Thursday, March 24, 2005

குடும்பம் ஒரு கரடகம் -1

அடக்குமுறைக்குள் பெண்கள் தமது தனித்தன்மையை இழந்து அடிபட்டுப் போகாமல் சுதந்திரமாக வாழ பல வழிகள் இருப்பதாகப் பலர் (எம்மவர்கள் - அதாவது இறுக்கமான கலாச்சாரத்திற்குள்ளிருந்து வந்தவர்கள்) சொல்லிச் செல்கின்றார்கள். குடும்ப அமைப்பு சீராக இருக்கப் புரிந்துணர்வு, விட்டுக் கொடுத்தல் தேவை என்றும் வழி முறைகளையும் சொல்லிச் செல்கின்றார்கள்.
நான் பார்த்தவை, படித்தவை, கேட்டவை என்பவற்றிலிருந்து என் சில கருத்துக்களை இங்கே சொல்ல விரும்பிகின்றேன். (இந்த சமாளிபிகேஷன் விளையாட்டு எனக்குப் பிடிக்காது. ஒப்பீட்டளவில் பாதிக்கப்படும் வீதத்திலிருந்துதான் நாம் கருத்துக்களைச் சொல்ல வேண்டும். எங்கோ ஒரு பெண் ஆணை அடக்குகிறாள் என்று விட்டு அந்த ஆணுக்கு வக்காளத்து வாங்கத் தேவையில்லை)
பெண்கள் சுதந்திரமாக வாழப் பல வழிகள் இருக்கின்றன என்று விட்டு பெண்கள் தனியாக வாழலாம் என்று ஒரு கருத்து வைக்கப்பட்டது. –
இதைச் சற்று ஆராய்ந்து பார்த்தால் - நான் கண்டது. ஒன்று காதல் தோல்வி (காதலித்தவள் என்பதால் திருமணங்கள் பொருந்தி வராமை - இந்த நிலை ஊரில்தான் இருக்கின்றது. தற்போதைய நிலமை தெரியவில்லை முன்பு இருந்தது) வரதட்சணையின்னை (வறுமை) அடுத்து தமது அந்தஸ்த்திற்கு ஏற்ற மாப்பிள்ளை கிடைக்கவில்லை என்று திருமணப்பேச்சை இழுத்தடித்து பெண்ணிற்கு வயது ஏறிப்போய் திருமணமாகாமல் இருந்தல் போன்ற காரணங்களால் பல பெண்கள் தனித்து விடப்பட்டுள்ளார்கள். இது இவர்கள் தாம் தனித்து வாழ வேண்டும் என்று எடுத்துக் கொண்ட முடிவல்ல. எனது சமூகத்தின் சீரழிவால் ஏற்பட்ட நிலமை.
இப்படிப்பட்ட பல பெண்களை எனக்குத் தெரியும். என் கேள்வி இவர்களது பாலியல் தேவைகள் எப்படி எமது சமூகம் பார்க்கின்றது. திருமணம் ஆகாதவர்கள் எனவே இவர்களுக்கு அந்தத் தேவையில்லை என்பதுதான் எனது சமூகப்பார்வையாக உள்ளது. தவறி இவர்கள் யாருடனாவது உறவுகொள்ள நேடிட்டு அது வெளியே தெரியவரும் பட்சத்தில் அவர்கள் ஒதுக்கப்படுகின்றார்கள். இப்படி ஒரு பெண்ணிற்கு ஏற்பட்டு அவர் பின்னர் மனப்பிறழ்விற்கு ஆளான கதை உள்ளது.
திருமணமாகிப் பின்னர் ஒத்துவராததால் பிரிந்த பெண்களை எடுத்துப் பார்ப்போம். கனடாவில் இப்படிப் பல பெண்கள் எனக்குத் தெரிந்து இருக்கின்றார்கள். சிலர் மீண்டும் காதலித்துத் திருமணம் செய்து கொண்டுள்ளார்கள். சிலர் பல ஆண்டுகளாகத் தனியே இருக்கின்றார்கள். எனக்குத் தெரிந்த ஒரு பெண்ணின் கதையை இங்கே தருகின்றேன். திருமணமாகி ஒரு குழந்தை கணவனைப் பிரிந்து பல ஆண்டுகளாகத் தனியே வாழ்கின்றாள். (அவளுக்குப் பல ஆண்களுடன் தொடர்பு இருப்பது எனக்குத் தெரியும்). ஒருநாள் தனியே இருக்கும் பெண்கள் பற்றிய கலந்துரையாடல் ஒன்றில் அந்தப் பெண் பேசுகையில் தனக்கு ஆண் துணை தேவையில்லை, எனது குழந்தையை நானே வளர்ப்பேன் என்று மிகவும் திடமாகக் கூறினார். சந்தோஷமாக இருந்தது. ஆனால் ஒருவர் எழுப்பிய கேள்வி தாங்கள் இன்னும் இளமையாகத்தான் இருக்கின்றீர்கள் தங்களுக்கென்று ஒரு துணை வேண்டுமென்ற எண்ணம் எழவில்லையா? அந்தப் பெண் கூறினார் நான் கலைக்காக எனது வாழ்வை அர்பணித்து விட்டேன் அது போன்ற எண்ணங்கள் எனக்கு வருவதில்லை என்று. இந்தப் பதில் எனக்கு மிகவும் அதிர்ச்சியாக இருந்தது. இவர் தனித்து இருக்கும் பெண்களுக்கு என்ன கூற வருகின்றார்? ஒரு பெண் தனது பாலியல் தேவையைப் பூர்த்தி செய்வது தவறு என்பது போன்ற அவர் கருத்து. மிகவும் வேசமாகவும் தன்னை மற்றவர்கள் மத்தியில் மிகவும் தூய்மை?? என்பது போலும் போலியாக அவர் கூறிய கருத்து? இதைத் தான் எமது சமூகம் உருவாக்கி விட்டிருக்கின்றது. துணிந்து ஒரு பெண் தனது கருத்தைக் கூறின் அவர் முத்திரை குத்தப்படுவாள். புறக்கணிக்கப்படுவாள். எனவே வேசம் போடு என்று மிகவும் அழகாகப் பெண்களுக்குக் கற்றுக்கொடுத்திருக்கின்றது.
எம்மோடு அழிந்த போகட்டும் இந்த வேஷம் போடும் வாழ்க்கை எமது சந்ததியாவது உண்மையாக வாழ்ந்து முடிக்கட்டும். எமது மூடநம்பிக்கைகளையும், கட்டுப்பாடுகளையும் அவர்களுள் திணிக்காமல் விடுவோம்.

தொடரும்..

2 comments:

Muthu said...

கறுப்பி,
கரடகம் என்பதன் பொருள் என்ன ? கரடுமுரடானது என்பது போலவா ?

கறுப்பி said...

வஞ்சகமானது என்று பொருள் பெறும். கரடுமுரடானது என்றும் வைத்துக் கொள்ளலாம்