Monday, September 14, 2009

உறையும் பனிப்பெண்

வீட்டின் முன் மரக்கதவைத் திறந்தவுடன் ஒரு சின்ன ஹோல். அதன் இடப்பக்கத்தில் சாப்பாத்துகளை அடுக்கி வைப்பதற்கான வேலைப்பாடுகளுடன் சேர்ந்த மரத்தாலான சிறிய அலுமாரி. வலப்பக்கம் விருந்தினர்கள் ஜக்கெட்டைக் கழற்றி வைப்பதற்காக நான்கு கண்ணாடிகளைக் கொண்ட க்ளோசட். இவற்றைக் கடந்து மரத்தாலான வளைந்து செல்லும் படிக்கட்டுக்கள் படுக்கை அறைக்கு எடுத்துச் செல்லும். சின்ன ஹோலை அடுத்து, ஒரு சிறிய அறை. அதை பார்த்த உடனேயே அம்மா சொல்லி விட்டாள் இது சாமி அறை என்று. அடுத்து நீள் சதுரத்தில் பெரிய சாப்பாட்டு அறை, அதை அடுத்த நவீன வசதிகளுடன் கூடிய குசினி, குசினிக்கு எதிர்ப்பக்கம் சின்னதாக ஒரு சாப்பாட்டு அறை, அதை அடுத்து சிட்டிங் ஹோல் செங்கல்லால் ஆன குளிர்போக்கி அழகு படுத்தப்பட்டிருந்தது. அதனைக் கடந்து முன்பக்கத்தைப் பார்த்த படி ஒரு பெரிய சிட்டிங் ஹோல். மேல் தளத்தில் நான்கு அறைகள் விலாசமான யன்னல்களுடன் அடுக்கடுக்காய், அதற்கு எதிர்ப்பக்கத்தில் நீண்ட மாஸ்டர் பெட்ரூம். இதுதான் உமக்கும் எனக்கும் என்று ராஜன் தனது கையால் கலாவின் இடுப்பைக் கட்டிப்பிடித்துச் சொன்னான். கலா முழங்கையால் அவனை இடித்துத் தன்னை விடுவித்துக் கொண்டாள். இவற்றோடு நிலக்கீழ் அறை தடுப்புகள் இல்லாமல் விலாசமாக விரிந்து கிடந்தது. இந்தளவு பெரிய வீடு எமக்குத் தேவைதானா என்ற கேள்வி கலாவிற்கு எழுந்தாலும் ஆறு அங்கத்தவரைக் கொண்ட குடும்பம் வசதியாக வாழ இப்படியான வீடு தேவைதான் என்றும் பட்டது.
---------------
முந்தைய வீடு சின்னதாக இருக்கிறதென்று ஐந்து பெரிய அறைகளையும், பெரிய பின் தோட்டத்தையும் கொண்ட வீடு ஒன்றை மார்க்கத்தில் வாங்கிப் போயாகி விட்டது. மார்க்கத்தில் வாங்கும் போது தமிழர்கள் அதிகமில்லாத சுற்றத்;தில் வீடு வாங்கி விட்டதான பெருமை ராஜனுக்கு நிறையவே இருந்தது, காலப்போக்கில் மார்க்கம் தமிழர்களின் முக்கிய குடியேற்றமானதில் அவனுக்கு வருத்தம் அதிகம். அயலவர்கள் தமிழர்களாக இல்லாத சுற்றத்தில் வாழ்வது தனி மதிப்பைக் கொடுப்பதாக நினைக்கும் தமிழர்களி;ல் அவனும் ஒருவன். சுஜா பகிடியாக ஒருநாள் கேட்டாள் “ராஜன் என்ன ஊரிலையும் சைனீசுக்குப் பக்கத்திலையோ இருந்தனீங்கள்” என்று.
சுஜாவின் நக்கல் அவனுக்கு ஒருபோதும் விளங்குவதில்லை. முக்கியமாக சுஜாவை அவனுக்குப் பிடிப்பதில்லை. கலாவின் அக்கா மகள். கலாவால் வளர்க்கப்பட்டவள். தனது சொந்த வீடு போல் அடிக்கடி வந்து போவாள். அதைத் தடுப்பதற்கான அதிகாரம் ராஜனிடம் இல்லை.
புது வீடு. பார்த்துப் பார்த்து அலங்காரம் செய்தார்கள் ராஜனும், கலாவும். தாம் அலங்காரம் செய்தாலும் முழுநாளும் அந்த வீட்டில் வாழ்ந்து அனுபவிப்பது தனது பெற்றோரும், தனது சகோதரி வனஜாவுந்தான் என்று வீட்டுக்கு வரும் சொந்தங்களுக்குப் பெருமையாகத் தனது பெருந்தன்மையை அவன் அடிக்கடி சொல்லிக்காட்டுவான். மகன் வாங்கி விட்டிருந்த பெரிய வீட்டில் வெளியில் நடக்கப் போக முடியாத கடும் குளிர் காலங்களில் தாம் நன்றாகவே நடந்து திரிவதாக அப்பாவும் அம்மாவும் பெருமைப்படுவார்கள்.
“அப்பா ஒண்டுக்குப் போனால் சிந்திப் போட்டு வாறார், மணக்குது ஒருநாளைக்கு ரெண்டு தரமாவது வோஷ் ரூமைத் துடைச்சு விடுங்கோ” ராஜன் அம்மாவிடம் கேட்டுக் கொண்டான். வனஜா துடைப்பாள். விடிய ராஜனின் மகன் சந்தோஷை பள்ளிக் கூடத்திற்கு கொண்டு போய் விட்டு வருவாள். குளிர் இல்லாவிட்டால் பின்னேரம் அப்பா அவனைக் கூட்டிக்கொண்டு வருவார். குளிர் காலங்களில் வனஜா போய் வருவாள். ஒவ்வொருநாளும் ஐந்து அறைகளுக்கும் வைக்கூம் பிடிப்பது, அம்மாவுக்குச் சமையலுக்கு உதவி செய்வது, பின்னேரங்களில் அப்பா, அம்மாவோட சேர்ந்து தமிழ் சீரியல் பார்ப்பது என்று அவள் பொழுது போய் விடும். வனஜாவோடு எல்லோருமே மிகவும் அன்பாக இருந்தார்கள். “வேணுமெண்டா உங்கட வோஷ் ரூமைக் கழுவுங்கோ, எங்கட அறைக்குள்ள இருக்கிறதை நான் வேலையால வந்து கழுவுறன். ஒவ்வொருநாளும் வைகூம் பிடிக்கத் தேவையில்லை கிழமைக்கு ஒருக்காப் பிடிச்சாப் போதும்” கலா எத்தினையோ தரம் சொல்லிப் பார்த்துவிட்டாள் வனஜா கேட்பதாயில்லை. அவர்கள் வீடு வனஜாவின் கவனிப்பில் மிகவும் சுத்தமாக இருந்தது.

--------------------
ஊரில் இருக்கும் போது விடுபட்டுப் போன அனைத்துச் சந்தோஷங்களையும் ஓடிப்பிடித்து அனுபவித்துக் கொண்டிருந்தார்கள் ராஜன் குடும்பத்;தினர். கோயில், கலியாணம், சாமத்தியச் சடங்கு, பிறந்தநாள் கொண்டாட்டம், தழிழ் திரைப்படம், ஊர்ச் சந்திப்பு அனைத்தையும் ஒன்று விடாமல் ஓடியோடி அனுபவித்தார்கள். வனஜா இழுபட்டாள். அனைத்திற்கும் குடும்பத்துடன் இழுபட்டாள். “ஏய் வனஜா, எவ்வளவு நாளாச்சுக் கண்டு, எங்க உம்மட அவர் வரேலையே?, எத்தினை பிள்ளைகள்? போகும் இடங்களில் கேள்விகள். வனஜா ஒற்றைச் சிரிப்போடு அவர்கள் பிள்ளைகளை இழுத்துக் கொஞ்சுவாள், சுகம் கேட்பாள். ராஜனும் அவன் பெற்றோரும் ஒன்றையும் புரிந்துகொண்டதாகக் காட்டிக்கொள்ளாமல் வாழப்பழகியிருந்தார்கள். கலாவைத் தவிர வனஜாவின் சங்கடத்தை யாரும் கண்டு கொண்டார்களா என்பது சந்தேகந்தான்.
கலா ராஜனைக் காதலித்துக் கலியாணம் செய்து கொண்டாளே தவிர, அவன் குடும்பம் கனடா வந்த பின்பு அவர்களின் வாழ்க்கை முறை கலாவிற்குப் புரியாத புதிராக இருந்தது. ராஜன் கூட மாறிவிட்டான். வனஜா பற்றிய அவர்களது அலட்சியம் கலாவை மிகவும் சித்திரவதை செய்தது. வனஜா அவளோடு அன்பாக இருந்தாலும், தான் ராஜனைக் காதலித்துத் திருமணம் செய்து கொண்டது வனஜாவிற்கு ஒரு திருமணத்தை ஏற்படுத்திக்கொடுப்பதற்கு நிச்சயமாகத் தடையாக இருந்திருக்கும். வனஜா மனதுக்குள் தன்னை வெறுக்கக் கூடும் என்ற பயம் அவளை வனஜாவிடம் அதிகம் அன்பாக இருக்க வைத்தது.
--------------------------------------
ஒரு முழுமையான சேர்க்கைக்குப் பின்பு களைத்துப் போய் குறட்டை விடும் ராஜனை முழுங்கையால் இடித்து எழுப்பி ஒருநாள் கலா கேட்டாள்“வெட்கமாய் இல்லை உங்களுக்கு, ஒரு கிழமையில ரெண்டு மூண்டு தரம் தேவைப்படுது உங்களுக்கு, ஆனால் வனஜாக்கா பற்றி”“ப்ச் திரும்பித் தொடங்காதேம் எனக்குக் களைப்பாய் இருக்கு நாளைக்கு வேலையெல்லே”“வனஜான்ர வாழ்க்கைக்கு நீங்கள் ஒரு முடிவு காணமட்டும் நான் இனித் தனியத்தான் படுக்கப் போறன்” கலா போர்க் கொடி தூக்கினாள்.
கலங்கிப் போன ராஜன், வனஜாவைப் பட்டுச் சீலை உடுத்தி விதவிதமாகப் படம் எடுத்து, கல்யாண புரோக்கரிடம் கொடுத்தான். விவாகரத்துச் செய்தவர்கள், மனைவியை இழந்தவர்கள், ஏதோ ஒரு காரணத்திற்காகக் கலியாணமே செய்யாமல் இருந்தவர்கள். காலம் ஓடியதுதான் மிச்சம். அதன் பின்னர் அவளுக்கு வாய்த்தது அவ்வளவுதான் என்று ஒரேயடியாகக் கைவிட்டு விட்டார்கள்.
-----------------------------

கலா கர்ப்பமாக இருந்த போது ஒருநாள் சாப்பாட்டு மேசையில் அவளுக்குப் பார்த்துப் பார்த்து சாப்பாடு போட்டாள் அம்மா. சுஜாவும் அன்று அங்கிருந்தாள். வனஜா உடம்பு சரியில்லை என்று சாப்பிடாமல் படுத்துவிட்டாள். ஒரு மருமகளை இப்பிடி அன்பாகப் பார்க்கும் மாமியை வேறு எங்கும் தான் பார்த்ததில்லை என்று அப்பா சொன்னார். “மருமகளைப் பார்க்கிற ஆர்வத்தில மகளைக் கை விட்டிட்டீங்கள்” என்று சாப்பிட்டவாறே சுஜா சொன்னாள். சுஜா அடக்கம் தெரியாதவள். பெரியவர்களிடம் எதைக் கதைக்க வேணும் என்ற பக்குவம் இல்லாதவள். இந்தக் காலத்துப் பிள்ளை. இவ்வளவு நாளும் அவள் சொன்னதற்கெல்லாம் அவர்கள் அர்த்தம் கண்டது இப்படித்தான். ஆனால் அவள் இன்று சொன்னது எல்லோரையும் ஒரேயடியாகத் தாக்கியதால் ஒரு பயங்கர மௌனம் அங்கே குடிகொண்டது. அப்பா அவள் அபிப்பிராயத்தால் தாக்கப்பட்டது போல் அவளைப் பார்த்தார். அம்மா அவசரமாக ராஜனுக்கு சோறு போட்டாள். கலா மௌனமாக ராஜனையும், அப்பாவையும் பார்த்தாள். அவள் பார்வை பதிலுக்காகக் காத்திருந்தது. ராஜனுடன் இது பற்றிக் கதைத்துச் சண்டை பிடித்துக் களைத்து விட்டாள். மாமா, மாமியிடம் இது பற்றிக்கதைக்கும் தைரியம் அவளுக்கு இருக்கவில்லை. அனேகமாக வனஜா அந்த வீட்டில் உலாவிக் கொண்டிருப்பது கலாவை அதைப் பற்றிய கதையைத் தொடக்குவதற்குத் தடுத்திருக்கலாம்.
அப்பா தொண்டையைச் செருமிக் கொண்டு கண்களை ஒடுக்கிக் குரூரமாக சுஜாவைப் பார்த்த படியே “அவளுக்கு ஒண்டும் பொருந்தி வரேல, அதுக்கு நாங்கள் என்ன செய்யிறது” என்றார். உவளுக்கெல்லாம் நீங்கள் பதில் சொல்லத் தேவையில்லை என்பது போல் ராஜன் கொடூரமாக சுஜாவைப் பார்த்தான். “நாங்கள் ஏறாத கோயிலில்லை” என்றாள் அம்மா. “அவளுக்குக் கொடுத்து வைச்சது அவ்வளவுதான், அந்த நேரம் எங்களிட்ட வசதியுமிருக்கேலை, ஒண்டும் சரியா வரேலை” என்றாள் மூக்கைச் சீறிய படியே.மௌனமாக இருந்த கலா “அது சரி மாமா இப்பதான் நல்ல வசதியா இருக்கிறமே” தொண்டையில் முள்ளுச் சிக்கிக் கொண்டது போல் அவள் வார்;த்தைகள் விக்கி விக்கி வந்தது. அப்பா ஏதோ பெரிய பகிடியைக் கேட்டு விட்டது போல் “இந்த வயசிலையோ” என்று விட்டுச் சிரித்தார். சுஜா கதிரையைத் தள்ளிக் கொண்டு எழுந்து போய் விட்டாள்.
----------
ஒருநாள் மாமி தனியே வீட்டில் இருக்கும் போது, கலா மீண்டும் வனஜா பற்றிய கதையைத் தொடங்கினாள். “ஏன் மாமி வனஜாவை இப்பிடியே வைச்சிருக்கப் போறீங்களே?”மாமியின் முகம் சினத்தால் சுருங்கியது. சந்தோஷமாக வாழ்க்கையை அனுபவித்துக் கொண்டிருக்கும் எங்களை இடையிடையே குற்ற உணர்வைத் தூண்டிவிட்டு வேடிக்கை பார்க்கின்றாள் என்று கலா மேல் கோவம் வந்தது. “ஏன் தனக்குக் கலியாணம் வேணும் எண்டு வனஜா உன்னை எங்களோட கதைக்கச் சொன்னவளே” வெடுக்கென்று கேட்டாள் மாமி.கலா திகைத்துப் போக, “எனக்கு முப்பத்தெட்டு வயசில சுகமில்லாமல் நிண்டிட்டுது, அவளுக்கு இப்ப நாப்பத்தைஞ்சு வயசாகுது, ஒழுங்கா வருகுதோ தெரியாது, இனிக் கலியாணம் கட்டி என்ன பிரியோசனம்? பிள்ளையும் தங்காது உடம்பும் வத்திப் போயிருக்கும் உணர்ச்சியும் இருக்காது” என்று விட்டு எழு முயன்ற மாமியைத் தடுத்து நின்ற கலா, “மாமி படுக்கிறதுக்கும், பிள்ளைப் பெறுறதுக்கும் மட்டுமே கலியாணம், அதுக்கு மேல எத்தினையோ இருக்கு, அதுக்கு வனஜாக்கு ஒரு நல்ல துணை தேவை” என்றாள். “அதுக்கு மேல என்ன இருக்கு? துணை வேணுமெண்டால் அதுக்குத்தான் நாங்கள் இருக்கிறமே, இதை விட நல்ல துணை எங்கையிருந்து வரப்போகுது” சொன்னபடியே கலாவைத் தள்ளாத குறையாக எழுந்து சென்றுவிட்டாள்.உடம்பை அலட்சியமாக அசைத்து அசைத்துச் செல்லும் மாமியின் பின்புறத்தைப் பார்த்த படியே நின்ற கலா, அறுபது வயது கடந்த பிறகும் படுக்கையறைக்குள் அவள் அடிக்கும் கூத்தை அருவருப்போடு நினைத்துப் பார்த்தாள்.
---------------------
ராஜனின் மாமா மகள் கவிதாவிற்குக் கலியாணம். சின்ன வயது. படிப்பு முடியு முன்பே நல்ல இடத்திலிருந்து கேட்டு வந்திருந்தார்கள். மாமா வசதியற்றவர். தொடர்மாடிக் கட்டிடத்தில் வசிப்பவர். எனவே ராஜனின் வீடு பொம்பிளை வீடாக மாறியது. சொந்தங்கள் அடிக்கடி வீட்டிற்கு வருவதால் வீடு கலியாணக் களை கட்டியது. கவிதாவின் அதிஸ்டம் முக்கிய தலைப்பாகப் பல முறை அலசப்பட்டது. கலியாணமான பெண்கள் தங்கள் காதல் கதைகள், தாங்கள் பொம்பிளைப் பார்க்கப்பட்ட நாள், எதிர்பார்ப்புக்கள், நிராகரிப்புக்கள் அங்கீகரிப்புக்கள் பிரவச வேதனை, உடல் மாற்றங்கள், மார்பகங்களில் பால் கட்டிக்கொண்டது, பால் வற்றிப் போனது என்று அங்கு தொட்டு இங்கு தொட்டுக் கதைத்துக் கொண்டிருந்தார்கள். திடீரென்று கவிதாவின் அம்மா “வனஜா கெட்டிக்காறி இதுகளுக்க ஒண்டும் மாட்டுப்படாமல தப்பீட்டாள்” என்றாள். இன்னுமொருத்தி “உண்மைதான் அக்கா இந்த ஆம்பிளைகளோட இழுபடுகிறதெண்டாச் சும்மாவே எனக்கு காணும் எண்டு கிடக்குது” என்றாள் வெக்கத்தோடு.
“என்ன, மனுசன் இரவிரவாக் கரைச்சல் படுத்துதே” என்று விட்டுச் சிரித்தாள் இன்னுமொருத்தி
அதுவரை பொறுமையோடு இருந்த கலா “அக்கா இஞ்ச ஒருக்கா வாங்கோ” என்று வனஜாவை அந்த இடத்திலிருந்து அடுத்த அறைக்குக் கூட்டிக்கொண்டு போனாள். “எனக்குக் கொஞ்சச் சாமான்கள் வாங்க இருக்குது வாறீங்களே ஒருக்கா தமிழ் கடைக்குப் போயிட்டு வருவம்?”
வனஜாவிற்கு சிரிப்பாக வந்தது பெண்ணே எத்தனை வருடங்கள் எத்தனை கேள்விகள் அவமானங்கள்ஏமாற்றங்கள்எள்ளல்கள்உன்னால் எவ்வளவு காலம்தான் என்னைக் காக்க முடியும்?
வனஜா கலாவைப் பார்த்துப் புன்னகைத்தாள். கலா தாக்குண்டவளாய் மறுபக்கம் முகத்தைத் திருப்பிக் கொண்டாள்.
ஆண்கள் ஒரு கூட்டமாய் வேறு ஒரு மூலையில் தமக்குத் தெரிந்த ஒரே தலைப்பான இலங்கை அரசியல் பற்றி கதை அளந்து கொண்டிருந்தார்கள். வனஜா வழமை போல் ஒருவரின் உரையாடலிலும் கலந்து கொள்ளாமல் அவர்களுக்குத் தேனிர் கொடுப்பது, சாப்பிட ஏதாவது கொடுப்பது என்று சுழன்று கொண்டிருந்தாள். இலங்கை அரசியல் பற்றி ஆண்களோடு சேர்ந்து கொண்டு அவளால் கதைக்கத்தான் முடியுமா? இல்லா விட்டால் பெண்களோடு சேர்ந்து கொண்டு பெண் பார்க்கப்பட்ட நாள் பற்றியோ, பிள்ளைப்பேறு, போடப்பட்ட தையல் பற்றியோ அவளால் அலச முடியுமா? உரு அற்ற நிழல்போல் அவள் அலைந்து கொண்டிருந்தாள்.
-----------------------------
ஒருநாள் உடம்பு சரியில்லாமல் போனதால் கலா வேலைக்குப் போகவில்லை. உடம்பு சரியில்லையோ இல்லா விட்டால் மனம்தான் சரியில்லையோ என்ற சந்தேகம் வனஜாவிற்கு. ராஜன் வேலைக்குப் போகும் வரை அனுங்கிய படியே கட்டிலில் கிடந்தவள், ராஜன் வேலைக்குப் போனதும் சந்தோஷைப் பள்ளிக் கூடம் கொண்டு போய் விட்டுவிட்டு, அப்பாவையும், அம்மாவையும் மாமா வீட்டில் கொண்டு போய் விட்டு விட்டு வந்தாள். வனஜா குசினிக்குள் போனபோது கலா அவளைப் பின்தொடர்ந்தாள். சமையல் தொடங்க இருந்த வனஜாவின் கையைப் பிடித்துக் கூட்டிக் கொண்டு வந்து சோபாவில் இருக்கச் செய்து தானும் பக்கத்தில் இருந்தாள். வனஜா கேள்விக் குறியோடு அவளைப் பார்த்தாள். கலாவின் கண்கள் கலங்கியிருந்தது. தொண்டை அடைக்க அசட்டுச் சிரிப்பு சிரித்தவள் செருமிய படியே வனஜாவின் முகத்தைப் பார்த்தாள் “அக்கா உங்களோட கொஞ்சம் மனம் விட்டுக் கதைக் வேணும். அதுதான் நான் இண்டைக்கு வேலைக்கு லீவு போட்டனான்”
“என்ன கலா ஏதும் பிரச்சனையே”
“வனஜா என்ன இது எவ்வளவு காலத்துக்கு இப்பிடியே”
வனஜா குழம்பிப் போனாள். நெருப்புச் சுட்டு விட்டது போல் திடுக்கிட்டது அவள் உடம்பு. சில விஷயங்கள் பற்றிக் கதைக்கக் கூடாது. ஏன் அது நடந்தது என்று ஒருவருக்குமே தெரியாது. அவள் கொடுத்து வைத்தது அவ்வளவுதான் என்று எல்லோரும் முடிவெடுத்துவிட்டார்கள். இனிக் கதைப்பதற்கு என்ன இருக்கிறது.வனஜா மௌனமானாள். “அக்கா உங்களப் பற்றி இஞ்ச ஒருத்தருக்கும் அக்கறையில்லை. எல்லாரும் சுயநலமா இயங்கிக் கொண்டிருக்கீனம், நீங்களும் ஒண்டிலையும் அக்கறையில்லாதமாதிரி இயங்கிக் கொண்டிருக்கிறீங்கள், நான் ராஜனோடை சண்டை பிடிச்சுப் பாத்திட்டன். வயசு போட்டுதெண்டு சாட்டுச் சொல்லுறார். அக்கா நாற்பத்தைந்து வயதில கலியாணம் கட்டுறது ஒண்டும் பிழையில்லை. நீங்களா யாரையாவது தேடிக்கொண்டால் தவிர இவேல் ஒண்டும் செய்யப் போறேலை, நீங்கள் ஏன் வீட்டுக்குள்ளேயே அடஞ்சு கிடக்கிறீங்கள், வேலைக்குப் போங்கோ, இல்லாட்டி ஏதாவது படிக்கப் போங்கோ அப்பதான் நீங்கள் ஆரையாவது சந்திக்கலாம். இப்பிடியே இருந்தீங்களெண்டா இந்த வீட்டில இருந்து சமைச்சு, அப்பான்ர மூத்திரம் துடைக்கிறதோட உங்கட வாழ்க்கை முடிஞ்சிடும்
வனஜா மௌனமாக இருந்தாள். கலா எவ்வளவு முயன்றும் அவளிடமிருந்து ஒரு பதிலும் வரவில்லை. காதலிப்பது தறவென்ற மனநிலையில் ஊறி வளர்ந்தவள் அவள். இளம் வயதில் அவளை ஒருவரும் பெண் கேட்டு வரவில்லை. சீதணமாய் அள்ளிக் கொடுத்துக் கட்டி வைக்கும் அளவிற்கு அவர்களிடம் பணம் இருக்கவில்லை. இருந்ததையெல்லாம் கொடுத்து ராஜனை கனடா அனுப்பி வைத்தார்கள் அவன் எதையாவது செய்வான் என்ற நம்பிக்கையில். வந்த கடன் கொடுத்து முடித்த போது ராஜனுக்கு முப்பது வயதாகி விட்டிருந்தது. கலாவோடு காதல் வேறு. வீட்டிற்குக் சொல்லாமல் கொள்ளாமல் கலியாணம் செய்து கொண்டான். குற்ற உணர்வு. வசதி வந்ததும் குடும்பத்தை கனடாவிற்குக் கொண்டு வந்து விட்டான். வனஜா கனடா வந்து இறங்கிய போது அவளுக்கு நாற்பது வயது. இனி அவளுக்கெதுக்குக் கலியாணம் என்று தாமே முடிவெடுத்து வாழ்ந்து வருகின்றார்கள். “வேண்டாம் கலா நான் இப்ப சந்தோஷமாத்தான் இருக்கிறன், நீங்கள் கவலைப் படாதேங்கோ” சொல்லி விட்டு குசினிக்குள் எழுந்து போய் விட்டாள்.
கலா அவளைத் தொடர்ந்து போனாள். “ஏன் நீங்கள் இப்பிடித்தனியா இருக்க வேணும், நான் யாரைவாவது பாக்கிறன் நீங்கள் ஓம் எண்டு மட்டும் சொல்லுங்கோ”
“ நான் எங்கை தனியா இருக்கிறன்” சினந்தவள் “கலா ப்ளீஸ் நான் உங்களோட இருக்கிறது பிடிக்கேலை எண்டாச் சொல்லு நான் எங்கையாவது போறன்”.
“போ போ வனஜா அப்பிடிப் போனாலாவது நீ உன்ர விருப்பத்துக்கு இருப்பாய்..நீ யாரையாவது சந்திப்பாய்.. இப்பிடியிருந்தாயெண்டா இதுக்குள்ளையே உன்ர வாழ்க்கை முடிஞ்சிடும்”
வனஜா கலாவை முறைத்துப் பார்த்தாள் பின்னர் தன் அறைக்குள் போய் கதவைப் பூட்டிக்கொண்டாள்.
அதன் பிறகு கலா வனஜாவிடம் எதுவும் கேட்கவில்லை.
கனடாவில் வருடங்கள் பாய்ந்து பாய்ந்து கடந்து கொண்டிருந்தன. சுஜா ஒரு வெள்ளைக்காறனைக் காதலித்து கலியாணம் செய்து கொண்டாள். தனக்கு இது முதலியேலே தெரியும் என்று நக்கலாகச் சிரித்தான் ராஜன். அவனது பகிடி கலாவிற்கு விளங்கவில்லை. பெண்கள் தாமாகவே துணையைத் தேடிக்கொள்வது தவறு என்பதில் இன்றும் உறுதியாக இருந்தான் ராஜன். கலா குடும்பம் பற்றி எப்போதுமே ஒரு இளக்காரம் அவனுக்கு. கலியாணம் செய்து கொண்டதும் முதலில் கணவனோடு கலாவைப் பார்க்க வந்த சுஜா, 5வனஜாவின் கையால் நூடில் செய்யச் சொல்லிச் சாப்பிட்டு விட்;டுப் போனாள். போகும் போது “கொஞ்சமாவது சுயநலமாக இருக்கப் பழகுங்கோ வனஜாக்கா” என்றாள். அதன் பிறகு சுஜா கலா வீட்டிற்கு வருவதை நிறுத்திக் கொண்டாள். ராஜனையும் அவனது பெற்றோரையும் தன்னால் இனிமேலும் சகித்துக் கொள்ள முடியவில்லை என்று அவள் கலாவிற்கு தொலைபேசியில் அழைத்துக் கூறியிருந்தாள். -------------
ராஜனின் சொந்தம் ஒன்று லண்டனிலிருந்து கனடா குடிபெயர்ந்து ராஜன் வீட்டில் தங்கியது. ராஜனின் அப்பா அம்மாவின் வயதில் ஒரு தம்பதியும், ராஜனிலும் இரண்டு வயது குறைவில் சித்தார்தனும், இருபது வயதில் கௌரியும் வந்திருந்தார்கள். வந்த உடனேயே கௌரி வனஜாவுடன் ஒட்டிக்கொண்டு விட்டாள். அவளின் நகைச்சுவையான கதை வனஜாவிற்குக் கலகலப்பாக இருந்தது. சித்தார்த்தன் எப்போதும் சிகரெட்டும் கையுமாக, குழம்பிய தலையுடன் இருந்தான். அவன் வாயிலிருந்து எப்போதுமே தத்துவங்கள் கொட்டியபடியிருக்கும். அவன் கலியாணம் பற்றிக் கேட்டால் பெரிதாக ஒரு லெக்ஷர் அடிப்பான். “கட்டுற பொம்பிளை பெரிய வீடு, கார் வேணுமெண்டு அதிகாரம் பண்ணினால் நான் இரவு பகலா வேலைதான் செய்ய வேணும், அது எனக்குச் சரி வராது, பிறகு டிவோசிலதான் போய் முடியும், அதோட இப்பிடியான ஒரு உலகத்துக்கு இன்னுமொரு உயிரைக் கொண்டு வந்து சித்திரைவதைப் படுத்த நான் விரும்பேலை”“ஏன் சித்தாத்தன் பிள்ளை வேண்டாம் எண்டு சொல்லுற ஒரு பொம்பிளையப் பாத்துக் கட்டலாம் தானே” கலா கேட்டாள்.
“அதென்ன பிள்ளை வேண்டாம் எண்டிற பொம்பிள, அப்பிடியும் ஒருத்தி இருப்பாளோ”அம்மா அதிசயித்தாள்.
“அண்ணா படு கள்ளன். ஊருக்கொரு கேர்ள் ப்ரெண்டா வைச்சுக் கொண்டு தத்துவம் கதைக்கிறார்” கௌரி கலாவின் காதுக்குள் குசுகுசுத்தாள்.
“கனடா வந்தாச்சு இனி நல்ல வடிவான பெட்டையா ஒண்டைப்; பாத்துக் கட்டி வைப்பம்” ராஜன் சொல்ல, கலா முகத்தைச் சுழித்துக் கொண்டாள்.
“ஐயோ என்னை விட்டிடுங்கோ, முதல்ல வீடு எடுக்கிற அலுவலைப் பாப்பம், பிறகு நான் ட்ரவல் பண்ணிறதா இருக்கிறன், ரெண்டு மூண்டு மாசம் இஞ்ச நிக்க மாட்டன், போய் வந்துதான் வேலை ஏதாவது தேட வேணும்” என்றான் யன்னல் பக்கத்தில் போய் நின்று சிகரெட்டை ஒன்றைப் பற்ற வைத்த படியே.
வனஜா எல்லோருக்கும் தேத்தண்ணி கொடுத்தாள். சாப்பாடு விதம் விதமாய்ச் சமைத்தாள். சனிக் கிழமைகளில் எல்லோருமான டொரொன்றோவைச் சுற்றிப் பார்க்கப் போனார்கள். சித்தார்தன் வனஜா சமையல் பற்றிப் புகழும் போது வெட்கப்பட்டாள். சித்தார்த்தன் கவிதை சொன்னான். கலியாணம் செயற்கையான பரிசோதனைக் கூடம் என்றான். கடவுள் இல்லை என்று வாதாடினான். சுஜாவின் இடத்திற்குப் புதிதாக ஒருத்தர் வந்துவிட்டார் என்று ராஜன் கலாவிடம் படுக்கையில் சொன்னான். வீடு கலகலப்பாக இருந்தது. வனஜாவில் சிறிது மாற்றம் ஏற்பட்டதை ஒருவரும் கவனிக்கவில்லை. சாப்பாட்டுப் பட்டியலில் சித்தார்தனுக்குப் பிடித்த சாப்பாடு அதிகம் காணப்பட்டது. பகல் நேரத்தில் சிகரெட்டை ஊதி;ய படியே சித்தார்தன் வனஜாவிற்கு இறைச்சி வெட்டிக்கொடுத்தான். சிகரெட் மணம் வனஜாவைக் கிறங்கச் செய்தது. கௌரி அண்ணனின் காதல் லீலைகள் பற்றி, மரக்கறி வெட்டிய படியே வனஜாவிற்கு நகைச்சுவையோடு சொல்ல வனஜா வாய் விட்டுச் சிரித்தாள். வனஜா உணர்வுகள் அற்றவள். ஒட்டு மொத்தமாகக் குடும்பமே முடிவெடுத்திருந்ததால் சந்தேகத்திற்கு அங்கே இடமிருக்கவில்லை. கலா இருக்கும் போது மட்டும் வனஜா சிரிப்பதைக் குறைத்துக் கொண்டாள். கலா கெட்டிக்காறி தனது தடுமாற்றத்தை அவளால் உடனேயே அடையாளம் காண முடியும். கலாவை முதல் முதலாக இடைஞ்சலாக உணர்ந்தாள் வனஜா. எனக்குக் கிடைத்திருக்கும் அற்ப சுகம் இது. இதைக் கூட முழுமையாக அனுபவிக்க முடியாமல் கலா குறுக்கே நிற்கின்றாள் என்று வனஜாவிற்குத் தோன்றியது.
----------------
கௌரியை தமிழ் உடுப்புக் கடைக்குக் கூட்டிக்கொண்டு போகும் போது சித்தார்தனும் வந்தான். கௌரிக்கு ஒரு சீலை வனஜாவிற்கு ஒரு சீலை வாங்கிக் கொடுத்தான். சாப்பிடப் போனார்கள். நடந்து இடம் பார்க்கப் போனார்கள். எல்லாமே ஒரு கனவு போலிருந்தது வனஜாவிற்கு. ராஜனிலும் விட இரண்டு வயது குறைவு சித்தார்தனுக்கு. அவன் மேல் காதலை வளர்த்துக் கொள்வது கேவலமாக அவளுக்குப் பட்டது. இருந்தும் மனம் அவள் கட்டளையை கடந்து காததூரம் போய் விட்டிருந்தது. என்ன கலியாணமா செய்யப் போகிறேன். எங்களுக்குள் ஒரு உறவு வளர்கிறது. அவனுக்கும் என்னை நிச்சயம் பிடித்துத்தான் இருக்கின்றது. ஒருநாள் நான் அறிந்திரா சுகத்தை அது எனக்குத் தரப்போகிறது. அந்த ஒருநாள் அதிக தூரத்தில் இல்லை. அந்த ஒருநாள் போதும் நான் என் வாழ்க்கையின் மீதியை சந்தோஷமாகக் கழிப்பதற்கு. சித்தார்தனி;ன் கண்களில் அவள் காதலோடு கலந்த காமத்தைக் கண்டாள். சரி தவறு என்பதற்கு மேலால் அவள் உணர்வுகள் வளர்ந்து விட்டிருந்தன. பல வருடங்களுக்குப் பின் தன் அழகு மேல் முதல் முதலில் அவள் அக்கறை கொள்ளத் தொடங்கினாள். கர்ப்பம் கொள்ளாமல் இறுகிப் போய் இருக்கும் வயிறு. சற்று உயர்ந்து தொங்கும் பால் சுரக்காத முலைகள், தொடைகளின் நடுவே நரைத்த ஈரமற்ற உதிரும் சுருள் மயிர். மாதவிடாய் நின்று விட்டது. வனஜா சுருங்கிக் கொண்டாள். இந்த சதைப் பிண்டத்தை ஒருவன் விரும்புவானா? விரும்புவான். விரும்புகின்றான்.
அலுமாரியில் அடியிலிருந்த புதிய உடைகள் வெளியே வந்தன. நரையை மறைத்தாள். சிரித்தாள். சிரித்தாள். அவன் எங்கு கேட்டாலும் செல்வதற்குத் தன்னைத் தயாராக்கிக் கொண்டிருந்தாள். யாருக்குத் தெரியப் போகிறது. தெரிந்தால்தான் என்ன? யாருக்கு என்மேல் என்ன அக்கறை? முதல் முதலாய்த் தன் குடும்பத்தின் மேல் அவளுக்கு வெறுப்பு வந்தது. சித்தார்த்தனைத் தவிர்த்து அனைவரையும் வெறுத்தாள். எப்பிடி முடிந்தது என் குடும்பத்தால். சீதணம் இல்லை. ஒருவரும் கேட்டும் வரவில்லை. எனவே இப்பிடியே பேசாமல் இருக்க வேண்டும். வேலைக்குப் போகட்டும், ஏதாவது படிக்கட்டும் என்று கலா சொன்னபோது ஒரு பதிலில் ராஜன் அவளை அடக்கி விட்டான். “அக்காவை உயிருள்ள வரை வைச்சு நான் பாப்பன் ஆரும் அதில தலையிட வேண்டாம்”. வெளியே விட்டால் நான் யாரோடாவது படுத்திட்டு வந்து விடுவேன் என்ற பயம் அவனுக்கு.உன்னால சாப்பாடு போட முடியும், உடுப்பு வாங்கித் தர முடியும். அதுக்குக்கு மேலால் எனக்கொரு தேவை இருக்கின்றது என்பது எப்பிடி உனக்குத் தெரியாமல் போனது ராஜன்? இரவில் உன் அறையில் கட்டிலின்; சத்தம் என்னை ஒன்றும் செய்யாது என்று எப்பிடி நம்பினாய்? அப்பா அம்மா கூட இப்பவும். ச்சீ எதையெல்லாம் என் மனசு நினைக்கிறது. எதுக்காக சித்தாத்தன் இங்க வந்தான்.
-----------
அன்று பள்ளிக் கூட விஷயமாக கௌரி வெளியே போயிருந்தாள். ராஜனுக்கும் கலாவுக்கும் வேலை. அப்பா அம்மாவோடு சித்தார்தனின் அப்பா அம்மாவையும் யாரோ சொந்தக்காறரைப் பார்க்க வென்று சித்தார்த்தன் கூட்டிகொண்டு போயிருந்தான். வனஜா வீட்டி வேலைகளைச் செய்து விட்டு ரிவி பார்த்துக் கொண்டிருந்தாள். திடீரென்று கதவு திறக்கும் சத்தம் கேட்டது. சித்தார்தன். கையில் ஒரு சாப்பாட்டுப் பொட்டலம். சிரித்த படியே “சமைக்காதேங்கோ நான் நல்ல சாப்பாடு வாங்கிக் கொண்டு வந்திருக்கிறன்” என்றான்.
வனஜாவின் மனம் கனமானது. “நீங்கள் அங்க சாப்பிடப் போறீங்கள் எண்டு” வனஜா தொண்டை வறள உளறினாள்.
“அப்பிடியெண்டுதான் போனனான், அங்க அப்பா அம்மான்ர வயசில ரெண்டு பேர் இருக்கீனம், அங்க இருந்து நான் என்ன செய்யிறது. நான் மெல்லமா வெளிக்கிட்டு வந்திட்டன். சரி போறனான் ஏதாவது ஸ்பெஷலா வனஜாக்கு சாப்;பிட வாங்கிக் கொண்டு போவம் எண்டு நல்ல சைனீஸ் சாப்பாடு வாங்கிக் கொண்டு வந்திருக்கிறன்”. வனஜாவின் கண்களை நேரடியாகப் பார்த்து விட்டு நெடுகலும் நீங்கள்தானே சமைக்கிறீங்கள்” என்றான்.
வனஜாவின் கால்கள் நடுங்கத் தொடங்கியது. இதுதான் நான் எதிர்பார்த்த அந்த நாள். நெஞ்சம் கனத்து உடல் படபடத்தது. வருத்தத்திற்குக் கூட ஆண் மருத்துவரை அணுகாத வனஜாவின் ஐம்பது வயது உடம்பை இன்று இவன் தொடப்போகின்றான். நான் என்ன செய்ய வேண்டும். இந்த முத்திய உடம்பு அவனுக்கு ஏமாற்றத்தைக் கொடுத்தால்? அவள் உடல் எதிர்பார்ப்போடு தன்னைத் தளர்த்திக் கொண்டது. மனம் அலறியது. “என்னால் இனிமேலும் பொறுக்க முடியாது, என்னை அணைத்து விடு சித்தார்த்தா” கால்கள் தளர “ரீ போடட்டே என்றாள்”
“இ;ல்லைச் சாப்பிடுவமே நேரமாகுது” என்றான்
அவன் சொன்னதின் அர்த்தம் விளங்காமல் அவனைப் பார்த்தாள் வனஜா. சித்தார்த்தன் குசினிக்குள் போய் இரண்டு பீங்கானை எடுத்து வந்தான். மேசை மேல் வைத்து சாப்பாட்டைப் பிரித்தான். கிளாசில் தண்ணீர் வைத்தான். வனஜாவைச் சாப்பிடச் சொன்னான். கதிரையில் இருந்து சாப்பிடத் தொடங்கினான் சித்தார்த்தன்.
மௌனமாகச் சாப்பி;ட்டாள் வனஜா. சாப்பாடு முடிந்து தண்ணீர் குடித்து இனி என்ன என்பது போல் சித்தார்தனை அவள் பார்த்தாள். அவள் உணர்வுகள் வடிந்து போயிருந்தன. நெஞ்சின் கொதிப்பு குளிர்காணத் தொடங்கியது.
ஒரு சிகரெட்டைப் பற்ற வைத்த படியே சித்தார்த்தன் சொன்னான் “நான் ஒரு கேர்ளைச் சந்திக்கப் போக வேணும், அதுதான் அம்மா அப்பாக்கும் சொல்லாமல் அவசரமா வெளிக்கிட்டு வந்தனான். வரேக்க உங்கட நினைப்பு வந்தது. தனிய இருப்பீங்கள். சமைச்சீங்களோ தெரியாது அதுதான். சாப்பாடு நல்லா இருந்தது என்ன? கேட்டு விட்டுத் தனக்கு நேரமாகி விட்டதென்று அவசரமாக வெளியேறினான். கதவைப் பூட்டும் போது “இரவைக்கு அனேகமா வரமாட்டன்” என்றான்.
பிரமாண்டமான அந்த வீட்டில் தனியே விடப்பட்ட வனஜா, தனது ஐம்பதாவது வயதில் வாய் விட்டழுததை அந்த வீட்டின் சுவர்கள் கூடக் கேட்காதது போல் முகம் திருப்பிக் கொண்டன.
இனிப் பின்நேரம் ஆகும், வனஜா வழமை போல் சதீஸை பாடசாலையில் இருந்து அழைத்து வருவாள்.
---------------------------------------
நன்றி உயிர்நிழல்- January-July/2009

2 comments:

ஆதித்தன் said...

அற்புதமான கதை. தொடர்ந்து எழுதுங்கோ.

கறுப்பி said...

ஆதித்தன்

நன்றி.

தென்புலோலி பருத்தித்துறை என்று கண்டபோது மனதிற்கு மிகவும் வேதனையாக உள்ளது. நான் நாடு கடந்து 30 வருடங்களுக்கு மேல் ஆகின்றது. எனது கிராமம் கோண்டாவில். திரும்ப ஒருமுறை எனது ஊரை நாட்டைப் பார்க்கும் சந்தர்ப்பம் கிடைக்குமா என்று ஏக்கமாக உள்ளது. பிள்ளைகள் எல்லோரும் கனேடியர்களாக வாழப்பழகிக்கொண்டு விட்டார்கள். எனக்கும் ஊரில் எவரும் இல்லை. ஊரில் வாழ்ந்த காலத்தைவிட புலம்பெயர்ந்து வாழும் காலம்தான் அதிகம். இருந்தும் கனேடிய நீரோட்டத்தில் கலக்க முடியவில்லை.