Tuesday, April 05, 2005

பா பா பிளாக் ஷீப்

ஆந்திரப் பிரதேசத்தில் புட்டபத்தி என்னும் இடத்தில் 1926ம் ஆண்டு பிறந்தவர்தான் சத்யநாராயணன் ராஜூ. இவருக்கு 14 வயதாகிய போது மகராஷ்றா பிரதேசத்தில் இருபது வருடங்களுக்கு முன்பு இறந்து போன சாயி பாபா என்பவரின் ஆவி சத்யநாராயணனின் உடலுக்குள் புகுந்தது அவரை இறைவனின் தூதுவர் ஆக்கியது. (இல்லவிடின் இறைவன் ஆக்கியது எனலாம்) அன்றிலிருந்து இன்றுவரை பாபா பல அதிசயங்களைப் புரிந்து வருகின்றார்.
அந்த மாகானின் அதிசயங்களாக நான் அறிந்தவை -

இறந்தவர்களை உயிர்பித்திருக்கின்றார்.
நோய்களைத் தீர்திருக்கின்றார்.
பல பொருட்களை பக்தர்களுக்கு அருள் மூலம் பெற்றுக்கொடுத்திருக்கின்றார். – அனேகமாக ஏழைகளுக்கு விபூதி, குங்குமம் போன்றவை – செல்வந்தர்கள் அரசியல்வாதிகளுக்கு வைர மோதிரங்கள், தங்க நகைகள் போன்றவை.
காரில் போகும் போது பெற்றோல் தீர்ந்து போனதால் தண்ணீரைக் கொண்டு வரச்சொல்லி பெற்றோலாக்கி பிரயாணத்தை மேற்கொண்டிருக்கின்றார்

இப்படி இந்த மகானின் அருளைச் சொல்லிக் கொண்டே போகலாம்.

பலர் இவரின் இந்த அருளைப் பொய் என்று கூறித் தம்மாலும் இப்படியாகப் பொருட்களை எடுத்துக் கொடுக்க முடியும் என்று சவால் விட்டிருக்கின்றார்கள். முக்கியமாக ஜோர்ஜ் கோபூர் சவால் விட்டது நான் அறிந்து கொண்டது. அதைவிட இவரைக் கொல்லப் பலர் முயன்று தமது உயிரை விட்டிருக்கின்றார்கள்.

கனடாவிலிருந்து வருடாவருடம் பல பக்தர்கள் அவரின் அருள் வேண்டி புட்டபக்திக்குச் சென்று வருகின்றார்கள். பலர் நோயுற்ற போது கூட மருத்துவரின் செல்லாமல் விமானம் ஏறி புட்டபக்திக்குச் செல்லும் அளவிற்கு பாபாவின் மகிமை உலகெங்கும் பரவியிருக்கின்றது.

ஒரு தனி மனிதன் (கூட்டாகவோ) தன்னை கடவுள் என்றோ கடவுளின் தூதுவர் என்றோ கூறி பக்தர்களிடமிருந்து அனைத்தையும் பெற்று (பாலியல் இன்பங்கள் உறவுகளைக் கூட) வாழ முற்படல் எப்படிச் சாத்தியமாகின்றது. என்னோடு வேலை செய்யும் கயானா நாட்டுப் பெண்ணொருத்தி பாபாவின் தீவிர பக்தை. அவள் பாபா இறக்கமாட்டார் என்பதை முற்றுமுழுதாக நம்புகின்றாள். ஆனால் பாபா தளர்ந்து விட்டாரே இறைவன் எனின் இளமையாகவே இருந்திருக்கலாமே என்ற என் கேள்விக்கு மனிதருக்கு வாழ்வின் ஒவ்வொரு தளத்தையும் உணர வைக்கவே அவர் தன்னை உருமாற்றிக் கொள்கின்றார் அது உண்மையான முதிர்ச்சியல்ல என்பது அவள் வாதம். (நல்ல வாதம் போங்க)

கனேடியத் தொலைக்காட்சி ஒன்றில் சத்யசாயி பாபா எப்படிப் பொருட்களை எடுக்கின்றார் என்பதைப் புட்டு புட்டு அத்தாட்சியாக வீடியோ காட்சிகளோடு கூடிய ஒரு விவரணப்படத்தை ஒளிபரப்பியிருந்தார்கள். பலர் அந்த நிகழ்வை ஒளிப்பதிவு செய்து பலருக்குக் கொடுத்தும் இருக்கின்றார்கள். இருந்தும் பக்தர்களின் எந்த வித மாற்றமும் ஏற்படவில்லை. இதற்குக் காரணம் என்ன. அளவிற்கு மீறிய நம்பிக்கையா? சிந்தனை அற்ற தன்மையா? இல்லாவிட்டால் பழகிவிட்ட வாழ்வை மாற்றமுடியாத நிலையா?

ஒரு மதத்தை மனிதர்கள் மத்தியில் பரப்ப வேண்டும் எனின் முதலில் பல ஓன்று கூடல்கள் கலைவிழாக்கள் களியாட்டங்கள் கூட்டங்கள் போன்றவற்றை ஒழுங்கு செய்து கொஞ்சம் கலகலப்பாக உணவுப் பண்டங்களுடன் மக்களைச் ஒன்று படுத்தல் வேண்டும். இதனை கத்தோலிக்க சபைகளும் பாபா பக்த அமைப்புக்களும் மிகவும் சிரத்தையுடன் தவறாமல் செய்து வருவதுதான் அவர்கள் பக்தர்களைத் திரட்டிக் கொள்வதன் ரகசியம் என்பது என் கருத்து. தனிமைப்பட்டு இருக்கும் மக்களுக்கு இது ஒருவித ஆறுதலையும் மனமகிழ்ச்சியையும் கொடுக்கின்றது. இதுதானே வாழ்க்கைக்குத் தேவை.

ஓம் சாயி பாபா

12 comments:

துளசி கோபால் said...

என்னங்க கறுப்பி,

//அனேகமாக ஏழைகளுக்கு விபூதி, குங்குமம் போன்றவை
– செல்வந்தர்கள் அரசியல்வாதிகளுக்கு வைர மோதிரங்கள்,
தங்க நகைகள் //

தூள் -))))))))))))

இந்த விஷயத்துலே ரொம்பப் படிச்சவுங்களே( மெத்தப் படிச்ச மேதாவிங்க)
நம்பிக்கிட்டு, தீவிர பக்தர்களா ஆயிருக்காங்களே. அதுதான் எனக்குப் புரியலை!!!

என்றும் அன்புடன்,
துளசி.

அருவி-ARUVI said...

என்ன கறுப்பி சாயி மேல இவ்வளவு காதல்?
உங்களுக்கு ஒரு வரமும் தரவில்லையோ!

Narain Rajagopalan said...

பாபா மட்டுமல்ல, நிறைய சாமியார்கள் ப்ராடுதான். பாபா இருக்கும் ஒயிட்பீல்டின் நிலத்துக்கு கீழே எத்தனை கொலைகள் நடந்திருக்கின்றன, எத்தனை மரணங்கள், காரணமின்றி கேஸ் பைல் மூடப்பட்டுள்ளது என்பது விஷயமறிந்துவர்களுக்கு தெரியும்.

லோகத்தின் குருவாய் இருக்கும் பாபா எதற்கு சுற்றிலும் இருக்கும் நிலத்தினை மென்பொருள் பூங்கா வைக்க இடம் கொடுத்து காசு சம்பாதித்துக் கொண்டிருக்கிறார். பக்தி என்பதே ஒரு நம்பிக்கை. இந்த விபூதி தருவது எல்லாம், 10 மேஜிக் பற்றிய இணையதளங்களைப் பார்த்தால் நீங்களும், நானும் கூட செய்யலாம். இது ஒரு விஷயமேயல்ல. பக்திமான்கள் உலகிற்கு அமைதியையும், வழிபடுபவனுக்கு சந்தோஷத்தையும் ஏற்படுத்துவார்கள். உள்ளே நுழைய காசு வசூலிக்கும் எவனும் ஆன்மீகவாதியும் அல்ல. அவனால் எவ்வித பயன்களுமில்லை.

பாபா போன்றவர்களை கண்டிப்பாக பாராட்டுவேன். உலகெங்கிலும், இவ்வளவு பேர்களை இப்படி மூளைச்சலவை செய்யும் திறன் பெற்றிருப்பதால் மட்டுமே. இதில் இன்னொரு உண்மையும் ஊடாக இருக்கிறது, உலகெமெங்கும் நிறைய முட்டாள்கள், தன் கஷ்டங்களை ஒரு தேவதூதன் தீர்ப்பான் என்கிற நம்பிக்கையில் இருப்பதுதான்.

பாலு மணிமாறன் said...

தன்னால் முடியாது என்று உணரும் விஷயங்களுக்கெல்லாம் மனிதன் தனக்கு மீறிய ஒரு பெரிய சக்தியை கைகாட்ட தவிக்கிறான்... சாகும்வரை இந்தத் தவிப்பு ஓய்வதில்லை போங்க....

கறுப்பி said...

துளசி தாங்கள் சொன்னது போல்த்தான் எனக்கும் புரியாமல் இருக்கின்றது.

அருவி எனக்கும் புட்டபத்தி போய்வர விருப்பம் இருக்கிறது முடிந்தால் ஒரு முறை போக உள்ளேன். தாங்கள் ஏன் தற்போது எழுதுவதில்லை.

நாராயணன். நான் பார்த்த வகையில் இந்தியர்களிலும் பார்க்க ஈழத்தமிழ் மக்கள் பாபா மேல் அதிக மோகம் கொண்டுள்ளார்கள் இது ஏன் என்று புரியவில்லை.

பாலு அப்படி ஒரு தேவையைப் பூர்த்தி செய்யத்தானே மதங்களும் ஆலயங்களும் தோன்றின. பின்னர் எதற்குத் தனி மனித பூஜை? புரியவில்லை. மனித மனங்கள்

வானம்பாடி said...

தமிழ்நாட்டில் புட்டபர்த்தி பாபா மோகம் மிகவும் குறைவே. ஒரு சில ப்ராமண குடும்பங்களைத் தவிர பிறருக்கு அவர் 'இன்னொரு சாமியார்', அவ்வளவே. அந்தக் கபட நாடக வேடதாரியின் கபடங்களையும் நாடகங்களையும் பற்றி அவரது முன்னாள் சீடர்கள் இங்கே புட்டுப் புட்டு வைக்கிறார்கள்.

http://home.hetnet.nl/~ex-baba/english.html

எல்லாளன் said...

Iyo! Iyo!
Abchram abachram!
Bahavani patri ipadi pesuvorukku Modcham kidaiyathu!
neengal ellorum gnana sooniyannkal!

Ohom Sai shakthi bahavan!

கறுப்பி said...

எல்லாளன், கறுப்பி ஏற்கெனவே நரகத்தில ஒரு இடம் "புக்" பண்ணி வைச்சிருக்கிறன். அங்க ரெண்டு மூண்டு ஆக்கள எனக்குத் தெரியும். (எல்லா இடமும் அரசியல்தானே) சொர்க்கத்திலும் விட நரகத்துக்குத் தான் கூடக் காசு தெரியுமோ? வேணுமெண்டா உங்களுக்கும் "ரெக்கமெண்ட்" பண்ணலாம். சௌகரியம் எப்படி?

எல்லாளன் said...

ஐயோ! பகவானே இதுகளை கேக்குறத்துக்குத் தானா என்ன இன்னும் உயிரோட வைச்சிருக்கிறாய்
ஓம் சாயி ராம்.

எல்லாளன் said...

ஐயோ! பகவானே இதுகளை கேக்குறத்துக்குத் தானா என்ன இன்னும் உயிரோட வைச்சிருக்கிறாய்
ஓம் சாயி ராம்.

எல்லாளன் said...

ஐயோ! பகவானே இதுகளை கேக்குறத்துக்குத் தானா என்ன இன்னும் உயிரோட வைச்சிருக்கிறாய்
ஓம் சாயி ராம்.

கறுப்பி said...

எல்லாளன் நீங்கள் மூண்டு முறை சொன்னா ஒரு முறை சொன்ன மாதிரியா?