Tuesday, April 05, 2005

இப்பிடியும் பாக்கலாம் தானே?

கறுப்பி புலிக்கு எதிரானவ, போராட்டத்துக்கு எதிரானவ, தேசியவிடுதலையில அக்கறை இல்லாதவ எண்டு சிலர் பல இடங்களில துள்ளிக் குதிக்கிறத பாத்துக்கொண்டுதான் வாறன். கறுப்பிக்கு விதம் விதமாச் சாப்பிட வேணும். அனேகமா கனடாவில இருக்கிற எல்லா நாட்டு ரெஸ்ரோறண்டுக்கும் போய் ஒரு பிடி பிடிச்சிருக்கிறன். விதம் விதமா உடுப்புப் போட விருப்பம். கனடாவில என்னென்ன சௌபாய்க்கியங்கள் எல்லாம் இருக்கோ ஒரு ரவுண்டு போய் வர விருப்பம். வாழ்க்கை வாழத்தானே. இப்பிடிச் சுயநலமா உலாவிக்கொண்டிருக்கிற கறுப்பி “பொங்கி எழு தமிழா ஈழம் எமது கையில்” எண்டு கவிதையும், கட்டுரையும் எழுதினால் யாராவது பின்னால நிண்டு ஓங்கி உதைய மாட்டீனம் எண்டு என்ன நிச்சயம்.
கறுப்பிக்கு(ம்) மனச்சாட்சி இருக்கு. அந்த வெய்யிலுக்க கல்லு, முள்ளுப் பத்தைக்க எப்ப வெடிவெடிக்கும், உடல் சிதறும், தலை விழும் எண்டு தெரியாமலும் பெத்த அம்மாவை அப்பாவைச் சகோதரங்களை இனிப் பாப்பனா எண்டும் தெரியாமல் தலைமைக்கும், கடமைக்கும், உத்தரவுகளுக்கும் தலைவணங்கித் துவக்குத் தூக்கிற எங்கட இளைஞர்களையும், யுவதிகளையும் பற்றி ஏதாவது கருத்துச் சொல்ல கறுப்பிக்கு என்ன அருகதை இருக்குச் சொல்லுங்கோ. உயிரைக் கையில பிடிச்சுக்கொண்டு கையில காசிருந்ததால பிளேன் ஏறி இப்ப பிளானா வாழுற கறுப்பிக்கு என்ன யோக்கியதை இருக்கு போராட்டதைப் பற்றிக் கதைக்க. மனச்சாட்சி உறுத்துததால அப்ப அப்ப கொஞ்சம் காசை போரால பாதிக்கப்பட்ட யாருக்காவது கொடுத்து கறுப்பி தன்ர மனச்சாட்சிக்குத் தீனி போட்டுக் கொண்டு இருக்கிறா. அப்பதான குற்றஉணர்வு இல்லாமல் படங்களுக்கும் கலைநிகழ்சிகளுக்கும் போய் வரலாம்..
ஆனால் ஒண்டு மட்டும் சொல்லுறன் பிளேன் ஏறி வந்து முற்று முழுதான லௌகீக வாழ்க்கை வாழந்து தொலைக்கிற எங்கட தேசியபற்றுக்காறரிலும் விட கறுப்பி எவ்வளவோ மேல். லௌகீகத்தில் திளைத்த படியே வீரவசனங்கள எழுதிக் குவித்தும் குரல் உயத்திக் கத்தியும் ரீல் விடுகிற ரகம் இல்லக் கறுப்பி. சுயநலம் துலைந்தால் நிச்சயம் தளத்தில நிக்க வேணும். இல்லாட்டிக் கம்மெண்டு இருக்க வேணும். நல்லாத் திண்டு கொழுத்து எல்லா டாம்பீகங்களையும் அனுபவிச்சுக் கொண்டு யாருக்குப் படம் காட்ட வீரவசனமா எழுதித் துலைக்கிறியள். பேசாமல் தளத்தில போய் அந்தப் பிள்ளைகளுக்குத் தோள் குடுங்கோவன்.
ஐயோ ஐயோ ஐயோ.. அப்ப ஆர் காசு சேக்கிற பொறுப்பை ஏற்கிறது. வெளிநாட்டு உதவிய ஆர் பெற்றுக்குடுக்கிறது எண்டு கறுப்பியக் கவிக்கப் பாக்கிறீங்களாக்கும். கறுப்பி போல எத்தினை சுயநலவாதிகள் புலம்பெயர்ந்து வாழீனம் அவையளிட்ட அந்தப் பொறுப்பைக் குடுங்கோவன் (என்ன நம்பிக்கை இல்லையே- கறுப்பி கொஞ்சம் உருவினா என்ன? கண்டுகொள்ளாதேங்கோ) ஒரு குடும்பத்தில எத்தின பேர் இருப்பீங்கள் ஒருத்தர் இஞ்ச இருந்து உதவலாம் மற்றாக்கள் தளத்தில போய் நிண்டு எங்கள ஆட்டிப்படைக்கிற ஆராஜக அரசாங்கத்தை ஒளிக்கலாமே..
அட திடீரெண்டு "ஃபரனைட் 911" திரைப்படத்தின்ர கடைசிக் காட்சி மனதில ரீலா ஓடுது. "மைக்கல் மோர்" அதுதான் அந்தப்படத்தின்ர இயக்குனர் அமெரிக்க பாராளுமன்ற உறுப்பினர்களிட்ட நேராப் போய் உங்கட பிள்ளைகள ஆமியில சேக்கிறதுக்கு விண்ணப்பத்த நிரப்பித்தாங்கோ எண்டு கேக்க அவையள் துண்டக்காணம் துணியக் காணம் எண்டெல்லோ ஓடீனம். பின்ன என்ன சேத்து வைச்ச காசில பிள்ளைகள கேம்பிறிச்சுக்கும், கார்வேட் யூனிவேர்சிட்டிக்கும் அனுப்பிப் படிப்பிச்சு டாம்பீக வாழ்க்கையை பரம்பரை பரம்பரையாகத் தொடருவீனமா? இல்லாட்ட அப்பாவிப் போராளிகளோட தங்கட பிள்ளைகளையும் விட்டு அந்தக் கொடூரத்தை தங்கட பிள்ளைகள் அனுபவிக்க வைச்சு ஐயோ பெத்த மனசு பத்தியெல்லே எரியுது.. அவையின்ர பிள்ளைகள மட்டும்தான் தாய் பெத்ததாம் அப்பாவி போராளிகளைப் பெத்தது உணர்வற்ற இயந்திரமாம். (புஸ்சின்ர பெட்டைகளைப் பாத்தாலே தெரியுதே)
எப்ப புலம்பெயர்ந்தியளோ அப்பவே பேசாமல் கம்மெண்டு இருந்திட்டால் நல்லது. உண்மையிலையே உணர்சியால கொந்தளிச்சா வீட்டில ஒருத்தரை மட்டும் உதவிக்கு எண்டு இஞ்ச விட்டிட்டு மற்றாக்கள் தளத்துக்குப் போறது மேல். அதவிட்டிட்டு எத்தின மணித்தியாளங்களை புளொக்கிள விரையம் செய்யிறியள் அங்கை எங்கட பிள்ளைகள் செத்து மடியுதுகள். இந்த காதிலபூச்சுத்துற வேலைய விட்டிட்டு ரீல் விடுறாக்கள் உங்கட சொத்துப் பத்தை வித்திட்டு சொந்தங்களோட போய் தளத்தில இறங்கினால் எப்பவோ ஈழம் கிடைச்சிருக்கும். சத்தியமாச் சொல்லுறன். யாரோ ரெத்தம் சிந்தி, உடல் சிதற, உயிர் இழந்து, எடுத்த ஈழத்தை லௌகீக வாழ்க்கை வாழ்ற மானம் கெட்டு பிளேன் ஏறி வந்த கறுப்பி ஒருநாளும் சொந்தம் கொண்டாட மாட்டாள். அந்த எங்கட மாங்கொட்டைத் தீவில இருந்து கிடைக்கிற குட்டி ஈழம் ரெத்தம் சிந்தின அந்த அப்பாவிகளுக்கு மட்டும் தான் சொந்தம்.

இவ என்னைத்தான் சொல்லுறா எண்டு தலையச் சொறியாதேங்கோ. தொப்பி அளவா இருந்தா ஆரும் போட்டுக் கொள்ளலாம்

19 comments:

எல்லாளன் said...

கறுப்பி!
ஒராள் இங்க இருங்கோ மற்றாக்கள் தளத்துக்கு போங்கோ என்பது எனக்கு பொருத்தமாய் இருக்கிறது. ஆனால் நீங்கள் சொல்லுவதுபோல் குடும்பத்தில் ஒருவர் இங்கு இருக்க மிகுதியானோர் ஊருக்குப்போனால் காசு சேர்ப்பது யாரிடம்? அப்படிச் சேர்த்தாலும் எவ்வளவு பணம் சேர்ப்பீர்கள்? சர்வதேச அளவில் சுனாமிக்குப் பின்தானே தமிழன் பலம் தெரியவந்தது. ஈழப்பிரச்சனை என்பது வெறுமனே இலங்கையில் சிங்களவருடன் மோதல் மட்டுமல்ல சர்வதேசத்திற்கும் எங்கள் நிலை குறித்து அறிவிப்பதும் தான். இதை அங்கிருந்தபடி யாரும் செய்துவிட முடியாது. சுனாமி காலத்தில் இங்குள்ள புலம்பெயர்ந்தோர் செய்த காரியங்களை அங்கிருந்து யாராலும் செய்திருக்க முடியுமா?.

அதைவிட வெளிநாடுகளுக்கு வந்தபடியினால் நீங்கள் "கம்மெண்டு" இருங்கள் என்பது, வீட்டில் இருக்கு மட்டும் வீட்டைக் குறித்து அக்கறையாக இரு வெளியூர் சென்றுவிட்டாயா வீட்டைப்பற்றிக் கவலைப்படாமல் "கம்மெண்டு" இரு என்பதைப்போல இருக்கிறது. சில விடயங்கள் எங்களுடன் இருக்கிறபோது அதன் அருமை எங்களுக்குத் தெரிவதில்லை. தூரச்செல்லும் போதுதான் அதன் தார்ப்பரியம் எமக்குப் புரியும். அதுதான் இங்குள்ளவர்கள் இவ்வளவு உக்கிரமாக இருக்கிறார்கள்.

லக்சறி வாழ்க்கை வாழ்ந்து கொண்டு என்ன போராட்டத்தைப் பற்றிப் பேச்சு என்கிறீர்கள், நீங்கள் பாதிக்கப்பட்டோருக்குப் பணம் கொடுத்து மனச்சாட்சிக்கு தீனி போடுகிறீர்கள். இவர்கள் நீங்கள் சொல்வதுபோல் வீரவசனம் எழுதுகிறார்கள் போராட்டம் பற்றி எழுதுகிறார்கள் பேசுகிறார்கள் அது அவர்கள் மனசாட்சிக்குத் தீனியாக இருக்கலாம் அல்லவா!.

9/11பரனைட்டுக்கும் இதற்கும் என்ன சம்பந்தம்? பரனைட் விவரணப் படம் அமெரிக்காவில் இருந்து எங்கோ ஒரு நாட்டுக்கு தங்கள் இராணுவத்தினை அனுப்புவது குறித்த சர்ச்சை. எங்களுடையது, போராடிக்கொண்டு இருக்கிறவர்களுக்காக இங்குள்ள நாங்கள் கொடுக்கும் ஆதரவு. அதையும் இதையும் ஒப்பிடுவது தவறு, முட்டாள்த்தனமும் கூட!

அதைவிட இதற்காக எத்தனை மணித்தியாலம் புளொக்கில நேரத்தை விரயம் செய்கிறீர்கள் என்று எழுதுகிறீர்கள் ஆனால் பிரபாகரனுக்கு எதிரானவர்கள் அதாவது சிறிரங்கன் எழுதிய ஒரு ஆக்கத்திற்கு (அவர் எழுதுவதெல்லாம் புலிக்கு எதிரானதுதானே) பாராட்டுத் தெரிவித்து இருந்தீர்களே? நீங்களும் "கம்மெண்டு" இருந்திருக்கலாம் தானே!. எதற்காக வாழ்த்தினீர்கள்? அதை என்னால் நிரூபிக்க முடியாது ஆனால் உங்களுக்குத் தெரியும். (சிறிரங்கனும் ஈழமதியும் இப்போ தமிழ்மணத்தில் இருந்து தூக்கப்பட்டு விட்டார்கள் போல் இருக்கிறது. அவர்கள் புலிகளை எதிர்த்து மட்டுமே ஆக்கங்கள் எழுதியது காரணமாக இருக்கலாம் என்பது என் ஊகம்)

போராட்டத்தை எதிர்ப்பவர்கள் கையாளுகிற யுக்தியைத்தான் நீங்களும் கையாளுகிறீர்கள். அதாவது "போராடுபவர்கள் தலைமைக்கும் உத்தரவுகளுக்கும் தலைவணங்கி துவக்குத் து}க்கி" என்று நீங்கள் எழுதியுள்ளீர்கள்

அப்படியெனில் தலைமைக்கும் உத்தரவுக்கும் என்று இன்னொரு பகுதி இருக்கிறது. அதாவது பிரபாகரன் தன்னுடைய நோக்கத்திற்காக இவர்களைப் பயன்படுத்துகிறார் என்பது. (இப்படித்தான் புலியை எதிர்ப்பவர்கள் மக்களிடம் நன்மதிப்பைப் பெற எழுதுவார்கள்).

நீங்கள் புலி எதிர்ப்பாளர் என்பதை நான் உங்கள் பின்னூட்டம் மூலம்தான் அறிந்தேன். ஆனால் அதில்ப் பிரச்சனை இல்லை! அது உங்கள் சுதந்திரம். ஆனால் அதற்காக

'சத்தியமாச் சொல்லுறன். யாரோ ரெத்தம் சிந்தி, உடல் சிதற, உயிர் இழந்து, எடுத்த ஈழத்தை லௌகீக வாழ்க்கை வாழ்ற மானம் கெட்டு பிளேன் ஏறி வந்த கறுப்பி ஒரு நாளும் சொந்தம் கொண்டாட மாட்டாள். அந்த எங்கட மாங்கொட்டைத் தீவில இருந்து கிடைக்கிற குட்டி ஈழம் ரெத்தம் சிந்தின அந்த அப்பாவிகளுக்கு மட்டும் தான் சொந்தம்". இப்பிடி எழுதி ஏதோ நல்லபேர் சம்பாதிக்க நினைக்காதீர்கள். அது உங்கள் மனசாட்சிக்குத் தீனி போடாது. உங்களுக்குப் போடுதோ தெரியாது!???

கறுப்பி said...

எல்லாளன் நீண்ட பின்னூட்டம். வாசித்தேன்.
நான் எழுதியதன் அர்த்தத்தை நீங்கள் உண்மையிலேயே புரியவில்லையா இல்லாவிட்டால் பாவனை பண்ணுகின்றீர்களா? நான் குடும்பத்துடன் போகலாமே என்று கூறியது "சவுண்டு" விடுறவர்களை மட்டும்தான். அமைதியான எமது நாட்டிற்கும் போராட்டத்திற்கும் பல உதவிகளைச் செய்து கொண்டு தமக்கென்றொரு வாழ்க்கை இங்கே அமைத்திருப்பவர்களை அல்ல. (இப்படியானவர்கள் தான் கனடாவில் அதிகம்)
பரணைட் 911 ஐ ஏன் உதாரணத்திற்கு எடுத்தேன் என்று கேட்டிருந்தீர்கள். நான் நினைக்கின்றேன் "சவுண்டு" விடுகின்றவர்கள் ஒருவரும் தமது குழந்தைகளை அனுப்பமாட்டார்கள் என்பதைக் கூறுவதற்குத்தான். இதற்காக அந்தத் திரைப்படத்திற்கும் எமது போராட்டதிற்கும் சாயல் இருக்க வேண்டும் என்று அவசியம் இல்லை.
மேலும் ப.வி. சிறீரங்கன் நல்ல எழுத்தாளர், நல்ல ஆய்வாளர் அவருக்கு பின்னூட்டம் இட்டதை நான் மறுத்தேனா? மறுத்தது மாதிரி தாங்கள் உறுதிப்படுத்த முனைகின்றீர்களே. ஜனநாயகம் என்பது மக்களின் தனிப்பட்ட சுதந்திரம். அதை மறுக்கும் எந்த ஒரு இடமும் எனக்கும் தேவையில்லை. அதென்ன "தூக்கி" விட்டார்கள் என்று மிகவும் கொச்சையாக எழுதியிருக்கின்றீர்கள். தூக்குவது என்பதன் பொருள் நிச்சயம் தங்களுக்குத் தெரிந்திருக்கும் என்றே நம்புகின்றேன்.

சுனாமியில் மக்களின் முக்கியமாக தமிழ் மக்களின் பங்களிப்பு என்ன என்பது எனக்கும் தெரியும். அதை மக்களுக்கு போய்ச் சேர்ந்தது எவ்வளவு என்பதும் எனக்குத் தெரியும்.
எமது நாட்டில் போராடும் போராளிகளைக் கொச்சைப்படுத்துவது எனது நோக்கமல்ல. லௌகீக வாழ்வில் திளைத்த படியே போராட்டத்தையும் அதன் அழிவுகளையும் உபயோகித்துத் தமக்குச் சொத்துச் சேர்ப்பவர்களைத் தான் நான் விமர்சித்தேன்.

நல்ல பெயர் எடுக்க வேண்டும் என்பது கறுப்பியின் எண்ணமாக இருந்தால். இந்தத் தலைப்பில் கை வைத்திருப்பேனா? சிறிது யோசியுங்கள்.

மதி கந்தசாமி (Mathy Kandasamy) said...

இந்தப் பதிவு குறித்து கருத்துக் கூறும் மறுமொழி அல்ல.

எல்லாளனோ, சுமதி ரூபனோ, இந்தப் பதிவைப் படிப்பவர்களோ தவறாக நினைத்து அதைப் பரப்பக்கூடாது என்ற எண்ணத்துடன் எழுதும் மறுமொழி.

//சிறிரங்கனும் ஈழமதியும் இப்போ தமிழ்மணத்தில் இருந்து தூக்கப்பட்டு விட்டார்கள் போல் இருக்கிறது. அவர்கள் புலிகளை எதிர்த்து மட்டுமே ஆக்கங்கள் எழுதியது காரணமாக இருக்கலாம் என்பது என் ஊகம்)//

மேலே குறிப்பிட்டிருக்கும் ப.வி.ஸ்ரீரங்கன் & ஈழமதி இவர்களுடைய பதிவுகள் தமிழ்மணத்தில் இருக்கின்றன.

ப.வி.ஸ்ரீரங்கன் :
http://www.thamizmanam.com/tamilblogs/iframe_print.php?sort=author&filter=170&t=20050405204302

கனவு:
http://www.thamizmanam.com/tamilblogs/iframe_print.php?sort=author&filter=149&t=20050405204040

ஈழமதி:
http://www.thamizmanam.com/tamilblogs/iframe_print.php?sort=author&filter=136&t=20050405204040

=====

தமிழ்மணத்தினைப் பற்றித் தெரிந்துகொள்ள:
http://www.thamizmanam.com/phpBB2/index.php

இதைப்பற்றி மேலும் பேசவேண்டுமானால் தமிழ்மணம் 'மன்றத்தில்' கேளுங்கள் - http://www.thamizmanam.com/phpBB2/index.php

வன்னியன் said...

எல்லாளன்!
ஸ்ரீரங்கனின் பதிவுகள் தூக்கப்படவில்லை. அவரே முன்வந்து ஈழம் பற்றிய தனது பதிவுகளை அழத்துவிடுவதாகவும் இனி எழுதப்போவதில்லை எனவும் சொன்னார். அதன்படியே சிலவற்றை அழித்தும் விட்டார். இப்போதும் கவிதைகள் எழுதிக்கொண்டுதான் இருக்கிறார். மேலும் விடுதலைப்புலிகளை எதிர்த்து எழுதுவதற்காக தமிழ்மணத்திலிருந்து யாரையும் நிப்பாட்டும் அளவில் இல்லை. (அவர்களை மட்டும் விமர்சித்தாலும் கூட).
கறுப்பி!
நீங்கள் புலிகளுக்கு எதிரானவரோ ஆதரவானவரோ என்பது பிரச்சினையில்லை. புலிக்கு எதிரானவ, போராட்டத்துக்கு எதிரானவ, தேசியவிடுதலையில அக்கறை இல்லாதவ எண்ட காரணத்தைக் காட்டி
உங்களுக்கு எதிராக எழுதியதைக் காட்ட முடியுமா? ஈழத்துப்பாடல்களைத் தடைசெய்ய வேண்டுமென்று நீங்கள் சொன்னபோது கூட அது மற்றைய விசயங்களுக்கும் பொருந்தும் என்பதோடு இது அளவுக்கு மீறிய பயம் என்பதையும் சுட்டிக்காட்டித்தான் நான் எழுதினேன்.

சரி அதை விடுவோம்.
வெளியில் வந்தவர்களுக்கு போராட்டத்தை ஆதரித்து எழுதவோ பேசவோ அருகதையில்லையென நீங்கள் கூறுவதை நான் ஏற்றுக்கொள்ளமாட்டேன். (நீங்கள் கூறும் வகைக்குள் நான் அடங்கவில்லையென்றாலும்) அவரகளில் பலர் வெளிவேசம் போடுகிறார்கள் என்பதில் உண்மை இருக்கிறதை வன்னியிலும் அறிந்துதான் வைத்திருக்கிறார்கள். மேலும் உங்கட பதிவில் போராட்டத்துக்கு ஆதரவாக் கதைக்காததால நீங்கள் தூற்றப்படுகிறீர்கள் என்ற தொனி இருக்கு. இதில நீங்கள் நேரடியா பேரச் சொல்லிறதுகூட பிரச்சினையில்லை. ஏனெண்டா நீங்கள் சொல்லிறபடி பொளக்கில நேரம் சிலவழிக்கிறது ஒரு கைவிரலுக்குள்ள எண்ணக்கூடிய ஆக்கள்தான்.

இன்னொரு விசயம், ஸ்ரீரங்கன் இவ்வளவு எழுதியும்கூட நான் நேரடியா அவர ஒருபோதும் எதிர்கொள்ளவேயில்ல. ஆனா நீங்கள் கதைச்சபோது உங்கள எதிர்கொண்டிருக்கிறன். ஏனெண்டா ரெண்டுபேரயும் நான் ஒண்டாப் பாக்கேல.

சயந்தன் said...

சிறீரங்கன் தனது கருத்துக்களை The Point என்ற என்ற பெயரிலும் மாற்றுக்கருத்துக்களுக்கான தொகுப்புக்களை (உதாரணமாக தேனீ போன்ற இணையத்தளங்களிலிருந்து பெற்றவற்றை) இட்டு திறந்த விவாதம் ஒன்றை ஏற்படுத்த பனை மற்றும் தமிழ்வாழ்வு என்ற இருவேறு பெயர்களில் பதிந்து வந்தார். ஈழநாதனுடைய வலைப்பதிவில் நடந்த ஒரு குறித்த விவாதத்தின் பின்னர் தன்னிலை விளக்கம் ஒன்றினை அளித்து விட்டு ஈழம் தொடர்பான அனைத்து பதிவுகளையும் நீக்கப் போவதாக கூறியிருந்தார். கூறியது போலவே தமிழ்வாழ்வு மற்றும் பனை ஆகிய இரண்டு வலைப்பதிவகளையும் நீக்கியிருக்கிறார். இவை தொடர்பாய் அவரது கருத்துக்கள் ஈழநாதனின் வலைப்பதிவில் சுவாரசியமான பின்னூட்டங்கள் பதிவில் இருக்கின்றன. தனது The Point தளத்திலும் இது பற்றி எழுதியிருக்கிறார்.

சயந்தன் said...

வெளிநாடுகளில் முழுக்க முழுக்க தமது புகழ்நோக்கம் கருதி ஈழ போராட்டத்தை கைகொள்பவர்களை அறிந்திருக்கிறேன். பார்த்திருக்கிறேன். அது பற்றி எனது பழைய வலைப்பதிவில் எழுதிய பதிவொன்று இந்த இணைப்பில்..

http://sajee.yarl.net/archives/002309.php

மற்றவர்களுக்கு எப்படியோ தெரியாது! யுத்தத்தை தொடங்கு! தமிழீழத்தை வாங்கு என்று இங்கிருந்து நான் சொல்லவும் எழுதவும் முயல்வதில்லை. யுத்தத்தின் கோரத்தினாலும் அதன் விளைவுகளை அனுபவிக்க போகிறவர்களில் நானில்லை என்பதனாலும் எழுகின்ற குற்ற உணர்ச்சியே அதற்கு காரணம்.

கறுப்பி said...

அனைவருக்கும் நன்றி. ஒன்றை மட்டும் எல்லோரும் புரிந்து கொள்ள வேண்டும். தனிமனித சுதந்திரம் எல்லோருக்கும் உள்ளது. எந்த ஒரு மகானையும் ஒருவர் கேள்வி கேட்க முடியும். கிட்லரை ஆதரித்தவர்கள்கூட பலர் உள்ளார்கள். இவையெல்லாம் அவரவர் கொள்ளை கருத்துச் சுதந்திரம். ஒரு கொள்ளையை தனிமனிதன் மேல் திணிக்க முடியாது. இந்த விடையத்தில் ஈழப்போராட்டமும் அதன் கொள்கையும் ஜனநாயகமாக நடந்து கொள்ளவில்லை என்பது எனது கருத்து. நான் 83 இலேயே ஊரை விட்டு வெளிக்கிட்டு விட்டேன். எனவே ஊரில் நடப்பவற்றை நான் விமர்சிக்க முடியாது. ஆனால் போராட்டத்தின் பிரதிநிதியான புலம்பெயர்ந்து இயங்கிக் கொண்டிருப்பவர்கள் தவறான நடக்கும் போது தலமைமேல் கேள்வி எழுவது தவிர்க்க முடியாதது.
சிறீரங்கன் தனது கருத்தைச் சொன்னார். புளொக்கில் டோண்டு வெங்கட் ரோசாவசந்த் என்று பலர் பலவிதமாக விடையங்களை எடுத்து விவாதிக்கின்றார்கள். ஏன் ஈழப்போரைப்பற்றிய விடையம் என்றால் மட்டும் பலர் உணர்ச்சி வசப்பட்டுக் கோவித்துக் கொள்கின்றார்கள். ஒருவரின் கருத்தை ஆராய்ந்து ஆரோக்கியமாக விவாதிப்பதுதானே ஒரு நல்ல மனிதனுக்கு அழகு. அதை விடுத்து ஈழப்போராட்;டத்தைப் பற்றி விமர்சனம் செய்தால் தூக்கி விடுவார்கள் என்று பயம் காட்டுவது. என்ன நியாயம். என்ன ஜனநாயகம். அப்படிக் கூறும் போது இன்னும் கேள்வி எழுமே தவிர வேறு ஒன்றும் நடக்கப் போவதில்லை.

வன்னியன், சயந்தன், மதி, எல்லாளன் அனைவருக்கும் நன்றி. இது போர் களமல்ல. காத்திரமாக விடையங்களையும் கலகலப்பான விடையங்களையும் விவாதித்து பகிர்ந்து கொள்ளும் தளமாகவே நான் பார்க்கின்றேன். முகம் தெரியாத தூரத்தேசத்து மக்கள் நாங்கள். புளொக் நண்பர்களாக இருக்க வேண்டுமே தவிர இங்கும் சோடி கட்டிப் ஒருவரை ஒருவர் தாக்குவது போல் நடக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்றே விரும்புகின்றேன்.

கறுப்பி said...

அனைவருக்கும் நன்றி. ஒன்றை மட்டும் எல்லோரும் புரிந்து கொள்ள வேண்டும். தனிமனித சுதந்திரம் எல்லோருக்கும் உள்ளது. எந்த ஒரு மகானையும் ஒருவர் கேள்வி கேட்க முடியும். கிட்லரை ஆதரித்தவர்கள்கூட பலர் உள்ளார்கள். இவையெல்லாம் அவரவர் கொள்ளை கருத்துச் சுதந்திரம். ஒரு கொள்ளையை தனிமனிதன் மேல் திணிக்க முடியாது. இந்த விடையத்தில் ஈழப்போராட்டமும் அதன் கொள்கையும் ஜனநாயகமாக நடந்து கொள்ளவில்லை என்பது எனது கருத்து. நான் 83 இலேயே ஊரை விட்டு வெளிக்கிட்டு விட்டேன். எனவே ஊரில் நடப்பவற்றை நான் விமர்சிக்க முடியாது. ஆனால் போராட்டத்தின் பிரதிநிதியான புலம்பெயர்ந்து இயங்கிக் கொண்டிருப்பவர்கள் தவறான நடக்கும் போது தலமைமேல் கேள்வி எழுவது தவிர்க்க முடியாதது.
சிறீரங்கன் தனது கருத்தைச் சொன்னார். புளொக்கில் டோண்டு வெங்கட் ரோசாவசந்த் என்று பலர் பலவிதமாக விடையங்களை எடுத்து விவாதிக்கின்றார்கள். ஏன் ஈழப்போரைப்பற்றிய விடையம் என்றால் மட்டும் பலர் உணர்ச்சி வசப்பட்டுக் கோவித்துக் கொள்கின்றார்கள். ஒருவரின் கருத்தை ஆராய்ந்து ஆரோக்கியமாக விவாதிப்பதுதானே ஒரு நல்ல மனிதனுக்கு அழகு. அதை விடுத்து ஈழப்போராட்;டத்தைப் பற்றி விமர்சனம் செய்தால் தூக்கி விடுவார்கள் என்று பயம் காட்டுவது. என்ன நியாயம். என்ன ஜனநாயகம். அப்படிக் கூறும் போது இன்னும் கேள்வி எழுமே தவிர வேறு ஒன்றும் நடக்கப் போவதில்லை.

வன்னியன், சயந்தன், மதி, எல்லாளன் அனைவருக்கும் நன்றி. இது போர் களமல்ல. காத்திரமாக விடையங்களையும் கலகலப்பான விடையங்களையும் விவாதித்து பகிர்ந்து கொள்ளும் தளமாகவே நான் பார்க்கின்றேன். முகம் தெரியாத தூரத்தேசத்து மக்கள் நாங்கள். புளொக் நண்பர்களாக இருக்க வேண்டுமே தவிர இங்கும் சோடி கட்டிப் ஒருவரை ஒருவர் தாக்குவது போல் நடக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்றே விரும்புகின்றேன்.

வன்னியன் said...

நன்றி கறுப்பி.

சயந்தன் said...

//கிட்லரை ஆதரித்தவர்கள்கூட பலர் உள்ளார்கள்//

ஹி ஹி ஹி.. இஸ்ரேலை ஆதரிப்பவர்களும் இருக்கிறார்கள்!!

கறுப்பி said...

சயந்தன் சும்மா இருங்கோ பாப்பம்..

அதுசரி என்ன யூசேஸ் நேம்ஐயும் பாஸ்வேட்டையும் உங்களிட்ட தந்தால் என்னைத் தனிப்பட்ட முறையில தாக்கிற ஆக்களின்ர பின்னூட்டங்க அப்பப்ப பாத்து அழிச்சு விடுவீங்களே.. எனக்கு நேரமில்லாமல் இருக்கு..

சயந்தன் said...

அதுக்கென்ன?
ஆனால்.. உங்கடை கடந்த ஒரு பதிவில 4 பின்னூட்டம் அழிக்கப்பட்டிருக்கு! நான் தான் பிந்திட்டன் பாக்கிறதுக்கு. ச்சே.. miss பண்ணிட்டன். விடுப்பு பாக்கலாம் எண்டால் விடமாட்டியளாம்..

கறுப்பி said...

//விடுப்பு பாக்கலாம் எண்டால் விடமாட்டியளாம்.. \\
அட என்னத்தைப் புதுசா எழுதப் போறா. இது தான் matter. நான் எழுதுறது எல்லாம் தரமற்றதாம் தான் எழுதுறதுதானாம் நல்லதாம். இதையே எத்தின வருஷமாப் புலம்பப்போகிறாவோ தெரியேலை.

எல்லாளன் said...

நீங்கள் சொல்லும் மாதிரியானோர்களை இன்னும் சந்திக்கவில்லை. அதற்கு நான் குறிப்பிட்ட ஒரு 'பொறுப்பாளருடன்' மட்டும் வைத்திருக்கும் தொடர்பு காரணமாகி இருக்கலாம்.

"தூக்கப்பட்டு விட்டார்கள்" இதனை நீங்கள் சினிமா அர்த்த்தில் பார்க்கிறீர்கள். நான் இணையத்தில் இடுதல் / தூக்குதல் என்று பார்த்தேன்.

கறுப்பி said...

எல்லாளன் பின்னூட்டத்திற்கு நன்றி “தூக்குவது” என்பது தமிழ் சினிமாவில் மட்டும் பாவிக்கும் பதம் அல்ல.

நற்கீரன் said...

"கறுப்பி" அவர்களே, உங்களுடைய பார்வையை மிகவும் தருக்க ரீதியாக தந்திருக்கின்றீர்கள், யாரும் உங்களை சாட்ட முடியாத படி. "சவுண்டு" விடுபவர்களுக்கு சாட்டை அடி.

சில ஈழதமிழர்களின் சினிமா தமிழ் தேசியம். கவிதைகளின் கரு, சிந்தனைகுரிய ஒரு பொருள், செயல்பாடுகளின் தளம். அண்மையில் ஒருவர் கூறியிருந்தார், தமிழ் தேசியமே தமிழர்களை ஒருங்கிணைக்கும் பாலம் என்று. எல்லோருக்கும் ஈழம் மேல் எதோ ஒன்று.

ஈழம் இரத்தம் சிந்தின அப்பாவிகளுக்காகவா, அல்லது இங்கிருந்துகொண்டு "ரூர்" விடுற பிரமுகர்களுகோ, அல்லது அங்கிருந்தே அதிகாரம் செய்கிறவர்கக்ளுகோ என்று இன்னும் தீர்மானம் செய்யப்படவில்லை. ஆனால், கட்டப்படும் கோட்டைகளும், கோட்டல்களூம், கொட்டில்களை பார்க்க எண்ணிக்கையில் அதிகம் போல இருக்கின்றது.

கறுப்பி said...

நன்றி நக்கீரன்
ஈழம் என்று ஒன்று கிடைத்தல் இப்போது குரல் கொடுப்பவர்களில் எத்தனை பேர் அங்கு போவார்களோ தெரியாது. புலம்பெயர்ந்த நாடுகளில் சொகுசாக வாழ்ந்தவர்களுக்கு ஈழத்தின் வெக்கைகூடத் தாங்க முடியாமல்தான் இருக்கும். அப்படிப் போபவர்களும் தமது சொத்துக்களைக் கொண்டு போய் அங்கே "பவர்" காட்டுவதில் முனைவார்களே தவிர நாட்டிற்கென்று பெரிதாய் ஏதும் செய்வார்கள் என்ற நம்பிக்கை எனக்கு இல்லை. அன்றும், இன்றும், என்றும், அல்லல் படப்போவது பாதிக்கப்பட்டு சொந்தங்களை இழந்து அல்லல் பட்டுக்கொண்டிருக்கும் அந்த அப்பாவி மக்களே.

kumar_nadesalingam said...
This comment has been removed by a blog administrator.
kumar_nadesalingam said...

You are right. That keeping quit. We get an angry on you, when you insult the war. That is wrong.