Monday, April 18, 2005

நம்பிக்கை தும்பிக்கை

என்னுடைய நண்பனின் பிறந்தநாளை முன்னிட்டு மதிய உணவிற்குச் சென்று சாப்பாட்டின் நடுவில் பலதையும் பத்தையும் அலசி அலசி பேச்சு நம்பிக்கையில் வந்து நின்றது. தான் 7ம் நம்பர் என்றும் தனக்கு 2ம் நம்பருடன் ஒத்துப்போகும்; என்றும் ஏதோ அவன் சொன்னான். நான் மௌனமாகச் சாப்பாட்டில் மூழ்கியிருக்க என்னுடைய நம்பர் என்னென்று கேட்டான். நான் தெரியாது என்றேன். என்னை ஒரு மாதிரிப் பார்த்து விட்டுக் கூட்டுத்தொகை என்னென்று கேட்டான். நான் என்னுடைய சலாட்டில் கொஞ்சம் அவனை எடுக்கச் சொன்னேன். நான் ஏதோ பேச்சை மாற்றுகின்றேன் என்றான் மீண்டும் என் நம்பரைக் கேட்க நான் இதிலெல்லாம் எனக்கு நம்பிக்கை இல்லையென்றேன்.
அதன் பின்னர் பெரீரீரிய்ய லெக்சர் ஒன்றை அடித்தான்.
எடுத்த எடுப்பில் ஒன்றிலும் நம்பிக்கை இல்லை என்று கூறக்கூடாது ஆராய்ந்து பார்க்க வேண்டும். முதலில் நம்பிக்கை இல்லாமல் இருக்கும் ஒரு விடையமே காலப்போக்கில் எம் அனுபவத்தாலும் சில சம்பவங்களாலும் எம்மை நம்பிக்கைக்குள் தள்ளிவிடும். தன்னுடைய அனுவங்கள் தனக்கு நம்பர் பார்ப்பதில் மிகுந்த நம்பிக்கையைத் தந்திருக்கின்றது என்று சில உதாரணங்களைக் கூற முனைந்தான். "ஐயோ சாமி என்னை விட்டாக் காணும்" என்று நான் கெஞ்சினேன். உனது நம்பிக்கையை நான் மதிக்கின்றேன். அதே போல் எனது நம்பிக்கை இல்லாத நம்பிக்கைக்கு நீயும் கொஞ்சம் மதிப்புக் கொடுக்க வேணும் இப்பிடி உனது நம்பிக்கையை என்னில் திணிக்காதே என்றேன்.
அப்படியாயில் உனக்கு எதெதில் நம்பிக்கை இருக்கு என்று விட்டு

கடவுள்
சாத்திரம்
காண்டம்
மறுபிறவி
ஆவி
பேய்


இப்படி அடுக்கிக் கொண்டு போனான். எனக்கு இதில் ஒன்றிலும் நம்பிக்கை இல்லை. சொல்லப்போனால் ஒன்றிலுமே எனக்கு நம்பிக்கை இல்லை. மனிதன், இயற்கை, விஞ்ஞானம் இதைத் தவிர வேறு ஒன்றிலும் எனக்கு நம்பிக்கை இல்லை என்றேன். எனது வாழ்க்கை தவறானது என்றான். மனுசருக்கு எதிலாவது நம்பிக்கை இருக்க வேணும் என்றான். அவனது லெக்சர் எனக்குப் பசியைப் போக்கி விட்டது. கொஞ்சம் கோபமும் வந்தது. நான் கையெடுத்துக் கும்பிட்டு உன்னுடைய நம்பிக்கையை என்னில் திணிக்காதே என்று விட்டு வெளியேறிவிட்டேன்.
பின்பு கவலையாக இருந்தது. எதற்கு எனக்கு இந்தளவு கோபம் ஏதோ தன் கருத்தைச் சொல்கின்றான் சொல்லிவிட்டுப் போகட்டும் என்று விட்டு நன்றாகச் சாப்பிட்டிருக்கலாமோ என்றும் தோன்றியது.

ஒன்றிலும் நம்பிக்கை இல்லை என்ற என் கருத்துப் பல இடங்களில் பலரின் பார்வையில் என்னை ஒரு மாதிரியாகப் பார்க்க வைத்திருக்கின்றது முக்கியமாக ஒரு தமிழ் இந்துப் பெண்ணாக இருந்து கொண்டு ஒன்றிலும் நம்பிக்கை இல்லாமல்????

ஒன்றிலும் நம்பிக்கை இல்லாதவர்கள் இருக்கின்றீர்களா? நான் கட்சிக்கு ஆள் சேர்க்கின்றேன்.

11 comments:

Thangamani said...

//ஒன்றிலும் நம்பிக்கை இல்லாதவர்கள் இருக்கின்றீர்களா? நான் கட்சிக்கு ஆள் சேர்க்கின்றேன்.//

அப்படி ஒரு கட்சியிலும் நம்பிக்கை இருக்கக்கூடாதென்பதுதான் ஒன்றிலும் நம்பிக்கை இல்லாதவர்களுக்குப் பொருந்தும்.

நான் நிஜமாகச் சொல்கிறேன்.

பத்மா அர்விந்த் said...

கறுப்பி
ஜோதிடம்போன்றவற்றில் எனக்கு நம்பிக்கை இல்லை ஆனால் சக மனிதர்களிடத்திலும் என்மீதும் மிகுந்த நம்பிக்கை உண்டு.

Adaengappa !! said...

தன்நம்பிக்கை வேண்டும்...மூடநம்பிக்கை கூடாது!!

பாலு மணிமாறன் said...

நீங்கள் ஒட்டு மொத்தமாக வாழ்க்கையில் நம்பிக்கையே கூடாதென்று சொல்ல வருகிறீர்களா என்பதில் எனக்கு குழப்பமிருக்கிறது. நீங்கள் மூட நம்பிக்கைகளில் மீதுதான் நம்பிக்கையற்று இருக்கிறீர்கள் என்று நினைக்கிறேன்.

இந்த பதிவு கூட 1) யாராவது படிப்பார்கள் + பின்னூட்டமிடுவார்கள் 2) நம்பிக்கையற்றவர்களின் கட்சிக்கு ஆள் சேர்க்க முடியும் -என்ற நம்பிக்கையின் பேரில்தானே எழுந்திருக்கிறது.

" நாளைக்கு உயிரோடு இருப்போம் என்ற நம்பிக்கையில் இன்றைக்கே இட்லிக்கு மாவரைத்து வைத்து விடுபவர்கள் தமிழர்கள் " என்று எப்போதோ படித்தது ஞாபகத்திற்கு வருகிறது ... : )))

SnackDragon said...

//அதே போல் எனது நம்பிக்கை இல்லாத நம்பிக்கைக்கு நீயும் கொஞ்சம் மதிப்புக் கொடுக்க வேணும் இப்பிடி உனது நம்பிக்கையை என்னில் திணிக்காதே என்றேன்.// இதில் எல்லாம் நம்பிக்கை இல்லையாதலால் நீங்கள் உங்களை முற்போக்குவாதி என்று நம்பிக்கொண்டிருக்கிறீர்கள்; அங்கதான் பிரச்சினையே.

வெளிச்சம் said...

அம்மணி தெளிவாக அறிந்த பின்னர் அது தொடர்பாக நம்பிக்கை இல்லை என்பது சாலப் பொருந்தும். மாறாக அதைப் பற்றி அறிந்திருக்காததால் அதில் நம்பிக்கை இல்லை என்பதற்கும் வேறுபாடு உண்டு. நீங்கள் எந்த ரகத்தைச் சேர்ந்தவர்.

கறுப்பி said...

பின்னூட்டங்களுக்கு நன்றி.
தேன்துளி, முன்பெல்லாம் மனிதர்கள் மேல் நம்பிக்கை நிறையவே இருந்தது. ஆனால் காலப்போக்கில் அதுவும் கேள்விக்குறியாகி விட்டது. எல்லோருமே கதைத்துப் பழகும் போது நம்பிக்கை தருபவர்களாக இருக்கின்றார்கள். ஆனால் அவர்கள் செய்கைகள் எதிர்மாறாக உள்ளது. நானும் அப்படியா என்ற கேள்வி எனக்குள் பலமுறை வந்து வந்து போகின்றது.
எல்லாவற்றையும் நான் மூடநம்பிக்கையாகத்தான் பார்க்கின்றேன்.
கார்த்திக், நான் என்னை முற்போக்குவாதி என்று பிரகடனப்படுத்த விரும்பவில்லை. முற்போக்காக வாழ வேண்டும் என்று ஆசைப்படுகின்றேன். தம்மை முற்போக்கு என்று சொல்லும் பலர் (கறுப்பிக்கு நம்பிக்கையைத் தந்தவர்கள்) தமது தனிப்பட்ட வாழ்வு என்று வரும்போது அப்படியாக இல்லை. இது கறுப்பிக்கு மிகுந்த குழப்பத்தை உண்டு பண்ணுவதாக இருக்கின்றது.
பாலு, பதிவுகளும் பின்னூட்டங்களும் வெறும் சம்பவங்களே தவிர நம்பிக்கை என்ற தீவிரத்திற்குள் அவை அடங்கா என்பது என் கருத்து.

வெளிச்சம், எல்லாவற்றையும் தெளிவாக அறிந்தபின் என்று போட்டு விட முடியாது. கறுப்பியின் சிந்தனைக்கும் அறிவிற்கும் எட்டிய வரையில் ஒன்றிலுமே நம்பிக்கை இல்லாமல் இருக்கின்றது. ஒரு வேளை நம்பிக்கை எதிலாவது இருந்திருந்தால் வாழ்வு இலகுவாகிப் போயிருக்குமோ என்றும் எண்ணுகின்றேன். நம்பிக்கை என்பது (காதல் போல (*_*)) தானாக வரவேண்டும் வரிந்து அதனை வரவழைக்க முடியாது தானே.

தங்கமணி, கட்சி ஆரம்பிக்கும் எண்ணம் ஒன்றும் இல்லை. உங்களிடம் ஒரு கேள்வி "சம்சாரா" திரைப்படம் பார்த்தீர்களா? நேற்று நான் ஒரு வீடியோ கடை கனடாவில் கண்டு பிடித்து விட்டேன் (பல நாள்கள் தேடிக்கண்டு பிடித்தது) மாண்ட்ரீஸர் விமர்சித்த அத்தனை படங்களும் அங்கிருக்கின்றது. ஐந்து படங்கள் எடுத்து வந்துள்ளேன் ஒவ்வொன்றாகப் பார்க்க வேண்டும். "சம்சாரா" இப்போதுதான் வந்திருப்பதால் தர மறுத்துவிட்டார்கள். Spring Summer... போல் அதுவும் ஒரு படம் என்று கேள்விப்பட்டேன். ரொறொண்டோ திரைப்படவிழாவில் நான் தவறவிட்ட பார்வையாளர்களால் சிறந்த திரைப்படம் என்று தெரிவு செய்யப்பட்ட படம் பார்க்காவிட்டால் எடுத்துப் பாருங்கள்.

நம்பிக்கைதான் வாழ்க்கை ஏதோ பிறந்து விட்டோம் எம்மில் நம்பிக்கை வைத்து வாழ்ந்து முடிப்போமாகுக

தெய்வீகன் said...

கறுப்பி!

நீங்கள் சொன்ன மாதிரி எனக்கும் கடவுளில் கூட நம்பிக்கை இல்லை.அதாவது பயபக்தி என்று சொல்லுவினமே,அதில கடவுளில எனக்கு பயம் இருக்கு பக்தி சுத்தமா இல்லை.இந்த இரண்டுக்கும் பாலம் போடுவது பெரிய கஷ்டமாத்தான் கிடக்கு.

கறுப்பி said...

//கடவுளில எனக்கு பயம் இருக்கு பக்தி சுத்தமா இல்லை.\\

அருணன் கடவுளுக்குப் பயமா? ஹ ஹ ஹ

மயிலாடுதுறை சிவா said...

"ஒன்றிலும் நம்பிக்கை இல்லை என்ற என் கருத்துப் பல இடங்களில் பலரின் பார்வையில் என்னை ஒரு மாதிரியாகப் பார்க்க வைத்திருக்கின்றது முக்கியமாக ஒரு தமிழ் இந்துப் பெண்ணாக இருந்து கொண்டு ஒன்றிலும் நம்பிக்கை இல்லாமல்????"

சமூகம் ஓர் மாதிரியாக பார்க்கிறது என்று நீங்கள் எண்ண வேண்டாம். நீங்கள் தமிழ் பெண்ணாக இருப்பதுதான் முக்கியம்,
இந்து பெண்ணாக இருப்பது முக்கியம் அல்ல!!!. உங்களது பல கருத்துகளை படித்து மனதிற்குள் அசைப் போட்டு இருக்கிறேன்.
மாறுப்பட்ட கருத்துகளை நிறைய எழதுங்கள். காலம் மாற மாற சூழ்நிலைகள் மாற மாற மனிதனும் மாறுவன். இது மானுட நியதி அல்லவா?
நன்றி.
மயிலாடுதுறை சிவா...

Chandravathanaa said...

சுமதி
எனக்கும் இப்படியான விடயங்களில் நம்பிக்கை இல்லைத்தான்.
ஆனால் அந்த நண்பர் கேட்ட போது உங்கள் பிறந்ததினத்தைச் சொல்லியிருக்கலாம்.