Wednesday, April 06, 2005

இருள்களால் ஆன கதவு


1
அந்த அகண்ட ஹோலில் அசைக்கப்படாமல் பலகாலமாகப் போடப்பட்ட பொருட்கள் மனதில் பதிந்து போய் விட்டிருந்தன. ஒன்று அரக்கப்பட்டாலோ இல்லைப் புதிதாக நுழைந்து கொண்டாலோ மீராவால் இலகுவில் அடையாளம் கண்டு கொள்ள முடியும்.
வழமை போல இன்றும் அதே சுவரின் மூலையில் சாய்ந்து, கலைந்த தலையும், சிவந்த கண்களுமாய் எங்கோ வெறித்துக் கொண்டே மகன் ரிஷிக்குப் பாடம் சொல்லிக் கொடுப்பதாய் பாவனை செய்து கொண்டிருந்தாள் யசோ. அவளும் அந்த ஹோலின் ஒரு அசையாத பொருளாக மாறி வருகின்றாளோ என்ற அச்சம் மீராவிற்கு. அவள் தலை சாய்க்கும் பகுதி சிறிது நிறம் மாறிப்போயிருந்தது. தனியாக வீட்டு வேலைகளை அவள் செய்வதற்கு மீரா ஒரு போதும் அனுமதித்ததில்லை.. இருந்தும் எதையாவது செய்து வைப்பதை அவளால் தடுக்கவும் முடிவதில்லை..
கதவு திறக்கும் சத்தம் கேட்டதும் குற்றம் செய்து விட்டது போல் புத்தகங்களை வாரி எடுத்துக் கொண்டு தனது அறையை நோக்கி நடந்தாள் யசோ. மீரா ரிஷியை அணைத்து அவன் தலை தடவி அவள் முகம் பார்க்கு முன்னே யசோ மறைந்து விட்டிருந்தாள்.
முகுந்தன் சோபாவில் கால் அகட்டி விழுந்தான். மூன்று நாட்கள் தொடர்ந்து வேலை செய்ததால் வந்த களைப்பு. இனிச் சிறிது நேரம் கண்மூடி, சிறிதாக குறட்டை விட்டுத் திடுக்கிட்டெழுந்து தொலைக்காட்சியில் செய்தி பார்த்துப் பின்னர் அவளுக்கு சமையலுக்கு உதவுவான். யசோ வந்த பிறகு மீரா அவனை உதவிக்கழைப்பதில்லை. மீரா எல்லாக் களைப்பிலிருந்தும் வெளியே வந்து விட்டிருந்தாள். முகம் கழுவி, சமையலுக்கு ஆயத்தமானாள். முகுந்தன் ஹோல் பக்கமோ, குசினிப்பக்கமோ இருந்தால் அந்த இடங்களை யசோ தவிர்ப்பாள். தெரிந்ததால், முகுந்தனின் தோளில் தட்டி கோப்பியைக் கொடுத்து அறைக்குள் போய் படுக்கச் செய்தாள் மீரா.
யசோ நெற்றி நிறைந்த விபூதியோடு வெங்காயத்தை எடுத்து தோலை உரிக்கத் தொடங்கினாள். மீரா அவள் முகம் பார்ப்பதை தவிர்த்தாள். அணைத்து வாய்விட்டுக் கதறிய நாட்கள் போய் யசோவின் செய்கைகள் இப்போதெல்லாம் கொஞ்சம் எரிச்சல் தருகின்றன அவளுக்கு. சாப்பிடும் போது இந்தா எழும்பி விடுகிறேன் என்பதாய் கதிரை நுனியில் இருந்து கொண்டு ஒற்றைக் கறியோடு சோற்றை கொஞ்சமாக வாய்க்குள் திணித்து தண்ணீர் விட்டு மென்று விழுங்குவதும் தமிழ் படம் பார்ப்போம் என்று பலவந்தமாக ஹோலுக்கு அழைத்து வந்தால் வழுக்கி விழுந்து விடுவது போல் சோபாவில் வேண்டா வெறுப்பாக இருப்பதும் மீராவிற்கு போதும் போதுமென்றாகி விட்டது. இவளின் எதிர்காலம் என் கையில் என்பதாய் மீரா அங்கலாய்த்தாள்.
2
நீண்ட தலைமயிரை இறுக்கமாக இரட்டைப் பின்னல் பின்னி நுனியில் கறுப்பு ரிபணை அழகாகக் கட்டி விட்டு அகன்ற பெரிய கண்களுக்கு அளவாக ஐடெக்ஸ் இட்டு, நெற்றியில் சின்னதாக ஒரு கறுப்புப் பொட்டும், மெல்லிய ஒற்றை வரியில் விபூதி போல் பவுடரும் பூசி, வெழுத்த வெள்ளைச் சட்டை, ரை, சப்பாத்து என்று ரோட்டில் அவள் இறங்கும் போது தூரத்தில் காத்திருக்கும் ஆண் கூட்டம் நடந்தும், சைக்கிளை உருட்டிக் கொண்டும் அவளைப் பின் தொடரும். மீராவிற்கு அந்த ஆண்கள் இட்ட பட்டப் பெயர் “வில்லி” அக்கா யசோவிற்கு அவள் தான் பாதுகாப்பு. யசோவின் அதிமிகுந்த அழகு மீராவை ஒரு போதும் சங்கடப்படுத்தியதில்லை. மாறாக பெருமைப்பட்டாள். அக்காவை எந்த ஒரு ஆண் வாடையும் நெருங்கிவிடாமல் பாதுகாப்பதில் அவளிற்கு மிகுந்த பெருமை. யசோவும் தன் அழகு பற்றி அலட்டிக் கொள்ளாதவள். யசோவையே சிறிய சிறிய கோணல்களுடன் வடித்தது போலிருந்தாள் மீரா. யசோவிற்கு முன்னால் அவள் அழகற்றவள். இருந்தும் மீராவின் திறமை, துணிவு சிலவேளைகளில் யசோவை மிரளச் செய்யும். அவளிடம் ஏதோ அசாத்திய சக்தி இருப்பது போல் யசோ சில நேரங்களில் எண்ணிதுண்டு. தன் பாதுகாப்பிற்கு மீராவின் பின்னால் ஒதுங்குவதற்கு அவள் தயங்குவதுமில்லை.

கல்வி இயல்பாக வந்தும், ஏனோ சுவாரசியமாக இருக்கவில்லை யசோவிற்கு. அவள் இரவுகள் நீண்ட நித்திரையைத் தொலைத்தவையாயின. தலை வரை போர்த்துக் கொண்டு கண்களை மூடிக் கனவுக்குள் திளைக்கத் தொடங்கினாள். மிகப் பிரமாண்டமான மண்டபத்திற்குள், பட்டுச் சரசரக்க உறவினர்கள், நண்பர்கள் என்று கலர் கலராக வந்து போயினர். முற்றிலும் பூக்களால் அலங்கரிக்கப்பட்ட மணவறையில் வெட்கத்துடன் தலைகுனிந்திருந்தவளை, முகம் தெரியாத ஒருவன் தாலி கட்டி மனைவியாக்கினான். மண்டபத்தில் தொடங்கி தாலி கட்டும் வரை அவள் கனவுகள் அவசர அவசரமாக இருக்கும், அதன் பின்னர் அதிக நுணுக்கங்களுடன் கனவு தொடரும், அவள் முதலிரவு எப்போதும் தமிழ் சினிமா முதலிரவுகளை ஒத்திருக்கும். இறுகப்பட்டுடுத்தி, தலை நிறைந்த பூவுடன் கையில் பால் கிண்ணம் என்று தலை குனிந்து அறைக்குள் நுழைந்து, முகம் தெரியாக் கணவனின் காலில் விழுந்து எழுந்து.. அதன் பின்னர் கனவு மேலும் நுணுக்கமாக.. பல மணி நேரங்கள் நகரும்.. உடல் சிலிர்க்க, தொடைகள் விறைக்க வெட்கித்துப் புரளுவாள்.. தொடரும் வெட்கத்திலும் வேட்கையிலும் திணறி முடிவில் யசோ காதலித்தாள். தான் கனவில் கண்டது அவன்தான் என்றும், பெண்ணாய் பிறந்தால் திருமணம் செய்து குழந்தை பெற்றுக் கணவனுடன் குடும்பம் நடாத்துவதுதான் என்பதில் அவளுக்கிருந்த அசைக்க முடியாத நம்பிக்கையின் பேரிலும், தனது காதல் பற்றிப் பெற்றோரிடம் கூறி படிப்பை நிறுத்தித் திருமணமும் செய்து கொண்டாள். அப்பாவிற்கும் மீராவிற்கும் உண்டான ஏமாற்றம், அத்தானிடம் ஏற்பட்ட நெருக்கத்தால் மறைந்து போனது.

3
கல்வியை ரசித்து முன்னேறினாள் மீரா. அவளின் திறமை தரப்படுத்தலையும் மீறி அவளை பல்கலைக்கழகத்திற்குள் கொண்டு சென்று ஒரு மருத்துவராக வெளியே கொண்டு வந்தது. பொதுவாகவே தான் பிறரைப் பாதுகாக்கப் பிறந்தவள் என்ற அவளது நம்பிக்கை யாழப்பாணத்து குற்றூர்களுக்கெல்லாம் சென்று மருத்துவம் பார்க்க வைத்தது. இருந்தும் வருடம் ஒரு முறையாவது பெற்றோருடன் குடும்பமாகச் சேர்ந்து கொட்டமடிப்பதை அவளோ யசோவோ மறந்து விடவில்லை. தந்தையின் கனவை மீராவும் தாயாரின் கனவை யசோவும் நிறைவேற்றி விட்டிருந்தார்கள். மீரா யாரையும் காதலிக்கவில்லை.. உன்ர விருப்பம் போல படிச்சு வேலையும் எடுத்திட்டாய் இனிக் கலியாணம் செய்யலாம் தானே என்ற தாயாரின் இம்சை தாளாமல் அத்தானின் நண்பனான கனடாவில் வசிக்கும் முகுந்தனைத் திருமணம் செய்யச் சம்மதித்து கனடாவிற்கும் வந்து சேர்ந்து விட்டாள் அவள். வெறுமனே பெண்ணாகத் தான் உருமாறிக்கொண்டிருக்கின்றோமோ என்ற அச்சம் குழந்தைப் பேற்றைத் தள்ளிப்போட்டு அவளை ஒரு சமூகசேவகியாக மாற்றி விட்டது. மீண்டும் கனடாவில் ஒரு மருத்துவராக அவளிற்கு அதிக சிரமங்கள் இருக்கவில்லை. படிப்பு, சமூகசேவை வேலை என்று சக்கரம் போல் சுழன்றவளுக்கு வருடம் ஒரு முறை ஊர் வந்து பெற்றோரையும் யசோவையும் பார்ப்பேன் என்ற உறுதி வார்த்தையோடு அழிந்து போனது. அவ்வப்போது தொலைபேசியில் அழாத குறையாக இந்த வருஷமாவது ஒருக்கா வந்து எங்களைப் பாத்துவிட்டுப் போ என்ற யசோவின் குரலைக் கேட்கும் போது ஏதோ உந்தும் பின்னர் ஏனோ நிறைவேறாமலே தள்ளியும் போகும்.


4
நடுச்சாமச் தொலைபேசியின் அழைப்பில் நித்திரை குலைய மீரா திடுக்கிட்டெழுந்தாள். நான்கு வருடங்கள் கனடாவில் கழித்த பின்னர் குடும்பமாய் ஓன்றாய் சேர மீண்டும் அவளுக்கு ஒரு சந்தர்ப்பம் வந்தது. கையில் கிடைத்ததை எடுத்துக் கொண்டு அடக்கத்திற்கு முன்பாவது தந்தையின் முகத்தை பார்த்து விடவேண்டும் என்று பிளேன் ஏறினாள். முதல் இழப்பில் அவளின் சீவன் நடுங்கியது. அது தொடர்ந்த போது விறைத்தது. அடுத்து வந்த வருடம் தாயாரின் முகத்தை கடைசியா ஒரு முறை பார்க்க ஊர் போய் வந்தாள். அக்கா யசோ துவண்டு போயிருந்தாள்.. தொடர்ந்த இழப்புக்கள் இருவரையும் உலுக்கி விட்டிருந்தது. இருந்தும் முழுமையான ஒரு வாழ்க்கையை சந்தோஷமாக வாழ்ந்து முடித்திருந்தார்கள் தமது பெற்றோர் என்று தம்மைச் சமாதானமும் செய்து கொண்டார்கள்.

பெற்றோரை அடுத்தடுத்து ஜமனுக்குக் கொடுத்த களை தீரா முன்பே நெற்றியில் பொட்டு வைத்தது போல் துப்பாக்கித் துளையோடு ரோட்டொரம் கிடந்த அத்தானின் வெறும் உடலை வீட்டிற்கு கொண்டு வந்து கொடுத்து விட்டுப் போனார்கள் என்று தொலைபேசியில் மீராவிற்குச் செய்தி வந்த போது அவள் அழவில்லை. கிளினிக்கிக்குப் போய் விட்டாள். முகுந்தன் மிரண்டான். வேலைக்கு லீவு போட்டு அவள் கிளினிக்கிற்குச் சென்று சாப்பிட வெளியே அழைத்துச் சென்றான். அவள் எதுவும் கதைக்காமல் “சரியா பசி” என்று விட்டுச் சாப்பாட்டில் கவனம் செலுத்த அவள் கைகளைத் தனது கைக்குள் அடக்கி “நான் என்ன செய்ய? என்ன வேணுமெண்டாலும் சொல்லுங்கோ நான் செய்யிறன்” என்றான் குரல் தழுதழுக்க. எப்படி முடியும்? எது சாத்தியம்? ஒன்றையும் சிந்திக்காமல் தூரப்பார்வையை எறிந்து விட்டு மீரா சொன்னாள் “யசோவும் ரிஷியும் அடுத்த மாதமே என்ர வீட்டில நிக்கவேணும்”. எப்படிச் சாத்தியமாயிற்று தெரியவில்லை அடுத்தமாசம் ரிஷியை அணைத்தபடி யசோ மீராவின் வீட்டில் கால் வைத்தாள். கலகலப்பான பழைய நாட்கள் மீட்டிப்பார்ப்பதற்கு மட்டும் சாத்தியமாயிற்று. மௌனம் நீள நாட்கள் நகர்ந்தன. யசோவின் சோகம் கேட்ட வந்த சொந்தங்கள் தாம் வாங்கி வந்த உணவைத் தாமே எடுத்துப் போட்டுச் சாப்பிட்டு காணாத பல சொந்தங்களைப் பார்ப்பதற்குக் கிடைத்த தளமாக மீரா வீட்டை மாற்றி ஊர் வம்பு அலம்பி அத்தான் சாவைப் பற்றிக் கேள்வி எழுப்பித் தாமே விடை சொல்லி விலகின. யசோ வெறுமனே வெறிப்பது மட்டும் தொடர்ந்தது. மரணம் பற்றிய மீராவின் விளக்கத்தையும் மீறி உளவியல் தாக்கத்திற்கு இருவரும் தள்ளப்படுவது அவளிற்குப் புரிந்தது. தனது குடும்பத்திற்கு என்ன நடந்தது விட்டது? ஏன் தனது குடும்பத்திற்கு மட்டும் இப்படியாக வேண்டும் என்ற கேள்வி மீராவைத் துளைக்க இழப்புகளற்று சந்தோஷிப்பவர்களைப் பார்க்கும் போது வெறுப்பு வந்தது. அவளது பொதுநலத்தொண்டிலும் “ஏன்” என்ற கேள்வி மிஞ்சி தான் சுயநலமாக மாறி வருவது போல் பட்டது அவளுக்கு. “என்ர பிள்ளைகளுக்கெண்டு நான் கையால் பிளிந்து அவித்த இடியப்பம்” என்று மாமி பெருமையுடன் கூறிச் சாப்பாட்டை எடுத்து வைக்க “ஏன் மாமி உங்கட் வீட்டில யாராவது செத்தா நான் செய்ய மாட்னே?” என்று மாமியை அதிர வைத்தாள் மீரா. மாமி விலகிக் கொண்டாள். இல்லை மீரா உறவுகளை விலக்கிக் கொண்டாள். தான், முகுந்தன், யசோ, ரிஷி என்று தனது உறவைச் சுருக்கிக் கொண்டாள். அக்காவை பழைய நிலைக்குக் கொண்டு வர வேண்டும் அவள் மாற வேண்டும் மீராவிடம் வீம்பு வந்தது.

5
யசோவின் மனம் படபடவென அடித்துக் கொண்டது. “அக்கா வீட்டில சும்மா அடைஞ்சு கிடக்காமல் ஏதாவது படியுங்கோவன்” என்ற போது தனது கோபம் அனர்த்தமானது என்று தெரிந்தும் மீரா மேல் கோபம் எழுந்தது. சரளமாக நாலு வார்த்தைகள் ஆங்கிலத்தில் கதைக்கத் தயக்கம் அவளுக்கு. தனது கணவனை இழந்து மீராவிடம் அடைக்கலம் புகுந்து விட்ட வேதனை. பணத்தை மட்டும் குறிக்கோளாக வைத்து இயங்கும் கனேடிய வாழ்க்கை ஏற்படுத்திய பீதி.

ஊரில் உள்ளவற்றையெல்லாம் விற்று ரிஷியின் படிப்பிற்கு உதவும் என்று பாங்கில் கொஞ்சம் பணம் வைத்திருந்தாள் யசோ. கனடா வந்த தொடக்கத்தில் அதில் ஒரு சிறு தொகையை மீராவிடம் கொடுத்து எங்களுக்கான செலவுக்கு என்ற போது மீரா துடித்துப் போனாள். “என்னக்கா ஏன் என்னையும் உன்னையும் பிரச்சுப் பாக்கிறாய்.. கலியாணம் கட்டினா எல்லாமே மாறீடும் எண்டு ஏனக்கா நினைக்கிறாய்” என்று அவளைக் கட்டிக் கொண்டு கதறினாள். யசோ மீராவின் பின்னால் ஒடுங்கிக் கொண்டாள்.. மீண்டும் தன்னைக் காக்கப் போவது இவள் தான் என்று நம்பினாள்.. முகுந்தனின் பெருந்தன்மை மீராவின் அரவணைப்பு இதமாக இருக்க.. ரிஷியின் படிப்பு எதிர்காலம் அதுதான் தனது வாழ்க்கை என்ற திடமான முடிவுடன் அவள் தன் வாழ்க்கையைத் தயார் படுத்தி விட்டிருந்த பின்னர் இந்த வயதில் புத்தகத்தையும் தூக்கிக் கொண்டு பள்ளிக்கூடம் செல் என்ற மீரா மேல் யசோவிற்கு சொல்ல முடியதா கோவம். இன்னுமொருநாள் மீரா “அக்கா நான் உன்னேட கொஞ்சம் கதைக்க வேணும்” என்ற படி அறைக் கதைவைப் பூட்டியபோது நெஞ்சுக் குழிக்குள் கல்லடைத்தது அவளுக்கு. எப்போதும் எதற்கும் பதட்டம். எல்லாமே தனக்கு வேண்டாததாகத்தான் இருக்கும் என்று நம்பினாள். மீரா சொல்வதைப் புரிந்து கொள்ளும் பக்குவம் அவளுக்கில்லை.. மீரா கனடா வந்து மாறி விட்டாள் என்று மனதார நம்பினாள். ஏழு வயது மகனுக்கு அம்மா. காதலித்து ஆசையாசையாய் குடும்பம் நடாத்தியவன் குற்றுயிரில் போய் விட்டான். அவனை மறந்து விட்டு இன்னொருத்தனோடு.. தமிழ் சினிமாப் பாணியில் அவள் மனதில் இருந்து டயலாக்ஸ் வந்தது. முடிந்தவரை கதைத்துப் பார்த்துச் சோர்ந்து போனாள் மீரா.

6
மீரா கற்பமானாள்.. பல நாள்கள் ஆலோசனையின் பின்னர் முகுந்தனும் மீராவும் சேர்ந்து எடுத்த முடிவு அது. படிப்பு ஒன்றுக்கும் உதவாது அனுபவம் தான் வாழ்க்கை என்று மீராவிற்கு கற்பவதி பாடம் சொன்னாள் யசோ. அக்கா கொஞ்சம் கலகலப்பாவது போல் பட்டது மீராவிற்கு. சுருங்கிய கைவிரல்களை விறைத்த படியே கோணலாகப் பிடித்து சின்ன வாயைக் குருவி போல் திறந்து சிணுங்கும் பிஞ்சுக் குழந்தை ஆஷாவை நெஞ்சோடு அணைத்துக் கொண்டாள் யசோ. ரிஷியையும் ஆஷாவையும் பாதுகாப்பதில் தனது நேரத்ததை செலவு செய்தாள். அக்காவின் மாற்றம் மீராவிற்கு மகிழ்ச்சியைத் தந்தாலும் தன்னை விட ஒரு வயது மூத்தவள். இளம் வயதில் திருமணம் செய்து குழந்தை பெற்றதாலும் அடுத்தடுத்த வாழ்வு கொடுத்த கடுமையான அடிகளினாலும் கண்களுக்குக் கீழ் கரு வளையமும்.. தொய்ந்து போன உடலுமாக இருந்தாள். இருந்தும் இன்றும் அழகாகவே தோன்றினாள். அக்காவின் வாழ்க்கை இத்துடன் முடிந்து விட்டது என்று ஏற்க மீராவால் முடியவில்லை. பெண் என்பதற்கான யசோவின் வரைவிலக்கணத்தை மீறி அவளை அடுத்த படிக்குக் எப்படி ஏற்றுவது என்று தெரியாவில்லை மீராவிற்கு. தனது முயற்சிகளை விடவும் அவள் எண்ணவில்லை.


7
எல்லாமே ஒரு நொடியில் நடந்து முடிந்து விட்டது. ரிஷி மீராவின் மடியில் தலை வைத்துப் படுத்திருந்தான். வாழ்வின் அவலங்களை அறியாத ஆஷா கண்ணயர்ந்து நித்திரையில் கனவுகளின் இனிமையின் பிடியில் சிரித்தபடி இருந்தாள். மீராவின் கை ரிஷியின் தலையை அழைந்த படி இருக்க கண்கள் தூர வெறித்து நிலைத்திருந்தது. அவள் கிளினிக் சென்று நாட்களாகி விட்டது. முகுந்தன் மீராவின் முகம் பார்க்க அஞ்சி அறைக்குள் சுருண்டு கிடந்தான். முதல் முதலாக மூடநம்பிக்கைகள் மேல் மீராவிற்கு நம்பிக்கை வரத்தொடங்கியது. “யாரோ எங்கட குடும்பத்துக்குச் சாபம் போட்டு விட்டார்க”; அவள் வாய் புலம்பியது. இறுகிப் போன கலாச்சாரம் பண்பாட்டுக்குள் புதைந்து போயிருக்கும் எம்மவர். முக்கியமாக எமது பெண்களை வெளியே கொண்டு வரவேண்டும் என்று துடிப்பவர்கள் மேல் அவளுக்கு வெறுப்பு வந்தது. எத்தனை பேரால் முடியும்? அடிமேல் அடி அடித்தால் அம்மியும் நகரும் என்பதற்கிணங்க அடித்து அடித்து.. கடைசியில் நானே கொன்று புதைத்து விட்டேனே.. அவள் மனம் விம்மியது. “விசரி உன்னையும் என்னையும் எப்ப நான் பிரிச்சுப் பாத்திருக்கிறன். நீ, நான், முகுந்தன், ரிஷி, ஆஷா எண்டு என்ர உலக வட்டத்தை உனக்காகச் சுருக்கி உன்னைச் சிரிக்க வைக்க அல்லும் பகலும் பாடுபட்ட என்ர மனதை நீ புரிஞ்சு கொள்ளாமல் போயிட்டியே” விம்மினாள். “யாருக்கு யாரடி துரோகம் செய்யிறது.. பெரிய தியாகி எண்ட நினைப்பு.” மனம் கடுகடுத்தது. பொங்கி வந்த அழுகையை அடக்கிக் கொண்டு எழுந்து சென்று அறைக் கதவைத் திறந்தாள்.. இருண்ட அறைக்குள் கண்கள் கூச படுத்திருந்த முகுந்தன் எழுந்து கட்டிலில் இருந்தான். தலை குனிந்திருந்தது. அருகில் இருந்தவள் அவன் முகம் தூக்கி, கலங்கிய கண்களை தன் நெஞ்சோடணைத்து “சாப்பிட்டு எத்தினை நாளாச்சு வாங்கோ எங்கையாவது வெளியில போய்ச் சாப்பிடுவம்.. பாவம் ரிஷி அவனுக்கு என்னையும் உங்களையும் விட்டா இனி யார் இருக்கீனம்..” முகுந்தன் விம்மினான்.. அவன் கண்ணீர் மீராவின் நெஞ்சில் விழுந்து வழிந்தது. மீரா அவனை இறுக்கிக் கொண்டாள்.

No comments: