள்கின்றார்களா என்று கருத்துக் கணிப்பும் எடுக்கப்பட்டது. அப்போது தாங்கள் இருந்ததாக எனக்கு ஞாபகம் இல்லை. முற்றுமுழுதாக அனைவரையும் உள்வாங்கியே இந்த பிரேரணை படிக்கப்பட்டது.