Tuesday, April 15, 2008

பெண் அடிமைத் தனத்தின் வேராய் இருப்பது “குடும்பம்” என்ற நிறுவனமே.

கனேடிய விடுமுறை நாட்களில் தற்போது புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது “குடும்பநாள்”
காதல் தினம், அம்மா நாள், அப்பா நாள், பெண்கள் தினம் இப்படிப் பல தினங்கள் அடையாளப்படுத்தப்பட்டாலும் குடும்பநாள் என்பது விடுமுறையோடு அறிமுகப்படுத்தப்பட்ட ஒன்று.



உறவுகள் என்ற பார்வையை விடுத்து, வியாபாரம் என்ற பார்வையில் இந்நாளை நாம் ஆராய்ந்தால், இனி இந்நாளுக்காக வாழ்த்து மடல்கள், அன்பளிப்புப் பொருட்கள் அறிமுகப்படுத்தப் படும். உணவகங்கள் இந்நாளில் நிரம்பி வழியும், புதிய கழியாட்டங்கள் அறிமுகப்படுத்தப்படும், பயணிப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகமாகும் இவையனைத்தும் வியாபாரத்தந்திரங்கள்.

உறவு முறை எனும் போது தற்போதைய இயந்திர வாழ்வோட்டத்தில் குடும்பங்கள் ஒன்றாகச் செலவிட நேரம் கிடைப்பதில்லை என்பதனால் இந்நாள் குடும்பங்கள் ஒன்றாகக் கழித்து மகிழ ஒதுக்கப்பட்ட நாள். ஆண்டுக்கு ஒருநாள் பெற்றோர் பிள்ளைகள் ஒன்றாக மேசையில் இருந்து சாப்பிட்டு தமது ஓராண்டு வாழ்நாளை அலசக் கொடுக்கப்பட்டுள்ளது.

எம்மவர்கள் ஊரில் இருந்த குடும்ப நெருக்கம் புலம்பெயர்ந்த பின்பு இல்லாமல் போய்விட்டது என்று புலம்புகின்றார்கள். எமது நாடு, புலம்பெயர்ந்த நாடுகள் என்று இங்கே பிரித்துப் பார்த்து வாழ்க்கை முறையை நாம் கணித்துவிட முடியாது. போர் சூழலில் அடிபட்டுக்கொண்டிருக்கும் எமது நாட்டை வளமான ஒரு வாழ்க்கை முறைக் கணிப்பெடுப்பிற்குள் கொண்டு வருவது தவறு. பதிலாக இந்தியத் தமிழர்களின் வாழ்க்கை முறையை நாம் தற்போது பார்த்தோமானால் வீட்டில் இருக்கும் இல்லத்தரசிகள் என்ற நிலை மாறி கணவன் மனைவி இருவரும் வேலைக்கும் போகும் நிலை உருவாகியுள்ளது. அத்தோடு கூட்டுக்குடும்பம் என்ற அமைப்பு முறையும் மருகி வருவதால் குழந்தைகளை ஆயாவுடன் விட்டுச் செல்வது, பிள்ளை பராமரிப்பு நிலையங்களில் விட்டுச் செல்வது என்ற நிலமைதான் அங்கேயும் உருவாகியுள்ளது. உலகெங்கும் தோற்றியுள்ள விஞ்ஞான வளர்ச்சி மாற்றம், அது கொண்டு வந்துள்ள பொருளாதார நெருக்கடி என்பனவே இந்த வாழ்க்கை முறையை மாற்றி அமைத்துள்ளது.

குடும்ப அமைப்பின் உருவத்தைப் பார்த்தால்
"ஆதிகம்யூன்" காலத்தில் (காட்டு மிராண்டிக் காலம்) தாய்வழிச் சமூகமாகவே இருந்தது. அதாவது பெண்கள் எந்த ஒரு அடக்குமுறைக்குள்ளும் ஆளாகாமல் முழுச்சுதந்திரமாக வாழ்ந்து வந்தார்கள். அதன் பின்னர் தோன்றிய, அநாகரீக காலத்தில," குடும்பம் என்ற இரத்த சொந்தங்களான கட்டமைப்புக்குள் பெண்களை வீட்டு வேலைகள் விவசாயம் குழந்தை பராமரிப்பு போன்றவற்றால் வெளி உலகை விட்டு ஒதுக்கும் நிலை ஏற்பட்டது. அடுத்து "நாகரீக காலம்" என்று கூறப்படும் தற்கால அமைப்பு குடும்பம் அரசு தனிச் சொத்து போன்றவையின் தோற்றம் (இவை ஆண்களின் உருவாக்கம்) பெண்களை முற்று முழுதான அடிமைத் தனத்துக்குள் தள்ளி விட்டிருக்கின்றது. இந்தக் காலத்தில் உறவுகள் மிகச் சுருங்கி கணவன் மனைவி குழந்தைகள் (சில இடங்களில் பெற்றோர்) என்று மிகுந்த சுயநல சமுதாயமாக உருப்பெற்றிருக்கின்றது. ஒரு சமூகமாக வாழ்ந்த வாழ்க்கை மருகிக் கூட்டுக்குடும்பமாக உருப்பெற்றுப் பின்னர் தனிக்குடித்தனமாக மாறித் தற்போது தனிப்பெற்றோர்களினால் ஆன குடும்ப அமைப்பு, ஓரினச்சேர்க்கையாளர்களினால் ஆன குடும்ப அமைப்பு என்று உருப்பெற்றிருக்கின்றது. மாற்றங்கள் வேகமாகிக்கொண்டிருந்தாலும், சமூகமும் அரசும் அதனை அங்கீகரிப்பதாகப் பாவனை காட்டினாலும் இன்னமும் குடும்பம் என்றால் கணவன் மனைவி குழந்தைகள் என்ற வடிவம்தான் குடும்பம் என்ற அமைப்பின் வரையறையாகப் பலரால் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒன்றாக உள்ளது. இந்த அமைப்பில் முற்றுமுழுதாகப் பெண் அடிமைத் தனமே மேலோங்கி நிற்கின்றது.

அடக்குமுறைக்குள் பெண்கள் தமது தனித்தன்மையை இழந்து அடிபட்டுப் போகாமல் சுதந்திரமாக வாழ பல வழிகள் இருப்பதாகப் பலர் (எம்மவர்கள் - அதாவது இறுக்கமான கலாச்சாரத்திற்குள்ளிருந்து வந்தவர்கள்) சொல்லிச் செல்கின்றார்கள். குடும்ப அமைப்பு சீராக இருக்கப் புரிந்துணர்வு, விட்டுக் கொடுத்தல் தேவை என்றும் வழி முறைகளையும் சொல்லிச் செல்கின்றார்கள். இவர்கள் கூறும் விட்டுக்கொடுப்பென்பது பெண்களிடம் மட்டும் எதிர்பார்க்கும் ஒன்றாகவே இன்னமும் உள்ளது.

பெண்கள் சுதந்திரமாக வாழப் பல வழிகள் இருக்கின்றன என்று விட்டு பெண்கள் தனியாக வாழலாம் என்று ஒரு கருத்து வைக்கப்பட்டது. இதைச் சற்று ஆராய்ந்து பார்த்தால் - முதலாவது காதல் தோல்வி. காதலித்தவள் என்பதால் திருமணங்கள் பொருந்தி வராமை. கடந்த காலங்களில் இந் நிலமை மிக மோசமாகவே எம் நாட்டில் இருந்து வந்தது. அடுத்து வரதட்சணையின்னை (வறுமை) இறுதியாக தமது அந்தஸ்த்திற்கு ஏற்ற மாப்பிள்ளை கிடைக்கவில்லை என்று திருமணப்பேச்சை இழுத்தடித்து பெண்ணிற்கு வயது ஏறிப்போய் திருமணமாகாமல் இருந்தல் போன்ற காரணங்களால் பல பெண்கள் தனித்து விடப்பட்டுள்ளார்கள். இந்நிலை இவர்கள் தாம் தனித்து வாழ வேண்டும் என்று எடுத்துக் கொண்ட முடிவல்ல. எனது சமூகத்தின் சீரழிவால் ஏற்பட்ட நிலமைகள் இப்படிப்பட்ட பல பெண்களை தனிமையில் வாழ்ந்துகொண்டிருக்கின்றார்கள். என் கேள்வி இவர்களது பாலியல் தேவைகளை எப்படி எமது சமூகம் பார்க்கின்றது. திருமணம் ஆகாதவர்கள் எனவே இவர்களுக்கு அந்தத் தேவையில்லை என்பதுதான் எனது சமூகப்பார்வையாக உள்ளது. தவறி இவர்கள் யாருடனாவது உறவுகொள்ள நேடிட்டு அது வெளியே தெரியவரும் பட்சத்தில் அவர்கள் ஒதுக்கப்படுகின்றார்கள்..

திருமணமாகிப் பின்னர் ஒத்துவராததால் பிரிந்த பெண்களை எடுத்துப் பார்ப்போம். கனடாவில் பல பெண்கள் இருக்கின்றார்கள். சிலர் மீண்டும் காதலித்துத் திருமணம் செய்து கொண்டுள்ளார்கள். சிலர் பல ஆண்டுகளாகத் தனியே இருக்கின்றார்கள். எனவே ஒரு பெண் தானாக விரும்பி தனியான வாழ்வு முறையைத் தெரிவு செய்வதென்பது எமது சமூகத்தில் மிகக் குறைவாக இருப்தோடு, எமது சமூக அமைப்புக் காரணமாகப் பலவந்தமாகத் தனிமைக்குள் தள்ளப்படும் பெண்களின் தொகையே அதிகமாக உள்ளது. இவ்வேளையில் எமது சமூக அமைப்பிலும், அதன் சிந்தனைகளிலும் எந்த மாற்றங்களையும் கொண்டு வர முனையாமல் குடும்பம் அதன் முக்கியம், அதன் பெறுமதி என்று வெறுமனே புலம்பித்திரிவதில் எப்பயனும் இல்லை.

சமதர்ம அரசின் தோற்றத்தில் பெண்கள் பொருளாதார பலத்தை பெற்று உற்பத்தியில் ஈடுபடும் போது சமத்துவமாகவே நடத்தப்படுவார்கள, இது மாக்ஸின் கூற்று. ஆண்டுகள் கடந்தாயிற்று சமதர்ம அரசு மூழ்கி முதலாளித்துவம் தலை தூக்கி ஆட்டம் காணும் நிலையில் பெண் விடுதலை என்பது வெறும் பேச்சோடு மறைந்து விடும் ஒன்றாகிப் போய்க்கொண்டிருக்கின்றது.
தமிழ் சூழலைப் பார்க்கும் போது படிப்படியாக பெண்களின் சிந்திக்கும் திறன் பெருகி பெண்நிலைவாதிகளின் எண்ணிக்கை அதிகரிக்கின்றது என்பது ஒரு புறம் மகிழ்ச்சியைக் கொடுத்தாலும் இது மிகக் குறைந்த வீதத்திலேயே இன்னும் இருக்கின்றது. இந்தப் பெண்நிலைவாதிகள் கூட ஒரே கோணத்திலான பிரச்சனைகளை மட்டுமே அடையாளம் காண்கின்றார்கள். உதாரணத்திற்கு கணவனை இழந்தவளைப் (விதவை) புறக்கணித்தல், பெண் குழந்தை வளர்ப்பில் வேறுபாடு, உயர்கல்வி, சீதணப் பிரச்சனை, பூப்புனித நீராட்டுவிழாக் கொண்டாட்டம், சமனற்ற சம்பளம், இத்யாதி,.. இத்யாதி இப்படியாப் பலராலும் ஏற்கெனவே அடையாளப்படுத்தப்பட்ட பிரச்சனைகளை மீண்டும் மீண்டும் சமூகத்திற்கு எடுத்துச் சொல்வதனால் பெண் ஒடுக்கு முறைக்காக அடித்தளங்கள் அடையாளம் காணப்படாமலே போய் விடும் அபாயம் இருக்கின்றது. இன்னும் பெரும்பாலான பெண்கள் ஆண்-பெண் அசமத்துவ நிலையை உணராதவர்களாகவே இருக்கின்றார்கள்.

Sunday, April 13, 2008

“ராமேஸ்வரம்”

“ராமேஸ்வரம்” திரைப்படம் பார்க்கும் சந்தர்ப்பம் கிடைத்தது. “நந்தா”, “கன்னத்தில் முத்தமிட்டால”; அந்த வரிசையில் இன்று “ராமேஸ்வரம்”. ஈழத்தமிழரின் அகதி நிலையை எடுத்துக்காட்டும் திரைப்படமாக இந்திய இயக்குனர்களால் எடுக்கப்பட்ட திரைப்படங்கள் இவை. இந்த மூன்று திரைப்படங்களிலும் ஒரு ஒற்றுமை என்னவென்றால் இந்தியர்கள் ஈழத்து அகதிகளுக்கு எந்த அளவிற்கு உதவி செய்யத் தவிக்கின்றார்கள் என்பதே. நான் படித்த கட்டுரைகள், சிறுகதைகளிலில் இருந்தும், தனிப்பட்ட முறையில் கேட்டறிந்த சம்பவங்களில் இருந்தும் ராமேஸ்வரத்தில் அகதிகளாக வாழும் ஈழத்தமிழர்கள் எந்த அடிப்படைத் தேவையும் பூர்த்தி செய்யப்படாமலும், அதே வேளை பலவிதமாக வன்முறைக்குள்ளாக்கப்பட்டும் வருகின்றார்கள் என்பதே. ஆனால் மேற்கூறப்பட்ட எந்த ஒரு திரைப்படத்திலும் அதற்கான அடையாளங்கள் எதுவும் காட்டப்படவில்லை. தமிழ்நாட்டின் அரசியல் அட்டூழியங்கள், வன்முறைகள், போன்றவற்றை படத்திற்குப் படம் புடம்போட்டுக் காட்டும் எந்த ஒரு இயக்குனரும் ரமேஸ்வரத்தில் ஈழத்து அகதிகளுக்கு இழைக்கப்படும் கொடுமைகளை சிறிதேனும் காட்டுவதற்கு எதற்காக அஞ்சுகின்றார்கள்?




இதற்கான முக்கியகாரணம் இன்றைய இந்திய தமிழ் சினிமா புலம்பெயர்ந்த ஈழத்தமிழர்களை மிகவும் நம்பியிருக்கின்றது. 80, 90களில் உருவான திருட்டு வீ.சீ.டி விற்பனையும் அதன் பின்னர் சின்னத்திரையின் வரவும் தமிழ் சினிமா உலகை ஆட்டம் காண வைத்தது. திரைப்படத்துறையிலிருந்து பலரும் பகிரங்கமாக உரைகள் நிகழ்த்தி திருட்டு வீ.சீ.டியில் திரைப்படங்களைப் பார்க்காதீர்கள் என்று பொதுமக்களைக் கெஞ்சிக் கேட்கும் அளவிற்கு இறங்கியும் வந்திருந்தார்கள். தொடர்ந்த வருடங்களில் உலகெங்கும் பரவிக்கிடக்கும் ஈழத்தமிழர்கள் இந்தியத் தமிழ் திரைப்படங்களை திரையரங்குளில் திரையிடத் தொடங்கியதும் அவர்கள் தமிழ் சினிமா மீண்டும் உயிர்ப்பெற்றது. தமிழ் சினிமாவை நல்ல முறையில் தக்க வைத்துக் கொள்ள ஈழத்தமிழர்களை தடவிக்கொடுக்கின்றார்கள் இந்திய இயக்குனர்கள். இது முற்று முழுதான வியாபார தந்திரம் இதில் தவறொன்றுமில்லை.
ஈழத்தமிழரும் பாட்டும், சண்டையும் நிறைந்த படங்களைத்தான் வேண்டி நிற்கின்றார்கள். ராமேஸ்;வரத்தில் ஈழத்தமிழருக்கும் நடக்கும் அநியாயங்களை வெறுமமே விவரணப்படமாக எடுத்தால் ஈழத்தமிழர்கள் கூட அதனைப் பணம் கொடுத்து வாங்கிப் பார்க்க மாட்டார்கள் என்ற நிலையில்;தான் புலம்பெயர்ந்த தமிழர்களும் வாழ்கின்றார்கள். இது ஒருபுறமிருக்க இந்திய சினிமாக் கலைஞர்களிலிருந்து, சின்னத்திரைக் கலைஞர்கள் வரை வருடா வருடம் ஈழத்தழிழர்களினால் உலகெங்கும் உலாப் போகின்றார்கள். கலைஞர்களை அழைத்துக் கௌரவிப்பது என்பது நல்ல விடையம்தான், ஆனால் சினேகாவோடு சினேகாவின் அம்மா, சியாமோடு சியாமின் அம்மா என்று குடும்பமாக வந்து பணம் பெற்று ஊர் சுற்றிப்பார்த்துச் செல்வதோடு, கடைகடையா ஷொப்பிங் சென்று ஈழத்தமிழ் இளிச்சவாயர்களை ஒன்று இல்லையென்று ஆக்கிவிட்டுப் பறந்து போகின்றார்கள். கிரடிட் காட்டை அடித்து அடித்து சினேகாவிற்கு ஷொப்பிங் செய்துகொடுத்து விட்டு அந்த பெருமையோடு காலத்தைத் தள்ளுகின்றார்கள் இவர்கள்.

இந்தியக் கலைஞர்களை கனடாவிற்கு அழைத்து நிகழ்ச்சி செய்து அதனால் எம்மவர் ஏதாவது உழைக்கின்றார்கள் என்றால் அது வியாபாரம் என்று விட்டுப் போகலாம். ஆனால் ஒரு சிலரைத் தவிர மற்றவர்கள் வெறும் தற்பெருமைக்காக பெரும் பணத்தைக் கொட்டி தமிழ் சினிமாக்காறர்களை மேலும் மேலும் கொழுக்கப்பண்ணுகின்றார்கள். ஈழத்தமிழர்கள் இளிச்சவாய்கள், எங்களைத் தலையில் வைத்துக் கொண்டாடுவார்கள் என்று கண்டு கொண்ட சினிமாக் கலைஞர்களும் முடிந்தவரை எம்மவரிடமிருந்து வறுகிக்கொண்டு பறந்து விடுகின்றார்கள். சினிமாக்காறர்களைக் கூப்பிட்டு நொடிச்சுப் போன எம்மவர்களின் பட்டியல் அதிகரித்துக் கொண்டே போகின்றது. ஈழத்தமிழர்களின் கடைகளெல்லாம் இந்தியக் கலைஞர்களின் வருகையை அறிவிக்கும் துண்டுப்பத்திரங்களினால் நிறைந்து வழிகின்றது, சின்னத்திரையில் மிமிகிரி செய்யும் வெட்டிப் பெடியங்கள் கூட பணம் பெற்று கனடா சுற்றுலா வந்துவிட்டுப் போகின்றார்கள். ஈழம் கிடைக்கிறதோ என்னவோ புலம்பெயர் ஈழத்தமிழர்களால் தமிழ் சினிமாவிற்கு விடுதலை கிடைத்து விட்டது என்பது தான் உண்மை.