கனேடித் தமிழ் காங்கிரஸ், கனேடிய பாராளுமற்ற உறுப்பினர்களுடன் தமக்கு இருக்கும் சார்பு நிலையைப் பயன் படுத்தி, வன்னி மக்களின் பாதுகாப்பிற்காய்த் தம்மால் ஆன போராட்டங்களை ஆர்ப்பாட்டங்கள் அற்ற முறையில், கறுப்புக் கொடியுடன் ஆரம்பித்து வைத்தது. சிங்கள அராஜக அரசு வன்னி மக்கள் மேல் நடாத்தி வரும் மனிதாபதமற்ற தாக்குதல்களைக் கண்டித்து மக்களின் பாதுகாப்பைக் கருத்திற் கொண்டு சிங்கள அரசின் மேல் அழுத்தங்களைக் கொடுப்பதன் மூலம் உடனடிப் போர் நிறுத்தத்தைக் கொண்டு வருவதுடன், உலகநாடுகளிடமிருந்து இலங்கை அரசு பெற்று வரும் உதவிகளைத் தடை செய்வது போன்றவையே இவர்களது போராட்டத்தின் முக்கிய நோக்கமாக இருந்தன. இப்போராட்டங்கள் மூலம் ஜ.நா விற்கு அழுத்தம் கொடுத்து தமிழ் மக்களுக்கு சார்பாக எதையாவது செய்ய முடியும் என்ற நம்பிக்கையும் இவர்களிடம் இருந்து என்று அறிய முடிந்தது. கனேடி பாரளுமன்ற உறுப்பினர்களிடம் சிறிதளவேனும் தமிழ் மக்களுக்கான உதவியைப் பெற வேண்டும் எனில் அவர்களது சட்டங்களை மதிக்க வேண்டும் என்பதில் கனேடியத் தமிழ் காங்கிரஸ் மிகவும் விழிப்போடிருந்தது. ஆரம்ப காலப் போராட்டங்கள் கறுப்புக் கொடிகளுடன் அமைதியான முறையில் நடைபெற்றதால் கனடா வாழ் தமிழ் மக்களைப் பற்றிய ஒரு நல்லெண்ணத்தைக் கனேடிய அரசிற்கு நிச்சயம் அது வழங்கியிருந்தது. ஆனால் எமது மக்கள் செய்த பாவமோ என்னவோ திடீரென்று அனைத்துப் போராட்டங்களும் திசைமாறி தமிழர்கள் என்றாலே சட்டத்தை மதிக்கத் தெரியாத வன்முறையாளர்கள் என்று உலக நாடுகள் அனைத்தும் ஒன்றாக முத்திரை குத்தும் அளவிற்கு தமிழ் மக்களுக்கான போராட்டம் இப்போது திசைமாறி விட்டது. தாம் என்ன செய்கின்றோம் என்று விளக்கமில்லாது வெறும் உணர்வுகளால் உந்தப்பட்டு, தம் மனச்சாட்சிக்காய், தம் பங்கிற்காய் எதையாவது செய்ய வேண்டும் என்ற நல்லெண்ணத்தில் பல பாடசாலை, பல்கலைக்கழக மாணவர்களும் இப்போராட்டங்களின் இணைந்திருக்கின்றார்கள் என்பதுதான் மிகவேதனையா விடையம்.
----------------------
எமது நாட்டில் அடங்காத் துயரில் இருக்கும் மக்கள் தனது அன்றாட தேவைகளுக்காகப் போராடிக்கொண்டிருக்கும் நிலையில், அவர்களிடம் மிஞ்சியிருப்பது உயிர் ஒன்று மட்டுமே. அவர்களுக்குத் தேவையான உடனடித் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கு உடனடி போர்நிறுத்தம் தேவை எனின் நாம் கையேந்தும் நாடுகளின் சட்டங்களை மதித்தே ஆக வேண்டிய நிலையில்தான் நாம் இன்று இருக்கின்றோம். கனேடியத் தமிழ் வானொலி ஒன்றின் கலந்துரையாடலை அண்மையில் கேட்டேன். வன்னி மக்கள் தமது சொந்த நிலத்தில்தான் வாழ வேண்டும் அவர்கள் வெளியேறத் தேவையில்லை என்று கனேடிய அரசியலில் ஈடுபட்டிருக்கும் தமிழர் ஒருவர் கூறினார். பண வசதி இருந்ததால் தனது சொந்த நாட்டை விட்டு, ஊரை விட்டு மூட்டை முடிச்சுடன் ஓடிவந்து கனடாவில் வாழும் இவர்கள் போன்றோர், இங்கு வந்து இறங்கியவுடன் முதலில் செய்தது மிஞ்சியிருக்கும் தமது சொந்தங்ளை இங்கே இறக்கியதுதான். தமது பிள்ளைகளுக்குத் தடிமன் வந்தால் கூடத் துடித்துப் போகும் இவர்கள், தமது உயிரைக் காத்துக் கொள்ள நாட்டை விட்டுக் கடல் கடந்து ஓடி வந்தவர்கள், வன்னி மக்கள் அனைத்தையும் தொலைத்துவிட்டு, மிஞ்சியிருக்கும் உயிர் ஒன்றையே கையில் கொண்டு எங்காவது போய்த் தப்பித்துக் கொள்ளலாமா என்று தவித்திருக்கும் போது அவர்கள் மேல் அக்கறை கொண்டவர்கள் போல் காட்டிக்கொள்ளும் புலம்பெயர்ந்த தமிழர்கள் வன்னிவாழ் மக்களை வன்னியை விட்டு அசையக் கூடாது என்பது விந்தையாக உள்ளது. கனடாவில் வாழப் பிடிக்காமல் திரும்பியவர்கள் கூட இந்தியா போன்ற நாடுகளில் குடியேறியிருக்கின்றார்ளே தவிர வன்னியில் குடியேற அவர்களும் தயாராக இல்லை. வன்னிவாழ் மக்கள் பலர் பல ஊர்களிலும் இருந்து அங்கு வந்து குடியேறியவர்கள் என்பதை இவர்கள் அறியாதவர்களுமல்லை. இதன் பின்புலம் என்ன என்பது அனைவரும் அறிந்ததே. ------------------------
எம்பங்கிற்கு எதையாவது செய்ய வேண்டும் என்ற மனப்போராட்டத்தில் பல அமைப்புக்களும் தனி நபர்களும் உணர்ச்சிவசப்பட்ட நிலையில் இப்போது உள்ளார்கள். ஒரு அரசியல் ஆய்வாளரிடம் இதுபற்றிக் கேட்டேன். என்ன செய்ய முடியும் என்று நினைக்கின்றீர்கள்? என்று அவர் என்னிடம் திருப்பிக் கேட்டார். என்னிடம் பதில் இல்லை. நீங்கள் என்ன செய்தீர்கள் என்று யாராவது கேட்டால் சொல்லிக்கொள்ள எதையாவது செய்ய வேண்டுமா? ------------------------
அனைத்து நாடுகளிலும் புலம்பெயர்ந்தோர் மாபெரும் போராட்டங்களை நடாத்தி வருகின்றார்கள் என்று பெருமை கொள்ளும் மக்களுக்கு ஏன் இன்னும் பாராளுமன்ற உறுப்பினர்கள் தங்களை வந்து சந்தித்து உரையாற்றுகின்றார்கள் இல்லை என்ற கேள்வி எழுந்த வண்ணமே இருக்கின்றது. (குறிப்பாகக் கனடாவில்) இது பற்றி தமிழ் வானொலியில் உரையாடிய ஆய்வாளர் ஒருவர், எமது அடையாளமான கொடியை நாங்கள் கையில் ஏந்தியிருப்பதை அவர்கள் ஏற்றுக்கொள்கின்றார்கள் இல்லை என்றார். தொடர்ந்து அவர் கூறுகையில் தமிழர்கள் மிகவும் திறமையும் புத்திக் கூர்மையும் கொண்டவர்கள், கனேடியப் பாரளுமற்ற உறுப்பினர்களைத் கனேடியத் தமிழர்கள் தான் மெல்ல மெல்ல வளர்த்தெடுக்க வேண்டும் என்றார். வரும் செவ்வாய்க்கிழமை இடம்பெற இருக்கும் மாபெரும் உரிமைப் போரின் போது கனேடிய அரசியல் வாதிகளின் போக்கில் கொடிகளை மடித்து வைத்து விடுவோம், அவர்கள் வந்து உரையாடி எம்மக்களுக்காக எதையாவது செய்வதற்கு உடன்படுகின்றார்களா என்று பார்ப்போம் என்று இந்த ஆய்வாளர் தயங்கித் தயங்கி வானொலியில் கேட்டுக் கொண்டார். தொடர்ந்து வந்து உரையாடிய உறவுகள் (தற்போது நேயர்கள் அல்ல உறவுகள்) தாம் தமிழரின் அடையாளமான கொடியை ஒருபோது கைவிடமாட்டோம் என்று உணர்ச்சி பொங்கக் கூறினார்கள். இல்லை நாங்களும் சிறிது விட்டு
க் கொடுத்தால்தான் கனேடிய அரசும் சிறிது விட்டு இறங்கி வரும் என்று கெஞ்சாத குறையாக இவர் கேட்டுக் கொண்டார். வன்னி மக்கள் மேல் கனடாவாழ் தமிழ் மக்களுக்கு எவ்வளவு அக்கறை இருக்கின்றது என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
----------------------