Monday, April 04, 2005

ஆண்களும் "Appreciation" உம்

ஓ நல்லாச் செய்தீங்கள்.. நல்லா எழுதுறீங்கள், நல்லா வாசிக்கிறீங்கள், நல்லாக் கதைக்கிறீங்கள், நல்லா நடிக்கிறீங்கள், நல்ல யோசிக்கிறீங்கள், இவை கொஞ்சம் மேல் தளத்து தம்மை முற்போக்கு என்று பிரகடனப்படுத்தும் ஆண்களிடம் இருந்து பெண்களுக்குக் கிடைக்கும் பாராட்டுக்கள்

ஒ நல்லாச் சமைக்கிறா, நல்லாக் கிளீன் பண்ணுறா, நல்லா ரீ போடுறா, நீங்கள் சுட்ட வடை நல்ல்ல்லா இருக்கு. இத்யாதிப் பாராட்டுக்கள் இன்றொரு ரகம். அதை விடுவம்.

அடுத்து இந்தச் சனியன் என்னத்தைச் செய்தாலும் -- அந்த ரகத்தையும் விட்டு விடுவம்.

இப்ப முதல் ரகத்தைக் கொஞ்சம் ஆராய்வம்.

கறுப்பி போன கிழமை ஒரு மேடை நாடகம் நடித்தாள். கிட்டத்தட்ட ஏழெட்டு வருஷமா உதைத்தான் செய்து கொண்டு இருக்கிறாள். முதல் மேடை ஏற்றத்தின் பின்னர் நிலத்துக்கு வந்தபோது கைகொடுப்புக்களும் பாராட்டுக்களும் (முக்கியா ஆண்களிடமிருந்து) வந்து குவிந்த போது கறுப்பி மெய் சிலிர்க்க உணர்ச்சிவசப்பட்டது என்னவோ உண்மைதான். தொடர்ந்து வந்த காலங்களில் கறுப்பி நடிப்பதும் அதே ஆண்கள் வர்க்கம் பாராட்டுவதும் கேட்டுக் கேட்டுச் சவத்துப் போச்சு. இனி அடுத்த படிக்குப் போக வேணும். ஆனால் படி எங்கையிருக்கெண்டு தெரியாமல் தடுமாறேக்கதான்.. இரண்டு வாரங்களுக்கு முன்பு கறுப்பி நடித்துக் கிழித்த ஒரு நாடகத்திற்கு நல்ல ஒரு ஆண் விமர்சகர் விமர்சனம் வைத்துவிட்டுத் தனியாகக் கறுப்பியிடம் வந்து “அதிகாரத்திற்கு எதிரான.. தலைமைகளைக் கேள்விக்குறியாக்கும் ஒரு நாடகத்தில் பெண்ணாகிய தாங்கள் துணிந்து சிறப்பாக நடித்ததையிட்டு நான் பெருமைப் படுகின்றேன். பாராட்டுகின்றேன்” என்றார் கறுப்பிக்கு சுள்ளென்று எதுவோ தைத்தது. நாடகத்தில் கறுப்பியுடன் இன்னும் இரு ஆண்கள் நடித்திருக்கின்றார்கள், அவர்கள் ஆண்கள் துணிந்தவர்கள், எதையும் செய்வார்கள், குரல் கொடுப்பார்கள், தயங்க மாட்டார்கள் ஆனால் கறுப்பி கோழை வர்க்கத்தில் பிறந்தவள்.

இந்தப் பாராட்டும் கைகொடுப்புக்களும் கறுப்பி பெண்ணாக இருப்பதால் பிரத்தியேகமாகக் கிடைக்கிறன என்பது கறுப்பிக்குப் புரிந்தது. அதாவது பெண்களால் ஒன்றும் ஏலாது, பெண்கள் கோழைகள், பலவீனமானவர்கள், ஒட்டு மொத்தமாக ஆண்களோடு ஒப்பிடும் போது அங்கவீனம் உற்றவர்கள் போல் இருக்கின்றீர்கள். இதற்குள் ஒருவர் கொஞ்சம் ஏதோ செய்கின்றார் எனவே பாராட்டி ஊக்குவிப்போமாகுக…
பெண்கள் சிலர் சேர்ந்து பட்டறை நாடகம் போட்டார்கள். நாடகம் பல நல்ல அம்சங்களைக் கொண்டிருந்தாலும் ஒட்டு மொத்த mess என்பதைப் பட்டறைப் பெண்களே மனம் நொந்து ஒத்துக் கொண்டு அடுத்து வரும் காலங்களில் நன்றாகச் செய்ய வேண்டும் என்று சிந்தித்தாலும், நாடகத்தில் எந்த ஒரு குறையும் சொல்லாமல் ஆண்களிடமிருந்து பாராட்டோ பாராட்டு (கொஞ்சம் ஏதோ விமர்சனம் வைத்தவர்களுக்கு சாட்டை அடியோடு) காரணம் பெண்கள் ஏதோ செய்கின்றார்கள் ஊக்குவிப்போம் என்று மிகுந்த நற்பண்புடன் பெண்களுக்கு மனம் நோகக்கூடாது என்ற பெருந்தன்மையில் பாராட்டுப் பிச்சை போடுகின்றார்கள் முற்போக்கு மேல் மட்ட ஆண்கள். இப்படி ஒரு பட்டறை நாடகத்தை ஆண்கள் போட்டிருந்தால் கேலிக் கூத்தாகச் சிரித்திருப்பார்கள். “ஐயோ என்ன இது எத்தனை தரமான ஆண் எழுத்தாளர்கள் இயக்குனர்கள் இருக்கின்றார்கள் இப்பிடியொரு ஒழுங்கற்ற நாடகத்தை மேடை ஏற்றலாமா என்ற கேள்விதான் மிஞ்சியிருக்கும்”.

பாஸ்மதி அரிசியையும், பட்டுச் சேலையையும், பாவற்காயையும், பேசுவதை விட்டு பெண்கள் வேறு ஏதாவது செய்தால் முற்போக்கு மேல்மட்ட ஆண்கள் பாராட்ட அள்ளி வீசப்போகின்றார்கள் என்பது வெளிச்சம்.

No comments: